31 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து... 4

ஹிந்த்ராஃப் என்ற ஒரு அமைப்பு (Rights Action Force என்றால் அமைப்பு என்று பொருள் கொள்ளலாமா? தெரியவில்லை.) மலேசியாவில் இருப்பதே பல மலேசிய தமிழர்களுக்கு, குறிப்பாக இளையதலைமுறையினருக்கு, தெரிய வந்தது அவர்களுடைய சமீபத்திய சாலை  மறியலின்போதுதான் என்றால் மிகையாகாது.

ஹிந்த்ராஃப் அமைப்பின் பூர்வீகத்தைப் பற்றி எந்தஒரு அதிகாரபூர்வ தகவலும் தளங்களில் இல்லை. மலேசிய வாழ் இந்துக்களின் உரிமைகளை  பாதுகாப்பதே இதன் லட்சியம் என செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கூட்டமைப்பு என்கின்றன சில வலைத்தளங்கள். இங்குள்ள  மலேசிய தமிழர்களில் பலருக்கும் கூட அது ஒரு இந்துக்களின் சங்கம் என்கிற அளவில் மட்டுமே தெரிந்திருக்கிறது. அதன் தலைவர் திரு வைத்தா  மூர்த்தி ஒரு தமிழ் ராணுவ வீரரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய மலேசிய இராணுவம் அனுமதிக்க மறுத்ததன் விளைவே இந்து மக்களின்  உரிமைகளை பாதுகாக்க ஒரு அமைப்பை துவக்க தன்னை தூண்டியதாக ஒரு தமிழ் சஞ்சிகையின் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்று என்னுடைய முந்தைய இடுகையில் நண்பர் சிவா தன்னுடைய மறுமொழியில் தெரிவித்திருந்தார் (நான் அந்த பேட்டியை படிக்கவில்லை).

ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. அப்படி பார்த்தால் இதற்கு முன்பு தமிழ் இந்து இராணுவ வீரர்கள் எவரும்  இறக்கவில்லையா அல்லது அவர்கள் அனைவருமே இந்து முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லையா?

அவர்களுடைய அடுத்த குற்றச்சாட்டு இந்திய மக்களினத்தை அடியோடு ஒழிக்க மலேசிய அரசாங்கம் முயல்கிறது என்பது. இந்த குற்றச்சாட்டை  போராட்டத்தின் முக்கிய காரணமாக முன்வைத்தது பல மலேசிய தமிழ் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்தது என்றும் கூட சொல்லலாம். நான்  சந்தித்த சில இளைஞர்கள் சிரிக்கக் கூட செய்தனர். அதைவிட பெரிய வேடிக்கை - இதை முதிர்ச்சியற்ற செயல் எனவும் கூறுகின்றனர் - எலிசபெத்  மகாராணிக்கு நஷ்ட ஈடு கேட்டு கடிதம் அனுப்பியது.

அடுத்தது ஹிந்து ஆலயங்களை அரசு முன்னறிவிப்பில்லாமல் இடித்து தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டு. அதாவது அரசு நிலத்தில் அல்லது  தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆலயங்களை மட்டுமே இடிக்கப்பட்டுள்ளதாக அரசில் பங்குபெற்றுள்ள  இந்தியர்களின் அரசியல் கட்சியே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக அறிவித்துவிட்டே இந்த  ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில்  கட்டப்பட்டிருந்த மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதாக இங்குள்ள பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதை பார்த்தபோது இதில் பெரிதாக தவறேதும்  இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அடாவடியாக பாபர் மசூதியை இடித்து தள்ளியதை விட்டுவிடுவோம்.

ஆனால் இடிக்கப்பட்ட சில ஆலயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்துள்ளன என்றும் அந்த ஆலயங்களில் நடைபெற்ற  விழாக்களில் இன்று அரசில் அமைச்சர்களாக இருக்கும் பல அரசியல் தலைவர்களும் பங்கு பெற்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதையும்  அலட்சியப்படுத்துவது முறையல்ல. ஆகவேதான் இதன் தீவிரத்தை உணர்ந்த மலேசிய அரசு உடனே நடவடிக்கையில் இறங்கி அரசில்  பங்குபெற்றுள்ள இந்தியர்கள் கட்சியான இ.ம.கா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை இத்தகைய ஆலயங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை  தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் அவர்களே பணித்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கலந்தாலோசிக்காமல் எந்த இந்து  ஆலயங்களும் இடிக்கப்படலாகாது என்றும் அப்படி இடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமானால் அவர்களுக்கு அரசே மாற்று இடம் ஒன்றை  அளிக்க வேண்டும் என்றும் அரசு முடிவெடுத்துள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்பு டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களே அறிக்கையிட்டுள்ளார்.

அடுத்த குற்றச்சாட்டு தமிழ் பள்ளிகள் மூடப்படுகின்றன என்பது. இவர்கள் முன்வைக்கும் வாதம் நாடு சுதந்திரம் பெற்றபோது இயங்கிவந்த பள்ளிகளின் எண்ணிக்கையை இப்போது இயங்கிவரும் பள்ளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கூடுவதற்குப்பதிலாக குறைந்துள்ளது என்பது.

ஆனால் அரசின் வாதம் இப்படி செல்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றிய பல இந்தியர்களுக்கும்  நகரங்களில் குடியேறிவிட்டனர். ஆகவே அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டன  அல்லது அதற்கருகில் இயங்கிவந்த வேறு சில பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல தமிழ் பள்ளிகளில் தலைமையாசிரியர் இடங்கள்  காலியாகவே உள்ளன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய பள்ளிகள்  பெரும்பாலும் கிராம மற்றும் தோட்டப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் என்றும் இந்த பள்ளிகளில் தலைமையாசிரியராக பணி நியமனம் பெறும் பல  இளைஞர்கள் அதை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசு துறைகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை. இதுதான் இவர்களுடைய குற்றச்சாட்டுகளில் கவனிக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல்  முழுக்க முழுக்க உண்மையும் கூட. சமீப காலமாக பல அரசு அலுவலகங்களிலும் இந்திய அலுவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்துள்ளது என்பதை அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கு அரசு அலுவல்களுக்கு விண்ணப்பிக்கும்  மலேசியரல்லாதவர்களின், அதாவது சீன மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடுகளுக்கும் குறைவே என்கிறார் சம்பந்தப்பட்ட  அமைச்சர். ஆனால் இந்த அறிக்கையைக் குறித்து அரசில் பங்குபெறும் ம.இ.கா கட்சியே அதிர்ச்சியடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு  மலேசியாவிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையே தன்னுடைய தலையங்கத்தில் இதைக் குறித்து தங்களுடைய மனத்தாங்கலை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு அலுவல்களுக்கு மலேசியல்லாதோர் குறிப்பாக தமிழர்கள் விண்ணப்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை  எனவும் சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து இன்னும் நேரகாணலுக்கும் அழைக்கப்படாதோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளதாக கூறுகிறது.

ஆக ஹிந்த்ராஃப் அணி முன் வைத்து போராட்டத்தில் இறங்கியிருக்கும் கோரிக்கைகளில் அரசு அலுவல்களில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்  அல்லது அவர்களுக்கென தனி விழுக்காடு (கோட்டா) ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருந்தால் அது  அனைத்து மலேசிய இந்தியர்களின் ஆதரவையும் நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைவிட்டு விட்டு சமீப காலமாக இந்து  ஆலயங்கள் முன்னறிவிப்பின்றி இடித்துத் தள்ளப்படுகின்றன என்றதைக் காட்டி இந்திய வம்சமே அழித்தொழிக்கப்படுகிறத என்ற எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாத கோரிக்கையை முன்வைத்ததன் மூலம் அது ஒரு இந்திய இந்துக்களுடை உரிமையை பாதுகாக்கும் அணியாகவே தன்னை  இனங்காட்டிக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியவில்லை.

ஆனால் முந்தைய தலைமுறையினர், அதாவது அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் சிலருடைய பார்வையில் ஹிந்த்ராஃபின் அணுகுமுறை  வற்ரு அதிகபட்சமாக தெரிந்தாலும் அது இந்திய மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சியாகவே படுகிறது. அவர்களில் சிலர் -  இங்கு நான் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி குறிப்பிட்டால் அவர்களுடைய கருத்துக்கு வேறு வர்ணம் பூசிவிடுவீர்களோ என்ற அச்சத்தில்  அதை தவிர்க்கிறேன் - இப்படியும் சிந்திக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. 'ஹிந்த்ராஃபின் நோக்கம் எல்லாமே இந்துக்களின் உரிமையை, காப்பதுதான். அதாவது அவர்களுடைய ஆலயங்களை அரசு சமீபகாலமாக இடித்துத்தள்ளுவதை முன்வைத்தே அவர்கள் போராட்டத்தில்  இறங்கியுள்ளனர். ஆகவே அதற்கு அரசு நல்லதொரு பரிகாரத்தை முன்வைத்தாலே அவர்கள் சமாதானமடைந்துவிடுவார்கள். அத்துடன் இப்போது  சிறையிலடைத்து வைத்துள்ள அவர்களுடைய தலைவர்களை விடுவித்துவிட்டால் அவர்களுடைய ஒத்துழைப்பை தற்சமயத்திற்கு, அதாவது அடுத்த  பொதுத்தேர்தல் வரை, பெற்றுவிடமுடியும்.'

சரி, ஹிந்த்ராஃபின் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காரணம் காட்டி அதன் முக்கிய ஐந்து தலைவர்களை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத சிறையடைப்பு தேவைதானா?

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் இதற்கு வகையுள்ளதா?

தொடரும்..

27 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து... 3

மலேசிய அரசியலில் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா). நாடு அடிமைப்பட்டு இருந்தபோது (1946ல்) துவக்கப்பட்ட கட்சிகளில் இதுவும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததும் (1957) ம.இ.கா., ஐக்கிய மலாய் மக்கள் கட்சி, அனைத்து மலேசிய சீனர்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசீய அளவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த அமைப்பே இப்போது பாரிசான் நேஷனல் (Barisan Nasional) எனப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை நடைபெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும் இந்த கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சி செலுத்திவருகிறது!

இளம் வயதில் மிகவும் சிரமங்களை சந்திக்க நேர்ந்த டத்தோஸ்ரீ சாமிவேலு தன்னுடைய 23ம் வயதில் ம.இ.காவில் அடிப்படை அங்கத்தினராக சேர்ந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பிறகு தன்னுடைய நண்பர் துரைராஜ் என்பவருடைய உதவியால் மலேசிய வானொலியின் தமிழ் பிரிவில் செய்தியாளராக சேர்ந்தார். தன்னுடைய குரல் வளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார். ம.இ.காவில் இணைந்த ஐந்து வருடங்களில் கட்சியின் செலாங்கொர் கமிட்டி உறுப்பினராகவும் கட்சியின் கல்ச்சுரல் தலைவராகவும் தெரிந்தெடுப்பட்டார். 1974ம் வருடம் மலேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கைக்கு பிறகு கட்சியின் தலைவர் பதவியை பிடித்தார். ஆனால் அவர் தலைவர் பதவியை பிடித்த விதம் கட்சியை இரண்டாக பிளந்தது எனலாம். கட்சியில் பெரும்பாலான தொண்டர்களின் மதிப்பைப் பெற்றிருந்த எம்.ஜி. பண்டிதன், சுப்பிரமணியம் போன்ற தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதுடன் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியின் பல கிளைகளையும் முடக்கியதாக அவருடைய அதிருப்தியாளர்கள் இன்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அவருடைய தலைமையில் ம.இ.கா இன்று ஒரு பலம் வாய்ந்த கட்சியாக, மலேசிய தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது உண்மைதான் என்றாலும் அவருடைய பாணியில் இன்றைய தலைமுறையினர் பெரும் அதிருப்தியடைந்திருப்பதும் உண்மை.

பெரும்பான்மை மலாய் கட்சியினருடன் கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கு பெற்றிருந்தாலும் அவரைத் தவிர வேறெந்த தமிழின தலைவரும் மத்திய அமைச்சரவையில் காபினெட் அந்தஸ்த்து பெற்ற அமைச்சராக இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர். மலேசிய ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன்னையே ஒரே தலைவராக அவர் முன்னிறுத்திக்கொள்வதும் பலருக்கும் எரிச்சலை உண்டுபண்ணியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

இவருக்கு எதிராக ஊழல், குண்டர்களை வைத்துக்கொண்டு எதிராளிகளை பயமுறுத்தி அடிபணிய வைப்பது, அவர் பொறுப்பிலிருந்த பல இலாக்கா மேற்கொண்ட பல அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதியை தவறான, சுயலாபத்துக்காக செலவழித்தது என குற்றச்சாட்டுகளின் பட்டியலைப் பார்த்தால் நம்முடைய தலைவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவரல்ல என்பது தெளிவு.

இத்துடன் சர்வாதிகார போக்கில் செயல்படுபவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தன்னுடைய கருத்துக்களுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடும் குணமும் அவருக்கு உண்டு என்கிறார்கள் எதிரணியினர். ஆகவே அவர் அரசு மற்றும் கட்சி பதவியிலிருந்து விலகினால் ஒழிய ம.இ.கா நாளடைவில் தன்னுடைய செல்வாக்கை இழந்துவிடும் என்கின்றனர்.

ஆனால் அவருடைய பதவி விலகலை கோருபவர்களுக்கு அவர் கூறிவந்ததையே நேற்றும் ஒரு அறிக்கையில் இவ்வாறு பதிலளித்துள்ளார். 'எனக்கு ஓட்டு போட்டவர்கள் சொல்லட்டும் பதவி விலகுகிறேன். அதுவரை நானே முடிவு செய்யும் வரை பதவி விலக மாட்டேன்.'

மேலும் அதே அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியதாக இன்றைய மக்கள் ஓசை செய்தித்தாளில் வெளிவந்திருப்பதை பார்த்தால் அவருடைய துணிச்சலை நினைத்து வியக்க தோன்றுகிறது: 'என்னிடம் மோதியவர்கள் பலர் இன்று மண்ணுக்குள் இருக்கின்றனர். இப்போது பலர் பேச நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால் பேசுபவர்களையும் எழுதுவர்களையும் விட்டுப்பிடித்து கடைசியில் ஒரு தட்டு தட்டுவேன்.' உண்மையிலேயே அவர் இப்படித்தான் பேசினாரா அல்லது அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குறை காணும் மக்கள் ஓசை செய்தித்தாளின் சில்மிஷமா என்பது தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து ஆட்சியில் பங்குபெற்றுள்ள ம.இ.கா தலைவர்களால் மலேசிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர முடியவில்லை.

அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்கள் பற்றாக்குறை, தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் தமிழ் பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இல்லாதது, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த இந்து கோவில்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளுவது, அரசு அலுவலகங்களுக்கு இந்தியர்களை புறக்கணிப்பது, அரசு கல்லூரிகளில் தனி ஒதுக்கீடு இல்லாதது போன்ற பல நியாயமான கோரிக்கைகள்...

இத்தகைய புறக்கணிப்பை இனியும் சகிக்க முடியாமல்தான் இருபதுக்கும் மேற்பட்ட இந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான HINDRAF சாலை மறியலில் இறங்கியது.

ஆனால் hindraf என்னும் அமைப்பின் நோக்கம் என்ன? அதன் பெயரிலேயே அந்த அமைப்பின் நோக்கம் தெரிகிறது: ஹிந்து உரிமைகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அணியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு அணி எந்த அளவிற்கு மலேசிய தமிழர்களுடைய பிரதிநிதியாக நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்பது புரியவில்லை.

ஆனால் அதன் தலைவர்களுள் பலரும் தங்களை ம.இ.காவினராக இனம் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர் என்பதும் அவர்களுடைய பொது எதிரி அரசில் அங்கம் வகிக்கும் ம.இ.காவின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதும் அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

அதே சமயம் hindraf அணியினரின் குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டு இந்திய வம்சாவளியை மலேசிய அரசு களைந்தெறிய முயல்கிறது என்பதுதான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மலேசிய தமிழர்களே தயாராயில்லை. அது சற்று அதிகபட்சமான குற்றச்சாட்டு என்றும் இந்திய தலைவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் கூறுகின்றனர் இளைய தலைமுறை தமிழர்கள்.

மேலும் தங்களை இந்திய இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அணி என இனங்காட்டிக்கொள்வதால் இந்திய கிறிஸ்த்துவ, இஸ்லாம் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் இந்த அணி இழந்துவிட்டது எனவும் கூறலாம்..

இவர்களுடைய அடுத்த குற்றச்சாட்டு என்ன?

காலங்காலமாக இயங்கிவரும் ஹிந்து கோவில்களை மலேசிய அரசாங்கம் இடித்து தள்ளி வருகிறது...

இதன் பின்னணி என்ன?

தொடரும்....

26 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து.... 2

இரண்டு தினங்களுக்கு முன்பு மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு மலேசிய தொலைக்காட்சி ஆர்.டி.எம்முக்கு அளித்த பேட்டியில் கூறியதை முதலில் பார்ப்போம்.

கேள்வி: மலேசியாவில் இந்திய வம்சாவழியினர்களை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதா?

