வங்கி தில்லுமுல்லுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கி தில்லுமுல்லுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூலை 2007

வங்கி தில்லுமுல்லுகள் - 3

நேற்றைய பதிவில் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான தில்லுமுல்லுவைக் குறித்து வெளிவந்த செய்தியின் சாராம்சத்தைப் பார்த்தோம்.

இதே சம்பவத்தைக் குறித்து ஞாயிறன்று வேறொரு வங்கியும் இதே நபரைக் குறித்து ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இதே நபர் அவர்களுடைய வங்கியில் சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றியபோது இதே உத்தியைக் கையாண்டு சுமார் ரூ.3 கோடி அளவுக்கு கையாண்டுள்ளார் என்கிறது அந்த வங்கி!

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வங்கி ஒரு வெளிநாட்டு வங்கி. அதாவது கணினி மயமாக்கத்தில் உச்ச நிலையில் உள்ள வங்கி.

இதுபோன்ற தில்லுமுல்லுகள் நடைபெறாமலிருக்க இன்று எங்களைப் போன்ற வங்கிகளிலேயே பல உக்திகளை மென்பொருள் வடிவத்தில் (அதாவது நாங்களே வடிவமைத்து) அறிமுகப் படுத்தியுள்ளோம்.

அதாவது எந்த ஒரு கணக்கிலும் வரவோ, பற்றோ வைக்கப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட வேலைநாளின் இறுதியில் (at the day end) மென்பொருள் அதன் விவரத்தை மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவித்துவிடும்.

உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய கடன் கணக்கில் ரூ.பத்தாயிரத்தை காலை பதினோரு மணிக்கு செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அன்று வங்கி கணக்கு முடிக்கப்பட்டவுடன் நீங்கள் வங்கியில் பதிந்து வைத்துள்ள மின்னஞ்சல் விலாசத்திற்கு எங்களுடைய மென்பொருள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடும். இதற்கு நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் விலாசத்தை வங்கியில் அளித்து இந்த சலுகை கிடைக்க விண்ணப்பிக்க வேண்டும், அவ்வளவுதான். மாதம் இத்தனை மின்னஞ்சல் வரை கட்டணம் ஏதும் இல்லை. அதற்கு மேல் போனால் ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படும்.

நீங்கள் வங்கிக்கு நேரடியாக வர இயலாத பட்சத்தில் உங்களுடைய பணியாள் அல்லது நண்பர்/உறவினர்கள் மூலம் தவணையை பணமாகவோ, காசோலையாக உங்களுடைய கணக்கில் வரவு வைக்குமாறு அனுப்பியிருந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் உங்களுக்கு தகவல் வந்துவிடும். இல்லையென்றால் வங்கி கிளையை அணுகி விளக்கம் கேட்க முடியும்.

முதல் தலைமுறை வங்கியான எங்களுடைய வங்கியிலேயே இத்தகைய ஏற்பாடுகள் இருக்கையில் தங்களுடைய வங்கியின் பரிவர்த்தனைகள் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளன என மார்தட்டிக்கொள்ளும் இந்த இரண்டாம் தலைமுறை மற்றும் மேலைநாட்டு வங்கிகள் இந்த அடிப்படை வசதிகளைக் கூட தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்பதை நம்பமுடியவில்லை.

சரி. அது போகட்டும். வாடிக்கையாளர்கள் வங்கியில் டெப்பாசிட் செய்யும் சொத்து பத்திரங்களை மத்திய அலுவலகத்திற்கு அனுப்புவதற்கென சில விதிமுறைகளை ஒவ்வொரு வங்கியும் வகுத்திருக்கும். அதன்படி சம்பந்தப்பட்ட பத்திரங்களை மத்திய அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு எந்த நிலையிலுள்ள அதிகாரிகளை வங்கி அனுமதித்துள்ளதோ அதே அதிகாரிகள் மட்டுமே அங்கிருந்து பத்திரங்களை திரும்பிப் பெற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது கிளை மேலாளர் நிலையிலுள்ள அதிகாரி மட்டுமே அத்தகைய ஆவணங்களை மத்திய அலுவலக்த்திற்கு அனுப்ப அதிகாரம் உண்டு என்றால் அவரால் மட்டுமே அவற்றை கடனை அடைத்து முடித்தபிறகு திருப்பிக் கோர அதிகாரம் இருக்கும். சாதாரணமாக எந்த வங்கியிலும் இத்தகைய அதிகாரத்தை தனிநபர் ஒருவருக்கு மட்டும் அளிப்பதில்லை. குறைந்த பட்சம் இருவராவது இணைந்து இத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படியொரு நியதி இந்த வங்கிகள் இல்லை அல்லது அந்த நியதி வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது என்பது வெளியாகியுள்ள செய்திகளில் இருந்தே தெரிகிறது.

சரி. அதுவும் போகட்டும். சாதாரணமாக ஒரு கடனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்து பத்திரங்கள் அந்த கடன் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கு திருப்பியளிக்கப்படும். வங்கி பரிவர்த்தனைகள் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டுள்ள இந்த வங்கிகளில் ஒரு கடன் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை மத்திய அலுவலகத்திலிருந்தே கண்டுபிடித்துவிட முடியும். அப்படியிருக்க ஏதோ ஒரு கிளையிலிருந்து ஒரு அதிகாரி மின்னஞ்சல் வழியாக கேட்டார் என்று திருப்பிச் செலுத்தப்படாத கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களை அவருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர் என்பதையும் எப்படி நம்புவது?

