27 ஆகஸ்ட் 2013

ஊக வணிகம்தான் (Speculation) இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணமா?

கடந்த வாரம் நான் எழுதிய 'இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?' ங்கற பதிவில இந்த மாதிரியான ஏற்ற இறக்கத்துக்கு speculationனும் ஒரு முக்கிய காரணம்னு நண்பர் ஒருவர் கருத்துரையில் எழுதியிருந்தாங்க. 

அது ஓரளவுக்கு உண்மைதான். 

அதனால அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் டீப்பா பார்த்தா என்னன்னு மனசுல தோனிச்சி..

Speculationங்கற ஆங்கில வார்த்தைய அப்படியே தமிழ்ல சொல்லணும்னா ஊகம்னு சொல்லலாம். அதாவது நாளைக்கி அல்லது இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் என்ன நடக்கும்னு ஊகிக்கறது. இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லணும்னா அதாவது இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணப்போற டாப்பிக்கோட பின்னணியில சொல்லணும்னா, ஊகத்தின் அடிப்படையில் வணிகம் செய்தல் அப்படீன்னு சொல்லலாம். சுருக்கமா சொன்னா 'ஊக வணிகம்'. 

இந்த மாதிரியான வணிகம் பெரும்பாலும் பங்கு சந்தையிலதான் (share market) நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா இந்திய மற்றும் அன்னிய செலவாணி பணசந்தை (currency and forex market)கள்லயும் இது நடக்குது!

ஆனா இந்தியாவைப் பொருத்தவரையிலும் பணத்தை வைத்து வணிகம்(currency trading)  செய்வது சட்டவிரோதமாகும். அத்தகைய வணிகத்தில் ஈடுபட விரும்பறவங்க அரசாங்கத்துக்கிட்டருந்து அதுக்குன்னு லைசென்ஸ் வாங்கணும். இவங்களதான் இப்போ Authorised Money Exchangersனு சொல்றாங்க. இதுல கூட வர்த்தகம் செய்யலாம்னுதான் லைசென்ஸ் சொல்லும். அதாவது குடுத்து வாங்கலாம், அன்றைய சந்தை நிலவரப்படி. ஊக அடிப்படையில் அல்ல. இதுவும் கூட சமீப காலத்துல அறிமுகப்படுத்தப்பட்ட லைசென்ஸதான். முந்தியெல்லாம் வங்கிகள் இல்லன்னா தாமஸ் குக் மட்டுந்தான் forex trade செஞ்சிகிட்டு இருந்தாங்க. வங்கிகள தவிர இந்த exchange பிசினஸ்ல பல வருஷங்களா இருந்துவந்த கம்பெனி தாமஸ் குக். 

சரிங்க... எதுக்கு இந்த ஊக வணிகத்துல ஈடுபடறாங்க? யார், யாரெல்லாம் இதுல முக்கியமா ஈடுபடறாங்க?

முதல்ல எதுக்கு இந்த forex trade பண்றாங்கன்னு பாக்கலாம். 

இதுல ரெண்டு வகை இருக்கு.

1. பணமாற்று விகிதத்துல ஏற்பட மாற்றங்களால தங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கறதுக்கு (to protect from possible losses due to exchange fluctuations)

2.இந்த் ஏற்ற தாழ்வுகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது (to make profit out of  exchange flucations).

இத அதிகமா அன்னிய செலவாணி சந்தையிலதான் செய்யிறாங்கன்னு சொல்லலாம். 

இத இன்னும் தெளிவாக்கறதுக்கு  தினமும் சந்தையில நடக்கற சில பண வர்த்தகங்கள பாக்கலாம். இத்தகைய வணிகங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வழியாக மட்டுமெ செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வெளியூருக்கு செல்லும்போது டாலரை வாங்கும் Money exchanger இதை செய்ய முடியாது.

1அ. இந்திய இறக்குமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையிலிருந்து வாங்குபவர்கள்:

நான் வெளி நாட்டுலருந்து - அது எந்த நாடுங்கறது முக்கியமில்ல - சில மிஷின்கள இறக்குமதி பண்றேன்னு வச்சிக்குவோம். அத்தோட மொத்த மதிப்பு 1000 அமெரிக்க டாலர். நான் போட்டுருக்கற ஒப்பந்தப்படி பணத்த இன்னும் மூனு மாசத்துல குடுக்கணும். இன்னைக்கி அமெரிக்க டாலருக்கு இந்திய பணம் ரூ.65/- ரேட்ல வர்த்தகம் நடக்குது. இப்ப நாடு இருக்கற நிலமையில இந்த ரேட் இன்னும் ஏர்றதுக்கு சான்ஸ் இருக்கு.... 65/- ங்கறது மூனு மாசத்துல எழுபதோ, எழுபத்தஞ்சோ கூட ஆவலாம்னு சொல்றாங்க. இப்படியே போனா என்னோட பேமென்ட் ட்யூ ஆவறப்போ யூ எஸ் டாலர் எழுபத்தஞ்சிக்கு போனா நா 75000/- ரூபா கொடுக்க வேண்டியிருக்கும். பணமாற்று விகிதத்துல ஏற்படற மாற்றத்தால எனக்கு தேவையில்லாம பத்தாயிரம் நஷ்டம். இத தவிர்க்கறதுக்கு ஒரு வழி இருக்கு. நா என்னோட பேங்க்ல போயி எனக்கு ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது என்னோட பில் ட்யூ ஆவறப்போ நீங்க எனக்கு தேவையான ஆயிரம் டாலர இன்னைக்கி இருக்கற ரேட்டுலயே விக்கணும்னு ஒப்பந்தம்.  சாதாரணமா எக்சேஞ் ரேட் ஏறிக்கிட்டிருக்கற மார்க்கெட்ல இன்னைக்கி ரேட்டுக்கே மூனு மாசம் கழிச்சி விக்கறதுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க மாட்டாங்க. இன்னிக்கி இருக்கற ரேட்டுலருந்து ஒரு மார்ஜின் (margin) வச்சி 67-70க்குள்ள ஒரு ரேட்டுக்கு ஒப்பந்தம் போடுவாங்க. அதாவது உங்களுக்கு நஷ்டம் வேணாம் எங்களுக்கும் நஷ்டம் வேணாம்கறா மாதிரி ஒரு நடுநிலையான ரேட்டுக்கு ஒத்துக்குவாங்க. அந்த ஒப்பந்தப்படி மூனு மாசம் கழிச்சி ட்யூ டேட் வர்றப்போ எதிர்பார்த்தா மாதிரியே ரேட் எழுபத்தஞ்சிக்கு மேல போனாலும் நான் ஒப்பந்தத்துல போட்ட ரேட் படி இந்திய பணத்த குடுத்தா போறும். ஆனா நாம எதிர்பார்த்ததுக்கு எதிர்மாறா ரேட் ஏறாம அப்படியே நின்னாலும் இல்ல கொஞ்சமா ஏறியிருந்தாலும் ஒப்பந்தப்படிதான் நான் பணம் குடுத்தாவணும். இந்த ஒப்பந்தம் வழியா நா ஆயிரம் டாலர் வாங்குவேங்கறதால என்னோட பேங்குக்கு இது ஒரு sale contract. அவங்க சந்தையிலருந்து வாங்கி எனக்கு விப்பாங்க. 

1ஆ. ஏற்றுமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையில் விற்பவர்கள்.

நான் வெளிநாட்டுக்கு பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்ற வியாபாரி. சமீபத்துல அமெரிக்காவுக்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்கள ஏத்துமதி செஞ்சிருக்கேன். ஆனால் பணம் மூனு மாசம் கழிச்சித்தான் கைக்கு வரும். இப்ப இருக்கறா மாதிரி டாலரோட மதிப்பு ஏறு முகமா இல்லைன்னு வச்சிக்குவோம். 2000த்துலருந்து 2010 வரைக்கும் நிலமை அப்படித்தான் இருந்துது. அதாவது அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுல முதலீடு பண்ணா நல்லா லாபம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருந்த காலம் அது.  இந்திய ரூபாயோட மதிப்பு எங்க ஏறிடுமோன்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம். இந்திய ரூபாயோட மதிப்பு மூனு மாசத்துல ஏறிடும்கற சூழ்நிலையில எனக்கு இன்னைக்கி உடனே பணம் வந்தா ஒரு டாலருக்கு அறுபத்தஞ்சி ரூபா வீதம் ரூ.65,000/- கிடைக்கும். ஆனா டாலரோட மதிப்பு 63க்கோ இல்ல 62.5க்கோ சரிஞ்சிருச்சின்னா எனக்கு 63,000/- இல்லன்னா 62,500/- தான் கிடைக்கும். என்னோட எந்த தவறும் இல்லாம எனக்கு exchange rate மாற்றத்தால 2,500லருந்து 3000 வரைக்கும் நஷ்டம் ஏற்பட சான்ஸ் இருக்கு. அதனால நா என்னோட பேங்குக்கு  போயி ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது எனக்கு வரப்போற ஆயிரம் டாலர் பணத்த இன்னைக்கி ரேட்டுலயே மூனு மாசம் கழிச்சி வாங்கிக்கணும்னு ஒப்பந்தம். அமெரிக்க டாலரோட மதிப்பு இறங்கப் போவுதுங்கறா மாதிரி சூழ்நிலையில இந்த ரேட்டுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க வழியில்லை. ஏற்கனவே சொன்னா மாதிரி இன்னைக்கி என்ன ரேட் இருக்கோ அதுக்கும் மூனு மாசத்துக்கு அப்புறம் என்ன ரேட் இருக்கும்னு பேங்க் நினைக்கிதோ அதுக்கும் இடையில ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடுவாங்க. அது 64-62க்குள்ள இருக்கலாம். மூனு மாசம் கழிச்சி டாலரோட இந்திய மதிப்பு 61க்கு கீழ போயிருந்தாக் கூட என் கிட்ட போட்டுருக்கற ஒப்பந்தப்படி ரூ.65க்குத்தான் பேங்க் வாங்கியாகணும். நேர் மாறா டாலரோட மதிப்பு 66 ஆனாலும் எனக்கு 65,000/-தான் கிடைக்கும். பேங்க் எங்கிட்டருந்து 65000/- வாங்கற டாலருக்கு அன்னைய ரேட்டுலதான் சந்தையில வித்தாகணும். நஷ்டமோ லாபமோ பேங்குக்குத்தான், எனக்கில்ல.

இந்த ரெண்டு வர்த்தகத்துலயும் (transactions) ஒப்பந்தப்படி பண்றதால பேங்குகளுக்கு நஷ்டம் வரா மாதிரி தெரியுதேன்னு நீங்க கேக்கலாம்.

ஆனா sale ஆனாலும் purchase ஆனாலும் அதுக்கு ஈடா இன்னொரு வர்தகமும் நடக்கும். அதாவது என்னோட பேங்க் எனக்கு ஆயிரம் டாலர் விக்கணும்னா அந்த ஆயிரம் டாலர சந்தையிலருந்து வாங்கியாகணும். இந்திய பணம் மாதிரி லட்சக் கணக்குல அன்னிய செலவாணிய எந்த பேங்காலயும் கையில வச்சிக்கிட்டிருக்க முடியாது. 

இறக்குமதியாளருக்கு விக்கிறதா ஆயிரம் டாலர் ஒப்பந்தம் (forward sale contract) போடறப்போ அன்னைக்கே இன்னொரு பார்ட்டியோட (அது பேங்கா இருக்கலாம் இல்ல அவங்களோட இன்னொரு ஏற்றுமதி கஸ்டமரா இருக்கலாம். மேல சொன்ன உதாரணம் 1ஆ வில இருக்கற ஏற்றமதி கஸ்டமரோட போட்டா மாதிரி இன்னொரு பர்சேஸ் (forward purchase contract) போட்ருவாங்க. அதாவது யார்கிட்டருந்து வாங்குனாலும் அத உடனே யாருக்காவது வித்துறனும். இதுக்கு squaringனு பேங்குக்காரங்க சொல்வாங்க. purchase இல்லாத sale contractம் இருக்காது. Sale இல்லாத purchase contractம் இருக்காது. இதுக்கு squared positionனு பேரு.

ஒருநாளைக்கு பத்து பேர் கிட்ட வாங்குன டாலர அத்தனையையும் அன்னைக்கே சாயந்தரத்துக்குள்ள (close of business) யாருக்காச்சும் வித்துறணும்கறது இந்திய ரிசர்வ் வங்கியோட கன்டிஷன். ஆனா இது எல்லா சமயத்துலயும் முடியாம போயிரும். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் மாதிரி ஒரு பெரிய கம்பெனிக்கு வர்த்தகம் முடியறதுக்கு அஞ்சி நிமிஷத்துக்கு முன்னால அமெரிக்காவுலருந்து பத்து மில்லியன் டாலர் வருதுன்னு வையிங்க. அத அவங்களோட பேங்க்குக்கு வித்துடறாங்க. ஆனா வர்த்தகம் முடியற நேரத்துக்குள்ள அந்த பத்து மில்லியனையும் வாங்கறதுக்கு எந்த பேங்கும் இல்லேன்னு வையிங்க. அத அப்படியே வச்சிக்கிட்டு அடுத்த நா வர்த்தகம் துவங்குனதும் விக்கலாம். இந்த மாதிரி விக்காம வச்சிருக்கற நிலைமைக்கு open positionன்னு சொல்வாங்க. 

இந்த மாதிரியான open position ரொம்பவும் டேஞ்சரான விஷயம். உதாரணத்துக்கு நேத்து பிசினஸ் முடியற சமயத்துல வந்த பத்து மில்லியன் டாலர விக்காம வச்சிருக்கேன்னு வையிங்க. நேத்தே அத வித்திருந்தா ரூ.65க்கு வித்துருக்க்லாம். ஆனா அடுத்த நாள் காலையிலயும் விக்க முடியல. ரேட் குறைஞ்சிக்கிட்டே போயி 64 இல்லன்னா 63 ஆயிருது. ஒரு டாலருக்கு ஒரு ரூபாயிலருந்து ரெண்டு ரூபா வரைக்கும் நஷ்டம்! பத்து மில்லியனுக்கு பார்த்தா எவ்வளவு நஷ்டம்! பத்து மில்லியன் டாலர்னா  ஒரு கோடி டாலர்!!. ஒரு டாலருக்கு இரண்டு ரூபா நஷ்டம்னா ஒரே நாள்ல ஒரே வர்த்தகத்துல எனக்கு இரண்டு கோடி  நஷ்டம்! இத சின்ன பேங்குகளால தாங்க முடியாதுல்ல? அதனால ஒரு வங்கியோட net worthல இத்தன சதவிகிதத்துக்கு மேல இந்த மாதிரியான open positon வச்சிருக்கக் கூடாதுங்கற கன்டிஷன் இருக்கு. ஆனாலும் ICICI,CITI,SBI, மாதிரி பேங்குங்க இந்த லிமிட்டுக்கு மேலயும் வச்சிருப்பாங்க. அரசு வங்கிகள் இல்லாத சில பெரிய தனியார் வங்கிகள் இந்த மாதிரி open positionன வேணும்னே வச்சிருப்பாங்க. அதாவது நாளைக்கு ரேட் ஏறும்கற ஊகத்துல லாபம் பண்ற நோக்கத்தோட வச்சிக்கிட்டுருப்பாங்களாம். 

இந்த மாதிரியான open position வச்சிருக்கற பேங்குகளுக்கு மட்டுமில்லாம நாட்டோட பணத்தோட மதிப்புக்கும் பெரிய சவாலா இருக்கற விஷயம். இது எல்லை மீறி போவுதுங்கற சந்தேகம் ரிசர்வ் வங்கிக்கு வந்தா உடனே அந்தமாதிரியான பேங்குகள கூப்ட்டு எச்சரிப்பாங்க. போன ரெண்டு மாசமா அநேகமா தினமும் ஸ்டேட் பாங்க் மாதிரியான பேங்குகள அவங்க கூப்ட்டு வார்ன் பண்ணிக்கிட்டே இருக்காங்களாம்.

இந்த மாதிரியா லாப நோக்கத்தோட ரிஸ்க் எடுத்து செய்யிற பிசினஸத்தான் speculative businessனு சொல்றோம். இது அளவுக்கு மீறிப் போனா அந்த பேங்குகளோட ஒட்டுமொத்த நிதிநிலைமையே மோசமாயிறக் கூட சான்ஸ் இருக்கு. இந்த மாதிரி சம்பவம் வெளிநாடுகள்ல கூட நிறைய நடந்திருக்கு. நிறைய பேங்க் இல்லன்ன நிதிநிறுவனங்கள் திவாலா ஆயிருக்கு.

சரி அடுத்து இந்த மாதிரியான speculation எப்படி ஒரு நாட்டோட பணத்தோட மதிப்பை பாதிக்குதுன்னு சுருக்கமா பாக்கலாம்.

நா மேல சொன்னா மாதிரியான forward contract போடறது ஒரு எல்லை மீறி போவுதுன்னு வையிங்க. அதாவது வெளிநாட்டுலருந்து இறக்குமதி பண்ற எல்லாருமே மூனு மாசத்துக்கப்புறம் இந்த ரேட்தான் இருக்கும்னு ஒரு ஊகத்துல ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடறாங்க. அதாவது இந்த மாதிரி ஒப்பந்தம் போடறவங்கள்ல பத்துல ஒன்பது பேர் இன்னைக்கி 65ரூபாயா இருக்கற டாலரோட மதிப்பு மூனு மாசம் கழிச்சி 68ரூபாவா ஆகப் போவுதுன்னு தீர்மானிச்சி ஒப்பந்தம் போட்டா உண்மையிலேயே அது மூனு மாசம் கழிச்சி 68லதான் போய் நிக்குமாம்! 

