பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் தங்களை எவ்வளவுதான் உணர்வுபூர்வமாக தயாரித்துக்கொண்டாலும் அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லாதிருக்கும் பட்சத்தில் மனநிம்மதியுடன் மீதமுள்ள நாட்களை செலவழிக்க வாய்ப்பில்லை.
'தாயும் பிள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேறு' என்கிற காலம் இது!
ஆகவே தங்களுடைய ஓய்வு காலத்திலும் அப்போதுள்ள வாழ்க்கைத்தரம் சற்றும் குறையாமல் தொடர்ந்து இருக்க பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு வெகு காலம் முன்பே முன்யோசனையுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்குவது மிகவும் அவசியம். எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது அவரவர் ஊதிய அளவு மற்றும் அப்போதைய குடும்ப செலவு ஆகியவற்றை பொருத்தது.
உதாரணத்திற்கு, நால்வர் அடங்கிய (கணவன்+மனைவி+இரு குழந்தைகள்) நடுத்தர குடும்பத்தில் உள்ள நாற்பது வயதுள்ள ஒருவருடைய தற்போதைய மாத செலவுகள் (வாடகையுடன் சேர்த்து) ரூ.25,000/- என்று வைத்துக்கொள்வோம். அவர் அறுபது வயதில் ஓய்வு பெறும்போது தற்போதைய வாழ்க்கைதரத்தை தொடர்வதற்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- வேண்டியிருக்கும் என்கிறது தனியார் நிறுவன இணையதளத்திலுள்ள ஒரு மதிப்பீடு. அதாவது ரூ.60,000/- மாதம் ஓய்வூதியமாக (அல்லது வருமானமாக) பெறுவதற்கு இப்போதிருந்தே அதற்கெனவே மாதம் ரூ.20,000/- ப்ரிமியமாக செலுத்த வேண்டுமாம்! அதற்கு தற்போதைய மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.45,000/- ஆக இருந்தால்தான் இது சாத்தியமாகும். இது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி!
நான் இத்தகைய திட்டங்களில் ஒன்றில் பத்துவருடங்களுக்கு முன்பு இணைந்து வருடத்திற்கு ரூ.10000/- செலுத்தி வந்தேன் (அப்போது அதுதான் அதிகபட்ச ப்ரிமியம் தொகையாக இருந்தது. ஆனால் இப்போது அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை) இந்த வருடத்திலிருந்து மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் எனக்கு கிடைக்கும். இதன் அடிப்படையில் பார்த்தால் ரூ.60000/- ஓய்வூதியமாக கிடைக்க வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2.00 லட்சம் ப்ரிமியமாக செலுத்த வேண்டும். இளம் வயதிலிருந்தே இத்தகைய திட்டங்கள் ஒன்றில் முதலீடு செய்தால் அதற்கேற்ற வகையில் செலுத்த வேண்டிய ப்ரிமியம் குறைய வாய்ப்புள்ளது.
இதுதான் இன்று சந்தையிலுள்ள பல ஓய்வூதிய திட்டங்களின் நிலை.
மேலும் இன்று ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் பல நிறுவனங்கள் இந்த துறையில் தொடர்ந்து நீடிப்பார்களா என்பதையும் நிச்சயமாக வரையறுக்க முடிவதில்லை. இதே துறையில் சந்தையில் பல ஆண்டுகளாக வணிகம் செய்துவரும் எல்.ஐ.சி அளிக்கும் திட்டங்கள் மற்ற வங்கிகள், நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் லாபகரமானதாக தென்படவில்லையெனினும் மிகவும் பாதுகாப்பானவை என்பது மட்டும் உறுதி.
எல்.ஐ.சி வழங்கும் திட்டங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள இங்கு
செல்லவும். இத்திட்டங்களில் New Jeevan Suraksha I திட்டம் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்தது என கருதுகிறேன். இத்திட்டத்தில் செலுத்தப்படும் ப்ரிமியம் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை வரையிலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன முகவர்களுடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
அடுத்து இந்திய முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் திட்டங்களைக் கூறலாம். இவையும் மற்ற வங்கிகள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான விகித ஓய்வூதியம் வழங்குகின்றன என்றாலும் இவை பாதுகாப்பானவை. இவர்களுடைய பல திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு செல்லவும். இவற்றுள் SBI-Lifelong Pension Plus திட்டம் நல்ல திட்டமாக தென்படுகிறது. திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு முதலீடு செய்யலாம்.
இத்தகைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஓய்வூதியம் அளிக்கக் கூடிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மிகவும் லாபகரமானது. ஆனால் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முந்தைய பத்து மாதங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி அடிப்படை வருமானத்தில் ஐம்பது விழுக்காடு மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கிறது. ஆகவே இந்த ஊதியத்தில் வாழ்க்கைத்தரத்தை அப்போதைய நிலையில் தொடர்வது என்பது சாத்தியமில்லாத விஷயம்.
ஆகவே பணியிலிருந்து சேர்ந்த நாளிலிருந்தே ஓய்வுகாலத்தைப் பற்றி சிந்தித்து அதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பது என்பது அத்தியாவசியமாகிறது.
எவ்வாறெல்லாம் சேமிக்கலாம், எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?
தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக