கணினி அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஆகஸ்ட் 2013

என் முதல் பதிவு அனுபவங்கள் (தொடர் பதிவு)

முதலில் என்னை இந்த தொடரில் என்னுடைய பழைய நினைவுகளை அசைபோட அழைத்த பதிவுலக நண்பர் ராஜி அவர்களுக்கு நன்றி.

2005ல் பதிவுலகில் நுழைந்தேன் என்றாலும் அதிலிருந்து சுமார் இரண்டாண்டு காலம் விலகியிருந்துவிட்டு மீண்டும் நுழைந்திருப்பதால் இதை 'புதிதாய் மீண்டும் ஒரு பிறப்பு' என்று கூறலாம்.

இந்த மறுபிறப்பில் இன்று பிரபலமானவர் என கருதப்படும் ஒரு பதிவரால் ஒரு தொடர்பதிவில் எழுத அழைக்கப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

2005ல் பதிவுலகிற்குள் நுழைந்தது ஒரு விபத்து என்றுதான் கூற வேண்டும்.

2003ல் எங்களுடைய வங்கியில் துவக்கப்பட்ட ஒரு கணினி ப்ராஜக்ட் (இதற்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை) வெற்றிகரமாக முடிக்கப்பட்டு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று திட்டமிட துவங்கியிருந்த காலம் அது. நான் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தது எங்களுடைய வங்கியின் கணினி இலாக்கா என்பதால் வங்கிக் கிளைகளில் உள்ளது போன்று தினசரி அலுவல்கள் என்று ஏதும் இருக்காது.

ஆகவே ஒரு ப்ராஜக்ட் முடிந்து அடுத்த ப்ராஜக்டை துவக்கும்வரையிலுள்ள இடைபட்ட காலத்தில் காலையில் அலுவலகத்திற்கு வந்தால் அங்கிருந்து செல்லும்வரையிலும் அடுத்து செய்யவிருக்கும் ப்ராஜக்டை பற்றிய அலசல் கூட்டங்களே நடந்துக்கொண்டிருக்கும். அத்தகைய கூட்டங்களில் எனக்கு கீழ் பணியாற்றிய பொறியாளர்கள்தான் அதிகம் பேசுவார்கள். அவர்கள் கூறுவதில் பெரும்பாலானவை எனக்கு புரியவே புரியாது. ஏனெனில் நான் ஒரு காமர்ஸ் பட்டதாரி. கொஞ்சம், கொஞ்சம் கணினி தெரியும். Database என்றால் என்ன என்று தெரியும். முந்தைய ப்ராஜக்ட்டை வழிநின்று நடத்தியிருந்ததால் ரவுட்டர், ஃபையர்வால், சர்வர், நெட்வொர்க்கிங் என்றால் என்ன என்பதையும் தெரிந்து வைத்திருந்தேன். அதுபோலவே ஆரக்கிளில் (Oracle) query எழுதவும் சுமாராக தெரிந்து வைத்திருந்தேன்.

ஆகவே என்னுடைய ஜுனியர்கள் சீரியசாக திட்டத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும்போது நான் என்னுடைய லேப்டாப்பில் இணையத்தை மேய்ந்துக்கொண்டிருப்பது வழக்கம். நாம இங்க மூச்ச புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டிருக்கோம் இந்த மனுஷன் லேப்டாப்பையே பாத்துக்கிட்டிருக்காரேன்னு அவங்க நினைக்கறது அவங்க முகபாவனையிலிருந்தே தெரிஞ்சிக்க முடிஞ்சாலும் அத கண்டுக்காம என் கர்மத்திலேயே கண்ணாயிருப்பேன். அவங்க எல்லாரும் என் மேசைக்கு முன்னாலருக்கற சேர்ல ஒக்காந்திருந்ததால நான் என்ன செஞ்சிக்கிட்டிருக்கேங்கறது அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைன்னாலும் இவருக்கு இதவிட்டா வேற என்ன வேலை இருக்க முடியும்னு தெரியாமயா இருக்கும்? இருந்தாலும் டிப்பார்ட்மென்ட் ஹெட்டாச்சே! என்னத்தையாவது செஞ்சிக்கிட்டு போவட்டும்னு அவங்க பாட்டுக்கு டிஸ்கஸ் பண்ணுவாங்க. மீட்டிங் முடியற நேரத்துல 'எல்லாத்தையும் மினிட் பண்ணி ஃபர்ஸ்ட் டிராஃப்ட் என்கிட்ட அனுப்பிச்சிருங்கப்பா.. நா பாத்ததுக்கப்புறம் ஃபைனலைஸ் பண்ணிக்கலாம்'னு சொல்லிருவேன். அத பார்த்தாலே அன்னைக்கி நடந்த மீட்டிங்ல பசங்க என்ன டிஸ்கஸ் பண்ணாங்கன்னு தெரிஞ்சிக்கலாமே... அதான்.

அப்படி இணையத்த மேஞ்சிக்கிட்டிருந்தப்போ ஆக்சிடென்டா நா போய் விழுந்த தளம்தான் தமிழ்மணம். அட! இது நல்லாருக்கேன்னு நினைச்சேன். அப்புறம் என்ன, அன்னையிலருந்து டெய்லி ஆஃபீஸ் வர்றதுக்கு ஒரு எக்ஸ்யூஸ் கிடைச்சிது. காலையில வந்ததும் என்னத்த செய்யிறதுன்னு தெரியாம இருந்தவனுக்கு ஒரு நல்ல டைம்பாஸ் கிடைச்சிதுன்னு நினைச்சி தெனமும் ஒரு ரெண்டு மணி நேரமாவது அன்னைக்கி பாப்புலரா இருந்த பலருடைய பதிவர்களோட பதிவுகள படிப்பேன். அப்ப இருந்தவங்கள்ல நெறைய பேர் இப்ப ஆக்டிவா இல்லன்னு நினைக்கிறேன், அதாவது இணையத்துல. ரெண்டே ரெண்டு பேர தவிர: ஒன்னு அப்பப் போலவே இப்பவும் வாரத்துல ரெண்டு பதிவாவது போடற துளசி. அப்புறம் கேள்விங்க கேக்கறதுல எக்ஸ்பர்ட்டான தருமி.

இப்படி படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் நமக்கும் எழுதலாமேங்கற ஆசை வந்துச்சி. தமிழ்மணத்துல புது ப்ளாக் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு நல்லாவே எழுதி வச்சிருந்தாங்க. ஏற்கனவே கொஞ்சம் கணினி ஞானம்! இருந்ததால ஈசியா செய்ய முடிஞ்சது. அதுக்கப்புறம் என்ன பேர் வைக்கலாம்னு யோசனை. அதுக்கே ரெண்டு நாளாச்சிது. என்னென்னவோ யோசிச்சேன். ஆனா 'என்னுலகம்'னு ஏன் வச்சேங்கறது மறந்துபோயிருச்சி. இப்ப அது தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க? எப்படியோ வச்சாச்சி.

அப்புறம், எப்படி தமிழ்ல எழுதறதுங்கற கன்ஃப்யூஷன். அப்போ யூனிகோர்ட்னா என்னான்னே தெரியாது. அப்புறம் 'உன் கோடு, என் கோடு, யூனி கோடு'ங்கற தலைப்புல ஒரு ஆர்ட்டிகிள படிச்சேன். நாம எந்த எழுத்துருவ யூஸ் பண்ணி எழுதுனாலும் அத யூனிகோட் கன்வர்ட்டர்ல மாத்திக்கலாம்னு எங்கயோ படிச்சேன். அத டவுன்லோட் பண்ணி வேர்ட்ல எங்கிட்ட ஏற்கனவே இருந்த எழுத்துருவுல அடிச்சி இந்த கன்வர்ட்டர்லருக்கற மேல் பொட்டியில அடிச்சி மாத்தி போஸ்ட் பண்ணேன். அப்புறம் அப்போ பிரபலமாருந்த டோண்டு ராகவன் நேரா நோட்புக்ல யூனிகோட்லயே அடிச்சிரலாம் சார்னு சொல்லிக்கொடுத்தார். அப்படித்தான் அவர் கூட பழக்கமாச்சி. அவர் அவரோட நண்பர் ஜெயரமன அறிமுகப்படுத்தினார். அப்புறம் மா.சிவக்குமார், தருமி, துளசி, ஜி.ராகவன், தமிழினி, சிங்கை ஜோ, கோவி. கண்ணன் அப்படின்னு நிறைய நண்பர்கள். அப்புறம் பாலபாரதி அவருடைய நண்பர்கள்னு வட்டம் விரிஞ்சிக்கிட்டே போச்சி.

ஆரம்பத்துல எனக்கு புடிச்சித மட்டுந்தான் எழுதிக்கிட்டிருந்தேன். ஓரிரண்டு நண்பர்களைத் தவிர வேறெந்த பின்னூட்டமும் வராது. அப்புறம்தான் மத்த பதிவர்களுக்கும் புடிச்சத எழுதணும், அப்பத்தான் நிறைய பேர நம்ம பக்கம் இழுக்க முடியும்னு ராகவன் சொல்லிக்குடுத்தார். சரி நம்மோட வேலையப் பத்தி எழுதலாம்னு நினைச்சி துவங்குன சீரியல்தான் 'திரும்பிப் பார்க்கிறேன்.' ஏறக்குறைய மூனு வருசம் தொய்வில்லாம போச்சி. நிறைய வாசகர்களையும் பின்னூட்டங்களையும் எனக்கு தந்து... ஒரு காலத்துல 'என்னுலகம் ஜோசப்' பேர் மாறி 'திரும்பிப்பார்க்கிறேன் ஜோசப்'னு ஆகற அளவுக்கு அந்த சீரியல் பாப்புலராச்சி.

Rest is history.

இதான் நம்மளோட பதிவுலக என்ட்றி அனுபவங்கள்.

இதான் என்னோட முதல் பதிவு... இதுல ஒரு ஆச்சரியம். நான் 2005ல் போட்ட முதல் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம் நண்பர் பாலராஜன் கீதா அவர்களிடமிருந்து - 2007ல்!!!!!!!!!!! அவ்வளவு பிரபலம் நான், அப்போது!!


இது தொடர் பதிவுன்னாலும் யார், யார யார், யார் இதுவரைக்கும் அழைச்சிருக்காங்கன்னு தெரியாததால மறுபடியும் என்னோட ஆரம்பகால பதிவர் நண்பர்களான தருமி மற்றும் துளசியையே இந்த தொடர் பதிவுலயும் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு அழைக்கிறேன். இருவரும் சிரமத்திற்கு மன்னிக்கவும்!





08 மே 2008

வங்கிகளில் கணினி - புதிய முயற்சி

கடந்த பதினெட்டு மாத காலமாக எங்களுடைய வங்கி மற்றும் சென்னையைச் சார்ந்த லேசர் சாஃப்ட் (Laser Soft Infotech Chennai) மென்பொருள் நிறுவனத்தைச் சார்ந்த மென்பொருள் வல்லுனர் குழுவினரின் இடைவிடா முயற்சியில் உருவாக்கப்பட்ட மென்பொருள் (Centralised Banking Solution) கடந்த வாரம் எங்களுடைய வங்கியின் இரு சென்னைக் கிளைகளில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்து Live Run துவங்கியுள்ளது.

இது இந்திய வங்கி சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்றாலும் மிகையாகாது என்றே கருதுகிறேன்.

ஏனெனில் இந்த மென்பொருள் பல ‘முதல்’ சாதனைகளை படைத்துள்ளது.

இதுதான்

1. இந்தியாவின் முதல் முழுமையான ஜாவா மொழியில் தயாரிக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனையில் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்.
2. முதன் முறையாக ஒரு வங்கியும் ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்பட்ட மென்பொருள்.
3. முதன் முறையாக ஒரு வங்கிக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளையும் (Transaction Modules) உள்ளடக்கிய மென்பொருள் (Infosys, Iflex, TCS) போன்ற நிறுவனங்களுடைய மென்பொருள் பல வெளியார் நிறுவனங்களின் மென்பொருளுடன் Interface செய்யப்பட்டுள்ளது)

Oracle நிறுவனத்தின் உதவியுடன் நாட்டிலேயே முதன் முறையாக Oracle 10g Real Application Cluster (RAC) வெற்றிகரமாக நிறுவப்பட்டதும் ஒரு சாதனை எனலாம்.

இனி எங்களுடைய வங்கியின் மீதமுள்ள 350 கிளைகளிலும் இதை வெற்றிகரமாக நிறுவும் பணி துவங்கியுள்ளது.

ஒரு மென்பொருளை தயாரிப்பதை விடவும் பன்மடங்கு சிரமமானது அதை அனைத்து கிளைகளிலும் கொண்டு செல்வது. கிளைகளிலுள்ள ஒவ்வொரு பணியாளரையும் புதிய மென்பொருளை பயன்படுத்த பயிற்சிவிப்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

பல இடைஞ்சல்களையெல்லாம் சந்தித்து வெளிவந்துள்ள இந்த மென்பொருள் இனி வரும் காலங்களில் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதுதான் இன்றைய ஆவல்.

மென்பொருளை வடிவமைத்து, தயாரித்து சோதனை செய்த காலங்களில் அனுபவித்த தடங்கல்கள், தோல்விகள், வெற்றிகள் எல்லாவற்றையும் முழுமையாக எழுத வேண்டும் என்று ஆவல்தான். ஆனால் அதற்கென நேரம் ஒதுக்குவது என்பது அடுத்த ஆறுமாத காலத்திற்கு இயலாதென்றே கருதுகிறேன்.

ஆனாலும் கடந்த சில மாதங்களாக இருந்த வேலைப்பளு சற்றே குறையும் என்று கருதுகிறேன்.

ஆகவே இப்போதுள்ளதுபோல் அல்லாமல் வாரம் இரு முறையாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கும் விலைவாசி உயர்வு, இதை கையாள ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த முயற்சிகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆவல்..

அடுத்த வாரம் திங்களன்று துவங்கி நான்கைந்து பாகங்களாக எழுதுகிறேன்.

******

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பி.கு: சமீப காலமாக குரலை உயர்த்தி சகட்டு மேனிக்கு அனைவரையும் குறை கூறி வரும் பா.ம.க. தலைவர் மருத்துவரே ஒரு பெரிய தலைவலியா என்ற ஒரு கருத்து கணிப்பை துவக்கியுள்ளேன். இதுவரை ‘ஆம்’ என்ற வாக்குகளே அதிகம் வந்துள்ளன.

உங்கள் வாக்கை தவறாமல் அளியுங்கள்.

28 நவம்பர் 2007

கணினி அனுபவங்கள் 4

வங்கிகளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த Legacy மென்பொருளில் இன்றைய மென்பொருளில் உள்ள GUI (Graphic User Interface) இல்லாததும் ஒரு பெருங்குறையாகவே கருதப்பட்டது.

வண்ணப் பெட்டியிலும் (Colour Monitor) கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்ததுடன் திரை முழுவதும் வலம் (navigate) வர முழுக்க, முழுக்க Keyboardயே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதனால் திரையில் நமக்கு தேவையான fieldஐ தெரிவு செய்து விவரங்களை (Data) பதிவு செய்ய
'நுழை' (Enter) அல்லது 'Tab' பொத்தானையோ பயன்படுத்த வேண்டியிருந்தது. அது எத்தனை சிரமம் என்பது அந்த மென்பொருளை தினமும் ஏழு, எட்டு மணி நேரம் பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே தெரியும். உதாரணத்திற்கு நாம் திரையில் கீழ் வரிசையில் அமைந்திருக்கும் (பதினெட்டாம்) fieldல் ஒரு விவரத்தை பதிவு செய்ய பதினேழு முறை Enter பொத்தானை அழுத்த வேண்டியிருக்கும். இதனாலேயே கிளையில் இருந்த பல குமாஸ்தாக்களும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை முழுமையாக பதிவு செய்வதை தவிர்த்தனர். இதன் விளைவு வாடிக்கையாளர்களுடைய முழுமையான விவரங்கள்
அதற்கென வடிவமைக்கப்பட்டிருந்த Mastersல் இருந்ததில்லை. ஆகவே வங்கி அலுவல்களில் பெரும்பாலான விழுக்காடு கணினிமயமாக்கப்பட்டும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களை (Registers) வைத்திருக்க வேண்டியிருந்தது. இது ஒரு பெரிய
குறைபாடாக இருந்தது.