'இன ஒழிப்பு என்பது ஒரு கொடுமையான செயல். பல ஆண்டுகளாக போஸ்னியாவில் நடைபெற்று வந்துள்ளதைப் போல மலேசியாவில் நிகழவில்லை. மலேசிய தமிழர்களுக்கு அவர் எதிர்பார்ப்பதையும் விட மேலாகவே அரசாங்கம் இதுவரை செய்து வந்துள்ளது. ஆனால் ஒன்றுமே செய்யாதது போன்ற பிரமையை உண்டுபண்ணி மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் சிலர் விஷமப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

மேலும் சாலை ஆர்ப்பாட்டங்களால் எந்த நன்மையில் கிட்டப் போவதில்லை. நமக்கு வேண்டியதை முறையாக அரசாங்கத்திடம் வழங்கினால் மட்டுமே அதற்கான தீர்வுகள் கிட்ட வாய்ப்புள்ளது. அண்மையில் நடந்த சட்ட விரோத பேரணியால் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.'

இத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அவர் தொடர்ந்து கூறுகிறார். 'அத்துடன் இந்தியர்கள் மத்தியில் ம.இ.கா. மற்றும் ஆட்சியிலுள்ள தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் சற்று ஏற்படுத்திவிட்டனர். இந்த அதிருப்தியை போக்க நாங்கள் அவர்களை சந்தித்து உண்மை நிலவரங்களை விளக்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.'

அதாவது அடிப்படை வசதிகளைக் கூட இதுவரை செய்து தரவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார் எனலாமா? சரி. உண்மை நிலவரங்கள் என்பதன் பொருள் என்ன? நீங்கள் நினைப்பதுபோல் நீங்கள் விரும்புவற்றை பெற்றுத்தருவது அத்தனை எளிதல்ல என்று பொருளா? இன்னும் ஒன்று. HINDRAF தலைவர்களின் செயலுக்கு மலேசிய அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்திவிட்டதாகவும் ஆகவே அதை விலக்க முயல்வோம் என்றும் அவர் கூறியிருக்கும் பாணி ஏதோ மலேசிய தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசிலுள்ளவர்களை 'தாஜா' செய்துதான் பெறவேண்டியிருக்கிறது என்பதுபோல் இல்லை? அதுவும் அரசில் ஒரு முக்கிய அமைச்சராக இருக்கும் ஒருவரே இப்படி கூறுகிறார். 'இத்தனை விழுக்காடு மக்கள் நாங்கள் உள்ளோம். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே நாங்கள் அரசுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு உரிய மதிப்பு நீங்கள் வழங்கியே ஆகவேண்டும்' என்று வாதிடுவதை விட்டுவிட்டு இது என்ன அடிமைத்தனம் என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

இதைத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். மலேசிய தமிழர்களின் மற்றொரு பிரபல அரசியல் கட்சியான ஐ.செ.க.தலைவர் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படியொரு கேள்வியை முன் வைத்துள்ளார். 'ஹிண்ட்ராப் பேரணியில் இந்தியர்கள் (மலேசிய வாழ் தமிழர்களும் மலேசியர்கள்தான் என்பதை இவர்களே மறந்துபோகிறார்கள் பாருங்கள்!) திரண்டு வந்து கலந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று எதிர்கட்சி சட்டசபையில் வினா எழுப்பியதும் அதற்கு பதிலளிக்காமல் ம.இ.காவை சார்ந்த அமைச்சர்கள் மவுனமாக அமர்ந்திருந்தது ஏன்?'

அரசுக்கு எதிராக ஏதேனும் சொல்லப் போக தங்களுடைய பதவிகள் பறிபோய்விடக்கூடும் என்று இன்று பதவியிலுள்ள மலேசிய தமிழ் அமைச்சர்கள் கருதுகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேற்கூறிய பேட்டியில் அமைச்சர் சாமிவேலு அவர்கள் வேறொரு கேள்விக்கு இவ்வாறு  கூறுகிறார். 'நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் வேளையில் ம.இ.கா சார்பில் பல புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்'  ஏன்?  'ம.இ.கா சார்பில் கடந்த தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் சிலர் தொய்வு நிலையை அடைந்துவிட்டதால் அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.'

ஏதோ ஒரு சில வேட்பாளர்களுடைய தொய்வினால்தான் மலேசிய தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த சலுகைகள் கிடைக்காமல் போய்விட்டன என்பதுபோல் இருக்கிறது அவருடைய வாதம்.

ஆக, மலேசிய தமிழர்களுக்கு சலுகைகள், அதாவது முன்பு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், இப்போது மறுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

ஏன், எதனால் அரசாங்கத்தின் போக்கில் இந்த திடீர் மாற்றம்?

இதற்கு முக்கிய காரணம் மலேசிய அரசின் Ketuanan Melayu அதாவது 'மலேசியர்களுக்கு முக்கியத்துவம்' என்கிற கொள்கைதான். அரசின் இத்தகைய நிலைப்பாடு 2000ம் வருடத்திலிருந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதுதான் இன்றைய போராட்டத்தின் முக்கிய பின்னணி என்கின்றனர் இன்றைய தலைமுறை மலேசிய தமிழர்கள்.

நம்முடைய நாட்டிலும் 'மண்ணின் மைந்தர்' அல்லது 'Son of the Soil' எனப்படுவதை கண்டிருக்கிறோம். இது தமிழகத்திலும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை மறுக்க முடியாது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் இது வெளிப்படையாகவே கூறப்பட்டு வருகின்றது. அந்த மாநிலத்தில் அரசு கல்லூரிகளில் கர்நாடகத்தைச் சாராதவர்களுக்கு (கன்னடியர்கள் அல்லாதோர்) முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்பது வெளிப்படை. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மறைந்து கடந்த சில வருடங்களாக மொழியின் அடிப்படையில் இந்தியர்கள் பிரிக்கப்பட்டு நிற்பதை கண்கூடாகவே பார்க்கிறோம்.

இதையே மலேசிய அரசாங்கம் செயல்படுத்த முனைகிறபோது அதுவும் அரசாங்கத்தின் இந்த செயல் தமிழர்களை பாதிக்கும்போது அது தமிழகம் வரை எதிரொலிக்கிறது.

சரி மலேசிய அரசில் சிறுபான்மையினர் எனப்படும் சீன, தமிழ் மக்களுக்கு பங்கு அளிக்கப்பட்டுள்ளதே? அவர்களால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

நியாயமான கேள்விதான். மலேசிய அரசின் நிரந்தர ஆளுங்கட்சியான பெரும்பான்மை மலாய் மக்கள் கட்சியுடன் சிறுபான்மையினரின் கட்சிகளான சீன மற்றும் தமிழர் கட்சிகள் கூட்டு சேர்ந்து அமைத்திருக்கும் அரசாங்கம்தான் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நாட்டை ஆண்டு வருகிறது.

அரசின் 'மலேசியர்களுக்கு முக்கியத்துவம்' என்கிற நிலைப்பாட்டை எதிர்கட்சியான டிஏபியே மும்முரமாக தொடர்ந்து எதிர்த்து வரும்போது அரசில் அங்கம் வகிக்கும் ம.இ.காவால் ஏன் அரசின் இந்த போக்கை மாற்ற முடியவில்லை?

இதற்கு முக்கிய காரணம் ம.இ.காவின் இன்றைய தலைவரும் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுதான் காரணம் என்கின்றனர் எதிர்கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் தமிழர் கட்சிகள்.

இந்த குற்றச்சாட்டு உண்மைதானா?

தொடரும்...

24 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து...

 

என்னுடைய மூத்த மகள் மலேஷியாவில் - கே.எல் - இருப்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவரை சென்று பார்க்க வேண்டும் என்று கடந்த மூன்றாண்டுகளாக திட்டமிட்டு இளைய மகளுக்கு விடுப்பு கிடைக்காமல் தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. இந்த வருடம் எல்லாம் ஒன்றுகூடி வர இரு வார விடுப்பில் வர முடிந்தது.

வரும் வழியில் விமானத்தில் உடன் வந்திருந்த சில பெரிய, சிறிய சினிமா நட்சத்திரங்கள் செய்த பந்தாக்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் விதமாக சுவாரஸ்யமாக ஒன்றும் நடக்கவில்லை. விமானத்தில் கிரீடம் படத்தை பார்க்க முடிந்தது. அதன் மூலம் மலையாளத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஒன்றும் பிரமாதமாக இல்லை. அஜீத் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதால் அவருடைய நடிப்பு மட்டும் எனக்கு வெகுவாக பிடித்திருந்தது, அவ்வளவே. கிளைமாக்ஸ் படு தமிழ் சினிமாத்தனம்.

கே.எல் விமானதளத்தில் நம்முடைய நடிகர்களை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவேயில்லை, அவர்களை வரவேற்க வந்தவர்களைத் தவிர. அதிலும், சாட்டிலைட் விமானதளத்திலிருந்து மினி ரயிலில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரசன்னாவை ஒருவர் அப்பாவியாக 'சார் நீங்க சினிமா நடிகர்தானே' என்று கேட்டதும் அருகில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க பாடுபட்டதும் நல்ல வேடிக்கை. ஆனால் பிரசன்னா ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு புன்னகைத்து சமாளித்தது நன்றாக இருந்தது. பிரபு தலையில் விக் முடியுடன் பந்தா செய்தது சகிக்கவில்லை. மனிதர் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறார் போலிருக்கிறது. மற்றபடி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

வந்து நான்கு நாட்களாகிறது. சில குடும்ப வைபவங்கள், விருந்துகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த பல உறவினர்கள், அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் - பலரும் இன்றைய இளைய தலைமுறை மலேஷிய தமிழர்கள் - ஆகியோருடன் உரையாடியதில் இப்போது மலேஷியாவில் மிகவும் விவாதிக்கப்படும் விஷயம் INDRAF தலைவர்களின் கைதும் மலேஷிய தமிழர்களுடைய இன்றைய நிலையும்.

வந்திறங்கிய அன்றிலிருந்து கடந்த சில நாட்களாக பல இளைய தலைமுறை மலேஷிய தமிழர்களை சந்தித்து விவாதித்ததில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிந்தது. இன்றைய தலைமுறையினர் தங்களை இந்தியர்களாகவே கருதவில்லை. அவர்களைப் பொருத்தவரை அவர்களும் மலாய் மக்களைப் போலவே மலேஷியர்கள். ஆகவே தங்களுடைய முந்தைய தலைமுறையினரைப் போலல்லாமல் தங்களுக்கு மறுக்கப்படும் சலுகைகளை (அவர்களைப் பொருத்தவரை அது சலுகைகள் அல்ல. உரிமைகள்!) விட்டுக்கொடுப்பதாக இல்லை.

என்னுடைய சம்பந்தியைப் போன்ற பல முந்தைய தலைமுறையினர் மலேஷிய அரசாங்கம் தங்களுக்கு அளித்த சலுகைகளை மிகவும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர். அவர்களுள் பலரும் 2000ம் ஆண்டு வரை அரசாங்கத்தில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்கள். இப்போதும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள் என்கிற அந்தஸ்த்தும் சலுகைகளும் ஓய்வூதியமும் வழங்கப்படுவதே பெரிய விஷயம் என்று கருதுகின்றனர். 'இப்படி இவங்க பிரச்சினை பண்றதுனால இருக்கறதும் புடுங்கிருவாங்க...' என்பதுபோல் செல்கிறது இவர்களுடைய வாதம்.

ஆனால் மலேஷியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்கள் அப்படி கருதவில்லை. INDRAF தலைவர் வைத்தா மூர்த்தி கூறியுள்ளது போன்று இன்றும் மலேஷிய பல்கலைக்கழகங்களில் நுழைவது குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் வழக்கறிஞர் பட்ட படிப்புகளுக்கு இந்தியர்கள் பலருக்கும் அனுமதி கிடைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் மலாய் மக்களுக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது என்பதால் அரசாங்கத்துறைகளில் உயர்பதவியில் இப்போது இருப்பவர்களுடைய மலேஷிய தமிழர்களுடைய ஓய்வுகாலத்திற்குப் பிறகு அத்துறைகளில் இடைமட்ட, அடிமட்ட நிலைகளுக்கு மேல் மலேஷிய தமிழர்கள் உயர வாய்ப்பேயிருக்காது என்கின்றனர். புள்ளி விவரங்களை எடுத்து வைக்கும் அவர்களுடைய வாதத்தை மறுப்பது அத்தனை எளிதல்ல என்பதால் அவற்றை உண்மை என்றே எடுத்துக்கொள்ள தோன்றுகிறது.

ஆனால் அதற்கு சாலைக மறியல்களில் ஈடுபடுவதும் இந்திய இனமே அழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிடுவதும் சரியா என்று கேட்டால் அதில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்கின்றனர். 'நாங்கள் மலேஷியர்கள். இதை நாங்களே தீர்த்துக்கொள்வோம். இதில் இந்தியா போன்ற நாடுகளால் எந்த தலையீடும் செய்வதில் பலனில்லை என்றே கருதுகிறோம்.' என்பது அவர்களுள் பலருடைய கருத்தாக இருப்பதை காண முடிகிறது. ஆனால் வேறு சிலரோ INDRAFதலைவர்கள் செய்தது சற்று கூடுதல்தான் என்றாலும் அதில் தவறேதும் காணமுடியவில்லை என்கின்றனர்.

INDRAF தலைவர்கள் செய்ததையோ அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் மலேஷிய அரசு எடுத்த நடவடிக்கைகளையோ எடைபோடுவதைவிட இந்த விஷயத்தில் தீர்வுதான் என்ன என்பதை இதன் மூலத்திலிருந்து நடுநிலையாக விவாதித்தால் என்ன என்று எனக்கு தோன்றியதன் விளைவே இந்த மினி தொடர். அதிகம் போனால் மூன்று அல்லது நான்கு பதிவுகள்...

தொடரும்...

21 டிசம்பர் 2007

வங்கிகளில் கணினி - 6

அன்றைய மென்பொருள் நிர்வாகத்தில் இருந்த பல குறைபாடுகளுக்கு முக்கிய காரணம் Distributed Environment என்கிற சூழல்தான்.

முந்தைய இடுகையில் மென்பொருளின் ஒவ்வொரு versionஐயும் கிளைகளில் நிறுவுவதில் உள்ள பிரச்சினையை கோடிட்டு காட்டியிருந்தேன். மத்திய அலுவலகத்தில் இயங்கிவந்த கணினி இலாக்கா அதிகாரிகள் அநேகமாக ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய versionஐ கிளைகளூக்கு floppyகளில் அனுப்பி வைப்பது வழக்கம். இன்று உள்ளதுபோல் தனியார் குரியர் வசதிகள் அப்போது இருக்கவில்லை. ஆகவே நம்முடைய good old தபால் இலாக்காவைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. வட மாநிலத்திலிருந்த கிளைகளுக்கு floppyகள் சென்றடையவே ஒரு வார காலம் ஆகிவிடும். அப்படி கிளைகளில் சென்றடைந்தாலும் அதிலுள்ள .exe கோப்புகள் நிறுவ தகுதியுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியில்லை. Dir கட்டளையில் பட்டியலிடப்படும் கோப்புகள் Ins கட்டளைக்கு படியாது! அல்லது கிளை அலுவலர்கள் தங்களுடைய அறியாமையாலோ ஆர்வ கோளாறாலோ format கட்டளை கொடுத்து floppyயிலுள்ள அனைத்து கோப்புகளையும் களைந்திருப்பார்கள்!! அத்தகைய சூழலில் இலாக்காவிற்கு SOS வரும். சில கிளைகள் தொலைபேசியில் அழைத்து கணினி இலாக்கா அதிகாரிகள் கூறுவதை பொறுமையாக கேட்காமல் எதிர் கேள்வி கேட்டே நேரத்தை வீணடித்துவிட்டு கைகளை பிசைந்துக்கொண்டு நிற்பார்கள்.

ஆகவே எல்லா கிளைகளிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட versionஐ நடைமுறைக்கு அமுல்படுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்தது. இது என்ன பெரிய விஷயமா என்று கேட்க தோன்றலாம். பெரிய விஷயம்தான். வங்கி மேலிடம் ஒவ்வொரு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு வழங்க/வசூலிக்கப் படும் வட்டி விகிதத்தை அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட தியதியிலிருந்து மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. இன்றைய Centralised சூழலில் நினைத்த நேரத்தில் உடனடியாக அமுல்படுத்த முடிகிற மாற்றங்கள் அன்றைய Distributed சூழலில் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்தே அறிமுகப்படுத்த முடிந்தது

. ஆகவே அறிமுகப்படுத்த வேண்டிய தியதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே மாற்றங்களின் விவரங்களை கணினி இலாக்காவிடம் ஒப்படைத்துவிடுவார்கள். கணினி இலாக்காவினர் அவற்றை மென்பொருளில் உட்படுத்தி புதிய versionஐ எல்லா கிளைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதை குறிப்பிட்ட தியதிக்குள் எல்லா கிளைகளிலும் நிறுவாவிட்டால் பிரச்சினைதான். உதாரணத்திற்கு ஒரு சேமிப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய வட்டி 10% லிருந்து 9% ஆக குறைக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். புதிய மென்பொருள் version கிடைக்கப் பெறாத கிளை அதற்கு முந்தைய விகிதத்திலேயே தன்னுடைய சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும். அதனால் வங்கிக்கு ஏற்படக்கூடிய இழப்பு லட்சக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளதே!

