2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையற்றது என வழக்கு தொடுத்தவர்கள் (petitioners) நீதிமன்றத்தின் முன் வைத்தவை ஐந்து குற்றச்சாட்டுகள்.
அவற்றில் முக்கியமான இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை குறித்து என்னுடைய கருத்தை முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன்.
அதாவது
1. முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலை தொடர்பு அமைச்சகம் அலைக்கற்றைகளை ஒதுக்கியது சரியா?
என்னுடைய பார்வையில் அதில் தவறேதுமில்லை. ஏனெனில் அப்படித்தான் முந்தைய அரசும் செய்தது. அதை குற்றமெனவோ அல்லது முறைகேடாக ஒதுக்கப்பட்டன எனவோ அதுவரை யாரும் நீதிமன்றத்தில் முறையிடவில்லை.
2. விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதி தியதியை விளம்பரம் வெளியிடப்பட்டப் பிறகு அறிவிக்கப்பட்ட தேதியான 1.10.07 பதிலாக 25.9.07 என்று மாற்றியது சரியா?
உண்மையில் இறுதி தியதி மாற்றப்படவில்லை என்பதுதான் என் கருத்து. விளம்பரம் வெளியிடப்பட்ட தியதி வரை தங்கள் வசமிருந்த விண்ணப்பதாரர்களுக்கு புதிய விண்ண்பங்கள் பெறப்படும் வரை காத்திருக்காமல் உடனே வழங்கிவிட்டு மீதமுள்ள அலைக்கற்றையை புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கலாம் என்று மட்டுமே அமைச்சகம் முடிவெடுத்தது. அமைச்சகத்தின் இந்த செய்கையால் புதிய விண்ணப்பதாரர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை அணுகியிருந்தால் இத்தகைய முடிவுக்கு நீதிமன்றம் வந்திருக்கலாம். ஆனால் இந்த வழக்கை தொடுத்தவர்களுள் ஒருவர் கூட அமைச்சகத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதுதான் உண்மை.
வழக்கை தொடுத்தவர்கள் முன்வைத்த ஐந்து குற்றச்சாட்டுகளுள் 1 மற்றும் 4வது குற்றச்சாட்டுக்கள் மேற் கூறிய இரண்டு கருத்துக்களை சார்ந்திருந்தன. இதற்கு பதிலாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியில்லை என்பது என்னுடைய கருத்து.
வழக்கு தொடுத்தவர்கள் முன்வைத்த 2வது குற்றச்சாட்டுதான் மிகவும் அடிப்படையானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட.
"Whether the recommendations made by the Telecom Regulatory Authority of India (TRAI) on 28.8.2007 for grant of Unified Access Service Licence (for short 'UAS Licence') with 2G spectrum in 800, 900 and 1800 MHz at the price fixed in 2001, which were approved by the Department of Telecommunications (DoT), were contrary to the decision taken by the Council of Ministers on 31.10.2003?
"2001ல் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு 2007ல் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று 28.8.07 அன்று TRAI பரிந்துரை செய்தது சரியா?" .
இதுதான் அமைச்சகம் செய்த இமாலய தவறு. ஏனெனில் மத்திய மூத்த அமைச்சரவைக் குழு 31.10.2003ல் இம்முறை சரியல்ல என்று முடிவெடுத்திருந்தது. இதை இன்றைய சூழலில் பார்க்கும்போது வேண்டுமென்றே செய்த தவறு அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்ட வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அமைச்சக தலைவரான ராசா தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றெல்லாம் எளிதாக கூறிவிட முடியும்.
பொருளாதார சலுகைகள் (Ecnomic or monetary consideration) - வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், 'கையூட்டு' - பெறலாம் என்ற நோக்குடன் இலாக்கா அமைச்சரால் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதுதான் வழக்கு தொடுத்தவர்களின் குற்றச்சாட்டு. அதை உண்மையல்ல என்று மறுக்க இராசாவின் கைவசம் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதும் உண்மை.
ஆனால் இன்று கபில் சிபல் கூறுவது போன்று இது தன்னிச்சையாக இராசாவால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவா என்றால் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்றே கூற தோன்றுகிறது. இதில் பிரதமருக்கு பங்கு உண்டா, ப.சிதம்பரத்திற்கு பங்கு உண்டா என்றால் 'ஆம்' என்று கூறுவது சற்று கடினம்தான் என்றாலும் 'இல்லை' என்று உறுதியுடன் கூறவும் முடியவில்லை. இவ்விருவர் மட்டுமல்லாமல் அன்று காபினட்டில் அங்கத்தினர்களாக இருந்த அனைவருக்குமே ஒருவகையில் இதில் பங்குண்டு என்றுதான் கூற வேண்டும்.
