27 ஜூன் 2014

நடிகரின் தற்கொலை - காரணம் என்ன?

இன்று காலையில் பத்திரிகையைத் திறந்ததுமே கண்ணில் பட்ட செய்திகளில் ஒன்று ஐம்பத்து நான்கு வயதே ஆன தமிழ் திரைப்பட நடிகர் பால முரளி மோஹனின் தற்கொலை!

அதே பகுதியில் வெளியாகியிருந்த இன்னொரு செய்தி சென்னை கோயம்பேட்டிலுள்ள தெற்காசிய விளையாட்டு சென்னையில் நடைபெற்றபோது வீரர்கள் தங்க கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த ஐம்பது வயது கூட நிரம்பாத பெண் ஒருவர் அவருடைய குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை!

நான் குடியிருக்கும் பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் (நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை) தற்கொலை செய்துக்கொண்ட இரண்டாம் வருட நினைவு நாள் நேற்று!

ஏன் இந்த நிலை?இதுபோன்ற செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்னும் அளவுக்கு தற்கொலைகள் பெருகிக்கொண்டே போவதைக் காண முடிகிறது.

இதற்கு என்ன காரணம்?


எல்லா புகைப்படங்களிலும் குழந்தைத்தனமான புன்னகையுடன் காட்சியளிக்கும் நடிகர் பால முரளி மோஹனா தற்கொலை செய்துக்கொண்டார்? இதற்கு கடந்த ஆறு மாதங்களாக நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்ற காரணம் என்கிறார்கள்.

என்னுடைய பகுதியில் வசித்தவருடைய தற்கொலைக்கு அவருடைய அலுவலக தோழர்கள் பல காரணங்களை கூறினார்கள். ஒருவர் அவருக்கு பல வியாதிகள் இருந்தன என்றார். 'இன்னும் ரெண்டு நாள்ல அவருக்கு ஹெர்னியா ஆப்பரேஷன் இருந்துது சார்.' ஒரு ஹெர்னியா சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துக்கொள்வாரா என்று வியந்துபோனேன். ஏனெனில் அவர் நல்ல திடகாத்திரமானவராகத்தான் தெரிந்தார். தினமும் பேட்மின்டன் விளையாடுவார். சரியான எடையுடன் வயதுக்கேற்ற உருவம் கொண்டவர். இன்னொருவர் 'அவருக்கு ட்ரிங்ஸ் ஹேபிட் இருந்துது சார். கொஞ்ச நாளாவே ஜாஸ்தியா குடிப்பார்.' இப்போது யாருக்குத்தான் இந்த பழக்கம் இல்லை என்று தோன்றியது.  

இதுபோன்ற காரணங்கள் எல்லாமே தற்கொலை செய்துக்கொண்டவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய நண்பர்களால்/உறவினர்களால் முன்வைக்கப்படுபவையே. இவை மட்டுமே ஒருவரை தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுமா என்று ஆய்ந்து பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.

இது இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இது நம்முடைய நாட்டை மட்டுமே ஆட்டிப்படைக்கும் விசித்திரமும் இல்லை. 

மனித குலம் தோன்றிய நாள் முதலே இருந்துவரும் பழக்கம்தான் இது. 

பண்டைக் காலங்களில் கிரேக்க நாட்டில் தற்கொலை செய்துக்கொள்பவரை புதைக்க இடம் வழங்க மறுக்கப்படுமாம். 

அத்தகையோரை ஊருக்கு வெளியே அனாதைப் பிணமாகத்தான் புதைப்பார்களாம். மற்ற கல்லறைகளில் வைக்கப்படுவதைப் போன்ற அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லையாம். 

இங்கிலாந்து நாட்டில் பதினேழாம் நூற்றாண்டில் தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று குப்பைகள் கொட்டும் இடத்தில் வீசி எறிந்துவிடுவார்களாம். 

ஆக, தற்கொலை ஒரு இழுக்கான செயலாகவே அன்று முதல் கருதப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. 

தற்கொலை செய்துக்கொண்டு மரிப்பவர்களுக்கு அவர்களுடைய துன்பங்களிலிருந்து, அவர்களுடைய கவலைகளிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் விடுதலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களுடைய அந்த முடிவுக்கு காரணகர்த்தாவாக சமுதாயத்தால் கற்பிக்கப்படும் அவர்களுடைய சொந்த பந்தங்கள் படும் அவமானத்திற்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அதுவே ஆரம்பமாகிவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் படும் அவஸ்தையை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். 

தற்கொலை யார், ஏன் செய்துக்கொள்கிறார்கள்?

சமீபத்திய ஆய்வுகளின்படி தற்கொலை செய்துக்கொள்பவர்களில் மிக அதிக அளவிலான விழுக்காடு இளம் வயதினராம். 

அதிலும் பெண்கள்தான் அதிக அளவில் இத்தகைய முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்களாம். 

இத்தகையோர் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள்?

இதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

இவற்றுள் முதலாவதாக கருதப்படுவது மன அழுத்தம் (Depression).

இன்றைய அதிவேக உலகில் மன அழுத்தம் இல்லாதவர்கள் இருக்க முடியுமா என்ன?

மன அழுத்தம் யாருக்குத்தான் இல்லை!

முன்பெல்லாம் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும்தான் மன அழுத்தம் ஏற்படும் என்பார்கள். 

பொருளாதார பிரச்சினையில் குறிப்பாக மிக அதிக அளவிலான கடன் தொல்லை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. திருமண வாழ்க்கையில் பிரச்சினை. வேலையை இழந்துவிடுவதால் ஏற்படும் வேதனை, அவமானம். இவைகள்தான் ஒருவரின் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்பட்டு வந்தன. 

ஆனால் இந்த வட்டத்திற்குள் தற்கொலை விழுக்காடு மிக அதிக அளவில் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் 15வயதிலிருந்து 30 வயதுக்குள்ளவர்கள் வருவதில்லையே?

உண்மைதான். 

தற்கொலை என்கிற திரும்பி வர முடியாத எல்லைக்கு (point of no return) இட்டுச் செல்ல மிக முக்கியமான காரணமாக கூறப்பட்டு வரும் மன அழுத்தத்திற்கு இதுவரை மிக மிக அற்பமான காரணங்களாக (silly reasons) கருதப்பட்டு வரும் பல நிகழ்வுகள்தான் இன்றைய இளைஞர்களுடைய தற்கொலைக்கு பிரதான காரணமாக பட்டியலிடப்படுகின்றன. 

1. பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள் முன்பு ஏற்படும் அவமானம்.
2. சக மாணவர்களால் ஏற்படும் அவமானங்கள் (ragging)
3. தேர்வுகளில் ஏற்படும் தோல்விகள்,
4. ஒருதலைக் காதலில் தோல்வி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளிடம் அனுபவித்த தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி வெளிவந்திருந்ததே. அதில் தன்னை குளிக்க விடாமல் சீனியர் மாணவிகள் சிலர் தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தாராம்!

இக்கால இளைஞர்களுக்கு எதனால் எல்லாம் மன உளைச்சல் ஏற்படுகிறது பாருங்கள்! 

நான் தஞ்சையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு இயங்கிக்கொண்டிருந்த தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் அற்பமான காரணங்களைக் காட்டி நிராகரித்து வந்ததுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது! அதே போன்று நான் மும்பையில் பணியாற்றியபோது மும்பை பாபா அணு ஆராய்ச்சி கழகத்திலும் (Baba Atomic Reserce Centre- BARC) இத்தகைய தற்கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதை கேட்டிருக்கிறேன். பேராசிரியர்கள்-ஆராய்ச்சி மாணவர்களுக்கிடையிலுள்ள தலைமுறை இடைவெளிதான் (Generation Gap)இதற்கு முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது. அது இன்றும் விடை காண முடியாத பிரச்சினையாகத்தான் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினரின் தற்கொலைக்கு மேற் கூறிய நான்கு காரணங்களுக்கு அடுத்ததாக கருதப்படுவது போதைப் பழக்கம். இந்த பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் இழந்துவிடும் இளைஞர்கள் அதிலிருந்து மீள முடியாமல் இறுதியில் அதற்கு தற்கொலை ஒன்றுதான்  தீர்வு என்கிற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். 

ஆக ஒருவருடைய தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது மன அழுத்தம்தான் என்பது தெளிவாகிறது. 

அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

இதற்கு மன அழுத்தத்திற்கு உள்ளானவர் மட்டுமே முயற்சி செய்தால் போதாது. இதில் அவரைச் சுற்றியுள்ள குறிப்பாக அவருடைய நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை விட மிக முக்கியமானவர்களாகக் கருதப்படும் நண்பர்கள் ஆகியோரின்  பங்கு மிக, மிக முக்கியமானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

ஆனால் இத்தகைய மன அழுத்தத்திற்கு தங்களுடைய குழந்தைகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை பல பெற்றோர்கள் கடைசி நிமிடம் வரையிலும் அறிந்துக்கொள்வதே இல்லை. பலருக்கு அது பாதிக்கப்பட்டவர்களுடைய தற்கொலைக்குப் பிறகே தெரிய வருகிறது என்பதுதான் வேதனை. இதற்கு குறுகி வரும் குடும்பங்களே முக்கிய காரணம். கணவன், மனைவி ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என சுருங்கிவிட்ட குடும்பங்களில் துயரங்களை பகிர்ந்துக்கொள்ள யாருக்கு  நேரம் இருக்கிறது? 'இவனுக்காகத்தானங்க நாங்க ரெண்டு பேரும் நாள் பூரா உழைக்கிறோம்? இதை ஏன் இவன் புரிஞ்சிக்காம போய்ட்டான்?' என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள்தான் இப்போது அதிகம். பணம் மட்டுமே தங்களுடைய குழந்தைகளின் துயரங்களை போக்கிவிடும் என்று நம்பும் பெற்றோர் அது மட்டும் போதுமா என்று பெற்றோரின் அன்புக்காக, அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்காக ஏங்கும் குழந்தைகள்..... இது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சினையாக உருவெடுப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துக்கொண்டுள்ளோம்?

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அனைவருமே தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள் என்பது பொருளல்ல. ஆனால் அது முளையிலேயே கண்டறியப்பட்டு கிள்ளியெறியப்படாவிட்டால் அது தற்கொலையில் சென்று முடியுமாம். 

எதற்கெடுத்தாலும் தற்கொலைக்கு துணிபவர்கள் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் இதுதான் காரணம் என்று கண்டுக்கொள்வது அத்தனை எளிதல்ல என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆனால் நம்மில் பலரும் நமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என்று மிரட்டும்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 'இவர் எப்பவுமே இப்படித்தாங்க' என்று மனைவியே அலட்சியப்படுத்துவதை பார்க்கலாம். பெரும்பாலான சமயங்களில் புலி வருது, புலி வருது என்று கூறுவார்களே அத்தகைய மிரட்டலைப் போன்றதுதான் இதுவும் என்று பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு அதை நிஜமாகும்போதும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாக கருதிக்கொள்வது சகஜமாகிவிட்டது. 

தற்கொலை செய்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்களுடைய எண்ணத்தை தனக்கு நெருங்கியவர்களிடம் கோடிட்டு காட்டாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அவற்றை சரியாக நேரத்தில் இனம்கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகிறோம். குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். அதுபோல் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

ஆகவே, விழிப்பாயிருப்போம். மன அழுத்தம் எந்த ரூபத்திலும் வெளிப்படலாம். அது நமக்கு நெருங்கியவர்களிடம் காணப்படும்போது அலட்சியப்படுத்தாமல் அவர்களுடைய குறைகளைக் கேட்போம். அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க நம்மால் ஆனவற்றை செய்வோம்.  

************



  

09 ஜூன் 2014

நினைவுகள் சுகமானவை!

கடந்த கால நிகழ்வுகளை அசைபோடுவதே ஒரு சுகமான விஷயம்தான். அதுவே சுகமான் நிகழ்வுகள் என்றால் கேட்கவே வேண்டாம். 

மனித மூளை சுகமான நிகழ்வுகளை மட்டுமே நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்ளுமாம்! உதாரணத்திற்கு ஒரு பயணம் செய்துவிட்டு திரும்பியதும் அந்த பயணத்தில் நாம் பார்த்து ரசித்த இடங்களும் வழியில் நாம் சந்தித்து உரையாடிய நண்பர்களும்தான் நம் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்குமாம். பயணத்தில் ரயிலுக்காகவும், விமானத்திற்காகவும் பேருந்துகளுக்கும் காத்திருந்து வீணடிக்க நேர்ந்த நேரம், மிக சுமாரான உணவு, வசதியில்லாத தங்குமிடம் என்ற அசவுகரியங்கள் அனைத்துமே நாம் அனுபவித்த சுகமான நினைவுகளால் அடிபட்டுப் போயிவிடுமாம். 

இது இயற்கையாக நமக்கு அமைந்துவிட்ட குணநலன்கள். ஆனால் இதற்கு விதிவிலக்கும் இல்லாமல் இல்லை. 

தங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சோகமான நினைவுகளையே நினைவில் வைத்திருந்து அதிலேயே உழன்றுக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

மிகச் சிறிய பின்னடைவுகளையும் கூட ஏதோ தங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக கருதுவார்கள். 'எனக்கு மட்டும் ஏங்க எப்ப பார்த்தாலும் இப்படியே நடக்குது? இப்படித்தாங்க பத்து வருசத்துக்கு முன்னால.....' என்று என்றோ நடந்த சோகக்கதையை ஆரம்பித்துவிடுவார்கள். 'மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சிட்டார்யா....' என்றவாறே அவருடைய சோகத்தை வேறு வழியின்றி கேட்க நேர்ந்த சோகத்தில் இருப்பார் அவருடைய நண்பர். 

என்னுடைய நண்பர் ஒருவர் அலுவலகத்தில் வேலையே இல்லாத நாட்களிலும் கூட இரவு ஒன்பது மணிக்கு முன்னால் கிளம்பமாட்டார். அப்படியே என்றாவது ஒருநாள் அலுவலகமே பூட்டப்பட்டாலும் நேரே வீட்டிற்குச் செல்லாமல் நண்பர்களை சந்திக்க சென்றுவிட்டுத்தான் வீடு திரும்புவார். இதை பல முறை கவனித்து வந்த நான் ஒருநாள் பொறுக்க மாட்டாமல் அவரிடம் 'எதுக்கு சார் பத்து மணிக்கு மேலதான் வீட்டுக்குதிரும்பணும்னு ஏதாச்சும் வேண்டுதலா?' என்று கேட்டேன்.

'அது ஒன்னுமில்ல சார். சீக்கிரமா போனா என் மனைவி எதையாவது சொல்லி புலம்பிக்கிட்டே இருப்பா, அதான்....' என்று இழுத்தார். 

எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு பொருளாதார குறைவு ஏதும் இருக்கவில்லை. ஒரேயொரு மகள். அவளும் பார்க்கவும் அழகு படிப்பிலும் படுசுட்டி. அவருடைய மனைவியும் நன்கு படித்தவர். வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அப்படியிருக்க அவருடைய மனைவி எப்போதும் புலம்புவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைத்தேன். 

'நாங்க இப்ப வசதியா இருக்கோம்கறது உண்மைதான் சார். ஆனா எங்களுக்கு மேரேஜ் ஆன புதுசுல கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கோம். என் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது நிறைய இருந்திச்சி. அதையே இப்பவும் சொல்லி சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கறதுதான் என் மனைவியோட பழக்கம். இப்போ நல்லாத்தான இருக்கோம்னு சொன்னா அப்படியெல்லாம் நீங்க பணத்த வேஸ்ட் பண்ணாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கலாமேன்னு சொல்றாங்க. அதச் சொல்லி, சொல்லியே இப்ப இருக்கற சந்தோஷத்தையும் கெடுத்திக்கிறியேன்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அதான் நமக்கு எதுக்கு டென்ஷன்னு அவங்க தூங்குனதுக்கப்புறம் போவேன்....'

ஒரு பெரிய இலாக்காவின் தலைவர் பொறுப்பில் இருந்தவருடைய நிலமை அப்படி!

இத்தகையோர் நம் குடும்பத்திலோ அல்லது நண்பர், உறவினர் வட்டத்திலோ இருக்கக் கூடும். கலகலப்பான இடத்தில் இத்தகையோர் ஒருவர் இருந்தால் போதும் அந்த இடத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சி நொடிப் பொழுதில் பறந்துவிடும். 

கடந்து போனவைகளைப் பற்றி வருத்தப்படுவதில் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதை இத்தகையோர் உணர்வதே இல்லை. ஆனால் கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் அலசிப் பார்ப்பதால் அவை சரியாகிப் போய்விடுவதில்லை என்பதை இவர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் அதிலேயே உழன்று தங்களையும் வருத்திக்கொண்டு தங்களைச் சுற்றியுள்ளோரையும் வருத்துவார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக கூறிவிட முடியாது. துவக்கக் காலத்தில் சிறிதாக தோன்றும் இந்த குணநலன் நாளடைவில் பெரிதாகி அவர்களுடைய மனநலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை அவர்களும் அவர்களுடன் இருப்பவர்களும் உணர்வதில்லை. அல்லது அவர்கள் உணரும் சமயத்தில் அது எளிதில் தீர்வு காண முடியாத அளவுக்கு தீவிரமடைந்திருக்கும். 

இவ்வாறு கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களில் உழல்வோரில் இரண்டு வகை உண்டாம்!

1. கடந்தகாலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவோர்.
2. பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து வருந்துவோர்

இவர்களுள் முதல் ரகத்தைச் சார்ந்தவர்களாவது பரவாயில்லை. கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவது அவற்றை மீண்டும் செய்யாமலிருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனையில் சென்றடைந்து  அத்தகைய தவறுகளை தவிர்க்கும் முயற்சியில இறங்க வாய்ப்புள்ளது. 

ஆனால் பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து நினைத்து வருந்துவோரால் அதிலிருந்து மீளவே முடியாதாம். நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றி நினைத்து நினைத்து மருகுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை. ஆகவே அந்த நினைவுச் சக்கரத்திலிருந்து இவர்களால் மீண்டு வர முடிவதில்லை, அதாவது அவரை சுற்றியுள்ளவர்களுடைய உதவி இல்லாமல்..

இத்தகைய கவலைகளிலிருந்து விடுபட நமக்கு 'மிருக குணம்' வேண்டும் என்கின்றனர் சில மன நல ஆய்வாளர்கள். 

அது என்ன மிருக குணம்?

நம்மைச் சுற்றி வாழும் வீட்டு விலங்குகளான நாய், பூனை, ஆடு, மாடு, கோழி எதுவுமே கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவை நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவோ அல்லது நடக்கப் போவது என்ன என்று சிந்திக்கவோ அவற்றிற்கு தெரிவதில்லை. 

ஆகவேதான் 'Live for the present' என்கிறார்கள். நேற்று நடந்தவைகளைப் பற்றியும் நாளைக்கு நடக்கவிருப்பதைப் பற்றியும் கவலைப்பட்டு இன்றைய தினத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? நேற்றைய தோல்விகளைப் பற்றியே சிந்தித்து இன்றைய தினத்தை வீணடித்துவிட்டால் நாளையும் இதே கவலைதான் நம்மை ஆட்டிப் படைக்கும். 

இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும். சோகமான சிந்தனைகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதால் சோகம் குறையப் போவதில்லை. ஆனால் சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். 

ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன? 


********* 

03 ஜூன் 2014

ரசிகனும் விமர்சகனும்


ரசனை உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் எதுவுமே கசக்காது என்பார்கள். வாழ்க்கையில் வெற்றிகள் கிடைத்ததும் வானளாவ மகிழ்வதும் துயரங்கள் வந்ததும் துவண்டுவிடுவதும் ரசனை உணர்வு உள்ளவர்களிடம் காண்பது அரிது. அரை கப் பானத்தை பார்த்ததும் இவ்வளவுதானா என்ற  நிராசையும் இவ்வளவாவது கிடைத்ததே என்று திருப்தியும் ஏற்படுவது இந்த ரசனை குணத்தால்தான். எந்த விஷயத்திலும் செயலிலும் உள்ள நிறைகளை மட்டுமே காண்பவர்களுக்கு எதையும் ரசிக்கும் குணம் அல்லது பண்பு அதிகம் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். எதிலுமே குறையை மட்டுமே காண்பவர்களுக்கு இது சற்று குறைவாக உள்ளது என்றும் கூறலாம். 

விளையாட்டு மற்றும் திரைப்படங்களை ரசிகனும் விமர்சகனும் ஒரே கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. ஒரு விளையாட்டு வீரராகட்டும் அல்லது ஒரு திரையுலக கதாநாயகனாகட்டும் அவர்களுடைய செயல்பாடுகளில் நிறையை மட்டுமே காண்பவர்கள் அவர்களுடைய ரசிகர்கள். ஒருவரை ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்களுடைய செயல்பாடுகளில் குறைகள் இருந்தாலும் அவற்றை மறந்து நிறைகளை மட்டுமே கண்டு போற்றுவார்கள். ஆனால் விமர்சகர்கள் அப்படியில்லை. இவர்களிலும் கூட இருதரப்பான விமர்சகர்கள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. நல்ல ஆக்கபூர்வமான விமர்சகர்கள் (constructive critics) குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பதுடன் நிறைகளையும் எடுத்துக்காட்டி பாராட்ட தயங்கமாட்டார்கள். ஆனால் குறை காண்பதற்கெனவே பிறவி எடுப்பதுபோல் விமர்சிப்பவர்கள் நிறைகளை மூடி மறைப்பதில் சூரர்கள். இவர்களை destructive critics எனலாம். இத்தகையோரின் விமர்சனத்திற்கு பின்னால் ஒரு வகை காழ்ப்புணர்வு தென்படுவதைக் காணலாம். 

