07 ஜூன் 2010

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!

கடந்த சில வாரங்களாக சூடுபிடித்து எரிந்துக்கொண்டிருந்த தமிழ் பதிவுலகம் சற்றே தணிந்து சுமூக சூழல் உருவாகியிருப்பதைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடரவேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆவல்.

பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்களால்தான் சரளமாக, அழகாக பேசவும் எழுதவும் இயலும் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான். மனதில் பட்டதை அப்படியே பேச்சில் கொட்டித் தீர்ப்பதால் உடனடி பகை ஏற்பட்டாலும் அது வெகு விரைவில் மறக்கப்பட்டுவிடும். உணர்ச்சி மேலீட்டால் பேசிவிட்டு வருத்தப்படுபவர்கள் நம்மில் பலர். 'ஆத்திரத்தில பேசிட்டேங்க, மன்னிச்சிருங்க. மனசுல வச்சிக்காதீங்க.' என்று நாம் மன்னிப்பு கோரும்போது பாதிக்கப்பட்டவர் உடனே, 'பரவாயில்லீங்க. அத நா அப்பவே மறந்துட்டேன்.' என்பதோடு மனதில் மண்டியிருந்த மனக்கசப்பு மறைந்துபோகும்.

ஆனால் எழுத்து அப்படியல்ல. ஏனெனில் சூடான பேச்சு பேசுவதை கேட்கக்கூடிய தொலைவில் உள்ளவர்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய தமிழ்மணம் போன்ற திரட்டியில் இணைக்கப்படுகிற பதிவுகளில் நாம் எழுதுகின்ற சொற்கள் காலாகாலத்திற்கும் ஏட்டில் நிற்கக் கூடியவை. காலத்தாலும் அழித்துவிட முடியாத சுவடாக நின்றுவிடக்கூடியவை. என்னுடைய பதிவில் ஒருவரை இழித்து எழுதியதுடன் நிற்காமல் அதை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நினைப்பில் திரட்டியிலும் இணைத்துவிடும்போது அது ஒரு தெருச்சண்டைக்கு சமமாகிவிடுகிறது. எந்த ஒரு தெருச்சண்டையும் முதலில் ஒரு சிலருக்கு இடையில்தான் துவங்கும். ஆனால் அது வெகுவிரைவில் பிரச்சினையில் சிறிதளவும் சம்பந்தமில்லாதவர்களையும் ஈர்த்துவிடுவதைக் கண்டிருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பதிவுலகில் எனக்கிருந்த அனுபவத்தில் இத்தகைய சர்ச்சைகள் பெரும்பாலும் சாதிகளை வைத்தே ஏற்பட்டுள்ளன. சாதி, மொழி, இனம், மதம் என்பவற்றால் மனிதர்களை பிரித்து ஆளும் உத்தி பண்டைய தமிழர்களுக்கிடையில் இருந்ததோ என்னவோ. ஆனால் அது இன்றும் நம்மிடையில் தொடர்வதுதான் வேதனை.

நம்முடைய சாதி, மதம், மொழி ஆகியவற்றை நிர்ணயிக்கும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அது பிறப்பால் நமக்கு வழங்கப்பட்டது. அதில் எவ்வித பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. பிறப்பால் உயர்ந்தவன் என்று எவன் ஒருவன் தன்னைப்பற்றி கருதுவானோ அவன் மூடனிலும் மூடன் என்பதே என் கருத்து. அவன் இந்த முன்னேறிய சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுபவன். அவனுடைய கருத்துக்களும் அப்படியே. அத்தகைய ஒருவனின் எழுத்தால் ஆத்திரப்பட்டு அதே பாணியில் அவனை திருப்பியடிப்பதால் நானும் அவனைப் போன்றே தரம் தாழ்ந்து போய்விடுகிறேன் என்பதுதான் வேதனையான உண்மை.

மதமும் அப்படியே. இறைவன் ஒருவன் இருக்கிறானா இல்லையா என்பதை விவாதிப்பதில் அர்த்தமிருக்கலாம். ஆனால் இறைவன் சொல்கிறான் என்ற பெயரில் இன்று மதங்கள் போதிக்கும் அனைத்துமே பொய், பித்தலாட்டம் என்பது சத்தியமான உண்மை. மதத்தை பரப்ப நினைக்கும் ஒருசில போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. இளம் சிறார்களை தன்னுடைய பாலியல் உணர்வுகளுக்காக பாழ்படுத்திய கத்தோலிக்க மதக்குருமார்களால் கத்தோலிக்க மதத்திற்கு இழுக்கு. போலி பிஷப், மற்றும் போதகர்களால் CSI Churchக்கு இழுக்கு, நித்தியானந்தா போன்ற போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு இழுக்கு, அப்பாவி மக்களை தீவிரவாத கொடுமைக்கு ஆளாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இஸ்லாம் மதத்திற்கு இழுக்கு.... இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.... ஆக மதங்கள் மக்களை இணைப்பதைவிட பிரிப்பதிலேயே குறியாக இருக்கின்றன...

சமீப காலமாக மொழியும் அப்படித்தான். அண்டை நாட்டில் அவதிக்குள்ளாக்கப்படுபவன் வம்சாவழி இந்தியன் என்று காணாமல் அவன் தமிழந்தானே என்ற அலட்சியத்துடன் நடந்துக்கொள்ளும் மத்திய அரசு தமிழனை கொன்று குவித்தவனுடன் கூட்டு சேர்ந்து வணிகம் செய்வதிலேயே குறியாயிருக்கிறது. சிதிலமடைந்து போயிருக்கும் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்ப இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது போய்விடுமே என்கிற எண்ணத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் ஒப்புக்கு கண்டனங்களை ஒருபுறம் எழுப்பிக்கொண்டே மறுபுறம் கட்டுமான ஒப்பந்தங்களை பெறுவதில் குறியாய் நிற்கிறது.