இன்னொரு குறை விவரங்களை பதிவு செய்யும் fieldகளில் validation இல்லாதது. இதன் முக்கியத்துவத்தத மென்பொருளை வடிவமைக்கும் கணினியாளர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. உதாரணத்திற்கு சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணியாளர் (Employee) என அதற்குரிய இடத்தில் (activity code) பதிவு செய்துவிட்டால் அவருடைய பிறந்த நாளை பதிவு
செய்யும் இடத்தில் (Date of Birth field) அவர் ஒரு Minor என பதிவு செய்ய மென்பொருள் அனுமதிக்கலாகாது. ஏனெனில் மைனர் வயதில் இருக்கும் ஒருவரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். மேலும் ஒருவர் பணியாளர் என்று databaseல் இருக்கும்போது அவரையே வேறொரு இடத்தில் வர்த்தகம் செய்பவர் (Business) என்றும் மென்பொருள் ஏற்றுக்கொள்ளலாகாது. இப்படி திரையிலுள்ள ஒவ்வொரு
fieldம் validate செய்யப்படவேண்டும். ஆனால் இன்று மிகப்பிரபலமாகவுள்ள பல மென்பொருட்களிலும் இத்தகைய validationகள் இருப்பதில்லை.

இப்போது இத்துறையில் முன்னனியில் நிற்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் மென்பொருளிலேயே இந்த குறை இன்றும் உள்ளது என்றால் அன்று அடிப்படை பயிற்சி ஏதும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளை தயாரிப்பில் ஈடுபட்டவர்களுடைய மென்பொருளில் இத்தகைய குறைபாடுகள் இருந்ததில் வியப்பில்லையே.

இதன் விளைவாக தகவல் களத்தில் (Database) இருந்து எந்த ஒரு பயனுள்ள அறிக்கைகளையும் தயாரிக்க முடியாத நிலை. ஆக, அன்று புழக்கத்திலிருந்த மென்பொருள் ஒரு கிளையின் அன்றாட அலுவல்களான பணம் செலுத்துதல், பட்டுவாடா செய்தல் போன்ற அடிப்படை
அலுவல்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு மென்பொருளாக இருந்து வந்தது.

ஆனால் வருடங்கள் செல்ல, செல்ல எங்களுடைய வங்கியில் புழக்கத்தில் இருந்த மென்பொருளின் தரம் உயர்ந்தது என்னவோ உண்மை. அதாவது
இலாக்காவில் புதிய, மென்பொருள் தயாரிப்பில் அடிப்படை பயிற்சி பெற்ற கணினியாளர்கள் சேர்க்கப்பட்டப் பிறகு. ஆனால் இது வேறொரு புதிய தலைவலியை கொண்டுவந்தது.

இந்த காலக்கட்டத்தில் நான் பதவி உயர்வு பெற்று எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியின் (Training College) முதல்வராக அமர்த்தப்பட்டேன். கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்புகளில் கணிசமான விழுக்காடு கணினி பயிற்சி வகுப்புகளாக இருந்தது. அதுவரை ஒரு கிளை மேலாளர் கோணத்தில் வங்கியின் மென்பொருளை அணுகி வந்த நான் கணினி பயிற்சி எடுக்க வந்த கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன்.

எனக்கு வகுப்புகள் இல்லாத சமயங்களில் என்னுடைய கணினியில் மென்பொருளின் source codeஐ பெற்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒரு தயாரிப்பாளர் கோணத்திலிருந்து அணுகாமல் ஒரு பயனாளரின் (user) கோணத்திலிருந்தே அணுக ஆரம்பித்தேன். ஆகவே நான் கிளையில் இருந்தபோது குறைகளாக நான் கணித்திருந்தவற்றை சரிசெய்யும் நோக்கத்தில் எனக்கு மனதில்பட்டவற்றை குறித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

நான் குறித்து வைத்திருந்தவற்றை இலாக்கா அதிகாரிகளிடம் காண்பித்தபோது சீனியர் அதிகாரிகள் பலரும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தங்களுடைய வாதத்தை முன்வைப்பதிலேயே (அதாவது சாக்குபோக்கு) குறியாயிருந்தனர். ஆனால் சமீபத்தில் இலாக்காவில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் நான் குறித்துவைத்திருந்தவற்றுள் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டதுடன், 'நீங்க சொல்றது சரிதான் சார். நாங்களும் இதுமாதிரி ஒரு ரிப்போர்ட்
ப்ரிப்பேர் பண்ணி வச்சிருக்கோம். ஆனா இத டிசைன் பண்ண யாருமே எங்க அப்சர்வேஷன ஒத்துக்க மாட்டேங்கறாங்க.' என்றனர் உண்மையான ஆதங்கத்துடன்.

