11 அக்டோபர் 2005

மும்பை புறநகர் ரயில்பயண அனுபவம் (5)

மும்பை புறநகர் ரயில்பயண அனுபவங்களை கடந்த சில நாட்களாக உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும்போது நானும் அந்த இனிமையான நாட்களை மீண்டும் நினைத்துக்கொள்கிறேன்.

நான் தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் பெரும்பாலும் என்னுடைய சொந்த வாகனத்திலேயே பயணம் செய்து பழகிப்போயிருந்ததால் நேரத்தின் அருமை - அதாவது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு சென்றடைய தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிலிருந்து புறப்படவேண்டும் என்பது - தெரியாதிருந்தது.

நான் மும்பைக்கு செல்வதற்குமுன், அதாவது மதுரை, சேலம், தஞ்சாவூர் (ஏன், சென்னையிலும்கூட) போன்ற நகரங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நான் வசித்துவந்த இடம் அலுவலகத்திலிருந்து அதிகபட்சம் ஐந்து கி.மீ தூரத்திலேயே இருந்தது.

ஆதலால் பயண நேரம் அதிகபட்சம் பதினைந்திலிருந்து இருபது நிமிடம் மட்டுமே. போக்குவரத்து நெரிசல் அதிகமாயிருக்கும் நாட்களில்கூட அதிகபட்சம் அரைமணி நேரத்திற்கு மேல் ஆனதில்லை.

ஆனால் மும்பையில் என்னுடைய அலுவலகமிருந்த மும்பை ஃபோர்ட் பகுதியிலிருந்து ஐந்து, பத்து கி.மீ தூரத்தில் வசிக்கவேண்டுமென்றால் 2BHK குடியிருப்புக்கு குறைந்த பட்சம் ரூ15,000 லிருந்து 20,000 மாத வாடகைக் கொடுக்கவேண்டியிருக்கும்.

ஆதலால் வேறு வழியின்றி 30 கி.மீ தொலைவிலிருந்த ‘சான்பாடா’ போன்ற பகுதிகளில் வசிக்கவேண்டியிருந்த நிர்பந்தத்தில் நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நடுத்தர மக்கள் பலரும் இருந்தோம்.

மத்திய மற்றும் மேற்கு மார்க்கங்களைப் போலல்லாமல் ஹார்பர் மார்க்கத்தில் விரைவு வண்டிகள் இல்லையென்பதால் பயண நேரம் ஒரு மணியிலிருந்து - சிக்னல் தொல்லை அல்லது இடைவிடாத மழையால் - 1.30 மணி வரை எடுப்பதுண்டு. அலுவலகத்திற்கு சென்று வரவே தினமுனம் நான்கு மணி நேரம் போய்விடும்.

இச்சூழ்நிலையில் வீட்டிலிருந்து புறப்படும் நேரம் மிக மிக முக்கியம். சான்பாடாவிலிருந்து 7.16 புறப்படும் வண்டியைப் பிடித்தால்தான் 9.30க்குள் அலுவலகம் சென்றடைய வசதியாயிருக்கும்( வி.டி நிலையத்திலிருந்து என் அலுவலகத்தையடைய குறைந்தது இருபது நிமிட நேரமாவது நடக்கவேண்டும்). அந்த வண்டியை விட்டால் அடுத்த வண்டி வர இருபது நிமிடமாவத ஆகும் (பெரும்பாலும் குறிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்கள் கழித்துவரும் என்பது எல்லோரும் அறிந்ததே).

ஆனாலும் ஒவ்வொரு வண்டியையும் குறித்தே பயணிகள் நிலையத்துக்கு வந்து சேர்ந்துக்கொண்டிருப்பர். 7.16 வண்டி பத்து நிமிடத்திற்கு மேல் தாமதித்தால் அடுத்த வண்டிக்கு வந்து சேரும் பயணிகளின் எண்ணிக்கையும் சேர்ந்துக்கொள்ளும், அப்படியே இரண்டு, மூன்று வண்டிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து சில தினங்களில் (முக்கியமாய் மழைக்காலங்களில்) ஒவ்வொரு நிலையத்திலும் கூட்டம் பிதுங்கி வழியும்.

ஆரம்ப காலங்களில் - குறிப்பாக முலன்டில் வசித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த பிதுங்கி வழிந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு அரைதினம் லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு திரும்பி வந்து வண்டியைப் பிடிப்பேன்.

ஆதலால் தினமும் என்னுடைய வண்டி புறப்படும் நேரத்திற்கு குறைந்த பட்சம் பதினைந்து நிமிடத்திற்கு முன்னரே நிலையத்திற்கு வந்துவிடுவேன். தாமதமாய் வருகின்ற எதாவது வண்டியிலேறி செல்லலாமே என்ற எண்ணத்துடன்.

காலை நேரங்களில் மின்ரயில் நிலையங்களின் சுற்றிலுமிருந்த தெருக்களில ஆண்களும் பெண்களும் வேக, வேகமாய் நடப்பதைப் பார்த்தால் நமக்கு பிரமிப்பாயிருக்கும்! நாமும் அதே வேகத்தில் நடக்காத பட்சத்தில் நம்மைத் தள்ளிவிட்டு போய்க்கொண்டேயிருக்கும் அந்த ஜனக்கூட்டத்தோடு கூட்டமாய் போவது ஆரம்பத்தில் கடினமாயிருந்தாலும் நாளாக நாளாக பழகிப்போனது. இப்போதும் குடும்பத்தோடு நடக்கும்போதும் அதே பழக்கத்தில் நடந்து மனைவி மகள்களின் கோபத்திற்கு ஆளாயிருக்கிறேன்.

மும்பையில் ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும்கூட மிக முக்கியமானது என்பதை இப்போதும் இவ்வண்டிகளில் பயணம் செய்துக்கொண்டிருக்கும் நம் தமிழ்மணம் நண்பர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் ஒன்று, எத்தனை சோம்பல் உள்ளவர்களானாலும் அவர்களை மும்பை வாசம் மூன்றே மாதத்தில் மாற்றிவிடும் என்பது நிச்சயம். அதன் பிறகு எந்த ஊரில் பணியாற்ற வேண்டியிருந்தாலும் நேரத்திற்கு புறப்படவேண்டும் என்கின்ற பழக்கம் நம்மைவிட்டு போகவே போகாது!

இனி என்னுடைய பயணநாட்களில் நான் பதறிப்போன அனுபவம் ஒன்று!

நான் முலுன்டில் வசித்துக்கொண்டிருந்த சமயம். தூத்துக்குடியில் (அதுதான் என் மனைவியின் சொந்த ஊர்) வசித்துவந்த என் மனைவியும் என்னுடைய இரண்டாவது (கடைசியும்கூட) மகளும் (அப்போது அவள் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்) காலாண்டு விடுமுறையில் மும்பை வந்திருந்தார்கள்.

திடீரென்று என் மகளுக்கு என்னுடைய அலுவலகத்தைப் பார்க்கவேண்டுமென்ற விபரீத ஆசை வந்தது! அதுவும் வாரநாள் ஒன்றில்!

‘உன்னால ரயில்ல அடிச்சி புடிச்சி பயணம் பண்ணமுடியாதுன்னு’ எத்தனைமுறை சொல்லியும் கேட்கவில்லை. என் மனைவியும் விவரம் புரியாமல் ‘ஆசைப்படுதில்லே, கூட்டிக்கிட்டு போங்களேன்’ என ஒத்தூத என் மகளின் பிடிவாதம் அதிகமானது.

