கடந்த சில மாதங்களில் வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகள் களவு போய்விட்டதாக வங்கி வாடிக்கையாளர்களின் புகார்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இன்றும் கூட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே இத்தகைய செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் இதுவரை நடந்துள்ள மூன்று சம்பவங்களுள் ஒன்றிலும் குற்றவாளிகள் பிடிபடவில்லையென்றும் இதற்கு விசாரணக்கு ஒத்துழைக்க மறுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளின் அலட்சிய போக்கே முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இத்தகைய திருட்டு நடைபெற வாய்ப்பில்லை என்பதுபோல் வங்கி அதிகாரிகள் நடந்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் வங்கி அதிகாரிகள் இப்படி நடந்துக்கொள்கின்றனர்? இத்தகைய திருட்டில் வங்கி ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ சம்பந்தப்பட வாய்ப்புள்ளதா?
இதைக் குறித்து ஆராய வங்கிகள் வழங்கும் இத்தகைய வசதிகளின் சட்டதிட்டங்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம் என கருதுகிறேன்.
சாதாரணமாக வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவை வங்கிகள் வழங்கும் பிற சேவைகளான சேமிப்பு கணக்கு (Savings Accounts), வைப்பு நிதி கணக்கு (Fixed or Term Deposit Accounts), கடன் கணக்குகள் (Loan/overdraft accounts) போன்ற சேவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது இந்த மூன்று சேவைகளிலும் ஒரு வாடிக்கையாளர் கடன் வழங்குபவராகவோ (Lender) அல்லது கடன் பெறுபவராகவோ (Borrower) கருதப்படுகிறார். இன்னும் சற்று தெளிவாக கூற வேண்டுமென்றால் தன்னுடைய சேமிப்பை வங்கிகளில் இட்டு வைக்கும் ஒரு வாடிக்கையாளர் (Depositor) வங்கிக்கு வட்டிக்கு கடன் வழங்குகிறார். அதையே வட்டிக்கு கடனாக பெறுகிறார் (Borrower) வேறொரு வாடிக்கையாளர் - ஆக வங்கி-வாடிக்கையாளர் உறவு ஒரு Lender-Borrower உறவு என கருதப்படுகின்றது. இந்த உறவில் வாடிக்கையாளரின் சேமிப்பை கடனாக பெறும் வங்கி வாடிக்கையாளரின் சேமிப்பை அசல் மற்றும் வட்டிக்கு முழு பொறுப்பாகிறார்.
ஆனால் வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவையில் மற்ற வங்கி சேவைகளில் உள்ள அடிப்படை உறவில் உள்ள கடமை (obligation) இல்லை. அதாவது நான் என் வசமுள்ள லாக்கரை சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுக்கு வாடகைக்கு விடுகிறேன் என்பதான ஒரு உறவு. எப்படியொரு ஒரு வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுகிறாரோ அதுபோன்று. இந்த உறவிலும் ஒரு வாடகைக்கு விடும் ஒரு உரிமையாளர்-வாடகைதாரர் (Lessor-Lessee) உறவு மட்டுமே உள்ளது. வாடிக்கையாளர் வாடகைக்கு எடுக்கும் லாக்கரில் என்ன வைக்கலாம், வைக்கக்கூடாது என்பது வங்கிகள் இதற்கென நிர்ணயித்துள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். சாதாரணமாக Inflammable எனப்படும் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் எவ்வித பொருட்களையும் வைக்கலாகாது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். லாக்கருக்குள் வைக்கப்பட்டிருக்கும் எந்த பொருட்களுக்கும் வங்கி பொறுப்பாகாது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். லாக்கரை வாடகைக்கும் எடுக்கும் ஒரு வாடிக்கையாளர் இத்தகைய சட்டதிட்டங்களுக்கு ஒப்புக்கொண்டே லாக்கரை வாடகைக்கு எடுப்பதால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு சேதத்திற்கும் கூட வங்கிகள் பொறுப்பாவதில்லை. சேதத்திற்கே பொறுப்பில்லையென்றால் அதிலுள்ளவை காணாமல் போவதற்கு எப்படி வங்கி பொறுப்பாக முடியும்? ஆனால் ஒன்று. லாக்கருக்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கோ அல்லது திருட்டுக்கோ வங்கியோ அல்லது அதன் ஊழியர்களோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகும் பட்சத்தில் வங்கி நிச்சயம் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.
இத்தகைய சம்பவங்களுக்கு எந்தவிதத்தில் வங்கி பொறுப்பாக முடியும் என்று பார்ப்போம்.
சாதாரணமாக வங்கியிலுள்ள லாக்கர் பெட்டகத்தில் அறுபதிலிருந்து எழுபத்தைந்து லாக்கர்கள் இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு மாஸ்டர் சாவியும் ஒவ்வொரு லாக்கருக்கும் பிரத்தியேக சாவிகளும் இருக்கும். மாஸ்டர் சாவி வங்கி கிளை அதிகாரி அல்லது மூத்த அதிகாரியின் வசம் இருக்கும். இதற்கு மாற்று சாவி இருக்கும். ஆனால் அது சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் வைக்கப்படலாகாது. அதே வங்கியின் அருகிலுள்ள வேறொரு கிளையிலோ அல்லது அருகிலுள்ள வேறொரு வங்கியிலோ பாதுகாப்பாக வைக்கப்படிருக்கும். ஆனால் லாக்கர் வாடகைக்கு வழங்கப்படும் சாவிகளுக்கு மாற்று சாவி இருக்காது. அதனால்தான் வாடகைதாரர் தன்னுடைய சாவியை தொலைத்துவிடும் பட்சத்தில் லாக்கர் பெட்டகத்தை தயாரித்து வழங்கிய நிறுவன ஊழியர்களே வந்து லாக்கரை உடைத்து திறக்க வேண்டியிருக்கும். இதை சம்பந்தப்பட்ட வாடகைதாரரின் அனுமதியின்றியோ அல்லது அவர் இல்லாத நேரத்திலோ திறக்க லாக்கர் நிறுவனம் ஒத்துக்கொள்ளாது. இதற்கு செலவாகும் தொகையும் உடைக்கப்பட்ட பூட்டை மாற்ற தேவையான தொகையும் வாடகைதாரரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதற்கு தேவையான ஷரத்தும் லாக்கர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆகவே ஒரு லாக்கரை வாடிக்கையாளருக்கு தெரியாமல் வங்கி ஊழியர்கள் திறக்க வாய்ப்பேயில்லை.
ஆனால் வங்கி அதிகாரிகளுக்கு சில பொறுப்புகள் உள்ளன. ஒரு லாக்கர் வாடகைக்கு விடப்படும்போது வாடகைதாரரின் புகைப்பட சான்று உள்ள ஐ.டி கார்ட் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். மேலும் அவருடைய மாதிரி கையொப்பத்தை பெற்று வைத்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் வாடகைதாரரின் புகைப்படத்தையும் வங்கிகள் பெற்று தங்கள்வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் லாக்கரை திறக்க வரும் வாடகைதாரரை இவற்றைக்கொண்டு சரிபார்க்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் லாக்கரை திறக்க வரும் வாடகைதாரர் அதற்கென வங்கி வைத்திருக்கும் நுழைவு சீட்டை நிறப்பி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை தங்கள் வசமுள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் ஒப்பிடுவதுடன் நிற்காமல் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்திலும் வாடகைதாரரின் கையொப்பத்தை பெற வேண்டும். அதில் லாக்கர் திறக்கப்படும் நேரமும் கூட குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் சரிவர கடைபிடிக்காமல் லாக்கரை திறக்க வரும் நபரிடம் அதற்குண்டான சாவி இருந்தாலே போறும் என்கிற சில அதிகாரிகளின் அலட்சியபோக்கே இத்தகைய குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதையும் மறுக்க முடியாது.
மேலும் ஒருமுறை வாடகைக்கு விடப்பட்டு காலியாக்கப்படும் லாக்கரின் பூட்டை உடனே கழற்றி இதுவரை வாடகைக்கு விடப்படாத லாக்கரில் பொருத்தி அதனுடைய பூட்டை காலியாக்கப்பட்ட லாக்கரில் பொருத்த வேண்டும் என்ற கடமையும் வங்கிக்கு உண்டு. இதை Interchange of Locks என்பார்கள். ஏனெனில் ஒரு லாக்கரை வாடகைக்கு எடுக்கும் வாடகைதாரர் அந்த சாவிக்கு மாற்று பூட்டு செய்ய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட லாக்கர் காலியாக்கப்பட்டதும் அதன் பூட்டு வேறொரு லாக்கருக்கு மாற்றப்பட்டுவிட்டால் மாற்று சாவியை வைத்திருக்கும் வாடகைதாரரால் அதை தவறாக பயன்படுத்த முடியாது. ஆகவே புதிதாக லாக்கரை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர் அந்த லாக்கர் ஏற்கனவே வாடகைக்கு விடப்படிருந்ததா என்பதை விசாரித்துக்கொண்டு எடுக்க வேண்டும். அப்படி விடப்பட்டிருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பூட்டு மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும். தங்களுடைய லாக்கரின் சாவியை பொறுப்பான முறையில் வாடகைதாரர்கள் பாதுகாத்து வைக்க வேண்டியதும் மிக, மிக அவசியம். என்னுடைய வங்கி அனுபவத்தில் இத்தகைய திருட்டுகளில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களே காரணமாயிருந்ததைக் கண்டிருக்கிறேன். ஆகவே இத்தகைய விசாரனைகளில் வாடகைதாரர்களை தீர விசாரிப்பதும் காவல்துறையினரின் முக்கிய கடமைகளில் ஒன்று.
ஆனால் லாக்கர்கள் வாடகைக்கு விடப்படுவதற்கு முன் அவற்றிற்குண்டான சாவிகள் வங்கி வசம்தானே இருந்தன அப்போது வங்கி அதிகாரிகளே மாற்று சாவிகள் செய்து வைத்திருக்க முடியாதா என்றெல்லாம் வாதிட்டால் அது நடைமுறைக்கு அப்பாற்பட்டது என்றுதான் கூறுவேன். என்னுடைய முப்பதாண்டு வங்கி அனுபவத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை.
இதை வங்கி அதிகாரிகள் சார்பாக எழுதவில்லை. என்னுடைய அனுபவத்திலிருந்து மட்டுமே எழுதுகிறேன்.