27 நவம்பர் 2019

என்னுடைய புத்தகங்கள் இலவசமாய்.....


என்னுடைய இந்த இரண்டு கிண்டில் புத்தகங்களையும் இன்று முதல் சனிக்கிழமை வரையிலும் கிண்டில் ஆன்லைன் கடையிலிருந்து இலவசமாய் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இவற்றை படிக்காதவர்கள் அமேஜான் கிண்டில் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று ‘free ebooks tamil' என்று  தேடலில் குறிப்பிடவும்.  அதை தொடர்ந்து காட்டப்படும் பட்டியலில் காட்டப்படும் இவை இரண்டையும் இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதற்கு உங்களிடம் கிண்டில் செயலி தேவைப்படும். அது இப்போது கணினிக்கும் கிடைக்கிறது.

இதை தரவிறக்கம் செய்ய உங்களுக்கு அமேஜான் கணக்கு தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிதாய் கணக்கு ஒன்று துவக்கிக்கொள்ளலாம்.

நட்புடன்,
டிபிஆர்.

21 நவம்பர் 2019

கணினிக்கு ஏற்ற கிண்டில் மென்பொருள்

நான் அமேஜான் கிண்டிலில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டுள்ள தகவலை என்னுடைய பல அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். அதில் பலரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் எங்களால் கைப்பேசியில் இதை படிக்க முடியவில்லை, கண்கள் வலிக்கின்றன என்றார்கள். எனக்கும் அதே தொல்லை தான் என்றேன்.

வேறு சிலர் எங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை டிபிஆர் என்றார்கள். என்னிடமும்தான் இல்லை என்றேன்.

நானும் இதை நினைத்துத்தான் கிண்டில் பக்கமே செல்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களுள் ஒருவர் கணினிக்கு என்றே அமேஜான் ஒரு கிண்டில் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை தரவிறக்கம் செய்து படியுங்கள் என்றார்.

இதில் நம் வலை நண்பர் ஜோதிஜி அவர்களின் புத்தகத்தைத்தான் முதலில் படித்தேன். நம் கண்களுக்கு தேவையான அளவுக்கு எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்ளும் வசதியும் இதில் இருப்பதால் கண்களுக்கு எவ்வித வலியும் ஏற்படவில்லை.

ஆகவே இத்தகையோர் பயனடையவே இந்த பதிவை எழுதுகிறேன்.

கீழ்காணும் திரை நகல்களை பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது திரையில் உங்கள் மின்னஞ்சல் விலாசத்தை கொடுத்தால் மென்பொருளின் சுட்டி (Link) வந்துவிடும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிவிடலாம்

உங்களுக்கு அமேஜான் கணக்கு இருந்தால் மென்பொருளை அங்கு பதிவு செய்துக்கொள்வது நல்லது.

அதன் பிறகு டெஸ்க்டாப்பிலுள்ள கிண்டில் சுட்டியை க்ளிக் செய்து கிண்டில் தளத்திலுள்ள எந்த மின்புத்தகத்தையும் வாங்கி படிக்கலாம். ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு இலவசமாகவே கிடைக்கிறது. அதே போல் பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

அச்சு புத்தக விலையுடன் ஒப்பிடுகையில் இதில் பண்மடங்கு குறைந்த விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பது எத்தனை அரிது!

இந்த மென்பொருளை பயன்படுத்தி மறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் தொடருங்கள்.

நன்றி,

டிபிஆர்.





20 நவம்பர் 2019

அமேஜான் கிண்டிலில் என் புத்தகம்

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ‘சொந்த செலவில் சூன்யம்’ என்ற க்ரைம் நாவலை ஒரு நீள் தொடராக எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதை அப்போதே பல நண்பர்கள் இதை புத்தக வடிவில் வெளிக்கொணரலாமே என்று கருத்துரைகளில் கூறியிருந்தனர். ஆனால் அதில் அப்போது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. 

ஆனால் இப்போது நம்முடைய பதிவுலக நண்பர்கள் சிலர் காட்டிய பாதையில் அமேஜான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளேன். 


இதை இயன்றவரை பலருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இதன் விலையை ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக விலையிட வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அமேஜான் தளத்தில் புத்தகத்தின் அளவின் (size) அடிப்படையில் அமெரிக்க சந்தையில் குறைந்த பட்சம் 0.99 டாலர்கள் விலை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில்தான் உலகெங்கும் உள்ள அமேஜான் கிண்டில் தளங்களில் விலை நிர்ணயிக்கப்படுமாம்!

