பதிவர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 பிப்ரவரி 2020

புதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்....

புதிய வலைத் திரட்டி அறிமுகம்.

நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. 

அது இன்று முதல் நனவாகிப் போனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

நண்பர் நீச்சல்காரன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடைய முயற்சியால் தமிழ்ச்சரம் என்னும் வலைத்திரட்டி இயங்க ஆரம்பித்துள்ளது என்ற அறிக்கையை வாசித்தேன். 

தமிழ்வலைப் பதிவகம் வாட்ஸப் குழு மூலமாக வலைப்பதிவுகளை அவ்வப்போது வாசிக்க முடிந்தாலும் அதில் அந்த குழுவில் உள்ளவர்களால் மட்டுமே வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். தினந்தோறும் சுமார் பத்து பதினைந்து பதிவுகளை அதன் மூலம் வாசிக்க முடிந்தாலும் அது போறாது என்கிற எண்ணமே எனக்கு இருந்து வந்தது. தமிழ்மணம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டு விட்டதும் நாம் எழுதும் பதிவுகளை ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது நம்முடைய நண்பர்கள் மட்டுமே வாசிக்க வாய்ப்புள்ளது என்கிற எண்ணமே நம்மை அதிகம் எழுத தூண்டுவதில்லை. ஆனால் வலைத்திரட்டிகளில் வெளியாகும் பதிவுகளை வாசிக்க அந்த தளத்தின் அங்கத்தினராக இருக்க வேண்டும் என்றோ அல்லது நமக்கும் ஒரு வலைப்பதிவு வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. திரட்டியின் இணைய விலாசம் கைவசம் இருந்தாலே போதும் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் வாசித்து கருத்துகளை பதிவு செய்யலாம். 

இந்த சமயத்தில் கருத்துகள் என்றதும் இதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. தமிழ்மணம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம் முதலே கருத்துரைகளை பதிவு செய்வது என்பது ஒரு சம்பிரதாயமாகவே கருதப்பட்டு வந்ததை கண்டிருக்கிறேன். அதாவது நீங்கள் என் பதிவில் வந்து கருத்துரை இட்டால்தான் நான் உங்கள் பதிவில் வந்து கருத்துரைகள் இடுவேன் என்கிற மனப்பான்மை பல பதிவர்களிடையில் காண முடிந்தது. இதற்காகவே குழுக்களாக பிரிந்து செயல்படுவதையும் கண்டிருக்கிறேன். அது இப்போதும் தொடர்கிறது என்பது உண்மை. 

நம்முடைய பதிவுகளுக்கு கருத்துரை வர வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் பல தரமற்ற பதிவுகளில் பெயருக்கு கருத்துரை இடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. நானும் அவ்வறு தேமே என்று கருத்துரை இட்டு வந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு சில மாதத்தில் வெறுத்துப்போய்விட்டது. நமக்கு கருத்துரை வராவிட்டாலும் நல்ல தரமான பதிவுகளை மட்டுமே எழுதுவது என ஒதுங்கியிருந்தேன். 

இப்போதும் தமிழ்வலைப்பதிவக குழுவில் வெளியாகும் பதிவுகள் பலவற்றில் ஒரு கருத்துரை கூட இல்லாமல் இருப்பதை காண முடிகிறது. உண்மையில் இது  நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து. ஆகவேதான் பல ஆங்கில வலைத்திரட்டிகளில் பட்டியலிடப்படும் ஆங்கில பதிவுகளை வாசிக்கும் போதும் அதில் தர்க்கிக்கப்படும் விஷயங்களை வாசிக்கும்போதும் நம்முடைய தமிழ் வலையுலகம் மட்டும் ஏன் தரத்தில் இவ்வளவு இறங்கியுள்ளது என்ற வேதனை ஏற்படுகின்றது. தமிழிலும் பல நல்ல பதிவுகள் வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆங்கில பதிவுகளுடன் ஒப்பிடுகையில் அது மிக, மிக குறைவே.

தரம் என்பது அவரவருடைய பார்வைக்கு உட்பட்டது என்பது உண்மைதான். ஆனால் பதிவுகளை எழுதுவது வெறும் பொழுதுபோக்குக்காக என்றில்லாமல் நல்ல கருத்துக்களை அல்லது நல்ல நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகளாக அமையவேண்டும் என்ற நோக்கம் பதிவர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். 

தமிழ்ச்சரம் வலைத்திரட்டி மூலமாக என்னுடைய இந்த ஆவல் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

நீச்சல்காரன் மற்றும் அவருடைய நண்பர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்துக்கிறேன்.

இதில் என்னுடைய வருத்தம் என்ன தெரியுமா? அவருடைய இந்த அறிவிப்பு பதிவிலேயே இதுவரை என்னைத் தவிர வேறு எவரும் கருத்துரை இடவில்லை என்பதுதான். 

நட்புடன்
டிபிஆர். 

05 டிசம்பர் 2019

மனம் ஒரு குதிரை

மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு 
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் 
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும் 
அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு"

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

இதே பெயரில் வந்த பழைய தமிழ்படத்தில் வந்த பாடல் வரிகள்.

ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் மனம் ஒரு குரங்கு என்பதை விட ’ஒரு குதிரை’ என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனதை  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவில்லை யென்றால் நம்மை பாதாளத்திலும் தள்ளிவிடும்!

இந்த வரிகள் நிச்சயம் குரங்குக்கு பொருந்தாது. 

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது.

எந்த குரங்க போயி அடிக்கப் போறோம், இல்ல அணைக்கப் போறோம்? அடிச்சாலும் கடிக்கும், அணைத்தாலும் பிராண்டும். 

குதிரைதான் கட்டுப்பாட்டில் வைத்திராவிட்டால் பாதாளத்தில் அதாவது பள்ளத்தில் தள்ளிவிடும்.

ஆகவே மனம் ஒரு குதிரை என்பதுதான் சரியாக இருக்கும்.

மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதில் பலனில்லை. அதை கட்டவிழ்த்து பறக்க விட வேண்டும். அப்படி பறக்கவிட்டால் அது நம்மை பாவத்திலோ அல்லது பள்ளத்திலோ  தள்ளிவிடும் என்பதில் அர்த்தமில்லை.

பள்ளத்தில் விழுந்துவிடுவோம் என்று நினைத்தால் குதிரை சவாரி செய்வதில் கிடைக்கும் இன்பம் கிடைக்காமலே போய்விடுமே. அந்த இன்பம் அதில் சவாரி செய்தவர்களுக்குத்தான் தெரியும். அது ஒரு அலாதியான இன்பம். 

முதல் முதலாக இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணிக்கும்போது அனுபவித்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது என்றால் மிகையல்ல.

சைக்கிள் ஓட்டி பழகும்போது நாலு தடவ கீழ விழுந்து எழுந்து படிச்சாத்தாண்டா அதுல ஒரு த்ரில்லே இருக்கும் என்றான் எனக்கு பயிற்றுவித்த நண்பன். 

இது குதிரை சவாரிக்கும் பொருந்தும். 

ஒரு குதிரையை கட்டுக்குள் கொண்டுவருவது எத்தனை கடினமோ அதை விட கடினம் மனதை கட்டுக்குள் கொண்டு வருவது.

அதே சமயம் அதை கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. 

அது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

நம் மனதில் உள்ளவற்றை அசைபோட்டு பார்ப்பதே ஒரு அலாதியான இன்பம்தான். 

இன்றைய தினம் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை சார்ந்தே பல கடந்த கால நினைவுகள் வந்து போவதை நான் உணர்ந்திருக்கிறேன்...

நான் குடியிருக்கும் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு ஏழு வயது சிறுவன் முதல் முறையாக தன் தந்தையின் உதவியுடன் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை கண்டபோது நான் இளம் வயதில் அதை பழகியதும் நினைவுக்கு வந்தது அதை என் இரு மகள்களுக்கும் பயிற்றுவித்ததும் நினைவுக்கு வந்தது.

மூச்சு வாங்க என் சைக்கிள் பின்னால் ஓடி வந்த என் நண்பனின் நினைவும் வந்தது... நான் அதே போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க என் மகளின் ஸ்கூட்டர் பின்னால் ஓடிய நினைவும் வந்தது...

இன்றைக்கு இணையதளத்தில் ‘தேடல்’ மென்பொருள்கள் பலவும் இந்த அடிப்படையில்தான் செயல்படுகின்றன போலும். ஒரு விஷயத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அது சார்ந்த பல விஷயங்களை பின்னோக்கி சென்று தேடுவதை பார்த்தால் நம் மனதும் இதைப் போன்றுதானே செயல்படுகிறது என்று எண்ண தோன்றும்.

யோகாசனம் பயிலும் போதும் தியானத்தில் ஈடுபடும்போதும் மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைந்துக் கொண்டிருந்தால் அதை கட்டுப்படுத்தாதீர்கள் அதை அதன் வழியிலேயே அலையவிட்டு ஒருநிலைப் படுத்த முயலுங்கள் என்று பயிற்றுவிப்பார்கள். 

இந்த யுக்தியை நானும் பல சமயங்களில் கையாண்டிருக்கிறேன்.

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பதினைந்து நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்வதுண்டு. ஆனால் அந்த பதினைந்து நிமிடமும் மனம் ஒரு நிலையில் நிற்காது அலைந்துக்கொண்டே இருக்கும். உதடுகள் பிரார்த்திக்கொண்டு இருந்தாலும் மனம் ஒரு தறிகெட்ட குதிரையைப் போல அலைந்துக்கொண்டிருக்கும். அதை நம் வயப்படுத்த முயன்றால் பிரார்த்தனை தடைப்பட்டு போகும்......

இதற்கு சாத்தான் காரணம் என்பார்கள் நம் முன்னோர்கள். நீ கடவுளை நினைச்சி பிரார்த்தனை செய்வது சாத்தானுக்கு பிடிக்காதாம். அதனாலதான் அது தன் சீடர்களை அனுப்பி உன் மனதை அலையவிடுகிறது என்பார் என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்). எனக்கும் அது பல சமயங்களில் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுவதுண்டு. 

மனம் அப்படிப்பட்டதுதான். சமயத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். 

திருடுவது, கையூட்டு பெறுவது, கற்பழிப்பது எல்லாமே தவறு என்று நம்மில் பலருக்கு தெரிகிறது. ஆனால் அதில் தினம் தினம் ஈடுபடுபவர்களுக்கு அது தெரிவதில்லையே ஏன்? 

அதற்கு அவர்களுடைய கெட்டுப் போன மனதுதான் காரணம். மனம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் அதை நாம் எவ்வாறு பழக்கிவிடுகிறோமோ அதைத்தான் அது மீண்டும் மீண்டும் செய்யும்.  

அதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் போலும். 

************




27 நவம்பர் 2019

என்னுடைய புத்தகங்கள் இலவசமாய்.....


என்னுடைய இந்த இரண்டு கிண்டில் புத்தகங்களையும் இன்று முதல் சனிக்கிழமை வரையிலும் கிண்டில் ஆன்லைன் கடையிலிருந்து இலவசமாய் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இவற்றை படிக்காதவர்கள் அமேஜான் கிண்டில் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று ‘free ebooks tamil' என்று  தேடலில் குறிப்பிடவும்.  அதை தொடர்ந்து காட்டப்படும் பட்டியலில் காட்டப்படும் இவை இரண்டையும் இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதற்கு உங்களிடம் கிண்டில் செயலி தேவைப்படும். அது இப்போது கணினிக்கும் கிடைக்கிறது.

இதை தரவிறக்கம் செய்ய உங்களுக்கு அமேஜான் கணக்கு தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிதாய் கணக்கு ஒன்று துவக்கிக்கொள்ளலாம்.

நட்புடன்,
டிபிஆர்.

21 நவம்பர் 2019

கணினிக்கு ஏற்ற கிண்டில் மென்பொருள்

நான் அமேஜான் கிண்டிலில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டுள்ள தகவலை என்னுடைய பல அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். அதில் பலரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் எங்களால் கைப்பேசியில் இதை படிக்க முடியவில்லை, கண்கள் வலிக்கின்றன என்றார்கள். எனக்கும் அதே தொல்லை தான் என்றேன்.

வேறு சிலர் எங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை டிபிஆர் என்றார்கள். என்னிடமும்தான் இல்லை என்றேன்.

நானும் இதை நினைத்துத்தான் கிண்டில் பக்கமே செல்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களுள் ஒருவர் கணினிக்கு என்றே அமேஜான் ஒரு கிண்டில் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை தரவிறக்கம் செய்து படியுங்கள் என்றார்.

இதில் நம் வலை நண்பர் ஜோதிஜி அவர்களின் புத்தகத்தைத்தான் முதலில் படித்தேன். நம் கண்களுக்கு தேவையான அளவுக்கு எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்ளும் வசதியும் இதில் இருப்பதால் கண்களுக்கு எவ்வித வலியும் ஏற்படவில்லை.

ஆகவே இத்தகையோர் பயனடையவே இந்த பதிவை எழுதுகிறேன்.

கீழ்காணும் திரை நகல்களை பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது திரையில் உங்கள் மின்னஞ்சல் விலாசத்தை கொடுத்தால் மென்பொருளின் சுட்டி (Link) வந்துவிடும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிவிடலாம்

உங்களுக்கு அமேஜான் கணக்கு இருந்தால் மென்பொருளை அங்கு பதிவு செய்துக்கொள்வது நல்லது.

அதன் பிறகு டெஸ்க்டாப்பிலுள்ள கிண்டில் சுட்டியை க்ளிக் செய்து கிண்டில் தளத்திலுள்ள எந்த மின்புத்தகத்தையும் வாங்கி படிக்கலாம். ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு இலவசமாகவே கிடைக்கிறது. அதே போல் பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

அச்சு புத்தக விலையுடன் ஒப்பிடுகையில் இதில் பண்மடங்கு குறைந்த விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பது எத்தனை அரிது!

இந்த மென்பொருளை பயன்படுத்தி மறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் தொடருங்கள்.

நன்றி,

டிபிஆர்.





02 செப்டம்பர் 2019

சுருங்கி வரும் பதிவர் வட்டம்

சுமார் பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சு வந்த தமிழ் வலைப்பூக்களின் (Blogs) திரட்டியான ‘தமிழ்மணம்’ செயலிழந்து போனதை அடுத்து தமிழ் பதிவர் வட்டம் வெகுவாக சுருங்கி போய்விட்டது என்றால் மிகையாகாது.

தமிழ் பதிவுகளை அவை எழுதப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே திரட்டி அவற்றை அழகாக வரிசைப் படுத்தி வெளியிட்டு வந்த ‘தமிழ்மணம்’ நிதிபற்றாக் குறை காரணமாக (அப்படித்தான் தோன்றுகிறது) சடுதியாக செயலிழந்துபோனது நம் தமிழ் பதிவர் வட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது.

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பலவும் இன்று செயலிழந்து போனதும் உண்மை. அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த இண்டிப்ளாகும் (Indieblog) கூட இப்போது புதிய அங்கத்தினர்களை ஏற்பதில்லை. கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட பதிவர்களின் பதிவுகளை மட்டும் இப்போதும் திரட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் அது ஆங்கில வலைப்பூக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் திரட்டி என்பதால் அதில் இடம் பெறும் தமிழ் பதிவுகள் வெகு வெகு சொற்பம்தான். அவர்களிலும் பலர் அவ்வப்போதுதான் எழுதுகிறார்கள்.

திரட்டிகள் செயலிழந்து நிற்கும் இத்தகைய சூழலில் பதிவுர்கள் எழுதும் பதிவுகளை மற்ற சக பதிவர்களுக்கோ அல்லது பொது வாசகர்களுக்கோ எடுத்துச் செல்வது அத்தனை எளிதல்ல என்பதை இப்போதும் தொடர்ந்து எழுதி வரும் பதிவர்கள் அறிவார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய சக பதிவாள நண்பர்கள் நட்பு அடிப்படையிலேயே கூகுள் தேடுதலை பயன்படுத்தி தேடிப் பிடித்து வாசித்து வருகிறார்கள் என்பதை ப்ளாகர் வெளியிடும் தகவல்களில் (Statistics) இருந்து அறிந்துக்கொள்ள முடிகிறது.

என்னுடைய பதிவுகளை வாசிக்கும் மொத்த வாசகர்களில் சுமார் 95 விழுக்காடு வாசகர்கள் கூகுள் தேடல் வழியாகத்தான் தளத்திற்கு வருகிறார்கள் என்பது கீழ்காணும் திரையை பார்த்தாலே தெரியும்


இந்த படத்தில் மேல் பகுதியில் கூகுள் தேடலுக்கு கீழே ஃபீட்லி (feedly) என்ற தேடல் இருப்பதை காணலாம்.

அது உண்மையில் ‘தேடல்’ அல்ல ‘திரட்டி’. திரட்டி என்பதை விட ’வாசிப்பான்’(reader) என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாசிப்பானின் பெயரை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாகத்தான் என்னுடைய ப்ளாகர் ’Stat' பகுதியில் பார்த்தேன். உடனே இது என்னவாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கூகுள் தேடலில் ‘feedly' என்று தேடிப்பார்த்தபோது கிடைத்ததுதான் இந்த அற்புத கையடக்க 'app.'

இதை உடனே என்னுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து அதில் கூறியுள்ளபடி செய்து எனக்கு தெரிந்த சில பதிவர்களின் பதிவு விலாசங்களை சேர்த்தேன். அவற்றில் சமீபத்தில் எழுதப்பட்ட பதிவுகளின் விவரங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே கிடைத்தன.



ஸ்மார்ட் செல்பேசி (ஆண்டிராய்ட் அல்லது ஆப்பிள் iOS) வைத்திருப்பவர்கள் இந்த செயலியை (app) கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

ஸ்மார்ட் செல்பேசி இல்லாதவர்கள் கனிணியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் விலாசம்: www.feedly.com

இதில் நுழைந்தவுடன் நாம் காணும் login திரை இது::



இந்த தளத்திற்குள் நுழைய (login) தனியாக கணக்கு எதுவும் தேவையில்லை . நம்முடைய கூகுள் அல்லது முகநூல் கணக்கையே பயன்படுத்தலாம்.


இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும் நாம் காணும் திரை:



இதில் ’தேடல்’ பெட்டியில் நீங்கள் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்த உடனே அதனுடைய பெயர் பெட்டியின் கீழே காண்பிக்கப்படும். அதையும் க்ளிக் செய்யுங்கள்.


உடனே அந்த தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை காட்டும்.



இந்த திரையில் ‘follow' பட்டனை க்ளிக் பண்ணிட்டு அதுக்குக் கீழே ‘new feed' ஐயும் க்ளிக் செய்யுங்கள்.


இந்த திரையில் உங்களுடைய ‘new feed' பெயரை ‘தமிழ்’ என்றே தெரிவு செய்யுங்கள். ஏனெனில் இந்த தளத்தில் உலகெங்கும் உள்ள பல ஆங்கில பதிவுகளும் படிக்க கிடைக்கின்றன. 

நாம் தெரிவு செய்யும் பதிவுகள் பெரும்பாலும் தமிழில் இருக்கும் என்பதால் அந்த தொகுப்பின் பெயர் தமிழ் என்று இருந்தால் அவை அனைத்தையும் இந்த தொகுப்பிலேயே சேமித்து வைத்தால் பிறகு படிப்பதற்கு எளிதாக இருக்கும். 

இவ்வாறு நீங்கள் படிக்க விரும்பும் அனைத்தும் தளங்களையும் அதாவது RSS FEED உள்ள் சுமார் 100 தளங்களை இந்த இலவச மென்பொருளில் (free version) சேமித்துக்கொள்ளலாம். நாம் சேமித்த தளங்களின் பட்டியல் திரையின் இடது பகுதியில் காண்பிக்கப்படும்.

இதில் சேமிக்கப்பட்டுள்ள தளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் அவை பதியப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இந்த செயலியில் தரவிறக்கம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். 

செல்பேசியில் என்றால் உடனே அழைப்பான் (notification) வரும். கனிணி என்றால் நாம் இந்த feedly.com தளத்தில் நுழைந்தவுடனேயே புதிதாக வந்துள்ள பதிவுகளின் பட்டியல் காட்டப்படும்.

நான் என்னுடைய செல்பேசியில் சேமித்து வைத்துள்ள பட்டியலிலுள்ள அனைத்து தளங்களின் நகல்களையும் என்னுடைய கனிணியிலும் காண முடிகிறது. இதற்கென்று மீண்டும் உள்நுழைய (login) தேவையில்லை. 

என்னுடைய செல்பேசியில் நான் சேமித்து வைத்துள்ள சுமார் பதினைந்து பதிவர்களின் தளங்களின் பட்டியலை மேலே வெளியிட்டுள்ளேன். இதில் இடம் பெறாத பதிவர்கள் தங்களுடைய தளத்தின் விலாசத்தையும் தாங்கள் பருந்துரைக்கும் பதிவர்களின் தளங்களுடைய விலாசங்களையும் இந்த பதிவின் கருத்துரையில் (comments) நானும் அவற்றை சேமித்துக்கொண்டு இனி வரும் காலங்களில் படிக்க உதவியாக இருக்கும். நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.

**********



04 மார்ச் 2014

நீங்கள் ஒரு மதம் பிடித்தவர் - அநாமதேயம் கூறுகிறார்!!

மதம் பிடித்தவன்: இது எனக்கு ஒரு அநாமதேயம் வழங்கிய பட்டம். 

நான் வாரந்தோறும் எழுதிவரும் 'திண்ணை' என்கிற பதிவில் வந்து கீழ்காணும் கருத்துரையை பதிவு செய்திருக்கிறார் ஒரு அனானிமஸ் அதாவது தன்னை இனம் காட்டிக்கொள்ள துணிச்சல் இல்லாத கோழை வாசகர் (சக பதிவாளராகவும் இருக்க வாய்ப்புள்ளது.).

"காழ்ப்புனர்ச்சி காழ்ப்புனர்ச்சி என்பதை தவிர வேறு எதுவும் இதிலில்லை.
ஒரு தரம் தருமி பதிவைப் படிங்களேன் எந்த நேரமும் மதம் பிடித்து அலையாமல் இருக்க உதவும். மத்த இரண்டு பேரும் வெறி வெறியா பேசுவாங்களாம், சோசப்பு சொம்பாட்டம் இருப்பாராம்."

சாதாரணமாக பெயரில்லாமல் வரும் கருத்துரைகளை நான் பதிவு செய்வதில்லை. ஆனால் இதை அவ்வாறு ஒதுக்கித் தள்ளிவிட்டு மவுனமாக இருக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு முந்தைய பதிவிலும் இவரோ அல்லது இவருடைய சகாக்கள் ஒருவரோ வந்திருந்து வெறுப்பை உமிழ்ந்துவிட்டுச் சென்றிருந்தார். அதே சமயம் இதை கருத்துரையாக பதிவு செய்தால் அங்கு இதற்கு தகுந்த பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்பதுடன் இத்தகைய அழுக்கு மணம் படைத்தவர்களை மற்றவர்களுக்கு இனம் காட்டிவிட முடியாமலும் போய்விடும் என்பதால்தான் இதைக் குறித்து தனியாக ஒரு பதிவிடலாம் என்று எண்ணினேன். 

இனி அந்த அநானியின் கருத்துரைக்கு வருவோம்.

முதலில் இதை காழ்ப்புணர்ச்சி என்கிறார். யாருக்கு யார் மீது காழ்ப்புணர்ச்சி? பாஜக மீதா அல்லது அவருடைய பிரதமர் நாமினி நமோ மீதா?  புரியவில்லை.

அதன் பிறகு நான் எந்த நேரமும் மதம் பிடித்து அலைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் புரியவில்லை. ஆனால் அவருடைய அடுத்த வரியையும் சேர்த்து படிக்கும்போது லேசாக புரிகிறது. அதாவது நான் 'மதம் வெறி' பிடித்து அலைகிறேன் என்று சொல்கிறார் போலும்.

'திண்ணை' ஒரு அரசியல் சார்ந்த பதிவு. நான் ஒரு நடுநிலையான அரசியல் விமர்சகன் என்பது என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும். நான் ஒரு நீண்டகால காங்கிரஸ் வாக்காளன் என்றாலும் கடந்த பத்தாண்டுகளாக அவர்களுடைய ஆட்சியில் நடந்த ஊழல்களால் அதிருப்தியடைந்துள்ளவன். மேலும் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலிலோ நிர்வாகத்திலோ எவ்வித முன் அனுபவமும் இல்லாத ராகுலை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு வாக்களிப்பதில் பயனில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளேன் என்று ஏற்கனவே ஒரு பதிவில் தெளிவாக கூறியுள்ளேன்.

அவர்களை விட்டால் இன்று தேசிய கட்சிகள் என விரல் விட்டு எண்ணக் கூடிய கட்சிகளில் முக்கிய கட்சி பாஜகதான். பாஜகவின் கொள்கைகளில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. ஆகவே அவர்கள் நமோவைத் தவிர அத்வானி போன்ற வேறு எவரையேனும் முன்நிறுத்தியிருந்தாலும் அந்த கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பே இல்லை.

என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல்களில் பிராந்திய கட்சிகளுக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை. எப்போது மத்தியில் கூட்டாட்சி என்ற நிலை வந்ததோ அன்று முதலே ஊழலும், ஒழுங்கீனமும் தலைவிரித்தாட துவங்கிவிட்டன என்பது என்னுடைய கருத்து. ஆகவே திமுகவுக்கோ அல்லது மற்றெந்த மாநிலக் கட்சிகளுக்கோ வாக்களிக்கவும் வாய்ப்பில்லை.

ஆகவே இம்முறை மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் அதாவது மீண்டும் காங்கிரஸ் தமிழகத்தில் தலையெடுக்கும்வரையிலும் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை. எந்த கட்சியையும் சார்ந்திராததால்தான் என்னால் நடுநிலையாக எல்லாக் கட்சிகளையும் விமர்சிக்க முடிகிறது.

ஆகவே அரசியல் ரீதியாக எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இருக்க வாய்ப்பே இல்லை.

அடுத்த குற்றச்சாட்டு நான் எந்நேரமும் மத வெறி பிடித்து அலைகிறேனாம். ஆகையால்தான் என்னுடன் விவாதத்தில் பங்குபெறும் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இருவரையும் வெறிபிடித்தவர்கள் போல் பேச வைத்துவிட்டு நான் நடுநிலையாக பேசுகிறேனாம் (இதைத்தான் 'சொம்படிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்).

அரசியல் விமர்சனத்தை ஒரு சில நண்பர்கள் இணைந்து விவாதிப்பதுபோல் அமைத்தால் சுவாரஸ்யமாக இருக்குமே என்று எண்ணித்தான் கற்பனையாக இருவரை படைத்தேன். அவர்களுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நீண்ட நேரம் யோசித்து இந்து மற்றும் இஸ்லாமிய பெயர்களை வைத்தால் இன்று நம் நாட்டிலுள்ள முக்கிய மூன்று மதத்தினரையும் சார்ந்தவர்கள் பங்குபெற்றதுபோல் இருக்குமே என்று பெயரிட்டேன். 

அவர்கள் இருவரும் கூறுவது நாட்டிலுள்ள அனைத்து இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கூறுவதுபோலுள்ளது என்று உருவகப்படுத்திக்கொள்வது படு முட்டாள்தனமான செயல். அதே போன்று கிறீஸ்த்துவ மதத்தைச் சார்ந்த நபர் கூறுவதெல்லாம் கிறிஸ்த்துவர்களின் கருத்து என்பதும் முட்டாள்தனம்தான்.

நாட்டிலுள்ள அனைத்து இந்து சகோதரர்களும் பாஜகவினர் அல்லவே. அதே போல் பாஜகவிலுள்ள அனைவரும் இந்து வெறியர்களும் அல்ல. ஆகவே பாஜகவை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்பதாகிவிடாது. மேலும் கணேஷ் என்கிற கதாபாத்திரம் கோபத்துடன் பேசுவது விவாதத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டத்தானே தவிர எல்லா பாஜகவினரும் இந்து வெறியர்கள் என்றோ இப்படித்தான் வெறிபிடித்ததுபோல் பேசுவார்கள் என்றோ பொருளல்ல.

அதே போன்றுதான் ரஹீம்பாய் என்கிற கதாபாத்திரமும். இன்று நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளிலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். பாஜகவிலும் உள்ளனர். கிறிஸ்த்தவர்களும் அப்படித்தான். இஸ்லாமியர்களுக்காவது இந்திய முஸ்லீம் லீக் என்கிற கட்சி உள்ளது. கிறிஸ்த்தவர்களுக்கு அதுவும் இல்லை. 

இந்த மதத்தினர் இந்த கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுபோலத்தான் இந்த மதத்தினர் இப்படித்தான் பேசுவார்கள் என்று கற்பிப்பதும் முட்டாள்தனம்தான். 

மூன்று பேர் கலந்துரையாடல் செய்கிறார்கள் என்ற சூழலில் இரு நபர்கள் காரசாரமான விவாதத்தில் ஈடுபடும்போது நடுநிலையில் நின்று ஒருவர் பேசினால்தான் எந்த விவாதத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதாலேயே கணேஷும் ரஹீம்பாயும் விவாதத்தில் ஈடுபடும்போது ஜோசப் என்கிற நபர் குறுக்கிட்டு நடுநிலையாக பேசுவது போல் அமைத்திருந்தேன். 

இந்த விவாதத்தில் என்னுடைய பெயரைத் தாங்கி வரும் நபர் சொல்வது மட்டும்தான் என்னுடைய சொந்த கருத்து. மற்ற இருவரும் கூறுவதாக வருவதெல்லாம் என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதாக நானாக கற்பனை செய்து எழுதப்படுபவை. அதில் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த பதிவுகளை வாசித்துவரும் எவருமே இதில் வரும் கருத்துக்களுக்கு எதிராக எழுதியதில்லை இந்த அநாமதேய வாசகரைத் தவிர. 

இதே கருத்தை அவர் தன்னுடைய சொந்த பெயரில் இட்டிருந்தால் அதை வரவேற்றிருப்பேன். ஆனால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத்துரையை தன் சொந்த பெயரில் இட யாருக்கும் துணிச்சல் வராதுதான். ஆகவேதான் 'அநானிமஸ்' என்கிற போர்வைக்குப் பின்னாலிருந்துக்கொண்டு எழுதியிருக்கிறார் போலும். 

சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு கோழை பதிவாளர் 'போலி' என்ற பெயரில் பல பதிவர்களை இகழ்ந்து எழுதி சுமூகமாக இயங்கிவந்திருந்த தமிழ்மண தளத்தை நாறடித்துவந்தார். இப்போது அவருடைய பாணியில் வேறொரு கோழை உருவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது. 

*********





31 டிசம்பர் 2013

என் புத்தாண்டு உறுதிமொழிகள்!!

இதோ மீண்டும் ஒரு வருடம் என்னைக் கடந்து போகிறது. 

கடந்து சென்ற வருடம் என்னை எவ்வாறெல்லாம் பாதித்தது. என்னென்ன அனுபவங்களை தந்தது என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். 

பணியில் இருந்த காலத்தில், அதாவது கணினி என்கிற ஒரு வினோதம் வங்கியில் அடியெடுத்து வைத்திராத காலத்தில், ஆண்டு இறுதி என்பதே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்க டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவையும் கடந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததுண்டு. ஆனாலும் வருட இறுதி ஜெனரல் லெட்ஜர் பாலன்ஸ் ஆகிவிட்டது என்கிற ஒரு மனநிம்மதியுடன் புத்தாண்டின் விடியற்காலையில் சில்லென்று காற்று முகத்தில் பட ஸ்கூட்டரில் பாரிஸ் கார்னரில் இருந்து புரசைவாக்கத்திலிருந்த வீட்டிற்கு வந்த சுகமான அனுபவமும் நினைவுக்கு வருகிறது.

பிறகு புகுந்த கணினி அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையையும் கூட இயந்திரமயமாக்கிவிட்டது. இப்போதெல்லாம் நாம் எதையுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற சவுகரியம் - அது சில சமயங்களில் அசவுகரியமாகவும் ஆகிப்போகிறது. மனைவியின் செல் நம்பரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை - எத்தனை தொலைவில் உள்ளவர்களுடனும் நொடியில் தொடர்புக்கொள்ளக் கூடிய சவுகரியம் - இதிலும் அசவுகரியம் உள்ளதே! பிறந்த நாள் வாழ்த்தை சொல்ல கடைசி நிமிடம் வரையிலும் காத்திருந்து சொல்ல முயலும்போது busy tone இடையில் வந்து பிறகு இணைப்பு கிடைக்கும்போது இப்பத்தான் உங்களுக்கு சொல்ல தோனிச்சா என்கிற மகள்களின் எரிச்சலையும் சம்பாதித்து கொடுத்திருக்கிறது - இப்படி பல சவுகரியங்கள் இருந்தாலும் இவை முன்பு தனிமனித உறவுகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கத்தை, அன்னியோன்யத்தை குறைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.

இணையம் முதன் முதலில் நம் வாழ்வில் நுழைந்தபோது அது ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனால் அதுவே நாளடைவில் ஒரு அலாதி அனுபவமாக மாறி இப்போது அதுவே நம்முடைய நாட்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கிறதை காண முடிகிறது.

இந்த இணைய அடிமைத்தனம் இன்று பல தனிமனித உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. 

கடந்த பத்து நாட்களாக மலேசியாவிலிருந்து வந்திருந்த மகள் மற்றும் பேத்தியுடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே இணையத்திற்கு வருவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. எதையோ பறிகொடுத்துவிட்டதுபோன்ற எண்ணம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த அனுபவம் எனக்கே வியப்பாக இருந்தது. நான் எதற்கும் எந்த சூழலும் அடிமையாகிவிடுபவன் இல்லை என்று எண்ணியிருந்த எனக்கு என்னுடைய இந்த பலவீனம் ஒருவித அச்சத்தைக் கூட அளித்தது. 

ஆனால் முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு பேத்தியும் என்னுடன் நெருங்கி வந்துவிட நேரம் போனதே தெரியாமல் போனது. இணையத்திற்கு வெளியிலும் வாழ்க்கை இருப்பதை எனக்கு உணர்த்தியது  இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று மாலை அவர்கள் திரும்பிச் சென்றதும் மீண்டும் ஒரு வெறுமை. நானும் என்னுடைய மனைவியும் தனித்துவிடப்பட்டதுபோன்ற ஒரு உணர்வு. மனைவிக்கு சமையல், தையல், தோட்டம் என்ற பல்வேறு அலுவல்கள். ஆனால் எனக்கு? இணையத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போன்றதொரு வெறுமை. இத்தகைய எண்ணம் எனக்கு மட்டும்தானா அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அனைவருக்குமே உள்ளதா என்று தெரியவில்லை. 

இதிலிருந்து விடுபட வேண்டும். ஆகவே கடந்த வருடம் இணையத்தில் இருந்த நேரத்தில் பாதியளவு மட்டுமே இந்த வருடம் செலவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இது அத்தனை எளிதல்ல என்றாலும் இதை சாத்தியமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இது நல்ல முடிவுதானா இதை தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இணைய பிரவேசத்தால் நின்றுபோயிருந்த வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும். மறந்துபோயிருந்த நண்பர்களை  தேடிப்பிடிக்க வேண்டும், தொடர்பற்று போயிருந்த சொந்தங்களுடனான உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

இவைதான் எதிர்வரும் புத்தாண்டு உறுதிமொழிகள்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


03 ஆகஸ்ட் 2013

என் முதல் பதிவு அனுபவங்கள் (தொடர் பதிவு)

முதலில் என்னை இந்த தொடரில் என்னுடைய பழைய நினைவுகளை அசைபோட அழைத்த பதிவுலக நண்பர் ராஜி அவர்களுக்கு நன்றி.

2005ல் பதிவுலகில் நுழைந்தேன் என்றாலும் அதிலிருந்து சுமார் இரண்டாண்டு காலம் விலகியிருந்துவிட்டு மீண்டும் நுழைந்திருப்பதால் இதை 'புதிதாய் மீண்டும் ஒரு பிறப்பு' என்று கூறலாம்.

இந்த மறுபிறப்பில் இன்று பிரபலமானவர் என கருதப்படும் ஒரு பதிவரால் ஒரு தொடர்பதிவில் எழுத அழைக்கப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

2005ல் பதிவுலகிற்குள் நுழைந்தது ஒரு விபத்து என்றுதான் கூற வேண்டும்.

2003ல் எங்களுடைய வங்கியில் துவக்கப்பட்ட ஒரு கணினி ப்ராஜக்ட் (இதற்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை) வெற்றிகரமாக முடிக்கப்பட்டு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று திட்டமிட துவங்கியிருந்த காலம் அது. நான் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தது எங்களுடைய வங்கியின் கணினி இலாக்கா என்பதால் வங்கிக் கிளைகளில் உள்ளது போன்று தினசரி அலுவல்கள் என்று ஏதும் இருக்காது.

ஆகவே ஒரு ப்ராஜக்ட் முடிந்து அடுத்த ப்ராஜக்டை துவக்கும்வரையிலுள்ள இடைபட்ட காலத்தில் காலையில் அலுவலகத்திற்கு வந்தால் அங்கிருந்து செல்லும்வரையிலும் அடுத்து செய்யவிருக்கும் ப்ராஜக்டை பற்றிய அலசல் கூட்டங்களே நடந்துக்கொண்டிருக்கும். அத்தகைய கூட்டங்களில் எனக்கு கீழ் பணியாற்றிய பொறியாளர்கள்தான் அதிகம் பேசுவார்கள். அவர்கள் கூறுவதில் பெரும்பாலானவை எனக்கு புரியவே புரியாது. ஏனெனில் நான் ஒரு காமர்ஸ் பட்டதாரி. கொஞ்சம், கொஞ்சம் கணினி தெரியும். Database என்றால் என்ன என்று தெரியும். முந்தைய ப்ராஜக்ட்டை வழிநின்று நடத்தியிருந்ததால் ரவுட்டர், ஃபையர்வால், சர்வர், நெட்வொர்க்கிங் என்றால் என்ன என்பதையும் தெரிந்து வைத்திருந்தேன். அதுபோலவே ஆரக்கிளில் (Oracle) query எழுதவும் சுமாராக தெரிந்து வைத்திருந்தேன்.

ஆகவே என்னுடைய ஜுனியர்கள் சீரியசாக திட்டத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும்போது நான் என்னுடைய லேப்டாப்பில் இணையத்தை மேய்ந்துக்கொண்டிருப்பது வழக்கம். நாம இங்க மூச்ச புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டிருக்கோம் இந்த மனுஷன் லேப்டாப்பையே பாத்துக்கிட்டிருக்காரேன்னு அவங்க நினைக்கறது அவங்க முகபாவனையிலிருந்தே தெரிஞ்சிக்க முடிஞ்சாலும் அத கண்டுக்காம என் கர்மத்திலேயே கண்ணாயிருப்பேன். அவங்க எல்லாரும் என் மேசைக்கு முன்னாலருக்கற சேர்ல ஒக்காந்திருந்ததால நான் என்ன செஞ்சிக்கிட்டிருக்கேங்கறது அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைன்னாலும் இவருக்கு இதவிட்டா வேற என்ன வேலை இருக்க முடியும்னு தெரியாமயா இருக்கும்? இருந்தாலும் டிப்பார்ட்மென்ட் ஹெட்டாச்சே! என்னத்தையாவது செஞ்சிக்கிட்டு போவட்டும்னு அவங்க பாட்டுக்கு டிஸ்கஸ் பண்ணுவாங்க. மீட்டிங் முடியற நேரத்துல 'எல்லாத்தையும் மினிட் பண்ணி ஃபர்ஸ்ட் டிராஃப்ட் என்கிட்ட அனுப்பிச்சிருங்கப்பா.. நா பாத்ததுக்கப்புறம் ஃபைனலைஸ் பண்ணிக்கலாம்'னு சொல்லிருவேன். அத பார்த்தாலே அன்னைக்கி நடந்த மீட்டிங்ல பசங்க என்ன டிஸ்கஸ் பண்ணாங்கன்னு தெரிஞ்சிக்கலாமே... அதான்.

அப்படி இணையத்த மேஞ்சிக்கிட்டிருந்தப்போ ஆக்சிடென்டா நா போய் விழுந்த தளம்தான் தமிழ்மணம். அட! இது நல்லாருக்கேன்னு நினைச்சேன். அப்புறம் என்ன, அன்னையிலருந்து டெய்லி ஆஃபீஸ் வர்றதுக்கு ஒரு எக்ஸ்யூஸ் கிடைச்சிது. காலையில வந்ததும் என்னத்த செய்யிறதுன்னு தெரியாம இருந்தவனுக்கு ஒரு நல்ல டைம்பாஸ் கிடைச்சிதுன்னு நினைச்சி தெனமும் ஒரு ரெண்டு மணி நேரமாவது அன்னைக்கி பாப்புலரா இருந்த பலருடைய பதிவர்களோட பதிவுகள படிப்பேன். அப்ப இருந்தவங்கள்ல நெறைய பேர் இப்ப ஆக்டிவா இல்லன்னு நினைக்கிறேன், அதாவது இணையத்துல. ரெண்டே ரெண்டு பேர தவிர: ஒன்னு அப்பப் போலவே இப்பவும் வாரத்துல ரெண்டு பதிவாவது போடற துளசி. அப்புறம் கேள்விங்க கேக்கறதுல எக்ஸ்பர்ட்டான தருமி.

இப்படி படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் நமக்கும் எழுதலாமேங்கற ஆசை வந்துச்சி. தமிழ்மணத்துல புது ப்ளாக் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு நல்லாவே எழுதி வச்சிருந்தாங்க. ஏற்கனவே கொஞ்சம் கணினி ஞானம்! இருந்ததால ஈசியா செய்ய முடிஞ்சது. அதுக்கப்புறம் என்ன பேர் வைக்கலாம்னு யோசனை. அதுக்கே ரெண்டு நாளாச்சிது. என்னென்னவோ யோசிச்சேன். ஆனா 'என்னுலகம்'னு ஏன் வச்சேங்கறது மறந்துபோயிருச்சி. இப்ப அது தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க? எப்படியோ வச்சாச்சி.

அப்புறம், எப்படி தமிழ்ல எழுதறதுங்கற கன்ஃப்யூஷன். அப்போ யூனிகோர்ட்னா என்னான்னே தெரியாது. அப்புறம் 'உன் கோடு, என் கோடு, யூனி கோடு'ங்கற தலைப்புல ஒரு ஆர்ட்டிகிள படிச்சேன். நாம எந்த எழுத்துருவ யூஸ் பண்ணி எழுதுனாலும் அத யூனிகோட் கன்வர்ட்டர்ல மாத்திக்கலாம்னு எங்கயோ படிச்சேன். அத டவுன்லோட் பண்ணி வேர்ட்ல எங்கிட்ட ஏற்கனவே இருந்த எழுத்துருவுல அடிச்சி இந்த கன்வர்ட்டர்லருக்கற மேல் பொட்டியில அடிச்சி மாத்தி போஸ்ட் பண்ணேன். அப்புறம் அப்போ பிரபலமாருந்த டோண்டு ராகவன் நேரா நோட்புக்ல யூனிகோட்லயே அடிச்சிரலாம் சார்னு சொல்லிக்கொடுத்தார். அப்படித்தான் அவர் கூட பழக்கமாச்சி. அவர் அவரோட நண்பர் ஜெயரமன அறிமுகப்படுத்தினார். அப்புறம் மா.சிவக்குமார், தருமி, துளசி, ஜி.ராகவன், தமிழினி, சிங்கை ஜோ, கோவி. கண்ணன் அப்படின்னு நிறைய நண்பர்கள். அப்புறம் பாலபாரதி அவருடைய நண்பர்கள்னு வட்டம் விரிஞ்சிக்கிட்டே போச்சி.

ஆரம்பத்துல எனக்கு புடிச்சித மட்டுந்தான் எழுதிக்கிட்டிருந்தேன். ஓரிரண்டு நண்பர்களைத் தவிர வேறெந்த பின்னூட்டமும் வராது. அப்புறம்தான் மத்த பதிவர்களுக்கும் புடிச்சத எழுதணும், அப்பத்தான் நிறைய பேர நம்ம பக்கம் இழுக்க முடியும்னு ராகவன் சொல்லிக்குடுத்தார். சரி நம்மோட வேலையப் பத்தி எழுதலாம்னு நினைச்சி துவங்குன சீரியல்தான் 'திரும்பிப் பார்க்கிறேன்.' ஏறக்குறைய மூனு வருசம் தொய்வில்லாம போச்சி. நிறைய வாசகர்களையும் பின்னூட்டங்களையும் எனக்கு தந்து... ஒரு காலத்துல 'என்னுலகம் ஜோசப்' பேர் மாறி 'திரும்பிப்பார்க்கிறேன் ஜோசப்'னு ஆகற அளவுக்கு அந்த சீரியல் பாப்புலராச்சி.

Rest is history.

இதான் நம்மளோட பதிவுலக என்ட்றி அனுபவங்கள்.

இதான் என்னோட முதல் பதிவு... இதுல ஒரு ஆச்சரியம். நான் 2005ல் போட்ட முதல் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம் நண்பர் பாலராஜன் கீதா அவர்களிடமிருந்து - 2007ல்!!!!!!!!!!! அவ்வளவு பிரபலம் நான், அப்போது!!


இது தொடர் பதிவுன்னாலும் யார், யார யார், யார் இதுவரைக்கும் அழைச்சிருக்காங்கன்னு தெரியாததால மறுபடியும் என்னோட ஆரம்பகால பதிவர் நண்பர்களான தருமி மற்றும் துளசியையே இந்த தொடர் பதிவுலயும் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு அழைக்கிறேன். இருவரும் சிரமத்திற்கு மன்னிக்கவும்!





21 செப்டம்பர் 2010

தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!

கடந்த சில தினங்களாக வாசகர் பரிந்துரை பட்டியலில் சில பிரபல பதிவர்களின் (மும்மூர்த்திகள்) பதிவுகள் காணோமே. என்ன காரணம்?




காரணம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது.



தவிப்புடன்,

டிபிஆர்.

17 ஆகஸ்ட் 2010

பின்னூட்ட மோகமும் வாசகர் பரிந்துரையும்

சாதாரணமாக இத்தகைய விஷயங்களைப் பற்றி நான் அதிகம் எழுதுவதில்லை.

ஆனால் சமீபகாலமாக வாசகர் பரிந்துரை பட்டியலில் தினமும் தரிசனம் தரும் சில பதிவர்களின் இடுகைகளை வாசித்துவிட்டு இனியும் வாளாவிருப்பது நல்லதல்ல என கருதியதால் இந்த இடுகை.

கடந்த சில நாட்களாகவே இந்த பட்டியலில் வரும் அனைத்து இடுகைகளையும் தவறாமல் வாசித்ததில் நான் கண்டது இது ஒரு வடிகட்டின அயோக்கியதனம் என்பதுதான்.

அதுவும் ஒரு வங்கியில் பணியாற்றும் பதிவர் ஒருவர் கடந்த வாரம் எழுதிய இடுகைகளில் எதுவுமே இந்த பட்டியலில் வர தகுதியற்றவை என்பது என் கருத்து.

ஒருவேளை அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தன்னுடைய தினசரி இடுகைக்கு ஓட்டளிக்க வைக்கின்றாரோ என்று கூட கருத தோன்றுகிறது!

இன்னும் சில பதிவர்களைப் பற்றி கூற வேண்டுமென்றால் ஓட்டுக்கு காசு என்கிற அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை.

ஓரிரண்டு பின்னூட்டங்கள் கூட இல்லாத பதிவுகள் எப்படி இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற முடிகிறது? அதிசயம்தான்.

வெட்கக்கேடு.

தமிழ்மணத்தின் செயல்பாடுகளையே ஒருசிலர் கேலிக்கு உள்ளாக்குகின்றனர் என்பதை நிர்வாகம் உணர்ந்து இந்த பட்டியலையே முகப்பிலிருந்து என்று நீக்குமோ அன்றுதான் தமிழ்மணத்திற்கு விடிவுகாலம்.

07 ஜூன் 2010

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!

கடந்த சில வாரங்களாக சூடுபிடித்து எரிந்துக்கொண்டிருந்த தமிழ் பதிவுலகம் சற்றே தணிந்து சுமூக சூழல் உருவாகியிருப்பதைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடரவேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆவல்.

பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்களால்தான் சரளமாக, அழகாக பேசவும் எழுதவும் இயலும் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான். மனதில் பட்டதை அப்படியே பேச்சில் கொட்டித் தீர்ப்பதால் உடனடி பகை ஏற்பட்டாலும் அது வெகு விரைவில் மறக்கப்பட்டுவிடும். உணர்ச்சி மேலீட்டால் பேசிவிட்டு வருத்தப்படுபவர்கள் நம்மில் பலர். 'ஆத்திரத்தில பேசிட்டேங்க, மன்னிச்சிருங்க. மனசுல வச்சிக்காதீங்க.' என்று நாம் மன்னிப்பு கோரும்போது பாதிக்கப்பட்டவர் உடனே, 'பரவாயில்லீங்க. அத நா அப்பவே மறந்துட்டேன்.' என்பதோடு மனதில் மண்டியிருந்த மனக்கசப்பு மறைந்துபோகும்.