ஆகவே இதை ஒரு தனி நபருடைய புத்தி சாதுரியத்தால் நடைபெற்ற தில்லுமுல்லு என்பதை விட வங்கியிலிருந்த நடைமுறை நியதிகளுள் உள்ள குறைபாடுகளால் நடைபெற்ற தில்லுமுல்லு என்றே கூறவேண்டும்.

இதை செய்திகளில் குறிப்பிட்டுள்ள நபரால் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்பதும் உண்மை.

இத்தகைய தில்லுமுல்லுகள் நீங்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க சில யோசனைகள்:

1. கடன் வாங்கும்போது:

அ. கடனுக்காக நீங்கள் கையொப்பமிட்ட வங்கி ஆவணங்களின் நகலைக் கோர உங்களுக்கு உரிமை உண்டு. சரிவர நிரப்பப்படாத படிவங்களில் கையொப்பமிடாதீர்கள்.

ஆ. கடனுக்கு ஈடாக வங்கியில் அடகு வைக்கும் சொத்து ஆவணங்கள் எல்லாவற்றையும் நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இ. நீங்கள் வங்கியில் டெப்பாசிட் செய்த பத்திரங்களின் பட்டியலை தயாரித்து அதில் எந்த வங்கி அதிகாரியிடம் அவற்றை ஒப்படைக்கிறீர்களோ அவர்களுடைய அலுவலக முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. கடன் பெற்ற பிறகு:

அ. உங்களுடைய கடன் கணக்கில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ நேரடியாக வங்கியிலேயே செலுத்தி விடுங்கள். வங்கி நியமித்த ஏஜண்டுகள் மூலமாக செலுத்தாமல் இருப்பது நல்லது. நேரடியாக செல்ல முடியாத பட்சத்தில் காசோலையை தபால் மூலமாக செலுத்துங்கள். காசோலையாக அனுப்பும் பட்சத்தில் அதன் ஜெராக்ஸ் நகலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ரொக்கமாக செலுத்திய வங்கி சல்லான்களை கடன் முழுவதையும் அடைத்து தீர்த்து பத்திரங்கள் உங்கள் கைக்கு திருப்பிக் கிடைக்கும்வரை வைத்திருங்கள்.

ஆ. நீங்கள் இறுதியாக செலுத்த வேண்டிய தவணையின் தியதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் தொகையை செலுத்தி முடித்தப் பிறகு அதிக தாமதமில்லாமல் கடன் பத்திரங்களை திருப்பி பெற்றுக்கொள்வதில் முனைப்பாயிருங்கள்.

முக்கியமாக இரண்டாம் தலைமுறை வங்கிகளில் வழக்கத்திலுள்ள முறை அதாவது எல்லா கடன்களூக்குண்டான சொத்து பத்திரங்களையும் மத்திய அலுவலகத்தில் சேமித்து வைக்கும் முறை நிச்சயம் ஒரு பெரிய குழப்பத்தில் முடிய வாய்ப்புள்ளது. இருபதாண்டுகள் கழித்து உங்களுடைய சொத்து பத்திரங்களை கோரி விண்ணப்பிக்கும்போது லட்சக்கணக்கான கணக்குகளின் சொத்து பத்திரங்களிலிருந்து உங்களுடையதைத் தேடி கண்டுபிடித்து கொடுப்பதற்கென்றே தனியாக ஒரு மென்பொருள் தேவைப்படும்!!

ஆகவே இதை விளையாட்டாக நினையாமல் உங்களுடைய சொத்து பத்திரங்களை பத்திரப்படுத்திக்கொள்வதில் எச்சரிக்கையாயிருங்கள்!

தொடரும்..

16 ஜூலை 2007

வங்கி தில்லுமுல்லுகள் - 2

வங்கிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று துவங்கியது நினைவிருக்கலாம்.

ஆனால் நேரமின்மை காரணமாகவும் இத்தொடரின் முதல் பதிவை என் நெருங்கிய நண்பர்கள் சிலரைத் தவிர அவ்வளவாக சக வலைப்பதிவாளர்கள் யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்பதாலும் தொடர்ந்து எழுத மனமில்லாமல் நிறுத்தியிருந்தேன்.

ஆனால் என்னுடைய முதல் புத்தகத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவில் நண்பர் 'சாம்பார்வடை' கடந்த வெள்ளியன்று செய்தித்தாள்களில் வெளிவந்த ஒரு நூதன மோசடியைப் பற்றி குறிப்பிட்டு என்னுடைய கருத்தைக் கேட்டிருந்ததால் இத்தொடரின் அடுத்த பதிவை எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

நண்பர் குறிப்பிட்ட வங்கி மோசடியில் அத்தனை பெரிதாக நூதனம் ஏதும் இல்லை. ஆனால் இதுபோன்ற மோசடிகள் நடப்பதற்கு பெரும்பாலும் சம்பந்தப்பட்ட வங்கியில் நடைமுறையிலுள்ள விதிமுறைகளை அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரிவர கடைபிடிக்க தவறுவதுதான் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. மேலும் இத்தகைய வங்கிகளில் கணினியின் ஆதிக்கம் அதிகமாகிப் போய் மனிதர்கள் marginalise செய்யப்படுவதன் விளைவும் இதற்குக் காரணம் என்று கருதுகிறேன்.

வங்கிகள் தற்சமயம் வழங்கிவரும் தனிநபர் கடன்களில் மிக முக்கியமானது வீட்டு வசதிக் கடன். எங்களுடையதைப் போன்ற முதல் தலைமுறை தனியார் வங்கிகளில் மட்டுமல்லாமல் அரசுடமை வங்கிகளிலும் இத்தகைய கடன்களை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களை தெரிவு செய்வதிலிருந்து கடன் வழங்கி, வசூலித்து முடிக்கும் வரை வங்கிக் கிளைகளில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் வழியாகவே சகல பரிவர்த்தனைகளும் நடக்கின்றன.

ஆனால் இரண்டாம் தலைமுறை வங்கிகள் அப்படியல்ல. வாடிக்கையாளர்களை தெரிவு செய்வது வங்கியல்லாத நிறுவனங்களாக இருக்கும். இவர்களை Direct Selling Agents என அழைப்பதுண்டு. வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் வங்கிகளில் கிடைக்கும் கடன் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி மிகைப்படுத்தி சொல்வது, வேண்டாம் என்பவர்களையும் நிர்பந்தித்து வீடுவரை சென்று காண்பது, அவர்களை தங்களுடைய சாதுரியமான பேச்சால் வசியப்படுத்தி வங்கி விண்ணப்பப் படிவங்களில் கையொப்பம் பெற்று அவர்களைக் குறித்து முழுவதுமாக விசாரிக்காமல் அவர்கள் கடன் பெறுவதற்கு முழு தகுதியும் உள்ளவர்களே என்று சான்றிதழுடன் அவர்களுடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வது என கடன் பெறுவதற்காக மட்டும் வங்கிக்கு ஒருமுறை சென்றால் போதும் என்ற சூழலை உருவாக்குவது இவர்களது பணி. இவர்களுடைய பரிந்துரையை ஏற்று கடன் வழங்கப்படும் பட்சத்தில் இவர்களுக்குண்டான கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு கழன்றுக்கொள்வார்கள்.

சாதாரணமாக இத்தகைய வீட்டு வசதிக் கடன்களுக்கு ஆதாரம் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரம்தான். வங்கிகளில் அடகு வைக்கப்படும் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள் கடன் வழங்கப்பட்ட கிளையிலேயே சேஃப்ட்டி லாக்கரில் வைக்கப்படுவது வழக்கம். என்னென்ன பத்திரங்கள் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் அதற்கென வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் குறிக்கப்பட்டு கடந்தாரரும் கிளை மேலாளரும் கையொப்பமிடுவார்கள். பத்திரம் வைக்கப்பட்டுள்ள சேஃப்ட்டி லாக்கரை மேலாளரும் அவருடன் சேர்ந்து வேறொரு துணை அதிகாரியும் இல்லாமல் திறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் வரும் உள் தணிக்கையாளர்கள் (Internal Inspectors) கிளையிலிருந்து அசையா சொத்துக்களின் மீது வழங்கப்பட்டுள்ள சகல கடன்களுக்கும் (வீட்டு வசதிக் கடனும் இதில் அடங்கும்) ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்து பத்திரங்கள் லாக்கரில் உள்ளதா என்றும் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது நியதி.

கடனை மாதா மாதம் வாடிக்கையாளரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ ரொக்கமாகவோ காசோலையாகவோ வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும். அதை வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வசூலிக்க எந்த வங்கி ஊழியருக்கும் அதிகாரம் அளிக்கப்படுவதில்லை. இது கிளை மேலாளருக்கும் பொருந்தும். அப்படியே பெற்றுக்கொண்டாலும் வங்கியின் பெயருக்கு அளிக்கப்பட்டுள்ள காசோலையாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். காசோலையை வரவு வைத்ததும் தங்களுடைய கணக்கில் இன்ன தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என வாடிக்கையாளருக்கு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து தவணை செலுத்தாத வாடிக்கையாளருக்கு வங்கியே நேரடியாக கடிதம் எழுதவோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ முயலுமமே தவிர சில வங்கிகள் செய்வதுபோன்று அடியாட்களை ஏவிவிடுவதில்லை. மூன்று மாதங்கள் தொடர்ந்து செலுத்தப்படாத கணக்குகள் செயலிழந்த கடன்களாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க துவங்கும். சில கிளை மேலாளர்கள் அதிகப்பிரசங்கித்தனமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகையை அவர்களுடைய புகைப்படத்துடன் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிடுவதும் உண்டு.

கடன் முழுவதும் அடைத்து தீர்க்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரங்களை சேஃப்டி லாக்கரில் இருந்து எடுத்து சம்பந்தப்பட்ட கடந்தாரரிடம் முன்பு பதிந்து வைத்திருந்த புத்தகத்தில் 'பெற்றுக்கொண்டேன்' என்று கையொப்பம் பெற்றுக்கொண்டு திருப்பி வழங்கிவிடுவார்கள்.

இதுதான் எங்களைப் போன்ற முதல் தலைமுறை மற்றும் அரசு வங்கிகளில் கடைபிடித்து வரும் நடைமுறை.

ஆகவே செய்தித்தாளில் வந்துள்ளது போன்ற மோசடி இத்தகைய வங்கிகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் சமீப காலத்தில் துவங்கப்பட்ட இரண்டாம் தலைமுறை வங்கிகள் தங்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் முழுவதையும் கணினிமயமாக்கியதுடன் கடன் வழங்கும் முறைகளையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளன. அதாவது வங்கி கிளைகள் சேமிப்பு திரட்டும் மற்றும் கடன் வசூலிக்கும் இயந்திரங்களாகவே இயங்கி வருகின்றன.

கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பது, அனுமதி வழங்குவது (sanction) மட்டுமல்லாமல் கடன் தொகை பைசல் செய்வது போன்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் மத்திய அலுவலகத்திலிருந்தே மென்பொருள் வழியாக நடத்தப்படுகின்றன. வங்கி கிளை மேலாளர்களுடைய வேலை சம்பந்தப்பட்ட கடன்களூக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்து ஆவணங்களை பெற்று மத்திய அலுவலகங்களூக்கு அனுப்பி வைப்பதுடன் முடிந்துவிடுகிறது. கடனை சரிவர திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கவும் வெளியாட்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவதால் வங்கி சம்பந்தப்படாத எவர் வேண்டுமானாலும் ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கலாம் என்ற சூழல்.

கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் கூட உடனே அடகு வைக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கப்படுவதில்லை. அது மத்திய அலுவலகத்திலிருந்து வந்து சேரவே சில சமயங்களில் இரண்டு, மூன்று வாரங்கள் ஆகிவிடுவதுண்டு.

இத்தகைய ஒழுங்கற்ற அல்லது நடைமுறைக்கு ஒத்துவராத நியதிகளே நேற்றைய செய்தித்தாளில் வெளியான மோசடிகளுக்கு வித்திடுகின்றன என்றால் மிகையாகாது.

ஆனால் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதுபோன்று ஒரு ஜூனியர் அதிகாரியின் மின்னஞ்சலை நம்பி வங்கியின் மத்திய அலுவலகம் சொத்து ஆவணங்கள் அவருக்கு அனுப்பி வைத்தன என்பதை நம்புவதற்கில்லை.

மேலும் சுமார் ரூ.75 லட்சம் வரை அவர் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வசூலித்து அதை கபளீகரம் செய்தார் என்பதும் தன்னிடமிருந்த ஆவணங்களை தனியார்களிடம் அடகு வைத்து கடன் பெற்றார் என்பதும் கூட நம்ப முடியவில்லை.

ஆகவே முழுமையான போலீஸ் விசாரனைக்குப் பிறகே உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவரும்.

**********

03 மே 2007

வங்கி தில்லுமுல்லுகள் 1

இந்திய வங்கிகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற தில்லுமுல்லுகளின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்:

வருடம் - எண்ணிக்கை - தொகை

2002 - 1744 - ரூ. 399.53 கோடி
2003 - 2207 - ரூ. 653.50 கோடி
2004 - 2660 - ரூ. 600.16 கோடி

இத்தகைய தில்லுமுல்லுகள் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள்-வாடிக்கையாளர்கள் கூட்டணி என பலராலும் நிகழ்த்தப்படுகின்றன.

இங்கு நான் குறிப்பிட்டுள்ள தில்லுமுல்லுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.. கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவை எத்தனை மடங்கோ!

என்னுடைய முப்பதாண்டு வங்கி வாழ்க்கையில் நான் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட சில சுவாரஸ்யமான தில்லுமுல்லுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இத்தொடர்...

சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.

ரவி சர்மா ஒரு வணிகர். வடநாட்டைச் சார்ந்தவர், தமிழ்நாட்டில் குடியேறி பல வருடங்களாகியிருந்தன.

இதைத்தான் வாங்குவது விற்பது என்றில்லாமல் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய வணிகத்தை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர். எப்படியாவது குறுகிய காலத்தில் லாபம் சம்பாதித்து செல்வந்தராக வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். குறுகிய காலம், அதிக லாபம். இதை தன்னுடைய தாரக மந்திரமாக கொண்டிருந்தவர் ரவி.

சள, சளவென்று பேசக் கூடியவர். முதல் முறை சந்திப்பவர்களிடம் கூட வெகு எளிதில் ஒட்டிக்கொள்ளக் கூடியவர். ஆகவே அவர் குடியிருந்த பகுதியிலேயே வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த மோகன் குமார் ஒரு வங்கி மேலாளர் என்பதை கண்டுபிடிப்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை.

தன்னுடைய 'குறுகிய கால, அதிக லாப' திட்டத்திற்கு மோகன் தான் ஏற்ற ஆள் என்பதை கண்டுக்கொண்ட ரவி அவர் மாற்றலாகி வந்த சில நாட்களிலேயே வாயெல்லாம் பல்லாக சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 'சார் நீங்க கவலையே படாதீங்க. ஒங்களுக்கு கேஸ் கனெக்ஷன் கிடைக்கறதுலருந்து ஒங்க பொண்ணுக்கு ஸ்கூல்ல அட்மிஷன் புடிச்சி குடுக்கற வரைக்கும் எல்லாத்தையும் நா பாத்துக்கறேன்.' என்றார் முதல் நாளே..

மோகன் மேலாளராக பதவி உயர்வு பெற்று முதன் முதலாக அந்த ஊரிலிருந்த கிளைக்கு பொறுப்பேற்க வந்திருந்தார். மொழிப் பிரச்சினை இல்லையென்றாலும் பழக்கமில்லாத ஊர். நகரங்களிலேயே படித்து வளர்ந்த அவருக்கு நகரம் என்றும் சொல்ல முடியாமல் கிராமம் என்று சொல்ல முடியாமலிருந்த அந்த ரெண்டுங்கெட்டான் ஊரில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது. அப்படிப்பட்டவருக்கு ரவி சர்மா ஒரு ஆபத்பாந்தவனாய் தோன்றினார். 'ரொம்ப தாங்ஸ் சார்.' என்று அவருடன் ஒட்டிக்கொண்டார்.

பிறகென்ன? ரவியின் திட்டத்தின் துவக்கமே அட்டகாசமாக இருந்தது. அடுத்த சில வாரங்கள் யார் யாரையோ பிடித்து மோகனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்துக்கொடுத்தார்.

மோகன் குமாருடைய கிளை மிகவும் சிறியது. அவருக்கு கீழே ஒரு கணக்காளர் (accountant), ஒரு கேஷியர் மற்றும் ஒரு குமாஸ்தா.. அவர்களுக்கு உதவ ஒரு சிப்பந்தி... வாசலில் குர்க்கா... என அவருடைய வங்கியிலிருந்த சிறிய கிளைகளுள் ஒன்று அது. கிளை துவக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியிருந்தது. கிளையை துவக்கிய மேலாளருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்பதால் அவர் ஒரே வருடத்தில் நீக்கப்பட்டு அப்போதுதான் பதவி உயர்வு பெற்றிருந்த மோகன் அங்கு மாற்றப்பட்டார்.

ஆக அவருடைய சிந்தனை முழுவதும் கிளையின் வணிக அளவை உயர்த்துவதிலேயே இருந்தது. 'ரவி சார் நீங்க இந்த ஊர சேர்ந்தவர்தானே... அதுவுமில்லாம பிசினஸ் பண்றீங்க. அதனால ஒங்க கணக்க மட்டுமில்லாம ஒங்களுக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட்சையெல்லாம் எங்க பேங்குக்கு ரெக்கமெண்ட் பண்ணணும்.' என்று ரவியிடம் கேட்டுக்கொண்டதும், 'அதுக்கென்ன சார் செஞ்சிட்டா போச்சி... ஒங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்.. நீங்க முதல்ல ஒங்க பிராஞ்சுக்கு சார்ஜ் எடுங்க.. அப்புறம் ஒரு நாள் சாவகாசமா ஒங்க ஆஃபீசுக்கு வரேன்...' என்றார். எப்படியும் மீன் வலையில் விழுந்தாயிற்று. அவசரப்படாமல் காரியத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு!

ஆனால் இரண்டு, மூன்று வாரங்கள் கழிந்தும் ரவி வராமலிருக்கவே ஒருநாள் மோகனே அவரைத் தேடிக்கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றார். வீடு உள்ளும் புறமும் அட்டகாசமாக இருந்தது. மூன்றே பேர் கொண்ட குடும்பத்திற்கு இத்தனை பெரிய வீடா என்று மலைத்துப்போனார் மோகன். 'பெரிய புள்ளிதான் போலருக்கு.. .இவரோட கனெக்ஷன் கிடைச்சதுக்கு உண்மையிலேயே நா குடுத்து வச்சவந்தான்.' என்று நினைத்து மகிழ்ந்துபோனார்.

'என்ன சார்... திடீர்னு இந்த பக்கம்?' என்றவாறு வரவேற்றார் ரவி சர்மா அவருடைய வருகையின் நோக்கத்தைப் பற்றி அறியாதவர் போல். மீன் தானாகவே வந்து வலையில் விழவேண்டும் என்று காத்திருந்தவராயிற்றே!

'இல்ல சார்... நம்ம பேங்க் பக்கம் வரேன்னு சொன்னீங்களே... அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.' என்றார் மோகன் அசடு வழிந்தவாறு.

ரவி பதில் பேசாமல் உள்ளே திரும்பி தன் மனைவியை அழைத்தார். ஒரு சினிமா துணை நடிகையைப் போல் ஒப்பனை செய்துக்கொண்டிருந்த அவர் ஹாலுக்குள் நுழைந்ததுமே நேரே மோகன் அமர்ந்திருந்த சோபாவில் அவருக்கு மிக அருகில் அமர்ந்து, 'என்ன சார் தனியா வந்திருக்கீங்க... ஃபேமிலிய கூட்டிக்கிட்டு வரலையா?' என்று உரிமையாக கேட்க மோகன் சங்கடத்தில் நெளிந்தார். அவர் தொடர்ந்து, 'என்ன சாப்பிடறீங்க?' என்று உபசரிக்கவும் அவருடைய சங்கடம் கூடியது. வேறு வழியில்லாமல் அவர்களுடைய சமூகத்தினருக்கே உரிய ஸ்பெஷல் இனிப்புகளை கெட்டியான லஸ்சியுடன் விழுங்கி வைத்தார்.

ஆனால் அவர் வந்த விஷயத்தைப் பற்றி பேசவிடாமல் வேண்டுமென்றே ரவியும் அவருடைய் மனைவியும் மற்ற உலக விஷயத்தையெல்லாம் பேசி அவரை கிறங்கடித்தனர். மோகன் விடவில்லை. 'சார் நம்ம பேங்க்ல கணக்கு துவங்கறத பத்தி....' என்றார் புறப்படும் நேரத்தில்.

ரவி அப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல...'அட ஆமா சார்... மறந்தே போய்ட்டேன்... நீங்க வந்ததும் நல்லதாப்போச்சி... இன்னைக்கி காலைலதான் ஒரு பெரிய அமவுண்ட் கைக்கு வந்துது... இருங்க கொண்டு வரேன்...' என்றவாறு தன் மனைவியை கண்சாடைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்றிருந்த நேரத்தில் அவருடைய மனைவி ஒரு அழகான புன்னகையுடன், 'எங்க ஹஸ்பெண்ட் தங்கமானவர் சார்.. ஒங்களெ எப்படியோ அவருக்கு ரொம்ப புடிச்சி போயிருச்சி... இல்லன்னா இவ்வளவு பெரிய அமவுண்ட ஒங்க பேங்க்ல போடுவேன்னு சொல்வாரா? நீங்க குடுத்துவச்சவர் சார்...' என்றதும் மோகன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்.

சற்று நேரத்தில் கையில் ஒரு துணிப்பையுடன் திரும்பி வந்த ரவி அதிலிருந்து கற்றை, கற்றையாக கரன்சி நோட்டுகளை எடுத்து டீப்பாயில் வைக்க தான் எதிர்பார்த்ததற்கும் மேலேயே தொகை இருக்கும் போலிருக்கிறதே என்று மலைத்துப்போனார் மோகன். 'சார் ரெண்டு லட்சத்து பத்தாயிரம் இருக்கு.' அத்தோட அஞ்சு லட்சத்துக்கு ஒரு செக்கும் இருக்கு. மொதல்ல இந்த கேஷ வச்சி கணக்கு தொடங்கிருங்க... அப்புறம் ரெண்டு நாள் கழிச்சி இந்த செக்க போட்டுருங்க.. இத குடுத்தவர் ஒரு ரெண்டு நாள் கழிச்சி போட்டா நல்லாருக்கும்னு சொல்லிட்டுத்தான் குடுத்தார். அதனாலத்தான் சொல்றேன்.. அவர் ரொம்ப நாள் கஸ்டமர்... ஏதோ பணமுடை போலருக்கு... நமக்கு பணத்த விட பிசினஸ் ரிலேசன்ஷிப்தான் சார் முக்கியம்...' என்றவாறு பணப்பையையும் காசோலையையும் மோகனிடம் நீட்டினார். 'ஒங்கக் கிட்டவே கேஷ குடுக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... நாளைக்கு எனக்கு முக்கியமான வேல இருக்கு... பக்கத்துல ------------ வரைக்கும் போறேன்... காலையில போனா ராத்திரி ஆயிரும்... அதான்... ஒங்களுக்கு ஏதாச்சும் அப்ஜெக்ஷன் இருந்தா நாளைக்கு நம்ம வய்ஃப் கிட்ட குடுத்துவிடறேன்...' என்றார்.

மோகன் பதற்றத்துடன், 'என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க... ஒரு ரசீதும் கேக்காம நீங்களே பணத்த என்னெ நம்பி குடுக்கறப்போ... பேசாம குடுங்க சார்... நாளைக்கு நானே அப்ளிகேஷன் ஃபார்ம் கொண்டு வந்து குடுக்கேன்... நமக்குள்ள ஃபார்மாலிட்டியெல்லாம் எதுக்கு?' என்றார். அவருக்கு எங்கே ரெண்டு லட்சம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

'அப்பன்னா சரி சார்.' என்று பெருந்தன்மையுடன் துணிப்பையை அவரிடம் கொடுத்தார் ரவி. தொடர்ந்து 'சார் நா வேணும்னா ஒங்கள ஒங்க வீட்ல ட்ராப் பண்ணிரட்டுமா சார்... இந்த ராத்திரி நேரத்துல கைல பணத்தோட...' என்று மோகனை வற்புறுத்தி தன்னுடைய சொகுசு காரிலேயே கொண்டு வீட்டில் இறக்கிவிட்டு செல்ல மோகன் தன்னுடைய அதிர்ஷ்டம் இவருடைய நட்பு கிடைத்தது என்று தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்.

அடுத்த நாள் பணத்தைக் கொண்டு ரவி எழுதிக்கொடுத்திருந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு கணக்கை திறந்து ரொக்கத்தை அதில் செலுத்திவிட்டு தன் உதவியாளரை அழைத்து, 'சார் இந்த செக்க ஒங்க கஸ்டடியில வச்சிக்குங்க... ரெண்டு நாள் கழிச்சி க்ளியரிங்ல அனுப்பனா போறும்...' என்று கூறிவிட்டு, 'ஒரு கரண்ட் அக்கவுண்ட் ஓப்பனிங் ஃபார்ம பேர மட்டும் எழுதி என்கிட்டு குடுங்க... நான் அவர் கிட்ட கையெழுத்த வாங்கிட்டு நாளைக்கு கொண்டு வந்து தரேன்.. அதுக்கப்புறம் செக் புக் எல்லாம் குடுத்தா போறும்னு சொல்லிட்டார். இந்த கேஷுக்கு ஒரு ரிசிட் மட்டும் போட்டு கொண்டாங்க.' என்று உத்தரவிட்டார்.

அன்று மாலையே மோகன் கையில் ஒரு இனிப்பு பெட்டியுடன் ரவியின் வீட்டிற்கு செல்ல அங்கு அவருடைய மனைவியும் பதினெட்டு வயது மதிக்கத்தக்க அவருடைய மகளும் மட்டுமிருந்தனர். 'அவர் இன்னும் வரலை சார்.. நீங்க குடுத்துட்டு போங்க.. அவர் கையெழுத்து போட்டு ஒங்க பேங்குக்கு வந்து குடுத்துடறேன்னு சொல்லியிருக்கார்.' என, 'பரவால்லை மேடம்... அவசரமில்லை.' என்ற பதிலுடன் திரும்புகிறார்.

அடுத்த நாளும் சரி அதற்கடுத்த நாளும் ரவி சர்மா கிளைக்கு வரவில்லை. ஆயினும் மோகன் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் ரொம்பவும் பிசியாருக்கார் போலருக்கு என்றுதான் நினைத்தார். மூன்றாம் நாள், 'சார் அந்த செக்க இன்னைக்கி போட்டுருங்க.. எனக்கு நாளைக்கு கொஞ்சம் அமவுண்ட் தேவைப்படும்.' என போன் வருகிறது அவரிடமிருந்து. 'சரி சார்...' என்கிறார் மோகன்... பிறகு தொடர்ந்து, 'ஒங்களுக்கு செக் புக் ஏதும் வேணுமா சார்?' என்கிறார்.

'பின்னெ வேணாமா சார்? செக் புக் இல்லாம எப்படி பிசினஸ் பண்றது?' என்ற அட்டகாசமான சிரிப்பு எதிர் முனையிலிருந்து வருகிறது. 'நா நம்ம ஆஃபீஸ் பியூன அனுப்பறேன்... குடுத்து விடுங்க...'

அப்படியே அடுத்த அரைமணி நேரத்தில் கிளைக்கு வரும் சிப்பந்தியிடன் செக் புக்கை கொடுக்குமாறு தன் உதவியாளரிடம் பணிக்கிறார். அவரோ, 'சார் ஒப்பனிங் ஃபார்ம் இன்னும் வரலையே' என்கிறார். அதானே என்று நினைத்த மோகன் கிளைக்கு வந்தவரிடம் வினவுகிறார். 'சார் மொதலாளி ஒன்னும் சொல்லலையே... செக் புக் குடுப்பாங்க வாங்கிட்டு வந்துருங்கன்னுதான் சொன்னார். நா வேணும்னா போய் ஓப்பனிங் ஃபார்ம ஃபில்லப் பண்ணி குடுத்தாத்தான் செக் புக் கிடைக்குமாம்னு சொல்லிரட்டுமா சார்?' என்கிறார்.

மோகன் பதற்றத்துடன், 'அதெல்லாம் வேணாங்க... நீங்க செக் புக்க கொண்டு போங்க.. நா சாரோட வீட்டுல போயி ஃபார்ம வாங்கிக்கறேன்.' என 'அப்படீன்னா சரிசார்.' என்று வாயெல்லாம் பல்லாக செக் புக்கை வாங்கிக்கொண்டு செல்கிறார் வந்தவர்..

அதுதான் அவர் கடைசியாக அவரையோ அவருடைய முதலாளியையோ பார்த்தது.

இதில் என்ன தில்லுமுல்லு என்று நீங்கள் வியப்பது புரிகிறது.

முதலில் ரவி சர்மா, ரவி சர்மாவே அல்ல! அத்துடன் அவர் மோகனிடம் கொடுத்த காசோலையிலிருந்த நிறுவனத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது எப்படி அவருடைய கைக்கு வந்தது என்பது இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் மோகனுடைய கிளை காசோலையை க்ளியரிங்கில் அனுப்பியபோது சம்பந்தப்பட்ட வங்கி எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை பாசாக்கி அனுப்பி வைக்க ரவி சர்மாமீது எவ்வித சந்தேகமும் இல்லாமலிருந்த மோகன் அந்த பணத்தை அவருடைய நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கிறார்.

