09 அக்டோபர் 2005

மும்பை ரயில் பயணம் - அனுபவம் (2)

முதல் பதிவில் கூறியிருந்தபடி இப்பதிவில் என்னுடைய வேடிக்கையான அனுபவங்களில் ஒன்றை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

மும்பை ரயில் பயணத்தில் மிகவும் கடினமான வித்தை, வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே ஏறி/இறங்குவதுதான்.

எனக்கு இதை முதலில் பார்த்தபோது நம்ப முடியாத வித்தையாகத் தெரிந்தது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அநாயசமாக ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருக்கும்.

முக்கியமாக, ஏறும்/இறங்கும் இடம் துவக்க/இறுதி நிலையமாக (Starting/Terminating Terminus) இல்லாத பட்சத்தில் வண்டி நின்ற பிறகுதான் ஏறுவது/இறங்குவது என்று பிடிவாதமாக இருந்தால் ஏற முடியாமல் பிளாட்பாரத்திலேயே நிற்க வேண்டியதுதான்.

ஏறும்/இறங்கும் இடம் Terminus க இருந்தாலும் பயணம் முழுவதும் ஹாயாக இருக்கையில் அமர்ந்து செல்லவேண்டுமென்றால் வண்டிநிலையத்துக்குள் நுழையும்போதே ஏறினால்தான் இருக்கை கிடைக்கும். அல்லது திபு திபு வென்று இறங்கும் கூட்டம் ஏற முயல்பவரைப் பின்னுக்குத் தள்ளி ஏறவே விடாது. இருக்கையும் போய்விடும். வசதியாக நின்றுக்கொள்ளக்கூட சிலசமயங்களில் (முக்கியமாக Peek hour நேரத்தில்) இடம் கிடைக்காமல் போய்விடும்.

அதே போன்று வண்டி இறங்கவேண்டிய நிலையத்தினுள் நுழையும்போதே இறங்க தவறினால் திபு திபுவென்று வண்டியினுள் ஏறும் கூட்டம் இறங்குபவரை இறங்க விடாது. அதையும் மீறி ஏறும் கூட்டத்தினூடே இறங்க முயற்சித்தால் உடை பாழாவதுடன் கையில் வைத்திருக்கும் பொருளும் நாசமாகும் (பழங்களாயிருந்தால் ஜூஸாகிவிடும். சிப்சாயிருந்தால் மிக்சராகிவிடும்.) சிலசமயம் இறங்குபவருடைய பர்சோ, அல்லது கைக்கடிகாரமோ காணாமல் போகிவிடவும் வாய்ப்புண்டு.

இப்போது மேற்கூறிய வேடிக்கையான சம்பவத்துக்கு வருகிறேன்.

அதற்கு முன் ஒரு விஷயம்.

மும்பை ஹார்பர் மார்க்கம் தவிர, மத்திய மற்றும் மேற்கு ரயில்வே மார்க்கங்களில் சாதா மற்றும் விரைவு தடங்கள் என்ற இருவிதமான தடங்கள் உள்ளன. விரைவு தடத்தில் செல்லும் வண்டிகள் சில குறிப்பிட்ட முக்கியமான நிலையங்களில் மட்டுமே நிற்கும்.

நான் குறிப்பிட்ட தினத்தன்று, அலுவலக வேலைக் காரணமாக ‘பாந்த்ரா’ செல்ல மேற்கு ரயில்வே மார்க்கத்தில் ‘சர்ச்கேட்’ நிலையத்திலிருந்து புறப்பட்ட விரைவு வண்டியிலேறி பயணம் செய்துக்கொண்டிருந்தேன். பகல் நேரமானதால் புறப்படும்போது அவ்வளவு கூட்டமில்லை. வண்டி தாதர் நிலையத்தில் நின்று புறப்படும்போது கூட்டம் பிதுங்கி வழிந்தது. அடுத்த நிறுத்தம் மாஹிம்.

வண்டி ‘மதுங்காவை’ நெருங்கிக்கொண்டிருக்க, வண்டியிலிருந்த ஒருவர் (இனிமேல் இவர் நம் நண்பர்) அருகிலிருந்தவரைப் பார்த்தார். மதுங்காவில் பிளாட்பாரம் எந்த பக்கம் வரும் என்று கேட்டார் (மும்பை ரயில் தடத்தில் இது ஒரு பெரிய தலைவலி. ஒவ்வொரு நிலையத்திலும் பிளாட்பாரம் வலது புறம், இடது புறம் என்று மாறி, மாறி வரும். அதைத் தெரிந்துக்கொண்டு இறங்கத் தயாரவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்). அவர் நம் நண்பரை வியப்புடன் பார்த்தார். ‘ஏ காடி தேஜி காடி ஹை பாய்! மதுங்கா மே நஹி ருக்கேகா, (இது விரைவு வண்டிங்க. மதுங்காவில் நிற்காது) என்றார்.

நம் நண்பரின் முகம் இருண்டு விட்டது. கையிலிருந்த மதுங்கா வரையிலான பயண்ச்சீட்டை பரிதாபமாக பார்த்தார். மதுங்காவில் இறங்க வேண்டியவர் அடுத்த நிலையமான ‘மாஹிம்’மில் இறங்கினால் துவக்க (Starting) நிலையமான ‘சர்ச்கேட்டி’லிருந்து வண்டி நிற்குமிடமான (Terminus) - ‘பயாந்தர்’ என்று நினைக்கிறேன் - வரை பயணக்கட்டணத்துடன் ஒரு கணிசமான தொகை அபராதமாக கறந்துவிடுவார்கள்.