அமெரிக்க சந்தையில் குறைந்த பட்ச விலையாக ஒரு டாலரை தெரிவு செய்தேன். அதன் அடிப்படையில் இந்திய சந்தையில் ரூ.72/- என நிர்ணயிக்கப்பட்டது. இதில் முப்பந்தைந்து விழுக்காடு எனக்கு ராயல்ட்டியாக வழங்கப்படும். எழுபது விழுக்காடு வரை ராயல்டி வழங்கும் திட்டமும் உள்ளது. ஆனால் அந்த் அடிப்படையில் புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் ரூ.225/- இருக்க வேண்டும். அந்த விலையில் புத்தகத்தை இந்தியாவில் விற்பது கடினம் என்பதால் அதை நான் தெரிவு செய்யவில்லை. 

இந்த நாவலை தொடராக படித்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும். அமேஜான் விதித்த நிபந்தனைகளின்படி இத்தொடரை என்னுடைய என்னுலகம் தளத்திலிருந்து நீக்கிவிட வேண்டியதாயிற்று. இப்போது அது என்னுடைய பளாகில் படிக்க கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இதுவரை படிக்காதவர்களுக்கு  ஒரு கதை சுருக்கம்.

ராஜசேகர் ஒரு க்ரிமினல் வழக்கறிஞர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. 

வழக்கறிஞர் பணியில் அதிகம் பிரசித்தி இல்லாதவர். சுமாரான வருமானம்தான். 

இந்த சூழலில் தன்னிடம் உதவி கேட்டு வரும் மாதவி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்படுகிறது. 

ஆனால் அந்த பெண் தன்னுடன் அல்லாமல் வேறு பலருடனும் இத்தகைய தொடர்பு வைத்திருந்ததை அறிய வரும்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வரும் மாதவியை பிடித்துதள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் ராஜசேகர். 

அடுத்த நாள் காலை மாதவி கொலையுண்டு இறந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைகிறார். ஒருவேளை தாந்தான் கொலையாளியாக இருக்குமோ என்று அஞ்சுகிறார். 

அவர்தான் கொலை செய்தாரா இல்லையா அப்படியானால் அதிலிருந்து விடுபடுகிறாரா அல்லது தண்டிக்கப்படுகிறாரா என்பதுதான் மீதி கதை. 

ஒரு சராசரி க்ரைம் நாவலைப் போன்று இல்லாமல் குற்றவாளையை கண்டுபிடிப்பதில் காவல்துறை செய்யும் புலன்விசாரணைகள், காவல்துறையில் அதிகாரிகளுக்கிடையில் ஏற்படும் ஈகோ மோதல்கள், காவல்துறைக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், குற்றவாளிக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் குற்ற விசாரணைகள் அதை தொடர்ந்து வழக்கு வழக்காடு மன்றத்திற்கு செல்லும் சூழலில் அங்கு ஏற்படும் மோதல்கள், காரசாரமான விவாதங்கள் என குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் தண்டனை அளிக்கப்படும் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலை தேடி எடுத்து சில பகுதிகளை குறைத்தோ நீக்கியோ என ஒரு முழு தணிக்கை செய்து வெளியிட்டுள்ளேன்.

இதை தொடராக வாசித்தவர்களுக்கும் முழு நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் அனுபவம் இந்த புத்தக வாயிலாக கிடைக்கும் என்று நம்புகிறேன். 

நன்றி,

அன்புடன்,
டிபிஆர்.  

01 நவம்பர் 2019

பாஜகவின் சரிவு...... நிறைவுப் பகுதி

4 ம் பாகம்

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும்  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர். 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை. 

ஏன்?

ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக  தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும்  ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய  குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு  நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.

ஏன் இந்த அவல நிலை?

வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?

இதுதான் இன்றைய யதார்த்த நிலை..

இந்த சூழலில்  தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு  வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம். 

இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள  ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார். 

அவர் கூறியுள்ளது இதுதான்.

நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

எப்படி... ?

நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 

இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை  செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து  முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள். 

ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி  மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?

இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.

RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....

இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம். 

துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நிறைவு.