அடுத்த முக்கியமான வினா "Whether the licences granted to ineligible applicants and those who failed to fulfil the terms and conditions of the licence are liable to be quashed?"
"அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமா? "
இதற்கு உச்ச நீதிமன்றம் 'ஆம், ரத்து செய்யப்பட வேண்டியவைதான்' என முடிவெடுத்து 25.9.07 முதல் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்தது.
உச்ச நீதிமன்றத்திற்கு முன் வைக்கப்பட்ட வினா என்ன? அமைச்சகம் தங்களுடைய விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்ட ஷரத்துகளின்படி (conditions) உரிமங்கள் பெற தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமா என்பதுதான்.
ஆனால் உச்ச நீதிமன்றம் தகுதியுள்ளவர்கள் அல்ல என எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தையும் சுட்டிக்காட்டாமல் அமைச்சகம் செய்த இரண்டு தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு உரிமங்களை பெற்ற அனைத்து நிறுவனங்களுமே தகுதியற்றவர்கள்தான் என முடிவெடுத்தது சரியல்ல என்று கருதுகிறேன்.
தகுதியற்றவர்கள் என நிர்ணயிக்கப்பட அடிப்படையான தகுதிகளுள் மிக முக்கியமான ஒன்று அவர்கள் தொலைதொடர்பு சேவையில் அனுபவம் பெற்றவர்களா என்பதுதான். ஆகவே அத்தகைய நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாக, அதாவது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும் உச்ச நீதிமன்றம் தங்களுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஏனெனில் டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் அதற்கு முன்பே CDMA இணைப்புகளை வழங்கிக்கொண்டிருந்தவர்கள்தான். மேலும் அந்நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றைக்கு விண்ணப்பித்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தவர்கள் என்பதும் உண்மை.
முந்தைய அரசு கடைபிடித்து வந்திருந்த முதலில் வந்தவர்க்கே முன்னுரிமை என்ற கொள்கையை தொடர அன்றைய அரசு முடிவெடுத்தது ஒரு கொள்கை முடிவு. அதில் சம்பந்தப்பட்ட இலாக்கா TRAIன் பரிந்துரையை ஏற்று எடுக்கப்பட்ட முடிவு. அது தவறு என்றால் அதற்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக பொறுப்பேற்க முடியாது. மேலும் முதலில் வந்தவர்கே முன்னுரிமை என்ற கொள்கையில் ஏதும் தவறில்லை. அது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைதான். விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே தகுதியுள்ளவர்களென கருதப்படும் ஒரு சூழலில் முதலில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து நிறுவன டென்டர்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு கொள்கைதான்.
உச்ச நீதிமன்றம் தொலைதொடர்பு அலைக்கற்றை போன்ற தேசீய சொத்துக்களை பங்கீடு செய்யும்போது ஏல முறையை கடைப்பிடிப்பதுதான் சரியானது என்று கூறினால் முந்தைய NDA அரசு செய்த முடிவும் தவறானதுதான் என்ற முடிவுக்கு மட்டுமே வர முடியும். உச்ச நீதிமன்றத்தின் கருத்து இனி வரும் காலத்திற்குத்தான் பொருந்தும் என்றால் இதை முன்தேதியிட்டு அமுல்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை.
இந்த வழக்கை பொருத்தவரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் மிகவும் அடிப்படையான குற்றச்சாட்டு என்றால் 2001ல் செய்யப்பட்ட அதே மதிப்பீட்டின் அடிப்படையில் 2008ல் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததுதான் இதற்கு முக்கிய மற்றும் அடிப்படை காரணம். அமைச்சகம் செய்த மற்ற தவறுகள் எல்லாம் நிர்வாக தவறுகள் (procedural lapses). உதாரணத்திற்கு, தொலைதொடர்பில் அடிப்படை அனுபவம் அற்றவர்களுக்கெல்லாம் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றால் அத்தகைய முடிவால் இத்துறையில் அனுபவமுள்ள ஆனால் உரிமம் கிடைக்கப்பெறாதவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டிய ஒன்று. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படப் போவதில்லை. இதில் பொதுநலம் என்றும் ஏதுமில்லை. அதுபோன்றுதான் விண்ணப்ப தியதியை முன்கூட்டி மாற்றியதும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். இதனால் இந்த வழக்கில் புகார் செய்தவர்களுக்கும் அல்லது உங்களுக்கும் எனக்கும் என்ன இழப்பு?