அருகிலிருந்த வேறொரு பயணி ‘ ஃபிக்கர் மத் கரோ பாய்’ (கவலைப் படாதீங்க) என்றவாறு நம் நண்பருடைய தோளில் கைவைத்தார். ‘மதுங்காவை நெருங்கும்போது சிக்னல்ல சில சமயம் மெதுவாக போகும். நீங்க லேசாக வலதுகாலை பிளாட்ஃபாரத்தில் வைத்து குதித்து இறங்கி, கீழே விழாம இருக்கறதுக்கு வண்டி போற திசையிலேயே வேகமாக ஓடுங்க’ என்று ஓடும் வண்டியிலிருந்து இறங்கும் வித்தையை மிகச்சாதாரணமாக விஷயம்போல் ஒரு விஷமப்புன்னகையுடன் கூறினார். நம் நண்பரும் அவருடைய அறிவுரைப்படி (வேறு வழியில்லாமலும்) செய்வதற்கு அரைகுறை மனத்துடன் தயாரானார்!

அவருடைய அதிர்ஷ்டம், (துரதிர்ஷ்டம்னும் சொல்லலாம்) மதுங்கா நிலையத்தைக் கடக்கும்போது வண்டி மெதுவாக சென்றது. நம் நண்பர் சக பயணிகளின் உந்துதலால் அவர்கள் கூறியதுபோலவே வலதுகாலை மெதுவாக பிளாட்·பாரத்தில் வைத்து லாவகமாக குதித்து இறங்கி வண்டி சென்ற திசையிலேயே வேகமாக ஓட ரம்பித்தார். அவர் இதுவரை செய்ததைப் பாராட்டி வண்டியிலிருந்த சிலர் கரவொலி எழுப்பி பாராட்டினர் (இதுதான் மும்பையின் ஸ்பெஷாலிட்டி! அவரவருடைய வேலைகளையும் மறந்து ரயில் பயண நேரத்தில் ஜாலியாக நேரத்தை செலவிடுவார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே இருப்பவர்கள். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் முகமூடி அணிந்தவர்களைப்போல் அக்கம்பக்கம் நடக்கும் எதையும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருப்பர்).

நம் நண்பர் அவருடைய அறிவுரையை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு வண்டியின் பாதையிலேயே வேகமாக ஓடியது சரிதான். ஆனால் ஒரு சில நொடிகளிலேயே ஓட்டத்தைக் குறைத்து நின்றிருக்க வேண்டும். அல்லது வண்டியை விட்டு சற்றுத்தள்ளி ஓடியிருக்க வேண்டும்.

இரண்டுமில்லாமல் நம் நண்பர் வண்டியின் வெகு அருகிலேயே வேகத்தைக் குறைக்காமல் ஓடவே அடுத்த கோச்சிலிருந்தவர்கள் அவர் வண்டியில் ஏறுவதற்குத்தான் முயற்சி செய்கிறார் என நினைத்து அவருடைய இடுப்பில் கைகொடுத்து அலாக்காக உள்ளே தூக்கி ஏற்றினர்!

அதைப் பார்த்த நானும் என்னுடன் பயணம் செய்தவர்களும் ஒருகணம் அதிர்ச்சியடைந்தாலும் மறுநிமிடம் குபீர் என்ற சிரிப்பொலி கோச் முழுவதும் எதிரொலித்தது!

மற்றவை அடுத்த பதிவில்.

8 கருத்துகள்:

 1. நன்றி சுரேஷ்

  இதுபோன்ற அனுபவங்கள் நிறைய உள்ளன!

  தொடர்ந்து எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 2. நெஜமாவே சிரிப்பு தாங்கலைங்க! :)

  நிறைய எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா7:57 பிற்பகல்

  ஹா...ஹா..., ரொம்ப நகைச்சுவையா இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. நன்றி இளவஞ்சி,

  உங்களுடைய வலைப்பூவையும் பார்த்தேன்.

  பல பதிவுகள் மிக அருமையாயிருந்தன. வாழ்த்துக்கள்.

  உங்களை ஒன்று கேட்கவேண்டும்.

  உங்களைப்போலவே எனக்கும் Photos ஐ என் பதிவுகளோடு இணைக்க நான் என்ன செய்யவேண்டும்?

  Blogspot மூலமாக என்னால் 19 கேபிக்கூடுதலான அளவுள்ள படங்களை இணைக்க முடிவதில்லை.
  படத்தின் அளவைக் குறைக்க ஏதாவது இலவச மென்பொருள் கிடைக்கிறதா?

  பதிலளிநீக்கு
 5. அநாமதேய நண்பருக்கு.

  உங்களுடைய பெயரை நான் தெரிந்துக்கொள்ளக்கூடாதா?

  அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா?

  இருந்தாலும் உங்கள் ரசனைக்கு நன்றி.

  இன்றைய பதிவையும் படித்துவிட்டு எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. There are many ways to add a picture in our blogs and the one im using is www.photobucket.com.

  Please create an account in that site and you can upload any picture of any size in your computer to that site under your account.

  Once you upload a picture, that will be displayed in that site along with a URL link for that picture. WE can just copy that link and paste it in out posts. Thats all..

  Sorry for the delay in reply.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா6:27 முற்பகல்

  this one was really funny!!

  பதிலளிநீக்கு