இதுதான் இன்றைய நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் சாதி சண்டையில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதில் யாருக்கு என்ன லாபம்? வாத, பிரதிவாதங்கள் செய்வதற்கு விஷயமா இல்லை?

ஆகவே இன்றைய தமிழ்பதிவுலகில் மீண்டும் ஒரு சுகாதாரமான சூழல் உருவாக என மனதில் பட்ட சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சாதீயத்தை பற்றி எழுதுவதை விட்டுவிடுவோம். அதைப் பற்றி எழுதும் பதிவர்களை கண்டுக்கொள்ளாமல் ஒதுக்குவோம்.

2. ஆங்கில பதிவுகளுக்கு இணையாக பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுவோம், அத்தகைய எழுத்துக்களை ஊக்குவிப்போம்.

3. குழுக்கள் சேர்த்து கும்மியடிப்பதை தவிர்த்து நல்ல பதிவுகளை எழுதும் பதிவர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், பின்னூட்டங்கள் இட்டு அவர்களுடைய எழுத்தை ஊக்குவிப்போம்.

நல்லதொரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் முனைப்பாயிருப்போம்.

13 கருத்துகள்:

  1. //பிறப்பால் உயர்ந்தவன் என்று எவன் ஒருவன் தன்னைப்பற்றி கருதுவானோ அவன் மூடனிலும் மூடன் என்பதே என் கருத்து.// சரியாகச் சொன்னீர்கள்.
    // மதத்தை பரப்ப நினைக்கும் போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. // ஒரு சிலரால் என்பதுதான் சரியாக இருக்கும்.
    நல்ல பதிவுகளை ஊக்குவிக்கவேண்டும் என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. //குழுக்கள் சேர்த்து கும்மியடிப்பதை தவிர்த்து நல்ல பதிவுகளை எழுதும் பதிவர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், பின்னூட்டங்கள் இட்டு அவர்களுடைய எழுத்தை ஊக்குவிப்போம்.//

    (நகைச் சுவையாகப் பார்க்கவும். இன்னொரு உலக மகா யுத்தம் வேண்டாம்)

    அதெப்படீங்க எங்க பிறப்புரிமையை விடமுடியும்? கும்மி அடிப்பதுதான் எங்க குலத்தொழில். அதை விடச்சொன்னால் எப்படீங்க?

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராபின், // மதத்தை பரப்ப நினைக்கும் போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. // ஒரு சிலரால் என்பதுதான் சரியாக இருக்கும். உண்மைதான். மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க டாக்டர், //அதெப்படீங்க எங்க பிறப்புரிமையை விடமுடியும்? கும்மி அடிப்பதுதான் எங்க குலத்தொழில். அதை விடச்சொன்னால்...// பிறப்புரிமைன்னு நினைக்கற பலதைத்தான் விடச் சொல்றேனே. இதையும் விட்டுற வேண்டியதுதான் :))

    பதிலளிநீக்கு
  5. இன்றைய நிலையில் மிக, மிக அவசியமான அறிவுரைகளை வழங்கியிருக்கிறீர்கள் ஸார்..!

    மிக்க நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  6. //நம்முடைய சாதி, மதம், மொழி ஆகியவற்றை நிர்ணயிக்கும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. //

    பதிவில் சாதி, மதம் பெருமை பேசி மற்றவர்களிடம் பிரச்சனை செய்வோரும் உள்ளனர். அதே போல எல்லா பிரச்சனைகளையும் சாதி மதமாக திரிப்பவர்களும் உள்ளனர். எல்லாமே அரசியல் தான். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் அறிந்து தான் பிரச்சனைகளை அணுகனும்.

    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  7. யோசனைகளை நன்றாகத் தான் இருக்கின்றன! கேட்பதற்கு மனம் வேண்டுமே!

    மிருகத் தன்மையில் இருந்து விடுபடுவதற்கான சரியான எஸ்கேப் வெலாசிடி வருகிற வரை, இந்த மாதிரிச் சிறுமைகளில் திரும்பத் திரும்பக் கீழே விழுந்து உழல்வது, தவிர்க்க முடியாதது போலத் தான் தோன்றுகிறது!

    நல்லதே நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  8. வாங்க கண்ணன்,
    அதே போல எல்லா பிரச்சனைகளையும் சாதி மதமாக திரிப்பவர்களும் உள்ளனர்.//

    உண்மைதான். அத்தகையோரையும் அனைவரும் ஒதுக்க வேண்டும் என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கிருஷ்ணமூர்த்தி,

    கேட்பதற்கு மனம் வேண்டுமே!//

    சரியாய் சொன்னீர்கள். அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் என்பார்களே அதுபோன்று இத்தகைய பதிவுகளை ஒதுக்கிவிடுவதன் மூலம் பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கிவிட முடியும் என கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி உ.தமிழன்.

    உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் நிச்சயம் ஆரோக்கியமான சூழலை உருவாக்கிட முடியும் என கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமை டிபிஆர் ஐயா...
    இதுநாள் வரை சாதிப் பித்து, ஹிட் பித்து, பின்னூட்டப் பித்து பிடித்தவர்கள் மத்தியில் வாழ்வதாக நினைத்திருந்தேன். இதையெல்லாம் விட மோசமான துரோகிகள் நடுவில் வாழ்வாதாக இப்போ உணர்கிறேன்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு