கடந்த சில நாட்களாக பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சோனியாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதைப் பற்றி பலவிதமாக எழுதி வருகின்றனர்.
சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாததாலோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க நினைத்தோ இந்த பயணத்தைத் தவிர்த்திருக்கலாம். இதற்கு தன் உயிர் மீதான பயம் என்றோ அல்லது அவருடைய இந்த தவிர்ப்பு தமிழ் ஈழ போராளிகளுக்கு வெற்றி என்றோ கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகிறேன்.
ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளையெல்லாம் புறக்கணித்த இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என்று வாதிடுவதும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே கூறுவேன்.
போர் நிறுத்தம் வேண்டாம் ஆனால் ஆயுதங்களையாவது வழங்காமல் இருந்திருக்கலாமே என்று வாதிடுபவர்களுக்கு. நாம் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திவிட்டால் மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை நிறுத்திவிடப் போவதில்லை.
இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சைனா, இஸ்ரவேல் போன்ற நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா,பாகிஸ்தான் ஏன் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விரோத கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.
ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அனனத்து ஜனாதிபதிகளுமே விடுதலைப் புலிகளள அழித்துவிடுவதில் குறியாகவே இருந்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முயற்சியில் ராஜபக்ஷே சற்று அதிக முனைப்பாகவே இருக்கிறார் என்பதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள்ளேயே பிரிவினைகளும், பூசல்களும் ஏற்பட்டுள்ளதும் அவர்களின் தொடர் தோல்விக்கு ஒரு காரணம்.
எந்த ஒரு போராட்டத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு. அதை பிரபாகரன் உணராததுதான் அவருடைய இன்றைய இழி நிலைக்கு காரணம். தனி ஈழம் என்பது ஒரு நிறைவேற இயலா கனவு என்பதை உணர்ந்து ஒரு ஃபெடரல் ஆளுமைக்கு தன்னை தயார் செய்துக்கொண்டு அந்த கோணத்தில் தமிழர்களின் சம உரிமைக்கு அவர் பாடுபட முனனந்திருக்கலாம். அந்த அமைப்பைச் சார்ந்த பல தலைவர்களுடைய அறிவுரையையும் புறக்கணித்ததோடல்லாமல் தன்னுடைய கருத்தைச் சார்ந்திராதவர் அனைவருமே தன்னுடைய அமைப்புக்கு எதிரிகள் என நினைத்து அவர் படுகொலை செய்த தமிழின தலைவர்கள் எத்தனை பேர். அவர்களுள் ஒருவரான பத்மநாபாவை சென்னைக் குடியிருப்புகளுள் ஒன்றில் புகுந்து ஈனத்தனமாக தாக்கியதை அதே பகுதியில் வசித்ததால் நேரில் கண்டவன் நான்.
அதையும் கடந்து என்னுடைய பிரதமர் ஒருவரை திட்டமிட்டு ஒரு பெண்ணை பயன்படுத்தி படுகொலை செய்தவர் அவர். அத்தகையவரை நண்பர் என்றும் அவர் போராளியல்ல என்றும் நம் நாட்டு தலைவர்கள் சொல்லித்திரிவது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.
இன்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசு எந்த விதத்தில் பொறுப்பாகிறது என்பதும் விளங்கவில்லை. விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன் என்ற முனைப்புடன் இலங்கை அரசு போரை துவக்கியது. விடுதலைப் புலிகள் வசம் இல்லாத கனரக ஆயுதங்களே இல்லையென்னும் அளவுக்கு அது பலம் வாய்ந்திருந்தது. தரையிலும்,கடலிலும், வானிலும் ஒரு நாட்டின் படைக்கு இணையாக போரிட பலம் பெற்றிருந்த ஒரு அமைப்பை அழிக்க நினைத்த அரசு அதே அளவுக்கு போரிடத்தானே வேண்டும். விடுதலைப் புலிகளைப் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து போராட்டத்தைத் துவக்கினால் நம்முடைய மத்திய அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா என்ன?
சில மாதங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் கூறியதுபோன்று போர் என்று வந்தால் மக்கள் மரிக்கத்தானே வேண்டும்?
இலங்கை தமிழர்களுக்கு பிரதிநிதி என தங்களை முன்நிறுத்தும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது என்று இலங்கை அரசு மட்டுமல்லாமல் ஐ.நா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டினவே? அதை சிறிதும் பொருட்படுத்தாமல் உயிருக்கு பயந்து தப்பிக்க நினைத்த மக்களை தடுத்தும் நிறுத்தும் விதமாக மண் சுவர்களை எழுப்பியது யார்? இலங்கை அரசா? அல்லது அதையும் மீறி மக்கள் தப்பித்துவிடக் கூடாதே என்று கடலோரங்களிலும் கன்னிவெடிகளள புதைத்து வைத்தது யார்? அதையும் மீறி பாதுகாப்பு பகுதியை நோக்கி ஓடிய மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதாக தப்பித்து வந்த தமிழர்களே கூறுகிறார்களே அது பொய்யா?
இலங்கை தமிழர்களள காப்பாற்ற நினைக்கும் நம்முடைய தமிழக தலைவர்கள் வேண்டுமானால் பிரபாகரனுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தாதீர்கள் என்று கூறட்டுமே.
அதை விட்டு விட்டு சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதில் என்ன பயன்?
சரி. இன்றைய பதிவின் தலைப்புக்கு வருவோம்.
மத்திய அரசில் காங்கிரஸ் வேண்டாம் என்றால் மாற்றாக எந்த கட்சிக்கு வாக்களிப்பது? பிஜேபிக்கா?
நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதே இலங்கைவாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காகத்தானே. மத்திய அரசு இதில் நாம் விரும்பும் வகையில் பணியாற்ற வேண்டுமென்றால் பிஜேபி அமைக்கும் அரசில் தமிழகத்தைச் சார்ந்த ஒரு பலம் வாய்ந்த கட்சி அதில் பங்குபெற வேண்டும். ஆனால் பிஜேபி தமிழகத்தில் கூட்டு சேர்ந்திருப்பது யாருடன்? ஒரு முன்னாள் கதாநாயகன், மற்றொருவர் முன்னாள் வில்லன், இன்னாள் கதாநாயகன்.
தேர்தலுக்குப் பிறகு ஒரு தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வரும் சூழலில் நம்முடைய செல்வியும் (ஏன் மருத்துவரும் கூட) அவர்களுடன் சேருவார் என்றே வைத்துக்கொள்வோம்.
செல்வியின் தமிழ் ஈழ நிலைப்பாடு அப்படியே இருக்கும் என்று கருதுகிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. அவருடைய சமீபத்திய நிலைப்பாடு தேர்தல் தந்திரம் மட்டுமே. அவருடைய ஒரேயொரு குறிக்கோள் தன்னுடைய பரம எதிரியான முகவை வீழ்த்துவது. அதன் முன்னால் மற்றதெல்லாம் வெறும் தூசு!
ஆகவேதான் சொல்கிறேன் காங்கிரசுக்கு மாற்று தற்போது இல்லை.
********