2001லிருந்து 2008 வரை ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் அடிப்படையில் அலைக்கற்றை (spectrum) உரிமத்தை மீண்டும் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் ஏற்கனவே உரிமங்கள் வழங்கப்பட்டவர்களிடமிருந்து மீதமுள்ள தொகையை வசூலிப்பதன் மூலமே அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் பெரும் பகுதியை ஈடுகட்டியிருக்க முடியும். மாறாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அனைத்து உரிமங்களையும் ரத்து செய்துவிட்டு மீண்டும் ஏலம் நடத்துவது என்பது சரியல்ல.
மேலும் 2ஜி சேவையையும் 3ஜி சேவையையும் ஒப்பிடுவது கட்டை வண்டியையும் பென்ஸ் கார் போன்ற சொகுசு வாகனத்தையும் ஒப்பிடுவதற்கு சமம். Idea விளம்பரத்தில் கூறுவது போன்று sirf calling keliye தேவைப்படுவது 2ஜி. மிகவும் முன்னேறிய (highly advanced) சேவைகளை பெற பயன்படுவது 3ஜி. 3ஜி ஏலத்தில் இத்தனை லட்சம் கோடி கிடைத்தது, ஆகவே 2ஜியை ஏலம் விட்டிருந்தால் இத்தனை லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும் என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. இது ஒரு கணக்கு (accountancy) மட்டுமே தெரிந்த ஆடிட்டர் ஜெனரல் கூறலாகாது. மேலும் அந்த ஆடிட்டரைப் பொருத்தவரை எல்லாமே மெகா ஊழல்தான். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் ரகம் இவர். எங்களுடைய வங்கியிலும் இத்தகைய தணிக்கையாளர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். தணிக்கைக்கு வரும்போதே கிளையில் இருப்பவர்களை கள்வர்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
மேலும் 2ஜி யை பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையை 3ஜி சேவையை பயன்படுத்தும் நுகர்வோருடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? 2ஜி சேவையை இன்று நாட்டில் சுமார் 6 கோடி பயன்படுத்துகின்றனர் என்றால் அதில் நூற்றில் ஒரு பங்கு கூட 3ஜி சேவையை பயன்படுத்துகிறார்களா என்பதே கேள்விக் குறி! 2ஜி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சாமான்யர்கள். அப்படியே 3ஜி அலைக்கற்றையை போன்றே 2ஜி அலைக்கற்றையையும் ஏலம் விட்டு இலட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருந்தாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படப் போவது நம்மைப் போன்ற சாமான்ய நுகர்வோர்தான் என்பதையும் மறந்துவிடலாகாது.
இந்த வழக்கை தொடர்ந்தவர்களும் அல்லது இன்று வெற்றிகண்டுவிட்டோம் என்று மகிழ்ந்து கொண்டாடும் அரசியல்வாதிகளும் மாத வருமானத்தை நம்பியிருப்பவர்கள் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். லட்சம் கோடி அரசுக்கு லாபம் என்றால் அதே லட்சம் கோடி சாமான்ய நுகர்வோருக்கு இழப்பு என்பதுதான் இந்த தீர்ப்பின் நேரடி தாக்கமாக இருக்கப் போகிறது!
மேலும் இந்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கும் ஆ. ராசா மட்டுமே பொறுப்பு என்பதும் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பதற்குச் சமம். அன்று தலைமைப் பொறுப்பில் இருந்த பிரதமருக்கும் ஏன் அனைத்து கேபினட் அமைச்சர்களுக்கும் கூட நேரடி பொறுப்பில்லை என்றாலும் தார்மீகப் பொறுப்பு நிச்சயம் உண்டு.
ஆனால் இத்தகைய ஊழலுக்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராசாதான். அதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஒருவேளை தனிப்பட்ட முறையில் அவருக்கு எவ்வித லாபமும் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் சார்ந்திருந்த கட்சிக்கும் அவர்கள் நடத்திவரும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கும் நிச்சயம் மறைமுக லாபம் கிடைத்தது என்பதை அவர்களே கூட மறுக்க முடியாது.
**************