10 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு - 2

பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மீண்டும் பத்திலிருந்து ஐந்து வரை என்கிற ஒரு உத்தியோகத்திற்கு செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்காக வீட்டில் 'சும்மா' இருக்காமல் சென்னையிலுள்ள ஏதாவது ஒரு அரசு சாராத தொண்டு நிறுவனத்துடன் எவ்வித ஊதியமும் இல்லாமல் ஒரு பகுதி நேர தொண்டனாக (Volunteer) இணைந்துகொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 'உன்னுடைய குணத்துக்கு அதெல்லாம் சரிவராது டிபிஆர். நீ நினைக்கறா மாதிரி தொண்டு என்ற நோக்கத்துடன் மட்டும் எந்த நிறுவனமும் இயங்குவதில்லை. நெருங்கி பார்த்தாத்தான் அவர்களுடைய உண்மை சுயரூபம் தெரியும்.' என்றனர். ஆனால் அவர்களுடைய கருத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஏனெனில் என்னுடைய மனதில் நான் நினைத்திருந்த சமூக நிறுவனங்களைப் பற்றி சென்னைவாசிகள் மத்தியில் நல்ல எண்ணம் இருந்தது.




ஆகவே பணியிலிருந்து ஓய்வு பெற்ற சில வாரங்களில் ஒரு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் என்னுடைய எண்ணத்தை தெரிவித்து அவர்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால் அவர்களுடைய அனுதின அலுவலில் ஏதாவது ஒரு நிலையில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தேன். என்னுடைய மின்னஞ்சல் கிடைத்ததுமே அவர்களுடைய மேலாண்மை அதிகாரியிடமிருந்து (நான் எதிர்பார்த்திராத அளவுக்கு இளைஞி அவர்) அழைப்பு வந்தது. நானும் அவர்கள் குறிப்பிட்டிருந்த தினத்தன்று சென்று நேர்காணலில் கலந்துக்கொண்டேன். ஏற்கனவே அவர்களுடைய நிறுவனத்தைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்து வைத்திருந்தவற்றை அந்த அதிகாரி சுருக்கமாக கூறிவிட்டு நிறுவனத்தைப்பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு சில கோப்புகளுடன் கடந்த ஆண்டின் நிதியறிக்கை நகலையும் அளித்தார். அந்த நிதியறிக்கையை அவர்கள் அச்சடித்திருந்தவிதமே அசத்தலாக இருந்தது. அவர்கள் செயல்படுத்திவந்த சேவை திட்டங்களுக்கென பல பிரபல நிறுவனங்களிடமிருந்து கிடைத்து வந்த பிரத்தியேக நன்கொடைகளின் அளவு என்னை பிரமிக்க வைத்தது. அதுபோன்றே அவர்கள் வங்கிகளில் முதலீடு செய்திருந்த வைப்பு நிதி கணக்குகளின் (Fixed Deposit) அளவும் பிரமிக்க வைத்தது. அதாவது நன்கொடைகள் முழுவதும் அவர்களுடைய திட்டங்களுக்கு செலவிடாமல் வைத்திருந்ததைக் கண்டபோது எதற்காக என்று கேள்வி கேட்க தோன்றியது. இருப்பினும் ஒருவேளை எதிர்கால திட்டங்களுக்கென வைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.



நேர்காணலில் என்னால் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும் என்று சுருக்கமாக கூறிவிட்டு fieldworkஐ தவிர எந்த அலுவலானாலும் அதற்கு நான் தயார் என்றேன். சென்னையிலுள்ள சேவை மையங்களுள் ஒன்றின் இயக்கத்தை சீராக்க மேலாண்மை அனுபவம் பெற்ற ஒருவர் அவர்களுக்கு தேவைப்படுவதாகவும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா என்று கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். அந்த மையம் நான் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகில் இருந்ததும் எனக்கு உதவியாக இருந்தது. அடுத்த சில தினங்களில் என்னை அந்த மையத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள பணியாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி மையத்தின் அலுவல்கள், அதன் நோக்கம் அனைத்தையும் சுருக்கமாக கூறிவிட்டு 'You can suggest the ways to improve the functioning of this centre, Sir.' என்றார் அந்த அதிகாரி.



என்னுடைய முதல் பார்வையிலேயே அந்த மையத்தின் செயல்பாடுகளில் திருப்தியில்லாமல் போயிற்று. அதற்கு முக்கிய காரணம் நான் நேற்றைய பதிவில் கூறியிருந்ததுதான். என்னுடைய இருபதாண்டு மேலாண்மை அனுபவத்தில் எதை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் என்னுள் உருவாகியிருந்தது. அந்த எண்ணத்தை குழிதோண்டி புதைத்தது போலிருந்தது அந்த இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும். எதிலும் ஒரு professionalism காணப்படவில்லை. குறிப்பாக ஊழியர்களின் நடவடிக்கைகளில் எதிலும் ஒரு தொண்டு நிறுவனத்தின் சாயல் தென்படவில்லை. மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அலைந்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க வெளியிலிருந்து வந்த மருத்துவர்களும் அனுபவமற்றவர்களாகவும் தொண்டு மனப்பான்மையில்லாதவர்களாகவும்யி தென்பட்டனர். இதை நான் அங்கு சென்ற முதல் நாளே வெளிப்படையாக எடுத்துரைக்க அங்கிருந்த ஊழியர்களில் சிலர் என்னை ஒருவித குரோதத்துடன் பார்த்தனர். அவர்கள் பார்வையே, 'நீ யார்யா இத சொல்றதுக்கு?' என்பது போலிருந்தது. என்னை அழைத்து சென்றிருந்த அதிகாரிக்கோ அந்த ஊழியர்களுடைய வயதில் பாதி கூட இல்லை.ஆகவே நிச்சயம் அவரால் இவர்களை கட்டுப்படுத்த முடிந்திருக்காது என்று நினைத்தேன். என் மனதில் பட்டதை அடுத்த சில தினங்களில் ஒரு அறிக்கையாகவே தயாரித்து அனுப்பினேன். அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எவ்வித Responseம் வரவில்லை. இறுதியில் என் நெருங்கிய நண்பர்கள் கூறியபடியேதான் நடந்தது. அந்த நிறுவனத்தில் மேலும் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாமல் விலகிக்கொண்டேன். இத்தனைக்கும் அந்த சேவை நிறுவனத்துடன் சென்னையின் பல வர்த்தக நிறுவனங்களின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் டிரஸ்டிகளாக இருந்தனர். இந்த நிறுவனத்தை நிறுவிய மற்றும் டிரஸ்டிகளாக இருந்தவர்களின் நோக்கம் வேண்டுமானால் சேவையாக இருக்கலாம். ஆனால் அது அடிமட்டத்தில் உள்ள பணியாளர்கள் உணரவில்லை என்பதே நான் அங்கு பணியாற்றிய ஒரு சில மாதங்களில் நேரில் அனுபவித்தது. அங்கு சேமித்து வைத்திருந்த சில உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் சந்தையில் விற்கும் முதல் தர பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்ததையும் கண்டபோது நல்ல உள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகளை சில புல்லுருவி ஊழியர்கள் கொள்ளையடிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவர்களை இனம் கண்டு களையெடுக்கக் கூடிய நெஞ்சுரம் கொண்ட அதிகாரிகள் அங்கு இல்லை என்பதுதான் வேதனை.



இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க முடிந்திருந்தால் அங்கு தொடர்ந்து என்னால் இயன்ற சேவையை செய்ய முடிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இதற்கு என்னுடைய அடிமனதில் ஆழமாய் ஊறிப்போன மேலாண்மை ஸ்டைல்தான் காரணம். அதிலிருந்து அத்தனை எளிதில் வெளிவர முடியாது என்பதால்தான் மேற்கொண்டு வந்த பல அழைப்புகளையும் ஏற்க மனமில்லாமல் மறுத்துவிட்டேன். ஒருவேளை எதிர்காலத்தில் என்னுடைய கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் இயங்கும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படலாம்.



இத்தகைய அனுபவங்கள் மூத்த அதிகாரிகளாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். மாலை நேரங்களில் அருகிலுள்ள பூங்காவில் நடக்க செல்லும்போது சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் சிலருடன் பேசிப் பார்த்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன். அறுபது வயதுக்குப் பிறகு சட்டென்று தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பலரும் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். நல்ல படிப்பும், ஞானமும், மேலாண்மைத் திறனும் உள்ள பல முதியவர்களும் இந்த நிலையில்தான் உள்ளனர் என்பதையும் உணர முடிந்தது. ஆகவே பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கவே ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை துவங்கினாலும் தவறில்லை என்றே கருதுகிறேன்.



இப்படி வேறு வழியில்லாமல் வீட்டில் 'சும்மா' இருக்க வேண்டிய சூழலுக்கு தங்களை முன்கூட்டியே எப்படி தயாரித்துக்கொள்வது?



அடுத்த பதிவில் சொல்கிறேன்...



தொடரும்..

3 கருத்துகள்: