13 அக்டோபர் 2005

என் மும்பை புறநகர் ரயில்பயணம் - அனுபவம் 6

என்னுடைய மும்பை புறநகர் ரயில் பயணத்தை இதுவரை ஐந்து பதிவுகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தேன்.

என்னுடைய வாழ்நாளில் அது ஒரு மறக்கவியலாத அனுபவமாயிருந்தது. ஆரம்ப காலத்தில் பலவித கஷ்டங்கள் இருந்தபோதிலும் நாளாக, நாளாக அதுவே பிடித்துபோய் மும்பையை விட்டு விட்டு வந்து சுமார் பத்துவருடங்களாகியும் அந்த நாட்களை நினைத்துக்கொள்ளும்போதெல்லாம் இப்போதும் என் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சியே தோன்றுகிறது.

இன்றைய கடைசிப் பதிவில் (எத்தனை நல்லவையாயிருப்பினும் எதற்கும் ஒரு முடிவு வேண்டுமே.. இல்லையென்றால் என்னடா இவன் ராவுகிறானே, அல்லது பிளேடு போடுகிறானே என நினைக்கத்தோன்றும்?) ஆங்கிலத்தில் tidbits என்பார்களே, அதைப்போல் சில துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

துணுக்கு 1.

இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யாதீர்கள் என்பது முதலும் முக்கியமானதுமான Do’s என என் சக ஊழியர்கள் கூறியதாய் என்னுடைய அனுபவங்கள் (1) ல் எழுதியிருந்தேன்.

முதல் வகுப்பில் பயணக் கட்டணம் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தைப் போன்று சுமார் நான்கு மடங்கு கூடுதலாகும். இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது முதல் வகுப்பில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஏறத்தாழ நான்கு மடங்கு குறைவாயிருக்கும். ஆயினும் சில நாட்களில் (முக்கியமாக திங்கட்கிழமைகளில்) முதல் வகுப்பில் அளவுக்கதிகமான கூட்டம் இருக்கும். அதற்கு ஒரு காரணம் இரண்டாம் வகுப்பு பயணிகளும் முதல் வகுப்பில் ஏறிக்கொள்வதுதான்.
வழக்கமாய் முதல் வகுப்பில் பயணம் செய்வோர் அத்துமீறி முதல் வகுப்புப் பெட்டிகளில் ஏற முயலும் இரண்டாம் வகுப்பு பயணிகளை பார்த்த மாத்திரத்திலேயே இனம் கண்டுக்கொள்வர். ஆயினும் அவர்களை கீழே இறங்கச்சொல்ல மனமில்லாமல் (நமக்கேன் வம்பு) அவர்களுடைய தொல்லையையும் சகித்துக் கொண்டு மவுனமாயிருப்பர்.

எனக்கு ஆத்திர, ஆத்திரமாய் வரும். வாயிலில் நின்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏறவே விடமாட்டேன். அதன் காரணமாக சில சமயங்களில் தகராறு ஏற்பட்டதும் உண்டு. அப்போதும் எனக்காக பரிந்து பேசிக்கொண்டு யாரும் வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அவர்கள் தென்னிந்தியராகவே இருப்பார்கள்.


துணுக்கு 2

முதல் வகுப்பு பெட்டிகளின் அழையா விருந்தாளிகளில் முக்கியமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த அலிகள்.

முதல் வகுப்பு பயணச்சீட்டு இல்லாமலே சர்வசாதாரணமாய் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில் இவர்கள் கூட்டம் கூட்டமாய் பயணம் செய்வது தவிர்க்கமுடியாத காட்சி.
இவர்களை டிக்கட் பரிசோதகர்கள்கூட கண்டுக்கொள்வதில்லை.

ஆனால் ஒன்று! இவர்கள் யாரும் இருக்கையில் அமர மாட்டார்கள். வாயிலருகே தரையில் அமர்ந்துக்கொண்டு அவர்களுக்குள்ளே உரத்தக்குரலில் பேசி, சிரித்துக்கொண்டு முகச்சுளிப்புடன் தங்களை நோக்கும் சகபயணிகளைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் உலகத்திலேயே மிதந்துக்கொண்டிருப்பர்.

சகபயணிகளில் யாராவது அவர்களை கீழே இறங்கவோ, பேசாதிருக்கும்படி கூறினாலோ அவ்வளவுதான். ‘தோடி வந்துட்டா குலுக்கிக்கினு, போவியா..’ என்று ஆரம்பித்து ஓரிரண்டு வசவு சொல்லையும் (unparliamentary words) எடுத்து விடுவார்கள். அதில் ஓரிரண்டு தமிழ் பெண்கள் இருந்து அர்த்தம் புரிந்து முகம் சுளிப்பதைப் பார்க்கும் மும்பை பெண்கள், ‘க்யா போலா வோ? போல்னா..’ என்று நச்சரிப்பார்கள்.

அவர்களோ ‘குச் நஹி ரே. சோட்தோ’ என்று சமாளித்து விட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வார்கள்.



துணுக்கு 3

சீசன் டிக்கட் வாங்க வேண்டுமென்றால் நம்முடைய பாஸ்போர்ட் அளவு நிழற்படம் ஒட்டிய அடையாள அட்டையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும், சீசன் டிக்கட்டைப் பரிசோதிக்க வரும் அதிகாரியிடம் அடையாள அட்டையையும் சேர்த்து காண்பிக்கவேண்டும் என்பதும் நியதி.

ஒருமுறை நான் அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தேன். வண்டி குர்லாவைக் கடந்து செம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது..

குர்லா நிலையத்தில் வண்டியில் ஏறிய பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் பயணிகளின் பயணச்சீட்டை பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது ஒரே குழுவாய் பயணம் செய்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் (அவர்களை நான் நாள்தோறும் அதே வண்டியில் பார்த்திருக்கிறேன். கூட்டமாய் அடித்துப்பிடித்து ஏறி பெருவாரியான இருக்கைகளைப் பிடித்துக்கொண்டு, சீட்டாட்டம் ஆடுவதோடு மட்டுமல்லாமல் கடி ஜோக்குகள் அடித்து சக பயணிகளைக் கடுப்படிப்பது வழக்கம்.) ஒருவையொருவர் பார்த்துக்கொண்டு தங்களுக்குள் ரகசியக் குரலில் பேசிக்கொண்டனர்.

பிறகு அதில் பாதி பேர் எழுந்து வாயிலருகில் போய் நின்றுக்கொண்டனர். இருக்கையிலிருந்த இளைஞர்கள் தங்களுடைய சீசன் டிக்கட் பரிசோதிக்கப்பட்டதும் வண்டியை விட்டு இறங்குவதுபோல் எழுந்து சென்று தங்களுடைய சீசன் டிக்கட்டுகளை தங்கள் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் அறியாததுபோல் நின்றுகொண்டனர். சீசன் டிக்கட்டை நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவர்கள் காலியான தம் நண்பர்களுடைய இருக்கைகளில் வந்தமர்ந்துக்கொண்டனர். என்னைப் போன்ற சக பயணிகள் இதையெல்லாம் கண்கூடாக பார்த்தும் நமக்கேன் வம்பு என்பதுபோல் இருந்து விட்டனர். ஆனால் எங்களுடன் பயணம் செய்துக்கொண்டிருந்த டர்பன் அணிந்திருந்த சர்தார்ஜி ஒருவர் (அவரை அன்றுதான் முதல் முறையாய் பார்க்கிறேன்.) விடவில்லை.

உடனே எழுந்து நின்று தன் கடமையே கண்ணாய் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரியைத் தொட்டு கவனத்தை ஈர்த்தார். எரிச்சலுடன் ‘Yes?’ என்று அவரை நோக்கித் திரும்பியவரிடம் ‘Sir Please check the tickets of the boys who are about to get down. I feel some strange things are happening.’ என்றார்.

ஆனால் பரிசோதனை அதிகாரி அவரைக் கண்டுகொள்ளாமல் மீதமிருந்த பயணிகளிடம் (இருக்கையில் வந்தமர்ந்த இளைஞர்கள் உட்பட) அவரவர் பயணச் சீட்டைப் பரிசோதித்து முடித்துவிட்டு ‘செம்பூர்’ நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

அவர் இறங்குவதைப் பார்த்த சர்தார்ஜி கோபத்துடன் ‘இதர் க்யா ஹோ ரஹா ஹை?’ என்று எழுந்து அவரும் இறங்கி பரிசோதனை அதிகாரியின் பின்னே ஓடிப்போய் அவரைப் பிடித்து நிறுத்தி வாக்குவாதத்தில் இறங்க அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது.

இந்த களேபரத்தில் முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இளைஞர் கூட்டம் வண்டியின் மறுபக்க வாயில் வழியாக ஒட்டுமொத்தமாய் குதித்திறங்கி ஓடிவிட இறங்கிச் சென்ற அதிகாரியை மீண்டும் வலுக்கட்டாயமாய் வண்டியில் ஏற்றிய சர்தார்ஜி இளைஞர் கூட்டத்தைக் காணாமல் பரிதாபமாய் விழித்துக்கொண்டு நின்றார்!

இதுபோன்று எத்தனையோ நிகழ்ச்சிகள்.

காதலர்களின் ஊடல், சாடல்கள், ஏறி இருக்கையிலமர்ந்தவுடன் உலகத்தை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்துவிடுபவர்கள், செய்தித்தாள், வார, மாத பத்திரிகைகள் (செம்பூரிலிருந்து ஏறும் பெரும்பாலான பாலக்காட்டைச் சார்ந்த ஐயர்களிடம், ஆண்களாயிருந்தால் ஹிண்டுவும் பெண்களாயிருந்தால் மங்கையர் மலர், குமுதம், கல்கி கண்டிப்பாய் இருக்கும்) சகிதமாய் வண்டியிலேறி இறங்கும் வரை அக்கம்பக்கம் நடப்பதைக் கண்டுகொள்ளாமல், படித்ததையே திருப்பி, திருப்பி படித்து நேரத்தைப் போக்குபவர்கள், அன்றைய பங்கு சந்தையில் ஏறிய, இறங்கிய பங்குகளைப் பற்றிய காரசாரமான விவாதங்கள், என பலதரப்பட்ட மனிதர்களைக் காணும் ஒரு அலாதியான அனுபவம் அது.

இவ்வனுபவத்தை கடந்து ஐந்து தினங்களில் என்னால் இயன்றவரை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

பொறுமையாய் படித்து என்னுடன் தங்களுடைய அனுபவங்களையும் பின்னூட்டமிட்டு பகிர்ந்துக்கொண்ட அனைத்து தமிழ்மணம் நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி!

2 கருத்துகள்:

  1. அன்புள்ல ஜோஸஃப்,

    உங்க மும்பை ரயில் அனுபவங்களை எல்லாம் இப்பத்தான் ஒரேடியாப் படிச்சு முடிச்சேன். அருமையா எழுதியிருக்கீங்க.

    இறங்குனவரை ஏத்திக்கிட்ட இடத்திலே சிரிப்பா இருந்தது.

    நல்லா வாய்விட்டுச் சிரிக்கவைத்ததுக்கு நன்றி.

    இன்னும் உங்க அனுபவங்களையெல்லாம் எழுதுங்களேன்.

    'பழைய கதை' கேக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி கோபால்.

    பழைய அனுபவங்களை முழுவதுமாக நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

    கண்டிப்பாய் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு