ஜோசப், கணேஷ் மற்றும் ரஹீம் பாய் அவருடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளனர். ஜோசப் கையிலிருந்து பத்திரிகை ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க ரஹீம் பாயும் கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கணேஷ்: (கோபத்துடன்) அதெப்படிங்க ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் எதிர்கட்சி தலைவர் அதுவும் அடுத்து ப்ரைம் மினிஸ்டரா வரப்போற ஒருத்தர ஆண்மையில்லாதவர் (Impotent) அப்படீன்னு சொல்லலாம்? கேக்கறதுக்கே அசிங்கமாயில்ல?
ரஹீம்: (சிரிக்கிறார்) என்ன ஜோசப் அந்த வார்த்தைக்கு அதுவா அர்த்தம்?
ஜோசப்: அப்படி ஒரு அர்த்தமும் அந்த வார்த்தைக்கு இருக்கத்தான் செய்யிது. ஆனா கையாலாகாதவர்ங்கற அர்த்தமும் இருக்கு.
ரஹீம்: அதான பார்த்தேன். ஒரு இஸ்லாமியர் இந்த மாதிரி தப்பான வார்த்தையெல்லாம் சொல்ல மாட்டாரே என்ன இவர் இப்படி சொல்றாரேன்னு நினைச்சேன். (கணேஷிடம்) யோவ், ஒரு மாநிலத்துல முதலமைச்சரா இருக்கறவர் அங்க நடக்கற கலவரத்துல மைனாரிட்டி இனத்த சேர்ந்தவங்கள மெஜாரிட்டிக்காரங்க அடிச்சி நொறுக்கறப்போ பாத்துக்கிட்டு இருந்தா வேற எப்படி சொல்வாங்க?
கணேஷ் மீண்டும் கோபத்துடன் மறுமொழி சொல்வதற்குள் ஜோசப்: (குறுக்கிட்டு) இருங்க கணேஷ், கோபப்படாதீங்க. அந்த மினிஸ்டரே நான் மோடியை கையாலாகதவர்ங்கற அர்த்தத்துல அந்த வார்த்தைய யூஸ் பண்ணேன், மத்தபடி அவர பெர்சனலா இன்சல்ட் பண்ற ஐடியா எதுவும் எனக்கில்லேன்னு க்ளாரிஃபை பண்ணிட்டாரே அதுக்கப்புறமும் இந்த ஆர்க்யூமென்ட் தேவைதானா?
ரஹீம்: இதெல்லாம் இவங்களுக்கு ஒரு எக்ஸ்க்யூஸ்ங்க. எங்க தலைவர தரக்குறைவா பேசிட்டார்னு சொல்லி ஜனங்கக்கிட்ட சிம்பத்தி வாங்கணும். அது ஒன்னுதான் இவங்க அஜன்டா.
ஜோசப்: சரி விடுங்க பாய். ஏற்கனவே அவர் கோபமா இருக்கார். நீங்க வேற அவர தூண்டி விடாதீங்க.
ரஹீம்: சரிங்க. அப்புறம் இன்னொரு விஷயம். கெஜ்ரிவால் மோடிக்கி நேரடியா லெட்டர் எழுதி ரிலையன்ஸ் கம்பெனி உங்களையும் விலைக்கி வாங்கிட்டாரான்னு கேட்டுருக்காராமே? அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?
கணேஷ்: (எரிச்சலுடன்) பாய் உங்களுக்கும் வேலை இல்லை அந்த கெஜ்ரிவாலுக்கும் வேலையில்லை. வாராவாரம் எதையாவது செஞ்சி பப்ளிச்சிட்டி தேடறதே அந்த ஆளுக்கு வேலையா போச்சி. அந்தாள் சொல்றதையெல்லாம் நீங்களும் பெரிசா எடுத்துக்கிட்டு பேச வறீங்களே பாய்.
ரஹீம்: அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க. இந்த விஷயத்துல கெஜ்ரிவால் சொல்றதுல நியாயம் இருக்கத்தான் செய்யிது. எரிவாயு விலைய யூனிட்டுக்கு நாலு டாலர்லருந்து ஒரேயடியா எட்டு டாலர்னு ஏத்துனது எந்த விதத்துல நியாயங்க? அதால ரிலையன்சுக்கு வருசத்துக்கு நாப்பதாயிரம் டாலர் லாபமாமே? என்ன அநியாயம்? இது யார் காசுங்க? நம்மள மாதிரி ஆளுங்க காசு தான? அந்த கம்பெனியோட காஸ் ப்ரொடக்ஷன கூட்டமாட்டேங்குதுங்கறதுக்காக இது கவர்ன்மென்ட் குடுக்கற லஞ்சமா? இப்படி ஏத்துனா ஏப்ரல் ஒன்னாந்தேதியிலருந்து காஸ் சிலின்டர் விலையும் அநியாயத்துக்கு ஏறிடுமே?
கணேஷ்: பாய், விவரம் தெரியாம பேசாதீங்க. ரிலைன்ஸ் தயாரிக்கறது இயற்கை எரிவாயு (Liquified Natural Gas-LNG), நாம யூஸ் பண்ற எல்.பி.ஜி. இல்ல. இயற்கை எரிவாயுங்கறது ஆழ்கடல் அப்புறம் கோதாவரி ஆத்துப் படுகையிலருந்து எடுக்கறது. இத முக்கியமா தில்லி, மும்பையில பைப் வழியா வீடுகளுக்கும் எலக்ட்ரிக் கம்பெனிங்களுக்கும் சப்ளை பண்றாங்க. இத முதல்ல தெரிஞ்சிக்குங்க. அத்தோட இது ஏதோ ரிலையன்ஸ் கம்பெனிக்கு லாபம் குடுக்கணுமேன்னு கவர்ன்மென்ட் செய்யல. ஏன்னா இந்த இயற்கை எரிவாயுவ ரிலையன்ஸ் மட்டுமில்ல, கவர்ன்மென்ட் கம்பெனிங்களும் எடுக்கறாங்க.
ரஹீம்: அப்படியா? ஆனா இந்த பேப்பர்ல (தன் கையிலிருந்த தமிழ் தினத்தாளை காட்டுகிறார்) அப்படி போடலையே?
ஜோசப்: (தன் கையில் இருக்கும் ஆங்கில தினத்தாளைக் காட்டுகிறார்) இந்த பேப்பர்ல க்ளியரா போட்ருக்கான். இந்த விஷயத்த டிஸ்கஸ் பண்லாம்னுதான் கொண்டு வந்தேன். அதுக்குள்ள நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.
ரஹீம்: என்ன போட்ருக்கான், கொஞ்சம் படிங்க.
ஜோசப்: இப்ப கணேஷ் சொன்ன மாதிரிதான் போட்ருக்கான். இதுக்குள்ள இன்னொரு விஷயமும் இருக்கு. கெஜ்ரிவால் சொல்றா மாதிரி இது ஏதோ மொய்லி மட்டும் திட்டம் போட்டு செஞ்ச விஷயம் இல்ல. இயற்கை எரி வாயுவானாலும் (LNG) சமையல் எரிவாயுவானாலும் (LPG) அதுக்கு எப்படி விலை நிர்ணயம் செய்யிறதுங்கறத சென்ட்ரல் பெட்ரோலியம் மினிஸ்ட்ரி அமைச்ச எக்ஸ்பர்ட் குழு ரொம்ப டிட்டெய்லா சொல்லியிருக்காங்க. அந்த அடிப்படையிலதான் பெட்ரோல், டீசல், கெரசின், குக்கிங் கேஸ் விலையெல்லாம் டிசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ ஒரு வருசமா பெட்ரோல் விலைய சந்தையிலருக்கற நிலவரத்துக்கேத்தாப்பல ஆயில் கம்பெனிங்களே டிசைட் பண்ணிக்கறாங்க. டீசல் விலையிலயும் மாசா மாசம் அம்பது பைசா வீதம் கூட்டுக்குங்கன்னு மத்திய அரசு சொல்லியாச்சு. ஆனா இப்பவும் சப்சிடி (subsidy)அதிகமா தேவைப்படற கெரசின், குக்கிங் கேஸ் விலைய மட்டும் இந்த குழு சொன்னா மாதிரி கவர்ன்மென்டேதான் ஃபிக்ஸ் பண்றாங்க. இயற்கை எரிவாயுவுக்கு ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு டாலர்னு ஃபிக்ஸ் பண்றாங்களாம்.
ரஹீம்: ஒரு யூனிட்டுன்னா?
ஜோசப்: ஒரு யூனிட்டுன்னா ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுன்னு அர்த்தம் (mBTU). 2012-13 உலக சந்தை விலை நிலவரப்படி இத தயாரிக்கறதுக்கு 3.6 அமெரிக்க டாலர் ஆவுதாம். அதாவது இந்திய மதிப்புல ரூ.223.45. அது இப்போ 4.2. டாலரா இன்க்ரீஸ் ஆயிருக்காம். இதுவும் உலக சந்தை நிலவரப்படி எஸ்ட்டிமேட் பண்ணதுதான். கெஜ்ரிவால் சொல்றா மாதிரி இது ஏதோ ரிலையன்ஸ் லஞ்சம் குடுத்து செஞ்சது இல்ல. இந்த விலையே கட்டுப்படியாகலை, நஷ்டம்தான் வருதுங்கறதால ரிலையன்ஸ் மட்டுமில்லாம இந்திய அரசு கம்பெனிங்களான ONGCயும் இந்தியன் ஆயில் கம்பெனியும் கூட இயற்கை எரிவாயுவ ப்ரொட்யூஸ் பண்றதுல இன்ட்ரஸ்ட் காமிக்கிறதில்ல. அது மட்டுமில்லாம இந்த ஃபீல்டுல புதுசா கம்பெனிங்கள முதலீடு பண்ண வைக்கணும்னா இது ஒரு லாபகரமான முதலீடுதான்னு அரசு புரிய வைக்கணும். அதுக்கு இப்படி பெரிய முதலீடு பண்ணி ப்ரொட்யூஸ் பண்ற இயற்கை எரிவாயு விற்பனை விலைய கூட்டணும்னு இந்த எக்ஸ்பேர்ட் கமிட்டியே ரெக்கமன்ட் பண்ணியிருக்கு. அதனாலதான் வேற வழியில்லாம இந்த யூனிட் ரேட்ட டபுளாக்கியிருக்காங்களாம். ஆனா இந்த விலை ஏத்தம் நாங்க எதிர்பார்த்த விலைய விட நாப்பது பர்சன்ட் ஜாஸ்திதான்னு இந்தியன் ஆயில் அதிகாரி ஒருத்தரே சொல்லியிருக்கறத பாக்கறப்போ இந்த அளவுக்கு விலைய ஏத்தியிருக்க வேணாம்னுதான் தோனுது. ஆனா இந்த விலையேத்தத்த மனசுல வச்சிக்கிட்டுத்தான் ரிலையன்ஸ் கம்பெனி ப்ரொடக்ஷன குறைச்சிருக்குங்கற வாதம்லாம் சரியில்லேன்னுதான் தோனுது. ஏன்னா மார்கெட்ல சரியான விலை கிடைக்காத பொருள யாருமே உற்பத்தி பண்றதுக்கு தயங்கத்தான செய்வாங்க? அதுமாதிரிதான் விலைய ஏத்தி குடுத்தா ப்ரொடக்ஷன கூட்டுவோம்னு ரிலையன்சும் சொல்லியிருக்காங்க. அதனால விலைய ஏத்துன கையோட நீங்க ஏற்கனவே கமிட் பண்ணியிருக்கற ப்ரொடக்ஷன் லிமிட்ட முழுசா செய்யணும்னுதான் பேங்க் காரன்டியெல்லாம் வாங்கிக்கிட்டுத்தான் கவர்ன்மென்ட் விலைய ஏத்தியிருக்காங்க. அதனால கெஜ்ரிவால் சொல்றா மாதிரி இதுல ஏதோ ஃப்ராடு இருக்கும்கறதல்லாம் சும்மா பப்ளிச்சிட்டிக்காகன்னுதான்னு நினைக்கிறேன்.
கணேஷ்: கரெக்ட். நானும் படிச்சேன். இந்த விஷயத்த எல்லாம் டீட்டெய்லா ப்ரைம் மினிஸ்டருக்கு பதினேழு பக்க லெட்டராவே மொய்லி எழுதியிருக்காராமே?
ஜோசப்: ஆமா.
ரஹீம்: அப்போ கெஜ்ரிவால் அடிச்சிக்கிட்டிருக்கற ஸ்டன்டுல்ல இதுவும் ஒன்னுதான்னு சொல்லுங்க.
கணேஷ்: இப்பவாவது புரிஞ்சிதே. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறா மாதிரிதாங்க. முதல்ல தில்லியில கரண்ட் விலைய அப்பப்போ கூட்டி லாபம் பாக்கறாங்கன்னு சொல்லி ரிலையன்ஸ் மேல புகார் சொன்னார். இப்போ கேஸ் (gas). நாளைக்கி என்னவோ?
ரஹீம்: நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான் போலருக்கு. இவருக்கும் ரிலையன்ஸ் அம்பானிக்கும் இடையில வேற ஏதோ பர்சனலா க்ரீவன்ஸ் இருக்குமோன்னு கூட தோனுது. ஏன்னா கொஞ்ச நாளைக்கி முன்னால அம்பானிக்கு இவர் எழுதுன லெட்டர் ஒன்ன ஃபேஸ்புக்லதான் பாத்ததா என் பையன் சொன்னான். அதுலயும் கூட ஸ்விஸ் பேங்க்ல உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கு அப்படி இப்படீன்னு ஆதாரம் காமிக்க முடியாத நிறைய குற்றச்சாட்ட சொல்லியிருந்தாராமே? இப்படியெல்லாம் செய்யிறத விட்டுட்டு ரியல் இஷ்யூஸ பத்தி பேசினா நல்லாருக்கும். பாக்கப்போனா இவர் மேல பர்சனலாவே எவ்வளவோ புகார சொல்லலாம்.
ஜோசப்: (சிரிக்கிறார்) கரெக்ட். பைபிள்ல இதப்பத்தி ஒரு வாசகம் இருக்கு. முதல்ல உன் கண்ணுலருக்கற உத்தரத்த எடுத்துட்டு அடுத்தவன் கண்ணுலருக்கற தூசிய பாருன்னு... அதுமாதிரிதான் இருக்கு இவர் பேசறதும்.
கணேஷ்: சரி அவர விடுங்க. இங்க மேடம் நாப்பது தொகுதிக்கும் ஒரே லிஸ்டா ரிலீஸ் பண்ணியிருக்காங்களே படிச்சீங்களா?
ஜோசப்: படிக்காம? இதுவும் ஒரு ப்ரஷர் டாக்ட்டீஸ்தான்.
ரஹீம்: எதுக்கு அப்படி சொல்றீங்க?
ஜோசப்: அப்பத்தான கூட்டணி கட்சிக்காரங்க இவங்க குடுத்த தொகுதிய வாங்கிக்கிட்டு பேசாம இருப்பாங்க? அதான். கணேஷ்: (சிரிக்கிறார்) இருக்கும். மிஞ்சிப் போனா நாலஞ்சி இடம் குடுப்பாங்களா?
ஜோசப்: ரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிங்களும் ஆளுக்கு மூனு சீட் கேட்ருக்காங்களாம்! அப்படியான்னு கேட்டுட்டு நீங்க கேட்டத அப்படியே மேடத்துக்கிட்ட சொல்லிடறோம்னு சொன்னாங்களாம் பேச்சுவார்த்தையில கலந்துக்கிட்ட அதிமுக டீம்! இதுலருந்து என்ன தெரியுது? பேருக்குத்தான் கூட்டணி பேச்சுவார்த்தை. கடைசியில டிசைட் பண்றது மேடம்தான்.
ரஹீம்: ஒரு தேசிய கட்சின்னு சொல்லிக்கறவங்க ஒரு மாநில கட்சிக்கிட்ட இந்த அளவுக்கு இறங்கி போவணுமான்னுதான் தெரியல.
கணேஷ: அட நீங்க வேற பாய். ராஜ்யசபா எலெக்ஷன்ல ஒரு சீட்டுக்கே மேடத்துக்கிட்ட நடையா நடக்கற ஆளுங்கதான அவங்க? முந்தியெல்லாம் கம்யூனிஸ்ட்காரங்கன்னா அவங்க கொள்கையில விடாப்பிடியா நிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இப்ப யார் சீட் ஜாஸ்தி குடுக்கறாஙக்ளோ அவங்க பக்கம் தாவிடறாங்க. கேக்கவே கேவலமா இருக்கு.
ஜோசப்: (சிரிக்கிறார்) பதவி ஆசை யாரத்தான் விட்டுது!
ரஹீம்: அப்புறம் இன்னொரு விஷயம் ஜோசப்.
ஜோசப்: சொல்லுங்க.
ரஹீம்: அதிமுகவோட தேர்தல் அறிக்கையப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
ஜோசப்: (சிரிக்கிறார்) எனக்கு அதுல புடிச்ச ஒரே விஷயம் இன்கம்டாக்ஸ் லிமிட்ட அஞ்சி லட்சமா கூட்டுவோம்னு சொன்னதுதான். மத்ததெல்லாம் எல்லா கட்சிங்களும் சொல்லப் போற விஷயம்தான். கட்சத் தீவ மறுபடியும் மீட்டுத் தருவோம், ராஜபக்ஷேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வாங்கித் தருவோம்கறதெல்லாம் தமிழ்நாட்டுல உள்ளவங்களுக்கு வேணும்னா அட்ராக்ஷனா இருக்கலாம்.
கணேஷ்: அதானங்க இப்ப முக்கியம்? மேடத்துக்கு நாப்பது சீட்டும் கிடைக்கணும்னா இந்த மாதிரியெல்லாம் வாக்குறுதிங்கள குடுத்தாத்தான நடக்கும்?
ரஹீம்: நல்ல வேளை இந்தியாவுல இருக்கற எல்லாத்துக்கும் மிக்ஸி, க்ரைன்டர் குடுப்போம்னு சொல்லாம விட்டாங்களே!
(மூவரும் சிரிக்கின்றனர்.)
ரஹீம்: சிறிசேரி சிப்காட் ஏரியாவுல டிசிஎஸ்ல வேலை செஞ்ச பொண்ண கொலை செஞ்சி போட்ருந்தாங்களாமே, படிச்சீங்களா?
கணேஷ்: நானும் படிச்சேன். கேக்கறதுக்கே மனசுக்கு கஷ்டமா இருந்துது. அதுலயும் அந்த ஏரியா எஸ்.ஐ. புகார் குடுக்க போனவங்கள நக்கல் பண்ணி புகார வாங்காம இழுத்தடிச்சாராமே அதையும் படிச்சேன். பொண்ணுங்க காணோம்னு ஸ்டேஷனுக்கு போய் நின்னா ஒம் பொண்ணு எவன் கூடயாவது ஓடிப்போயிருப்பான்னு கிண்டலடிக்கிறது மனுஷத் தன்மையே இல்ல. இந்த மாதிரி போலீஸ் ஆஃபீசர்ங்கள சஸ்பென்ட் பண்ணா மட்டும் போறாதுங்க, ஸ்ட்ரெய்ட்டா டிஸ்மிசே பண்ணணும். அப்பத்தான் மத்த ஸ்டேஷன்ல இருக்கறவங்களும் பயப்படுவாங்க. அந்தாள் மட்டும் கம்ப்ளெய்ன்ட் கிடைச்ச உடனே தேடிப்பார்த்திருந்தா காப்பாத்த முடியலேன்னாலும் உடல் அழுகிப் போறதுக்குள்ளயாவது கண்டுபிடிச்சிருக்கலாம்.
ரஹீம்: ஆமாங்க. இப்ப இருக்கற டெக்னாலஜிய வச்சி யார் தொலைஞ்சிப் போனாலும் ஒரே வாரத்துலயே கண்டுபிடிச்சிற முடியுமே. இந்த கேஸ்லயும் அதான நடந்துருக்கு? சிபிசிஐடிக்கு மாத்தி முழுசா ரெண்டு நாள் ஆகல. அதுக்குள்ள எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்களே? பதினாலாம் தேதி ராத்திரி பத்தரைக்கி கொலை செஞ்சிட்டு அரை மணி நேரத்துக்குள்ள அந்த பொண்ணோட கார்ட யூஸ் பண்ணி ஏடிஎம்லருந்து பணம் எடுத்துருக்கான் பாருங்க. அத்தோட அந்த பொன்ணோட மொபைலையும் யூஸ் பண்ணியிருக்காங்க. இந்த ரெண்ட வச்சே கம்ப்ளெய்ன்ட் பண்ண உடனயே கண்டுபிடிச்சிருக்கலாம். பாவம் பத்து நாளைக்கி மேல வெயில்ல பாடி கிடந்து அழுகிப்போயி.... அத பாத்த பெத்தவங்க மனசு என்ன பாடுபட்டுருக்கும்?
ஜோசப்: அது மட்டுமா? இந்த பத்து நாளும் பொண்ணுக்கு என்ன ஆச்சோன்னு அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு டென்ஷனாயிருப்பாங்க?
கணேஷ்: வாஸ்தவம்தான். இது ஏங்க இந்த போலீஸ்காரங்களுக்கு மட்டும் தெரிய மாட்டேங்குது? காக்கிச் சட்டைய போட்டதுமே மனசையும் கழட்டி வச்சிருவாங்க போலருக்கு.
ஜோசப்: சரி விடுங்க. இன்னைக்கி நேத்தா இப்படி நடக்குது? இந்த மாதிரி எத்தனை, எத்தனை கம்ப்ளெய்ன்ட்ஸ வாங்காம விட்டதால எத்தனை பேர் ட்ரேஸ் பண்ணவே முடியாம போயிருக்கும்? இதுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல சரியான அளவுக்கு மேன்பவர் இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம். யாருக்கு தெரியும்?
கணேஷ்: இந்த மாதிரி எக்ஸ்க்யூஸ்லாம் சொல்லி என்னங்க பிரயோசனம்? இந்த கேஸ பொறுத்தவரை அந்த பொண்ணு ஒரு பெரிய கம்பெனியில வேல செஞ்சிக்கிட்டிருந்துருக்கு. புகார் கிடைச்சதுமே ஒரு கான்ஸ்டபிள அந்த கம்பெனிக்கி அனுப்பி விசாரிச்சிருந்தாலே போதும் அந்த பொண்ணு அன்னைக்கி ஆஃபீஸ் வந்துருந்தாங்களா? அப்படீன்னா எத்தன மணிக்கி போனாங்க அப்படீன்னு தெரிஞ்சிக்கிட்டிருக்கலாம். அப்புறம் அந்த பொண்ணோட மொபைல் ஃபோன் நம்பர வச்சி அதுலருந்து போன கால்ஸ ட்ரேஸ் பண்ணியிருந்தாலே அன்னைக்கி ராத்திரி பத்து மணிக்கி மேல போயிருந்த கால்ஸ வச்சே அந்த பொண்ணு அவங்க எங்க இருந்தாங்க யார்கிட்ட பேசினாங்கன்னுல்லாம் கண்டுபிடிச்சிருக்கலாமே. ஊர் பேர் தெரியாத பொண்ணுன்னா பரவால்லை.
ரஹீம்: சரிங்க. எல்லாம் தலையெழுத்து வேற என்ன சொல்றது? அப்புறம் உங்க ராஜ்நாத் திடீர்னு இஸ்லாமியர்ங்க கிட்ட மன்னிப்பு கேக்கக் கூட நாங்க தயார், தயவு செஞ்சி எங்களுக்கு ஒரு தடவ ஆட்சி பண்றதுக்கு சான்ஸ் குடுங்கன்னு கெஞ்சிற அளவுக்கு வந்துட்டாரே?
ஜோசப்: (சிரிக்கிறார்) காரியம் பெருசா வீரியம் பெருசான்னு பாத்துருப்பார் அதான் கால்ல விழக்கூட ரெடியாருக்கார். என்ன கணேஷ்?
ரஹீம்: (குறுக்கிட்டு) கரெக்டா சொன்னீங்க. இப்ப கால்ல விழுவார் ஆட்சிக்கு வந்தப்புறம் கால வாரி விட்ருவார். என்னங்க அப்படித்தான?
கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், கடுப்படிக்காதிங்க. அவர் சொன்னது இதுதான் குஜராத் கலவரத்துக்கு நாங்க காரணம்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கு மன்னிப்பு கேக்க தயார்னுதான் சொன்னார். ஆனா அந்த மாதிரி கூட தில்லி கலவரத்துக்கு நாங்க மன்னிப்பு கேக்க தயார்னு ராகுல் சொல்ல மாட்டேங்கறாரே அதுக்கு என்ன சொல்றீங்க?
ஜோசப்: சரி அத விடுங்க. ரெண்டு நாளைக்கி முன்னால VHP லீடர் அஷோக் சிங்கால் இந்துக்கள் குறைஞ்சது அஞ்சி பிள்ளைங்களையாவது பெத்துக்கணும். அப்பத்தான் இந்து மதத்த காப்பாத்த முடியும்னு சொன்னத படிச்சீங்களா?
ரஹீம்: (சிரிக்கிறார்) நானும் படிச்சேன். அத்தோட நின்னுருந்தா பரவால்லை இஸ்லாமியர்களும் கிறிஸ்த்துவங்களும் ரெண்டோட நிறுத்திக்கறதில்லையாம். அதனால இப்படியே போனா அந்த ரெண்டு மதத்த சேந்தவங்களும் இந்து மதத்த சேந்தவங்கள விட ஜாஸ்தியாயிருவாங்களாம். சிரிக்கிறதா அழுவறதான்னே தெரியல. இப்படிப்பட்ட ஆளுங்கதான மோடிக்கி பின்னால நிக்கிறாங்க? அத நினைச்சாத்தான் பயமாருக்கு.
கணேஷ் பதிலளிக்காமல் அமர்ந்திருக்கிறார்.
ஜோசப்: உங்களாலயே பதில் சொல்ல முடியல இல்லே? பாஜக ஜெயிச்சி ஆட்சிய புடிச்சா அஷோக் சிங்கால் மாதிரியான ஆளுங்களாலதான் பிரச்சினை வரும். மதமாற்ற தடுப்புச் சட்டம் இன்னைக்கி பல ஸ்டேட்ஸ்ல இருந்தாலும் அத யாருமே பெருசா யூஸ் பண்றதில்லை. இவர் சொல்றத பாத்தா இதே மாதிரி ஃப்யூச்சர்லயும் இருக்குமாங்கற க்வெஸ்ச்சின வருது.
ரஹீம்: இந்து மதத்திலருந்து யாராச்சும் இஸ்லாமிய மதத்துக்கோ இல்ல கிறிஸ்த்துவ மதத்துக்கோ மாறுனா அதுக்கு முக்கியமான காரணம் கிராமப்புறங்கள்ல இப்பவும் இருக்கற சாதி கொடுமைதாங்க. மத்தப்படி யாரும் போயி எங்க மதத்துக்கு மாறுங்கன்னு கம்பெல் பண்றது இல்ல. இந்த சாதிக் கொடுமைய முழுசா ஒழிச்சாலே போறும். அத விட்டுப் போட்டு இந்த மாதிரி அஞ்சி குழந்தைங்கள பெத்துக்குங்கன்னுல்லாம் சொல்றது முட்டாள்தனம். என்ன சொல்றீங்க?
ஜோசப்: அது நம்ம கணேஷுக்கே தெரியுதே? அதனாலதான பதில் பேச முடியாம ஒக்காந்துருக்கார்? விடுங்க. வேற விஷயத்த பேசுவோம்.
ரஹீம்: ஆந்திரா விஷயம் ஒரு வழியா முடிஞ்சிருச்சி. கிரண்குமாரும் ராஜிநாமா செஞ்சிட்டார். ஆனா தில்லியில செஞ்சா மாதிரியே சட்டசபைய கலைக்கற ஐடியா இல்ல போலருக்கே?
ஜோசப்: அப்படித்தான் பேப்பர்ல போட்ருக்கான். தெலுங்கானா காங்கிரஸ்காரங்க இந்த நேரத்துல பிரசிடென்ட் ரூல் வச்சா அது காங்கிரசுக்கு பாதகமாத்தான் முடியும் அதனால தாற்காலிகமா ஒருத்தர சீஃப் மினிஸ்டரா போடலாம்னு சிபாரிசு செஞ்சிருக்காங்களாமே.
கணேஷ்: (கேலியுடன்) அப்பத்தான கவர்ன்மென்ட் மெஷினரிய யூஸ் பண்ணி ஜெயிக்க முடியும்? எப்போ ஸ்டேட்டையே ரெண்டா பிரிச்சாச்சோ அப்பவே ரெண்டு ஸ்டேட்டுக்கும் புதுசா எலக்ஷன் நடத்தறதுதானங்க முறை?
ரஹீம்: அப்போ நீங்க ஆட்சியிலருக்கற ஸ்டேட்ஸ்ல எல்லாம் கவர்ன்மென்ட் மெஷினரிய யூஸ் பண்ண மாட்டீங்க, அப்படித்தான?
கணேஷ்: காங்கிரஸ் யூஸ் பண்ணலாம் நாங்க பண்ணக் கூடாதா? இதென்னங்க நியாயம்?
ஜோசப்: (சிரிக்கிறார்) அதனாலதானோ என்னவோ தற்போதைக்கி பிரசிடென்ட் ரூல் வேணாம்னு காங்கிரஸ்காரங்களும் ரெக்கமன்ட் பண்ணியிருக்காங்க. அத மட்டும் குத்தம் சொல்றீங்க?
கணேஷ்: அப்போ கிரண்குமார் ரெட்டியவே புது எலக்ஷன் நடக்கற வரைக்கும் கன்டினியூ பண்ணுங்கன்னு கவர்னர் சொல்லியிருக்க வேண்டியதுதான?
ரஹீம்: அதெப்படி? கவர்ன்மென்ட் தானா கவிழ்ந்துருந்தா நீங்க சொன்னா மாதிரி செய்யலாம். இன்னமும் அங்க காங்கிரசுக்கு ஸ்ட்ரெங்த் இருக்கு. அப்படியிருக்கறப்போ சட்டசபையை எதுக்கு கலைக்கறது? கிரண் குமாருக்கு பதிலா சிரஞ்சீவி மாதிரி யாரையாச்சும் சீஃப் மினிஸ்டரா போட்ற வேண்டியதுதான். என்ன சொல்றீங்க ஜோசப்?
ஜோசப்: கரெக்ட். ஆனா ஜெனரல் எலக்ஷனோடயே ரெண்டு ஸ்டேட் எலக்ஷனையும் நடத்திறணும்.
ரஹீம்: பார்லி எலக்ஷனோடவே இந்த ரெண்டு ஸ்டேட் எலக்ஷனையும் நடத்த நாங்க தயார்னு எலக்ஷன் கமிஷனே சொல்லிருச்சே?
ஜோசப்: அப்படியா நா மிஸ் பண்ணிட்டேன் போலருக்கு. அப்படின்னா சரி.
கணேஷ்: சரிங்க வேற ஏதாச்சும் இருக்கா. இன்னைக்கி நா கொஞ்சம் அர்ஜன்டா போகணும். (எழுந்து நிற்கிறார்)
ரஹீம்: என்ன கணேஷ், இன்னைக்கி ரொம்ப டல்லாய்ட்டீங்க போலருக்கு? அந்த VHP விஷயமா?
கணேஷ்: பாய், எரிச்சல் மூட்டாதீங்க. உண்மையாவே எனக்கு வேற வேலை இருக்கு, நா வரேன். (அவர் அவசர அவசரமாக்க திண்ணையிலிருந்து இறங்கி நடக்கிறார்)
ஜோசப்: சரி விடுங்க பாய். இந்த கோவம்லாம் எத்தன நாளைக்கி? அடுத்த வாரம் வருவார் பாருங்க.
ரஹீம்: (சிரிக்கிறார்) அதுவும் சரிதான். நமக்குள்ள இன்னைக்கி நேத்தா பழக்கம்? வந்துருவார்.
ஜோசப்பும் ரஹீம்பாயிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு சாலையில் இறங்க, ரஹீம்பாய் வீட்டுக்குள் நுழைகிறார்.
*******