இவர்களுடைய பின்புலத்தை சற்று ஆராய்ந்தால் இவர்களுக்கு தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனப்போக்கு இருப்பதை உணர்ந்துக்கொள்ள முடியும். இந்த பூமியில் இவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் எல்லாவற்றை பற்றியும் விமர்சிப்பார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் துறையை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் பற்றி எழுது தங்களுடைய மேதாவிலாசத்தை காட்டிக்கொள்வதில் முனைப்பாய் இருப்பார்கள். கண்ணில் தெரிபவர்களைப் பற்றியெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் இவர்களுடைய விமர்சனத்தை யாராவது எதிர்த்துவிட்டால் போதும் பொங்கியெழுந்துவிடுவார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்களுடைய அணி ஜெயித்து அரையிறுதிக்குள் நுழைந்ததும்  அந்த அணி ஏதோ இந்திரலோகத்தையே வென்றுவிட்டதுபோல் பாராட்டி மகிழ்ந்ததையும் ஆனால் அதே அணி இறுதியாட்டத்திற்குள் நுழைய முடியாமல் தோற்றதும் அதற்கு அந்த அணியின் தலைவரை (captain) மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததையும் பதிவுலகிலும், முகநூல், மற்றும் ட்விட்டரில் கடந்த ஒரு வார காலமாகவே காண முடிகிறது. இத்தகைய கீழ்த்தரமான விமர்சனத்தில் இறங்கியவர்களுள் ஒருவராவது இந்த விளையாட்டை விளையாடியிருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வந்திருக்கும். ஒருநாள், இருபதுக்கு இருபது போட்டிகளில் உலக கோப்பை வெற்றி , சாம்பியன்ஸ் கோப்பையில் வெற்றி என பல வெற்றிகளை குவித்த இந்திய அணியையும் ஏழு முறை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை இறுதிப் போட்டிக்கும் அவற்றில் இரண்டு முறை கோப்பையையும் வெல்ல வைத்த சென்னை அணியையும் தலைமையேற்று நடத்திய தோனியை ஒன்றுக்கும் பயனற்றவர் (useless) என்று விமர்சித்தவண்ணம் இருந்தார் ஒரு மெத்த படித்த மேதாவி. அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு அவர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் எழுதுவதை யாராவது எதிர்த்து எழுதிவிட்டால் போதும் இவர் மட்டுமல்லாமல் இவருடைய அடிவருடிகளும் ஒருசேர இணைந்து அவரை தாக்கி உருக்குலைத்துவிடுவார்கள். 

இதுபோலவே பதிவுலகிலும் திரைப்படங்களை விமர்சிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் தமிழ்வாணன் என்றொருவர் இருந்தார். அவர் விமர்சிக்காத திரைப்படமே இல்லை எனலாம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அவரே ஒரு படத்தை எடுத்தார். அதுதான் அவருக்கு முதலும் இறுதியுமான படம். ஒரு வாரம் கூட ஓடாமல் சுருண்ட படம் அது. அத்தனை கொடுமையாக எடுத்திருந்தார். 

இதுபோல்தான் பல விமர்சகர்களும். இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளிவரும் விமர்சனங்களை நம்பி திரைப்படங்களுக்கு செல்ல முடிவதில்லை. ஏனெனில் எந்த விமர்சனமும் பாரபட்சமற்றதாக இருப்பதில்லை. விமர்சிப்பவரின் மனம் கவர்ந்த இயக்குனரோ அல்லது நாயகனோ நடித்திருந்தால் அதை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுவார்கள் இல்லையென்றால் கிழி கிழி என்று கிழித்தெறிந்திருப்பார்கள். தயாரிப்பாளருடைய  sponsorsed விமர்சகர்களும் உண்டு. 

விமர்சிக்கப்படுபவரைக் காட்டிலும் திறம்பட செயல்பட முடிபவர்தான் விமர்சனத்தில் இறங்க வேண்டும் என்பதில்லை. யாருக்கும் எவரையும் விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் எந்த உரிமையும் (right) அதற்கு இணையான பொறுப்பையும் (responsibility) கொண்டுள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துவிடுகிறோம். பொறுப்பற்ற விமர்சனம் யாருக்கும் எவ்வித பயனையும் அளிப்பதில்லை. மாறாக மனக்கசப்பையே விளைவிக்கிறது. 

ஆகவே விமர்சியுங்கள். ஆனால் விமர்சனம் என்பது குறையை மட்டுமே சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிடக் கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். விமர்சகர்கள் தங்களுடைய மேதாவிலாசத்தை காட்டும் எண்ணத்துடன் செயல்படுவதைத் தவிர்க்கவேன்டும்.  நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

********