‘சரி, வா.’ என்று அரைமனதுடன் தினமும் புறப்படும் நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே வீட்டை விட்டு புறப்பட்டேன். எனக்கு ஏற்கனவே முதல் வகுப்பு சீசன் சீட்டு இருந்ததால் அவளுக்கு தனியாக போய், வர முதல்வகுப்பு பயணச்சீட்டை (பதினைந்து நிமிடம் வரிசையில் நிற்கவேண்டி வந்தும் என் மகளுக்கு அது ஒரு திரில்லிங் எக்ஸ்பிரீயன்சாகவே இருந்தது!) எடுத்துக்கொண்டேன். நல்லவேளையாக அன்று முதல் வகுப்பில் அத்தனைக் கூட்டம் இல்லை. ‘ஏம்ப்பா, என்னை அவாய்ட் பண்றதுக்கு சும்மானாச்சும் டூப் விட்டிங்களா? கூட்டத்தையே காணோம்’ என்ற மகளின் விமர்சனம் வேறு!

ஆனால் அடுத்தடுத்த நிலையங்களில் பயணிகள் ஏற, ஏற வண்டி ‘குர்லா’ நிலையத்தைக் கடக்கும்போது அமர்ந்திருந்தவர்கள் மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு கூட்டம் நாலாபுறமும் அழுத்த என் மகள் அழும் நிலைக்கு வந்துவிட்டாள். பார்க்க பரிதாபமாயிருந்தாலும் ‘வேணும் உனக்கு. நான் சொன்னப்பவே கேட்டிருந்தா...’ என்பதுபோல் அவளைப்பார்க்க, ‘சாரிப்பா’ என்பதுபோல் தலைக் கவிழ்ந்துக் கொண்டவளிடம் ‘இன்னும் அரைமணி நேரம்தான். நாம் இறங்கும்போது இத்தனை கூட்டம் இருக்காது’ என்று சமாதானப் படுத்தினேன்.

வி.டி நிலையத்திற்கு முந்தைய நிலையமான ‘மஸ்ஜித்’ தில் பெரும்பாலான பயணிகள் இறங்கிவிட நாங்கள் வி.டியில் இறங்குவதில் பெரிய பிரச்சினையிருக்கவில்லை.

என்னுடன் வந்த என் மகளைக் கண்டவுடன் அலுவலகத்தில் பெரும்பாலானோர் (என் பாஸ் உட்பட) என்னைப் பார்த்து ‘என்ன சார், திரும்பிப் போகும்போது பயங்கர கூட்டமாய் இருக்குமே அப்போ என்ன பண்ணுவீங்க? பேசாம அரை நாள் லீவு போட்டு ரெண்டு மணிக்கே புறப்பட்டு போயிருங்க’ என்று வற்புறுத்தினர்.

ஆனால் எனக்கு என்ன தோன்றியதோ பிடிவாதமாக மாலை ஐந்து மணிவரை அலுவலகத்திலேயே இருந்துவிட்டுத்தான் புறப்பட்டேன். தினமும் சாதாரணமாக மாலை 7.00 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஓரிரண்டு வண்டிகளை விட்டுவிட்டு (அப்போதெல்லாம் ஓடும் வண்டியில் ஏறும் வித்தையைக் கற்றிருக்கவில்லை!) சாவகாசமாக வீடு திரும்புவது வழக்கம்.

ஐந்து மணிக்கு நிலையத்தை அடைந்தால் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்ததுதான் என் தவறு.

வி.டி. நிலையத்தை அடைந்தபோது அன்று வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகமாயிருந்தது. பகல் இரண்டு மணிக்கு ‘குர்லா’ பகுதியில் ஏற்பட்ட ஏதோ சிக்னல் கோளாறு காரணமாக வண்டிகள் தாமதமாகி வி.டி. நிலையத்தில் இரண்டு, மூன்று வண்டிகளுக்கான கூட்டம் பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு நின்றது.

திருவிழா நாட்களைத்தவிர (தூத்துக்குடியில் இருந்த கத்தோலிக்க ‘பனிமய மாதா’ ஆலயத்தில் நடைபெறும் வருடாந்தர தேர்த்திருவிழாவைக் காண மதுரை-திருநெல்வேலி வரையிலுமுள்ள அனைத்துக் கிராமங்களிலிருந்தும் வரும் ஜனத்திரளைப் பார்த்ததுண்டு) கூட்டத்தைக் கண்டிராத என் மகள் அதிர்ச்சியில் உரைந்துபோய் நின்றிருந்தாள்.

