நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் பின்னணி என்ன?

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே மிகவும் நலிவடைந்த வங்கிகளாகும். 

நிரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் செய்துக்கொண்டிருந்த மோசடியை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாகப்போகிறது என்கிறார்கள்.  இந்த மூன்று வங்கிகளுடைய ஒட்டுமொத்த வைப்பு நிதி மற்றும் அவை வழங்கியுள்ள கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய ஸ்டேட் வங்கிக்கு அடுத்த வங்கியாக உருவெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த வாராக்கடன்களின் அளவும் நாட்டிலேயே அதிகமானதாகத்தான் இருக்கும்.  இவை மூன்றுமே வட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள வங்கிகளாகும். இவற்றை இணைப்பதன் மூலம் ஒரே நகரத்தில் ஏன் ஒரே சாலையில் கூட பல கிளைகளைக் கொண்டுள்ள வங்கியாகவும் மாறும் சூழல். 

அடுத்து தென் இந்தியாவைச் சார்ந்த அதுவும் ஒரே மாநிலத்தில் தலைமையலுவலகத்தைக் கொண்டிருக்கும் கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள். மேலே குறிப்பிட்ட வட இந்திய வங்கிகள் அளவுக்கு மோசமான நிலைமையில் இவ்வங்கிகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே மாநிலத்தைச் சார்ந்தவை என்பதால் பல கிளைகளை மூடவோ இடமாற்றம் செய்யவோ வேண்டியிருக்கும். 

மூன்றாவது வங்கி யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய தேவையிருக்காது. ஆனால் இதுவரை சுமாராக இயங்கி  வரும் யூனியன் வங்கியின் நிதிநிலமை மற்ற இரு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் மோசமான நிதிநிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கி அதிகாரிகளின் கையே ஓங்கி நிற்கும். ஏனெனில் இதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையிலும் மற்ற இரு வங்கிகளும் சிறியவை.

நான்காவது இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. ஒன்று மேற்கு வங்கத்தைச் சார்ந்தது. இன்னொன்று தமிழகத்தைச் சார்ந்தது.   ஆனால் அலகாபாத் வங்கியின் மிக அதிக அளவிலான வாராக்கடன்கள் இந்தியன் வங்கி ஈட்டக்கூடிய மொத்த லாபத்தையும் விழுங்கிவிடும் போலுள்ளது. 

இந்த பத்து வங்கிகளை இணைத்து வர்த்தக அளவில் நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் இந்திய வங்கித்துறையின் செயல்பாடுகளில் குறைகளாக உலக வங்கி குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இணைப்புக்குப் பிறகும் தொடரத்தானே போகிறது.

1. வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு.  இது என்றும் தொடரும் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

2. வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை . இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள்தானே இணைப்புக்குப் பிறகும் இந்த வங்கிகளை வழிநடத்தப் போகிறார்கள்? அப்படியானால் அவர்களுடைய கணிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்படவா போகிறது? வங்கிகள் பெரிதானால் அவர்களுடைய கடன் வழங்கும் திறன் பெருகும் வங்கிகளும் வலுவடையும் என்கிறார் நம்முடைய நிதியமைச்சர். 

நூறு ரூபாயை வைத்துக்கொண்டு இலாபம் ஈட்ட தெரியாதவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தால் சரியாகிவிடும் என்பதுபோல் இருக்கிறது. மேலும்  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வாணம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்களே அதுபோல் உள்ளது நிதியமைச்சரின் இந்த கணிப்பு.

ஆக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள இரண்டு குறைபாடுகளுமே வங்கிகளின் இணைப்புக்குப் பிறகும் தொடரத்தான் போகின்றது.

வங்கிகளின் இணைப்புக்கு இது ஒரு காரணமாக நிதியமைச்சர் கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன். இணைக்கப்படவுள்ள வங்கிகளுடைய சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ததில் நான் கண்டது இதுதான். இவை வழங்கிய மொத்த கடன்களில் யாருக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள படத்தை  பார்த்தாலே புரிந்துவிடும்.



சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி வங்கிகளிலுள்ள மொத்த வாராக்கடன்களில் கார்ப்பரேட் குறிப்பாக சேவைத் துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்தான் அதிகம் அதாவது 75 விழுக்காடு! இதையும் வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சுமார் 50 விழுக்காடு என்ற உண்மையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

சிறு சிறு வங்கிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே விவசாயத்துக்கும் சிறு குறு தொழில்களுக்கும் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக கடன் வழங்கி வரும் இந்த வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் வங்கிகளானால் யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனறு நினைக்கிறீர்கள்? அது நிச்சயம் விவசாயம், சிறு குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களாக இருக்க வாய்ப்பேயில்லை. இதே நிலைதான் தனிநபர் கடன்களுக்கும் ஏற்படும். 