இது ஒரு புறம். எல்லா கிளைகளிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட version நிறுவப்பட்டுவிட்டதா என்பதை கணினி இலாக்காவால் உறுதிப்படுத்திக்கொள்வதிலும் சிக்கல் இருந்தது. இதற்கென அனுப்பப்படும் சுற்றறிக்கையில் கணினி இலாக்காவால் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் versionஐ இன்ன தியதிக்குள் கிளைகள் நிறுவிவிடவேண்டும் என்றும் அதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் புதிய version வந்து சேராவிட்டால் கணினி இலாக்காவை தொலைபேசி மூல அணுகவேண்டும் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

குறிப்பிட்ட நாட்கள் வரை காத்திருக்க பொறுமையில்லாமல் மத்திய அலுவலகத்திலிருந்து இத்தகைய சுற்றறிக்கை வந்த நாளிலிருந்தே கிளைகளிலிருந்து இதை உள்ளடக்கிய மென்பொருள் எங்கே, எங்கே என்ற தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். இவற்றை சமாளிக்கவே தனியாக ஒரு குழு தேவைப்படும். கிடைக்கப்பெற்றாலும் அதை நிறுவ இயலவில்லை என்ற புகார்கள். நிறுவினாலும் சரிவர இயங்கவில்லை என்ற புகார்கள். பெரும்பாலும் இதற்கு பயணாளர்களின் தவறுகளே காரணமாயிருக்கும். நான் கிளை மேலாளராக இருந்த சமயத்தில் என்னுடைய துணை மேலாளர்கள் தாங்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் பொறுமையாக கணினி இலாக்கா அதிகாரிகள் பதிலளிப்பதில்லை என்ற புகார்களை கூற கேட்டிருந்தேன். ஆனால் கிளையிலிருந்து மாற்றலாகி கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகியபிறகுதான் தெரிந்தது கிளையிலுள்ளவர்களுக்கு கற்பிப்பது எத்தனை சிரமம் என்பது.

சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமில்லாமல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதம் மாறுதலுக்குள்ளாவதுண்டு. அத்தகைய சமயங்களில் இன்றைய Centralised சூழலில் மத்திய தகவல் மையத்திலுள்ள மென்பொருளில் இந்த மாற்றத்தை ஒட்டுமொத்த வங்கிக்கும் அமுலாக்கிவிட முடிகிறது. ஆனால் அப்போது புதிய மென்பொருள் கிளையில் நிறுவப்பட்டுவிட்டாலும் வட்டி வழங்க/வசூலிக்க வேண்டிய நாளுக்குள் அத்திட்டங்களிலுள்ள அனைத்து கணக்குகள் ஒவ்வொன்றிலும் புதிய வட்டி விகிதத்தை கைப்பட (Manual) மாற்ற வேண்டியிருக்கும். சுமார் பத்தாயிரம் கணக்குகள் உள்ள கிளைகளில் இதை செய்து முடிக்கவே ஒரு மாதத்திற்கு மேல் தேவைப்படும். ஆனால் மத்திய அலுவலகம் தாங்கள் இறுதியாக அறிமுகப்படுத்திய மாற்றங்கள் கிளையிலுள்ள அனைத்து திட்டங்களிலும் செய்தாகிவிட்டது என்ற தகவலை உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கிளைகளூக்கு கட்டளையிடும். அத்துடன் தன்னுடைய உள் ஆய்வாளர்களிடம் (Internal auditors) அவர்களுடைய அடுத்த கிளை விஜயத்தின்போது இதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கட்டளையிடும். ஆனால் மத்திய அலுவலகம் குறிப்பிட்டிருக்கும் நாளுக்குள் நடுத்தர மற்றும் பெரிய கிளைகள் நிச்சயம் முடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் மத்திய ஆய்வாளர்கள் (Internal Inspectors) தங்களுடைய கிளைக்குள் வருவதற்குள்.எப்படியும் செய்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் பல கிளை மேலாளர்களும் இந்த அலுவலை செய்து முடித்தாகிவிட்டது என்று தெரிவித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய அனுபவத்தில் பல ஆய்வாளர்கள் நான்கைந்து மாதங்கள் கழித்து ஆய்வுக்கு செல்லும் நேரத்திலும் மத்திய அலுவலகம் அறிமுகப்படுத்திய வட்டி விகித மாற்றங்கள் பல கிளைகளிலும் செய்யப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து தங்களுடைய ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

இது Distributed சூழலில் இன்றும் தீர்வு காண முடியாத பிரச்சினையாகவே இருந்துவருகிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள என்ன வழி என்று சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு சிந்திக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் நாட்டின் முன்னனி நிறுவனங்களில் சில தங்களுடைய Core Banking Solution என்கிற மென்பொருளை வங்கிகளில் அறிமுகப்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கியிருந்தன. ஆனால் அந்த நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளுக்கு கோரிய விலை எங்களைப் போன்ற சிறு வங்கிகள் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியததாக இருந்தது.

இருப்பினும் அவர்களுடைய மென்பொருளை காண்பது (Demo) என தீர்மானித்து அப்போது எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரி முதல்வராக என்னுடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. எங்களுடைய கணினி இலாக்கா அதிகாரிகளுள் சிலரும் குழுவில் இருந்தனர்.

உடனே முன்ன்னி நிறுவனங்கள் சிலவற்றை தொடர்பு கொண்டு ஒரு தேதி நிர்ணயித்து Demo பார்த்தோம்....

எனக்கு இரு நிறுவனங்களுடைய மென்பொருளும் வெகுவாக பிடித்துப்போனது. ஆனால் எங்களுடைய குழுவில் இருந்த கணினி இலாக்கா அதிகாரிகளுள் மூத்த சிலருக்கு 'சார் இது நம்ம பேங்குக்கெல்லாம் சரி வராது. நெறைய கஸ்டமைஸ் செய்ய வேண்டியிருக்கும். இவுங்க அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..' என்று துவக்கத்திலேயே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர்...

அவர்களுடைய போக்கு எனக்கு இது மாறுதலுக்கு எதிரான (resistence to change) போக்கு என்றே தோன்றியது.

தொடரும்..

10 டிசம்பர் 2007

வங்கிகளில் கணினி 5

எந்த ஒரு நிறுவனத்தின், குறிப்பாக வங்கிகளின்,  சிறப்பான செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சிக்கு அதன் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் (Information) மிகவும் அத்தியாவசியம். இதற்கு அடிப்படை தேவையாக இருந்தது கணினிமயமாக்கல் என்றால் மிகையாகாது.

ஒரே இடத்தில் தங்களுடைய வர்த்தகத்தை செய்து வரும் நிறுவனங்களே தங்களுடைய வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியுள்ள வங்கிகளைப் பற்றி கேட்க வேண்டுமா?

அதே சமயம் தங்கள் வசம் வந்து சேரும் தகவல்கள் எல்லாமே தங்களுடைய வர்த்தக வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய தகவல்களாக இருக்கமுடியாது என்பதும் உண்மை! More information more confusion என்பார்கள். இன்றைய கணினி யுகத்தில் நிறுவனங்களின் தகவள்களத்தில் (Database) குவிந்துக்கிடக்கும் தகவல்களை அலசி ஆய்வு செய்வதையே (Business Intelligence and Data Mining) ஒரு டிப்ளமோ கோர்சாக பல நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

ஆனால் ஒரு வர்த்தக அல்லது தொழில் நிறுவனங்களைப் போன்றதல்ல வங்கிகளின் செயல்பாடுகள். வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டு செயல்படுபவை வங்கிகள். ஆகவே வங்கிகளைப் பொறுத்தவரை இத்தகைய நேரடி வாடிக்கையாளர்களுடைய (Direct Customers) தேவைகளுடன் அவர்களுடைய வாடிக்கையாளர்களான மறைமுக வாடிகையாளர்களுடைய (customer's customers or indirect customers) தேவைகளையும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். இதிலிருந்தே வங்கிகளுடைய தகவல்களத்தின் (Database) முக்கியத்துவத்தை உணரமுடிகிறதல்லவா?

இத்தகைய முழுமையான தகவல்களத்தை (Comprehensive Database) வடிவமைப்பது அத்தனை எளிதல்ல என்பது இப்போதும் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பல மென்பொருள் நிறுவன கணினியாளர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அதாவது வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டு சுமார் பதினைந்தாண்டுகளுக்கு பின்னரும் இதுதான் நிதர்சனம்.

அப்படியிருக்க அன்று இத்துறையில் தாங்களாகவே கற்று தேர்ந்த ஒருசில அதிகாரிகளால் என்ன செய்திருக்க முடியும்? அதுவும் ஒரு சில மென்பொருள் மொழிகளே கைவசம் இருந்த நிலையில்!

இன்று அபிரிதமான தகவல் (abundant information) ஒரு தீர்வு காணமுடியாத பிரச்சினையாக உருவெடுத்திருக்க அன்று தகவல் இன்மையும் (lack of information or scarce information) ஒரு பிரச்சினையாக இருந்தது என்பது உண்மை.

ஒரு வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட சகலவித தகவல்களையும் சேகரிக்க மென்பொருளில் வசதிகள் தேவை. இப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு துவங்க வங்கிகள் வடிவமைத்திருக்கும் விண்ணப்ப படிவத்தின் நீளத்தை பார்த்தாலே தெரிய வரும். நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு குறைந்த படிவங்களே இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த பட்சம் பத்து, பதினைந்து கட்டங்கள் (Data Boxes). வாடிக்கையாளரின் பெயர், விலாசம் மட்டும் இருந்தால் போதும் என்கிற காலம் போய்  'உங்களுடைய பெட் விலங்கு நாயா, பூனையா இல்லை எலியா?' என்பதுவரை விசாரித்து சேகரிக்கும் சூழல்!'

இத்தகைய தகவல்களை சேகரிக்க வேண்டுமென்றால் வங்கிகள் பயன்படுத்தும் மென்பொருளில் அதற்கு வசதிகள் (Data capturing capacity) அவசியம். அதற்கு அன்றைய காலத்தில் பரவலாக புழக்கத்தில் இருந்த Dos based மென்பொருள் எந்தவிதத்திலும் பயன்படவில்லை.

DOS based மென்பொருளின் அடிப்படை பலவீனமே அது இயங்கும் கணினியின் Base Memoryதான் என்றனர் அன்றைய மென்பொருள் வடிவமைப்பாளர்கள். 640 kb அளவே உள்ள இந்த தளத்தில் இயங்க வேண்டிய அதே சமயம் சகல வசதிகளையும் கொண்ட ஒரு மென்பொருளை உருவாக்குவதிலிருந்த சிரமம் எங்களுடைய கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கி பழகியபோதுதான் எனக்கு முழுமையாக தெரிய வந்தது. 'நீங்க நினைக்கிறா மாதிரி எல்லா வேலிடேஷனையும் பண்ணா .exe பெரிசாயிரும் சார். அடிக்கடி சிஸ்டம் ஹேங் ஆயிரும்.' என்பார்கள். இன்று இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்த Dos Extenders உள்பட பல வசதிகள் உள்ளன என்றாலும் அதனால் பெரிய மாற்றங்கள் ஏதும் வந்துவிடவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் ஒரு வங்கியின் ஆயிரக்கணக்கான கிளைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட கிளைகளிலேயே சேமிக்கப்பட்டு வைக்கப்படுகிற நிலையில் அதன் முழுமையான பலன் அந்த வங்கிகளுக்கு கிடைத்ததில்லை. இதைத்தான் distributed database என்றார்கள்.

இத்தகைய Distributed software systeத்தில் ஒரு நிறுவனத்தின் (வங்கியின்) அனைத்து கிளைகளும் ஒரே மென்பொருளைத்தான் பயன்படுத்துகின்றனவா (Same version of the package) என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்று பல வங்கிகளும் Centralised Solution என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளன என்றாலும் ஒரு சில வங்கிகளே அதை தங்களுடைய அனைத்து கிளைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளன. அடுத்து வரும் சில வருடங்களில் கூட இத்தகைய நிலையே நீடிக்க வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. குறிப்பாக பதினாயிரம் கிளைகளுக்கு மேலுள்ள பல பெரிய வங்கிகளில் குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இதுதான் நிலைமை.

இன்றைய  Centralised சூழலில் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் பயன்படுத்த தேவையான மென்பொருளை மத்திய தகவல் மையத்தில் (Data Centre) உள்ள ஒரு சக்திவாய்ந்த வழங்கியில் (Server) இட்டு வைத்தால் போதும். அதாவது ஒரு வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் சென்று மென்பொருளை நிறுவும் அவசியம் இதில் இல்லை. Browser based மென்பொருள் (உ.ம். Internet Explorer) என்பதால் அதை பயன்படுத்த கிளைகளில் Browser வசதியுள்ள கணினிகள் மட்டுமே தேவை. மத்திய வழங்கியில் உள்ள மென்பொருளை (Application) பயன்படுத்த மட்டுமே இந்த கிளை கணினிகளால் முடியும். அதாவது மத்திய வழங்கியிலுள்ள தகவல்களை பயன்படுத்த மட்டுமே உரிமை வழங்கப்பட்டிருக்கும். அதை தறவிறக்கம் (Download) செய்யவோ அல்லது களையவோ (Delete) அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அன்று இதுவே ஒரு பெரிய அலுவலாக இருந்தது. மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பதால் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய version தயாரிக்கப்பட்டு கிளைகளில் நிறுவ வேண்டிய சூழல். மென்பொருளை தயாரிக்க ஒரு குழு என்றால் அவற்றை floppyகளில் சேமித்து கிளைகளுக்கு அனுப்ப என்றே வேறொரு குழு அமர்ந்து இடைவிடா பணியில் ஈடுபட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் கிளைகளுக்கு அனுப்ப தேவையான floppyகளை புதிதாக வாங்குவதென்றால் முடியாத காரியம் அல்லவா? ஆகவே கடந்த மாதம் பயன்படுத்திய floppyகளை கிளைகளில் திரும்பப் பெற்று அவற்றை format செய்வதற்கெனவும் இருவர், மூவர் கொண்ட குழு ஒன்று தனியாக இயங்கிக்கொண்டிருக்கும்.

A:Ins என்ற ஒரு கடைநிலை கட்டளையைக் கூட (Basic DOS command) சரிவர புரிந்துக்கொண்டு மென்பொருளை தங்களுடைய கணினிகளில் நிறுவ (Install) தெரியாத கிளை அலுவலர்களை மென்பொருளை முழுமையாக பயன்படுத்த பயிற்றுவிக்க கணினி இலாக்காவினர் எத்தனை பாடுபட வேண்டியிருந்தது?

தொடரும்...

28 நவம்பர் 2007

கணினி அனுபவங்கள் 4

வங்கிகளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த Legacy மென்பொருளில் இன்றைய மென்பொருளில் உள்ள GUI (Graphic User Interface) இல்லாததும் ஒரு பெருங்குறையாகவே கருதப்பட்டது.

வண்ணப் பெட்டியிலும் (Colour Monitor) கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்ததுடன் திரை முழுவதும் வலம் (navigate) வர முழுக்க, முழுக்க Keyboardயே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதனால் திரையில் நமக்கு தேவையான fieldஐ தெரிவு செய்து விவரங்களை (Data) பதிவு செய்ய
'நுழை' (Enter) அல்லது 'Tab' பொத்தானையோ பயன்படுத்த வேண்டியிருந்தது. அது எத்தனை சிரமம் என்பது அந்த மென்பொருளை தினமும் ஏழு, எட்டு மணி நேரம் பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே தெரியும். உதாரணத்திற்கு நாம் திரையில் கீழ் வரிசையில் அமைந்திருக்கும் (பதினெட்டாம்) fieldல் ஒரு விவரத்தை பதிவு செய்ய பதினேழு முறை Enter பொத்தானை அழுத்த வேண்டியிருக்கும். இதனாலேயே கிளையில் இருந்த பல குமாஸ்தாக்களும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை முழுமையாக பதிவு செய்வதை தவிர்த்தனர். இதன் விளைவு வாடிக்கையாளர்களுடைய முழுமையான விவரங்கள்
அதற்கென வடிவமைக்கப்பட்டிருந்த Mastersல் இருந்ததில்லை. ஆகவே வங்கி அலுவல்களில் பெரும்பாலான விழுக்காடு கணினிமயமாக்கப்பட்டும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களை (Registers) வைத்திருக்க வேண்டியிருந்தது. இது ஒரு பெரிய
குறைபாடாக இருந்தது.

இன்னொரு குறை விவரங்களை பதிவு செய்யும் fieldகளில் validation இல்லாதது. இதன் முக்கியத்துவத்தத மென்பொருளை வடிவமைக்கும் கணினியாளர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. உதாரணத்திற்கு சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணியாளர் (Employee) என அதற்குரிய இடத்தில் (activity code) பதிவு செய்துவிட்டால் அவருடைய பிறந்த நாளை பதிவு
செய்யும் இடத்தில் (Date of Birth field) அவர் ஒரு Minor என பதிவு செய்ய மென்பொருள் அனுமதிக்கலாகாது. ஏனெனில் மைனர் வயதில் இருக்கும் ஒருவரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். மேலும் ஒருவர் பணியாளர் என்று databaseல் இருக்கும்போது அவரையே வேறொரு இடத்தில் வர்த்தகம் செய்பவர் (Business) என்றும் மென்பொருள் ஏற்றுக்கொள்ளலாகாது. இப்படி திரையிலுள்ள ஒவ்வொரு
fieldம் validate செய்யப்படவேண்டும். ஆனால் இன்று மிகப்பிரபலமாகவுள்ள பல மென்பொருட்களிலும் இத்தகைய validationகள் இருப்பதில்லை.

இப்போது இத்துறையில் முன்னனியில் நிற்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் மென்பொருளிலேயே இந்த குறை இன்றும் உள்ளது என்றால் அன்று அடிப்படை பயிற்சி ஏதும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளை தயாரிப்பில் ஈடுபட்டவர்களுடைய மென்பொருளில் இத்தகைய குறைபாடுகள் இருந்ததில் வியப்பில்லையே.

இதன் விளைவாக தகவல் களத்தில் (Database) இருந்து எந்த ஒரு பயனுள்ள அறிக்கைகளையும் தயாரிக்க முடியாத நிலை. ஆக, அன்று புழக்கத்திலிருந்த மென்பொருள் ஒரு கிளையின் அன்றாட அலுவல்களான பணம் செலுத்துதல், பட்டுவாடா செய்தல் போன்ற அடிப்படை
அலுவல்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு மென்பொருளாக இருந்து வந்தது.

ஆனால் வருடங்கள் செல்ல, செல்ல எங்களுடைய வங்கியில் புழக்கத்தில் இருந்த மென்பொருளின் தரம் உயர்ந்தது என்னவோ உண்மை. அதாவது
இலாக்காவில் புதிய, மென்பொருள் தயாரிப்பில் அடிப்படை பயிற்சி பெற்ற கணினியாளர்கள் சேர்க்கப்பட்டப் பிறகு. ஆனால் இது வேறொரு புதிய தலைவலியை கொண்டுவந்தது.

இந்த காலக்கட்டத்தில் நான் பதவி உயர்வு பெற்று எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியின் (Training College) முதல்வராக அமர்த்தப்பட்டேன். கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்புகளில் கணிசமான விழுக்காடு கணினி பயிற்சி வகுப்புகளாக இருந்தது. அதுவரை ஒரு கிளை மேலாளர் கோணத்தில் வங்கியின் மென்பொருளை அணுகி வந்த நான் கணினி பயிற்சி எடுக்க வந்த கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன்.

எனக்கு வகுப்புகள் இல்லாத சமயங்களில் என்னுடைய கணினியில் மென்பொருளின் source codeஐ பெற்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒரு தயாரிப்பாளர் கோணத்திலிருந்து அணுகாமல் ஒரு பயனாளரின் (user) கோணத்திலிருந்தே அணுக ஆரம்பித்தேன். ஆகவே நான் கிளையில் இருந்தபோது குறைகளாக நான் கணித்திருந்தவற்றை சரிசெய்யும் நோக்கத்தில் எனக்கு மனதில்பட்டவற்றை குறித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

நான் குறித்து வைத்திருந்தவற்றை இலாக்கா அதிகாரிகளிடம் காண்பித்தபோது சீனியர் அதிகாரிகள் பலரும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தங்களுடைய வாதத்தை முன்வைப்பதிலேயே (அதாவது சாக்குபோக்கு) குறியாயிருந்தனர். ஆனால் சமீபத்தில் இலாக்காவில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் நான் குறித்துவைத்திருந்தவற்றுள் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டதுடன், 'நீங்க சொல்றது சரிதான் சார். நாங்களும் இதுமாதிரி ஒரு ரிப்போர்ட்
ப்ரிப்பேர் பண்ணி வச்சிருக்கோம். ஆனா இத டிசைன் பண்ண யாருமே எங்க அப்சர்வேஷன ஒத்துக்க மாட்டேங்கறாங்க.' என்றனர் உண்மையான ஆதங்கத்துடன்.

மென்பொருள் வடிவமைப்பதிலும் அதை தயாரிப்பதிலும் (Designers and developers) ஈடுபட்டுள்ள பல கணினியாளர்கள் இன்றும் இத்தகைய போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர் என்பதுதான் துரதிர்ஷ்டம்.

பயனாளர்கள் மென்பொருளின் தரத்தை மேம்படுத்தவே தாங்கள் காணும் குறைகளை எடுத்துரைக்கின்றனர் என்பதை பல கணினியாளர்கள் உணர்வதில்லை.

சரி. இனி முந்தைய இடுகையில் நம் நண்பர் சிவா அவர்கள் எழுப்பியுள்ள வாதங்களை பார்ப்போம்.

முதலாவது வங்கி அலுவல்கள் எல்லா வங்கிகளுக்குமே பொருந்துமா?

அடிப்படையாக பார்த்தால் சிவா அவர்கள் சொல்வதுபோல, Accounts Register, Scroll Books, Subsidiary Books and the General Ledger எல்லாமே எல்லா வங்கிகளிலும் ஒன்றுதான். அதாவது பரிவர்த்தனைகளை Accounting செய்யும் முறை.

ஆனால் அவற்றை அணுகும் முறை அதாவது எப்படி ஒவ்வொரு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களும் (Deposit & Loan Products) எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பதும் அதன் சட்ட திட்டங்கள் என்பதும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

எங்களுடையதைப் போன்ற வங்கிகளில் எல்லா திட்டங்களும் எல்லாருக்கும் பொருந்தும். அதாவது கணக்குகள் திட்டங்களின் கீழ் மட்டுமே துவக்கப்படுகின்றன. அதாவது தனிநபர் திட்டங்கள், நிறுவன திட்டங்கள் என பிரிக்கப்படுவதில்லை. ஆனால் பல புதிய வங்கிகளில் இவை Private or Personal Banking, Corporate or Wholesale Banking, Retail Banking, Investment Banking, என பலவகைகளில் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
ஆகவேதான் ஒரு வங்கிக்கு வடிவமைக்கப்படும் மென்பொருள் எல்லா வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை.

இரண்டாவது ரிசர்வ் வங்கி ஏன் எல்லா வங்கிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு மென்பொருளை வடிவமைக்கக் கூடாது.

இதை அதிகம் வெளிச்சம் போட்டு சொன்னால் சரிவராது. ஏனெனில் வங்கியில் பணிபுரியும் ஒருவர் ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டைக் குறைகூறலாகாது என்பது அடிப்படை நியதி!!

ஆனால் ஒன்று மட்டும் கூறலாம். ரிசர்வ் வங்கிக்கு வர்த்தகத்தை (Commercial Banking) பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அவர்களால் நிச்சயம் ஒரு முழுமையான, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் ஏதுவான ஒரு மென்பொருளை வடிவமைக்கவோ, அல்லது வேறொரு மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டாக தயாரிக்கவோ நிச்சயம் முடியாது.

மூன்றாவது மென்பொருள் வாங்குவதற்ககு லஞ்சம் வாங்கினால் மென்பொருள் எப்படி சரியா வேலை செய்யும் என்கிற குற்றச்சாட்டு.

குடுக்கறவன் இருக்கறவரைக்கும் வாங்கறவனும் இருக்கத்தான செய்வான்? தங்களை 'புனிதர்கள்' என பறைசாற்றிக்கொள்ளும் பல முன்னனி நிறுவனங்களும் இத்தகைய தரக்குறைவான பேரங்களில் இறங்குவதுதான் துரதிர்ஷ்டம். சமீபத்தில் முன்னனி நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட வங்கியின் இயக்குனர்கள் அனைவருக்கும் லேப்டாப் பரிசாக அளித்ததாம்!

அடுத்து 'ஒரு பிரிட்ஜ்,டிவி வாங்குவதற்க்கு எவ்வளவு மெனெக்கெடுகிறோம். ஒரு 4 கடையாவது ஏறி விலை விசாரித்து வாங்குகிறோமா இல்லையா? அதையே ஏன் கணிணி மயமாக்கலில் நாம் பின்பற்றவில்லை?'என்கிற கேள்வி.

எல்லா வங்கிகளுமே இன்று நாட்டில் முன்னனியில் உள்ள எல்லா நிறுவனங்களின் மென்பொருளை ஒருமுறையாவது டெமோ (Demo) பார்த்துவிட்டுத்தான் தங்களுக்கு தேவையான மென்பொருளை தெரிவு செய்ய வேண்டும் என்பது நியதி. அப்படித்தான் எல்லா வங்கிகளுமே செய்கின்றன. Multi Vendor Policy என்பது எல்லா வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால் டெமோவுக்கு வருகின்ற மார்க்கெட்டிங் ஆசாமிகள் 'மொட்டைத்தலையிலகூட முடிய வளர்க்கலாம்.' என்பதுபோல் தங்களுடைய மென்பொருளைப் பற்றி அளப்பார்கள். இதற்கென்று தனியாக அதிகாரிகளைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதும் நியதி. ஆனால் இதில் உயர் அதிகாரிகளே அங்கத்தினர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கணினியைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அவர்களுடைய கிளைகளில் நடக்கும் அலுவல்களைப் பற்றியே அவர்களுக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்பில்லை.
'
அடுத்து டிசிஎஸ்-ஐ மென்பொருள் தயாரிக்க அமர்த்தியது, 'ஒரு வருடதிற்குள் வேலையை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். நிறுவனப் பணியாளர்களின் ஈடுபாடின்மையால் அங்கு வந்து தயாரித்த மென்பொருளை 2 வருடமாகியும் அமுலாக்கம் செய்ய இயலவில்லை.'

இதற்கு நான் மேலே குறிப்பிட்டிருந்த உயர் அதிகாரிகளின் போக்கே காரணம். மென்பொருளை தெரிவு செய்யும் சமயத்தில் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என்கிற ஆதங்கம்தான் மென்பொருளை அன்றாடம் பயன்படுத்தும் பணியாளர்களிடம் இத்தகைய மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

தொடரும்

19 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - 3

 

வங்கி பரிவர்த்தனைகளை (transactions) வரவு(Receipts or Credits), பற்று (Payment or Debits) என இருவகைகளாக பிரிக்கலாம்.

வாடிக்கையாளர் செலுத்தும் பணம் அவர்களுடைய கணக்கில் வரவு வைப்பது மற்றும் அவர்களுக்கு வழங்கும் பணத்தை அவர்களுடைய கணக்கில் பற்று வைப்பது. இதை ரொக்க பரிவர்த்தனைகள் (Cash transactions) என்பர். வரவு வைக்கப்படும் கணக்குகள் வைப்பு நிதி (fixed deposits) சேமிப்பு கணக்கு (Savings accounts), வர்த்தக கணக்கு (Current Accounts), தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கணக்கு என பலவகைக் கணக்குகள் உள்ளன. இவற்றை அந்த காலத்தில் திட்டங்கள் என்றோம். இப்போது அவற்றையே நாகரீகமாக Products என்கிறோம். முன்பு Mobilisation of resources என்றதை இப்போது Selling of Products என்கிறோம். இத்திட்டங்கள் சேமிப்பு திட்டங்கள் (Deposit or Saving Products), கடன் திட்டங்கள் (Loan Products) என்று இருவகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவற்றின் எண்ணிக்கை வங்கிகளை பொருத்து மாறும். எங்களுடையதை போன்ற தனியார் வங்கிகளில் ஐம்பது திட்டங்கள் இருந்தன என்றால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தன.

இத்தகைய திட்டங்களின் கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளை கணினிமயமாக்க முனைந்தபோது அவற்றை தனித்தனி Modules ஆக பிரித்து அதுவரை கைப்பட (Manually) செய்த அலுவல்களை (Processes) கணினி மூலமாக செய்வதற்கு ஏதுவாக வகைப்படுத்த வேண்டியிருந்தது. முன்பு சேமிப்பு திட்டங்களின் கீழ் இருந்த வைப்பு நிதி திட்டங்கள், சேமிப்பு நிதி கணக்குகள், வர்த்தக கணக்குகள் என ஒவ்வொரு திட்டத்தின் கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்ய (record) பிரத்தியேகமாக புத்தகங்கள் (Ledgers) இருந்தன. அத்தகைய புத்தகங்களே பிறகு கணினிமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டபோது moduleகளாக வடிவமைக்கப்பட்டன.

இவை Deposit Modules, Loan Modules, DD Module, என பட்டியல் நீண்டுக்கொண்டே போய் முன்பு தேவைப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையை விட Moduleகளின் எண்ணிக்கை கூடியது. இன்றைய மத்திய வர்த்தக மென்பொருள் எனப்படும் Centralised or Core Banking Solutioனுள் நூற்றுக்கும் மேற்பட்ட moduleகள் உள்ளன என்றால் மிகையாகாது.

ஒரு கிளையின் அனைத்து அலுவல்களையும் கணினிமயமாக்க வேண்டும் என்பது அத்தனை எளிதல்ல என்பதை சுட்டிக்காட்டவே மேற்கூறியவற்றை குறிப்பிட்டுள்ளேன். ஆகவேதான் இன்று நாட்டின் முன்னணி நிறுவனங்களில் Infosys, TCS, Iflex போன்ற மிக சில நிறுவனங்களே வங்கிகளுக்கு தேவையான மென்பொருள் தயாரிப்பில் உலக அளவில் பெயர்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் உதவியுடன் சுமார் பதினைந்து ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டே இந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே ஒரு வங்கியின் அனைத்து அலுவல்களையும் கணினிமயமாக்குவது ஒருசில அதிகாரிகளை மட்டுமே கொண்ட குழுவால் சாத்தியமில்லை. இப்போதும் கூட ஒரு கிளைக்கு தேவையான நூற்றுக்கணக்கான moduleகளையும் முடித்து ஒரு முழுமையான மென்பொருளை அறிமுகப்படுத்த குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் தேவைப்படுகிறது. அத்தகைய மென்பொருளும் கூட அதன் முழுமையை அடைய மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.  எனக்கு மிகவும் தெரிந்த வங்கியின் கணினி இலாக்கா தலைவர் சமீபத்தில் கூறியது இது: 'பெரிய கம்பெனின்னு பேரு. CBS introduce பண்ணி ஆறு வருசத்துக்கு மேல ஆச்சி. இன்னமும் version change பண்றப்ப run time error வருது. கேட்டா அதான் உடனே வந்து சரி செஞ்சி குடுத்துடறமேன்னு சொல்றாங்க. கோடி கணக்குல கொட்டியும் இதான் நிலமை.'

உண்மைதான்.

இந்த சூழலில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்களை வல்லுனர்கள் என்று கூறிக்கொண்ட சில அதிகாரிகள் தயாரித்து அளித்த மென்பொருளில் நொடிக்கு ஒரு பிரச்சினை வந்ததில் வியப்பில்லையே.

இதில் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்தது குமாஸ்தாக்களின் அலுவல்களை மேற்பார்வையிடுவது. இதை Maker-Checker அலுவல் என்போம். அதாவது Maker எனப்படும் குமாஸ்தா கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யும் (enter) பரிவர்த்தனைகளை (transactions) அவை சரியான கணக்கில்தான் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது.

எங்களுடைய வங்கியில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் clipper மொழியில் தயாரிக்கப்பட்டிருந்ததால் அதில் screen transfer வசதி இருக்கவில்லை. அதாவது ஒரு குமாஸ்தா ஒரு பரிவர்த்தனையை (transaction) முடித்ததும் அந்த திரையை மேலதிகாரியின் கணினிக்கு மாற்றி அவருடைய ஒப்புதலை பெற முடிந்ததில்லை. ஆகவே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர் குமாஸ்தாவின் இருக்கையை நெருங்கி அவர் பதிவு செய்திருந்த பரிவர்த்தனையை சரிபார்த்து தன்னுடைய user id மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஒப்புதலை அளிக்க வேண்டியிருந்தது.

ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் பெரும்பாலான அதிகாரிகள் தங்களுடைய user id மற்றும் passwordஐ குமாஸ்தாக்களிடமே கொடுத்துவிடுவார்கள். ஆக மேக்கர்-செக்கர் இருவருமே ஒருவரேதான்! இதன் விளைவு? குமாஸ்தா ஏதாவது தவறு இழைத்திருக்கும் பட்சத்தில் அது உடனே கண்டுபிடிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போனது.

அன்றைய அலுவல்கள் அனைத்தும் முடிந்து இறுதி அறிக்கைகள் (Day end reports) கிடைத்தபிறகே அதிகாரிகளால் அன்றைய பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் நிலை இருந்தது! பல வருடங்களுக்குப் பிறகே குமாஸ்தாக்கள் பதிவு செய்யும் பரிவர்த்தனைகளை வேறொரு இடைக்கால கோப்பில்/அட்டவணையில் (file/table) பதிவு செய்து அதை அதிகாரிகள் தங்களுடைய கணினியில் பார்வையிட்டு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அளிக்கும் முறை வந்தது.

இத்துடன் இன்னும் பல சிக்கல்கள் இருந்தன....

தொடரும்...

07 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - 2

அந்த காலத்தில் பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிளை பரிவர்த்தனைகளை (Transactions) கணினிமயமாக்க முனைந்ததன் அடிப்படை நோக்கம் அன்றாட அலுவல்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதுடன் அரையாண்டு மற்றும் ஆண்டு அலுவல்களை அதிக சிரமம் இல்லாமல் முடிக்க வேண்டும் என்பதுதான். அதாவது தங்களுடைய Accounting தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு மென்பொருள் தேவை என்பது மட்டுமே வங்கிகளுடைய குறிக்கோளாக இருந்தது. இதற்கு காரணம் பெரிய மற்றும் மிகப்பெரிய கிளைகளில் அன்றாட பரிவர்த்தனைகளை இரவு பத்து மணிக்குள் முடிப்பதே பெரிய விஷயமாக இருந்ததுதான்.

அரையாண்டு, ஆண்டு இறுதி காலங்கள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்போதெல்லாம் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் (வங்கிகளின் ஆண்டு ஜனவரி-டிசம்பர் ஆக இருந்த காலம் அது) முதல் தேதியிலிருந்தே வங்கி ஊழியர்கள் அன்றாட அலுவல்களுடன் ஆண்டு இறுதி அலுவல்களை துவக்கினால் மட்டுமே டிசம்பர் 30ம் தேதிக்குள் ஆண்டு இறுதி அலுவல்களை ஒரளவுக்காவது முடிக்க முடியும். டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் வீட்டிற்கு செல்வது என்பதே அபூர்வம்தான். கிளைகளில் பணியாற்றும் குமாஸ்தாக்களுக்கு அந்த ஒரு மாதகாலத்தில் இத்தனை மணி நேரம் ஒவர் டைம் அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்துவிடுவதும் உண்டு. ஆனால் என்னைப் போன்ற மேலாளர்களுக்கோ அல்லது துணை அதிகாரிகளுக்கோ Closing allowance என்று ரூ.250 லிருந்து ரூ.500/- வரை கொடுத்துவிட்டு தினம் ஒன்றுக்கு பதினைந்து மணி நேரத்திற்கு மேல்  உலுக்கி எடுத்துவிடுவார்கள்.

ஆனாலும் ஆண்டு இறுதி முடிந்து உள் மற்றும் வெளி தணிக்கையாளர்கள் (Internal and External Auditors) கணக்குகளை தணிக்கை செய்து கிளையிலுள்ள அனைத்து கணக்குகளிலும் பற்று மற்றும் வரவு வைத்த வட்டி சரியானதுதான் என்று கூறும் வரை பல இரவுகளில் உறக்கத்தை இழக்க வேண்டியிருக்கும். ஏதாவது ஒருசில கணக்குகளில் வட்டி பற்று வைத்தது குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு முன்பு அந்த கணக்கு முடிக்கப்பட்டிருக்கும் சூழலில் வங்கிக்கு ஏற்பட்ட வட்டி இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மேலாளரிடமிருந்து வசூலிக்கவும் வங்கிகள் தயங்காது.

ஆகவே இத்தகைய அலுவல்கள் கணினிமயமாக்கப்படவேண்டும் என்பதை அப்போது கிளைகளில் பணியாற்றிய என்னைப் போன்ற அதிகாரிகள் அதாவது Banking Officers முன்வந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களில் எவருமே முறைப்படி மென்பொருட்களை வடிவமைக்கவோ (Design) அல்லது தயாரிக்கவோ (Develop) பயின்றவர்கள் அல்ல. வங்கி அலுவல்களுக்குப் பிறகு கையில் கிடைத்த புத்தகங்களை படித்தோ அல்லது அப்போது இதற்கென்று புற்றீசல் போன்று துவக்கப்பட்டிருந்த பயிற்சி அமைப்புகளில் (Training Institutes) சேர்ந்தோ பயின்றவர்களாகத்தான் இருந்தார்கள். இத்தகையோரை ஓரிடத்தில் சேர்த்து துவக்கப்பட்டவைதான் கணினி இலாக்காக்கள். பெரும்பாலான வங்கிகளில் இந்த இலாக்காவை Data Processing Centre என்று குறிப்பிட்டிருந்தனர். கணினி இலாக்கா என்ற பெயர் வந்ததே இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகுதான். இதற்கு எங்களுடைய வங்கியும் விதிவிலக்கல்ல.

கிளை அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து மென்பொருளில் இறங்கியதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அதாவது inner agenda என்பதுபோன்ற காரணம். சாதாரணமாக கிளை அதிகாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்ற முடிவதில்லை. ஒரே ஊரில் இருக்க வேண்டும் என்றால் வங்கியின் மத்திய அலுவலகத்தில் இருந்த சில முக்கிய இலாக்காக்களில் பணியாற்றி இவர்கள் இல்லையென்றால் பணிகள் ஸ்தம்பித்துபோய்விடும் என்பதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்த வேண்டும். இதில் அக்கவுண்ட்ஸ், க்ரெடிட் இலாக்காக்களை விட்டால் இந்த டேட்டா ப்ராசசிங் இலாக்காதான் மிக முக்கியமான இலாக்காவாக இருந்தது. மென்பொருள் தயாரிப்பது என்பது அத்தனை இலகுவான விஷயம் இல்லையே. ஆகவே இந்த அதிகாரிகளுக்கு பயங்கர தட்டுப்பாடு இருந்த காலம் அது. தலைமை அலுவலகம் அமைந்திருந்த நகரம் மற்றும் அதற்கு மிகவும் அருகாமையிலுள்ள நகரங்களைச் சார்ந்த அதிகாரிகள் தங்களுடைய சொந்த ஊரிலோ அல்லது அதற்கு மிக அருகாமையிலோ தொடர்ந்து பணியாற்ற கணினி இலாக்கா ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

கணினி இலாக்காவில் பணியாற்ற தகுதி வாய்ந்த அதிகாரிகளுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலேயே இத்தகைய அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், கூடுதல் சலுகைகளும் அளிக்கப்பட்டிருந்தன. எங்களுடைய வங்கியில் கணினி இலாக்கா துவக்கப்பட்ட காலத்தில் கைவிரல் எண்ணிக்கையிலேயே இருந்த இவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அலுவலகத்திற்கு வரலாம், ஏன் சில சமயங்கள் அலுவலக நேரத்திலேயே மென்பொருள் தயாரிப்பில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதுபோன்ற சலுகைகளும் அளிக்கப்பட்டிருந்தன. மேலும் இவர்களுடைய செயல்பாட்டை சரிவர கண்கானிக்க மற்றும் அவர்கள் தயாரிக்கும் மென்பொருள் தங்களுடைய கிளைகளில் பயன்படுத்த தகுதிவாய்ந்தவைதானா என்பதை மேற்பார்வையிடக் கூடிய திறன்படைத்த மேலதிகாரிகள் இல்லாதது இத்தகைய அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

'இவனுங்க என்ன லாங்வேஜ்ல பேசறாங்கன்னே வெளங்கமாட்டேங்குது. இதுல இவனுங்க பண்ற வேலைய சரியா இல்லையான்னு எப்படி கண்டுபுடிக்கறது. ஆலையில்லாத ஊர்ல இலுப்பைப் பூவும் சர்க்கரைன்னு கேள்விப்பட்டதில்லையா அதுமாதிரிதான் இவனுங்களும்.' என்று புலம்புவார் அப்போதைய பொது மேலாளர்.

ஒரு மென்பொருள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பு அவற்றின் தேவைகளைக் குறித்து ஆய்வு செய்து (Requirement Study) சம்பந்தப்பட்ட மென்பொருளை பயன்படுத்துபவர்களுடன் (Users) கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் SRS அறிக்கைகளின் முக்கியத்துவத்தை இந்த கத்துக்குட்டி அதிகாரிகள் உணர்ந்திருக்கவில்லை.

மேலும் இத்தகைய அதிகாரிகளில் பெரும்பாலானோர் கிளைகளில் பணியாற்றியவர்கள் என்பதால் கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு என்ன தேவை என்பதை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள தேவையில்லை என்றும் இதற்கென பிரத்தியேகமாக ஒரு அறிக்கை தயாரித்து மேலதிகாரிகளின் பார்வைக்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் நினைத்தனர். 'நாம SRS Document தயாரிச்சி அனுப்புனாலும் அத படிச்சி புரிஞ்சிக்கப் போறதில்ல. அப்புறம் எதுக்கு வீண் வேலை.' என்றும் நினைத்திருக்கலாம்.

இதன் விளைவுகளை இவர்கள் தயாரித்த மென்பொருளை பயன்படுத்திய என்னைப் போன்றவர்கள்தான் அனுபவிக்க வேண்டியிருந்தது.

தொடரும்...

02 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - என் அனுபவம் 1

வங்கி செயல்பாடுகளில் கணினியின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் மிகையாகாது.

என்னுடைய திரும்பிப் பார்க்கிறேன் தொடரில் நான் குமாஸ்தாவாக சேர்ந்த காலத்தில் வழமையில் இருந்து வந்த வங்கியின் செயல்பாடுகளைக் குறித்தும் அச்சமயத்தில் என்னைப் போன்ற குமாஸ்தாக்கள் தினசரி அலுவல்களை முடிக்க பட்ட சிரமங்களையும் விரிவாக எழுதியுள்ளேன்.

நான் மும்பை வங்கி கிளையொன்றில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் - 1994ல் - என்னுடைய வங்கியின் கிளை செயல்பாடுகள் கணினி மயமாக்கப்பட்டன.

மான்யுவல் (Manual) ஆப்பரேஷன் என்ற சூழலிலிருந்து முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஆட்டோமேட்டட் (Automated) சூழலுக்கு மாறும் சமயத்தில் வங்கி ஊழியர்கள் சந்திக்க நேர்ந்த சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சுமார் பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் கணினியில் ஏற்றி முடிக்கவே மாதக்கணக்கானது. அதுவும் முழுக்க பெண்களை மட்டுமே கொண்டிருந்த என்னுடைய கிளையில்.... கேட்கவே வேண்டாம்.

முதல் நிலை அதிகாரிகள் ஐவரை மட்டும் வைத்துக்கொண்டு இரவும் பகலும், விடுமுறை நாட்களிலும் அமர்ந்து நேரம் காலம் பாராமல் அத்தனை விவரங்களையும் கண்னியில் தகவல்களத்தில் (database) ஏற்றியதை இப்போது நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது.

ஆனால் ஒருமுறை பாடுபட்டு ஏற்றிவிட்டால் அதை காலாகாலத்துக்கும் பயன்படுத்த முடியும் அல்லது நம்முடைய தேவைகளுக்கேற்ப மிக எளிதாக மாற்றி அமைத்துவிடமுடியும், மேம்படுத்த முடியும் என்பதை அப்போது நானோ என்னுடைய துணை அதிகாரிகளோ உணரவில்லை.

அன்றுவரை ஒவ்வொரு மாதக்கடைசியிலும் ஒவ்வொரு கணக்கிலும் இருந்த மிகுதி (Balance) தொகையை வேறொரு புத்தகத்தில் குறித்து, கூட்டி அதன் கூட்டுத்தொகை கிளையின் பொது கணக்குப் புத்தகத்தில் (General Ledger) உள்ள கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வதற்குள் அடுத்த மாத இறுதி வந்துவிடும்.

ஆனால் கணினி மயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தின இறுதியிலுமே (Day end) இந்த வேலை சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும் என்பதை உணர்ந்தபோதுதான் நாங்கள் அதுவரை அனுபவித்த சிரமங்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை உணர்ந்தோம்.

அது மட்டுமா? ஒவ்வொரு கணக்கிலும் மூன்று மாத இடைவெளிகளில் வட்டித் தொகையை கணக்கிட்டு அதை ஒவ்வொரு கணக்கிலும் பற்று/வரவு வைத்து முடிப்பதற்கே இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிடும். ஆனால் கணினி மயமாக்கப்பட்டதன் பிறகு கிளையிலுள்ள எல்லா வாடிக்கையாளர்களுடைய கணக்கிலும் அதனதற்குண்டான வட்டியை அரை மணியில் கணக்கிட்டு அந்தந்த கணக்கிலும் பற்று/வரவு வைத்து முடித்து உன்னுடைய கிளையின் மொத்த வட்டி வரவு/பற்று இதுதான் என்பதை அன்றைய மாத இறுதி நாளன்றே தெரிவித்துவிடும்!

அதுவரை சிம்மன சொப்பனமாக இருந்த அறையாண்டு மற்றும் ஆண்டிறுதி பணிகள் கணினி மயமாக்கப்பட்டதும் மற்ற வேலைநாட்களைப் போலவே ஆகிப்போனது.

ஆனால் இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்போது பிரபலமாகவுள்ள மென்பொருள் நிறுவனங்கள் இருக்கவில்லை. இன்றைய கணினி யுகத்தில் வங்கிகளுக்கென்றே பிரத்தியேக மென்பொருட்களை தயாரித்து வழங்க பல நிறுவனங்கள் உள்ளன.

அன்றோ எங்களைப் போன்ற பெரும்பாலான வங்கிகளில் பணியாற்றிய ஒருசில அதிகாரிகள் தாங்களாகவே கற்று தயாரித்த மென்பொருட்களைத்தான் பயன்படுத்தி வந்தன. அவை பெரும்பாலும் அப்போது பழக்கத்தில் இருந்த Dbase, Foxpro, Informix, Cobol எனப்படும் மொழிகளிலேயே (Language) எழுதப்பட்டிருந்தன.

என்னுடைய வங்கியில்
Clipper
என்று அப்போது பழக்கத்திலிருந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த மென்பொருள் முழுக்க, முழுக்க dbase கோப்புகளால் ஆனது. சேமிக்கப்படும் தகவல்கள் (data) .dbf கோப்புகளில் சேமிக்கப்பட்டிருப்பதால் சில அபாயங்களும் உண்டு.

ஆனால் அன்றைய சூழலில் அதன் தாக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிக பொருட்செலவில்லாமல் உருவாக்கப்பட்ட பல மென்பொருட்களில் இதுவும் ஒன்று. அன்றையே அத்தியாவசிய தேவைக்கு - அதாவது ஒரு கிளையில் நடைபெறும் அன்றாட பரிவர்த்தனைகளை (transaction) நடத்தி முடித்து நாளிறுதியில் (at the end of the day) கணக்கு முடிக்கும் வரை - அது பயன்பட்டது.

இதன் இயங்கு தளம் (OS) விண்டோஸ் அறிமுகமாகும் வரை பிரபலமாக இருந்த disc operated system எனப்படும் DOS. ஆகவே இந்த மென்பொருளை பயன்படுத்த ஒருவர் DOS கட்டளைகளை (commands) ஒரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும்.

இதில்தான் சிக்கலே....

தொடரும்..

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் எங்கள் வங்கியின் கணினி இலாக்கா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். படித்துவிட்டு சென்றுவிடாமல் உங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டால் சந்தோஷம். கட்டாயமில்லை:-)

18 அக்டோபர் 2007

கார்ப்பரேட் பாட்காஸ்ட்டிங்

கடந்த நான்கு மாதங்களாக நானும் என்னுடைய வங்கி கணினி இலாக்காவைச் சார்ந்த அனைவரும் அயராது உழைத்ததன் பலனை நேற்று அனுபவிக்க முடிந்தது.

என்னுடைய வங்கி சென்னையைச் சார்ந்த மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஓராண்டு காலமாக எங்களுடைய மொத்த கிளைகளையும் முழுவதுமாக கணினி மயமாக்க தேவையான மென்பொருளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளோம்.

அது தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதை எங்களுடைய அனைத்து கிளைகளும் பயன்படுத்தும் வகையில் அவற்றை ஒருங்கிணைக்க (network) முடிவு செய்து அதற்கான ஆயத்த வேலைகளில் என்னுடைய இலாக்கா அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அதை நனவாக்கும் நோக்கில் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ இன்ஃபோடெக்கை எங்களுடைய அனைத்து கிளைகளையும் ஒருங்கிணைக்கும் நிறுவனமாக (networking and system integration) நியமித்து அவர்களுடனான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையிலுள்ள GRT Grand Convention Centreல் நடைபெற்றது. எங்களுடைய வங்கி தலைவர் திரு வெங்கடராமன் அவர்களும் விப்ரோ இந்திய செயல்பாடுகளின் தலைவர் திரு கே.எஸ். விஸ்வநாதன் அவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

சென்னையிலுள்ள அனைத்து பத்திரிகை மற்றும் செய்தி இணணயதளங்களையும் சார்ந்த நிரூபர்கள் எங்களுடைய அழைப்பை ஏற்று வந்திருந்தனர். இன்று சுமார் பத்து பத்திரிகை/இணையதளங்களில் விழா தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

விழாவை ஒருங்கிணைத்து நடத்திய என்னுடைய அருமை நண்பர் Primepoint சீனிவாசன் இந்திய வங்கித்துறையில் முதல் முறையாக இரு தலைவர்கள் கூறியவற்றை பாட்காஸ்ட் வடிவத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை இங்கே காணலாம்.

இன்னும் நான்கு மாதங்களில் எங்களுடைய அனைத்து கிளைகளும் சென்னையிலுள்ள மத்திய வழங்கியுடன் இணணக்கப்பட்டவுடன் மத்திய மென்பொருள் (centralised solution) செயல்படுத்தப்படும். இது எங்களுடைய கணினி இலாக்கா ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது என்பதும் இந்திய வங்கித் துறையில் ஒரு சாதனை.

*******

01 அக்டோபர் 2007

புது வலைப்பூ எழுத்து மேடை

வலைப்பூவில் எழுதுவதற்கு தற்போது பல வழிகள் உள்ளன.

நம்மில் பலரும் ஈகலப்பையை பயன்படுத்தி நேரடியாக ப்ளாகர்.காம் (Blogger.com) வழங்கும் 'புதிய இடுகை' (New Post)மேடையில் எழுதி பதிவு செய்வது வழக்கம். ஆனால் இதற்கு நாம் 'ஆன் லைனில்' இருக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து 'ஓசியில்' இணைப்பை பயன்படுத்துபவர்களுக்கு இதுதான் எளிது. இதில் இன்னுமொரு தொல்லை, நம்முடைய இடுகையின் நகலை நம்முடைய கணினியில் சேமித்துக்கொள்ள முடிவதில்லை. 

இதற்கு மாற்றாக நம்முடைய கணினியில் உள்ள நோட்புக்கில் எழுதி அதை காப்பி, பேஸ்ட் மூலம் ப்ளாகரிலுள்ள புதிய இடுகை தளத்தில் பதிவு செய்யலாம். இது ஆஃப் லைனில் இடுகையை தயாரிக்க வகை செய்கிறது. இடுகையின் நகலையும் கணினியில் சேமிக்க முடிகிறது. ஆனால் முந்தைய முறையை விடவும் கூடுதல் நேரம் தேவைப்படும்.

