நான் எழுதி வரும் 'சொந்த செலவில் சூன்யம்' என்ற தொடரில் நாளை (திங்கட்கிழமை) கோபாலுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை சென்னை பெருநகர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பகுதியை இடுவதற்கு முன்பு குற்றவழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை சுருக்கம்மாக கூறலாம் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதே இந்த சிறப்பு பதிவு.
நம்முடைய நாட்டில் குற்ற விசாரணைகள் நான்கு நிலைகளில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நிலைகளில் முதலில் வருவது
1.மாவட்ட நீதிமன்றங்கள்.
இதில் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) மற்றும் செஷன்ஸ் எனப்படும் அமர்வு நீதிமன்றங்கள் (Court of Sessions) வருகின்றன.
இவ்விரு நீதிமன்றங்களை அடுத்து
2. ஒவ்வொரு மாநிலங்களிலும் இயங்கி வரும் உயர் நீதிமன்றம்
இந்த நீதிமன்றத்தை அடுத்து
3. நாட்டின் மிகப்பெரியதாக கருதப்படும் உச்ச நீதிமன்றம் வருகிறது.
இந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகளை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) விரிவாக கூறுகிறது.
இச்சட்டத்தின்.
அ) பிரிவு 225லிருந்து 237 வரையுள்ள பிரிவுகள் அமர்வு நீதிமன்றங்களில் விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும்
ஆ) பிரிவு 238லிருந்து 250 வரையுள்ள பிரிவுகள் நீதித்துறை நடுவர் மன்றங்களில் விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் கூறுகின்றன.
இந்த தொடரில் குறிப்பிடப்படும் வழக்கு இவ்விரு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்பதால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி எதையும் நான் குறிப்பிடவில்லை.
ஒரு மாநிலத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்ற வழக்குகள் இவ்விரு நீதிமன்றங்களிலேயே நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படுவதால் இவற்றின் செயல்பாடுகளைப் பற்றி ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே அதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்பதால் ஒரு மாநிலத்தில் நடைபெறும் பெரும்பாலான வழக்குகள் அதன்னை அமர்வு நீதிமன்றங்களிலேயே முடிந்துவிடுவது வழக்கம், அதாவது அவற்றை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதவரை. மேல் முறையீடு என்று வந்துவிட்டால் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரையிலும் கூட செல்வது வாடிக்கை.
குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் இருவகைப் படும்.
1. அழைப்பாணை வழக்கு (summons cases)
2. பிடிகட்டளை வழக்கு (warrant case)
அதிகபட்சனையாக இரண்டு ஆண்டுகள் வரையிலும் தண்டனை வழங்கப்படக் கூடிய வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்றும் மரண தண்டனை வரையிலும் தண்டனை வழங்கப்படக் கூடிய வழக்குகளை பிடிகட்டளை வழக்குகள் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் அனைத்து குற்றவியல் பிடிகட்டளை வழக்குகளிலும் கூட குற்றவாளி கைது செய்யப்பட்டதும் ஆஜர்படுத்தப்படுவது நீதித்துறை நடுவர் மன்றத்தில்தான். அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் அது எத்தகைய தண்டனை வழங்கப்படக் கூடிய குற்றம் என்பது அனுமானிக்கப்பட்டு (சாதாரணமாக பிடிகட்டளை வழக்குகள் அன்னைத்துமே அமர்வு நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன என கூறலாம். ஏனெனில் ஒரு நீதிமன்ற நடுவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ வழங்க அதிகாரம் இல்லை) அதை தொடர்ந்து தன்னுடைய நீதிமன்றத்திலேயே விசாரிப்பதா அல்லது அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றபட வேண்டிய வழக்கா என்பதை நீதித்துறை நடுவர் அனுமானித்து அது அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றம் என்று கருதும்பட்சத்தில் அதில் குற்றப்பத்திரிக்கை தாக்கப்பட்டதும் வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் commitment of case to sessions court என்பார்கள். (குமுச. 207 (9).
அவ்வாறு ஒரு வழக்கை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு முன்பு நீதித்துறை நடுவர் என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விவரிக்கின்றது. அதன் சாராம்சத்தை மட்டும் பார்ப்போம்.
1. குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
2. குமுச பிரிவ 161 அல்லது 164ல் குறிப்பிட்டுள்ள படி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளனவா?
3. குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களும் எதிரிக்கு வழங்கப்பட்டுள்னவா? அவற்றில் ஏதேனும் அளிக்கப்படவில்லை என்று எதிரி கூறும் பட்சத்தில் அவற்றை அமர்வு நீதிமன்றத்தில் பெறுவது சாத்தியமாகாது என்பதால் வழக்கை அமர்வு நீதிமன்றத்திற்கு கமிட் (commit) செய்வதற்கு முன்பே அளிக்க நடுவர் உத்தரவிட வேண்டும்.
4. எதிரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதா? அல்லது காவல்துறை பொறுப்பில் உள்ளாரா? காவல்துறை பொறுப்பில் எதிரி இருக்கும் சூழலில் அவரை உடனே நீதிமன்ற பொறுப்பில் எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். பிணை வழங்கப் படாதிருக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிக்க நடுவர் முயலக் கூடாது.
5. அமர்வு நீதிமன்றத்தில் தன் சார்பில் வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள எதிரிக்கு வசதியுள்ளதா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும். அப்படி அவருக்கு வசதியில்லாத சூழலில் அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்
6. வழக்கு சம்மந்தப்பட்ட பொருட்கள் (material objects) ஏதேனும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
7. அமர்வு நீதிமன்றங்களில் அரசின் சார்பில் குற்றத்துறை வழக்கறிஞர் (public prosecutor) மட்டுமே ஆஜராக முடியும் என்பதால் அவருக்கு நீதிமன்ற நடுவர் அறிவிக்கை (notice) அனுப்ப வேண்டும்.
அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
1. வழக்கு விசாரணையை அமர்வு நீதிமன்றம் துவக்குவதற்கு முன்பு எதிரிக்கு குற்றப்பத்திரிக்கையும் அதனுடன் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களும் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
2. குற்றச்சாட்டு வரையப்படும் நிலையில் (framing of charges)எதிரியின் மீது குற்றம் எழவில்லை என்று அவருடைய தரப்பில் வாதம் முன்வைக்கப்படும் சூழலில் அரசு தரப்பு வாதத்தையும் கேட்டதற்கு பிறகே எதிரி தரப்பின் வாதத்திலுள்ள நியாயத்தை தீர்மானிக்க வேண்டும். இருதரப்பு வாதங்களின் முடிவில் எதிரியின் மீது வரையபட்ட குற்றம் ஏதும் நிரூபணம் ஆகவில்லை என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில் அவரை விடுவிக்கும் அதிகாரம் அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உண்டு (குமுச.232). எதிரியின் மீதான குற்றத்தில் உண்மை இருக்கலாம் என்று கருதப்படும் சூழலில் விசாரணையை தொடர அனுமதிக்கலாம்.
3. கொலை குற்றங்களில் எதிரி குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாலும் அவரை நீதிமன்றம் உடனே தண்டித்துவிடக் கூடாது. சாட்சி விசாரணை முழுவதுமாக முடிந்த பின்னரே தண்டனை வழங்க வேண்டும்.
4.எதிரி குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தால் அரசு தரப்பு சாட்சியங்களை விசாரிக்க அதற்கென்று நாள் ஒன்றை குறிப்பிட வேண்டும்.
5. அரசு தரப்பு சாட்சிய விசாரணை நடைபெறும்போது அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எதிரிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
6. அரசு தரப்பு சாட்சிய விசாரணைக்குப் பிறகு குமுச. பிரிவு 313ல் குறிப்பிட்டபடி நீதிபதி எதிரியை சுமத்தப்பட்ட குற்றங்களைக் குறித்து விளக்கமளிக்க உத்தரவிடலாம். அப்போது எதிரியே நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவர் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை பதிலளிக்க அனுமதிக்கலாகாது. ஆனால் இதற்கு மற்ற சாட்சியங்களைப் போல பிரமாணம் ஏதும் எதிரி எடுத்துக்கொள்ள தேவையில்லை. நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் உரிமையும் எதிரிக்கு உண்டு. நீதிபதியின் கேள்விகளுக்கு எதிரி அளிக்கும் பதில்களை நீதிபதி எழுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எதிரியின் பதில்களை சம்மந்தப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக அரசு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கலாம் என்கிறது இந்த சட்டப் பிரிவு. இந்த நியதி நிறைவேற்றப்படுவதற்கு முன்பு எதிரியின் சாட்சியங்களை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.
7. நீதிபதியின் நேரடி விசாரணைக்குப் பிறகும் குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில் எதிரியின் சாட்சிய விசாரணை துவங்கும். அரசு தரப்பில் ஆஜரான சாட்சிகளை மீண்டும் விசாரணை செய்யவும் விசாரணைக்கு வருவதற்கு மறுக்கும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அழைப்பாணை வழங்க வேண்டும் என்று கோரவும் எதிரிக்கு உரிமையுண்டு. எதிரி தரப்பு சாட்சிய விசாரணையின் போது எதிரியும் தனக்கு ஆதரவாக சாட்சியமளிக்க அனுமதிக்கப்படுவார். ஆனால் அத்தகைய சாட்சியம் கூற எதிரியை நிர்பந்திக்கும் அதிகாரம் இல்லை. அவராக முன்வந்து எழுத்து மூலம் கோரிக்கை வைத்தால் மட்டுமே அவர் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்கிறது குமுச பிரிவு 315.
8. எதிரியின் தரப்பில் முன்னிலைப்படுத்தப்படும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அரசுக்கு உண்டு.
9. சாட்சிய விசாரணையின் முடிவில் இருதரப்பு வழக்கறிஞர்களுடைய வாதங்களும் கேட்கப்படும். இருதரப்பு வாதங்களின் முடிவில் நீதிபதி தீர்ப்பளிப்பார்.
10. அமர்வு நீதிமன்றத்திற்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க அதிகாரம் உண்டு என்றாலும் அத்தகைய அதிகபட்ச தண்டனை சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறது சட்டம்.
இந்த பதிவு குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுவதின் சாராம்சம் மட்டுமே. இதைத் தவிர இன்னும் பல நடைமுறைகளை விவரமாக தெரிவிக்கின்றது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்.
ஆனால் என்னுடைய 'சொந்த செலவில் சூன்யம்' என்ற க்ரைம் தொடரை தொடர்ந்து படிக்க இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
***********