மென்பொருள் வடிவமைப்பதிலும் அதை தயாரிப்பதிலும் (Designers and developers) ஈடுபட்டுள்ள பல கணினியாளர்கள் இன்றும் இத்தகைய போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர் என்பதுதான் துரதிர்ஷ்டம்.

பயனாளர்கள் மென்பொருளின் தரத்தை மேம்படுத்தவே தாங்கள் காணும் குறைகளை எடுத்துரைக்கின்றனர் என்பதை பல கணினியாளர்கள் உணர்வதில்லை.

சரி. இனி முந்தைய இடுகையில் நம் நண்பர் சிவா அவர்கள் எழுப்பியுள்ள வாதங்களை பார்ப்போம்.

முதலாவது வங்கி அலுவல்கள் எல்லா வங்கிகளுக்குமே பொருந்துமா?

அடிப்படையாக பார்த்தால் சிவா அவர்கள் சொல்வதுபோல, Accounts Register, Scroll Books, Subsidiary Books and the General Ledger எல்லாமே எல்லா வங்கிகளிலும் ஒன்றுதான். அதாவது பரிவர்த்தனைகளை Accounting செய்யும் முறை.

ஆனால் அவற்றை அணுகும் முறை அதாவது எப்படி ஒவ்வொரு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களும் (Deposit & Loan Products) எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பதும் அதன் சட்ட திட்டங்கள் என்பதும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

எங்களுடையதைப் போன்ற வங்கிகளில் எல்லா திட்டங்களும் எல்லாருக்கும் பொருந்தும். அதாவது கணக்குகள் திட்டங்களின் கீழ் மட்டுமே துவக்கப்படுகின்றன. அதாவது தனிநபர் திட்டங்கள், நிறுவன திட்டங்கள் என பிரிக்கப்படுவதில்லை. ஆனால் பல புதிய வங்கிகளில் இவை Private or Personal Banking, Corporate or Wholesale Banking, Retail Banking, Investment Banking, என பலவகைகளில் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
ஆகவேதான் ஒரு வங்கிக்கு வடிவமைக்கப்படும் மென்பொருள் எல்லா வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை.

இரண்டாவது ரிசர்வ் வங்கி ஏன் எல்லா வங்கிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு மென்பொருளை வடிவமைக்கக் கூடாது.

இதை அதிகம் வெளிச்சம் போட்டு சொன்னால் சரிவராது. ஏனெனில் வங்கியில் பணிபுரியும் ஒருவர் ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டைக் குறைகூறலாகாது என்பது அடிப்படை நியதி!!

ஆனால் ஒன்று மட்டும் கூறலாம். ரிசர்வ் வங்கிக்கு வர்த்தகத்தை (Commercial Banking) பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அவர்களால் நிச்சயம் ஒரு முழுமையான, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் ஏதுவான ஒரு மென்பொருளை வடிவமைக்கவோ, அல்லது வேறொரு மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டாக தயாரிக்கவோ நிச்சயம் முடியாது.

மூன்றாவது மென்பொருள் வாங்குவதற்ககு லஞ்சம் வாங்கினால் மென்பொருள் எப்படி சரியா வேலை செய்யும் என்கிற குற்றச்சாட்டு.

குடுக்கறவன் இருக்கறவரைக்கும் வாங்கறவனும் இருக்கத்தான செய்வான்? தங்களை 'புனிதர்கள்' என பறைசாற்றிக்கொள்ளும் பல முன்னனி நிறுவனங்களும் இத்தகைய தரக்குறைவான பேரங்களில் இறங்குவதுதான் துரதிர்ஷ்டம். சமீபத்தில் முன்னனி நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட வங்கியின் இயக்குனர்கள் அனைவருக்கும் லேப்டாப் பரிசாக அளித்ததாம்!

அடுத்து 'ஒரு பிரிட்ஜ்,டிவி வாங்குவதற்க்கு எவ்வளவு மெனெக்கெடுகிறோம். ஒரு 4 கடையாவது ஏறி விலை விசாரித்து வாங்குகிறோமா இல்லையா? அதையே ஏன் கணிணி மயமாக்கலில் நாம் பின்பற்றவில்லை?'என்கிற கேள்வி.

எல்லா வங்கிகளுமே இன்று நாட்டில் முன்னனியில் உள்ள எல்லா நிறுவனங்களின் மென்பொருளை ஒருமுறையாவது டெமோ (Demo) பார்த்துவிட்டுத்தான் தங்களுக்கு தேவையான மென்பொருளை தெரிவு செய்ய வேண்டும் என்பது நியதி. அப்படித்தான் எல்லா வங்கிகளுமே செய்கின்றன. Multi Vendor Policy என்பது எல்லா வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால் டெமோவுக்கு வருகின்ற மார்க்கெட்டிங் ஆசாமிகள் 'மொட்டைத்தலையிலகூட முடிய வளர்க்கலாம்.' என்பதுபோல் தங்களுடைய மென்பொருளைப் பற்றி அளப்பார்கள். இதற்கென்று தனியாக அதிகாரிகளைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதும் நியதி. ஆனால் இதில் உயர் அதிகாரிகளே அங்கத்தினர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கணினியைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அவர்களுடைய கிளைகளில் நடக்கும் அலுவல்களைப் பற்றியே அவர்களுக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்பில்லை.
'
அடுத்து டிசிஎஸ்-ஐ மென்பொருள் தயாரிக்க அமர்த்தியது, 'ஒரு வருடதிற்குள் வேலையை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். நிறுவனப் பணியாளர்களின் ஈடுபாடின்மையால் அங்கு வந்து தயாரித்த மென்பொருளை 2 வருடமாகியும் அமுலாக்கம் செய்ய இயலவில்லை.'

இதற்கு நான் மேலே குறிப்பிட்டிருந்த உயர் அதிகாரிகளின் போக்கே காரணம். மென்பொருளை தெரிவு செய்யும் சமயத்தில் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என்கிற ஆதங்கம்தான் மென்பொருளை அன்றாடம் பயன்படுத்தும் பணியாளர்களிடம் இத்தகைய மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

தொடரும்

02 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - என் அனுபவம் 1

வங்கி செயல்பாடுகளில் கணினியின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் மிகையாகாது.

என்னுடைய திரும்பிப் பார்க்கிறேன் தொடரில் நான் குமாஸ்தாவாக சேர்ந்த காலத்தில் வழமையில் இருந்து வந்த வங்கியின் செயல்பாடுகளைக் குறித்தும் அச்சமயத்தில் என்னைப் போன்ற குமாஸ்தாக்கள் தினசரி அலுவல்களை முடிக்க பட்ட சிரமங்களையும் விரிவாக எழுதியுள்ளேன்.

நான் மும்பை வங்கி கிளையொன்றில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் - 1994ல் - என்னுடைய வங்கியின் கிளை செயல்பாடுகள் கணினி மயமாக்கப்பட்டன.

மான்யுவல் (Manual) ஆப்பரேஷன் என்ற சூழலிலிருந்து முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஆட்டோமேட்டட் (Automated) சூழலுக்கு மாறும் சமயத்தில் வங்கி ஊழியர்கள் சந்திக்க நேர்ந்த சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சுமார் பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் கணினியில் ஏற்றி முடிக்கவே மாதக்கணக்கானது. அதுவும் முழுக்க பெண்களை மட்டுமே கொண்டிருந்த என்னுடைய கிளையில்.... கேட்கவே வேண்டாம்.

முதல் நிலை அதிகாரிகள் ஐவரை மட்டும் வைத்துக்கொண்டு இரவும் பகலும், விடுமுறை நாட்களிலும் அமர்ந்து நேரம் காலம் பாராமல் அத்தனை விவரங்களையும் கண்னியில் தகவல்களத்தில் (database) ஏற்றியதை இப்போது நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது.

ஆனால் ஒருமுறை பாடுபட்டு ஏற்றிவிட்டால் அதை காலாகாலத்துக்கும் பயன்படுத்த முடியும் அல்லது நம்முடைய தேவைகளுக்கேற்ப மிக எளிதாக மாற்றி அமைத்துவிடமுடியும், மேம்படுத்த முடியும் என்பதை அப்போது நானோ என்னுடைய துணை அதிகாரிகளோ உணரவில்லை.

அன்றுவரை ஒவ்வொரு மாதக்கடைசியிலும் ஒவ்வொரு கணக்கிலும் இருந்த மிகுதி (Balance) தொகையை வேறொரு புத்தகத்தில் குறித்து, கூட்டி அதன் கூட்டுத்தொகை கிளையின் பொது கணக்குப் புத்தகத்தில் (General Ledger) உள்ள கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வதற்குள் அடுத்த மாத இறுதி வந்துவிடும்.

ஆனால் கணினி மயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தின இறுதியிலுமே (Day end) இந்த வேலை சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும் என்பதை உணர்ந்தபோதுதான் நாங்கள் அதுவரை அனுபவித்த சிரமங்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை உணர்ந்தோம்.

அது மட்டுமா? ஒவ்வொரு கணக்கிலும் மூன்று மாத இடைவெளிகளில் வட்டித் தொகையை கணக்கிட்டு அதை ஒவ்வொரு கணக்கிலும் பற்று/வரவு வைத்து முடிப்பதற்கே இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிடும். ஆனால் கணினி மயமாக்கப்பட்டதன் பிறகு கிளையிலுள்ள எல்லா வாடிக்கையாளர்களுடைய கணக்கிலும் அதனதற்குண்டான வட்டியை அரை மணியில் கணக்கிட்டு அந்தந்த கணக்கிலும் பற்று/வரவு வைத்து முடித்து உன்னுடைய கிளையின் மொத்த வட்டி வரவு/பற்று இதுதான் என்பதை அன்றைய மாத இறுதி நாளன்றே தெரிவித்துவிடும்!

அதுவரை சிம்மன சொப்பனமாக இருந்த அறையாண்டு மற்றும் ஆண்டிறுதி பணிகள் கணினி மயமாக்கப்பட்டதும் மற்ற வேலைநாட்களைப் போலவே ஆகிப்போனது.

ஆனால் இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்போது பிரபலமாகவுள்ள மென்பொருள் நிறுவனங்கள் இருக்கவில்லை. இன்றைய கணினி யுகத்தில் வங்கிகளுக்கென்றே பிரத்தியேக மென்பொருட்களை தயாரித்து வழங்க பல நிறுவனங்கள் உள்ளன.

அன்றோ எங்களைப் போன்ற பெரும்பாலான வங்கிகளில் பணியாற்றிய ஒருசில அதிகாரிகள் தாங்களாகவே கற்று தயாரித்த மென்பொருட்களைத்தான் பயன்படுத்தி வந்தன. அவை பெரும்பாலும் அப்போது பழக்கத்தில் இருந்த Dbase, Foxpro, Informix, Cobol எனப்படும் மொழிகளிலேயே (Language) எழுதப்பட்டிருந்தன.

என்னுடைய வங்கியில்
Clipper
என்று அப்போது பழக்கத்திலிருந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த மென்பொருள் முழுக்க, முழுக்க dbase கோப்புகளால் ஆனது. சேமிக்கப்படும் தகவல்கள் (data) .dbf கோப்புகளில் சேமிக்கப்பட்டிருப்பதால் சில அபாயங்களும் உண்டு.

ஆனால் அன்றைய சூழலில் அதன் தாக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிக பொருட்செலவில்லாமல் உருவாக்கப்பட்ட பல மென்பொருட்களில் இதுவும் ஒன்று. அன்றையே அத்தியாவசிய தேவைக்கு - அதாவது ஒரு கிளையில் நடைபெறும் அன்றாட பரிவர்த்தனைகளை (transaction) நடத்தி முடித்து நாளிறுதியில் (at the end of the day) கணக்கு முடிக்கும் வரை - அது பயன்பட்டது.

இதன் இயங்கு தளம் (OS) விண்டோஸ் அறிமுகமாகும் வரை பிரபலமாக இருந்த disc operated system எனப்படும் DOS. ஆகவே இந்த மென்பொருளை பயன்படுத்த ஒருவர் DOS கட்டளைகளை (commands) ஒரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும்.

இதில்தான் சிக்கலே....

தொடரும்..

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் எங்கள் வங்கியின் கணினி இலாக்கா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். படித்துவிட்டு சென்றுவிடாமல் உங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டால் சந்தோஷம். கட்டாயமில்லை:-)