21 ஜூலை 2014

உன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல!

கடந்த வாரம் 'உன் சமையலறையில்......' என்ற திரைப்படத்தை பார்த்தேன். 

அதில் கதாநாயகனும் கதாநாயகியும் தற்செயலாக  தொலைபேசி மூலம் அறிமுகமாகின்றனர். கதாநாயகன் 45 வயது இளைஞர்.  இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லையா அல்லது யாரும் இவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பவில்லையா என்பது  திரையில் சொல்லப்படவில்லை. கதாநாயகிக்கு 36 வயது இருக்கலாம். செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம! இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் சந்திக்க விருப்பமில்லாமல் கதாநாயகன் தன் மருமகனையும் கதாநாயகி தன் தங்கையையும் அனுப்பி வைக்க 'அவர்கள் 'இருவரிடையிலும் காதல் மலர்கிறது. 

கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் தங்களை மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணம் இருந்தது போலும். இந்த எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு 'நீங்கள் அவருடன் வெளியில் சென்றால் ஒரு தந்தையும் மகளும் போவதுபோல தோன்றும்' என்று கதாநாயகனிடம் அவனுடைய மருமகனும் 'நீயும் அவரும் அக்கா தம்பி போல் இருக்கறீங்க' என்று கதாநாயகியிடம் அவருடைய தங்கையும் கூறி ஏமாற்றுகின்றனர். இறுதியில் உண்மை தெரிந்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருக்குமே ஒருவரையொருவரை பிடித்துப்போகிறது! 

இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் கதாநாயகனின் மருமகன் கூறுவது: 'உங்களுக்கு அவரை பிடிக்குமான்னுதான் நீங்க கவலைப்படணும். அவங்களுக்கு உங்கள பிடிக்குமான்னு நீங்க கவலைப்படக் கூடாது மாமா.'

கதாநாயகன், கதாநாயகி இருவருமே இந்த எண்ணத்துடன்தான் தங்களுடைய முதல் சந்திப்பில் தங்களுக்கு பதிலாக முறையே மருமகன், தங்கையை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்கின்றனர். இது இருவருக்குமே தங்களுடைய வயதான உருவத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்பதை ஒரு இடத்தில் சூசகமாக தெரிவிக்கிறார்கள். 

உண்மைதான். 

இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. 

இது எதனால் ஏற்படுகிறது?

இது ஒரு வகை மனோவியாதியா?

இது யாருக்கெல்லாம் ஏற்படுகிறது?

நாம் அனைவருமே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஏதாவது ஒருவகையில் அவர்களை விட தாழ்ந்தவர்களாக (inferior) இருக்க வாய்ப்புண்டு. அதாவது நம்முடைய மூளையின் அளவு அனைவருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதனுடைய திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுண்டு. அதன் அடிப்படையில் நாம் அனைவருமே ஒரே திறனுள்ளவர்கள் அல்ல. அதே போன்றுதான் உருவத்திலும், நிறத்திலும், அழகிலும், செல்வத்திலும்...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஏதாவது ஒரு வகையில் நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் (superior) மற்ற சிலரை விட தாழ்ந்தவர்களாகவும் (inferior) இருக்க வாய்ப்புள்ளது. 

இதற்கு நாம் மட்டுமே பொறுப்பல்ல. 

ஆனால் இத்தகைய தாழ்வுகளுக்கு (inferiority) தாங்கள்தான் பொறுப்பு என்று எப்போதும் மருகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நாம் மட்டும் ஏன் அவர்களைப் போல் இல்லை என்று நினைப்பு மேலோங்கி நம்மை எந்த காரியத்திலும் திறம்பட செயலாற்ற முடியாமல் போய்விடுகிறது.

இந்த எண்ணம் எப்போது எதனால் ஏற்படுகிறது?