வி.டியில் ப்ளாட்பாரத்தில் நம் ஊர் நிலையங்களைப் போன்று இருக்கைகள் இல்லை. (நிற்கவே இடமில்லாதபோது இருக்கை வேற வேண்டுமா?). வரிசையாக ஐந்து வண்டிகள் போயும் கூட்டம் குறையவில்லை. நாங்கள் நிலையத்திற்கு வந்து சேர்ந்து ஒருமணி நேரமாகியும் எங்களால் வண்டிக்குள் ஏறவே முடியவில்லை.

நேரம் ஆக, ஆக என் மகள் பதற்றம் அடைய ஆரம்பிக்கவே அடுத்துவரும் வண்டியில் எப்படியாவது ஏறிவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் என் மகளையும் என்னுடனே ஆண்கள் பெட்டியில் ஏற்றாமல் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில் ஏற்றிவிடலாம் என்று நினைத்து என் மகளிடம் ‘அப்பா உன்னை லேடீஸ் கோச்ல ஏத்திடறேம்மா. நான் அடுத்த பெட்டியிலதான் இருப்பேன். நீ கோச்சுக்குள்ள வரைஞ்சிருக்கற ரூட் மேப்பைப் பார்த்தா தெரியும். ‘பாண்டூப்’புன்னு ஒரு ஸ்டேஷன் வரும். அதுக்கடுத்தது நம்ம இறங்கவேண்டிய முலன்ட் வரும். அப்பா இறங்கிவந்து உன்னைக் கூப்பிட்டுக்கறேன், என்ன?’ என்றேன். என் மகள் என்ன நினைத்தாளோ உடனே சரியென்று தலையை அசைத்தாள்.

இருவரும் நிலையத்திற்குள் வந்துகொண்டிருக்கும் ‘தானே’ வண்டியில் ஏற தயாராக கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு முன் வரிசையில் சென்று நின்றுக்கொண்டோம்.

ஆண்கள் அவர்களுடைய பெட்டியை நோக்கி ஓட பெண்கள் பெட்டிக்குமுன் நின்றுக்கொண்டிருந்த கூட்டத்தில் தமிழ் பெண்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினேன். யாரும் இருக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் என் மகளுடன் பெண்கள் பெட்டியில் ஏறினேன். அவ்வளவுதான். ‘ஹே பையா யே மஹிலோங்கா டிப்பா ஹை. உத்ரோ. ஜல்தி.’ (யோவ் இது பெண்களோட பெட்டியா. இறங்குங்க, சீக்கிரம்.) என்று ஆளுக்கு ஆள் கத்த நான் என்னுடைய அரைகுறை ஹிந்தியில் ஒரு நடுத்தர வயது பெண்ணிடம் (அந்த பெண்ணை முலன்ட் நிலையத்தில் ஒரு சில நாட்கள் பார்த்த ஞாபகம்) நிலைமையை விளக்கினேன். அதே நேரத்தில் என் மகளும் விசும்ப ஆரம்பிக்கவே அந்த பெண் மனமிறங்கி ‘டரோ மத் பேட்டி. மே ஹூன் நா’ என்று அனைத்துக் கொள்ள நான் மகளைத் ஆறுதலாய் தட்டிக்கொடுத்துவிட்டு பெட்டியிலிருந்து இறங்கவும் வண்டிபுறப்படவும் சரியாயிருந்தது.
நிலையத்திலிருந்த ஜனத்திரளைக் குறைக்க நினைத்து அன்று வண்டிகள் எல்லாம் ஐந்து, பத்து நிமிடங்களில் புறப்பட்டு செல்ல ஆரம்பித்திருந்ததை நான் கவனிக்கத் தவறியதுதான் காரணம்.

