24 ஜனவரி 2012

அம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு!




ஜெயலலிதா அம்மையாருக்கும் அவருடைய தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கும் நீதிமன்றங்களிலிருந்து குட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.



பதவியேற்றவுடனேயே அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டி திமுக அறிமுகப்படுத்திய சமச்சீர்கல்வியை ரத்து செய்யும் முகமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பிறகு சட்டசபையிலுள்ள தனது அசுர பலத்தை பயன்படுத்தி சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு ஒத்தி வைக்க முயற்சி செய்தது. ஆனால் உண்மையில் சமச்சீர் கல்வியை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி அதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதுதான் அரசின் உள்நோக்கம் என்பதை உணர்ந்த உயர்நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் சமச்சீர் கல்வியை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இது முதல் குட்டு.



பிறகு கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது என முடிவெடுத்தது. சட்டமன்றத்தை முந்தைய ஜார்ஜ் கோட்டையிலேயே கூட்டுவது என்ற அரசின் முடிவில் தலையிட விரும்பாத நீதிமன்றங்கள் அம்மையார் அதை மருத்துவமனையாக மாற்றும் முடிவுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து நிறுத்தி வைத்தது. பிறகு நடுவண் அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் அது வரை கட்டடத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டு பிறப்பித்து அரசின் உள்நோக்கம் நிறைவேற முடியாமல் செய்துவிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து அம்மையாருக்கு தடையில்லா சான்று கிடைப்பத்து அவ்வளவு எளிதல்ல என்பதால் தற்போதைக்கு அம்மையாரின் நோக்கம் நிறைவேறப்போவதில்லை. இது இரண்டாவது குட்டு.



அடுத்து அடையாரிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்ற முடிவு. இவ்விரண்டு முடிவுகளுமே முந்தைய அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எடுக்கப்பட்டது. இதுவும் ஒரு துர்நோக்கம் கொண்ட முடிவு என்பதுதான் சரி. அதாவது இதன் பின்னனியில் இருந்தது அரசியல் காழ்ப்புணர்வுதான். இது ஒரு மனமுதிர்வற்ற ஆட்சியாளரின் செயல்பாடு என்றாலும் தவறில்லை. ஆகவே அதற்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததுடன் இவ்வழக்கு நிலுவையிலுள்ள வரையில் புதிய இடத்தில் இதற்கென எவ்வித கட்டட மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டது. இது மூன்றாவது குட்டு.



தற்போது மக்கள் நல பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது செல்லாது என்ற உத்தரவு. அரசின் சமீபத்திய முடிவுகளில் இதுதான் மிகவும் மோசமான முடிவு. மேற்குறிப்பிட்ட முடிவுகளால் எந்த ஒரு தனிமனிதனும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தை பாதிக்கப்படக் கூடிய ஒரு முடிவை அரசு எடுத்தது எவ்விதத்திலும் நியாயம் இல்லை என்பதை மிகத்தெளிவாக
சுட்டிக்காட்டி அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இது நான்காவது குட்டு. இதை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றம் சென்றாலும் நிச்சயம் அதற்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கப்போவதில்லை என்பதை அம்மையாரை தவிர அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆகவேதான் பல எதிர்க்கட்சி தலைவர்கள் உச்ச நீதி மன்றம் செல்லாமல் பணி நீக்கப்பட்டவர்களே உடனே மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் பிடிவாதத்திற்கு பெயர்பெற்ற அம்மையார் உச்ச நீதி மன்றம் வரை சென்று மீண்டும் குட்டுப்படப் போவது உறுதி.



இதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சில மாதங்களில் பலமுறை உச்ச நீதி மன்றத்தை அணுகி குட்டுப்பட்டுள்ளார் அம்மையார்.



சாதாரணமாக அரசு தலைமையில் அமர்ந்திருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை கடுமையாக கண்டித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்போது அதற்கு தார்மீக பொருப்பேற்று பதவி விலகுவது வாடிக்கை. ஆனால் அது தன்மானம் உள்ளவர்கள் செய்யும் செயல். மேலும் எப்போதாவது ஒருமுறை குட்டுப்பட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தினம் ஒரு குட்டு என்று பழகிப்போனவர்களிடமிருந்து அதை எதிர்பார்ப்பது நியாயமல்லவே.



இந்த லட்சணத்தில் அவர் நாட்டின் பிரதமராக தகுதிபெற்றவர் என கூறுபவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



ஆனால் அதிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லது நடக்க வாய்ப்புண்டு. அவர் பிரதமராகி தில்லி சென்று தேவகவுடாவைப் போன்று அதில் நீடிக்க முடியாமல் தோற்றுப் போனால் அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடும்!! அவருடைய காழ்ப்புணர்வு கொண்ட ஆட்சியிலிருந்து தமிழக மக்களும் ஒரு நிரந்தர விடுதலை பெறக் கூடும். ஆகவே அவருடைய கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான ஏன், அனைத்து நாடாளுமன்ற இடங்களையும் அளித்து அவரை நாட்டின் பிரதமராக உதவிட வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்!





















*************

17 ஜனவரி 2012

ச்சே, சோ, ச்சை!



யாரையாவது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி நினைக்கும்போதே 'ச்சே இவனா? இவன் சங்காத்தமே வேணாம்' என்ற சலிப்பு நம் மனதில் எழும். அதேபோல் யாருடைய பேச்சையாவது கேட்க விருப்பமில்லை என்றால் 'ச்சை இவனும் இவன் பேச்சும்' என்று கூற தோன்றும்.



இந்த இரண்டு வசவு சொற்களும் (எழுத்துக்கள் என்பதுதான் சரி) வருகிற அதே அகர வரிசையில் வருகிற எழுத்தையே தன்னுடைய பெயராக வைத்திருப்பவர் 'சோ' என்கிற ராமசாமி! எத்தனை பொருத்தம்!



இவர் தன் திருவாயை திறந்தாலே 'ச்சை' என்றோ 'ச்சே' என்றோ சொல்ல தோன்றுவது இயற்கைதானே!



அவருடைய பத்திரிகையான 'துக்ளக்' - அவருடைய பெயருக்கு ஏற்ற பெயர்தான் அவருடைய பத்திரிகைக்கும் - சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தன் திருவாய் மலர்ந்திருக்கிறார். இந்த அற்புத சொற்பொழிவை மீண்டும்  மறுஒளிபரப்பு செய்து தங்களுடைய கட்டுக்கடங்கா மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது அம்மையாரின் தொலைக்காட்சி!



அவர் பேசும்போது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் வேறு எந்த கட்சியையாவது ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பிரதமர் பதவிக்கு அம்மையாரை பரிந்துரைக்க வேண்டுமாம். ஏனாம்? அம்மையாருக்கு ஐந்து மொழிகள் தெரியுமாம். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் உதவுமாம். மேலும், எதையும் படித்தவுடனே புரிந்துக்கொள்ளக் கூடிய திறமையும் உண்டாம்.



இந்த இரண்டு தகுதிகளையும் ஒருங்கே கொண்ட தலைவர் இந்திய தேசிய அரசியலிலேயே அம்மையாரை விட்டால் யார் இருக்க முடியும்? மேலும், அடுத்த பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அவருடைய கட்சியும் கூடை நிறைய பாராளுமன்ற இடங்களை பெற்றிருக்கும் என்பது நிச்சயமாம். ஆகவே அவரை விட்டால் பிரதமராக மிகவும் தகுதி வாய்ந்த தலைவர் வேறு யாரும் இருக்க முடியுமா என்பதுதான் சோ அவர்களின் வாதம்.



இதை படித்ததும் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த ஒரு House Maid - பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் 'வேலைக்காரி'யின் நினைவு வருகிறது. நான் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் நாற்பது குடியிருப்புகள். அது ஒரு குட்டி பாரதம் என்று கூட கூறலாம். நாட்டிலுள்ள பெரும்பாலான மொழி பேசுகின்றவர்கள் குடியிருந்தனர். அதில் பலருடைய வீட்டில் பணியாற்றிய அந்த பெண்ணும் நாளடைவில் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேச தெரிந்து வைத்திருந்தாள், ஆங்கிலத்தை தவிர. 'இந்த இங்கிலீசுதாங்க பேச வரமாட்டேங்கிது.. சொன்னா பிரியுது...ஆனா பேசினா தஸ்சு, புஸ்சுன்னு காத்துதான் வருது. அது மட்டும் வந்துருச்சின்னா..' என்று இழுப்பாள். எட்டாவது வரை படித்திருந்ததால் எதையும் கோடி காட்டினால் போதும் 'டக்' என்று புரிந்துக்கொள்வாள். வேலையில் படு சுட்டி!



நம்முடைய சோவின் கூற்றுப்படி அவளும் ஒருவழியில் பிரதமராக தகுதி உள்ளவர்தான்!!



தென்னிந்திய மொழிகளில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்துடன் ஆங்கிலத்திலும் சரளமாக பேசக் கூடிய நடிக, நடிகைகள் இன்றைய தமிழ் திரையுலகில் பலர் இருக்காங்க சோ சார்! ஏன் ஒருவேளை நம்ம மன்சூர் அலி கானுக்கு கூட இது தெரிஞ்சிருக்கலாம். அவருக்கும் ஏற்கனவே தேர்தல்ல நின்னு ஜெயிக்கலன்னாலும் தோத்த அனுபவம் இருக்கே!



அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர்தானே? பிறப்பால் கன்னடர், பிழைப்புக்காக தமிழ் நாட்டுக்கு வந்தவர். பணத்திற்காக தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்திருப்பார்.பத்தாவது வரை ஆங்கில பள்ளியில் படித்தவர். ஐந்து மொழிகளிலும் பேசுவதற்கு இந்த அனுபவம் போதுமே.



பல மொழிகளில் பேசக் கூடிய திறமை மட்டுமே ஒருவருக்கு ஒரு நாட்டின் பிரதமராக தகுதியை ஏற்படுத்தி விடுமா? அதை விட வேடிக்கை, அம்மையார் எதையும் சொன்னவுடன் புரிந்துக்கொள்ளக் கூடியவர் என்றதுதான். அதுவும் அத்வானி, மோடி ஆகியோரை வைத்துக்கொண்டே இப்படி பேசுவது உண்மையிலேயே சத்யராஜ் 'லொள்ளை' விட கொஞ்சம் ஓவர்தான்.



இந்த வயசுல இவருக்கு அம்மையாருக்கு இந்த அளவுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரே இனம், குலம், கோத்திரம் என்பதாலா?



முதலில் அம்மையார் தமிழகத்தை நாட்டின் முன்னனி மாநிலமாக்கட்டும். பிறகு பிரதமர் பதவியைப் பற்றி யோசிக்கலாம். இதே போல் 2001-2006ல் சிந்தித்ததன் விளைவு அனைவரும் அறிந்ததுதானே.



அம்மையாருக்கு ஒரு வேண்டுகோள். இம்மாதிரியான கோமாளிகள் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவதுதான் நல்லது. சு.சாமியை நம்பி நட்டாற்றில் இறங்கிய அனுபவம் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரையும் விட கோமாளிதான் இந்த ச்சே, சோ, ச்சை ரா.சாமி! இரண்டு பேருமே 'சாமி'கள்தான் என்பதே போதும் இவர்களை நம்பி ஆற்றில் இறங்கலாகாது என்பதற்கு!!



******************