தாழ்வு மனப்பான்மையால் அவதியுறும் சிலரை ஆய்வு செய்தபின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில உண்மைகள் இவை:

பெரும்பாலோனோருக்கு இந்த எண்ணம் அவர்களுடைய இளம் வயதில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் உருவாக்கப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே 'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்', அல்லது 'உன்னால் முடியாது' என்றெல்லாம் கூறுவதும் 'அவனைப் பார்... இவனைப் பார்' என்று மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதிலிருந்தும்தான் 'நம்மால் ஒன்றும் முடியாது' என்ற எண்ணமும் 'நான் மற்றவர்களை விட தாழ்ந்தவன்' என்கிற எண்ணமும் நம்முடைய மனதில் விதைக்கப்படுகிறது. 

பெற்றோரின் இத்தகைய அறிவுறுத்தல்கள் அவர்களுடைய குழந்தைகளை நல்வழிப்படுத்தவோ அல்லது அவர்களை மேம்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக அவர்களுடைய மனதில்  தங்களைப் பற்றிய சுயமதிப்பை (self-esteem) இழக்கவே செய்துவிடுகிறது. இத்தகைய சுயமதிப்பு இல்லாதவர்கள்தான் நாளடைவில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகிவிடுகின்றனர். 

ஆனால் இத்தகைய அறிவுறுத்தல்கள் சில குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும் உண்டு. அதாவது தங்களுடைய குறைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயலில் இறங்கும் குழந்தைகள் காலப்போக்கில் சமுதாயத்தில் சாதனையாளர்களானதும் உண்டு. சரித்திரத்தில் இத்தகைய சாதனையாளர்கள் ஏராளம். பள்ளிப் பருவத்தில் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ பேர் எதிர்காலத்தில் உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்!

மாறாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலால் மனம் துவண்டு தங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுபவர்கள்தான் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற மனநோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மையில் இரு வகை உண்டு.

1. குழந்தை பருவத்தில் ஏற்படும் மனப்பான்மை. அதாவது தங்களுக்கு மற்றவர்களைப் போன்று திறமை அல்லது அறிவாற்றல் இல்லை கற்பனையான எண்ணத்தாலும் ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களாலும் விதைக்கப்படும் எண்ணத்தாலும் ஏற்படுவது.  

இதை ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. இப்போது நம்முடைய சுய-மேம்பாடு மற்றும் சுய-ஊக்குவிப்புகள் (self improvement and self motivation) ஆகியவைகளை அதிகரித்துக்கொள்ள பல புத்தகங்கள் கிடைக்கின்றன. பயிற்சி பாசறைகளுக்கும் (workshops) பஞ்சமில்லை. இவை ஒரு சில நாட்களில் நம்முடைய திறனை  மேம்படுத்திவிட வாய்ப்பில்லையென்றாலும் காலப்போக்கில் நம்முடைய தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. அதாவது இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மால், நம்முடைய முயற்சிகளால் நிவர்த்தி செய்துக்கொள்ளக் கூடியது எனலாம். இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் இருக்கும் இருக்கவும் வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம்மால் நாம் இப்போது இருக்கும் இடத்திலாவது நிலைத்து நிற்க இத்தகைய மனப்பான்மை அவசியமானதும் கூட! 

2. வாலிபப் பருவத்தில் அதாவது கல்லூரி காலத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை. 

இத்தகைய மனப்பான்மை பெரும்பாலும் நாமாகவே ஏற்படுத்திக்கொள்வது. இதற்கு அடிப்படையான குறைபாடு என்று நாம் கருதுவது பல சமயங்களில் மிகவும் அற்ப விஷயமாகக் கூட இருக்கக் கூடும். 

நான் உயரத்தில் குட்டை அல்லது நான் கருப்பு அல்லது என் முகம் பார்ப்பதற்கு அழகாக இல்லை அல்லது என் தலை மூடி அவளைப் போல நீளமாக இல்லை இது மாதிரியான உருவ ரீதியான குறைபாடுகளால் ஏற்படுவதுண்டு. 

இன்னும் சிலருக்கு தங்களுடைய ஏழ்மை மற்றும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதி கூட தங்களை மற்றவர்களை விட தாழ்ந்தவர்களாக கருத  வைத்துவிடுவதுண்டு. 

உண்மையில் பார்க்கப் போனால் இவை எதுவும் ஒரு குறைபாடே இல்லை என்பதும் இதனால் எல்லாம் யாரும் இவர்களை ஒதுக்குவதில்லை என்பதும் இவர்களுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் தெரிவதில்லை. இவை ஏதோ தங்களுக்கு மட்டுமே உள்ள குறைபாடாக எண்ணி, எண்ணி மருகுவார்கள். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை நாளடைவில் இவர்களுடைய முன்னேற்றத்தையே பாதிக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துவிடுவதுண்டு. 

மேலும் இத்தகைய மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுடைய அதாவது தங்களை தாழ்ந்தவர்களாக கருதி ஒதுக்குபவர்களை (இதுவும் கூட இவர்களுடைய கற்பனைதான்) கவர்வதற்காகவே தங்களுடைய சக்திக்கு மீறியதை செய்து சாதிக்க விரும்புவார்கள். அதாவது தங்களை உயர்ந்தவர்களாக (superior) காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். 

இத்தகையோரை பல அலுவலகங்களிலும் பார்க்கலாம். இவர்களுள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு அலுவலிலும் வெற்றியடைந்தால் அதற்கு தாங்கள் மட்டுமே காரணம் என்றும் தோல்வியில் முடிந்தால் மற்றவர்கள்தான் காரணம் என்று கூறுவார்கள். 

இத்தகையோர் மற்றவர்களுடைய கவனத்தை தங்கள் பால் ஈர்க்க எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபட தயங்க மாட்டார்கள். எப்போதும் பிறர் தங்களை மட்டுமே வஞ்சிப்பதாக எண்ணிக் கொள்வார்கள். எல்லா துயரங்களும் தங்களுக்கு மட்டுமே நடப்பதாக சொல்லி சொல்லி புலம்புவார்கள். பிறருடைய சிறிய தவறுகளுக்கும் அவர்களை குறை கூறுவதில் முனைப்பாய் இருக்கும் இவர்களால் தங்களை மற்றவர்கள் குறை கூறுவதை பொறுத்துக்கொள்ள  முடியாது. சொந்த சகோதரனைக் கூட தன்னுடைய போட்டியாளனாக கருதும் இவர்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களுடன் போட்டி போடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய மனப்பாங்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து களையாவிட்டால் நாளடைவில் தீராத மன அழுத்தத்திற்கும் இவர்கள் ஆளாக வாய்ப்புண்டாம்!

தாழ்ச்சியும் (Humility) தாழ்வு மனப்பான்மையும் 

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் பலரும் தங்களை தாழ்ச்சியுள்ளவர்களைப் போல் காட்டிக்கொள்வார்களாம். அதாவது மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும் தாங்கள் அத்தகைய புகழ்ச்சிக்கு ஏற்றவர்கள் அல்ல என்று வெளியில் காட்டிக்கொள்வார்கள். 

தங்களைத் தாங்களே முழுமையாக உணர்ந்துக்கொள்பவர்களால் மட்டுமே தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க முடியும் என்கிறார் நம்முடைய தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள். 'என்னை நானே தெரிந்து வைத்திருக்கவில்லையென்றால்...' அதாவது என்னுடைய பலம் எது பலவீனம் எது என்று எனக்கே தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் தாழ்ச்சியுள்ளவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் பழகுபவர்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். இத்தகையோர் மற்றவர்களுடைய வலிமையையும் (positives) வலிவின்மையையும் (negatives) நன்கு அறிந்து வைத்திருந்து அவர்களுடைய வலிமையை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களுடைய வலிவின்மைகளை களையவும் உதவுவார்கள். தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் தங்களுடன் உழைத்தவர்களையும் சொந்தக்காரர்களாக்கும் பெருந்தன்மையும் இவர்களிடம் இருக்கும். 

இப்போதெல்லாம் இத்தகைய எந்த நற்குணங்களும் இல்லாத தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் தங்களையும் தாழ்ச்சியுடையவர்கள் போல் காட்டிக்கொண்டு நடப்பதை நம் அன்றாட வாழ்க்கையில் மிக அதிக அளவில் காண முடிகிறது. 

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு' என்பதை நம்புவோர் தாழ்ச்சியுடையோர். இதற்கு நேர் எதிரான சிந்தனையுடையோர் தாழ்வு மனப்பான்மையுடையோர்!

********

08 ஜூலை 2014

தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமையும் (loneliness) பிறரால் வேண்டப்படாமையுமே (feeling of being unwanted) இன்றைய உலகின் மிகப் பெரிய கொடுமை என்றார் அன்னை திரேசா.

அதே சமயம் தனிமை என்பது மட்டுமே கொடுமையல்ல என்பதும் தனித்து இருப்பது மட்டுமே தனிமையல்ல என்பதும் உண்மைதான். 

நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருக்கும் சூழலிலும் நம்மில் சிலர் தனித்து விடப்படுவதுபோல் உணர்கிறோமே அந்த தனிமைதான் கொடுமையான விஷயம். 

அதுவும் முதுமையில் வரும் தனிமை.... அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை. 

நானும் என்னுடைய சர்வீசில் சுமார் பத்தாண்டு காலம் என் குடும்பத்தாரை விட்டு தனியாக இருந்திருக்கிறேன். 

மும்பையில் இருந்தபோது தனிமை ஒரு பாரமாக தெரியவில்லை. ஏனெனில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு பத்து மணி ஆகிவிடும். அதன் பிறகு எனக்கென எதையாவது சமைத்து உண்டுவிட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவாகிவிடும். நான் மேலாளராக இருந்த கிளையில் வேலைப் பளு அதிகம் என்பதால் வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். ஆகவே தனித்து இருக்கும் சூழல் மிகவும் அரிதாக இருந்தது. 

ஆனால் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கொச்சியில் மீண்டும் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தனிமை என்ன வாட்டி எடுத்தது. ஏனெனில் நான் பணியில் இருந்த பயிற்சிக் கல்லூரியில் பணிச்சுமை அவ்வளவாக இல்லை. மேலும் என்னுடைய குடியிருப்பு கல்லூரி கட்டடத்திலேயே இருந்ததாலும் அந்த கட்டிடம் பஜாருக்கு நடுவில் இருந்ததாலும் அண்டை அயலார் என்று யாரும் இருக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு கல்லூரியிலிருந்து புறப்பட்டால் ஒரு சில நொடிகளில் குடியிருப்பை அடைந்துவிடலாம். அதிலிருந்து அடுத்த நாள் காலை பணிக்குச் செல்லும்வரை தனிமைதான். வார இறுதி நாட்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை பகலிலிருந்து திங்கட்கிழமை காலை பத்து மணி வரையிலும் பேச்சு துணைக்குக் கூட ஆள் இருக்காது. வீட்டில் ஒரேயொரு துணை தொலைக் காட்சிப் பெட்டிதான்! எனக்கு இன்னொரு துணையாக இருந்தவை புத்தகங்கள்.  எங்கள் கல்லூரிக்கு எதிரிலேயே ஆங்கில புத்தகங்களை வாடகைக்கு விடும் ஒரு நூலகம் இருந்தது. அங்கு தங்கியிருந்த நான்காண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருப்பேன். 

ஆனாலும் எத்தனை நேரம்தான் படித்துக் கொண்டிருக்க முடியும்? அல்லது தொலைக்காட்சியை பார்க்க முடியும்? சில சமயங்களில் எதிலுமே மனம் செல்லாமல் சென்னையில் இருக்கும் மனைவி மக்களையே மனம் சுற்றி வரும். இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்றெல்லாம் தோன்றும். பதவி உயர்வு தேவையில்லை என்று இருந்திருந்தால் ஊரோடு இருந்திருக்கலாமே என்று தோன்றாத நாளே இல்லை எனலாம். 

அப்போதுதான் தனிமையின் தாக்கத்தை முழுவதுமாக உணர ஆரம்பித்தேன். 

இளம் வயதில் தனித்திருப்பது மனத்தளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே முதிய வயதில் தாங்கொண்ணா துன்பமாக தெரிகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னையில் ஒரு பலமாடி குடியிருப்பில் வசித்தபோது என்னுடைய குடியிருப்புக்கு எதிரில் ஒரு முதிர்ந்த தம்பதி குடியிருந்தனர். கனவருக்கு எண்பது வயதும் அவருடைய மனைவிக்கு எழுபத்தைந்து வயதும் இருக்கும். அவர்களுடன் அவருடைய மகனும் மருமகளும் ஒரு பேரனும் இருந்தனர். சில மாதங்களில் ஏதோ குடும்பத்தகராறில் மகன் தன் மனைவி மற்றும் மகனுடன் அவர்களை விட்டு பிரிந்து செல்ல தம்பதியினர் தனித்து விடப்பட்டனர்.  அந்த பிரிவே அவர்கள் இருவரையும் நோயில் தள்ளியது. அடுத்த ஆறு மாதத்தில் மனைவி மாரடைப்பால் மரித்துவிட மகனும் மகளும் திரும்பி வந்து தந்தையுடன் வசித்தனர். ஆனால் ஒரு சில மாதங்கள்தான். மீண்டும் பிரச்சினை. தள்ளாத வயதிலிருந்த தந்தையை மீண்டும் தனியே விட்டுவிட்டு மகன் சென்றுவிட முதியவர் தனிமையின் துயரம் தாளாமல் பல சமயங்களில் அழுவதை கேட்க முடிந்தது. மகன் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வார். ஆனாலும் முதியவரால் தனிமையின் பாரத்தை தாங்க முடியவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் இரவு உறக்கத்திலேயே மரித்துப் போனார். அவர் மரித்த விவரமே இரண்டு தினங்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. 

இதுதான் தனிமையின் விளைவு.

இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம். 

இங்கிலாந்தில் எழுபத்தைந்து வயதைக் கடந்த பலரும் இன்று தனிமையில்தான் வாடுகின்றனராம். தொலைக்காட்சி பெட்டி ஒன்றுதான் அவர்களுக்கு துணையாக உள்ளதாம். 

இந்த தனிமை நகர்ப்புறங்களில்தான் அதிகம். இதற்கு வளர்ந்துவரும் நாகரீகமும், நம்முடைய வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

தனிமை என்பதும் தனித்துவிடப்படுதல் என்பதும் வெவ்வேறு. 

நண்பர்கள் புடைசூழ இருக்கும் சூழல்களிலும் நம்மில் சிலர் தனித்துவிடப்பட்டுவிட்டதைப் போல் உணர்வதுண்டு. நானும் அதுபோல் உணர்ந்திருந்திருக்கிறேன். அதற்கு நம்முடைய அணுகு முறையும் ஒரு காரணம். நம்மில் சிலர் யாரையும் சட்டென்று நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. பிறரிடம் நாமாக சென்று பேசுவதில்லை. யாராவது வந்து நம்மிடம் பேசினால் நாமும் பதிலுக்கு பேசுவோம். அதுவும் அளவோடு. நானும் ஒருவகையில் அப்படித்தான். கொச்சியில் நான் குடியிருந்த கட்டிடத்திலேயே பல அலுவலகங்கள் இருந்தன. அதில் இயங்கிவந்த சில முக்கிய இலாக்கா அதிகாரிகளும் என்னைப் போலவே அதே கட்டிடத்தில்தான் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர். ஆனாலும் என்னால் அவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. எங்களுக்குள் மொழி பேதம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் எனக்கும் மலையாளம் நன்றாக பேச வரும். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். ஒதுங்கியே இருப்பேன். அவர்களாக வந்து பேசினால் பேசுவேன். 

இந்த மனநிலையிலுள்ளவர்கள்தான் தாங்கள் தனித்துவிடப்பட்டிருப்பதாக உணர்வார்கள் போலுள்ளது. இத்தகையோர் ஒரு கூட்டத்தில் இருந்தால் இவர்களுடைய மனநிலை அவருடன் இருப்பவர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது யாரும் உடன் இல்லாவிட்டால்தான் தனிமையாக தோன்றும் என்றில்லை. 

அதே சமயம் தனிமையில் இருப்பவர்கள் அனைவரும் தனிமையாக உணர்வார்கள் என்றும் இல்லை. தனிமையில்  இருப்பதை விரும்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக படைப்பாளிகள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள்.... இவர்களுக்கு தனிமையில்தான் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தோன்றுமாம். 

உண்மைதான். சிறையில் இருந்த காலத்தில்தானே நேரு, அண்ணா போன்றவர்கள் தங்களுடைய மிகச் சிறந்த படைப்புகளை படைத்திருக்கின்றனர்!

ஆக தனிமை என்பது நோயல்ல. அதாவது தனிமையிலும் இன்பம் காண்கின்ற மனப்பாங்கு உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. 

ஆனால் நண்பர்கள், உற்றார் உறவினர் தங்களைச் சுற்றிலும் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தனித்து விடப்படும்போது அதாவது அவர்கள் பிறரால் வேண்டப்படாதவர்களாக கருதப்படும்போது அது அவர்களுடைய உயிரையே குடிக்கும் அளவுக்கு வேதனையாக மாறிவிடுகிறது. 

"Loneliness has also been described as social pain — a psychological mechanism meant to alert an individual of isolation and motivate him/her to seek social connections." என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை.

அதாவது தனிமை ஒரு சமுதாயம் ஒருவருக்கு அளிக்கும் துன்பம் என்றும் கூறலாமாம். ஒருவர் தன்னை சார்ந்தவர்களால் வேண்டுமென்றே தனிமைப் படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவரால் அதை எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதாம். தனிமையின் துயரம் வயது ஆக, ஆக கூடிக்கொண்டே போகிறதாம். 

தனிமை என்பது மனிதனுக்கு புதிதல்ல. அவன் இவ்வுலகில் வரும்போதும் தனியாகத்தான் வருகிறான். உலகை விட்டு பிரியும்போதும் தனியாகத்தான் செல்கிறான். இதை உணர்ந்துக்கொள்பவர்களுக்கு தனிமை பழகிப்போய்விடும் என்கிறது இன்னொரு ஆய்வு.  

தனிமையிலே இனிமைக் காண முடியுமா என்றார் கண்ணதாசன். அது இரவினிலே சூரியனைக் காண நினைப்பதுபோலத்தான் என்கிறார். 

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம் தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம். ஆகவே அதை எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தனிமை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். தினசரி அலுவகள் ஏதும் இல்லாத சூழல் மட்டுமல்லாமல் வளர்ந்துவிட்ட குழந்தைகள் தங்களுடன் இல்லை என்கிற உணர்வும் இத்தகைய உணர்வுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதான் வாழ்க்கை, இதுதான் நிதர்சனம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள் தங்களுடைய சிந்தனைகளை பல ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி தனிமையை எதிர்கொள்கின்றனர். ஆனால் நட்பு, சுற்றம், சூழல் என்று கலகலப்பாக இருந்து பழகிப் போனவர்களால் அதை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. 

இத்தகையோர் நட்பும் சொந்தமும் நம்முடைய வாழ்வின் இறுதிவரையிலும் உடன் வருவதில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தனிமை என்பது பிறரால் ஏற்படுவதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் உணர வேண்டும். கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்ட நிம்மதியை தனிமையில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். கடந்த கால சுகமான நினைவுகளை அசைபோடுவதே தனிமையை முறியடிக்க உதவும் நல்லதொரு ஆயுதம். அதை யாரும் நமக்கு மறுக்க முடியாதே. 

***********