இவ்விரண்டு முறைகளுக்கும் மாற்றாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் ரைட்டர் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கிடைக்கும் இடம்:

இதிலுள்ள வசதிகள் என்ன?

நம்முடைய பதிவு பக்கத்திலேயே நேரடியாக எழுதுவது போன்ற பிரமையை அளிக்கிறது:

Post scr

இதற்கு  'வியூ' மெனுவில் 'வெப் லேஅவுட்' தெரிவு செய்ய வேண்டும்.

win1

மேலும் 'Insert Picture', 'Insert Hyperlink', வசதிகள் மூலம் எந்த ஒரு படத்தையோ, வலைத்தள சுட்டையையோ மிக எளிதாக இணைத்துவிடலாம். இதிலுள்ள படங்கள், சுட்டி எல்லாமே இவ்வாறு பதிவு செய்தவைதான். இதற்கென படங்களை வேறெந்த third party தளங்களில் சேமித்து வைத்து தரவிறக்கம் செய்ய தேவையில்லை.

win3 

நம்முடைய எழுத்துருவின் வடிவம், நிறம் ஆகியவற்றையும் மிக எளிதாக அமைத்துக்கொள்ள உதவுகிறது 'Format' மெனு.

மேலும் 'Align' 'Numbering' 'Bulleting' வசதிகள் நம்முடைய இடுகையை மெருகூட்டவும் உதவுகின்றன.

win4

இதிலுள்ள 'Table' மெனு ஒரு முழுமையான 'table' ஐ இணைக்கவும் வசதி செய்கிறது. 

win5

'Tools' மெனுவிலுள்ள 'Preferences' மெனு மேலும் பல வசதிகள செய்துக்கொள்ள உதவுகின்றன.

win6

மேலும் இதே மெனுவிலுள்ள 'Accounts' மெனு நம்முடைய அனைத்து வலைப்பூக்களையும் இந்த மேடையில் இணைத்துக்கொள்ள உதவுகிறது.

win7

'Weblog' மெனு நம்முடைய இடுகையை இடுவதற்குண்டான பதிவை தெரிவு செய்ய உதவுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உதவுகிறது. ஒரே மேடையில் தங்களுடைய எந்த பதிவையும் நொடிப்பொழுதில் தெரிவு செய்ய முடியும்.

 win9

சரி... எழுதி முடித்தாகி விட்டது.

நம்முடைய இடுகையை நம்முடைய கணினியிலேயே சேமிக்கவும் 'Save Local Draft' என்ற மெனு வசதி செய்கிறது. அதாவது நம்முடைய வலைப்பூவில் எப்படி தெரியுமோ அதே வடிவத்தில்!!

நாம் எழுதி முடித்ததும் உடனே பதிவு செய்துவிட வேண்டும் என்றில்லை. எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் 'Open' மெனுவை க்ளிக்கினால் நாம் சேமித்து வைத்துள்ள இடுகைகளின் பட்டியல். இப்பதிவு நான் சனி, ஞாயிற்று கிழமைகளில் தயாரித்தது.

win12

'Publish' செய்வதற்கு முன்னர் நம்முடைய இடுகை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை காண ' Web Preview' வசதியும் உண்டு!

win11

ஒரே ஒரு க்ளிக்கில்  நேரடியாக நம்முடைய வலைப்பூவில் வெளியிடும் 'Publish' வசதியும் இருப்பதால் அதற்கென 'blogger.com' தளத்தில் ஓவ்வொரு முறையும் நம்முடைய ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து அவதிப்படவும் தேவையில்லை.

மென்பொருளை தரவிறக்கம் செய்யும்போதே நம்முடைய பளாகர் ஐடியையும் பாஸ்வேர்டையும் ஒரேயொரு முறை கொடுத்து சேமித்து விட்டாலே போதும்.

*********

04 செப்டம்பர் 2007

போலி சண்டை போதுங்க (நகைச்சுவை)

இது ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை உரையாடல்தான். ஆனால் இதன் மூலம் சொல்ல வருவது நிஜமான மனத்தாங்கலின் வெளிப்பாடு.

இதை இருதரப்பினரும் உணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..

அன்புடன்,
ஜோசஃப்


ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வடிவேலு தன்னுடைய அறையில் தனியாக அமர்ந்து கையில் இருந்த பேப்பரிலிருந்து அன்றைய காட்சிக்கான வசனத்தை உரக்க ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அறைக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழையும் பார்த்திபன் உடம்பை வளைத்து, கை கால்களை ஆட்டியவாறு எதிரிலிருந்த முகக் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்துடன் பேசிக் கொண்டிருக்கும் வடிவேலுவைப் பார்க்கிறார்.

பார்: டேய்...

வடி: (திடுக்கிட்டு திரும்புகிறார். பார்த்திபனைப் பார்த்ததும் தனக்குள்) இவன் எங்க இங்க... இன்னைக்கி இவன் கூடவா கால்ஷீட்டு... கிளிஞ்சது போ... அந்த அஜிஸ்டெண்ட் டைரடக்கர் பய சொல்லவே இல்ல?

பார்: டேய் என்ன மொனகுற? சத்தமா பேசுன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்... (வடிவேலுக்கு பக்கத்திலிருந்த சோபாவில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பை திறந்து 'ஆன்' செய்கிறார்.)

வடி: (ஆச்சரியத்துடன்) ஏய்யா.. நீ கம்ப்யூட்டர் எல்லாம் கூட பாப்பியா?

பார்: டேய்... இது என்ன டிவியா பாக்கறதுக்கு? கம்ப்யூட்டர்றா.... (அவருடைய வசனம் அடங்கியிருந்த கோப்பைத் திறந்து மேலோட்டமாக தனக்குள் ஒருமுறை வாசிக்கிறார். வடிவேலுவின் முகம் பிரகாசமடைகிறது)

வடி: ஏய்யா... இதென்ன புதுசாருக்கு... கம்ப்யூட்டர்ல தமிள்லயும் தெரியுதா? ((திரையை தொட்டுப் பார்க்க கையை நீட்டுகிறார்.)

பார்: டேய்.. தொடாத... தொடாம பாரு... சாரி படி..

வடி: இதுதான் ஒன் டயலாக்கா?

பார்: அதான் பார்த்தாலெ தெரியுதுல்லே... பிறவென்ன கேள்வி..

வடி: அது சரி... ஒனக்கு மட்டும் எப்படியா இந்த ஐடியாவெல்லாம் வருது?

பார்: (எரிச்சலுடன்) ஐடியா என்ன பெரிய ஐடியா, பொடலங்கா... நா இப்பல்லாம் தமிழ்ல ப்ளாகே எழுதறேன்....

வடி: (குழப்பத்துடன்) என்னது ப்ளாக்கா? அப்படின்னா... இந்த கருப்பும்பாங்களே அதா.. அதுல என்னய்யா எளுதறதுக்கு இருக்கு... சும்மாவே கருப்பாருக்கும்... அதுல எளுதுனா படிக்கவா முடியும்?

பார்: (கோபத்துடன்) டேய்.. வாணா... காலங்கார்த்தால அடி வாங்காத... போய் ஒழுங்கா ஒன் டயலாக்க பாரு... அப்புறம் ஷாட்ல வந்து சொதப்பாத... ஷாட் படி எங்கிட்ட நிறைய வாட்டி அடி வாங்கப் போற... அதுக்கும் சேத்து இப்பவே ஒத்திகை பாத்துருவேன்... மரியாதையா போயிரு...

வடி: (குழைந்து) கோச்சிக்காதய்யா.... நீ தான சொல்வே... நான் ஞானசூன்யம்னு... மருதையில சுத்திக்கிட்டு திரிஞ்ச பயதானய்யா... இந்த ப்ளாக்கு ஒய்ட்டுன்னா எனக்கென்ன தெரியப் போவுது... சொல்லுய்யா.... ப்ளாக்குன்னா என்னது?

(பார்த்திபன் உடனே தன்னுடைய ஏர்டெல் டேட்டா அட்டையை உபயோகித்து இணைப்பை ஏற்படுத்தி தன்னுடைய கிறுக்கனின் கிறுக்கல்கள்.ப்ளாக்ஸ்பாட்.காம் வலைப்பூவை திறக்கிறார். வடிவேலுவின் கண்கள் அகல விரிகின்றன. பார்த்திபன் அன்று காலை கிறுக்கிய கவிதை வரிகளை உரக்கப் படிக்கிறார்.)

வடி: இத நீயா எளுதின?

பார்: (திருவிளையாடல் நாகேஷ் பாணியில்) பின்னே... மண்டபத்துல யாராச்சும் எழுதிக் குடுத்ததையா போடறேன்... நான், நான், நாந்தாண்டா எழுதினேன்... இங்க பார், நா இத போட்டு ஒரு மணி நேரம் கூட ஆவலை... எத்தன பேர் படிச்சிட்டு பாராட்டியிருக்காங்க... (தனக்குத் தானே வெவ்வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டு பாராட்டியவற்றையெல்லாம் காட்டுகிறார்)

வடி: என்னது நீ எளுதினத ஒரு மணி நேரத்துக்குள்ள இத்தன பேர் படிச்சிட்டு பாராட்டியிருக்கானுவளா? என்னய்யா இது நம்பவே முடியல? நீ இத எளுதறது அவனுங்களுக்கு எப்படிய்யா தெரியுது?

பார்: நா மட்டுமில்லடா... என்னையெ மாதிரி ஆளுங்க எழுதறதையெல்லாம் கலெக்ட் பண்ணி போடறதுக்குன்னே ஒரு சைட் இருக்கு... இரு காட்டறேன். (பார்த்திபன் தன்னுடைய வலைப்பூவிலிருந்த தமிழ்மணம் லிங்க்கை தட்டிவிட அடுத்த சில நொடிகளில் தமிழ்மணம் தளம் விரிகிறது.. முகப்பிலேயே 'போலி பிடிபட்டான்' என்ற தலைப்பில் காரசாரமான பதிவு கண்ணில் படுகிறது. பார்த்திபன் அவசரமாக ஸ்க்ரோல் செய்து தன்னுடைய பதிவை காட்ட முயல்கிறார்.)

வடி: யோவ் நில்லு, நில்லு... இதென்ன... போலி பிடிபட்டான்னு போட்டுருக்கு... அத தொறய்யா படிக்கலாம்....

பார் (எரிச்சலுடன்) டேய்... அந்த கண்றாவியெல்லாம் நமக்கு வேணாம்.... அதெல்லாம் நம்மள மாதிரி, இல்ல, என்னைய மாதிரி டீசெண்டான ஆளுங்க படிக்கறதுக்கு கிடையாது...

வடி: (முறைக்கிறார்) சரிய்யா... நா டீஜெண்ட் இல்லதான்... அதான் கேக்கேன்... அத தொற... படிச்சிட்டுத்தான் மறுவேலை...

பார் டேய்.. மொதல்ல இன்னைய டயலாக்க பார்ப்போம்... அப்புறமா படிக்கலாம்....

வடி (பிடிவாதத்துடன்) யோவ் ட்ராக்க மாத்தாத.... இதென்னா பிச்சாத்து டயலாக்.... நாம என்னைக்கி இவனுங்க எளுதுன டயலாக்க பேசியிருக்கோம்... தன்னால ஸ்பாட்டுல பேசறதுதானய்யா.... என்னமோ போலின்னு எளுதியிருந்துதே அத காட்டு.... என்னதான் போட்டுருக்கான்னு பார்ப்பம்...

பார் (சலிப்புடன்) இந்தா நீயே படி... ஆனா ஒன்னு...

வடி: என்னது?

பார் இதுலருக்கறத படிச்சுட்டு உடனே மறந்துறணும்... ஸ்பாட்டுல வந்து இதுலருக்கறத பேசின... மவனே ஷூட்டிங்குன்னு கூட பாக்காம சொருகிருவேன்...

வடி ஏன்... அப்படி என்ன எளுதியிருக்காய்ங்க... காட்டுய்யா பாப்பம்...

(பார்த்திபன் வேண்டா வெறுப்பாக முகப்பில் பிரதானமாக தெரிந்த பதிவை திறந்து வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு எழுந்து கண்ணாடியைப் பார்த்தவாறு நிற்க, வடிவேலு உரக்க வாசிக்க துவங்கிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார். அடுத்த சில நிமிடங்கள் அறையில் நிசப்தம்.)

வடி என்னய்யா இது அக்கிரமமா இருக்கு... இப்படி அசிங்கமா எளுதறாய்ங்க? ச்சை... நாமளே மேல் போலருக்கு? யார்யா இந்த டோண்டு... அந்தாளுக்கு போலின்னா... டூப்பா... எதுக்கு.. ?

பார் டேய்... அது ஒரு பெரிய கதை... தமிழ் சீரியல் மாதிரி எடுக்கலாம்.... ஆனா என்ன வீடே நாறிப் போயிரும்.... அவ்வளவு அசிங்கமா இருக்கும்... ஒரு வாரமா இதே அசிங்கம்தான்.. மொதல்ல அந்த போலி எல்லாத்தையும் நாறடிச்சான்... இப்ப இவங்க அவனெ...

வடி சரிய்யா.. இப்படி அசிங்க, அசிங்கமா எழுதறாங்களே.. இதுக்கெல்லாம் சென்சார்னு ஒன்னு கெடையாதா... நாம சும்மானாச்சும் பேசறதையெல்லாம் சென்சார்ல வெட்டிடறானுங்களேய்யா...

பார் (வியப்புடன்) தோ பார்றா... சமயத்துல நீ கூட புத்திசாலித்தனமாத்தான் பேசற.... ஆனாலும் நீ சொன்னது சரிதான்... இதுக்கும் சென்சார் வரணும்.... அப்பத்தான் இது சரி வரும்... படிச்சவங்க.. பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா... ஹூம்... விட்டுத்தள்ளு.... நம்ம டயலாக்க பார்ப்பம்...

வடி இதுல போய்த்தான் நீயும் கிறுக்கிக்கிட்டு இருக்கியாக்கும்.... ஒனக்கு தேவையா? நாளைக்கி ஒனக்கே போலின்னு எவனாச்சும் முளைச்சி வந்துறப்போறான்...

பார் (கோபத்துடன்) டேய்... என்ன அப்படியொரு ஐடியா இருக்கா மனசுக்குள்ளே...

வடி: சேச்சே... சும்மா ஒரு வெளையாட்டுக்கு சொன்னேம்பா... சரி... சரி... நீ ஒன் டயலாக்க சொல்லு...

பார் (தன்னுடைய வசன கோப்பிலிருந்து வாசிக்கிறார்) போலியே போலின்னு ஒத்துக்கற வரைக்கும் போலி, போலி இல்லடா!

வடி அடச் சை... இங்கயும் போலிதானா!

பார்: அதான... நம்ம வசனகர்த்தாவும் ப்ளாக் எழுதறவர்தான் போலருக்கு (இருவரும் சிரிக்கின்றனர்)

******

01 செப்டம்பர் 2007

பிரிவோம்... சந்திப்போம்

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்றால் சிலருக்கு வீட்டிலேயே பிரச்சினை.

அலுவலகத்தில் பிரச்சினை என்றால் எப்போது அலுவலகம் நேரம் முடியும் என்று காத்திருப்பார்கள். ஆனால் வீட்டிலேயே பிரச்சினை என்றால் அலுவலகமே கதி என்று கிடப்பார்கள். காலை ஏழு மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டால் அலுவலகத்தின் கதவுகள் சாத்தப்படும் வரை அமர்ந்திருப்பார்கள்.

முன்னவர்கள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை அமர்ந்து செய்யும் அதே அளவு பணியைக் கூட பின்னவர்கள் செய்வதில்லை என்பது மேலதிகாரிகளுக்கு தெரிவதில்லை. 'Look at him. He is more dedicated to his work. You should try to emulate him.' என்பார்கள். Quality is more important than the quantity என்பது பல உயர் அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது போலத்தான் மேலாண்மையும். அனுபவத்தினால் வருவது இந்த கலை. ஆளைப் பார்த்து எடை போடாமல் அவனுடைய வேலையைப் பார்த்து எடை போடு என்பது நம்முடைய அலுவலக உயர் அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

வீட்டுப் பிரச்சினை எப்படி அலுவலகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை விடவும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துவது இந்த அலுவலகப் பிரச்சினை என்றால் மிகையாகாது.

அதுவும் Rat Race என்பார்களே அதுபோன்ற பிரச்சினைகள் இந்த அதிவேக உலகத்தில் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!

ஆனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்லது வடிகால் நிச்சயம் இருக்கும்.

சினிமா, இசை, நண்பர்களுடன் அரட்டை, ஓவியம், பாட்டு, விளையாட்டு போன்றவைகளைப் போலத்தான் எழுத்தும்...

அலுவலகத்தில் சோர்வு ஏற்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை திருப்பித் தரும் மருந்தாக இருந்து வந்தது வலைப்பூக்களில் எழுதுவது.

விளையாட்டாக எழுத துவங்கி சுமார் இரண்டரை ஆண்டுகள்... வாரம் ஒருமுறை, இருமுறை என துவங்கியதுதான் சுமார் இரண்டாண்டு காலமாக தினமும் எழுதுவது என ஒருவிதத்தில் obsession என்பார்களே அதுபோன்ற நிலை ஏற்பட்டது.

தமிழ்மணத்தை ஒருமுறையாவது பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பது போன்ற நிலை...

ஒருகாலத்தில் என்னுடைய அலுவலக stressஐ (மன அழுத்தம் என்பது சற்று மிகையான சொல் என்று கருதுகிறேன்) குறைக்க முடிந்த வடிகாலே சமீபத்தில் சில பிரச்சினைகளுக்கு source (மூல காரணம் எனலாமா?) ஆகிப்போனதால் எழுத்துக்கு சற்று விடுப்பு கொடுக்க வேண்டிய சூழல்.... நிர்பந்தம் என்று கூட சொல்லலாம்.

அலுவலகத்தில் வேலைப்பளு என்கிற போர்வையில் இனியும் ஒளிந்துக் கொண்டிருக்க முடியாமல்தான் போட்டு உடைத்திருக்கிறேன்..

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்கிற வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன..

பிரிகிறேன்... மீண்டும் சந்திக்க முடியும் என்கிற நினைவுடன்...

என் மனதுக்கு மிகவும் பிடித்த 'நாளை நமதே' என்கிற தொடரையும் தொடர முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.....

***********

27 ஜூலை 2007

அழகு தமிழும் இன்றைய தலைமுறையும்

என்னுடைய தலைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லையென்றே கருதுகிறேன்.

தமிழ்வழி கல்வியே ஏதோ பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்கிற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டிருந்த காலம். அதாவது பணம் செலவழித்து கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்கு என்பதுபோன்றதொரு மாயை..

கிறிஸ்துவ குடும்பங்களில் வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒருவித கட்டாயமாக கருதப்பட்டு வந்த காலம். 'இங்க்லீஷ்ல எழுதுறதும் பேசுறதும் நமக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுக்கும்' என்பார் என்னுடைய தாத்தா. நம் வீட்டு பிள்ளைகள் எல்லாருமே மெட்றிகுலேஷன் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பார்.

'நம்ம வீட்லருந்து ஒருத்தனாவது கடவுள் சேவைக்கு போகணும். அதனாலதான் ஒன்னெ குருமடத்துல சேக்கறேன்' என்று என்னுடைய விருப்பம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளாமலே கொண்டு சேர்த்தவர். குருமடத்திலோ தப்பித்தவறியும் கூட தமிழில் பேசிவிடக்கூடாது என்கிற நிர்பந்தம். ஆனால் நாளடைவில் என்னுடைய கோபமும், பிடிவாதமும் என்னை அங்கிருந்து விரட்டியடித்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் மாணவர்கள் தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. தாய்மொழியில் பயிலுவது எங்களுடைய பிறப்புரிமை. யாரும் எம்மீது அந்நிய மொழியை திணிக்க அனுமதியோம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

தமிழை இரண்டாவது பாடமாக எடுக்கவும் தயங்கி வந்த காலம் மறைந்து தமிழ்வழி கல்வி மற்ற வழி கல்விக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என்கிற நிலை பரவலாக குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்படத் துவங்கியது. நாளடைவில் அதுவே நிலைப்பெற தாய்தமிழ்க்கு அதற்குரிய முக்கியத்துவம் உருவாக ஆரம்பித்தது.

தமிழில் பிழையின்றி பேசுவது, எழுதுவது என துவங்கி தூய தமிழில் பேசுவதையும் ஒருவித கவர்ச்சிக் கலையாகவே மாற்றினர் திராவிட கட்சி பேச்சாளர்கள். பாமர மக்களையும் தங்களுடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலால் கவர்ந்து அரசியல் கூட்டங்களை இலக்கிய கூட்டங்களாக மாற்றிய பெருமை அண்ணா, மு.க, நாஞ்சிலார், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சாரும். அதன் பிறகு திரைப்படப் பாடல்கள் வழியாக தூய தமிழை பட்டித் தொட்டிகளிலெல்லாம் பரப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு தூய தமிழில் பேச, எழுத வெகு இலகுவாக வருகிறது என்றால் அதிசயமல்ல என்றாலும் இது ஒரு வரவேற்கத்த மாற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வலைப்பதிவுகளில் இன்றைய தலைமுறையினர் எழுதும் அழகைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். நாளுக்கு நாள் வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் தங்களுடைய எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு இப்போதெல்லாம் கணினியில் தமிழை நேரடியாக எழுத முடிகிறது என்பதும் ஒரு காரணம் என்றாலும் இதுவும் ஒரு சந்தோஷமான விஷயம்.

எழுதும் விஷயம் எதுவாக இருந்தாலும் அதை படைக்கும் நேர்த்தி, எந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத கருத்தானாலும் அதையும் இறுதிவரை பிடித்து வாதிடும் அழகு, உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்.

வலையுலகத்தில் மட்டுமல்லாமல் இன்றைய வார, மாத இதழ்களில் வெளிவரும் கதையல்லாத கட்டுரைகளிலும்தான் எத்தனை நேர்த்தியாக இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மனதிலுள்ளவற்றை எடுத்துரைக்கின்றனர்.

இந்த வாரத்து விகடனில் வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

தற்போது படப்பிடிப்பில் உள்ள ஜெயம் ரவியின் 'தேடிவந்த காதலி' திரைப்படத்தின் இயக்குனர், ரவியின் மூத்த சகோதரர் ஓரிரு வரிகளில் கதையின் கருத்தை இப்படி கூறுகிறார்:

'ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சு நடந்தேதான். ஆனா இருபது வயசுலயும் நீ என் கைய விடாம பிடிச்சு வச்சிருக்கியே, இது நியாயமா?'

'ஆயிரம் ருபாய்ல 'ஆலன்ஷோலி ஷர்ட்' எடுத்து கொடுத்து 'ஜம்முனு எக்ஸிக்யூடிவ மாதிரி போடா'ன்னு பெருமையா சொல்றார் அப்பா. ஆனா மகனுக்கோ 150 ரூபாய்ல பாண்டிபஜார்ல 'போக்கிரி சட்டை' வாங்கி போட்டுக்கணும்னு ஆசை.'

இது இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடைபெறக்கூடிய தலைமுறை போராட்டம்தான்.. ஆனால் எத்தனை அழகாக, சுருக்கமாக நினைவில் நிற்பதுபோல் சொல்லப்பட்டுள்ளது!!

அதே இதழில் வேறொரு கட்டுரையில் இன்று பிரபலமாகவுள்ள ஓவியர் ஷ்யாம் தன்னுடைய இளைய பருவ சிரமங்களை நினைவு கூற்கிறார். தான் பெற்றுள்ள வெற்றிக்கு இறைவன்தான் காரணம் என்பதை மிக அழகாக கூறுகிறார்:

'என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் கடவுள்தான் என்பது என் நம்பிக்கை. எனக்கான வாய்ப்புகளை அவர் என் வாழ்க்கைப் பாதையில் விதைத்துக்கொண்டே செல்ல, நான் அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். கஷ்டப்படத் தயாராக இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னைக் கைவிடவில்லை.'

வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை இத்தனை எளிமையாக, அழகாக, சுருக்கமாக சொல்லிவிட முடியுமா என்ன?

இன்றைய தலைமுறையின் கைகளில் தமிழ் மேலும் அழகு பெறுகிறது என்பதில் எள்ளளவும் பொய்யில்லை...

********

26 ஜூலை 2007

வாழ்க்கை 3

உறங்கச் செல்வது எத்தனை முக்கியமோ அதுபோலவேதான் காலையில் எழுவதும்.

'நாம எந்த மூடுல எழுந்திருக்கறமோ அந்த மூடோடவேதான் நாள் முழுக்க இருக்கப் போறோம்கறத ஞாபகத்துல வச்சிக்கறது நல்லது.' என்பார் ராகவேந்தர் தன்னுடைய எச்.ஆர் பயிற்சி வகுப்புகளில்.

'அதெப்படி சார் நம்ம மூடு எப்பவுமே ஒரே போலயா இருக்கு?' இந்த கேள்வி ஏறக்குறைய அவருடைய எல்லா வகுப்புகளிலும் எழக்கூடியதுதான்.

'முடியும். சொல்றேன்.' என்று துவங்கி பொறுமையுடன் விளக்குவார் ராகவேந்தர்.

'நாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி படுக்கையிலருந்து எழுந்திருப்போம். சிலர் அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்து அலாரத்தை அணைச்சிட்டு மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் போடுவாங்க. சிலர் அலாரம் அடிக்காமயே சட்டுன்னு சொல்லி வச்சா மாதிரி எழுந்திரிப்பாங்க.'

'அலாரம் வைக்காமயா?'

'ஆமாம். நம்ம பாடிக்குள்ளவே ஒரு பயலாஜிக்கல் க்ளாக் இருக்கு. அத நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டா இந்த அலாரம் எல்லாம் தேவையே இருக்காது.'

'பயலாஜிக்கல் க்ளாக்கா? அப்படீன்னா?'

'உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்... நம்மள்ல நிறைய பேர் ராத்திரியில பாத்ரூம் போறதுக்கு ஒரு தடவையாவது எழுந்திரிப்போம்... கரெக்ட்.'

'ஆமா சார். ஆனா தூக்கம் கலைஞ்சிருமேன்னு கண்ணெ மூடிக்கிட்டே போய்ட்டு வந்து படுத்துக்குவேன்.'

'நீங்க மட்டுமில்ல நம்மள்ல நிறைய பேர் இப்படித்தான். ஆனா இன்னைக்கி ராத்திரி அப்படி எழுந்திருக்கறப்போ ஒங்க ரிஸ்ட் வாட்ச பாத்துட்டு பாத்ரூம் போங்க. நீங்க பாக்கற டைம் ஒங்க பயலாஜிக் க்ளாக்ல பதிவாயிரும். நாளைலருந்து அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்கு கரெக்டா அதே டைம்ல முழிப்பு வந்துரும்...'

'அட! அப்படியா?'

'இன்னைக்கி ராத்திரி டெஸ்ட் பண்ணி பாருங்க... நாளைக்கு வந்து சொல்லுங்க..'

உண்மைதான்... நாம் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த காரியத்தை இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று மீண்டும் நமக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சொல்லிப் பார்த்துக்கொண்டால் போதும், நமக்குள் இருக்கும் பயலாஜிக்கல் கடிகாரம் அதை பதிவு செய்துக்கொள்ளும். நான் சொல்ல வருவது நம்முடைய பயலாஜிக்கல் தேவைகள் சம்பந்தப்பட்ட தண்ணீர் குடிப்பது, உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பதுபோன்ற உடல் ரீதியான செய்கைகள்... சிலருக்கு பகல் ஒரு மணியடித்தால் போதும் அவர்களையும் அறியாமல் பசிக்க ஆரம்பித்துவிடும்... அதே போல் இரவு மணி பத்தடித்தால் போதும் உறங்கியே ஆகவேண்டும்.

இதை பரீட்சித்து பார்க்க விரும்பும் முதல் நாள் அல்லது அடுத்த சில நாட்களுக்கு அலாரம் வைத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் எழுந்ததும் உங்களுடைய கைக்கடிகாரத்தையோ அல்லது சுவர் கடிகாரத்தையோ ஒரு நிமிடம் பார்த்து மனதில் பதிய வையுங்கள். அதன் பிறகு சில நாட்கள் அலாரம் வைக்காமல் எழ முடிகிறதா என்று பரீட்சித்து பாருங்கள்... அதன் பிறகு அலாரம் வைக்காமலேயே எழ முடியும். உங்களுக்கே அதிசயமாக இருக்கும்.

சரி... காலையில் படுக்கையில் இருந்து எழும்போது என்ன செய்ய வேண்டும்.

அலாரம் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நம்முடைய முறையிலிருந்து ஒருபோதும் மாறலாகாது.

கண் விழித்ததும் உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையில் படுத்தவாறே இரவில் உறக்கம் வருவதற்கு நீங்கள் கிடந்த அதே போசில்... அதாவது கால்களை நீட்டி ஒன்று சேர வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றின் மீது ஒன்றை வைத்தல் ஆகாது.

கைகள் இரண்டையும் தலைக்கு மீது நீட்டுங்கள். அதாவது படுத்தவாறே தலைக்கு மேலே அதே பாதையில் நீட்ட வேண்டும். கூரையை (ceiling) நோக்கி அல்ல.

ஒரு கையால் அடுத்த கையை பிடித்துக்கொள்ளூங்கள். Clasp செய்துக்கொண்டாலும் சரி. பிறகு உடம்பு முழுவதையும் சோம்பல் முறிப்பதுபோல முறுக்குங்கள். கூடுதல் டென்ஷன் கொடுக்க வேண்டாம். நேச்சுரலாக செய்ய வேண்டும். கைகளை மேலே உயர்த்தும் அதே நேரத்தில் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும், முடிந்தவரை..

பிறகு உயர்த்திப் பிடித்துள்ள கைகள் இரண்டையும் சட்டென்று தளர்த்தியவாறு 'ஹா' என்ற ஒசையுடன் வாய் வழியாக மூச்சை விடவேண்டும். அதாவது ஒரு நொடிப் பொழுது நேரத்தில் சடக்கென்று கைகள் இரண்டையும் தலைக்கு மேலிருந்து இறக்கி உடம்புக்கு இருபக்கங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். இதுபோல் குறைந்த பட்சம் மூன்று முறை...

இதன் மூலம் நம் உடலிலும் உள்ளத்திலும் உள்ள அசதி, டென்ஷன் போய்விடும் என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள்.

பிறகு இடதுபுறம் ஒருக்கழித்து படுத்து வலது கையை ஊன்றி மெதுவாக எழுந்திருக்க வேண்டும். பிறகு கைகள் இரண்டையும் மூடிய கண்களின் மீது வைத்து சுழற்றி தேய்க்க வேண்டும்.

பிறகு யார் முகத்தில் இன்று விழித்தேனோ தெரியலையே என்று புலம்ப வாய்ப்பளிக்காமல் உங்களுடைய உள்ளங்கைகளையே பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்வது ராகவேந்தரின் பழக்கம்...

இன்று முதல் அது நம்முடைய பழக்கமாகவும் இருக்கட்டுமே...

தொடரும்...

24 ஜூலை 2007

வாழ்க்கை - 2

நேற்றைய பதிவின் துவக்கத்தில் ராகவேந்தரின் தூக்கமின்மையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அது கற்பகத்தின் புகாரில் துவங்கி திசைமாறி சென்றுவிட்டது.

இந்த தூக்கமின்மை (insomnia) சாதாரணமாக நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே வந்து தொற்றிக்கொள்ளக் கூடிய - இதை நோய் என்று சொல்ல முடியாவிட்டாலும் பல நோய்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய வழி என்று நிச்சயம் கூறலாம்.

இது ராகவேந்தரைப் போன்றவர்களுக்கு அதாவது உடல் உழைப்பு பெரிதாக ஏதும் இல்லாதவர்களுக்கு, சர்வசாதாரணமாக வருவதுண்டு.

ராகவேந்தர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பல பெரிய நிறுவனங்களுக்கு எச்.ஆர். கன்சல்டண்டாக இருந்து வருகிறார் - கடந்த ஐந்து வருடங்களாக. அவருக்கு வயது 56. பெரும் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை - உயர் அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை - எப்படி தெரிவு செய்வது, அவர்களுடைய உற்பத்தித் திறனை பெருக்குவது, அவர்களை கையாளும் விதம் என்பது போன்ற உத்திகளை அளிப்பது, தேவைப்பட்டால் அவர்களுக்கென்று பயிற்சி அளிப்பது... இத்யாதி, இத்யாதிகள்.

அவ்வப்போது - அதாவது மாதம் ஐந்தாறு முறை - பயணம் செய்வது என்பதை தவிர அவருடைய அலுவலில் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லை. அத்துடன் பெரும்பாலும் மூளையை அதாவது தங்களுடைய அறிவுத் திறனை பயன்படுத்தி உழைக்கும் பலராலும் (whitel collar job) அலுவலக நேரம் முடிந்தபிறகும் தங்களுடைய சிந்தனைகளை முடித்துக்கொள்ள முடிவதில்லை.

ராகவேந்தர் தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது 'you should know when to switch on and switch off your thoughts' என்பார் சர்வசாதாரணமாக. ஆனால் அவராலேயே அப்படி செய்ய முடிவதில்லை.

இத்தகைய active mind உள்ளவர்களால் இரவிலும் தங்களுடைய சிந்தனைகளை நிலைப்படுத்த முடிவதில்லை. இரவு படுக்கச் செல்லும்போது அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த விஷயங்களிலோ அல்லது நாளை நடக்கவிருக்கும் விஷயங்களையோ நினைத்து மனம் உழன்றுக்கொண்டே இருக்கும். இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்திருக்கலாமோ என்ற தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைக் குறித்த ஆற்றாமையிலும் அல்லது இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்ற நாளைய தினத்துக்கான திட்டங்களிலும் இரவு நெடுநேரம் வரையிலும் விழித்திருப்பார்கள். அதே சிந்தனையுடன் உறங்கச் செல்லும் இவர்களுக்கு எளிதில் உறக்கம் வருவதில்லை.

ஐந்து வருடங்களாக பலமுறை முயன்றும் ராகவேந்தரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

இந்த தொல்லையிலிருந்து விடுபட ராகவேந்தர் காணாத மருத்துவர்கள் இல்லை. ஒவ்வொருத்தரும் அளித்த ஓவ்வொரு விதமான யோசனைகளில் அவரும் மேலும் குழம்பிப்போனதுதான் விளைவு.

அவருக்கு அளிக்கப்பட்ட அறிவுரைகளை பட்டியலிடுகிறார்.

