ரஹீம்பாய், ஜோசப் மற்றும் கணேஷ் ரஹீம்பாய் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளனர்.
ரஹீம்: (கேலியுடன்) என்ன கணேஷ் ஒரு வழியா தட்டுமுட்டி கூட்டணிய ஒப்பேத்திட்டீங்க போலருக்கு!
கணேஷ்: (எரிச்சலுடன்) என்னது தட்டு முட்டி ஒப்பேத்திட்டமா? என்ன நக்கலா? இது பண்ட பாத்திரமா தட்டுறதுக்கும் முட்டுறதுக்கும். தேர்தல் கூட்டணி. கூட்டணின்னா அதுல கருத்து வேற்றுமை எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
ஜோசப்: (சிரிக்கிறார்) கருத்து வேற்றுமை இருக்கத்தான் செய்யும், ஒத்துக்கறேன். ஆனா எதிலுமே ஒற்றுமை இல்லாத அதாவது கூட்டே இல்லாத அணி மாதிரி இல்ல தெரியுது?
கணேஷ்: எப்படி சொல்றீங்க?
ஜோசப்: அதான் நேத்து ராஜ்நாத் தலைமையில நடந்த கூட்டத்த அப்படியே லைவா காமிச்சாங்களே அத ஒரு நிமிஷம் பாத்தாலே தெரிஞ்சிருமே எந்த அளவுக்கு உங்களுக்குள்ள கூட்டு இருக்குன்னு?
கணேஷ்: இப்பவும் புரியல. அதுல அப்படியென்ன பாத்தீங்க?
ஜோசப்: என்னங்க ஒன்னுமே தெரியாத மாதிரி பாவலா பண்றீங்க? ராஜ்நாத்தோட ரைட் சைடுல கேப்டன், அவருக்கு பக்கத்துல வைகோ. ரெண்டு பேரும் கூட்டம் முடியற வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கவே இல்ல. வைகோ வேணும்னே கேப்டன் மேல இடிக்கிறா மாதிரி சாஞ்சிக்கிட்டு ராஜ்நாத்கிட்ட சிரிச்சி, சிரிச்சி பேசறார். கேப்டன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கிது. கொஞ்ச நேரத்துல அன்புமணி வர்றார். அவரும் இவங்க ரெண்டு பேரையும் கண்டுக்கல. இவங்களும் அவர் வர்றத பாத்தும் பாக்காத மாதிரி ஒக்காந்துருக்காங்க. முகம் குடுத்து பேசிக்கக் கூட முடியாதவங்கள்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி அமைச்சிருக்கோம்னு சொன்னா ஜனங்க நம்புவாங்களாங்க?
ரஹீம்: நா கடையில இருந்ததால டிவி பாக்க முடியாம போயிருச்சி. ஆனா ராத்திரி நியூஸ்ல காட்டுனப்போ நானும் கவனிச்சேன். நீங்க சொன்னா மாதிரிதான் ஒவ்வொருத்தரும் ஒக்காந்திருந்தாங்க.
கணேஷ்: (சலிப்புடன்) ஒங்க ரெண்டு பேருக்கும் என்னெ போட்டு நோண்டாம இருக்க முடியாதுங்க. அதனாலயே இன்னைக்கி வர்றதா வேணாமான்னு நினைச்சிக்கிட்டே வந்தேன். இதுக்கு வராமயே இருந்துருக்கலாம் போலருக்கு.
ஜோசப்: (சிரிக்கிறார்) ஒரேயடியா சலிச்சிக்காதீங்க. நாம இன்னைக்கி நேத்தா பழகிக்கிட்டிருக்கோம். இல்ல இதுக்கு முன்னால சண்டையே போட்டதில்லையா? சரி அத விடுங்க. இந்த அத்வானி விஷயத்துல எதுக்குங்க கட்சி இப்படி நடந்துக்குது?
கணேஷ்: போச்சிறா. இன்னைக்கி முழுசும் எங்க கட்சிய பத்தியேதான் பேசப் போறீங்களா? ஏன் காங்கிரஸ்லயும் சீட் அலாட் பண்றதுல சண்டை போட்டுக்கறாங்க. கலமாடி சீட் இல்லைன்னதும் தனியா போட்டி போடப் போறேங்கறார். RJDயில ஒருத்தன் லல்லு என் சீட்ட எடுத்து தன் பொண்ணுக்கு குடுத்துட்டாங்கன்னு கட்சிய விட்டே வெளிய போயிடறார். அதப் பத்தி எல்லாம் பேச மாட்டிங்களே?
ரஹீம்: பேசாம என்ன? உங்கள மாதிரி எங்க ரெண்டு பேருக்கும் எந்த கட்சியும் இல்லேங்க. அதனால எந்த கட்சியில என்ன கூத்து நடந்தாலும் விமர்சிப்போம். ஆனா உங்க விஷயம் அப்படி இல்லீங்களே. தமிழ்நாட்டுல நாலஞ்சி ஒப்பேறாத கட்சிங்களோட கூட்டு வச்சிக்கிட்டு மெகா கூட்டணின்னு சொல்லிக்கிறீங்களே காமடியா இல்ல?
கணேஷ்: பாய், இன்னும் ஒரே மாசம்தான் அப்புறம் தெரியும் இது மெகா கூட்டணியா இல்லையான்னு!
ஜோசப்: (சிரிக்கிறார்) ஆனா இதுவரைக்கும் வெளியான எந்த கருத்து கணிப்புலயும் உங்க கூட்டணியில இருக்கற கட்சிங்களுக்கு சீட் கிடைக்கும்னு சொன்னா மாதிரி தெரியலையே.
கணேஷ்: அட நீங்க வேற ஜோசப். கூட்டணியே இப்பத்தான ஃபைனலஸ் பண்ணி அனவுன்ஸ் பண்ணியிருக்காங்க. இதுக்கப்புறம் வர கணிப்புல பாருங்க. நாப்பதுல பாதியாவது புடிக்கிறமா இல்லையான்னு பாருங்க.
ரஹீம்: (கேலியுடன்) நினைப்புத்தான் பொழப்ப கெடுக்கும்னு சொல்வாங்க. அதுமாதிரிதான் இருக்கு உங்க நினைப்பும். மிஞ்சிப் போனா வைகோ வழியா ஒரு சீட் கிடைக்கலாம். அன்புமணி கேஸ்ல சொல்ல முடியாது. இந்த ரெண்ட விட்டா வேற எங்கயும் கிடைக்க சான்ஸே இல்லை. என்ன ஜோசப்?
ஜோசப்: கரெக்ட். கேப்டனுக்கு இருக்கற வோட் ஷேர் இந்த கூட்டணிக்கி ஹெல்ப் பண்ணும்னு நினைச்சித்தான் இந்த கூட்டணியே அமைஞ்சிருக்கு. ஆனா இதுவரைக்கும் இல்லாம இந்த தடவ ஏறக்குறைய எல்லா இடத்துலயுமே நாலு இல்லன்னா அஞ்சி வேட்பாளர்ங்க இருக்கறதால திமுக, அதிமுக கட்சிய ஓட்டுங்கள தவிர மத்ததெல்லாம் அங்கயும் இங்கயுமா சிதறிடும்னு நினைக்கேன். பல தொகுதிகள்ல கணிசமான ஓட்டுங்க இந்த கூட்டணிக்கி கிடைச்சாலும் அது ஜெயிக்கற அளவுக்கு இருக்குமாங்கறதுதான் சந்தேகம்.
கணேஷ்: பாத்துக்கிட்டே இருங்க. நா சொல்றா மாதிரி நடக்குதா இல்லையான்னு.
ரஹீம்: பாக்கத்தான போறோம்!
ஜோசப்: கரெக்ட். வேற என்ன?
ரஹீம்: ஒருவழியா சிதமபரமும் ஜெயந்தி நடராஜனும் போட்டியிடறதுலருந்து தப்பிச்சிட்டாங்க போலருக்கு?
கணேஷ்: (கேலியுடன்) தோக்கப்போறோம்னு தெரிஞ்சும் தேர்தல்ல நிக்கிறதுக்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேணுங்க.
ரஹீம்: (குறுக்கிட்டு) அதாவது உங்க ஆளுங்களுக்கு இருக்கறா மாதிரி!
கணேஷ்: பாய், பேச்ச மாத்தாதீங்க. நாலஞ்சி டேர்ம் ஜெயிச்சி மினிஸ்ட்ரியிலருந்து நல்லா சம்பாதிச்சிட்டு இப்போ தோக்கப்போறது உறுதின்னு தெரியறப்போ கை காச செலவழிக்கணுமாங்கற எண்ணம்தான இவங்களுக்கு?
ஜோசப்: நீங்க சொல்றதும் சரிதான். ஆனா ஆரம்பத்துல அதெல்லாம் முடியாதுன்னு ராகுல் ஸ்ட்ரிக்டா சொன்னதா பேப்பர்லல்லாம் வந்துதே? திடீர்னு என்னாச்சி?
கணேஷ்: அதெல்லாம் சும்மாங்க. ராகுல் சொல்றதையெல்லாம் இவங்க ரெண்டு பேரும் சட்டை பண்ணுவாங்களா என்ன? அவரோட வயசு அளவுக்கு இவங்களுக்கு அரசியல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு! அவர் சொல்றதுக்கெல்லாம் பயந்துடற ஆளுங்களா இவங்க?
ஜோசப்: இதுவும் சரிதான். இருந்தாலும் கேக்கறதுக்கு என்னவோ மாதிரி இருக்கு. தேர்தலுக்கு முன்னாலயே தோல்விய ஒத்துக்கிட்டா மாதிரி இல்ல இருக்கு? சுதர்சன நாச்சியப்பனும் நிக்கல போலருக்கு?
ரஹீம்: அவருக்கு கட்சியே கூட சீட் குடுக்க முடியாதுன்னுட்டாங்களோ என்னவோ?
கணேஷ்: இருக்கும். அவர்தான இலங்கை விஷயத்துலயும் ராஜீவ்காந்தி கொலையாளிங்களுக்கு தூக்கு தண்டனை ரத்தானப்பவும் தேவையில்லாத ஸ்டேட்மென்ட்லாம் விட்டு குழப்பம் செஞ்சவரு. இதுக்குப் பின்னால சிதம்பரம் இருக்கறதுக்கும் சான்ஸ் இருக்கு. ஏன்னா இன்னைக்கி திமுகவும் காங்கிரசும் கூட்டு இல்லாம போனதுக்கு முக்கிய காரணமே இலங்கை தமிழாளுங்க விஷயத்துல காங்கிரஸ் நடந்துக்கிட்ட விதம்னுதான் நா நினைக்கிறேன்/.
ஜோசப்: கரெக்ட். காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமா இத ஹேன்டில பண்ணியிருக்கலாம்.
கணேஷ்: (கேலியுடன்) அதுதான் காங்கிரஸ்காரங்களுக்கு இருக்காதே?
ரஹீம்: எதச் சொல்றீங்க?
கணேஷ்: அதாங்க புத்திசாலித்தனம்!
ரஹீம்: ஆனா உங்கள மாதிரி குறுக்குப் புத்தியும் கிடையாதே.
கணேஷ்: (கோபத்துடன்) குறுக்குப் புத்தியா, அப்படீன்னா?
ஜோசப்: அமைதி, அமைதி. கோபப்படாதீங்க கணேஷ். பாய் என்ன சொல்ல வறார்னு கேப்போம்.
ரஹீம்: இலங்கை விஷயத்துல காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் பாலிசி அளவுல பெருசா வித்தியாசம் இருக்க சான்ஸே இல்லீங்க. ராஜீவ்காந்தி கேஸ் விஷயத்துல இங்க இருக்கற பிஜேபி ஆளுங்கதான் எதிர்ப்பு தெரிவிச்சா மாதிரி பாவ்லா பண்ணாங்க. நார்த்லருக்கற ஒரு பிஜேபி லீடர்கூட இதப்பத்தி பார்லிமென்ட்லயோ இல்ல வெளியிலயோ எதையும் பேசவே இல்ல. மீனவர்ங்க விஷயத்துலயும் வைகோவும் மருத்துவரும் நினைக்கறா மாதிரியெல்லாம் பிஜேபிகாரங்க ஆக்ஷன் எடுக்கப் போறதில்லை. இருந்தாலும் அதையெல்லாம் வெளிய காட்டிக்காம இந்த கட்சிங்க கூட எல்லாம் கூட்டு வச்சிக்கறத குறுக்கு புத்தின்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது?