ஆனால் எழுத்து அப்படியல்ல. ஏனெனில் சூடான பேச்சு பேசுவதை கேட்கக்கூடிய தொலைவில் உள்ளவர்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய தமிழ்மணம் போன்ற திரட்டியில் இணைக்கப்படுகிற பதிவுகளில் நாம் எழுதுகின்ற சொற்கள் காலாகாலத்திற்கும் ஏட்டில் நிற்கக் கூடியவை. காலத்தாலும் அழித்துவிட முடியாத சுவடாக நின்றுவிடக்கூடியவை. என்னுடைய பதிவில் ஒருவரை இழித்து எழுதியதுடன் நிற்காமல் அதை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நினைப்பில் திரட்டியிலும் இணைத்துவிடும்போது அது ஒரு தெருச்சண்டைக்கு சமமாகிவிடுகிறது. எந்த ஒரு தெருச்சண்டையும் முதலில் ஒரு சிலருக்கு இடையில்தான் துவங்கும். ஆனால் அது வெகுவிரைவில் பிரச்சினையில் சிறிதளவும் சம்பந்தமில்லாதவர்களையும் ஈர்த்துவிடுவதைக் கண்டிருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பதிவுலகில் எனக்கிருந்த அனுபவத்தில் இத்தகைய சர்ச்சைகள் பெரும்பாலும் சாதிகளை வைத்தே ஏற்பட்டுள்ளன. சாதி, மொழி, இனம், மதம் என்பவற்றால் மனிதர்களை பிரித்து ஆளும் உத்தி பண்டைய தமிழர்களுக்கிடையில் இருந்ததோ என்னவோ. ஆனால் அது இன்றும் நம்மிடையில் தொடர்வதுதான் வேதனை.

நம்முடைய சாதி, மதம், மொழி ஆகியவற்றை நிர்ணயிக்கும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அது பிறப்பால் நமக்கு வழங்கப்பட்டது. அதில் எவ்வித பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. பிறப்பால் உயர்ந்தவன் என்று எவன் ஒருவன் தன்னைப்பற்றி கருதுவானோ அவன் மூடனிலும் மூடன் என்பதே என் கருத்து. அவன் இந்த முன்னேறிய சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுபவன். அவனுடைய கருத்துக்களும் அப்படியே. அத்தகைய ஒருவனின் எழுத்தால் ஆத்திரப்பட்டு அதே பாணியில் அவனை திருப்பியடிப்பதால் நானும் அவனைப் போன்றே தரம் தாழ்ந்து போய்விடுகிறேன் என்பதுதான் வேதனையான உண்மை.

மதமும் அப்படியே. இறைவன் ஒருவன் இருக்கிறானா இல்லையா என்பதை விவாதிப்பதில் அர்த்தமிருக்கலாம். ஆனால் இறைவன் சொல்கிறான் என்ற பெயரில் இன்று மதங்கள் போதிக்கும் அனைத்துமே பொய், பித்தலாட்டம் என்பது சத்தியமான உண்மை. மதத்தை பரப்ப நினைக்கும் ஒருசில போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. இளம் சிறார்களை தன்னுடைய பாலியல் உணர்வுகளுக்காக பாழ்படுத்திய கத்தோலிக்க மதக்குருமார்களால் கத்தோலிக்க மதத்திற்கு இழுக்கு. போலி பிஷப், மற்றும் போதகர்களால் CSI Churchக்கு இழுக்கு, நித்தியானந்தா போன்ற போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு இழுக்கு, அப்பாவி மக்களை தீவிரவாத கொடுமைக்கு ஆளாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இஸ்லாம் மதத்திற்கு இழுக்கு.... இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.... ஆக மதங்கள் மக்களை இணைப்பதைவிட பிரிப்பதிலேயே குறியாக இருக்கின்றன...

சமீப காலமாக மொழியும் அப்படித்தான். அண்டை நாட்டில் அவதிக்குள்ளாக்கப்படுபவன் வம்சாவழி இந்தியன் என்று காணாமல் அவன் தமிழந்தானே என்ற அலட்சியத்துடன் நடந்துக்கொள்ளும் மத்திய அரசு தமிழனை கொன்று குவித்தவனுடன் கூட்டு சேர்ந்து வணிகம் செய்வதிலேயே குறியாயிருக்கிறது. சிதிலமடைந்து போயிருக்கும் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்ப இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது போய்விடுமே என்கிற எண்ணத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் ஒப்புக்கு கண்டனங்களை ஒருபுறம் எழுப்பிக்கொண்டே மறுபுறம் கட்டுமான ஒப்பந்தங்களை பெறுவதில் குறியாய் நிற்கிறது.

இதுதான் இன்றைய நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் சாதி சண்டையில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதில் யாருக்கு என்ன லாபம்? வாத, பிரதிவாதங்கள் செய்வதற்கு விஷயமா இல்லை?

ஆகவே இன்றைய தமிழ்பதிவுலகில் மீண்டும் ஒரு சுகாதாரமான சூழல் உருவாக என மனதில் பட்ட சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சாதீயத்தை பற்றி எழுதுவதை விட்டுவிடுவோம். அதைப் பற்றி எழுதும் பதிவர்களை கண்டுக்கொள்ளாமல் ஒதுக்குவோம்.

2. ஆங்கில பதிவுகளுக்கு இணையாக பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுவோம், அத்தகைய எழுத்துக்களை ஊக்குவிப்போம்.

3. குழுக்கள் சேர்த்து கும்மியடிப்பதை தவிர்த்து நல்ல பதிவுகளை எழுதும் பதிவர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், பின்னூட்டங்கள் இட்டு அவர்களுடைய எழுத்தை ஊக்குவிப்போம்.

நல்லதொரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் முனைப்பாயிருப்போம்.

01 ஜூன் 2010

பதிவுலகத்தின் இழிநிலை...

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வப்போது பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்ததை மீண்டும் முழு நேர  அலுவலாக மேற்கொண்டால் என்ன நினைத்ததுண்டு.

ஆனால் சில, பல காரணங்களுக்காக அது தள்ளிக்கொண்டே போனது. இருந்தும் தமிழ்மணத்தில் தருமி, துளசி, ஜோ, கண்ணன் போன்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் வாசிப்பதற்காக தமிழ்மணத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.

அப்போதெல்லாம் சில பதிவர்களுடைய பதிவுகளுக்கு மட்டும் அபிரிதமான வரவேற்பு இருப்பதை கண்டிருக்கிறேன். அப்படியென்ன எழுதுகின்றனர் என்பதை ஒருசில சமயங்களில் சென்று படித்துவிட்டு வெறுத்துப் போயிருக்கிறேன்.

சாதி ஒழிய வேண்டும் என்று ஒட்டுமொத்த சமுதாயமே அறைகூவல் இட்டுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அதையே மையக்கருத்தாக வைத்து ஒரு சாதியைச் சார்ந்த பதிவர்களை அவர்களைச் சாராதோர் இழித்து எழுதுவதும் அதற்கு அவர்களுடைய பாஷையிலேயே மறுமொழி அளிப்பதும்....

ஒருமுறை என்னுடைய பெயரை கூகுளில் இட்டு தேடிக்கொண்டிருக்கையில் 'டிபிஆர்.' தலித் சமூகத்தைச் சார்ந்தவரா என்று தெரியவில்லை' என்று என்னைப் பற்றி ஒரு பதிவர் தன்னுடைய பின்னூட்டங்களில் ஒன்றில் அங்கலாய்த்திருப்பதை காண முடிந்தது.

நான் தலித் சமூகத்தைச் சார்ந்தவனா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வதில் அவருக்கென்ன அப்படியொரு ஆவலோ தெரியவில்லை. ஒருவேளை நான் தலித்தாக இருக்கும் பட்சத்தில் நான் தலித் கிறிஸ்துவர்களுக்கு இந்து தலித்துகளுக்கென அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்று வாதிட்டதை என் சொந்த லாபத்திற்காகத்தான் என்று திரித்துக் கூறலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

என்னுடைய வங்கி மேலாளர் அனுபவத்தில் இப்படியொரு கணிப்புக்கு நான் ஆளாகி பலமுறை அவதிப்பட்டதுண்டு. அப்போதெல்லாம் இது காலப்போக்கில் மறைந்துவிடும் என்று நினைத்து ஆறுதலடைந்ததுண்டு. ஆனால் சுமார் முப்பதாண்டு காலங்களுக்கு பிறகும் இது பதிவுலகிலும் தலைவிரித்தாடுவதை பார்த்துவிட்டு எதற்கு இந்த சாக்கடையில் உழல வேண்டும் என்று கருதியே விலகியிருக்கிறேன்.

அதுவும் கடந்த ஒரு வார காலமாக இரண்டு அணிகளாக பிரிந்து பதிவர்கள் ஒருவர் மற்றவர்களை இழித்துரைப்பதையே எவ்வளவு 'அழகாக' செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காணும் மனம் வலிக்கிறது.

அழகு தமிழை இப்படியெல்லாம் கூட பயன்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர் இன்றைய இளம் எழுத்தாளர்கள். வாழ்த்துக்கள் :((((((((((

25 ஜூன் 2008

இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

இன்றைய பதிவுலகின் முதுகெலும்பே இந்த பின்னூட்டங்கள்தான் என்றால் மிகையாகாது.

ஒரு பதிவாளரின் எண்ணச் சிதறல்களை தாங்கி வரும் இடுகைகளை படித்து அதற்கு தங்களுடைய கருத்தை அது மாற்றுக் கருத்தாக இருப்பினும், ஆக்கப்பூர்வமான முறையில் (constructive) விமர்சனம் செய்ய இந்த பின்னூட்டங்கள் மிகவும் உதவுகின்றன.

எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த மாற்றுக் கருத்தையும் நேர்மையான முறையில் ஒருவர் முன் வைக்கும்போது பதிவாளர் அதை சரியான, அதாவது அதே நேர்மையான முறையில் எதிர்கொண்டு தன்னுடைய கருத்தை சார்ந்து வாதிடும்போது அந்த வாதமே சூடு பிடித்து மற்ற பதிவர்களுடைய கவனத்தையும் ஈர்த்து 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறது. இதற்கு கருத்து எழுதுபவர்கள் (பின்னூட்டம் இடுபவர்கள்) தங்களை முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்வது மிக, மிக அவசியமாகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சிலர் இதை தவறாகப் பயன்படுத்தி அநாமதேயங்களாக வந்து பதிவாளரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவரையே விமர்சித்தனர். மேலும் சிலர் தேவையில்லாத அதாவது சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதி பதிவர்களிடையே ஒருவித 'கலவர சூழலை' உருவாக்கினர் என்பதும் உண்மை.

அப்போதுதான் தமிழ்மணம் தலையிட்டு தங்களுடைய திரட்டியில் பதிவு செய்திருந்த பதிவர்களை ப்ளாகர் அளித்துள்ள பின்னூட்ட மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரை பயனளிக்கத் தவறியபோது மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்தாத பதிவுகளை நீக்கிவிடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டிவரலாம் என்ற சூழலும் எழுந்தது.

ஆகவே ஏறத்தாழ அனைவருமே தங்களுடைய பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தலை அறிமுகப்படுத்தினர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தில் நிலவும் சூழல் ஒரு நட்புச் சூழலாகவே எனக்குப் படுகிறது. இடுகைகளும் சரி, அதற்கு பிறகு வரும் பின்னூட்டங்களும் சரி அமைதியானதொரு சூழலை காட்டுகிறது. இடுகைகளின் தரமும் சற்று உயர்ந்துள்ளது என்பதையும் மறுக்கவியலாது. துறைசார்ந்த பதிவுகள், படு ஜாலியான பதிவுகளுடன் கும்மியடிக்கும் பதிவுகளும் வந்தாலும் எவரும் எவருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக பதிவுகளோ அல்லது இடுகைகளோ வரவில்லை அல்லது வெகுவாக குறைந்துள்ளது என்பது உண்மை. உண்மைத் தமிழன் போன்றவர்களுடைய பின்னூட்ட அன்பு தொல்லையும் யாரையும் எந்தவிதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்கியதாக தோன்றவில்லை.

பின்னுட்டங்கள் வந்தவுடன் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள 'கூகிள்' மின்னஞ்சல் விலாசத்தை பதிவு செய்துக்கொண்டால் 'கூகிள் டாக்' வழியாக அவற்றை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் விரும்பத்தகாத பின்னூட்டத்தை நீக்கிவிடவும் வசதியுள்ளதால் நான் மட்டுறுத்தல் வசதியை நீக்கிவிட்டேன். நாம் இடும் பின்னூட்டத்தை உடனடியாக பதிவில் காண்பதும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது! அநாமதேய ஆப்ஷனை நீக்கிவிட்டால் யாரும் தேவையில்லாத பின்னூட்டங்களை இட வாய்ப்பில்லை.

ஆகவே இனியும் இந்த பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையில்லை என கருதுகிறேன்.

தமிழ்மணமும் இதற்கு மறுப்பு தெரிவிக்காது என நம்புகிறேன்.

24 ஜூன் 2008

பதிவாளர்கள் எழுத்தாளர்களா?

ஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும்.

பதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது.

அப்புறம் என்ன? ப்ளாக் ரெடி.

எழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்?

அப்படீன்னு ஒன்னு தேவையே இல்லீங்க. கண்ணால பாக்கறது, காதால கேக்கறதுன்னு எதப்பத்தி வேணும்னாலும் கிறுக்கலாம்.

ஆனா அதெல்லாம் எழுத்தாயிருமா இல்ல நாமதான் நம்மள எழுத்தாளர்னு நினைச்சிக்கலாமா?

இதுதான் இன்றைய கேள்வி.

சிலரோட பதிவு தலைப்புல ஒரு mission statement இருக்கும்.

'இது என்னை ஒரு எழுத்தாளனாக்க நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி'

அதாவது இப்ப நான் எழுத்தாளன் இல்லை. ஆனா ஒரு காலத்துல எழுத்தாளனாயிருவேன். அதுக்காக இன்னையிலருந்து முயற்சி பண்ணப்போறேன்னு சொல்றாங்க.

இதுதான் நிதர்சனம்.

நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் இருக்கற ஒரு சின்ன ஆசை.

இந்த மாதிரி வந்து தினம் ஒரு பதிவு எழுதி ஆரம்பத்துல பிரமாத பேசப்பட்டு தன்னைத்தானே ஒரு பெரிய எழுத்தாளனா கற்பனை செய்துக்கிட்டு பிறகு அட்ரஸ் தெரியாம ஆன பதிவர்கள் ஏராளம், ஏராளம்.

இத்தகைய பதிவர்கள் அநேகம் பேர் அவங்க இடுகைகளுக்கு வர்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து 'அட! இவ்வளவு பேர் நம்ம எழுத்த படிச்சி அவங்களோட கருத்த எழுதறாங்களே. அப்ப நம்ம எழுத்துலதான் ஏதோ இருக்கு போலருக்கு.'ன்னு நினைச்சி தங்களையும் எழுத்தாளராளர்களாக கற்பித்துக்கொண்டவர்கள்.

அதில் தவறேதும் இல்லை. ஆனா அத ரொம்ப சீரியசா எடுத்துக்குறக் கூடாதுன்னுதான்...

ஆயிரம் பதிவர்கள்ல ஒரு பத்து பேர் எழுத்தாளரா வரலாம்னு வேணும்னா சொல்லலாம். அதாவது தொடர்ந்து ஒரு பத்து வருசம் எழுதுனா. அதாவது வெறும் கும்மி பதிவா எழுதாம... பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பத்தியெல்லாம் கவலைப்படாம...

அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். நிறைய படிக்கணும் (ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் இந்த படிக்கும் ஆர்வம்), ஆய்வு செய்யணும், etc, etc. அதுக்கு நிறைய நேரம் வேணும். அதுதானே இப்ப பிரச்சினையே.

அதனால நா சொல்ல வர்றது என்னன்னா ஆஃபீஸ் நேரத்துல மட்டும் பதிவுல எழுதறவங்க எல்லாம் எழுத்தாளர்களாகி விட முடியாதுங்க.

வேணும்னா நாம எல்லாம் கத்துக்குட்டி எழுத்தாளர்ங்கன்னு வேணும்னா சொல்லிக்கலாம்.

ஆனா ஒன்னு. ஒரு முழுநேர எழுத்தாளனுக்கு இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கு. நாம எதப்பத்தி வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் எழுதலாம். ஒரு கட்டுப்பாடும் இல்லை.

அதனால எழுத்தாளன்னு எந்தவித pretensionம் (பாவனை செய்துக்கொள்ளாமல்) இல்லாம மனம்போன போக்குல எழுதி, தப்பு, தப்பு, கிறுக்கி தள்ளுங்க.

நம்ம பதிவுல நாம கிறுக்கறதுக்கு யார் பர்மிஷன் வேணும்?

எச்சரிக்கை: யாராவது உங்களை ஒரு எழுத்தாளனாக்குகிறேன் என்றால் அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள். They will take your ideas, dress them up in such a way that you won't recognise your own work when it is published, would take the cake and give you only the crumbs. Beware of such parasites.

நாளைய பதிவு: இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

23 ஜூன் 2008

க்விட் ப்ரோ க்வோ'

நான் சமீபத்தில் (1995ல்தான்) மும்பையில் பணியாற்றியபோது என்னுடைய வட்டார அலுவலகத்தில் உயர் அதிகாரியாய் இருந்தவர் படு ஜாலியான மனிதர். அவரால் பேசாமல் இருக்கவே முடியாது. அந்த அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் (வட்டார மேலாளர்) அவருக்கு நேர் எதிர். மனிதர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். பிறகு பகலுணவு வேளையில் வெளியில் வருவார். அலுவலகத்திலுள்ளவர்கள் உண்பதற்கு அரை மணிக்கு முன்பு பொது உணவறைக்கு சென்று தனியாக அமர்ந்து உணவருந்திவிட்டு சென்றுவிடுவார். அவருக்கு 'சரியான முசுடு' என்ற பட்டப்பெயரும் உண்டு.

நான் குறிப்பிட்ட உயர் அதிகாரி அந்த அலுவலகத்தில் 2ம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் ஒட்டுமொத்த அலுவலகமும் இவரைத்தான் தன்னுடைய தலைவராக ('தல' ன்னும் சொல்லலாம்) கொண்டிருந்தனர். அலுவலக விஷயங்களில் மட்டுமல்லாமல் 'வெளி' விஷயங்களிலும் அவர்களுக்கு அவர்தான் 'தல'. குறிப்பாக மாலை நேர 'தாக சாந்தி' நேரங்களில்.

அவருக்கு வேறொரு பழக்கமும் உண்டு. தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நெருங்கிப் பழகுவது. அதாவது சமயம் கிடைக்கும்போதெல்லாம் (வார இறுதி நாட்களில்) அவர்களுடைய வீடுகளுக்கு செல்வது அவருடைய வழக்கம். அப்போது அந்த அலுவலகத்தில் சுமார் பத்து கடைநிலை மற்றும் இடைநிலை அதிகாரிகள் இருந்தனர். நான் அங்கிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவிலிருந்த செம்பூர் கிளையில் மேலாளராக இருந்தேன். அவர் அந்த அலுவலகத்தில் வந்து இணைவதற்கு முன்பு வட்டார அலுவலகத்தில் பணியாற்றியிருந்ததால் நானும் அவர்களுடைய அலுவலகத்தின் அங்கமாகவே கருதப்பட்டேன்.

எனவே என்னையும் சேர்த்து பதினோரு குடும்பங்கள். இதற்கெனவே ஒரு டைரியும் வைத்திருப்பார். ஒவ்வொரு வாரம் ஒரு வீடு. அவரும் அவருடைய மனைவி மட்டுமே மும்பையில் இருந்தனர். மகள் மற்றும் மகன் கேரளத்தில் மாமியார் வீட்டில். ஆகவே தம்பதி சமேதராய்தான் விசிட்டுக்கு வருவார்கள். அவரைப் போலவே அவருடைய மனைவியும் கலகலப்பானவர் என்பதால் அவருடன் சேர்ந்துக்கொண்டு நன்றாக அரட்டையடிப்பார். புறப்படும்போது 'நான் வந்து அட்டெண்டன்ஸ் குடுத்தாச்சி' என்று கூறிக்கொண்டே விடைபெறுவார். அதாவது நாம் அவருடைய வீட்டுக்கு கூடிய விரைவில் செல்ல வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நம் வீட்டுக்கு மீண்டும் வருவார் என்று பொருள்!

இதைத்தான் quid pro quo என்றேன். அதாவது "Something for something; that which a party receives (or is promised) in return for something he does or gives or promises." இதுதான் பொருள்.

****

இது நம் பதிவுலகுக்கும் பொருந்தும். புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். பின்னூட்ட ரகசியமும் இதுதான்.

நாளைய பதிவு: 'பதிவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா?'

14 பிப்ரவரி 2008

தரமிறங்காதீர்கள்.

நான் கடந்த சில மாதங்களாகவே வேலைப்பளு காரணமாகவே பதிவுகள் எழுதுவதில் இருந்து விலகியிருக்க நேர்ந்தது.

என்னுடைய பணிகளை குறித்த நேரத்தில் துவங்கி குறித்த நேரத்தில் முடித்தே பழகிப்போன எனக்கு தற்போது என்னுடைய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ப்ராஜக்ட் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவை எல்லாம் கடந்து நீண்டுக் கொண்டிருப்பதில் ஏற்பட்டுள்ள மனச்சோர்வு எழுதும் மனநிலையை அளிக்காமல் இருப்பதும் இந்த விலகலுக்கு ஒரு காரணம்.

ஆயினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறிப்பாக ப்ராஜக்டில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் விளையும் மனச்சோர்வை குறைக்க தமிழ்மணம் பக்கம் வந்து நம்முடைய நண்பர்களுடைய பதிவுகளை படித்துவிட்டு செல்வது வழக்கம். சில தரமுள்ள இடுகைகளில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திவிட்டு செல்வதும் உண்டு.

ஆனால் சமீப காலமாக சில பதிவர்களின் இடுகைகளைப் படிக்க நேர்கையில் மனச்சோர்வுடன் வரும் என்னைப் போன்றோர் மேலும் சோர்ந்து போக நேரிடுகிறது.

இந்த இழிநிலைக்கு யார் காரணம் அதாவது யார் இதை முதலில் துவக்கினார்கள் அல்லது யார் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்ய முயலாமல் இத்தகைய போக்கு தேவையா என்ற வினாவை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழ்மணத்திற்கென்று ஒரு நிர்வாகக் குழு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவர்களுடைய பணி தணிக்கையாளர்களுடைய பணியல்லவே. பதிவர்களுடைய இடுகைகளை சேமித்து வழங்குவது மட்டுமே அவர்களுடைய பணி. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு இடுகையையும் பரிசீலித்து அது வெளியிட தகுதியானவைதானா என்பதுபோன்ற ஆய்வில் இறங்குவது அவர்களுடைய பணியல்ல என்றுதான் கருதுகிறேன்.

சுயதணிக்கை என்பதை விட சுயகட்டுப்பாடு வேண்டும் என்று கருதுகிறேன்.

தேவையற்ற, கண்ணியமற்ற கருத்துகளை எழுதுபவர்கள் தங்களுடைய மனவக்கிரத்தை தங்களுடைய பதிவுகளில் எழுதி தங்களுடைய மனத்தாங்கலை தீர்த்துக்கொள்ளட்டும். அதில் தவறில்லை. ஆனால் அதை தமிழ்மணத்துடன் இணைத்து படிப்பவர்களுடைய மனத்திலும் வக்கிரத்தை விதைத்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதையும் மீறி எழுதும் பதிவர்களை மற்றவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முன்வரவேண்டும். அதை விட்டு அவர்களுடைய பதிவில் 'உன்னை விட நான் தரமிறங்குகிறேன் பார்' என்ற எண்ணத்துடன் சில நல்ல தரமுள்ள பதிவர்களும் (அதாவது என்னுடைய பார்வையில்) இப்போதெல்லாம் பதிலுக்கு பதில் தரமில்லாத கருத்துகளை எழுதுவது வேதனையளிக்கிறது.

இதில் கூடுதல் வேதனை என்னவென்றால் சமுதாயத்தில் நல்லதொரு பதவிகளில் இருப்பவர்களும் இதே பாதையில் செல்ல முயல்வதுதான்.

இத்தகையோரை நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். போதும். மேலும் தரமிறங்கி உங்களுடைய பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

நல்ல சிந்தனைகளை எழுதுங்கள், ஊக்குவியுங்கள்.

சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதுவதில்லை என்று முடிவெடுங்கள். அத்தகைய பதிவர்களுடைய இடுகைகளை படிப்பதை தவிர்த்துவிடுங்கள். மாறாக அதைப் படித்து, அதனால் ஏற்படும் ஆதங்கத்தை பின்னூட்டமாக கொட்டித் தீர்ப்பதையும் தவிர்க்க முயலுங்கள்.

நம்மில் பலருக்கு எழுதுவது முழுநேர வேலையல்ல. இது ஒரு பொழுதுபோக்கு. நம்முடைய எண்ணங்களுக்கு வடிகால். பணியிடங்களில் ஏற்படும் மனச்சோர்வை ஆற்றிக்கொள்ள ஒரு புகலிடம். அதையும் சர்ச்சைகுரியதாக்குவது தேவைதானா?

சிந்தியுங்கள் நண்பர்களே..

27 ஜூலை 2007

அழகு தமிழும் இன்றைய தலைமுறையும்

என்னுடைய தலைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லையென்றே கருதுகிறேன்.