1. வடக்கு பக்கம் தலைய வச்சி படுத்துப் பாக்கலாம் - ஆனா பெரிசா ஏதும் பலன் தெரியவில்லை.
2. தலையணை இல்லாமல் படுக்கணும். - கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்
3. படுக்க செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் மிதமான சுடுநீரில் குளிக்கணும் - ஆரம்பத்தில் சில நாட்கள் பலனளித்தது. அதற்குப் பிறகு? ஊஹும்.
4. படுக்க போறதுக்கு முன்னால சூடா ஒரு கப் பால் குடிக்கலாம் - பலனில்லை.
5. நல்ல ஸ்திரமான கட்டிலில் படுக்க வேண்டும், அதாவது மெத்தை இல்லாமல் - முதுகு வலி வந்ததுதான் மிச்சம்.
6. படுக்க போறதுக்கு முன்னால ஏதாச்சும் புத்தகம் வாசிக்கலாம் - படித்ததையே நினைத்துக்கொண்டு தூக்கத்தை களைந்ததுதான் மிச்சம்.
7. மிதமான சுடுநீரில் பாதங்களை வைத்து மசாஜ் செய்யலாம் - ஆரம்பத்தில் பலன் இருந்தது... ஆனால் இது முழுமையான தீர்வாக இல்லை.

இதையெல்லாவற்றிற்குப் பிறகும் படுத்ததும் உறங்கிப் போவது பிரச்சினையாகத்தான் இருந்தது.

யோகா முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றவே நண்பர்களிடம் விசாரித்து ஒரு யோகா பயிற்சியாளரை சென்று சந்தித்தார்:

அவரோ சார் நீங்க யோகா செஞ்சி பழகிட்டீங்கன்னா தூங்கறதையே குறைச்சிக்க முடியும் என்றார்!

அதாவது நாம் ஒரு நிமிடம் யோகா செய்தால் ஒரு நிமிடம் குறைவாக உறங்கினால் போதுமாம். மேலும் யோகா படுத்தவுடனே உறங்கிப்போவதற்கும் துணை செய்யுமாம்! அத்துடன் மன அழுத்தம், களைப்பு இவை எல்லாவற்றையுமே குறைத்து நாளடைவில் இல்லாமலும் செய்துவிடும் என்றபோது அதை முயற்சித்து பார்த்தால் என்ன என்று நினைத்தார்.

பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்த ஒரு சில எளிய யோகாசன முறைகளை செய்து பார்த்தார். நல்ல பலனை அளிக்கவே அதை தொடர்ந்து செய்வதென முடிவெடுத்தார்.

அதில் சில:

1. படுக்கையில் நேராக நீட்டி, இரண்டு கால்களையும் அருகருகில் ஒன்று சேர்த்து (ஒருகால் மீது ஒரு கால் அல்ல) மல்லாக்க, கூரையைப் பார்த்து படுக்க வேண்டும். தலையணை வேண்டாம் என்று இல்லை. ஆனால் மெலிதானதாக இருக்க வேண்டும்.
2. கைகள் இரண்டையும் உடலை ஒட்டி (இருப்பக்கமும்) வைத்துக்கொள்ள வேண்டும் (உள்ளங்கை (palm) மேலே பார்த்தபடி).
3. அவசரப்படாமல் மூச்சை உள்ளே இழுத்து (அதாவது கைக்குழந்தைகளைப் போன்று மூச்சு உள்வாங்கும்போது வயிற்றுப்பகுதி உப்பவேண்டும். வெளிவிடும்போது வயிற்றுப்பகுதி உள்வாங்க வேண்டும்) விடவேண்டும். இத்தனை முறை என்ற கணக்கு ஏதும் இல்லை. துவக்கத்தில் ஐந்து முறை உள்ளே-வெளியே என்று ஆரம்பிக்கலாம். இதன் முடிவிலும் உறக்கம் வரவில்லையென்றால் நீங்கள் சற்று முற்றிய கேஸ்தான் என்றார் யோகா பயிற்சியாளர்.

ஏற்கனவே யோகாவில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேறு சில வழிகளும் உண்டு.

அவற்றில் ஒன்று படுத்ததும் உள்ளங்காலில் இருந்து உச்சி வரை ஒவ்வொரு அங்கத்தையும் உணர்வது (feel). பிறகு அந்த அங்கத்தை ரிலாக்ஸ் செய்வது. இதற்கு மிகவும் பொறுமை தேவை. பயிற்சியும் தேவை. அது நம்மில் எத்தனை பேருக்கு வரும் என்பது தெரியவில்லை.

மனதை ஒருநிலைப் படுத்தும் தியானத்தில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இது எளிதில் முடியும். ஏனெனில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலும் மனம் அலைபாய்ந்துக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும். வேண்டுமென்றால் நமக்குப் பிடித்த இசையை மெலிதாக வைத்துக் கேட்பதும் பலன் தரும்.

ஆரம்பத்தில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடும்போது அலைபாயும் மனதை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். இழுத்து பிடித்து நிறுத்துவதில் பயனில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. நாளடைவில் பலனளிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அலுவலகத்திற்கு உள் அலுவலகத்திற்கு வெளியில் என்ற இருவகை வாழ்க்கைகளை வாழ பழகிக்கொள்ள வேண்டும். முக்கியமாக உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்.

தொடரும்..

23 ஜூலை 2007

வாழ்க்கை - 1

இது ஒரு partly-nonfiction தொடர் என்றாலும் இதில் நடக்கும் சம்பவங்களும், சம்பாஷனைகளும் கற்பனையே. அப்படியே ஏதாவது வகையில்
ஒற்றுமை தோன்றினாலும் அது தற்செயலே என்பதை கூறிக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாக இல்லை.

என்னுடைய அனுபவங்களை, அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்களை, ஒரு கற்பனை குடும்பத் தலைவர் மூலம் கூறலாம் என்று நினைத்தேன். அந்த நபர் வலைப்பதிவர்கள் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கும் ஒருவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் ராகவன் என்ற பெயரைத் தெரிந்தெடுத்தேன். இதில் அந்த பெயருக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் ஆட்சேபம் ஏதும் இல்லையெனினும் நண்பர் சிவஞானம்ஜி இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய யோசனையை மறுதலிக்க நான் அவருடைய மாணவர் இல்லையே! ஆகவே அவருடைய விருப்பத்திற்கேற்ப குடும்பத்தலைவரின் பெயரை ராகவன் என்பதிலிருந்து ராகவேந்தர் என மாற்றியுள்ளேன்.

ராகவேந்திரனுக்கு அதிகாலையில் (அதாவது ஆறு மணி!) எழுந்துவிடும் பழக்கம் உண்டு.

Restless sleeper என்பார்களே அந்த ரகம். இரவு முழுவதும் தூக்கம் வராமல் உருண்டு, புரண்டுக்கொண்டிருப்பார்.

'என்னங்க நீங்க.. ஒங்கக் கூட பெரிய ரோதனையாப் போச்சி... ஒங்களால என் தூக்கமும் போவுது.' இது அவருடைய அருமை(!) மனைவி கற்பகத்தின் தினசரி புலம்பல். 'பேசாம நீங்க ஒரு ரூம்ல நான் ஒரு ரூம்ல படுத்துக்கணும்னு நினைக்கறேன்... இப்படியே போனா நான் ஆவி மாதிரி நடுராத்திரியில எழுந்து அலைய வேண்டியதுதான்.' என்றார் ஒருநாள் பொறுக்கமாட்டாமல் .

ஏற்கனவே மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஒரு அறையில் அவரும் கற்பகமும், இன்னொரு அறையில் அவர்களுடைய வாரிசுகளான கமலனும், கமலியும் (கமலனோட படுக்கை வடப்புற சுவருக்கருகிலும் கமலியின் படுக்கை தென்புற சுவருக்கருகிலும் சுமார் பத்தடி இடைவெளியில்..) மூன்றாவது படுக்கையறையில் ராகவனின் தந்தையும் தாயும்...

ராகவேந்தர்: 'இதுக்கு மேல நாலாவது படுக்கையறையா? என் தலைமேலதான் கட்டணும்.'

கற்பகம்: 'ஏன் கட்டுங்களேன்... மாடியில ஒரு ரூம் எடுங்க... அங்க படுக்கறதுக்கு மட்டுமில்லாம நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததுமே போய் ஒக்காந்துக்குங்க... நாங்களாவது கொஞ்சம் நிம்மதியா இருப்போம்.'

அட ராமா என்று நினைத்தார் ராகவேந்தர்.

'எப்படி இருக்கு பாருங்கப்பா. நா வீட்டுக்கு வர்றதே பிரச்சினைங்கறா மாதிரி சொல்றா பாருங்க.' என்றார் தந்தையிடம்.

'கற்பகம் சொல்றதுலயும் நியாயம் இருக்கு போலருக்கேடா.... நீ வீட்ல இருந்தாலே பிரச்சினையாத்தான வருது... நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம்கற.. பிள்ளைங்கள நிம்மதியா ரேடியோ கேக்க விடறயா? இல்ல ஒங்கம்மாவத்தான் டிவி சீரியல் பாக்க விடறயா? சரி, பகல் பொழுதுலதான் இந்த பிரச்சினைன்னா ராத்திரிலயும் அவள தூங்கவிடாம... அவள கட்டில்லருந்தே உருட்டி விட்டுடறியாம? பகலெல்லாம் வீட்டு வேலை செய்யற
பொம்பளைய நிம்மதியா தூங்கவிடாம இருந்தா அவ பின்னெ என்னடா சொல்வா?'

தேவையா இது என்று நொந்துப்போனார். 'ஒங்கக்கிட்ட வந்து சொல்ல வந்தேன் பாருங்க.. எனக்கு வேணும்..' என்று முனுமுனுத்தவாறு அந்த மாதமே ஒரு எஞ்சினியரைப் பிடித்து அவர் மூலமாக ஒரு மேஸ்திரியை பிடித்து மேல்தளத்தில் ஒரு விசாலமான - சுமார் ஐந்நூறு அடியில் - ஒரு அறையை அமைத்தார். அதில் குளியலறையுடனான படுக்கையறை, ஒரு சிறிய ஹால் (ஏன் கிச்சனையும் போட்டுருங்களேன் என்று கற்பகம் நக்கலாக சொல்ல.. அட! இதுவும் நல்ல ஐடியாவருக்கே என்ற நினைப்பில்) ஒரு குட்டி சமையலறை என போட்ட பட்ஜெட் எகிறியது.

'இது தேவையா?' என்று மீண்டும் முறையிட்ட தந்தையை முறைத்துப்பார்த்தார். ஆனால் எதிர்த்து பேச துணிவில்லை.

இது எங்க தலைமுறையோட தலைவிதி .. இந்த வயசுலயும் அப்பா, அம்மாவை எதிர்த்து பேச முடிய மாட்டேங்குது. ஆனா இந்ததலைமுறைய பாருங்க. கமலனையும் கமலியையும் ஏதாச்சும் சொல்ல முடியுதா... உடனே 'எங்களுக்கு தெரியும் டாட்' னு பதில் வந்துருது...

சில சமயங்களில் ராகவேந்தர் நினைத்துக்கொள்வார்...

ஏன் நம்ம ஜெனரேஷனுக்கு மட்டும் இந்த நிலை... சின்ன வயசுல அப்பா, அம்மாவுக்கு மட்டுமா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா ஏன் அவங்க ஃப்ரெண்ட்சுக்கும் பயந்து செத்தோம்.. ஒக்காருன்னா ஒக்காரணும், நில்லுன்னா நிக்கணும், ஓடுன்னா ஓடணும்... வீட்டுக்கு வர்றவங்கள புடிக்குதோ இல்லையோ பல்லெல்லாம் தெரியறாப்பல வாங்கன்னு சொல்லணும், தாத்தா, பாட்டி கால அமுக்கி விடணும், தாத்தாவுக்கு
பொடி, பாட்டிக்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்து குடுக்கணும். இதல்லாம் போறாதுன்னு ஸ்கூலுக்கு வேற போய் வரணும்...

அன்னைக்கும் நாங்கதான் பெரியவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனோம்... இன்னைக்கும் நாங்கதான் எங்க பிள்ளைங்களுக்கு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கிட்டு போறோம்... எங்க ஜெனரேஷன் மட்டும் என்ன பாவம் பண்ண ஜென்மங்களா.. சொல்லுங்க..?

'ஏங்க வர்றவங்கக்கிட்டல்லாம் இதையே புலம்பணுமா?' இது கற்பகம்..

இதான் எங்க ஜெனரேஷனோட பொம்பளைங்களோட ஸ்பெஷாலிட்டி. பலவீனம்னு கூட சொல்லலாம். குடும்பத்துக்குள்ள என்னதான் பிரச்சினை என்றாலும் யாரிடமும் சிலவேளைகளில் தங்களுடைய கணவர்களிடம் கூட பகிர்ந்துக்கொள்ளாமல் ஆற்றாமைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து...

சரி திருமணத்தில்தான் சுதந்திரம் இருந்ததா என்றால் இல்லை.... பெண் பார்க்கவே மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு போக தேவையில்லை என்று நினைத்தார்கள் அன்றைய பெரியவர்கள்... 'நீ என்னடா தனியா வந்து பாக்கறது? எல்லாம் நாங்க பாத்துட்டு வந்து ஃபோட்டோவ காமிக்கோம்.. அது போறும்...'

அதுவும் குடும்பத்தில் கடைகுட்டியான ராகவேந்தர் விஷயத்தில் அந்த புகைப்பட சான்சும் கிடைக்கவில்லை. தாலிகட்டி முடித்த பிறகுதான் கற்பகத்தை முதன்முறையாக (அதாவது முழுமையாக, அதாவது முகத்தை!!) பார்க்க முடிந்தது!

ஆண்களுக்கே இந்த கதி என்றால் பெண்களூக்கு?

வயசுக்கு வந்துட்டா போறும்.. கல்யாணம், கல்யாணம்னு பொண்ணுக்கு சமைக்க தெரியுமா, துணி துவைக்க தெரியுமா, ஏன் ஒரு குடும்பத்த நடத்தவோ சுயமா சிந்திச்சி ஒரு முடிவெடுக்கவோ தெரியுமான்னுல்லாம் கவலைப்படாம சாதி சனம் சொல்லுதேன்னு கல்யாணத்த செஞ்சி வச்சிருவாங்க...

கற்பகம் திருமணமாகி வந்தபோதும் இதே நிலைதான்.

முதல் முதலாக ராகவேந்தர் தன் மனைவியுடன் ஜாலியாக(!) வெளியில் சென்றுவரலாம் என்று நினைத்து கற்பகத்தை ரகசியமாக சிக்னல் செய்து அழைத்தார். 'ஐயே ஒங்களோடவா, தனியாவா? பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க? இங்கனல்லாம் ரோட்டுலயே ஆம்பளைங்க ஒரு சைடு பொம்பளைங்க ஒரு சைடுன்னுதான் போவோம்...' என்று தயங்க நொந்துப்போனார்.

இந்த லட்சணத்துல முதல் இரவு என்பதே பத்து, பதினைந்து இரவுகள் கழித்துத்தான்....

காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ராகவேந்தருக்கு....

ஆனால் அந்த நிலையிலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளே, 'டேய் ராகு, என்ன அவ பாட்டுக்கு உள்ளாற போய் ஒக்காந்துட்டா... வீட்டு வேலையெல்லாம் யார் பாக்கறது... இங்க வந்து இத அம்மியில அறைச்சி குடுக்கச் சொல்லு... ஊர் போய் வந்ததுல எல்லா
துணியையும் நனைச்சி வச்சிருக்கேன்.. யார் துவைக்கறது?' என்ற தாயையும் 'என்னங்க வந்து ஒரு நா கூட முழுசா ஆகல, இப்படி சொல்றாங்க?' என்றவாறு பரிதாபமாக தன்னைப் பார்த்த மனைவியையும் வெறித்துப் பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

தினமும் கற்பகம் வேலையையெல்லாம் முடித்துவிட்டு கைகளை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டு படுக்கையறையை அடையும்போதே நள்ளிரவை நெருங்கியதுண்டு. கணவனை மட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தாரையும் அனுசரித்து போகவேண்டிய சூழலில் கர்பகத்தைப் போலவே கூலியில்லாத வேலைக்காரியாய் உழன்ற பெண்களின் கதைகள் எத்தனை, எத்தனை?

அதற்கும் 'நாங்கல்லாம் இப்படியாடா? வீட்லருக்கற பெரியவங்கள்லாம் படுத்துட்டாங்களான்னு பாத்து பட்டும் படாம இருந்தோம்.. இலை மறைவு காய் மறைவா குடும்பம் நடத்துனோம்.. புள்ளைகள பெத்துக்கிட்டோம்... இப்ப என்னடான்னா...' என்ற தன் தாயின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டார்.

ஆமாம், அதான் டஜன் கணக்குல பெத்தீங்களோன்னு கேக்கத்தான் தோன்றும். முடியாது.

ராகவேந்திரனுக்கு ஐந்து சகோதரர்கள் ஐந்து சகோதரிகள். இவர்தான் கடைக்குட்டி!!

அதுலயும் எங்க ஜெனரேஷந்தான் பாதிக்கப்பட்டோம்... கூட்டுக்குடும்ப தொல்லைகள் போறாதென்று ஒவ்வொரு குடும்பத்திலும் பத்துக்கும் மேல் குழந்தைகள்...

இந்த தொல்லைகளை நம்முடைய பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தே அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று என்று நிறுத்திக்கிட்டோம்...

ஆனால் அதுலயும் சந்தோஷம் கிடைச்சிதான்னு பார்த்தா....

தொடரும்...