இத ஆங்கிலத்துல herd mentalityன்னு சொல்றாங்க. தமிழ்ல சொல்லணும்னா மந்தை செயல்பாடு... அதாவது மந்தையிலருக்கற நூறு ஆட்டுல பத்து ஆடு மேற்கு திசை பாத்து திரும்புனா அத தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கற அத்தனை ஆடுகளும் அதே திசையில திரும்புமாம்! இது நம்ம நாட்டுக்கு மட்டுமில்ல இந்த மாதிரியான வர்த்தகம் - பங்கு வர்த்தகம்னாலும் அன்னிய செலவாணி வர்த்தகம்னாலும் - பொருளாதாரத்துல மிகவும் முதிர்ந்த (matured) நாடுன்னு நாம நினைக்கற அமெரிக்கா போன்ற நாடுகளிலும் - வர்த்தகர்கள் இந்த மனநிலையிலதான் வர்த்தகம் செய்வாங்க. அதனாலதான் ஒருநாள்ல முதல் முதல் மார்கெட்ல இறங்கற ஆசிய நாடுகள்ல (இதுல ஜப்பான்லதான் stock exchange முதல்ல துவங்கும்) எப்படி வர்த்தகம் நடக்குதோ அவங்கள தொடர்ந்து ஐரோப்பா அவங்கள தொடர்ந்து கடைசியில வர்ற அமெரிக்காக்காரனும் அதே மாதிரிதான் வர்த்தகம் செய்வான். ஜப்பான்காரனும் முந்தா நாள் கடைசியில அமெரிக்காவுல எப்படி வர்த்தகம் முடிஞ்சிதுன்னு பார்த்துட்டு அதே trendலதான் பிசினஸ தொடங்குவானாம்!. உலக வர்த்தக மயமாக்கல் கொள்கையை கடைப்பிடிக்கற எல்லா நாடுகள்லயும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னைக்கி இந்த வலையில இந்தியா மாட்டுச்சோ அன்னையிலருந்து இந்தியாவுலயும் அதே நிலைலதான் பங்கு வர்த்தகமும் அன்னிய செலவாணி வர்த்தகமும் நடக்குது. 

Speculative trading (ஊக வணிகம்) ஒரு அளவுக்குள்ள இருந்துச்சின்னா அது நாட்டோட பொருளாதாரத்துக்கு உதவியா கூட இருக்கும். ஒரு வளரும் நாட்டுல இது நடக்கறது ரொம்பவும் சகஜம், தேவையும் கூட. ஆனா அளவுக்கு மீறுனா அமிர்தமும் நஞ்சுங்கறா மாதிரி இந்த speculative forex trade with profit motive எல்லைய மீறிப் போறதாலயும் கூட இந்திய ரூபாயின் மதிப்பு ஊகம் பண்ண முடியாத அளவுக்கு ஏறி இறங்கிக்கிட்டு இருக்கலாம். 

இத கட்டுப்படுத்தறதுக்கு ஒவ்வொரு வங்கியும் என்ன பொசிஷன்ல இருக்காங்கன்னு உடனுக்கு உடனே கண்டுபிடிக்கற வசதி ரிசர்வ் வங்கிக்கு இப்ப இல்லை. இதுதான் பெரிய துரதிர்ஷ்டம். பேங்குகளோட அன்னிய செலவாணி வர்த்தகத்த ஒரு வரைமுறைக்குள்ள கொண்டு வர்றதுக்குன்னே FEDAIனு (அன்னிய செலவாணியில் டீலர்கள் அசோசியேஷன்) ஒரு கூட்டமைப்பு இருக்கத்தான் செய்யிது. அவங்களாலயும் எல்லா பேங்குகளோட டீலிங்ஸையும் உருப்படியா மானிட்டர் (effective monitoring) பண்ண முடியலைங்கறதுதான் உண்மை. 

இதுக்கு ஒவ்வொரு வர்த்தகத்தையும் அது நடக்கறப்பவே மானிட்டர் பண்றா மாதிரி (online monitoring) ஒரு சரியான மென்பொருளை கண்டுபிடிக்கணும். உடனுக்குடனே இல்லாட்டியும் அன்றைய வர்த்தகத்தின் முடிஞ்சவுடனேயாவது (end of business day) தெரிஞ்சிக்கறா மாதிரி ஒரு வசதி இருந்தா இத ஓரளவுக்கு கட்டுக்குள்ள வச்சிக்க முடியும். வெறும் லாப நோக்கத்தோட speculative tradingல தொடர்ந்து ஈடுபடற வங்கிகள் இல்லன்னா நிதிநிறுவனங்களோட லைசென்ஸ உடனுக்குடனே சஸ்பென்ட் பண்ண முடியுறா மாதிரி வசதி இருந்தா யாரும் இந்த டிரேடிங்ல ஈடுபட தயங்குவாங்கன்னு நினைக்கிறேன்.

********** 





23 ஆகஸ்ட் 2013

சேரன் மகள் தாமினியின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?


ரெண்டு மாசமா ஊரையே கலக்கிக்கிட்டிருந்த சேரன் - தாமினி - சந்துரு விஷயம் ஒருவழியா க்ளைமாக்ஸ் முடிஞ்சி சுபம்னு போட்டாச்சி.

ஆனா இதுக்கு பின்னால யார், யாரெல்லாமோ சதி செஞ்சிருக்காங்கன்னு சந்துரு சைட் வக்கீல்ங்க புலம்பிக்கிட்டிருக்காங்க. 

ஒருவேளை அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த ஃபீசும் இலவசமா கிடைச்சிக் கிட்டுருந்த பப்ளிசிட்டியும் போயிருச்சேங்கற ஆதங்கமும் (வயித்தெரிச்சல்னு சொன்னா நல்லாருக்காதே!) ஒரு காரணமாருக்கும்.

இதுல ஒரு பெரிய பங்கும் நீதிமன்றமும் ப்ளே பண்ணியிருக்காங்கன்னும் சொல்றாங்களாம்.  சந்துரு ஹேபஸ் கார்பஸ் மனு போட்டதும் தாமினிய ஆஜராக்கியாச்சி. உடனே அத தள்ளுபடி செஞ்சி தீர்ப்பளிக்காம எதுக்கு கேஸ ரெண்டு வாரத்துக்கு தள்ளி வச்சாங்க? கேஸ் நிலுவையிலருக்கறப்போ தாமினிய அரசு காப்பகத்துல வைக்காம சேரன் அன்ட் கோ ஈசியா அப்ரோச் பண்ணி அவர ப்ரெய்ன் வாஷ் பண்றதுக்கு வசதியா அவரோட நண்பர் வீட்லயே தங்க வச்சது எதுக்காக?  நீங்களும் வேணும்னா தாமினிய பாத்து பேசலாம்னு சந்துரு அன்ட் கோவுக்கும் பர்மிஷன் இருந்தாலும் எதிராளியோட
நண்பர் கஸ்டடியில இருக்கறப்போ அவங்களால எப்படிங்க அந்த பொண்ணோட பேச முடியும்னு கேக்கறாங்களாமே?  சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்லி போயி பாத்து பேசி ஒருவழியா அவர இந்த முடிவுக்கு வரவச்சாங்களாமே?

இதெல்லாம் இப்போதைக்கி விடை தெரிஞ்சிக்க முடியாத கேள்விங்க...

எப்படியோ இப்போதைக்கி இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துருச்சி.... இது நல்ல முடிவா இல்ல இந்த முடிவுலயே தாமினி நிலைச்சி நிப்பாங்களா?

இந்த கேள்விகளுக்கும் காலந்தாங்க பதில் சொல்லணும்....

சரி... நா இன்னைக்கி சொல்ல வந்த விஷயத்த சொல்றேன்...

என்ன இது அதுக்குள்ள முடிச்சிட்டீங்கன்னு கேக்கறீங்களா? என்னங்க பண்றது?

இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது
 
இந்த பதிவுக்கு இப்படி தலைப்பு குடுத்துருந்தா எத்தனை பேர் படிச்சிருப்பீங்க?

அதனாலதான் இந்த பம்மாத்து வேலை...!

தலைப்ப பாத்துட்டு வந்து மாட்டிக்கிட்டீங்க இல்ல.... திட்டறத திட்டிட்டு வந்ததுக்கு முழுசா படிச்சிட்டு போயிறுங்க..

போன ஒரு மாசமாவே நம்ம நாட்டு பணத்தோட மதிப்பு விழுந்துக்கிட்டே வர்றத பார்த்துக்கிட்டு இருக்கோம். குறிப்பா அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு கழுத தேஞ்சி கட்டெறும்பான கதையா குறைஞ்சிக்கிட்டே போவுது.

இதுக்கு உண்மையிலேயே என்னங்க காரணம்?

அதையெல்லாம் பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த மாதிரி ஏறுது, இறங்குதுன்னு நமக்கு புரியற பாஷையில  பாக்கலாம்.

சாதாரணமா சந்தையில எந்த பொருளோட மதிப்பும் (மதிப்புன்னா விலைன்னு வச்சிக்கலாம்) ஏறவோ இறங்கவோ செஞ்சா அதுக்கு நம்மள மாதிரி ஜனங்க, குறிப்பா வாங்கறவங்க மத்தியில இருக்கற அந்த பொருள் மேல இருக்கற விருப்பும் வெறுப்பும்தான் முக்கிய காரணம். அதாவது, ஒரு பொருள் எனக்கு ரொம்ப தேவைன்னா அது எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிறணும்னு தோனும். அதுக்கு நேர் மாறா ஒரு பொருள் எனக்கு தேவை இல்லைன்னா அது எவ்வளவு சீப்பா கிடைச்சாலும் வாங்கணும்னு தோனாது.

ரெண்டாவது, அது சந்தைக்கு வர்ற அளவு. சந்தையில ஒரு பொருள் ஜாஸ்தியா கிடைக்குதுன்னா அதாவது அத விரும்பி வாங்கறவங்களோட எண்ணிக்கையை விட அதிகமா கிடைச்சிதுன்னா அதோட விலை இறங்கத்தான் செய்யும்.

உதாரணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால நார்த்ல பல இடங்கள்லயும் மழை அடிச்சி கொளுத்திச்சி. இதனால வெங்காய சாகுபடி நினைச்சபடி நடக்கல. அதனால வெங்காய சப்ளைக்கு நார்த் இந்தியாவையே நம்பியிருந்த நம்ம சந்தையிலயும் வெங்காய வரத்து கணிசமா குறைஞ்சிருச்சி. வரத்து குறைஞ்சிதே தவிர நம்மோட தேவை குறையல.  அதனால கிலோ பதினோரு ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த வெங்காயம் படிப்படியா அதிகரிச்சி இப்போ அறுபது ரூபாய எட்டிப் புடிச்சிருக்கு.

இத ஆங்கிலத்துல சொன்னா the prices of a commodity goes up when the supply is unable to meet the demand. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா ஒரு பொருளோட சந்தை வரத்து அதன் தேவையைக் காட்டிலும் அதிகமா இருந்தா அதன் விலை குறையும். அதுக்கு நேர் எதிரா தேவை வரத்தை விட அதிகமா இருந்தா அதன் விலை உயரும் (when the suplly is more than the demand the prices go down. It goes up when demand is more than the supply.). 

இதுதான் விலைவாசி ஏறி இறங்குவதன் அடிப்படை நியதி (basic principle)

இதை அப்படியே இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிட்டு பாக்கலாம்.

அன்னிய செலவாணி சந்தையில் (forex market) டாலருக்கு (ஏனெனில் இப்போதும் உலக வர்த்தகத்தில் வாங்கல் விக்கல் எல்லாமே டாலரில்தான் நடக்கிறது) ஏற்படும்  தேவைகள்தான் அதன் மதிப்பை (விலையை) நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் டாலருக்கு தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறது?

1. நாட்டின் Trade deficit அதிகரிக்கும்போது. அதாவது நாட்டின் இறக்குமதி அதன் ஏற்றுமதியை விட அதிகரிக்கும்போது. ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும் அதன் இறக்குமதி மதிப்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசம்னு சொல்லலாம். ஆனா இந்த இரண்டுமில்லாத விஷயங்களும் இருக்கு. அத அப்புறம் பாக்கலாம். (இந்திய இறக்குமதியில் 35% பெட்ரோல் போன்ற எரிபொருட்களும் அதற்கு அடுத்தபடியாக 11% தங்கமும் இடம் பெறுதாம்).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய இந்திய முதலீட்டை மீண்டும் தங்கள் நாட்டுக்கு திருப்பி எடுத்துக்கிட்டு போகும்போது.

இது ரெண்டும்தான் இன்றைய பரிதாப நிலைக்கு முக்கிய காரணங்கள்னு சொல்றாங்க.

இந்த ரெண்டுக்கும் அப்புறமும் விஷயங்கள் இருக்கு:

1. இந்திய நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் செய்யும் முதலீடுகள். (டாட்டா இங்கிலாந்துலருக்கற கோரஸ்னு ஒரு பெரிய ஸ்டீல் கம்பெனிய வாங்குனத இதுக்கு உதாரணமா சொல்லலாம்).

அதுமட்டுமில்லாம

2..மந்தமான இந்திய பொருளாதார சூழல். இங்க வந்து முதலீடு பண்ணா லாபம் வருமான்னு அன்னிய முதலீட்டாளர்கள் மனசுல ஏற்படற ஒரு தயக்கம். சமீப காலத்துல டாலர் முதலீடுகள் குறைஞ்சி போறதுக்கு இதுதான் முக்கிய காரணம்.  ஏற்கனவே செஞ்சிருந்த முதலீட்டையும் திருப்பி எடுத்துக்கிட்டு போய்கிட்டிருக்கறப்போ புது முதலீட்ட எதிர்பாக்கறது முட்டாள்தனம் இல்லையா?

3. அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார கொள்கைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள்.

இந்தியாவுலருக்கற முதலீட்டையெல்லாம் மறுபடியும் அமெரிக்காவுக்கே கொண்டு போனதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்? எங்க லாபம் ஜாஸ்தியோ அங்கதான முதலீட்டாளர்கள் போவாங்க? அதுதான் இப்ப நடக்குது. சமீபத்திய கணக்கெடுக்கின்படி இந்தியாவுல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்காம். அதாவது சுமார் ரூ.90,000 கோடி!  இதுல பெரும்பங்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போன மூனு மாசமா இந்திய ஷேர் மார்க்கெட் யோயோ (yoyo)மாதிரி ஏறவும் இறங்கவும் அன்னிய முதலீட்டாளர்கள் எடுக்கறதும்
போடறதுமா இருக்கறதுதான் காரணம்.

உலக பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்.

நேரு காலத்துலருந்து நரசிம்மராவ் காலம் வரைக்கும் இந்திய பொருளாதாரம் உலக பொருளாதாரத்துலருந்து விலகியே இருந்துதுங்கறது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பல்லாம் உலக சந்தையில ஏற்படற எந்த மாற்றமும் நம்மை அவ்வளவா பாதிச்சதில்லை. ஆனா நரசிம்மராவ் காலத்துல இந்திய பொருளாதரத்துல தாரளமயமாக்கல்னு ஒரு புது கொள்கைய கொண்டு வந்ததுக்கப்புறம் இந்திய பொருளாதாரம் உலக சந்தையோட ஒருங்கிணைக்கப்பட்டாச்சி (integrated). அதாவது அன்னிய நாட்டுக்காரங்க அவங்க பணத்த இந்திய சந்தையில முதலீடு செய்றதுக்கு தாராளமா அனுமதிக்கப்பட்டாங்க. அத்தோட இந்திய கம்பெனிங்கள்ல ஒரு குறிப்பிட்ட விழுக்காடு முதலீடு செய்யவும் பர்மிட் செஞ்சாங்க. அதனால அமெரிக்க டாலர் அதிக அளவுல இந்தியாவுக்குள்ள வர ஆரம்பிச்சிது. இந்தியாவோட அன்னிய செலவாணி கையிருப்பும் ரிக்கார்ட்னு சொல்ற அளவுக்கு கட்டுக்கடங்காம அதிகமாச்சி. இதுக்கு நாங்கதான் காரணம்னு நரசிம்மராவ் அரசு மட்டுமில்லீங்க அவங்கள தொடர்ந்து வந்த NDAவும் சொல்லி எலெக்‌ஷன்ல ஓட்டு வாங்குனதும் உண்மை.

அப்பவே இந்த கொள்கை எதிர்காலத்துல இந்தியாவுக்கு எதிரா திரும்பும்னு எப்பவும் மாதிரியே கம்யூனிஸ்ட்காரங்க கூப்பாடு போட்டாங்க. அவங்க மட்டுமில்லாம அதுவரைக்கும் சந்தையை ஆட்டிப்படைச்சிக்கிட்டிருந்த டாட்டா, பிர்லா, அம்ம்பானி போன்ற இந்திய முதலாளிங்களும் இது சரியில்லைன்னாங்க. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் லாபம் கிடைக்கும்னுதான் இங்க வராங்க அது இல்லேன்னு ஆயிருச்சின்னா கண்ண மூடி திறக்கறதுக்குள்ள தங்களோட பணத்தை தூக்கிக்கிட்டு பறந்துருவானுங்க, ஆனா நாங்க அப்படியில்ல லாபம்னாலும் நஷ்டம்னாலும் நாங்க தொடர்ந்து சந்தையிலதான் இருப்போம்னாங்க. ஆனா வந்து குவிஞ்ச டாலரோட மயக்கம் அன்னைக்கி ஆட்சியிலிருந்தவங்களுக்கு - அது காங்கிரசானாலும் பிஜேபியானாலும் (இந்த ரெண்டு ஆட்சியிலயும் சில சமயங்கள்ல கம்யூனிஸ்ட்டும் பார்ட்னரா இருந்தாங்கங்கறதும் உண்மைதான். ஆனா அது அவங்களுக்கு மறந்து போச்சி) - புரியல, இல்லன்னா புரியாத மாதிரி பாவலா பண்ணாங்க.

அவங்க சுயநலத்தோட சொன்னாங்களோ இல்ல பொதுநலத்தோட சொன்னாங்களோ இப்ப அவங்க அன்னைக்கி சொன்னதுதான் நடக்குது. இங்க நிலமை சரியில்லேன்னு தெரிஞ்சதும் அன்னிய முதலீட்டாருங்க பணத்தோட
பறந்துக்கிட்டே இருக்காங்க.

இதுதான் இந்திய பணத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.

இதவிட சிம்பிளா சொல்லுங்களேன்ன்னு நீங்க சொல்றது கேக்குது.

அமெரிக்க டாலர் இந்தியாவுல யாருக்கெல்லாம் வேணும்னு பாக்கலாம் (அதாவது டிமான்ட் பண்றவங்க).

1. இறக்குமதி பண்றவங்களுக்கு. இவங்க இறக்குமதி பண்ற பொருட்களுக்கு காசு குடுக்கணும்னா டாலர்லதான் குடுக்கணும். அத அவங்க கணகு வச்சிருக்கற பேங்க்லருந்துதான் வாங்கணும். பேங்க் சந்தையிலருந்து வாங்கணும்.

அதாவது இன்னொரு பேங்க்லருந்து. எல்லா பேங்குகளும் சேர்ந்து நடத்தறதுதான் அன்னிய செலவாணி சந்தை (forex market).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களோட முதலீட்டை மறுபடியும் எடுத்துக்கிட்டு போறப்பவும் அவங்களுக்கு டாலர்லயே திருப்பி குடுத்தாகணும். இதுக்கும் அன்னிய செலவாணி சந்தையிலருந்துதான் டாலர வாங்கணும்.

3.வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்கள். இவங்களும் இந்த சந்தையிலதான் இந்திய பணத்த டாலரா மாத்தணும்.

இவங்க மூனு பேரும்தான் இந்த சந்தையிலருந்து டாலர வாங்கறதுல முக்கியமானவங்க.

இந்த சந்தையில டாலர விக்கறவங்க (அதாவது சப்ளை பண்றவங்க)
 
 
1. இந்திய ஏற்றுமதியாளர்கள்
 
இவங்க ஏற்றுமதி செஞ்ச பொருட்களோட விலை வெளிநாட்டுக்காரங்கக் கிட்டருந்து அவங்க பேங்க் வழியா டாலரா வரும். அத அப்படியே கையில வச்சிக்க முடியாது. குறிப்பிட்ட நாளுக்குள்ள சந்தையில வித்தாகணும்.

2.அன்னிய முதலீட்டாளர்கள்
 
இந்திய நிறுவனத்திலோ இல்ல பங்கு சந்தையிலோ முதலீடு செய்ய விரும்பற அன்னிய கம்பெனிங்க அவங்களோட டாலர், யூரோ, பவுன்ட் ஸ்டர்லிங் மாதிரி பணத்தையும் இந்த சந்தையிலதான் வித்தாகணும். அதாவது அவங்க முதலீடு எந்த கம்பெனிக்கு போய் சேருதோ அந்த கம்பெனிங்க அவங்க பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க. பங்கு சந்தையில முதலீடு செஞ்சா அந்த பங்குகள அவங்களுக்கு வித்த ஆளுங்க (கம்பெனிங்க) அவங்களோட பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க.

இவங்க ரெண்டு பேரும்தான் இந்த சந்தையில டாலர விக்கறதுல முக்கியமானவங்க.

டாலர விக்கறவங்கள சப்ளையருங்கன்னும் டாலர வாங்கறவங்கள டிமான்ட் பண்றவங்கன்னும் சொல்லலாம்.

இந்த சந்தையில டாலர் சப்ளையர்ங்கள விட டிமான்ட் பண்றவங்க ஜாஸ்தியானா டாலர் விலை கூடும். நேர் எதிரா இருந்தா டாலர் விலை குறையும்.

இதுதாங்க மேட்டரே... இத விட சிம்பிளா சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த ஏத்த இறக்கத்துல தலையிட்டு ஏதாச்சும் செய்ய முடியும்னா அது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி இல்லன்னா ஆட்சியிலருக்கற மத்திய அரசு - குறிப்பா சொல்லணும்னா நாட்டின் நிதி மந்திரி.

ரிசர்வ் வங்கி நினைச்சா டாலர் எப்பல்லாம் விலை ஏறுதோ அப்போ தங்களோட கையிருப்புலருக்கற டாலர சந்தையில விக்கலாம். அதாவது டாலர் தேவைப்படற வங்கிகளுக்கு குடுக்கறது.

சந்தையில டாலர் எப்பல்லாம் அதிகமா வருதோ அப்பல்லாம் அத பேங்குகள்கிட்டருந்து வாங்கிக்கிறது.

அவங்க இல்லாம மத்திய அரசு செய்யக் கூடியது என்னன்னா இங்கருந்து போனாப் போறும்னு நினைக்கற அன்னிய முதலீட்டாளர்கள திருப்திப்படுத்தற விஷயமா ஏதாச்சும் செய்யிறது. சாதாரணமா டாலர் ஒரே சீரா உள்ள வந்துக்கிட்டே இருக்கறதுக்கு அன்னிய முதலீடு கொள்கையை ஒரே சீரா வச்சிக்கிட்டிருக்கறது ரொம்ப அவசியம். அது இல்லாம நினைச்சா நீங்க இஷ்டம் போல வரலாம்னு சொல்றது கொஞ்ச நாள் கழிச்சி நீங்க வரத்தேவையில்லேங்கறா மாதிரி புதுசு புதுசா கண்டிஷன் போடறதுன்னு ஒரு அரசு செஞ்சா இவனுங்கள நம்பி எப்படிறா நம்ம பணத்த இங்க வச்சிக்கிட்டிருக்கறது நினைச்சி இருக்கறவணும் ஓடிருவான்.

அதான் இப்ப மெயினா நடக்குது. புதுசா வரலாம்னு நினைச்சவனும் மனச மாத்திக்கிட்டா இங்க இருக்கறவனும் விட்டாப் போறும்னு ஓடிக்கிட்டிருக்கான்.

உதாரனத்துக்கு சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்கறதா வேணாமான்னு தெரியாம மத்திய அரசு ஆடுன ஆட்டத்த அவ்வளவு சீக்கிரம் அவங்க மறந்துருவாங்களா?

அதனால இப்பத்தைக்கி அன்னிய முதலீட்டாளர்கள் தாஜா பண்ணி இந்தியாவுக்குள்ள வரவைக்க முடியாதுங்கறது மத்திய அரசுக்கு தெரிஞ்சி போச்சி. வருமானம் குறைஞ்சி போச்சின்னா செலவ குறைச்சித்தான ஆகணும்? டாலர் உள்ள வர்றது குறைஞ்சிட்டதால வெளிய போற டாலரையாவது முடிஞ்ச மட்டும் குறைப்போம்னு நினைச்சி  செஞ்சதுதான்:
 
1. தங்க இறக்குமதி வரிய இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஏத்துனது. இந்த வருசத்து மொத்த தங்க இறக்குமதி 850 டண் மேல போகக் கூடாதாம். ஆனா தங்கத்துக்கு இந்தியாக்காரங்க மத்தியில இருக்கற டிமான்ட் குறையவே இல்லையாம். அதனால இனியும் வரிய கூட்டறதுக்கு சான்ஸ் இருக்காம்! தங்கம்தான் அதிக லாபம் தரும்னு நினைச்சா அதிக விலையும் குடுத்துத்தான் ஆவணும், வேற வழியில்லை.

2. அதே மாதிரி பெட்ரோல் இறக்குமதியும். இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். புலம்பி பிரயோஜனம் இல்லை. வேணும்னா வாரத்துக்கு ஒரு நாள் பஸ்லயோ, ஷேர் ஆட்டோவுலயோ இல்லன்னா சைக்கிள்லயோ ஆஃபீஸ்க்கு போங்க... உடம்பும் இளைக்கும்.

2. இந்திய கம்பெனிங்களோட அன்னிய முதலீட்டு அளவை குறைச்சது. இனி எந்த இந்திய கம்பெனியும் மத்திய அரசோட அனுமதியில்லாம அன்னிய கம்பெனிங்கள வாங்கிற முடியாது.  அவங்கக்கிட்ட டாலர் கையிருப்பு ஜாஸ்தியாருந்தா இந்திய சந்தையிலதான் விக்கணும்...

இந்த மூனையும்தாம் இந்திய அரசாங்கம் இப்பத்தைக்கி செய்ய முடியும்.

இன்னொன்னும் செய்யலாம். நிறைய இந்திய ஐ.டி. கம்பெனிங்க (இன்ஃபோசிஸ் இதுல முக்கியமான கம்பெனி) தங்களோட டாலர் பணத்த அயல்நாட்டு வங்கிகள்ல குவிச்சி வச்சிருக்கறதா கேள்வி. அதையெல்லாம் திரும்ப இங்க கொண்டு வரணும்னு ஒரு கன்டிஷன் போடலாம். அதுக்கு ஏதாச்சும் வரி விலக்கு அளிச்சாலும் அது உடனே ரிசல்ட் குடுக்க வாய்ப்பிருக்கு. ஆனா அவ்வளவு நாட்டுப்பற்று உள்ளவங்க இல்லை நம்ம முதலாளிங்கங்கறது வேற விஷயம்.

இது தேர்தல் வருடம். அதனால பார்லிமென்டையே ஒழுங்கா நடத்த முடியாம தடுமாறுற ஒரு அரசாங்கத்தால அன்னிய முதலீட்டாளர்கள மறுபடியும் இந்தியாவுக்குள்ள வர வைக்கிற மாதிரி பெரிய பொருளாதார முடிவுகள் எடுக்க முடியாதுங்க. அப்படியே எடுத்தாலும் இப்ப இருக்கறவங்க வர்ற தேர்தல்ல தோத்துட்டா அடுத்த வர்ற அரசு என்ன செய்யுமோன்னு அன்னிய முதலீட்டாளர்க நினைப்பாங்க இல்ல?

அதனால காருக்கு டிங்கரிங் பண்றா மாதிரி இப்பத்தைக்கி இத தட்டி, அத தட்டி மேனேஜ் பண்ண வேண்டியதுதான்.

அதத்தான் ப.சிதம்பரம் செஞ்சிக்கிட்டிருக்கார்.

இன்றைய நிலமையில யார் அந்த பதவியில இருந்தாலும் இதத்தான் செய்ய முடியுங்க...

வீணா புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை....

அன்னிய செலவாணி சந்தையில ரூபா மதிப்பு விழுந்தா ஆட்டோமேட்டிக்கா நேரடிய பலனடையப் போறது யாருன்னு தெரியுதா? இன்னைக்கி இதப்பத்தி கொஞ்சம் சத்தமாவே புலம்பற அயல்நாட்டுல வேலை செய்யிற நம்ம ஆளுங்கதான்.

டாலர்ல சம்பாதிக்கறவங்களுக்கு இது ஒரு எதிர்பார்க்காத வரப்பிரசாதம்தானே.... போன மாசம்வரைக்கு, 500 டாலர் (25,000/-) வீட்டம்மாவுக்கு அனுப்பிக்கிட்டுருந்த இந்தியாகாரர் இந்திய ரூபா இப்படியே விழுந்து ஒரு டாலருக்கு ரூ.70/-ன்னு ஆவுதுன்னு வையிங்க... அப்போ அவர் அனுப்பற 500 டாலரோட மதிப்பு ரூ.35,000/- ஆயிருமே... அவரோட வீட்டம்மாவுக்கு ஒரேயடியா ரூ.10000/- இன்க்ரிமென்ட் கிடைச்சா மாதிரிதானே?

அத நினைச்சி சந்தோஷப்படறத விட்டுப்போட்டு... எதுக்கு நாட்டப் பத்தி கவலைப்படறீங்க?

சரிங்க, என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை... தங்கம் விலை ஏறும். அதால பாதிக்கப்படப் போறவங்க எத்தனை சதவிகிதம் இருப்பாங்க? விடுங்க கவலைய.

இன்னொரு விஷயமும் சொல்றேன்.. இந்த பண வீழ்ச்சி இந்தியாவுல மட்டுமில்லீங்க BRICS நாடுகள்னு சொல்ற நாடுகள்ல சீனா மற்றும் கனடாவ தவிர பிரேசில், ரஷ்யா மட்டுமில்லாம இந்தோனேஷியா, தாய்லாந்து மாதிரியான நாடுகள்லயும் நிலையும் இதேதான்....

எங்கல்லாம் பொருளாதாரம் மந்த நிலையிலோ இருக்கோ... யாரெல்லாம் அன்னிய முதலீட்டாளர்களை நம்பி பொழப்ப நடத்தறாங்களோ அங்க எல்லாமே இதே நிலைதான்...
********

 

15 ஆகஸ்ட் 2013

கொலையாளி யார் 4

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை கைது செஞ்சி 24 மணி நேரத்துக்குள்ள தாக்கல் செஞ்சி மறுபடியும் போலீஸ் விசாரணைக்குன்னு கஸ்டடியில எடுக்கறதுக்கு முக்கிய காரணம் அவர்கிட்டருந்து எப்படியாச்சும் நாந்தான் இந்த கொலைய செஞ்சேன்னு வாக்குமூலம் வாங்கறதுதான். ஏன்னா அது மட்டும் நடந்துருச்சின்னா கேஸ ஈசியா க்ளோஸ் பண்ணிறலாமே, அதுக்குத்தான். ஆனா அதுக்கும் சட்டம் ஒரு செக் (check) வச்சிருக்கு. அது என்னான்னு பாக்கலாம்.  

ஒப்புதல் வாக்குமூலம்

சில சமயங்கள்ல குற்றவாளி தானாவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கறதுக்கும் வாய்ப்புண்டு. அதாவது முதல் முறையா ஏதோ ஒரு ஆத்திரத்தில் கொலை செய்றவங்க அதுக்கப்புறம் மனம் வருந்தி தங்களோட தப்பை உணர்ந்து குற்றத்தை ஒப்புக்கொள்றது உண்டு.  

அப்படிப்பட்ட சமயத்துல இந்த வாக்குமூலத்த எப்படி வாங்கணும்னும் சட்டம் சொல்லுது. இந்திய குற்றவியல் முறைச்சட்டம் 164 பிரிவில சொல்லியிருக்கறா மாதிரி அவரோட வாக்குமூலத்த ஒரு மஜிஸ்டிரேட் முன்னால  எழுத்து மூலமா வாங்கணுமாம். இதுக்கு சம்மந்தப்பட்ட கேஸ விசாரிக்கற மஜிஸ்டிரேட்டாத்தான் இருக்கணும்னு கட்டாயமில்ல. அந்த மாதிரி சமயத்துல வாக்குமூலத்தை பதிவு செய்யிற மஜிஸ்டிரேட் அத வழக்கை விசாரிக்கபோற மஜிஸ்திரேட்டுக்கு நேரடியா அனுப்பி வைக்கணுமாம். இந்த மாதிரி வாக்குமூலத்த குடுக்கறவங்க பின்னால போலீசோட நிர்பந்தத்தாலதான் குடுத்தேன்னு பின்வாங்க முடியாதுங்கறதாலதான் இந்த ஏற்பாட்ட சட்டம் செஞ்சி வச்சிருக்கு. இப்படியில்லாம போலிஸ் ஸ்டேஷன்ல வாங்கற எந்த ஒப்புதல் வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறது ரொம்ப முக்கியம். 

குற்றப்பத்திரிக்கை - Charge Sheet (கு.மு.ச.173(2))

புலன் விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல்துறை கூறும் குற்றச்சாட்டுக்களை அதற்கென காவல்துறை நிர்ணயித்துள்ள படிவத்தில் பட்டியிலிட்டு அதனுடன் சம்மந்தப்பட்ட அறிக்கைகள், அரசுத்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், தடயங்களைப் பற்றிய விவங்கள் ஆகியவற்றை இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். 

இதை குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட தியதியிலிருந்து 30லிருந்து 90 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்பதும் நியதி. அதற்குள் செய்ய இயலாமல் போகும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி தகுந்த காரணங்களுடன் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு சிறையிலிருக்கும் குற்றவாளை விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாம். 

இது எதற்கு என்று கேட்க தோன்றலாம். 

இப்படியொரு விதியை சட்டம் வகுத்திருக்கவில்லையென்றால் தகுந்த காரணம் இல்லாமல் ஒருவரை கைது செய்து சிறையிலடைக்க காவல்துறைக்கு அதிகாரம் அளித்துவிடுவதற்கு ஒப்பாகும் அல்லவா? மேலும் இந்திய சிறைகளிலுள்ள தண்டிக்கப்பட்ட (convicted) குற்றவாளிகளை விட குற்றம் சாட்டப்பட்ட கைதிகளின் (accused) எண்ணிக்கை அதிகமாகிவிட வாய்ப்புள்ளது. அதுமட்டுமா? தகுந்த சான்றுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளே பல ஆண்டுகள் நிலுவையில் நிற்கையில் அடிப்படை ஆதாரமான குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வழக்குகளும் சேர்ந்துக்கொண்டால் என்னாவது? மேலும் கைது செய்து 90 நாட்களுக்குள் கிடைக்காத சான்றுகள் அதற்குப் பிறகு கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று நீதிமன்றங்கள் கருதுவதால்தான இதை தாக்கல் செய்ய அதிகபட்ச காலத்தை நிர்ணயிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 

குற்றப்பத்திரிக்கையில் குற்றம் நாட்டில் நடைமுறையிலுள்ள எந்தெந்த சட்ட விதிகளின் கீழ் வருகிறது, அது எங்கு, எப்போது, எவ்வாறு நடந்தது. அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார், யார் அதற்கு துணை போனவர்கள் யார், யார் என்ற விவரங்கள், அவர்கள் சிறையில் உள்ளனரா அல்லது பிணையில் உள்ளனரா என்பதுபோன்ற விவரங்களுடன் குற்றத்தை சந்தேகமில்லாமல் நிரூபிக்க காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரணங்கள், அதைச் சார்ந்துள்ள அறிக்கைகள், வாக்குமூலங்கள், குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆயுதங்கள், கொலைக்களத்திலிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட தடயங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் இணைத்து ஒரு முழுமையான ஆவணமாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டப் பிறகும் தேவை என்று கருதும்பட்சத்தில் விசாரணையை தொடர காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக கொலை முயற்சி என்று பதிவு செய்யப்படும் குற்றம் வழக்கு நிலுவையிலுள்ளபோது தாக்கப்பட்டவர் மரிக்கும் பட்சத்தில் கொலைக் குற்றமாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆகவே வழக்கு முடிவாகும் வரையிலும் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய காவல்துறை அனுமதிக்கப்படுவதுண்டு. ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவருடன் மேலும் குற்றவாளிகள் அல்லது கூடுதல் அரசு தரப்பு சாட்சியங்களை சேர்க்கவும் கூடுதல் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதுண்டு. ஆகவே காவல்துறை முதல் முறையாக தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிக்கையில் இது இறுதி அறிக்கை என்ற வாசகத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது காவல்துறை இலாக்கா வழங்கியுள்ள சுற்றறிக்கைகளில் ஒன்று.

குற்றப்பத்திரிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதனுடைய மாதிரி வடிவத்தை (draft copy) அரசு தரப்பில் வழக்கை நடத்த நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரிடம் (Public Prosecutor(PP)/DPP/APP) காண்பித்து அவருடைய அனுமதியை பெற வேண்டும் என்று காவல்துறை தன்னுடைய உள்சுற்றுக்கு மட்டுமான (inside circulation only) சுற்றறிக்கைகளில் கூறியிருந்தாலும் பல உயர்/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அது கட்டாயமல்ல என்றும் அரசு வழக்கறிஞர்கள் இதை காவல்துறை அதிகாரிகள் மீது நிர்பந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளதும் உண்மை. 

இதற்கு என்ன காரணம் என்று என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் கூறியதிலிருந்து நான் தெரிந்துக்கொண்டவை:

ஏன் அரசு வழக்கறிஞரிடம் காட்ட வேண்டும்?

1. விசாரணை அதிகாரிகள் குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டத்தின் சரியான பிரிவுகளை கூறாமல் விட்டுவிடுவார்கள். இதன் மூலம் தண்டனையின் வீரியம் குறைந்துவிட வாய்ப்புள்ளது.

2.நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவியலாத ஆவணங்களைத் தாக்கல் செய்வது. அல்லது குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் விட்டுவிடுவது ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

3.சாட்சியங்களின் வாக்குமூலத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் அப்படியே தாக்கல் செய்வதை தவிர்க்க முடியும். 

ஏன் காட்ட தேவையில்லை?

1. காவல்துறையினர் பரிந்துரைக்கும் இ.த.ச பிரிவுகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் பரிந்துரைக்கும் பிரிவுகளைத்தான் சேர்க்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களுள் சிலர் நிர்பந்திப்பதுண்டாம். அரசியல் மற்றும் செல்வாக்குள்ளவர்களின் தலையீடுதான் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காவல்துறையினரை அணுகுவதை விட அரசு வழக்கறிஞர்களை அணுகுவது எளிதல்லவா?

2.குற்றம் சாட்டப்பட்டவரையே மாற்ற நிர்பந்திப்பது. அல்லது குற்றத்திலிருந்து தங்களுக்கு தெரிந்தவர்களை விடுவிக்க அறிவுறுத்துவது. 

3.காவல்துறையினர் மேற்பார்வைக்காக தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சரிபார்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்துவிட்டு பிறகு காவல்துறை அதிகாரிகளை குறை சொல்வது.

ஆனாலும் பல சமயங்களில் தங்களுடைய உயர் அதிகாரிகளுடைய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து குற்றப்பத்திரிக்கையை அரசு வழக்கறிஞர்களுடைய மேற்பார்வைக்கு சமர்ப்பிப்பதை விசாரணை அதிகாரிகளால் தவிர்க்க முடியாமல் போய்விடுவதுண்டு. இதனாலேயே நீர்த்துப்போன வழக்குகளும் உண்டாம்!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளியென நிரூபிக்க காவல்துறையினரின் திறமையான புலன் விசாரணை மட்டும் போதாது. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தகுந்த ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும்  எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் (beyond resonable doubt)நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க தேவையில்லை என்கிறது சட்டம். அவர்தான் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் குற்றம் சுமத்திய வழக்கு தொடுக்கும் அரசையே சாரும். அத்தகைய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடுவது அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் என்பதால்தான் காவல்துறையினருடைய குற்றப்பத்திரிக்கையை சரிபார்க்கும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்கின்றனர் அரசு வழக்கறிஞர்கள். இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு விசாரணை அதிகாரிகளுக்கு அளித்துள்ள கையேட்டில் இதை அறிவுறுத்துகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு காவல்துறை அதுவரை நடத்திய விசாரணைக் குறிப்புகள் அனைத்தையும் - காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் பொது நாட்குறிப்பு, விசாரணை அதிகாரியால் அன்றாடம் தயாரிக்கப்பட்ட வழக்கு சம்மந்தமான தின நாட்குறிப்பு  ஆகியவை  உட்பட - அரசு வழக்கறிஞரின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

அவற்றுடன் 
1. பிரேத பரிசோதனை அறிக்கை, 
2. குற்றவாளியின் வீடு/அலுவலகம் ஆகியவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் அடங்கிய பட்டியலின் நகல் 
3. கைரேகை, பாதமுத்திரை (footprint) பற்றிய விவரங்கள், 
4. தடயவியல் இலாக்காவினரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை, 
5. குற்றவாளி மற்றும் பிற சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் 
ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். 

சாதாரணமாக, அரசு வழக்கறிஞர்கள் காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்ட விசாரணை அறிக்கையை மட்டுமே நம்பி நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவதில்லை. காவல்துறை விசாரணையில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா என்றும் ஆய்வு செய்கின்றனர்.  அத்துடன் நில்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர் ஏற்கனவே இத்தகைய வழக்கு எதிலாவது சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்புண்டா என்று பழைய அரசு கோப்புகளை முழுவதுமாக ஆய்வு செய்கின்றனர். 

குற்றம் சுமத்தப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் (defense counsels) காவல்துறை மற்றும் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை விடவும் மிக அதிகமாக தங்களை தயார் செய்கின்றனர் என்பதும் உண்மை. குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளிதானா என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர் உண்மையிலேயே குற்றவாளிதான் என்று தெரிந்தாலும் அந்த வழக்கிலிருந்து முழுவதுமாக தங்கள் கட்சிக்காரரை  தப்புவிக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில்தான் அவர்களுடைய முழுக் கவனமும் இருக்கும். 

கிரிமினல் வழக்குகளில் அதிகம் பிரபலமடைந்துள்ள பல வழக்கறிஞர்கள் அனுபவம் பெற்ற துப்பறியும் நிபுணர்களை பயன்படுத்துகின்றனர் என்பதும் உண்மை. அவர்கள் மூலமாக கட்சிக்காரருக்கே தெரியாமல் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துவிடுகின்றனர். அதற்கான தொகையையும் தங்களுடைய கட்டணத்தில் சேர்த்து கட்சிக்காரரிடமிருந்து வசூல் செய்துவிடுகின்றனர். இதன் மூலம் வழக்கு விசாரணை சமயத்தில் தங்களுடைய கட்சிக்காரரைப் பற்றி தங்களுக்கு தெரியாத தகவல்கள் ஏதும் வருவதை அவர்கள் தவிர்த்துவிட முடியும் என்பதாலேயே சிரமத்தைப் பார்க்காமல் இத்தகைய தனிப்பட்ட விசாரணையில் இறங்கிவிடுகின்றனர்.

பிணை (Bail) (குமுச 450)

சாதாரணமா கொலை குற்றங்கள்ல குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை கிடைக்கறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி. போலீஸ் விசாரணை முழுசா முடிஞ்சி குற்றப்பத்திரிகை (Charge Sheet) கோர்ட்ல ஃபைல் பண்றவரைக்கும் பெய்ல் கிடைக்க சான்ஸே இல்லைன்னுதான் சொல்லணும். 

ஆனா அதுக்குன்னு ஒருத்தர கைது பண்ணி ஜெய்ல்ல வச்சிட்டு தங்களோட சவுகரியம்போல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சாப் போறும்னு போலீஸ் நினைச்சிறமுடியாது. அதுக்கும் சட்டம் ஒரு லிமிட் வச்சிருக்கு.  குற்றத்தோட தீவிரத்தைப் பொருத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேவையான கால அவகாசத்த கோர்ட் தீர்மானிக்கும். அது கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 30 முதல் 90 நாட்கள் வரை இருக்கலாம். அதுக்கப்புறமும் போலீஸ் தேவையில்லாம குற்றப்பத்திரிக்கை தாக்கல் பண்றத தள்ளிப்போடறாங்கன்னு கைதிக்கு சார்பா ஆஜராகற வக்கீல் நினைச்சா தன் கட்சிக்காரர ஜாமீன்ல விடணும்னு பெட்டிஷன் போட வாய்ப்பிருக்கு. அதுல இருக்கற நியாயத்த பார்த்து கோர்ட் ஜாமீன் வழங்கவும் வாய்ப்பிருக்கு. அதுக்கு எதிரா போலீஸ் சொல்ற காரணங்கள் ஏத்துக்கறா மாதிரி இல்லேன்னா ஜாமீன் நிச்சயம். 

சாதாரணமா குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான சாட்சியங்களை கலைத்துவிடக் கூடும்னு போலீஸ் சொல்றதாலத்தான் விசாரணை முடிஞ்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ற வரைக்கும் அவருக்கு பிணை வழங்கமாட்டாங்க. ஆனா இன்னொன்னையும் இங்க கவனிக்கணும். குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செஞ்சதுக்கப்புறமும் சிறையிலிருந்து வெளியில் வரும் குற்றம்சாட்டப்பட்டவர்  சாட்சிகளை கலைக்க ட்ரை பண்றார்னு போலீசுக்கு தெரியவந்தா உடனே அவர மறுபடியும் அரெஸ்ட் பண்ணி ரிமான்ட் செய்யணும்னு போலீஸ் கோர்ட்டுக்கு போகலாம்னு சட்டம் சொல்லுது. ஏன்னா செல்வாக்கு படைச்ச ஆளுங்க பெய்ல இருக்கறப்பவே சாட்சிகள மிரட்டற வேலைய ஆரம்பிச்சிருவாங்க. இத தடுக்கறதுக்காகவே பெய்ல வர்றவங்கள அவங்க சாதாரணமா குடியிருக்கற இடத்துலருந்து கொஞ்சம் தள்ளி இருக்கற இடத்துலதான் தங்கணும்னும் டெய்லி பக்கத்துலருக்கற போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி அங்க இருக்கற ரிஜிஸ்டர்ல கையெழுத்து போடணும்னும் கோர்ட் கண்டிஷன் போடுறது வழக்கம். ஆனா சிங்கம் 1 படத்துல காமிச்சா மாதிரி அந்த விஷயத்துலயு ஒரு ஆள செட்டப் பண்ணி கையெழுத்து போட வைக்கிற சம்பவங்களும் நடக்கத்தான் செய்யிது. அந்த மாதிரி சமயத்துல அவரோட பிணையை ரத்து செஞ்சி மறுபடியும் அவர சிறையில் அடைக்கறதுக்கும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!




நாளைய பதிவுடன் முடியும்.....

14 ஆகஸ்ட் 2013

சேரனுக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி செய்கிறார்?

Don't wash your dirty linen in  Publicனு சொல்வாங்க. 

அதத்தான் செஞ்சிக்கிட்டிருக்கார் இயக்குனர் சேரனும் அவருடைய ஆத்மார்த்த நண்பர் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வரும் இயக்குனர் அமீரும்.

பிள்ளைப்பாசம் சிலரை பைத்தியமாக்கிவிடும் என்பார்கள். அது இவர் விஷயத்தில் உண்மைதான் என்று காட்டுகிறது.

இந்த விஷயத்தப் பத்தி எதுக்கு எழணும், இது அவரோட தனிப்பட்ட விஷயமாச்சேன்னுதான் இதுவரைக்கும் எழுதாம இருந்தேன். 

ஆனா போன ஒரு வாரமா ராஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இவரும் இவருடைய நண்பர் அமீரும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சேரனின் மகள் தாமினியின் காதலர் எனப்படும் சந்துருவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பேசுவதைக் கேட்டபோது என்ன ஆச்சி இவருக்கு என்றுதான் கேட்க தோன்றியது. அதைப் பற்றி எழுதினால்தான் என்ன என்றும் தோன்றியது.

இப்போது இளவயதில் காதல்வயப்பட்டு பெற்றோர் எத்தனை எடுத்துச் சொல்லியும் கேளாமல் தான் விரும்பியவரைத்தான் கைபிடிப்பேன் என்று அடம்பிடிக்கும் இளைஞர்கள் இல்லாத குடும்பம் இருக்கிறதா என்ன? கணக்கெடுத்துப் பார்த்தால் இன்று நாட்டிலுள்ள ஏன் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இத்தகைய பொருத்தமில்லாத காதல்கள் கோடிக்கணக்கில் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற நிலைதான்.

சேரன் நிலையில் இருக்கும் ஒரு தந்தை என்ன செய்திருக்க வேண்டும்?

இந்த விஷயத்தை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து இருவேறு கோணங்களிலிருந்து அணுகியிருக்கலாம்.

ஒன்று இதெல்லாம் இந்த வயதில் சகஜம் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். தாமினியைப் போன்ற இளைஞர்களுக்கு பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ இனக்கவர்ச்சியால் ஏற்படுகிற ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக கனியாமலேயே போய்விடக்கூடும். ஆகவே இதை தங்களுடைய அனுபவத்தால் உணரக் கூடிய பெற்றோர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அப்படியே தெரிய வந்தாலும் என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்றோ அல்லது அவர்களாக தங்களிடம் வந்து கூறட்டுமே என்று காத்திருப்பார்கள். 

இரண்டாவது வகை பெற்றோர் தன்னுடைய மகனோ மகளோ காதல் செய்கிறார் என்று தெரிய வந்ததுமே அதை ஊதி பெரிதாக்கி அடுத்து குடியிருப்போருக்கெல்லாம் கேட்கும்படி கூப்பாடுபோடுவார்கள். மகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். மானமே போய்விட்டது, வானமே தங்கள் மீது விழுந்துவிட்டது, ரோட்டில் நடக்கவே முடியாதபடி செய்துவிட்டாயே என்றெல்லாம் மகளை வசைபாடியதோடு நிற்காமல் அவளை வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது என்றும் அடைத்துவிடுவார்கள்.

சேரன் ஒரு ரெண்டும்கெட்டான் தந்தையாக இருந்திருக்கிறார்.

தன்னுடைய மகளுடைய முகநூலில் சந்துரு வந்து I love you என்று போட்டதைப் பார்த்துவிட்டு மகளை பெருந்தன்மையுடன் லைக் போட்டு அதை தொடர அனுமதித்திருக்கிறார். அப்போது தன்னுடைய மகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை என்பதோ அல்லது அவளுடைய காதலனுக்கு ஒழுங்கான வேலை ஏதும் உள்ளதா என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக படவில்லை. தன்னுடைய அந்த பெருந்தன்மையை மிகப் பெருமையாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறியதை உலகமே பார்த்தது, கேட்டது. 

பிறகு அவளுடைய காதலனுக்கு சரியான வேலையில்லை என்பதை கேள்விப்பட்டிருக்கிறார். அதை தன்னுடைய மகளிடமும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு அது ஒன்று பெரிய விஷயமாகப் படவில்லை. அந்த வயதில் காதலில் மூழ்கிப்போனவர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் பிரமைதான் அது. ஆனால் அது சேரனுக்கு பெரிய விஷயமாக படுகிறது.

சந்துருவை அழைத்துப் பேசுகிறார். தன்னுடைய மகளும் படித்து முடிக்க வேண்டும், நீங்களும் பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் ஆகவே ஒரு மூன்றாண்டு காலம் இருவரும் காத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதிலும் தவறேதும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். 

ஆனால் அதற்கும் அவருடைய மகளும் சரி சந்துருவும் சரி செவிமடுக்கவில்லை. அவர்கள் எப்போதும் போலவே மொபைலில் பேசுவதும் சேர்ந்து வெளியில் சென்று வருவதுமாக இருந்துள்ளனர். இதை அறிந்த சேரன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சந்துருவின் குடும்பத்தாரை அழைத்து பேசுகிறார். இருவரும் மூன்று வருடம் காத்திருக்க வேண்டும் என்றும் அதுவரை இருவரும் பேசவோ சந்திக்கவோ கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறார். 

பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தாமினி-சந்துருவின் தொலைபேசி பேச்சும் வெளியில் சேர்ந்து சென்று வருவதும் சேரனுக்கு தெரியாமல் தொடர்கிறது.