அடுத்த நாளும் நிறுவனத்தின் ஓப்பனிங் ஃபார்ம் வராததால் அன்று இரவு வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளட்டுமா என்று ரவியை தொலைபேசியில் அழைத்து மோகன் கேட்க 'இதுக்கு எதுக்கு சார் நீங்க வீட்டுக்கு வரணும். இதோ குடுத்து விடறேன் சார்.' என்று ஒருவரிடம் கொடுத்து அனுப்புகிறார். அத்துடன் மோகன் திருப்தியடைந்துவிடுகிறார்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த ஒரு வாரத்தில் கணக்கிலிருந்த ரூ.7.10த்தில் நூறு ரூபாயைத் தவிர எடுக்கப்பட்டுவிடுகிறது. அதில் எவ்வித சந்தேகமும் மோகனின் கணக்காளருக்கு ஏற்படாததால் அவர் மோகனிடம் கூறாமலிருந்துவிடுகிறார்.

ஒரு மாதம் செல்கிறது. ஒருநாள் திடீரென்று கிளை இயங்கிவந்த பகுதி காவல்நிலையத்திலிருந்து அதிகாரியொருவர் வருகிறார். 'சார் இந்த செக்க ஒங்க பேங்க்லருந்து கலெக்ட் பண்ணியிருக்கீங்க. யாரோட அக்கவுண்ட்ல க்ரெடிட் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றீங்களா?' என்று துவங்கி ரவிசர்மா தன்னுடைய நிறுவனம் என்று கூறி துவங்கியிருந்த கணக்கில் அதுவரை நடந்திருந்த வரவு செலவை ஆராய்கிறார்கள்.

'இவர ஒங்களுக்கு தெரியும்னு ஓப்பனிங் ஃபார்ம்ல நீங்களே கையெழுத்துப் போட்டிருக்கீங்க? எப்படி சார் தெரியும்?' என்ற காவல்துறை அதிகாரியின் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல் தயங்கி பிறகு அவர் தான் மாற்றலாகி வந்த சமயத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதிலிருந்து கணக்கு துவங்கிய நாள்வரை நடந்தவைகளை கூறுகிறார். 'அவர் சொந்த வீட்லதான் குடியிருக்கார் சார். இப்பவே வேணும்னாலும் போய் பாக்கலாம், வாங்க.' என்று எழுந்து அவருடன் செல்கிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது. அடுத்த வீட்டுக்காரர், 'சார் அவர் ரெண்டு வாரத்துக்கு முன்னால வீட்ட காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கே போறேன்னு போய்ட்டாரே.' மோகன் அப்பாவித்தனமாக சார் 'இது சொந்த வீடுன்னு சொன்னாரே?' என்கிறார். அவர் சிரிக்கிறார். 'என்னது அப்படியா சொன்னார்? சார் அந்தாளு சரியான ஃப்ராடுன்னு நினைக்கிறேன். வீட்டு ஓனர் மெட்றாஸ்ல இருக்கார். நம்ம ஃப்ரெண்டுதான். நாந்தான் இந்த வீட்ட பாத்துக்கறேன். ஒரு ப்ரோக்கர்தான் இந்தாள கூட்டிக்கிட்டு வந்தார். வடநாட்டுக்காரராச்சேன்னு நானும் நெனச்சேன். ஆனா நா தமிழ்நாட்லயே பொறந்து வளந்தவன் சார், ஒங்களுக்கு எந்த பிரச்சினையும் வராதுன்னு சொன்னார். எவ்வளவு வாடகைன்னாலும் தரேன்னார். அதான் குடுத்தேன். ஆனா அந்தாளோட நடவடிக்கையெல்லாம் பார்த்தா சந்தேகமாத்தான் இருந்திச்சி. ரெண்டு நநளைக்கு முன்னால அந்தாளு கூட இருந்த ரெண்டு பொம்பளைங்களும் சண்டை போட்டுக்கிட்டு போயிருச்சிங்க. அப்புறம்தான் தெரிஞ்சது அந்த ரெண்டு பேருக்கும் அந்தாளுக்கும் ஒறவேயில்லங்கறது. சரியான ஃப்ராடு கும்பல் போலருக்கு. அதான் வீட்ட காலி பண்ணிருங்கன்னு சொல்லிட்டேன்.' என்றதும் மோகன் மயக்கமடையாத குறைதான்.

இப்படியும் ஒரு ஏமாளியா என்பதுபோல் அவரைப் பார்த்தார் காவல்துறை அதிகாரி.

ஆனால் சட்டம் தன்னுடைய வேலையை செய்யத்தான் செய்தது. காசோலைக்கு சொந்தக்காரர் மோகனின் வங்கி மீது வழக்கு தொடர்ந்தபோதுதான் அவருடைய மேலதிகாரிகளுக்கு விஷயம் தெரியவருகிறது. மோகனின் உதவியாளருடைய சாட்சியம் அவரை குற்றவாளியாக்குகிறது. அரசு வங்கி என்பதால் பதவியிறக்கம் மட்டுமில்லாமல், வேலையும் பறிபோகிறது. வங்கிக்கு பணம் நஷ்டம்.. மோகனுக்கு வாழ்க்கையே நஷ்டப்பட்டுப் போகிறது.

********