தமிழ்வழி கல்வியே ஏதோ பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்கிற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டிருந்த காலம். அதாவது பணம் செலவழித்து கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்கு என்பதுபோன்றதொரு மாயை..

கிறிஸ்துவ குடும்பங்களில் வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒருவித கட்டாயமாக கருதப்பட்டு வந்த காலம். 'இங்க்லீஷ்ல எழுதுறதும் பேசுறதும் நமக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுக்கும்' என்பார் என்னுடைய தாத்தா. நம் வீட்டு பிள்ளைகள் எல்லாருமே மெட்றிகுலேஷன் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பார்.

'நம்ம வீட்லருந்து ஒருத்தனாவது கடவுள் சேவைக்கு போகணும். அதனாலதான் ஒன்னெ குருமடத்துல சேக்கறேன்' என்று என்னுடைய விருப்பம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளாமலே கொண்டு சேர்த்தவர். குருமடத்திலோ தப்பித்தவறியும் கூட தமிழில் பேசிவிடக்கூடாது என்கிற நிர்பந்தம். ஆனால் நாளடைவில் என்னுடைய கோபமும், பிடிவாதமும் என்னை அங்கிருந்து விரட்டியடித்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் மாணவர்கள் தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. தாய்மொழியில் பயிலுவது எங்களுடைய பிறப்புரிமை. யாரும் எம்மீது அந்நிய மொழியை திணிக்க அனுமதியோம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

தமிழை இரண்டாவது பாடமாக எடுக்கவும் தயங்கி வந்த காலம் மறைந்து தமிழ்வழி கல்வி மற்ற வழி கல்விக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என்கிற நிலை பரவலாக குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்படத் துவங்கியது. நாளடைவில் அதுவே நிலைப்பெற தாய்தமிழ்க்கு அதற்குரிய முக்கியத்துவம் உருவாக ஆரம்பித்தது.

தமிழில் பிழையின்றி பேசுவது, எழுதுவது என துவங்கி தூய தமிழில் பேசுவதையும் ஒருவித கவர்ச்சிக் கலையாகவே மாற்றினர் திராவிட கட்சி பேச்சாளர்கள். பாமர மக்களையும் தங்களுடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலால் கவர்ந்து அரசியல் கூட்டங்களை இலக்கிய கூட்டங்களாக மாற்றிய பெருமை அண்ணா, மு.க, நாஞ்சிலார், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சாரும். அதன் பிறகு திரைப்படப் பாடல்கள் வழியாக தூய தமிழை பட்டித் தொட்டிகளிலெல்லாம் பரப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு தூய தமிழில் பேச, எழுத வெகு இலகுவாக வருகிறது என்றால் அதிசயமல்ல என்றாலும் இது ஒரு வரவேற்கத்த மாற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வலைப்பதிவுகளில் இன்றைய தலைமுறையினர் எழுதும் அழகைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். நாளுக்கு நாள் வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் தங்களுடைய எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு இப்போதெல்லாம் கணினியில் தமிழை நேரடியாக எழுத முடிகிறது என்பதும் ஒரு காரணம் என்றாலும் இதுவும் ஒரு சந்தோஷமான விஷயம்.

எழுதும் விஷயம் எதுவாக இருந்தாலும் அதை படைக்கும் நேர்த்தி, எந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத கருத்தானாலும் அதையும் இறுதிவரை பிடித்து வாதிடும் அழகு, உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்.

வலையுலகத்தில் மட்டுமல்லாமல் இன்றைய வார, மாத இதழ்களில் வெளிவரும் கதையல்லாத கட்டுரைகளிலும்தான் எத்தனை நேர்த்தியாக இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மனதிலுள்ளவற்றை எடுத்துரைக்கின்றனர்.

இந்த வாரத்து விகடனில் வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

தற்போது படப்பிடிப்பில் உள்ள ஜெயம் ரவியின் 'தேடிவந்த காதலி' திரைப்படத்தின் இயக்குனர், ரவியின் மூத்த சகோதரர் ஓரிரு வரிகளில் கதையின் கருத்தை இப்படி கூறுகிறார்:

'ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சு நடந்தேதான். ஆனா இருபது வயசுலயும் நீ என் கைய விடாம பிடிச்சு வச்சிருக்கியே, இது நியாயமா?'

'ஆயிரம் ருபாய்ல 'ஆலன்ஷோலி ஷர்ட்' எடுத்து கொடுத்து 'ஜம்முனு எக்ஸிக்யூடிவ மாதிரி போடா'ன்னு பெருமையா சொல்றார் அப்பா. ஆனா மகனுக்கோ 150 ரூபாய்ல பாண்டிபஜார்ல 'போக்கிரி சட்டை' வாங்கி போட்டுக்கணும்னு ஆசை.'

இது இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடைபெறக்கூடிய தலைமுறை போராட்டம்தான்.. ஆனால் எத்தனை அழகாக, சுருக்கமாக நினைவில் நிற்பதுபோல் சொல்லப்பட்டுள்ளது!!

அதே இதழில் வேறொரு கட்டுரையில் இன்று பிரபலமாகவுள்ள ஓவியர் ஷ்யாம் தன்னுடைய இளைய பருவ சிரமங்களை நினைவு கூற்கிறார். தான் பெற்றுள்ள வெற்றிக்கு இறைவன்தான் காரணம் என்பதை மிக அழகாக கூறுகிறார்:

'என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் கடவுள்தான் என்பது என் நம்பிக்கை. எனக்கான வாய்ப்புகளை அவர் என் வாழ்க்கைப் பாதையில் விதைத்துக்கொண்டே செல்ல, நான் அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். கஷ்டப்படத் தயாராக இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னைக் கைவிடவில்லை.'

வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை இத்தனை எளிமையாக, அழகாக, சுருக்கமாக சொல்லிவிட முடியுமா என்ன?

இன்றைய தலைமுறையின் கைகளில் தமிழ் மேலும் அழகு பெறுகிறது என்பதில் எள்ளளவும் பொய்யில்லை...

********

29 ஜூன் 2007

எட்டுன்னு சொன்னா எட்டணுமில்ல?

ஆறு விளையாட்டுக்கப்புறம் இப்ப எட்டா?

அதென்னவோ இந்த மாதிரி அழைப்புகள் வரும்போதெல்லாம் வெளியூர்லயே இருக்கேன்..

முதலில் ராகவன், பிறகு மணியன், இறுதியாக உஷா....

அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...

உடனே எழுத முடியாமல் போனதற்கு காரணம் வெளியூரில் இருந்ததுதான்.

எனக்குள் ஒருவன் என்று என்னுடைய வக்கிரங்களை அல்லது விசித்திரங்களை, எழுதியது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது......

அதன் பிறகு அழகுகள் ஆறு என என்னை ஈர்த்த அழகான நினைவுகளைப் பற்றி எழுதியது அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட்டு பார்க்க உதவியது...

ஆனால் சாதனைகள் எட்டு என்றால் சற்று மலைப்பாகத்தான்....

சாதனைகள் என்பதைவிட என்னுடைய வலிமைகள் (Strengths) என நான் நினைப்பதைப் பற்றி எழுதினால் சரியாயிருக்குமோ என்ற ஒரு எண்ணம்..

முயன்றிருக்கிறேன்...

சுயதம்பட்டம் அடிப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான் அல்ல!

அடக்கி வாசித்தே பழகிப்போனவன்...

ஆனால் இது சங்கிலித் தொடர் விளையாட்டல்லவா, ஆகவே ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாய் சொல்லலாம் என்ற முடிவுடன்...

1. கர்மமே கண்ணாயிருப்பது...

சாதாரணமாக ஒரு வேலையையோ அல்லது பொறுப்பையோ ஏற்றுக்கொண்டால் அதை முடிக்காமல் விடுவதில்லை என்கிற ஒரு வைராக்கியம் சிறுவயது முதலே இருந்ததாக என் பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன்... இப்போதும் அப்படித்தான்... ஒருவேளை அது என்னுடைய அறிவுக்கோ அல்லது திறமைக்கோ அப்பாற்பட்டதாக கூட இருந்திருக்கலாம்... ஆனால் நீயாச்சு, நானாச்சு என்கிற ஒருவித பிடிவாதத்துடன் எதையும் முயன்று பார்த்துவிடுவதுண்டு....

2. என்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பது... பொறுமையுடன்..

நான் நட்ட செடி இன்றே பூக்கணும் என்கிற மனநிலையுடன் எதற்கும் அவசரப்பட்டதில்லை. இதை என்னுடைய பலஹீனம் என்று பலரும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கென்னவோ நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கி நின்றதுண்டு. அது அலுவலக பதவி உயர்வாக இருக்கலாம்... அல்லது சொந்த வாழ்க்கையில் நான் கைகொள்ள நினைத்த சொத்துபத்தாக இருக்கலாம்.. எதையும் அடித்துபிடித்து அடைய முயன்றதில்லை...

3. பிறர் வம்புக்கு செல்லாமல் இருப்பது..

ஆனால் வந்த வம்பை விடுவதில்லையா என்று கேட்டால்... அதிலும் முயன்ற அளவுக்கு தவிர்க்கவே முனைந்திருக்கிறேன்... நான் அதீதமாக உணர்ச்சிவசப்படுபவன் என்கிற முத்திரை குத்தப்பட்டவன் என்பதாலும் இத்தகைய ஒரு மனப்பான்மையை சமீபகாலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறேன்...

4. சரி என்று கருதுவதற்காக இறுதிவரை போராடுவது...

என்னுடைய உள்மனதில் சரி என்று நினைப்பதில் உறுதியாய் நிலைத்திருப்பது ஒருவிதத்தில் பிடிவாதம் என்று பலருக்கும் தோன்றினாலும் அதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். இதனாலேயே பலருடைய வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க நேர்ந்தாலும்... இது தொடர்கிறது.. கட்டையில் ஊறிப் போன ஒன்றாயிற்றே.. அதை எப்படி விடுவது?

5. வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையுடன் சந்திப்பது..

வெற்றியில் வானம் வரை மகிழ்வதிலும் தோல்வியில் பாதாளம் வரை வீழ்வதிலும் நம்பிக்கையில்லாதவன்... என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்துள்ள பல தோல்விகளும் என்னை அவ்வளவாக பாதிக்காமல் இருந்ததற்கு காரணம் இந்த மனப்பாங்குதான்... இது மரணம் வரை தொடர வேண்டும் என்று ஆசைதான்... உடலில் ஏற்படும் பலஹீனம் மனத்தளவில் வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் இருக்கத்தான் செய்கிறது... பார்ப்போம்... தள்ளாத வயதில் பிள்ளைகளும் கைவிட்டுவிட சோர்ந்துபோன பலரை நான் கடந்து வந்த பாதையில் சந்தித்ததன் விளைவோ என்னவோ அதற்கும் என்னை நானே தயார் செய்துக்கொள்கிறேன்...

6. எந்த ஒரு சூழலிலும் முடிந்த அளவுக்கு நிதானம் இழக்காமல் இருப்பது... (இதில் சமீபகாலமாக சற்று இறங்கி வந்துள்ளதை உணர்கிறேன்...)

இது கயிற்றின் மீது நடப்பதுபோலத்தான்.. சங்கடமான சூழலிலும் முகத்தில் அதை காட்டாமல் இருப்பது என்பது எளிதல்லவே... நானும் எல்லாவித ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போனவன்தானே.. ஏன் எப்போதும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று உன்னை நீயே கட்டிப்போடுகிறாய் என்றெல்லாம் என் உள்மனது அவ்வப்போது இடித்தாலும் இன்றுவரை, இயன்றவரை நிதானம் இழக்காமல் இருக்கத்தான் முயல்கிறேன்... சிலமுறை என்னையுமறியாமல் இழந்ததுண்டு...

7. அலுவலகத்தையும் குடும்பத்தையும் அதனத்தன் இடத்திலேயே வைத்திருப்பது...

குறிப்பாக என்னுடைய அலுவலக தோல்விகள் என்னுடைய குடும்ப வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருப்பதில் முனைப்பாய் இருந்திருக்கிறேன்... அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்கு வரும் டிபிஆர் வெறும் ஒரு குடும்பத்தலைவனாக மட்டுமே இருந்திருக்கிறான். அலுவலகத்திற்கு வெளியில்தான் என்னுடைய உலகமே இருந்து வந்துள்ளது என்றாலும் மிகையாகாது... அதனால்தானோ என்னவோ தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சகோதரர்கள் என்ற எந்த உறவுகளையும் இழந்துவிடாமல் இருக்க முடிந்திருக்கிறது... நல்லநாள் பொழுதுகளில் உற்றார் உறவினருடன் அவர்களுள் ஒருவனாக கலந்துவிட முடிந்திருக்கிறது... அலுவலக அதிகாரத்தை குடும்பத்தில் காட்டாமல் இருக்க முடிந்திருக்கிறது...

8. இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைத்திருப்பது...

சிறுவயதில் தாத்தாவின் அரவணைப்பில், பிறகு மாணவப் பருவத்தில் குருமார்களின் வழிகாட்டுதலில், விடுதியில் வளர்ந்ததாலோ என்னவோ என்னுடைய உள்மனதில் இந்த இறை நம்பிக்கை வெகு ஆழமாக ஊன்றிப்போனது... என்னுடைய படிப்பும் அறிவு வளர்ச்சியும் அந்த நம்பிக்கையை எந்த அளவிலும் குறைத்துவிடவில்லை.. சொல்லப் போனால் அதை மேலும் வளர்த்துள்ளது என்பதுதான் உண்மை... இறை சிந்தனைகளை அறிவு பூர்வமாக சிந்திப்பதில் பயனில்லை என்பதில் வெகு ஆழமான நம்பிக்கையுள்ளவன் நான்... நான் சார்ந்திருக்கும் மதத்தின் அருமைகளை, அதன் உள்ளர்த்தங்களை உணர்ந்திருக்கும் நான் மற்ற மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் உணர்வுபூர்வமாக மதிப்பதிலும் உறுதியாய் இருப்பவன். மதங்களை விட மனங்களே மேன்மையானவை என்பதில் நம்பிக்கையுள்ளவன்... அதனால்தானோ என்னவோ என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்த பல தோல்விகளையும், சோதனைகளையும், இன்னல்களையும் வெற்றிகொள்ளும் ஒரு சக்தி, ஒரு மன உறுதி எனக்குள் இருந்து வந்திருக்கிறது என்று கருதுகிறேன்...

இனி விளையாட்டு விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும்...

எல்லாம் சரி... இந்த மூனாவது விதிதான் இடிக்குதே.. யாரை அழைக்கிறது?

அதுவும் எட்டுப் பேரை?

அதிலும் இதுவரை இந்த தொடர் விளையாட்டில் பங்குபெறாதவர்களை...!

கடந்த இருவாரங்களாக தொடர்ந்து தமிழ்மணம் வர இயலாமற்போன இந்த சூழலில் கண்களை மூடிக்கொண்டு சில பெயர்களை பட்டியலிடுகிறேன்...

1. சிவஞானம்ஜி
2. மா.சிவக்குமார்
3. ஜோ
4. முத்து தமிழினி
5. வினையூக்கி
6. துளசி
7. ரஷ்யா ராமநாதன்
8. கோவி. கண்ணன்..


******

01 ஜூன் 2007

அகாலமாய் இன்னும் ஒரு மரணம்...


மரணம் ஒரு கள்வனைப் போல் வரும்...

சொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும் இன்றி....

எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை...!

ஆம்!

அப்படித்தான் வந்தது... இன்னும் ஒரு மரணம்... அகாலமாய்...

மிக இளைய வயதில்.... குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் எதிர்பார்த்திராத நேரத்தில்...

தலைவலி, காய்ச்சல் என்று ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத....

அலுவலகமே தன்னுடைய வாழ்க்கை என்றிருந்த...

ஐம்பத்து மூன்று வயது மட்டுமே நிறைந்த...

என் அருமை நண்பர்களுள் ஒருவரின் அகால மரணம்...

கடந்த வாரத்தில் ஒருநாள்....

சென்னையிலிருந்த எங்களுடைய கிளைகளில் ஒன்று பரபரப்பாக இருந்த நேரம்...

'சார் கொஞ்சம் கிட்டினஸ் மாதிரி இருக்கு... டைனிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்...'

'தாராளமா தர்மலிங்கம்... போங்க.. ஒங்க சீட்ட நா பாத்துக்கறேன்...'

சென்று படுத்தவர் அடுத்த சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில்...

இடையில் சென்று பார்த்து வருகிறார் நண்பர்... ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எப்படி எழுப்புவது என்ற தயக்கம்... திரும்பி வந்து தன்னுடைய அலுவலில் மூழ்கிப் போகிறார்...

பகல் உணவு இடைவேளை...

மீண்டும் சென்று பார்க்கிறார்...

அப்போதும் அதே நிலை....

முகம் லேசாக வெளிறிய தோற்றம்... கலக்கத்துடன் தன்னுடைய மேலாளரை துணைக்கு அழைக்கிறார்...

அவருடன் கிளையிலிருந்த பலரும் விரைகின்றனர்....

ஒருவர் தட்டியெழுப்ப முயல்கிறார்... பதிலில்லை.... பதற்றத்துடன் மேலாளர்.... 'மூச்சு விடறா மாதிரி இருக்கே... மயக்கமாருக்கும்... கொஞ்சம் தன்னி தெளிப்பமா?' என்கிறார்...

ஊஹூம்... பலனில்லை... அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்...

'சாரிங்க... சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால அவருக்கு ப்ரெய்ன் ஹெமரேஜ் ஆயிருக்கு.... ப்ர்ஷர் அளவுக்கு மீறி ஆச்சினாத்தான் இது பாசிபிள்... அவர் பி.பிய கண்ட்ரோல் பண்ணாம விட்டுருப்பார்.... Let us try... ஆனா இப்ப எதுவும் சொல்ல முடியாது...'

அவரை உறங்கச்சொல்லி அனுப்பியவர் கலங்கிப் போகிறார்... நானே இவரோட மரணத்துக்கு காரணமா போய்ட்டனோ...

சேச்சே... ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்... உடனிருந்தவர்கள் தேற்றுகின்றனர்...

மனைவி, மகன் மற்றும் மகள் என்ற சிறிய குடும்பம்.... மகன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்து சில மாதங்கள்... மகள், முதல் வருடம் எம்.பி.பி.எஸ்சில்..

ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை... இறுதி மூச்சு....

எப்போதும் புன்னகையுடன் தன்னுடைய பிரச்சினைகளை திரை போட்டு மறைக்கும் பழக்கமுள்ளவர்... அடிக்கடி தலைவலித்திருக்கிறது... 'டாக்டர போய் பாக்கலாம்...' என்று அறிவுறுத்தியிருக்கின்றனர் நண்பர்களும் குடும்பத்தினரும்....

'அதெல்லாம் ஒன்னுமில்ல.. ரெண்டு மாத்திர போட்டா சரியாயிரும்...'

'போன ஒரு வருசமா எப்படியும் ப்ரஷர் 180 வரைக்கும் போயிருக்கும்... அவர் கவனிச்சிருக்க மாட்டார்...' என்றனர் மருத்துவர்கள்...

நம்மில் பலரும் இந்த ரகம்தான்...

தலைவலி என்றால்.... மாத்திரை போட்டுக்கொள்வது... அதைத் தவிர வேறொரு நோயும் இருக்க வாய்ப்பில்லை என்கிற மெத்தனம்..

சிலருக்கு சோம்பல் என்றால் வேறு சிலருக்கு பணத்திற்கு எங்கே போவது என்கிற கவலை... சின்னதையெல்லாம் பெரிசாக்கி காச கறந்துருவாங்க என்கிற அர்த்தமில்லாத அச்சம்...

என்னுடைய நண்பர் ஒரு வங்கி அதிகாரி... சுமாருக்கும் சற்றே அதிகமான பொருளாதார வசதியுள்ளவர்.... 'ஆனா அப்பாவோட ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்... எங்க யாருக்கும் சரியா தெரியாது...'

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மரித்த என்னுடைய மற்றொரு நண்பரின் குடும்பத்தினர் கூறிய அதே புகார்... அதே ஆதங்கம்...

இதிலும் நம்மில் பலர் இவரைப் போன்றுதான்.. என்னையும் சேர்த்து...

என்னைத் தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாது என்கிற எண்ணம்... கர்வம் என்றும் சொல்லலாம்..

'என் வய்ஃபுக்கு ஒன்னும் தெரியாது சார்... எவ்வளவு வந்தாலும் செலவழிச்சிருவா...அவளுக்கு தெரியாம சேத்தாத்தான் உண்டு...'

நண்பர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்கிற ஆண்கள் எத்தனை பேர்... அதில் நீங்களும் இருக்கலாம்... நானும் இருக்கலாம்...

திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிறது அரசு...

ஆனால் அந்த சிறிய குடும்பத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்... அவநம்பிக்கைகள்....

எத்தனை ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்துப் போகின்றன!

இது தேவையா?

நாளை நடக்கவிருப்பதை யாரறிவார்?

நிச்சயமில்லாத அந்த நாளை எதிர்கொள்ள நம்மை மட்டுமல்லாமல் நம் குடும்பத்தாரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்களை... குறிப்பாக நம்முடைய பொருளாதார ரகசியங்களை பகிர்ந்துக்கொள்வோம்...

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

இந்த வையகத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.. குறைந்த பட்சம் நம் குடும்பத்தினரிடமாவது பகிர்ந்துக்கொள்வோம்..

நண்பர் தர்மலிங்கத்தின் அகால மரணம் யாருக்கு பாடம் புகட்டியுள்ளதோ இல்லையோ என்னைப் போன்ற, என் வயதொத்த நண்பர்களுள் பலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலித்திருக்கிறது...

அன்னாரின் ஆன்மசாந்திக்காகவும்... அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகன் மற்றும் மகளுக்காகவும் பிரார்த்திக்க உங்களை அழைக்கிறேன்......


***

22 மே 2007

காலம் மாறிப் போச்சு

பின் தூங்கி பின் எழுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம்.

உங்களைப் போலவே பலரும் உள்ளனர்.

சோம்பேறி, ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன்... இப்படி எத்தனை பட்டங்கள்?

கவலைப்படாதீர்கள்.

டென்மார்க் நிறுவனம் ஒன்று சமீபத்தில் காலையில் எழுந்து எட்டுமணிக்கெல்லாம் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கெதிராக ஒரு இயக்கத்தையே துவக்கியுள்ளது.

B-Society என்ற இணையதளம் வழியாக முன்தூங்கி முன்எழுபவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே துவங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.

அதிகாலையில் எழுந்து எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மனி வரையிலும் வேலை செய்பவர்களுக்கும் காலையில் சாவகாசமாக எழுந்து பதினோரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை வேலை செய்பவர்களுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று வாதாடுகின்றனர் இதன் இயக்க உறுப்பினர்கள்.

உண்மைதானே!

இந்த இயக்கம் துவக்கப்பட்ட நான்கே மாதங்களில் 4,800 அங்கத்தினர்கள் சேர்ந்துள்ளனர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது இந்த நிறுவனம்!

இதே இயக்கம் நம் நாட்டில் துவக்கப்பட்டால் இன்றைய ஐ.டி. தலைமுறை இதில் பெருமளவில் சேர முன்வருவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

டேனிஷ் குடும்ப நல அமைச்சர் கரீனா க்ர்ஸ்டென்சனும் இந்த இயக்கத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறாராம். 'அலாரம் கடிகாரத்திற்கு அடிமையாக வாழ்ந்தது போதும். நம்முடைய வாழ்க்கை அமைதியாகவும் நம் விருப்பத்திற்கேற்பவும் அமைய இந்த விடுதலை நிச்சயம் தேவை.' என்கிறார் அவர்!

இந்த B-Society அமைப்பின் தலைவர் கமிலா க்ரிங் இந்த துறையில் ஒரு டாக்டர் பட்டத்தையே பெற்றிருக்கிறாராம்! அவருடைய இயக்கத்தில் இத்தகைய பள்ளியே இயங்கி வருகிறதாம். இங்கு வகுப்புகள் நண்பகலில்தான் துவங்குகிறதாம்!

இது டென்மார்க்கிலிருந்து ஸ்வீடன், ஃபின்லேண்ட் மற்றும் நார்வே போன்ற நாடுகளுக்கும் வேகமாக பரவுகிறதாம்!

இதை ஏன் நம்முடைய நாட்டிலும் துவங்கக் கூடாது?

அதிகாலையில் எழுந்து அழுது வடிந்த முகங்களுடன் பள்ளிக்கு செல்லும் நம்முடைய குழந்தைகளுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்!

ஏன் நம்முடைய இளைஞர்களுக்கும்தான்! படித்து முடித்து பணிக்கு செல்லும் வயதிலும் என்னுடைய மகளை காலையில் ஏழரை மணிக்கு எழுப்ப எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது!

ஆகவே இந்த இயக்கத்தை துவக்கிய கமிலா க்ரிங் அவர்களை இந்தியாவுக்கு வருகை தருமாறு ஒரு வேண்டுகோள் விடுத்தால் என்ன என்று தோன்றுகிறது:-)