அப்போதும் காரியம் ஒன்றும் விபரீதமாகவில்லை. ஆனால் சுமார் மூன்று மாதங்கள் கழித்து தாமினி தன் தந்தையிடம் 'சந்துருவிடம் என்னால் பேசாமல் இருக்க முடியல, அதுக்கு பதிலா செத்துப் போவலாம் போலருக்குப்பா' என்று கூறியதாக சேரனே பத்திரிகையாளரிடம் கூறியதை கேட்டோம். அதைக் கண்டு மனமிளகிப்போன சேரன் அவரே தன்னுடைய மொபைலில் சந்துருவை அழைத்து இருவரையும் பேச வைத்ததாகவும் ஆனால் தான் பேசாமல் இருந்ததாக தன்னிடம் தாமினி கூறிய அந்த மூன்று மாதங்களும் அவர்கள் இருவரும் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்ததை தான் விசாரித்து தெரிந்துக்கொன்டதாகவும் அதே பத்திரிகையாளரிடம் கூறுகிறார்.

சந்துரு தன்னுடைய மகள் முன்பாகவே அவளைப் பற்றி அவதூறாக தன்னுடைய மற்ற பெண் சிநேகிதிகளிடம் குறை கூறினார் என்று வருத்தப்படும் சேரனும் அதையேதான் பத்திரிகையாளர் முன்னிலையில் செய்தார் என்பதை எப்படி மறந்துப் போனார்? மூன்று மாதங்களாக சந்துருவிடம் பேசவில்லை என்று தன்னிடம் உண்மைக்குப் புறம்பாக தாமினி சொன்னார் என்று பேசியது அவரை ஒரு பொய் பேசும் பெண் என்று கூறுவதுபோல் இல்லையா? 

தன் மகளின் இந்த பித்தலாட்டத்தால் கொதிப்படைந்த சேரன் அவரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்று சினிமா பாணியில் கட்டளையிடுகிறார். அதே சினிமா பாணியில் சமயம் பார்த்து வீட்டைவிட்டு வெளியேறும் தாமினி சந்துருவின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் தன்னிடமே திரும்பி வந்து சந்துரு மிக மோசமானவன், தன்னை வைத்துக்கொண்டே மற்ற பெண்களுடன் மொபைலில் பேசுகிறான், அவன் தனக்கு எந்த சந்தோஷத்தையும் அளிக்கவில்லை என்றெல்லாம் புகார் கூறியதாகவும் கூறுகிறார். 

ஆனால் சந்துருவோ தாமினி தன்னுடன் இருந்த மூன்று மாதங்களில் அவளை நல்லவிதமாகத்தான் நடத்தினேன் என்றும் அவளுடைய உடல் மீது என்னுடைய விரல் கூட பட்டதில்லை என்றும் ஆனால் சேரனோ அவளுக்கு வர்ஜின் டெஸ்ட் கூட நடத்திப் பார்த்தார் என்றும் பத்திரிகையாளர் முன்பு கூறி மானத்தை வாங்கிவிட்டார். 

சொந்த மகளுக்கே வர்ஜின் பரிசோதனையா என்று வியந்துபோனேன் நான். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு பொறுப்புள்ள தந்தை செய்யக் கூடிய காரியமா இது? தன்னுடைய மகளுடைய நடத்தை மீதே ஒரு தகப்பன் சந்தேகப்பட்டால் அந்த மகளின் மனது என்ன பாடுபடும்? தன்மானமுள்ள எந்த இளம் பெண்ணும் நிச்சயம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள்.  எப்படி அவருடைய தாயும் இந்த சோதனையை நடத்த அனுமதித்தார் என்பதும் புரியவில்லை. சரி தாமினிக்கு உடல்ரீதியாக  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை மருத்துவ பரிசோதனைகள் கூறிவிட்டிருக்கும். ஆனால் அத்தகைய சோதனைகளுக்கு அவளுடைய சம்மதம் இல்லாமல் உட்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படக்கூடிய மன ரீதியான பாதிப்பின் வீரியம் சேரனுக்கு தெரியுமா?

இதுபோதாது என்று சேரனின் நண்பர் அமீர் தன்னுடைய நண்பரின் குடும்பத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு சந்துருவின் குடும்ப பின்னணியை ஆராய்ந்து தினமும் ஒரு குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் வைப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதை எதற்கு பத்திரிகையாளர்களிடமும் அவர்கள் மூலமாக உலகிற்கும் அவர் தெரிவிக்க வேண்டும்? இதை ஆதாரபூர்வமாக சேரனின் மகள் தாமினியிடம் அளித்து அவருடைய மனதை  மாற்ற முயற்சிக்க அல்லவா செய்திருக்க வேண்டும்?

இவர்கள் மீதான வழக்கு விசாரணையை நீதிமன்ற கூடத்தில் வைத்து நடத்தினால் தாமினி போன்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை கெட்டுவிடுமே என்ற நல்லெண்ணத்தில் தங்களுடைய தனி அறையில் விசாரணையை நடத்த சம்மதித்த நீதியரசர்கள் எங்கே சொந்த மகளென்றும் பாராமல் அவரைப் பற்றி பத்திரிகையாளர்கள் முன்னால் குறை கூறி அலையும் இவர் எங்கே?

ஒருவேளை அவருடைய இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகள்தான் இன்று தாமினியை தன்னுடைய தந்தைக்கு எதிராக நிற்க வைத்துள்ளதோ என்னவோ?

இதுவெல்லாம் போதாது என்பதுபோல் சந்துரு மற்றும் குடும்பத்தாரைப் பற்றி உளவுதுறை அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் முன்வைத்து அமீர் கோரிக்கை விடுகிறார். 

இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?

வாருங்கள் பார்ப்போம்....

நேற்றும் அதற்கு முந்தைய தினமும் நான் இட்ட இரண்டு பதிவுகளில் நான் குறிப்பிட்டவற்றில் இருந்து Non-cognizable offences எனக் கருதப்படும் குற்றங்களில் மஜிஸ்டிரேட் வழங்கக்கூடிய கைது வாரண்ட் இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்ய முடியாது என்று கூறியிருந்தேன்.

சந்துரு மீது அமீர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் யாவுமே இந்த வகையைச் சார்ந்தவைதான். மேலும் சந்துருவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியுமே தவிர இந்த விஷயத்தில் எந்த பாதிப்பும் அடையாத அமீர் அல்லது சேரன் போன்றவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பது அவருக்கு தெரியாது போல் இருக்கிறது.

இந்த வழக்கின் முடிவு எதுவானாலும் சேரனுக்கும் அவருடைய மகளுக்கும் இடையிலுள்ள உறவில்  தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் அவ்வளவு எளிதில் சீராகப் போவது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

சேரனின் விஷயத்தைப் பற்றி பேசியது போதும் என்று நினைக்கிறேன். 

இனி யார் குற்றவாளி தொடரில் நான் இன்று சொல்லவிருப்பதை படியுங்கள்..

இதுவரை காவல்துறை எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் மூலமாவே குற்றவாளி யாராக இருக்கக் கூடும்னு இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியால டிசைட் பண்ணியிருக்க முடியும்கறதால அடுத்த நடவடிக்கை அவரை கைது செய்வதுதான்.

கைது நடவடிக்கை.

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யக் கூடிய குற்றங்களில் (Cognizable Offences) ஒன்று கொலைக்குற்றம். அதனால தடயங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் இவர்தான் குற்றவாளியாக இருக்க முடியும்கற சந்தேகத்துக்குள்ளானவரை காவல்துறை விசாரணை அதிகாரியே  கைது செய்ய முடியும். காவல்துறை அதிகாரிக்கு இருக்கற இந்த அதிகாரத்தைப் பற்றி கு.மு.ச.41,42 மற்றும் 43வது பிரிவுகள் விரிவாக தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லீங்க, ஒருத்தரை கைது செய்றப்பவும் அதற்கு பிறகும் என்னவெல்லாம் செய்யணும்னுகறத கூட 43 முதல் 60 பிரிவு வரை ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்காங்க.

இந்த பிரிவுகள்ல சொல்லியிருக்கறத சுருக்கமா சொல்றேன். 

1. கைது செய்யப்படவர்கிட்ட எதுக்காக அவர கைது செய்யறோம்னு கைது பண்ற அதிகாரி அவர்கிட்ட தெளிவா சொல்லணும்.

2. அவர ஸ்டேஷனுக்கு கொண்டு போனதும் உடனே ஸ்டேஷன்லருக்கற டைரியில (Station Diary) அவர ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த தேதி, நேரம் எல்லாத்தையும் பதிவு செய்யணும். 

3. இன்னார இன்ன குத்தத்துக்காக கைது செஞ்சிருக்கோம்னு அவருடைய குடும்ப உறவினர், அப்படி யாரும் இல்லைன்னா, அவருடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாவோ தந்தி மூலமாவோ உடனே தெரிவிச்சிறணும். (தபால் நிலைய தந்தி சேவை இதற்குத்தான் பெரும்பாலும் பயன்பட்டு வந்தது. ஆனால் செல்ஃபோன் வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தந்தி அனுப்பும் முறை இப்போது கைவிடப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.)

4. கைது செய்யப்பட்டவரை தேகப் பரிசோதனை செய்து (body search) அவர்கிட்டருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அல்லது ஆவணங்கள் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு அதுக்குன்னு இலாக்கா வடிவமைச்சிருக்கற படிவத்தில் ஒரு ரிப்போர்ட் தயாரிக்கணும். இதுவும் மர்டர் ஸ்பாட்லருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலைப் போன்று மிகவும் முக்கியமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த லிஸ்ட்ல இல்லாத எந்த பொருளையும் கேஸ் கோர்ட்ல விசாரயணையில இருக்கறப்போ குத்தவாளிக்கிட்டருந்து கைப்பற்றுனதா சமர்ப்பிக்க (produce) முடியாது. இந்த லிஸ்ட்ல கைது செய்யப்பட்டவரோட கையெழுத்தையும் அப்பவே வாங்கிறணும். 

5.கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள்ள அவர அருகிலுள்ள (அதிகார எல்லைக்குட்பட்ட) மஜிஸ்திரேட் முன்பு ஆஜர் பண்ணிறணும். அதுக்கப்புறம் அவர மேற்கொண்டு விசாரிக்கணும்னா நீதிபதியோட பர்மிஷனோட போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்கலாம். அதுக்கு நீதிபதி ஒத்துக்காத பட்சத்துல அவர் சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் பெண் கைதிகளுக்கு 24 மணி நேரம் வரைக்கும்லாம் காத்திருக்க தேவையில்லையாம். எவ்வளவு சீக்கிரம் அவரை மஜிஸ்திரேட் முன்னால  ஆஜர் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்கலாகாது என்ற உச்ச நீதிமன்றத்தில் ஆணையால் இந்த நியதி.

6. ஸ்டேஷன்ல வச்சிருக்கறப்போ - அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் -  அவரை அடித்து துன்புறுத்தவோ அல்லது வற்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி நிர்பந்திக்கவோ கூடாது. அப்படி பெறப்படும் எந்த வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறதும் முக்கியமான விஷயம். இது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துங்கறதால இந்த மாதிரியான அடாவடி நடவடிக்கையில் தகுந்த முகாந்தரம் இல்லாமல் இறங்கக் கூடாது என்று தமிழக காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் குற்றவாளி தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஒரு மஜிஸ்டிரேட் முன்னால ஆஜர்படுத்திறணும். மஜிஸ்திரேட் அவர் எந்த வற்புறுத்தலும் இல்லாம தானா முன்வந்து ஒப்புக்கொள்றாராங்கறத உறுதிப்படுத்திக்கிட்டு அவர் சொல்ற வாக்குமூலத்தை எழுதி எடுத்துக்குவாரு. இப்படி வாங்கற வாக்குமூலத்த மட்டுந்தான் கோர்ட் ஏத்துக்கும். 

7. கைது செய்யப்படுபவரை  தேவையில்லாமல் (unless it is absolutely necessary) கையில விலங்கு மாட்டியோ இல்ல கால சங்கிலியால கட்டியோ கூட்டிக்கிட்டு போகக் கூடாது (shall not be handcuffed and paraded in the street unnecessarily without the authority of the Court).

கைதியிடம் விசாரனை

கைது செஞ்சவர 24 மணி நேரத்திற்குள்ள கோர்ட்ல ஆஜர்படுத்தணுங்கற கண்டிஷன் இருக்கறதால பல சமயங்கள்ல அவர முழுமையா விசாரணை பண்ண முடியாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. முக்கியமா, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் குற்றத்தை ஒப்புக்காம இருக்கறப்போ  அவர்கிட்டருந்து விசாரணை மூலமா வெளியக் கொண்டு வரவேண்டிய உண்மைகள் பல இருக்கலாம். அந்த மாதிரியான நேரத்துல அரெஸ்ட் பண்ணவர கோர்ட்ல ஆஜர் செஞ்சி தங்கள் பொறுப்பில் (Police custody) எடுத்து விசாரிக்க பர்மிஷன் கேக்கணும். சாதாரணமா இந்த மாதிரி ரிக்வெஸ்ட்ட கோர்ட் நிராகரிக்கறதில்லை. ஆனா போலீஸ் பத்து நாள் விசாரிக்கணும்னு கேட்டா கோர்ட் அதுல பாதிக்குத்தான் சம்மதிப்பாங்க. இத தெரிஞ்சி வச்சிருக்கற போலீஸ் அவங்களுக்கு எவ்வளவு நாள் வேணுமோ அதுல ரெண்டு மடங்கா கேப்பாங்களாம். ஆனா கைதிக்கு ஆதரவா ஆஜராகற வழக்கறிஞர் போலீசோட ரிக்வெஸ்ட்ட அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டார். ஆனால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு காவல்துறையினரின் விசாரணை இன்னும் முடிவடைஞ்சிருக்காதுன்னு நீதிபதி நினைச்சார்னா அவரை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்கறது வழக்கம். அப்படி மேற்கொண்டு போலீஸ் கஸ்டடி தேவையில்லைன்னு மஜிஸ்டிரேட் நினைச்சா அவர நேரடியா கோர்ட் கஸ்டடியில (judicial custody) வச்சாப் போறும்னு சொல்லிருவார். கோர்ட் கஸ்டடின்னா ஜெயில்வாசம்தான். ஆனா கொலைக்கான மேலும் சில ஆதாரங்கள் போலீஸ்க்கு கிடைக்கறபட்சத்துல கைதியை தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்கணும்னு மறுபடியும் காவல்துறையினர் மனுதாக்கல் செய்யலாம். 

குற்றவாளியின் வீடு/அலுவலகம் சோதனையிடுதல்

கைது செய்யப்பட்டவர கோர்ட்ல ப்ரட்யுஸ் பண்றப்பவே அவரோட ஆஃபீஸ்/வீடு எல்லாத்தையும் சோதனை போடணும்னு சொல்லி போலீஸ் பெட்டிஷன் போட்டு கோர்ட்லருந்து Search Warrant வாங்கிருவாங்க. சாதாரணமா  ஒருத்தர கைது செஞ்ச 24 மணி நேரத்திற்குள்ள இந்த சோதனையை செஞ்சாத்தான் அது effectiveஆ இருக்கும்னு போலீசுக்கு தெரியும். அத விட்டுட்டு சாவகாசமா searchக்கு போனா அதுக்குள்ள எல்லா தடயங்களையும் சம்மந்தப்பட்டவரோ இல்ல அவரோட ஆளுங்களோ மறைச்சிடறதுக்கு சான்ஸ் குடுத்தா மாதிரி ஆயிருமே. பல கேஸ்லருந்து குத்தவாளி தப்பிக்கறதுக்கு இந்த விஷயத்துல போலீசாரோட மெத்தனமும் ஒரு காரணம்னு பாதிக்கப்பட்டவங்க சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு.  குற்றம் சாட்டப்பட்டவர் தடயங்களை மறைத்துவிட வாய்ப்பிருக்குன்னு போலீஸ் நினைச்சா கோர்ட் உத்தரவு கையில இல்லாமேயே கூட search பண்றதுக்கு சட்டத்துல இடம் இருக்கு. இந்த மாதிரி சமயத்துல இன்னின்ன காரணத்தால நாங்க சோதனைய துவக்கப் போறோம்னு ஒரு பெட்டிஷன கோர்ட்ல தாக்கல் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு செய்யலாம்னு கு.மு.ச. பிரிவு 165ல சொல்லியிருக்காங்க. 

இந்த மாதிரி சோதனை நடத்தற போலீஸ் அதிகாரிங்க எப்படி செயல்படணும்னு கூட தமிழக காவல்துறை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருக்காங்க.  அதுல சில முக்கியமான உத்தரவுகளை கீழ குடுத்துருக்கேன். 

1. சோதனைக்கு தேவையான நீதிமன்ற ஆணையை (search warrant) வீட்டில குடியிருக்கறவங்களுக்கு இல்லன்னா ஹவுஸ் ஓனருக்கு காட்டி அவரோட பர்மிஷனோடத்தான் சோதனை நடத்தவேண்டிய இடத்துக்குள்ள நுழையணும். அவங்க வேணும்னே பர்மிஷன் குடுக்க மாட்றாங்கன்னு போலீசுக்கு சந்தேகம் வந்தா வீட்டின் கதவு/ஜன்னல்களை உடைத்து திறக்கும் அதிகாரம்கூட போலீசுக்கு உண்டாம். ஆனாலும் கூடிய மட்டும் போலீஸ் அத தவிர்க்கணும்.  

2.சோதனையை துவக்குறதுக்கு முன்னாலயே அக்கம்பக்கத்துலருக்கற இரண்டு பொறுப்பான ஆளுங்கள சாட்சியா அழைச்சிக்கணும். 

3.குற்றத்திற்கு சம்மந்தமில்லாத பொருட்களை/ஆவணங்களை அழிக்கவோ சேதப்படுத்தவோ கூடாது.

4.சோதனையின்போது வீட்டிலுள்ளவர்களை தனிநபர் சோதனைக்கு (தேகப் பரிசோதனை ) உட்படுத்த காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரம் உண்டுன்னாலும் அவர்கள் பெண்களாக இருக்கும்பட்சத்தில் பெண் காவலர்கள் மட்டுமே அத்தகைய சோதனையை செய்ய வேண்டும். 