அடுத்த வண்டிக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த வண்டியில் (வண்டியின் பின்னாலிருந்த முதல் வகுப்பு பெட்டியாதலால் அதன் பிறகு மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகளே இருந்தன. அதிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால்) எத்தனை முயன்றும் என்னால் ஏறமுடியவில்லை. அதைப் பார்த்த என் மகள் குரலெழுப்பி அழுதுக்கொண்டே இறங்க முயற்சிக்க நல்லவேளையாய் அந்த பெண்மணி என் மகளை இறுகப் பிடித்துக்கொண்டு ‘பதற்றப்படாதீர்கள், அடுத்த வண்டியைப் பிடித்துவாருங்கள்.’ என்று உரத்தக்குரலில் சொல்லிவிட்டு சென்றாள்.

ப்ளாட்பாரத்திலிருந்த பலருக்கும் விஷயம் லேசாக புரிந்துவிட விநோதமாகவும், பரிதாபமாகவும் என்னைப் பார்க்க அவமானத்திலும், கவலையிலும் சில நிமடங்கள் திகைத்துப்போனேன்.

சோதனைப்போல் முலன்ட் வழியாக செல்லும் அடுத்த வண்டி இருபது நிமிடம் கழித்துத்தான் வந்தது. ஒருவேளை என் மகளின் நச்சரிப்பு தாங்காமல் இடையில் எங்காவது இறங்கி என் மகளும் அந்த பெண்மணியும் எனக்காக காத்திருந்தால் அவர்களைக் கண்டுக்கொள்ள வசதியாயிருக்குமே என்ற எண்ணத்தில் இருக்கையில் அமராமல் வாயிலிலேயே நின்றுக்கொண்டேன்.

நான் நினைத்ததுபோலவே நடந்தது. என் வண்டி ‘மஸ்ஜித்’ நிலையத்தை அடையவும் ‘அப்பா’ என்ற உரத்த குரலுடன் என் மகள் என்னை நோக்கி கையை அசைப்பதை காண முடிந்தது. கூடவே அந்த பெண்மனியும்!

நான் வண்டியிலிருந்து இறங்க முயற்சித்ததைப் பார்த்த அந்த பெண் உடனே அடுத்திருந்த மகளிர் முதல் வகுப்பில் என் மகளுடன் ஏறிக்கொண்டு ‘Don’t get down. I’ll keep your daughter safely. You can collect her at Mullund.’ என்று என்னைப்பார்த்து அழகான ஆங்கிலத்தில் (இந்த ஆங்கிலம் மட்டும் நம் நாட்டில் இல்லையென்றால் நம் நாடு எப்போதே துண்டு துண்டாய் உடைந்து போயிருக்கும் ) கூறினார்கள். நான் என் மகளைப் பார்க்க, அவளும் புன்னகையுடன் ‘ஆமாம்பா’ என்பதுபோல் தலையை அசைக்க.. நானும் நிம்மதியுடன் ‘சரி’ யென்று தலையை அசைத்தேன்.

இருந்தாலும் முலன்டில் இறங்கி அப்பெண்மனிக்கு நன்றி கூறிவிட்டு என் மகளை அழைத்துக்கொள்ளும்வரை ஒவ்வொரு நிலையத்திலும் வண்டி நிற்கும்போதெல்லாம் வாயில் வரைசென்று என் மகள் இறங்குகிறாளா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

என்னுடைய மகள் அந்த நிகழ்ச்சியை சில மாதங்களுக்குமள் மறந்துவிட்டாலும் நானும் என் மனைவியும் இப்போதும் அந்த நாளை நினைத்துக்கொண்டு பதற்றமடைவோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்!

1 கருத்து:

  1. //ஆனால் ஒன்று, எத்தனை சோம்பல் உள்ளவர்களானாலும் அவர்களை மும்பை வாசம் மூன்றே மாதத்தில் மாற்றிவிடும் என்பது நிச்சயம். //

    மிகவும் உண்மை :-)

    அற்புதமான பதிவு ஜோஸப், பதிவைப் படிக்கும்போது உங்களுடன் சேர்ந்து நீங்கள் மஸ்ஜித் வரும்வரை நானும் பதட்டப் பட்டேன்...
    மிக இயல்பாக நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக கூறுகிறீர்கள்..
    தொடர்ந்து கலக்குங்கள் :-)

    பதிலளிநீக்கு