கணேஷ்: அப்படி பாத்தா முகவும் கூடத்தான் தமிழ் மீனவர்ங்க பேராசை புடிச்சி பார்டர தாண்டி போயி மீன் புடிக்கறதாலதான் அவங்க அரெஸ்டாவறாங்கன்னு சொல்லியிருக்கார். மேடம்? சிலோன்ல கொத்து கொத்தா தமிழாளுங்கள கொன்னு குவிச்சிக்கிட்டிருந்தப்போ போர்னு வந்தா சிவிலியன்க சாவறது சகஜம்தானேன்னு சொல்லியிருக்காங்க? அதுமட்டுமா பிரபாகரன இங்க கொண்டு வந்து பனிஷ் பண்ணணும்னு இவங்க சொல்லல? தேர்தல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் பாய்.
ரஹீம்: எவ்வளவு அசால்டா சொல்றார் பாருங்க ஜோசப். இதத்தான் குறுக்குப் புத்தின்னு சொன்னேன். அதுக்கும் மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வருது?
ஜோசப்: சரி விடுங்க பாய். அவர்தான் சொல்லிட்டாரே தேர்தல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்னு. இதுக்கு மேல என்னத்த பேசறது? ஆனா இந்த விஷயத்துல இவர் சொல்றா மாதிரிதான திமுகவும் அதிமுகவும் நடந்துக்கிட்டாங்க. ஆனா ஜனங்க இதையெல்லாம் எப்பவோ மறந்துருப்பாங்க. அவங்களுக்கு வேண்டியதல்லாம் இலவசம். யார் என்ன குடுப்பாங்கன்னுதான் அவங்க எண்ணமெல்லாம். சட்டசபை எலக்ஷன்ல பொருளா கிடைச்சது இந்த எலக்ஷன்ல பணமா கிடைச்சா வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருக்கப் போறாங்க. எலக்ஷன்ல டைம்ல சொல்றதையெல்லாம் ஜனங்க கேக்கறாங்களா என்ன? கூட்டத்துக்கு வந்தா இவ்வளவு பணம், சாப்பாடுன்னு சொன்னா வந்து ஒக்காந்து காமரா அவங்க சைட்ல வர்றப்போ கைய ஆட்டிட்டு போயிருவாங்க.
ரஹீம்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். எனக்கும் கூட தோனும், எப்படி மண்டைக்காயற வெயில்ல இந்தாளுங்க வந்து காத்துக்கிட்டிருக்காங்கன்னு. ஒருவேளை அதே ஆளுங்க எல்லா கூட்டத்துக்கும் போவாங்களோ?
ஜோசப்: இருக்கும். யார் கண்டா? ஒரு கூட்டத்துக்கு ஐந்நூறுன்னா ஒரே வாரத்துல நாலு கூட்டம் நடந்தா ஒரு ஆளுக்கு ரெண்டாயிரம் சேந்துருமே? ஒரு குடும்பத்துல அஞ்சி பேர்னு வச்சா கணக்கு பாத்துக்குங்க பாய்.
ரஹீம்: தலைய சுத்துதுங்க. நாங்க ஒரு நாளெல்லாம் கடையில ஒக்காந்தாலும் இந்த அளவுக்கு காச பாக்க முடியுமா என்ன? போறாததுக்கு எலக்ஷன் டைம்ல வியாபாரத்துக்குக் கொண்டுக்கிட்டு போற பணத்தையும் வழியிலயே மடக்கி புடுங்கிடறாங்க. போன ரெண்டு வாரமா கடையில வியாபாரமே இல்லீங்க. பணத்த எடுத்துக்கிட்டு போனாதான கொள்முதல் பண்ண முடியுது? க்ரெடிட்ல எவன் குடுக்கான்?
கணேஷ்: உங்கள யாருங்க சரியான ஆதாரம் இல்லாம பணத்த கொண்டு போகச் சொல்றது?
ரஹீம்: யோவ் கடுப்படிக்காத. ஆதாரம்னா? அப்படி எதையாச்சும் இவங்க சொல்லியிருக்காங்களா?
கணேஷ்: (கேலியுடன்) ஆமா சொன்னா மட்டும் கொண்டு போயிருவீங்களாக்கும்! எல்லாமே கணக்குல வராத ப்ளாக் மணிதான? இந்த மாதிரி செக்கிங் தேர்தல் டைம்ல மட்டும் பண்ணாம வருசம் முழுசும் பண்ணணுங்க. அப்பத்தான் உங்கள மாதிரி ஆளுங்கக்கிட்ட புழங்கற ப்ளாக் மணியெல்லாம் வெளியில வரும்.
ரஹீம்: (கோபத்துடன்) ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன். உங்க கட்சிக்காரங்க செலவழிக்கற பணமெல்லாம் ஒயிட் மணின்னு நினைப்பா?
கணேஷ்: பின்னே? இல்லாட்டி எப்படிங்க தேர்தல் கமிஷனுக்கு கணக்கு காமிக்க முடியும்?
ஜோசப்: (சிரிக்கிறார்) எது? ஒவ்வொரு ஓட்டுக்கு ஐநூறு, ஆயிரம்னு குடுக்கறீங்களே அந்த கணக்கா?
ரஹீம்: அப்படி கேளுங்க ஜோசப். கோடி, கோடியா கருப்புப் பணத்த வச்சிக்கிட்டு அக்கிரமம் பண்றது கட்சிக்காரங்க. மாட்டிக்கறது எங்கள மாதிரியான சில்லறை வியாபாரிங்க. தெரியாமத்தான் கேக்கறேன், இதுவரைக்கும் எந்த கட்சிக்காரன் கிட்ட இருந்தாவது பணத்த புடிச்சிருக்காங்களாய்யா?
ஜோசப்: அப்படி சொல்ல முடியாது பாய். அவங்க மாட்டிக்கிட்டா பணமும் போகும் மானமும் போகுமே, அதான் ஒங்கள மாதிரி வியாபாரிங்க வழியா குடுத்தனுப்புறாங்களோ என்னவோ? இல்லன்னா சின்ன வியாபாரிங்க எப்படிங்க லட்சக் கணக்குல அதுலயும் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வழியால்லாம் கொண்டு போறாங்க?
ரஹீம்: என்ன ஜோசப் நீங்களும் இப்படி சொல்லிட்டீங்க? அப்படியெல்லாம் எங்கள மாதிரி ஆளுங்க செய்ய மாட்டாங்க. வழியில மாட்டிக்கிட்டா அத்தோட போயிருதா? நாளைக்கி கோர்ட், கேசுன்னு யார் அலையறது?
ஜோசப்: அப்படின்னா நீங்க கொண்டு போற தொகைக்கு எதுக்காக உங்களால டாக்குமென்ட் எதையும் காட்ட முடியல? அதுவும் இந்த டைம்ல பணத்த கொண்டு போனா புடிச்சிக்குவாங்கன்னும் தெரியறப்போ சரியான டாக்குமென்ட் இல்லாம எதுக்கு கொண்டு போகணும்? அதுவும் லட்சக் கணக்குல!
ரஹீம் பதிலளிக்க முடியாமல் அமர்ந்திருக்க கணேஷ்: பாத்தீங்களா பதில் சொல்ல முடியாம ஒக்காந்துருக்கறத!
ரஹீம் கோபத்துடன் எழுந்து வாசலைக் கடந்து வீட்டுக்குள் திரும்ப ஜோசப்பும் கணேஷும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்.
ஜோசப்: நேத்து நீங்க கோபத்தோட நடுவுலயே எழுந்துப் போய்ட்டீங்க. இன்னைக்கி பாய். நாளைக்கி நானா?
கணேஷ்: (சிரிக்கிறார்) ஒங்களுக்குத்தான் எந்த கட்சியையும் சேராத ஆளாச்சே ஒங்களுக்கு எதுக்குங்க கோவம் வரப்போவுது?
ஜோசப்: அதுவும் சரிதான். சரி. இனி பாய் திரும்பி வரப்போறதில்லை. நாமளும் கெளம்புவோம். என்ன சொல்றீங்க?
கணேஷ்: அப்புறம் மறுபடியும் என்னைக்கி பாக்கலாம்?
ஜோசப்: அதான் ஒரு வழியா எல்லா கூட்டணி கலாட்டாவும் முடிஞ்சிருச்சே.... எலக்ஷன் முடியட்டும். அதுக்கப்புறந்தான இருக்கு உண்மையான தமாஷ். அப்போ பேசிக்கலாம்.
கணேஷ் சிரித்தவாறே சாலையில் இறங்கி நடக்க ஜோசப்பும் திண்ணையிலிருந்து இறங்கி ரஹீம் பாயின் வீட்டுக் கதவை ஒருமுறை தட்டிவிட்டு: 'பாய் அப்புறம் பாக்கலாம். போன் பண்ணிட்டு வரேன்.' என்று கூறிவிட்டு சாலையில் இறங்கி கணேஷுடன் சேர்ந்துக்கொள்கிறார்.
*********