5.சோதனை நடத்தறப்போ கிடைக்கற எல்லா பொருட்களையும் அங்கேயே அதற்கென காவல்துறை இதுக்காக வச்சிருக்கற படிவத்தில் பட்டியலிட்டு கூட இருந்த சாட்சியங்களோட கையெழுத்தையும் வாங்கிறணும். இது ரொம்ப முக்கியம். ஏற்கனவே சொன்னா மாதிரி இதுல இல்லாத பொருட்களை கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணவும் முடியாது. இதுல இருக்கற பொருட்களை ப்ரொட்யூஸ் பண்ணாம இருக்கவும் முடியாது. 

6.கூடிய மட்டும் பட்டியல் அடித்தல்/திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லன்னா அதுவே கைதி கேஸ்லருந்து விடுபட வாய்ப்பாயிரும்.

இன்னும் இரண்டே பதிவுகள்தான்...

13 ஆகஸ்ட் 2013

கொலையாளி யார் - 2

நேற்றைய பதிவில் நான் அளித்திருந்த எடுத்துக்காட்டுகளைப் படித்த பிறகும் குழப்பமாகத்தான் உள்ளது என்று சிலர் கருத்துரை இட்டிருந்ததை படித்தேன். ஆகவே இந்திய தண்டனைச் சட்டம் 300வது பிரிவின் கீழ்  அளிக்கப்பட்டுள்ள மேலும் சில எடுத்துக்காட்டுகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் தருகிறேன். 

(a) A shoots Z with the intention of killing him. Z dies in consequence. A commits murder. 

ஒருவர் (A) இன்னொருவரை (Z) கொலை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கியால் சுடுகிறார். குண்டடிபட்ட நபர் இறந்துவிடுகிறார். இது கொலை. A கொலைக் குற்றவாளி. இதில் எவ்வித குழப்பமும் இல்லை என்று நினைக்கிறேன்.

(b) A, knowing that Z is labouring under such a disease that a blow is likely to cause his death, strikes him with the intention of causing bodily injury. Z dies in consequence of the blow. A is guilty of murder, although the blow might not have been sufficient in the ordinary course of nature to cause the death of a person in a sound state of health. But if A, not knowing that Z is labouring under any disease, gives him such a blow as would not in the ordinary course of nature kill a person in a sound state of health, here A, although he may intend to cause bodily injury, is not guilty of murder, if he did not intend to cause death, or such bodily injury as in the ordinary course of nature would cause death. 

ஒருவருக்கு (A) அவருடைய எதிராளி (Z) உடல்நலக் குறைவாக இருக்கிறார் என்றும் தெரியும் அவரை தாக்கினால் அதனால் ஏற்படும் காயம் காரணமாக அவர் இறந்துவிடுவார் என்றும் தெரியும். இருந்தும் அவரை தாக்கி காயப்படுத்துகிறார். காயமடைந்தவர் மரித்துவிடுகிறார். A அடித்த அடியால் அவர் மரணமடைய வாய்ப்பில்லை என்றாலும் ஏற்கனவே Z உடல்நலம் இல்லாமல் இருந்தவர் என்பது தெரிந்திருந்தும் A அவரை தாக்கினார். ஆகவே A செய்தது கொலைதான். 

ஆனால் Z உடல்நலம் இல்லாமல் இருந்தது A க்கு தெரியாது என்று வைத்துக்கொள்வோம். Zக்கு ஏற்பட்ட காயம் உயிர் போகும் அளவுக்கு கடுமையானதும் அல்ல என்றும் வைத்துக்கொள்வோம். அந்த காயத்தினாலேயே அவர் உயிர் பிரிய வாய்ப்பில்லை என்று மருத்துவர்களும் கருதுகின்றனர். அவர் உடல்நலம் குன்றி இருந்ததாலேயே அந்த உடல்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் அவருடைய உயிர் பிரிய காரணமாக அமைந்துவிட்டதே தவிர Aவுக்கு உண்மையில்யே Zஐ கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இல்லை. Zன் உடல் நலம் நன்றாக இருந்திருக்கும் பட்சத்தில் அவர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புண்டு.   அந்த சூழலில் A செய்தது கொலையாக கருதப்படாது!

(c). A intentionally gives Z a sword-cut or club-wound sufficient to cause the death of a man in the ordinary course of nature. Z dies in consequence. Here, A is guilty of murder, although he may not have intended to cause Z's death. 

A வேண்டுமென்றே Z ஐ அரிவாளால வெட்டுகிறார். Z அதன் காரணமாக மரிக்கிறார். Aவுக்கு Zஐ கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஏதும் இல்லையென்றாலும் இத்தகைய அரிவாள் வெட்டு ஒருவருடைய மரணத்திற்கு காரணமாகிவிடும் என்பது அவருக்கு தெரியும். ஆகவே இதுவும் கொலைதான். 

(d) A without any excuse fires a loaded cannon into a crowd of persons and kills one of them. A is guilty of murder, although he may not have had a premeditated design to kill any particular individual.

A எவ்வித காரணமும் இல்லாமல் தன்னிச்சையாக  ஒரு கூட்டத்தை நோக்கி சுடுகிறார். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் குண்டடி பட்டு இறந்துவிடுகிறார். மரித்த நபரை கொல்ல வேண்டுமென்று A முன்கூட்டியே திட்டமிடவில்லையென்றாலும் A செய்தது கொலைதான். 

இதுக்கு மேல தெளிவா சொல்ல முடியுமான்னு தெரியலை. 

இன்னமும் புரியலையா? விட்டுத்தள்ளுங்க. 

கொலை நடந்திருச்சின்னு நினைச்சிக்கிட்டு மேல ஆகவேண்டியதை பார்ப்போமா?

இந்த பகுதியில கொலைக்கு காரணமாயிருந்தவரை எப்படி கண்டு பிடிச்சி கைது செய்யணும், அதுல போலீசோட பொறுப்பு என்ன அப்படீன்னு பாக்கலாம். 

ஒரு கொலையாளியை கண்டு பிடிக்கறதுக்கு போலீஸ் எடுத்துக்கற முயற்சிகளைத்தான் புலன் விசாரணைன்னு சொல்றோம். இந்த விசாரணையில போலீசுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கு, என்னென்ன கடமைகள் இருக்குன்னு இந்திய குற்றவியல் முறைச் சட்டத்துல சொல்லி வச்சிருக்காங்க. 

குவிமுச:பிரிவு 154: 

ஒரு கொலை நடந்ததாக கேள்விப்பட்டதுமே அந்த ஏரியா காவல்துறை நிலைய பொறுப்பு அதிகாரி (Station House Officer) - ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் - தங்களுக்கு கிடைச்ச விவரத்தை எழுத்து மூலமா பதிவு செய்யணும்னு இந்த பிரிவு சொல்லுது. அதுமட்டுமில்லாம அந்த தகவல அளிச்சவருக்கு வாசிச்சி காண்பிச்சி தகவல் குடுத்தவரோட கையெழுத்தையும் வாங்கி அதுக்குன்னு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சிருக்கற புத்தகத்துல எழுதி வச்சிரணுமாம்.  இதத்தான் முதல் தகவல் அறிக்கைன்னு (First Information Report) சொல்றாங்க. .

கொலை சம்மந்தமான தகவல் ஃபோன்லயோ இல்ல லெட்டர் மூலமா கிடைக்கற பட்சத்துல அது கிடைச்சதுமே காவல் நிலைய அதிகாரி ஒருத்தர் சம்பவம் நடந்ததா சொல்லப்பட்டிருக்கற இடத்துக்கு போயி தகவல் உண்மைதானான்னு விசாரிக்கணும். அதுக்கப்புறம் ஸ்டேஷனுக்கு திரும்பி FIR தயாரிக்கணும்னும் இந்த பிரிவு சொல்லுது. 

அது மட்டும் போறாது. சில போலீஸ் ஸ்டேஷன்ல செய்யிறா மாதிரி இப்படி தயார் செஞ்ச FIRஅ ஸ்டேஷன்லருக்கற ஃபைல்ல போட்டு வச்சிறாம அதோட ஒரிஜினல் காப்பிய சம்மந்தப்பட்ட ஏரியா மஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு அனுப்பணும். 2வது காப்பிய ஸ்டேஷன் ஃபைல்லயும் 3வது மற்றும் 4வது காப்பிகளை தங்களோட ரேஞ்ச், வட்டார காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பணும். (அப்பத்தானே இவங்க அது மேல ஏதாச்சும் உருப்படியா ஆக்‌ஷன் எடுத்துருக்காங்களான்னு சூப்பர்வைஸ் பண்ண வசதியாருக்கும்?) அப்புறம் FIRஓட 5வது காப்பிய ஃப்ரீயா தகவல்/புகார் அளித்தவருக்கு அவர் கேட்டாலும் கேக்காட்டாலும் குடுத்துரணும்னும் இந்த பிரிவுல சொல்லியிருக்காங்க. 

இந்த முதல் தகவல் அறிக்கைங்கறது தமிழ்நாட்டு போலீஸ் இலாக்கா ஒரு பேட் (Pad) மாதிரி பைன்ட் பண்ணி ஒவ்வொரு ஸ்டேஷனுக்கு குடுத்திருக்காங்களாம். ஒவ்வொரு FIR காப்பியிலயும் முதல் ஐந்து காப்பிங்களை கிழிச்சி எடுத்துட்டு ஆறாவது காப்பிய (counter-foil) அந்த பேடிலயே விட்டு வச்சிரணுமாம்.  இத டிஎஸ்பியோ இல்ல ஏரியா எஸ்பியோ அப்பப்போ ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்‌ஷனுக்கு வர்றப்போ அவங்களோடா பார்வைக்கு குடுக்கணுமாம். அந்த பேடுல இருக்கற ஒவ்வொரு FIR formலயும் சீரியல் நம்பர் ப்ரின்ட் பண்ணியிருக்கும். இது எதுக்குன்னா கிடைக்கற இன்ஃபர்மேஷன உடனுக்குடனே பதிவு பண்ணி ரிப்போர்ட் தயார் பண்றாங்களான்னு பாக்கறதுக்காம். இல்லன்னா வேண்டியப்பட்டவங்க கேஸ்னா மட்டும் FIR போடறது இல்லன்னா பேசாம இருந்துரலாம். அப்படி இல்லன்னா எப்ப சவுகரியமோ அப்போ போட்டுக்கலாம்னு ஸ்டேஷன் ஆளுங்க இருந்துருவாங்களே. அத தடுக்கறதுக்குத்தான் இந்த சீரியல் நம்பர். அதாவது நேத்து கிடைச்ச இன்ஃபர்மேஷன பதிவு பண்ணாம இன்னைக்கி கிடைச்ச இன்ஃபர்மேஷன பதிவு பண்ணி FIR போட முடியாதாம். 

இதுமட்டும் இல்லீங்க. ஸ்டேஷன்ல கிடைக்கற புகார்களோட விவரங்கள நோட் பண்ணி வைக்கறதுக்குன்னே  ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் பொது நாட்குறிப்புன்னு (Station general diary) ஒரு புத்தகம் வச்சிருக்கணுமாம். அதுல கிடைக்கற புகார்கள தேதிவாரியா ரெக்கார்ட் பண்ணி வைக்கணுமாம்.  அப்பப்போ ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்‌ஷன் வர்ற மேலதிகாரிங்க இந்த டைரிய பார்த்து அது சரிவர பராமரிக்கப்படுகிறதான்னு பார்த்து இல்லன்னா ஸ்டேஷன்ல வச்சிருக்கற மேலதிகாரி விசிட் புத்தகத்துல எழுதி வைக்கணுமாம். 

இன்னொன்னையும் இங்க முக்கியமா சொல்லணும். இப்படி கிடைக்கற புகார்களை பதிவு செய்ய முடியாதுன்னு சொல்றதுக்கு எந்த காவல்துறை அதிகாரிக்கும் அதிகாரம் இல்லையாம். அதுமட்டுமில்லாம நீங்க சொல்ற புகாரப்பத்தி  தீர விசாரிச்சிட்டுத்தான் முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பேன்னும் சொல்ல கூடாதாம். புகார் கிடைச்சவுடனே பதிவு பண்ணி FIR போட்டுட்டுத்தான் விசாரணையிலேயே இறங்கணுமாம். அதையும் மீறி புகாரை பதிவு செய்ய முடியாதுங்கன்னு யாராச்சும் சொன்னா அவரோட மேலதிகாரியோட (ஏரியா கண்கானிப்பாளர்) ஆஃபீசுக்கு எழுத்து மூலமா தெரிவிக்கலாம்னும் கு.மு.ச.154(3) பிரிவுல சொல்லியிருக்காங்க.

ஏற்பாடு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதையும் மீறி சில ஸ்டேஷன் ஆளுங்க FIR போடாமயே காலம் தள்றாங்களே அதெப்படி? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

சரிங்க,  புகார் பதிவு பண்ணி. முதல் தகவல் அறிக்கையும் போட்டாச்சி. 

மேக்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கணும்?

விசாரணை  (குமுச. பிரிவு 156.

Cognizable Offenceனு சொல்ற வாரண்ட் கேஸ்ல (கொலைக்குற்றம் ஒரு cognizable offenceதான்னு நேத்து பார்த்தோம்) ஸ்டேஷன் அதிகாரிக்கு (ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர்) சம்மந்தப்பட்ட மஜிஸ்டிரேட்டின் எழுத்து பூர்வமான உத்தரவு இல்லாமலேயே, புகாரை விசாரிக்க அதிகாரம் உண்டு. மற்ற குற்றங்களில் மஜிஸ்டிரேட்டின் உத்தரவுக்குப் பிறகே விசாரணையை துவக்க முடியும். 

சாதாரணமா, எல்லா ஸ்டேஷன்லயும் ஒரு ஆய்வாளர் இருப்பார். அவர்தான் அந்த ஸ்டேஷனோட தலைமை அதிகாரி. அவருக்குக் கீழ சட்டம் ஒழுங்கு (Law & Order), க்ரைம் (Crime)னு ரெண்டு பிரிவுகள் இருக்கும். சின்ன ஊர்ல இருக்கற சின்ன ஸ்டேஷன்ல தலைமை அதிகாரியே துணை/உதவி ஆய்வாளராத்தான் இருப்பார். ஸ்டேஷன்ல வர்ற எல்லா புகாரையுமே இவர்தான் விசாரிச்சாவணும். 

ஆனால் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாதிரி நகரங்கள்லருக்கற ஏறக்குறைய எல்லா ஸ்டேஷன்லயும் இந்த ரெண்டு முக்கிய பிரிவுகளுக்கும் தனித்தனியா உதவி/துணை ஆய்வாளர்கள் (Sub Inspectors) இருப்பாங்க. கொலைக் குற்றங்கள விசாரிக்க வேண்டிய பொறுப்பு க்ரைம் செல் எஸ்.ஐக்குத்தான். ஆனால் சென்சிட்டிவா (sensitive) கருதப்படற சில கேஸ்கள்ல ஆய்வாளரோ அல்லது அவருக்கும் மேல இருக்கற டி.எஸ்.பி அல்லது எஸ்.பியோ கூட நேரடியா விசாரணையில இறங்கலாம். அல்லது அவர்களுடைய தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணையை நடத்தலாம்.

கொலைக்களம் (Scene of crime)

கொலைக்குற்றங்களில் விசாரணையின் முதல் கட்டமே கொலை நடந்ததாக கூறப்படும் இடத்தை பார்வையிடுவதுதான்.

ஆனால் விசாரணை அதிகாரி கூட  அங்க கொலையாகி கிடக்கறவரோட உடலையோ அங்க கிடக்கற பொருட்களையோ கையுறை இல்லாமல் தொடக் கூடாதாம். அதாவது கொலைக்குற்றத்தை நிரூபிக்க மிக முக்கியம்னு கருதப்படற எந்த ஆதாரங்களையும் கலைச்சிறக் கூடாது இல்லையா? அத்தோட குற்றவாளி அல்லது அவருடைய கூட்டாளிகளின் கைரேகைகள் ஏதாச்சும் இவர் கைபட்டு அழிஞ்சிறக் கூடாதுங்கறதுக்காகத்தான் இந்த கன்டிஷன். 

சாதாரணமா அங்க கிடக்கற தடயங்களை கலெக்ட் பண்றதுக்குன்னே தனித்தனியா டீம்ஸ் (Teams) இருப்பாங்க. ஒவ்வொரு சிட்டியிலயும் இதுக்குன்னு எக்ஸ்பேர்ட்ஸ் இருக்கற குழுக்கள் இருக்கும். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள், ஃபோட்டோ, வீடியோ கிராஃப் எடுக்கறவங்க, மோப்ப நாய் ஸ்க்வாட் இப்படீன்னு இருப்பாங்க. ஸ்பாட்டுக்கு போற அதிகாரி இந்த டீம்கள கூப்ட்டு விஷயத்த சொல்லிட்டாலே அவங்க ஸ்பாட்டுக்கு வந்து என்னென்ன செய்யணுமோ செஞ்சிட்டு அவங்கவங்க ரிப்போர்ட்ட இன்வெஸ்ட்டிகேஷன் பண்ற அதிகாரிக்கு அனுப்பிச்சிருவாங்க. ஆனா சின்ன ஊர்ங்கள்ல ஸ்பாட்டுக்கு போற எஸ்.ஐ.யே கையில க்ளவுச போட்டுக்கிட்டு ஸ்பாட்ல கிடக்கற கேசுக்கு யூஸ் ஆவலாம்னு நினைக்கற எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிருவாரு. 

அதுக்கப்புறம் பிறகு மர்டர் ஸ்பாட்டை ஒரு வரைபடமா (Rough sketch) தயாரிக்கணுமாம். சாலை விபத்து நடந்த இடத்துல கிடக்கற பாடிய (Body) சுத்தி சாக்பீஸால கோடு வரைஞ்சிருக்கறத பாத்திருப்பீங்கன்னு நினைக்கறேன். அதே மாதிரி கொலை நடந்த இடத்துல கிடக்கற உடல சுத்தியும் க்ளியரா தெரியறா மாதிரி லைன் (Line) வரைஞ்சி மார்க் பண்ணணும். அதுமட்டுமில்லாம பாடிய சுத்தி கிடக்கற எல்லாத்தையும் சோபா, மேசை, நாற்காலி அப்படீன்னு எது இருந்தாலும் ஒவ்வொரு ஐயிட்டமும் இருந்த பொசிஷன (position) குறிச்சிக்கணும். சாதாரணமா இந்த திங்ஸ் (things) கிடக்கற இடங்கள ஒரு கடிகாரத்துல ஒவ்வொரு மணியும் எப்படி அமைஞ்சிருக்கோ அதுமாதிரி குறிச்சி நோட் பண்ணுவாங்க. அதாவது பாடிக்கு வலது பக்கத்துல இருக்கறத at 3. 0' clockம்பாங்க. இடது பக்கம் கிடந்தா 9 0' க்ளாக். கீழ் பக்கம் இருந்தா 6 0' க்ளாக்.. அப்படீன்னு எல்லா பொருட்களும் கிடந்த இடத்த குறிச்சி மொத்த இடத்தையும் ஒரு டிராயிங் மாதிரி வரைஞ்சிருவாங்க. அதுல கொலை எங்க நடந்தது, கட்டடத்தோட பேர் என்ன, flatல நடந்துருந்தா அந்த flat நம்பர், எந்த தளம், ரோட்டு விலாசம், ஓனர் வேற யாராச்சும்னா அவரோட பேர் இப்படி எல்லாத்தையும் குறிச்சிக்குவாங்க. ரோட்ல கிடக்கற பாடின்னா அதுக்கு பக்கத்துலருக்கற கடைகளோட பேர், விளக்கு கம்பம் (lamp post) ஏதாச்சும் இருந்தா அதுல இருக்கற நம்பர், பக்கத்துல ஏதும் பஸ் ஸ்டாப் இருந்திச்சின்னா அது பாடி கிடந்த எடத்துலருந்து எத்தன சென்டி மீட்டர் தூரம் இப்படீன்னு ஸ்பாட்ட ஈசியா ஐடென்டிஃபை பண்றதுக்கு உதவி பண்ணக் கூடிய எல்லாத்தையும் நோட் பண்ணி அதுக்கு ரெண்டு மூனு காப்பி எடுத்து ஸ்டேஷன்ல இந்த கேசுக்குன்னு ஒரு ஃபைல் கட்டு ரெடி பண்ணி அதுல வச்சிருவாங்க. 

புகைப்படம், வீடியோ

அடுத்தபடியா மர்டர் ஸ்பாட்ட ஃபோட்டோ, வீடியோ எடுக்கறது. நான் மேல சொன்ன வரைபடத்தை உடனே தயாரிக்க முடியாம போற பட்சத்தில இந்த புகைப்படங்களும் வீடியோவும் ரொம்பவுமே ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். ஏன்னா கொலைய செஞ்சிட்டு தப்பிச்சி போயிட்ட கொலையாளிய கண்டுபிடிக்கறதுக்கு ஆரம்ப கட்டத்துல ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கறது இந்த ஃபோட்டோஸ் மற்றும் வீடியோஸ்தான். சேலம் கொலைவழக்குல இந்த  ரெண்டையுமே சம்மந்தப்பட்ட போலீஸ் ஆஃபீசர்ங்க செய்யாததால மீடியா ஆளுங்க எடுத்திருந்த ஃபோட்டோவ  கொஞ்சம் தரீங்களான்னு கெஞ்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுதாம். இது வேணும்னே செய்யப்பட்ட வேலைன்னு பிஜேபி ஆளுங்க சொன்னதுல உண்மையிருக்கோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனா இப்படியாபட்ட குற்றச்சாட்டை போலீஸ் தவிர்த்திருக்கலாம்னுதான் தோனுது. 

பார்வை அறிக்கை (visit report)

கொலை நடந்த இடத்த (Murder spot) விசிட் பண்ண அதிகாரி அடுத்ததா செய்ய வேண்டிய வேலை அதப்பத்திய ஒரு அறிக்கைய ரெடி பண்றது. இத விசிட் பண்ண எடத்துலயே வச்சி தயாரிச்சிறணும்னு இலாக்கா தன்னோட அதிகாரிகள்கிட்ட சொல்லியிருக்கு. அந்த ரிப்போர்ட்ல ஸ்பாட்லருக்கற ரெண்டு responsible individuls கிட்டருந்து சாட்சி கையெழுத்தும் வாங்கிறணுமாம். 

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கைப்பற்றுதல் (Seizure)

ஸ்பாட்லருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயூதம், பொருட்கள் - உதாரணத்துக்கு ரத்த கறை படிஞ்ச கத்தி, ஆடைகள், கொலையாளி விட்டுட்டுபோனதுன்னு சந்தேகப்படற எதுவானாலும் அத விசாரணைக்கு போற அதிகாரி கைப்பற்றி அத உடனே ஒரு பட்டியல் மாதிரி தயார் பண்ணி அதுலயும் ஸ்பாட்லருக்கற ரெண்டு பேரோட சாட்சி கையெழுத்தையும் வாங்கிரணுமாம். இந்த பட்டியல தயாரிக்கறதுக்குன்னு தமிழ்நாடு போலீஸ் ஒரு தனி படிவம் (printed form)வச்சிருக்கு. இந்த லிஸ்ட்டும் ரொம்பவும் முக்கியமான டாக்குமென்டா கருதப்படுது. இந்த லிஸ்ட்ல இல்லாத எதையுமே கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது போலீஸ் produce பண்றதுக்கு கோர்ட்டோ இல்ல defense வக்கீலோ அனுமதிக்கமாட்டர்ங்கறதால இது ரொம்பவும் முக்கியமான வேலைன்னு போலீஸ் இலாக்காவோட பல சர்க்குலர்கள் (circulars) சொல்லுது . இத சீரியசா எடுத்துக்காததாலேயே தள்ளுபடியான பல கேஸ்களும் இருக்காம், இதாலேயே இதுவரைக்கும் கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியாத கேஸ்களும் இருக்காம். 

வாக்குமூலங்கள் (statements) - குமச.161- 162

கொலைய நேர்ல பாத்த அல்லது கேள்விபட்ட நபர்கள் போலீஸ் கிட்ட சொல்ற விஷயங்களத்தான் அவங்களோட வாக்குமூலமா ரிக்கார்ட் பண்ணி கோர்ட்ல தாக்கல் பண்ணுவாங்க. நேரில் கண்ட சாட்சியங்களை Eye Witness என்றும் கேள்விப்பட்டத போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்றவங்களை  Informerனும் போலீஸ் சொல்றாங்க.

இவங்க சொல்றத சேகரிக்கும் காவல்துறை அதிகாரிகள் எப்படி செயல்படணும்னு கு.மு.ச 161-162 பிரிவுகள் விலாவாரியா சொல்லுது.

அதன்படி சாட்சிகள் சொல்றத தெளிவா குறிச்சிக்கறதோட அத அவங்களுக்கு படித்து காண்பித்து சரிபார்த்துக்கொள்றதும் அவசியமாம். அத்துடன் கொலை நடந்த இடத்துலருந்து அவர் எவ்வளவு தூரத்துல இருந்தார், இருந்தார், அப்போ இரவா, பகலா? இரவு என்றால் அங்கு போதிய வெளிச்சம் இருந்துதான்னுல்லாம் விசாரிச்சா மட்டும் போறாது, அவங்களோட வாக்குமூலத்திலயும் அது க்ளியரா சொல்லப்பட்டிருக்கணுமாம்.  

இந்த சந்தர்ப்பத்துல நா ரொம்ப நாளைக்கி முன்னால பார்த்த ஒரு ஆங்கில படத்துல வந்த சீன் ஒன்ன சொல்றேன். அந்த படத்தோட பேரு My Cousin Vinny. அமெரிக்காவிலுள்ள அலபாமா ஸ்டேட்ல ஒரு கடையில நுழைஞ்சி கவுன்டர்ல இருந்த கேஷியர்கிட்டருந்து பணத்தை எடுத்துக்கிட்டு அவர சுட்டுட்டு ரெண்டு பசங்க கார்ல தப்பிச்சி போயிருவாங்க. ஏறக்குறைய இருட்டற நேரம். நடந்த கொலையை சுமார் நூறடி தூரத்துல கடைக்கு எதிர்ல இருக்கற flatல குடியிருக்கற ஒரு அறுபது வயது லேடி பாத்ததா சாட்சியம் சொல்வாங்க. ஆனா அவரோட வயச வச்சி பாக்கறப்போ அவ்வளவு தூரத்துலருந்து அதுவும் ராத்திரி நேரத்துல தப்பிச்சி போனவங்கள க்ளியரா பாத்து அடையாளம் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லைன்னு defense வக்கீல் வாதாடுவார். அத proof பண்றதுக்கு கோர்ட்டுக்குள்ளவே அந்தம்மா நிக்கற சாட்சி கூண்டுலருந்து டேப்ப வச்சி நூறடி தூரம் அளந்து அங்க போயி நின்னுக்கிட்டு தன் இரு கை விரல்களை காட்டி இது எத்தனைன்னு கேப்பார். கண்ணாடி இல்லாம பாக்க முடியாத அந்த லேடி கண்களை சுருக்கிக்கிட்டு பார்த்துட்டு மூனு விரல்னு சொல்லுவார். அதை வைத்தே அந்த சாட்சி அளித்த சாட்சியம் சொல்றத நம்பமுடியலைன்னு proof பண்ணி கேச ஜெயிச்சிருவார்.  ஆகவே நேரில் பார்த்ததா சொல்ற ஆளோட வயசும் அவர் ஸ்பாட்லருந்து  எவ்வளவு தூரத்துல இருந்தார் அப்போ சூரிய ஒளி இருந்துதா இல்லன்னா போதிய வெளிச்சம் இருந்துதான்னுல்லாம் பாக்கறதும் ரொம்பவும் முக்கியம். 

மேலும், ஏற்கனவே தயாரிச்சி ஃபைல்லருக்கற FIR காப்பியிலருக்கற விஷயத்தோட சாட்சி சொல்றதுல ஏதாச்சும் பெரிசா வித்தியாசம் இருந்தா அதைப் பற்றியும் விவரமா விசாரிச்சி குறிச்சிக்கணும். அதுக்கு ஏத்தா மாதிரி வாக்குமூலத்துல கரெக்‌ஷன் பண்ண வேண்டியதிருந்தா வாக்குமூலம் எடுக்கறப்பவே செஞ்சிரணும். போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி எடுக்கற வாக்குமூலத்துல சாட்சியோட கையெழுத்து வாங்க தேவையில்லைன்னும் சட்டம் (கு.மு.ச. பிரிவு 162) சொல்லுது. சாதாரணமா போலீஸ் எடுக்கற வாக்குமூலத்த கோர்ட்ல சாட்சியமா யூஸ் பண்ண முடியாது. ஆனா இத அரசு தரப்பு வக்கீல் சாட்சி கூண்டுல வச்சி விசாரிக்கறதுக்கு பயன்படுத்திக்கலாம். 

அதுமட்டுமில்லை. வாக்குமூலத்தை பதிவு செய்த விசாரணை அதிகாரியின் பெயரும் அவருடைய கையொப்பமும் கூட ஒவ்வொரு வாக்குமூலத்திலும் இருந்தா நல்லதுன்னு சொல்லுது காவல்துறையோட கையேடு. இல்லைன்னா குற்றப் பத்திரிகை தாக்கல் செய்றப்போது அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரே கூட அத்தகைய வாக்குமூலத்தால் பயன் ஏதும் இல்லை என்று கூறி குற்றப்பத்திரிகையுடன் இணைத்து தாக்கல் செய்ய மறுத்துவிடக் கூடும். வாக்குமூலங்கள் எழுத்தில் தயாரிக்கப்படும்போது அதில் அடித்தல் திருத்தல் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லைன்னா அந்த கரெக்‌ஷன்சையே குற்றவாளிக்கு சாதகமாக defense வக்கீல்ங்க திருப்பிறுவாங்களாம்.

இதுவரைக்கும் போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் மூலமாவே குற்றவாளி யாராக இருக்கக் கூடும்னு இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியால டிசைட் பண்ணியிருக்க முடியும்கறதால அடுத்தது அவரை கைது செய்வதுதான்.

அத நாளைக்கி பாக்கலாம்.

தொடரும்..

12 ஆகஸ்ட் 2013

யார் கொலையாளி?

கொஞ்ச நாளாவே தமிழ்நாட்டுல மட்டுமில்லாம நாடெங்கும் கொலை, குறிப்பா அரசியல் கொலைகள், பெருகி வர்றதா எதிர்கட்சிங்க குத்தம் சொல்றத நாம பாத்துக்கிட்டு வரோம்.

போன மாசம்  சேலத்தில நடந்த ஒரு அரசியல் கொலை ரொம்ப பரபரப்பா பேசப்பட்டது. அதை எதிர்த்து, குறிப்பா இந்த விஷயத்தில காவல்துறை ரொம்பவும் கேர்லஸ்ஸா நடந்துக்கிட்டத ஜனங்கக்கிட்ட எடுத்து சொல்றதுக்கு பிஜேபி ஒரு கடையடைப்பே நடத்துனாங்க.

இதே மாதிரி மேற்கு வங்கம், கொல்கொத்தா சிட்டியில கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்து முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல்ல ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆளுங்களுக்கு இடையில நடந்த சண்டையில பல எதிர்கட்சி ஆளுங்கள திட்டம்போட்டு கொலை செஞ்சதாகவும்  படிச்சிருப்பீங்க. அங்கயும் ஆளுங்கட்சி ஆளுங்களோட வெறியாட்டத்த போலீஸ் கண்டும் காணாததுபோல்  இருந்தாங்கன்னு எதிர்கட்சி ஆளுங்க சொன்னாங்க.

அதே மாதிரிதான் உத்தரபிரதேசத்திலயும்.  சமீபத்தில ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அப்புறம் பல பழிவாங்கும் கொலைகள் நடந்ததையும் கேள்விப்பட்டோம். அங்கயும் எதிர்க்கட்சிகளோட  கோபத்திற்கு உள்ளானது காவல்துறைதான்.

உயிர்க்கொலைங்கறது மற்றெந்த குற்றங்களையும் விட கொடுமையானதுங்கறதுல மாற்று கருத்து இருக்க முடியாது இல்லையா? அதை விட கொடுமை கொலை பண்ணிட்டு எந்த தண்டனையுமில்லாம தப்பிச்சிக்கிறது.

குற்றம் செஞ்சவர், அவர் யாராயிருந்தாலும், அவர் எவ்வளவு செல்வாக்கு படைச்சவரானாலும் அவரைக் கண்டுபிடிச்சி சட்டத்தின் முன்னால நிறுத்த வேண்டிய முதல் பொறுப்பு போலீசுக்குத்தான் இல்லையா?

ஏன்னா சட்டத்தை அமல்படுத்தற கடமையும் பொறுப்பும் அவங்களுக்குத்தான் இருக்கு. அதுக்குத்தான் அவங்கள அரசாங்கம் வேலை குடுத்து அதுக்கு சம்பளமும் குடுக்கறாங்க, சரிதானே?

ஒரு கொலைக் குற்றம் நடந்து முடிஞ்சதும் அதுக்கு காரணமாயிருந்த கொலைகாரன கண்டுபிடிச்சி சரியான  தண்டனையை வாங்கிக் குடுக்கறதுல எதுக்கு இவ்வளவு டிலே ஆகுது?

போலீசோட அஜாக்கிரதையும் அசிரத்தையுமே இதுக்கு முக்கிய காரணம்னு எல்லாரும் சொல்றாங்களே அது உண்மையா?

அதே சமயம் அவங்க தங்களோட அதிகாரத்த முழுசா, பயன்படுத்தறதுக்கு அனுமதிக்கப்படுறதில்லேன்னும் சொல்றாங்களே, அது உண்மையா?

இந்த விஷயத்துல, போலீஸ் இலாக்கா தங்களோட அதிகாரிகளுக்கு குடுத்துருக்கற அட்வைஸ் அல்லது guidelines என்னென்னன்னு  கொஞ்சம் டீப்பா போயி பாக்கலாமா?

ஆனா அதுக்கு முன்னால குற்றம்னா என்னன்னு சட்டம் சொல்லுதுன்னு  சுருக்கமாக பாக்கலாம்.

இந்திய தண்டனைச் சட்டத்துல (IPC: Indian Penal Code 1860) இந்தியாவுல  நடக்கற எல்லா குத்தத்தையும் அவைகளுக்குண்டான தண்டனைகளையும் விளக்கி சொல்லியிருக்காங்க.

அதுல எல்லா மாதிரியா குத்தங்களையும் சொல்லியிருந்தாலும் நாம இந்த பதிவுல பாக்கப்போறது கொலைக்குத்தம் மட்டுந்தான். ஏன்னா அதுதான நாட்டுல நடக்கற எல்லா குத்தத்துலயும் ரொம்பவும் பரபரப்பா பேசப்படுது?

கொலைக் குத்தத்தப்பத்தி பாக்கறதுக்கு முன்னால பொதுவா குத்தம்னா என்னன்னு இந்த சட்டம் சொல்லுதுன்னு பாப்போம்.

CRPC 1973 (இந்திய குற்றவியல் முறைச்சட்டம் - இ.மு.ச.1973)

"offence" means any act or omission made punishable by any law for the time being in force..."

குத்தம்னா என்ன, ஒரு குத்தவாளிய புடிக்கறதுலருந்து அவர கோர்ட்டுக்கு போயி தண்டனை வாங்கிக்குடுக்கற வரைக்கும் என்னென்ன செய்யணும் இந்திய குற்றவியல் முறைச்சட்டத்துல (இ.மு.ச) சொல்லியிருக்காங்க.

அந்த சட்டத்துல சொல்லியிருக்கறபடி இந்தியாவுல நடைமுறையில இருக்கற எல்லா சட்டமும் இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சீங்கன்னா (Acts) உங்களுக்கு தண்டனை நிச்சயம்னு சொல்லுதோ அதெல்லாமே குத்தம்தானாம். அது மட்டுமில்லீங்க, சட்டம் செய்யின்னு சொல்லியிருக்கற எதையாச்சும் நாம செய்யாம இருந்தாலும் (omissions) குத்தம்தானாம்!

தலை சுத்துது இல்ல?

இந்தியாவுல மட்டுமில்லீங்க, உலகத்துல இருக்கற எல்லா சட்டத்தையும் இப்படி தலைய சுத்தி மூக்க தொடறா மாதிரிதான் சொல்லி வச்சிருக்காங்க. நம்ம சட்டத்த எழுதி வச்சவங்கள்லயும் பெரும்பாலானவங்க இங்கிலாந்து, அமெரிக்கா மாதிரி நாட்டு சட்டங்கள படிச்சிட்டு வந்தவங்கதானே? அதான் அதே ஸ்டைல்ல நம்மள மாதிரியான பாமர ஆளுங்களுக்கு புரியாத ஸ்டைல்ல எழுதி வச்சிருக்காங்க.

இங்லீஷ்ல எழுதி வச்சிருக்கறத படிச்சாலே புரியமாடேங்குது இந்த லட்சணத்துல தமிழாக்கம் பண்றேன் பேர்வழின்னு நம்ம ஆளுங்க (படிப்பு என்னமோ எம்.ஏ., பி.எல்னுதான் போட்டுக்கிட்டிருக்காங்க) தமிழாக்கம் பண்ணி வச்சிருக்காங்க பாருங்க, அதுக்கு இங்லீஷ்ல எழுதியிருக்கறதே மேல்னு சொல்லலாம்.

இந்த பதிவ எழுதறதுக்கு முன்னால சென்னையிலருக்கற ஹிக்கின்ஸ்பாதம்ஸ் கடைக்கி போயி சட்டத்த பத்தி  தமிழ்ல புக்ஸ் ஏதாச்சும் இருக்கான்னு பாத்தேன். நிறைய இருக்கு. அதுல சிலத மேலோட்டமா படிச்சிட்டு வாங்கிக்கிட்டும் வந்தேன். இங்லீஷ்ல எழுதியிருக்கறத ஏற்கனவே நெட்லருந்து டவுண்லோட் பண்ணி வச்சிருக்கேன். அதுல எழுதியிருக்கறத அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கொஞ்சம் கூட தமிழுக்கு ஏத்தா மாதிரி மாற்றி அமைக்காம (rearrange) பண்ணாம மொழி மாத்தம் மட்டும் செஞ்சி வச்சிருக்கறத பாத்தப்போ போட்ட காசு தெண்டம்டான்னு பட்டுது. அதனால நா படிச்சி புரிஞ்சிக்கிட்டத சிம்பிளா சொல்றேன்.

சிம்பிளா சொல்லணும்னா க்ரிமினல் சட்டத்துல கொலை செஞ்சா, பிக்பாக்கெட் அடிச்சா குத்தம்னு சொல்லியிருக்காங்கன்னு வையிங்க. அவங்க சொன்னா எனக்கு என்ன நா செய்யத்தான் செய்வேன்னு செஞ்சா அது குத்தம். இத சட்டத்துல actsனு சொல்லியிருக்காங்க.

அதே மாதிரி சட்டத்துல இதெல்லாம் நீங்க செய்யணும்னு சொல்லி வச்சிருக்காங்க. அதாவது உங்க ஃப்ரெண்ட் ஒரு கொலைய பண்ணிட்டு உங்கக்கிட்ட வந்து அடைக்கலம் கேக்கறாரு. ஆனா அவரு கொலை செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சா உடனே போலீசுக்கு சொல்லணும்னு சட்டம் சொல்லுது. ஆனா அவரு நம்ம ஃப்ரென்டாச்சே இல்லன்னா நம்ம மகனாச்சேன்னு வீட்ல பூட்டி வச்சிட்டு பேசாம இருந்தீங்கன்னா அது omissionகற குத்தம். அதேமாதிரி  வருமான வரிச் சட்டம் ஒவ்வொரு வருசமும் மார்ச் 31ம் தேதிக்குள்ள வருமான வரிய கட்டிறணும்னு சொல்லுது. ஆனா அடப் போய்யா ஒனக்கு வேலையில்லேன்னு கட்டாம இருந்தீங்கன்னா அதுவும் omissionங்கற குத்தமாம்!

ஆக, சிலத செஞ்சாலும் குத்தம் வேற சிலத செய்யாம இருந்தாலும் குத்தம். சுத்தமா இல்லன்னாலும் சுமாராவாது புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். இல்லன்னாலும் பரவால்லை. இனிமே சொல்றத வச்சி ஒரளவுக்கு புரிஞ்சிக்கலாம். தொடர்ந்து படிங்க.

1.சூதாடறது சட்டப்படி குத்தம். நீங்க காசு வச்சி சூதாடி போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டா நீங்க குற்றவாளி.

2.பதினெட்டு வயசு முடியாத பொண்ண கல்யாணம் பண்றது குத்தம். நா அப்படித்தான் செய்வேன்னு சொல்லி செஞ்சீங்கன்னா நீங்க குத்தவாளி.

அதே மாதிரி சட்டம் ரோட்டுல போறப்போ சில ரூல்ஸ போட்டு இப்படித்தான் போவணும், ரெட் சிக்னல்ல நிக்கணும், லைன் மாதிரி போவக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. எனக்கு அதப்பத்தியெல்லாம் கவலையில்லேன்னு அதன்படி நடக்காம இருந்தீங்கன்னா அதுவும் omissionங்கற விதிப்படி குத்தம்தான்.

வருமான வரி கட்டுனா போறாது ஜூலை 31ம் தேதிக்குள்ள வருமான வரி ரிட்டர்ன் (Return) ஃபைல் பண்ணிறம்னுன்னும் சொல்லியிருக்காங்க. ஆனா நா பண்ண மாட்டேன்னு சும்மா இருந்தீங்கன்னா அதுவும் omissionதான்.

சரி, குத்தம்னா என்னன்னு பாத்தாச்சி. இனி இதுல எத்தனை வகைன்னு பாப்போம்.

குத்தத்துல சிவில் (civil) க்ரிமினல் (criminal)னு ரெண்டு வகையா பிரிச்சிருக்காங்க.

நாம இந்த பதிவுல பாக்கப் போறது க்ரிமினல் குத்தங்களபத்தித்தான். அதுலயும் கொலைக் குத்தத்த பத்தி மட்டுந்தான் பாக்கப்போறோம்.

க்ரிமினல் குத்தத இன்னும் ரெண்டு வகையா பிரிச்சிச் சொல்லியிருக்காங்க.

1. வாரண்ட் குற்றங்கள்.
2. மற்ற குற்றங்கள்/

1. பிடி வாரன்ட் (arrest waarant) இல்லாமல் குற்றம் செஞ்சவரைக் கைது பண்ணக் கூடிய குற்றங்கள். இத ஆங்கிலத்தில் Cognizable offencesனு சொல்றாங்க. அதாவது, குத்தம் நடந்துருக்குன்னு தெரிய வந்தவுடனே  காவல்துறை ஆய்வாளரோ அல்லது துணை ஆய்வாளரோ (இவங்களுக்கு கீழ இருக்கற ஹெட் கான்ஸ்டபிளோ இல்ல கான்ஸ்டபிளோ கைது பண்ண முடியாதுங்க) சந்தேகத்துக்குள்ளானவரை கைது செய்யலாம். உதாரணத்துக்கு கொலைக் குற்றம் செஞ்சவர். இவர கைது பண்றதுக்கு பிடி வாரண்ட் எதுவும் தேவையில்லையாம்!.

2. நீதிமன்றத்துலருந்து பிடிவாரண்ட் வாங்குனதுக்கப்புறம் கைது பண்ணக்கூடிய குத்தம். அதாவது இந்த குற்றத்த செஞ்சதா சந்தேகத்தின் பேர்ல காவல்துறை அவங்க நினைச்சபடி கைது பண்ண முடியாது. இத ஆங்கிலத்துல Non-Cognizable offencesனு சொல்றாங்க. உதாரணம்:  பண மோசடி, ஏமாத்து வேலை செஞ்சவங்க அப்புறம்  பொது இடத்துல தகராறு பண்றவங்க. இவங்களை விசாரனைக்கு கூட்டிக்கிட்டு போலாமே தவிர கோர்ட் உத்தரவு இல்லாம கைது செய்ய முடியாது.  அப்படி விசாரணக்கப்புறம் இவர்தான் குத்தவாளின்னு போலீசுக்கு தெரியவந்தா சம்பவம் நடந்த இடம் எந்த கோர்ட்டுக்கு கீழ வருதோ அங்கருந்து பிடி வாரண்ட் வாங்கி கைது பண்ணிக்கலாம்.

இந்த குற்றங்கள இன்னும் ரெண்டு விதமா சட்டம் பிரிக்கிது:

1. நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ பிணை வழங்கக் கூடிய குற்றங்கள்
2. பிணை பெற முடியாத குற்றங்கள்.

ஆனா பிணை பெற முடியாத குற்றங்கள்ல கூட நீதிமன்றம் நினைச்சா பிணை வழங்க முடியுமாம்! அது அந்த குத்தத்தோட தீவிரத்த பொருத்தது.

இதுல  பிடி ஆணை எதுவும் இல்லாம கைது பண்ணக்கூடிய குத்தங்கள்ல முக்கியமான குத்தம் கொலைக் குத்தம்.

கொலைக் குத்தம்னா என்னன்னு இந்திய தண்டனைச் சட்டத்துல (இதச 1860) சொல்லியிருக்காங்க.

இந்த பிரிவுல சொல்லியிருக்கறத அப்படியே ஆங்கிலத்துல கீழ குடுத்துருக்கேன் பாருங்க:

299. Culpable homicide: Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.

இத அப்படியே மொழி மாற்றம் செஞ்சா ஒன்னும் புரியாது. அதனால இதுல சொல்லியிருக்கற சாராம்சத்த மட்டும் பாக்கலாம்.

இதுல மூனு விஷயங்கள சொல்லியிருக்காங்க:

1. ஒருத்தர கொலை செய்யிறது,
அல்லது
2. ஒருத்தர கொலை செய்யணும்கற எண்ணத்தோட பயங்கரமா தாக்குறது,
அல்லது
3. நாம அடிச்சா அவரு செத்துருவாருன்னு தெரிஞ்சும் அடிக்கறது.

இந்த மூனுமே கொலைக்குத்தம்தான். இத culpable homicideனு ஆங்கிலத்துல சொல்றாங்க.

இது ஒரு பொதுவான விளக்கம்னு சொல்லலாம்.

இதே சட்டத்துல அடுத்தடுத்து வர்ற பிரிவுகள்ல கொலைன்னா என்னன்னு இன்னும் தெளிவா சொல்லியிருக்காங்க. அதையும் பாக்கலாம்.


300. Murder Except in the cases hereinafter excepted, culpable homicide is murder, if the act by which the death is caused is done with the intention of causing death, or-

Secondly- If it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person to whom the harm is caused, or-

Thirdly- If it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death, or-

Fourthly,- If the person committing the act knows that it is so imminently dangerous that it must, in all probability, cause death or such bodily injury as is likely to cause death, and commits such act without any excuse for incurring the risk of causing death or such injury as aforesaid.

இந்த பிரிவுல கீழ சொல்லியிருக்கற அஞ்சி செயல்கள லிஸ்ட் (List) பண்ணிட்டு அதத் தவிர மேலே சொன்ன பிரிவு 299ல சொல்லியிருக்கற செயல்கள் எல்லாமே கொலைக்குத்தமா கருதப்படுமாம். அது என்ன செயல்கள்?

Exception 1- When culpable homicide is not murder- Culpable homicide is not murder if the offender, whilst deprived of the power of self-control by grave and sudden provocation, causes the death of the person who gave the provocation or causes the death of any other person by mistake or accident.

இப்ப ஒருத்தர் உங்கள கோவப்படுத்தறா மாதிரி பேசறாருன்னு வச்சிக்குவம். உங்களுக்கு திடீர்னு பயங்கரமா கோவம் வந்து கன்ட்ரோல் போயிறுது. அதாவது உங்கள கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவம். கோவத்துல என்ன செய்யிறதுன்னு தெரியல. அதனால என்ன செய்யறோம்னே தெரியாம அவர கொலை பண்றீங்க. ஆனா அவர கொலை பண்ணணும்கறது உங்க எண்ணம் இல்ல. உங்களையும் அறியாம நீங்க செஞ்சிடறீங்க. சட்டம் அது கொலை இல்லேன்னு சொல்லுது.


Exception 2- Culpable homicide is not murder if the offender, in the exercise in good faith of the right of private defence of person or property, exceeds the power given to him by law and causes the death of the person against whom he is exercising such right of defence without premeditation, and without any intention of doing more harm than is necessary for the purpose of such defence.

உங்கள ஒருத்தர் தாக்குறாரு. அதுலருந்து நீங்க தப்பிக்கலன்னா ஒருவேளை உங்களுக்கு பயங்கர காயம், ஏன், மரணமே ஏற்படப்போவுதுன்னு நீங்க நினைக்கறீங்க. உங்கள காப்பாத்திக்கறதுக்கு நீங்க ஏதாச்சும் செஞ்சே ஆவணும். அந்த மாதிரி நீங்க நெனச்சி ஏதாச்சும் செய்யப் போக அதனால உங்கள தாக்க வந்த ஆளு செத்துடறாரு. உங்களுக்கு அந்த ஆள கொலை செய்யணும்கற எந்த எண்ணமும் இல்லை. நீங்க செஞ்சது உங்கள காப்பத்திக்கறது செஞ்ச காரியம். அதனால தாக்கப்பட்ட ஆள் செத்துப் போனாலும் சட்டத்தோட பார்வையில அது ஒரு கொலை இல்லை.

Exception 3- Culpable homicide is not murder if the offender, being a public servant or aiding. a public servant acting for the advancement of public justice, exceeds the powers given to him by law, and causes death by doing an act which he, in good faith, believes to be lawful and necessary for the due discharge of his duty as such public servant and without ill-will towards the person whose death is caused.

ஒரு பப்ளிக் செர்வன்ட் (அரசு ஊழியர்னு சொல்லலாம். இதுல காவல்துறை அதிகாரிகளும் வருவாங்க) பொது இடத்துல சட்டத்த நிலைநாட்டறதுக்கு சட்டத்துக்குட்பட்டு தங்களோட ட்யூட்டிய செய்யறப்போ அதனால யாருக்காச்சும் மரணம் சம்பவிச்சா அது கொலை இல்லை. அந்த அரசு ஊழியரும் கொலையாளின்னு கருதப்படமாட்டார். மரக்காணம் கலவரத்துல நடந்த துப்பாக்கி சூட்டுல நிறைய பேர் இறந்தாங்களே அதுக்கு சம்மந்தப்பட்ட போலீசார் மேல கொலைக் குத்தம் சுமத்தணும்னு எதிர்க்கட்சிகள் சொல்லியும் அரசு கண்டுக்காம இருந்தாங்களே அது இதனால்தான் போலருக்கு.

Exception 4. -Culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight in the heat of passion upon a sudden quarrel and without the offender having taken undue advantage or acted in a cruel or unusual manner.

ஒருத்தர கொல்லணும்கற எந்த திட்டமும் இல்லாம திடீர்னு அவர்கூட ஏற்பட்ட வாக்குவாதம் முத்திப்போயி அதனால அவர நீங்க அடிக்கப் போயி அவர் இறந்துட்டார்னா அதுவும் கொலை இல்லையாம். ஆனா நீங்க குரூரமா எதையும் செஞ்சிருக்கக் கூடாது. குரூரம்னா என்னன்னு இந்த செக்‌ஷன்ல சொல்லல. அத கோர்ட் தீர்மானிக்கும். இதுல யார் முதல் அடிச்சாங்கறது முக்கியமில்லேன்னும் சட்டம் சொல்லுது.

Exception 5- Culpable homicide is not murder when the person whose death is caused, being above the age of eighteen years, suffers death or takes the risk of death with his own consent.

நாம ஒருத்தருக்கு விஷத்த குடுத்து குடிறான்னு சொல்றோம். அவருக்கும் அத குடிச்சா நாம செத்துருவோம்னு நல்லா தெரியும். ஆனாலும் குடிச்சிட்டு செத்துபோயிட்டாரு. அதுவும் கொலை இல்லையாம். ஆனா செத்துபோனவர் பதினெட்டு வயசுக்குள் இருந்தவர்னு தெரிய வந்தா அப்போ நீங்க செஞ்சது கொலைக்குத்தம்.

முதல் தடவையா படிக்கறப்போ கொஞ்சம் குழப்பமாத்தான் (confusion) இருக்கும். ஆனா ஒன்னுக்கு ரெண்டு தரம் படிச்சா புரிஞ்சிரும்..

அதனால இன்னைக்கி இத்தோட நிறுத்திக்கறேன்..

மீதி நாளைக்கி பாக்கலாம்.



தொடரும்...