தற்போது வங்கிகளுடைய முதலீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி பார்த்தால் தனித்தனியாக குறைந்த அளவு முதலீட்டுடன் இயங்கி வரும் இந்த வங்கிகளால் பெரிய அளவில் கடன் தேவைப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் கோடி கடன் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  இப்போதுள்ள சூழலில் அத்தனை பெரிய கடனை தனியாக வழங்க பெரும்பான்மையான வங்கிகளால் முடியாது. அந்த சூழலில் கார்ப்பரேட் நிறுவனம் பிரதான கணக்கு வைத்திருக்கும் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து கூட்டாக அந்த கடனை வழங்க ஒரு அமைப்பை (consortium) ஏற்படுத்தும். மொத்த கடன் தொகையை தங்களுடைய தகுதிக் கேற்ப பிரித்துக் கொள்ளும். இதனால் கடன் வழங்குவதிலும் அதன் பிறகு கடனை நிர்வகிப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டாக மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கடன் பெறும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்  தனித்தனியாக இயங்கிவரும் சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்பதாலும் இந்த வங்கி இணைப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதனால் வங்கிகளின் வர்த்தகம் வேண்டுமானால் படு வேகமாக வளரும். ஆனால் அந்த வர்த்தகம் வலுவானதாக பாதுகாப்பானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதையே தான் பாதிக்கப்படவுள்ள வங்கிகளின் வங்கி ஊழியர் சங்கங்களும் கூறுகின்றன. 

மேலும் வளர்ந்துவிட்ட வங்கி முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்பதும் கேள்விக்குறி.

மத்தியில் ஆளும் பாஜகவின் தேவையும் இதுவாக இருக்கலாம். ஏனெனில்  கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள். 

இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட போகிறவர்கள் வங்கி ஊழியர்கள். பத்து வங்கிகளை இணைத்து அதுவும் நாட்டின் ஒரே பகுதியில் இயங்கி வரும் வங்கிகள் இணைக்கப்படும்போது நிச்சயம் பல கிளைகள் ஒருங்கிணைக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்பே இல்லை. யாருக்கும் பணியிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் கூறினாலும் பணியிழப்பு ஏதாவது ஒரு வகையில். அது கட்டாய அல்லது விருப்ப ஓய்வாக இருக்கலாம், அல்லது மறைமுக பணியிழப்பு அதாவது வலுக்கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் ஊழியர்களே பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படலாம். பணியிழப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அது இழப்புத்தானே?

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் சிக்கலை ஏற்படுத்தலாம் ஆனால் மொதுமக்களுக்கு அது நல்ல பலனையே தரும் என்று பாஜக பேச்சாளர் கூறினார். இதுதான் அந்த கட்சி தலைமையின் நிலைப்பாடாக இருக்கலாம். 

ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நல்ல நிலையில் இயங்க வேண்டுமென்றால் முதலில் அதில் பணியாற்றும் ஊழியர்களுடைய நலனில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டியது அவசியம், மன நிறைவு இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களால் பணியாற்றும் நிறுவனத்திற்கும் எந்த பலனும் கிடைக்காது அதனுடைய வாடிக்கையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்க முடியாது. நாட்டின் மிகப் பெரிய சேவை (srvices) நிறுவனங்களான பொதுத்துறை வங்கிகளின் எஜமானர்களான இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் நாளை இருப்பதில்லை. அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல. சிறையில் தள்ளுபவர்களே பிற்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடுவதை கண்கூடாக காண்கிறோம்.

இதை உணர்ந்து இணைக்கப்படும் வங்கிகளை இணைப்புக்குப் பிறகு நிர்வாக பொறுப்பில் அமர்த்தப்படும் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் 

தலையீட்டுக்கு அஞ்சி வங்கிகளை பாதிக்கும் முடிவுகளை எடுக்கலாகாது. அது நாளை உங்களையே பாதிக்கலாம். நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ உங்களை காப்பாற்ற வரப்போவதில்லை.

இணைக்கப்படவிருக்கும் வங்கிகளில் யூனியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற ஏழு வங்கிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவை சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.

*********

11 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணி.

வாராக் கடன்கள் 

2001ம் ஆண்டு வரை ஒரு கடன் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டித் தொகையானது அது வாடிக்கையாளரால் திருப்பி செலுத்தப்பட்டாலும் நிலுவையில் இருந்தாலும் அது வங்கியின் வருமானமாக கருதப்பட்டது. இதன் விளைவாக வங்கிகள் தங்களுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டி வந்த இலாப தொகைகள் உண்மையிலேயே ஈட்டப்பட்டதுதானா என்கிற ஐயம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட துவங்கியது. மேலும் பற்று வைக்கப்பட்ட வட்டித் தொகைகளை வசூலிப்பதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய தணிக்கைகளில் கண்டுபிடித்தது.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் 31.3.2001ல் ஒரு சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பியது. அதில்  வட்டி, அல்லது தவணைத் தொகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் குறையுள்ள கணக்குகளாக I(Substandard)கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட வட்டி தொகைகள் வங்கியின் இலாப கணக்கில் வருவாயாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்த அதிரடி உத்தரவால் நாட்டில் பல வங்கிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுடைய உண்மையான நிதி நிலை வெட்ட வெளிச்சமானது. இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த  பல வங்கிகள் நஷ்ட கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. 

மேலும் இத்தகைய கணக்குகள் வாராக் கடனாக கருதப்பட்டு அவற்றில் நிலுவையிலுள்ள தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் தங்களுடைய இலாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்படவே வங்கிகளின் நிதிநிலமை இன்னும் மோசமானது. பெரும்பாலான பொதுத்துறை  வங்கிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவற்றின் முதலீடும் (capital) பெருமளவு சரியத் துவங்கியது.  வாராக் கடன்களின் அளவோ  2001 ஆண்டு இருந்த அளவிலிருந்து வளர்ந்து வளர்ந்து இப்போது ஒரு பூதாகரமான நிலையை அடைந்துள்ளதை கீழ்காணும் படத்தில் காணலாம்.  இத்தகைய கடன்களில் சுமார் 90 விழுக்காடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை.


(1 trillion=1lakh crores)


அத்துடன் வங்கிகள் தங்களுடைய முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் நிபந்தனையும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை வெகுவாக பாதிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து வங்கிகளின் வருவாய் ஈட்டும் திறனும் சரியத் துவங்கியது. விளைவு? வங்கிகளின் நஷ்டம் நாளுக்கு நாள் பெருகி சில வங்கிகளின் முதலீடு முழுவதுமாக கரைந்து போயின. 

இந்த சூழலிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கத்தான் மத்திய அரசு அவ்வப்போது மத்திய நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை வங்கிகளுக்கு முதலீடாக வழங்கத்துவங்கியது. துவக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற நிலை இப்போது இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் செலுத்தும் வரிப்பணம் இத்தகைய வங்கிகளுக்கு முதலீடாக சென்றடைகின்றன. இதன் விளைவாக வரியை நேர்மையுடன் செலுத்தும் மக்களுக்கு நேரிடையாக எவ்வித பலனும் கிடைப்பதில்லை. சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்கவோ அல்லது இயற்கை சீற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் அளிக்கவோ அல்லது விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ போதிய நிதி இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கும் மத்திய அரசு வங்கிகளின் முதலீட்டை கூட்டுவதற்கு லட்சோப லட்ச கணக்கில் வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

கடந்த நிதியாண்டில் பல பொதுத்துறை வங்கிகள் நஷ்ட நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்தாலும் இது உண்மையான நிலை அல்ல என்று பல பத்திரிகைகளும் பொருளாதார நிபுணர்களும் எழுதி வருவதை காண முடிகிறது. வாராக்கடனாக ஏற்கனவே கணிக்கப்பட்ட கணக்குகளை மறுசீரமைப்பு (restructuring) என்ற பெயரில் மறுவாழ்வு அளித்து அவற்றை இன்னும் சில மாதங்களுக்கு அதாவது அடுத்த நிதியாண்டு வரையிலும் வங்கிகள் நீட்டித்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இவற்றில் நிலுவையிலுள்ள வட்டியையோ அல்லது மாதத் தவணைகளையோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உண்மையிலேயே வசூலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. வங்கிகள் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பதை விட எழுதித் தள்ளுவதே அதிகம் என்பதை கீழுள்ள படத்தை பார்த்தாலே தெரியும்



இதுதான் இன்றை பொதுத்துறை வங்கிகளின் உண்மையான நிலமை.

ஜி20 நாடுகளில் இரண்டாவது மிகவும் மோசமான வங்கித் துறையைக் கொண்டிருப்பது இந்தியா என்கிறது உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியமான காரணங்களாக உலக வங்கி முன்வைப்பது வங்கிகளின் கடன் கொள்கைகள்தானாம். அதாவது இந்திய வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இல்லை என்றும் பெரும்பாலான வங்கி செயல்பாடுகளின் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இது எனக்கு தெரிந்தவரை உண்மை தான். இன்று வங்கிகளில் உயர்பதவியில் அமர்ந்திருக்கும் பல அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தயவாலும் பரிந்துரையாலும் அந்த பதவியை அடைந்தவர்களே. ஆகவே ஆட்சியாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது இப்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. வங்கிகள் எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ளவர்களின் தலையீடு இருந்து வந்ததை மறுப்பதற்கில்லை. 

இத்தகைய சூழலில் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது வியப்பளிக்கிறது. 

அதை நாளை பார்க்கலாம்.....

10 செப்டம்பர் 2019

வங்கிகள் இணைப்பின் பின்னணி என்ன?

1969 ஆம் ஆண்டு முதன் முறையாக நாட்டில் அப்போது இயங்கிவந்த  பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் (50 இலட்சத்திற்கும் அதிகமான வைப்பு நிதி (Deposit) கொண்டிருந்த) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் பின்னால் அரசியல்தான் இருந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய வேண்டும் என்றோ அல்லது ஏழை எளிய மக்கள் எளிதாக கடன் பெற வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை என அப்போதே பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பதினோரு ஆண்டுகள் கழித்து மேலும் ஆறு (அதாவது ரூ.200 இலட்சம் வைப்பு நிதி கொண்டிருந்த)வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

தேசியமயமாக்கப்பட்டபோது அரசால் முன்வைக்கப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானது என்னவென்றால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களும் எளிதில் கடன் பெற முடிவதுடன்  வங்கி சேவைகள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் என்பது. 

இந்த இரு நோக்கங்களும் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.:

1. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை சுமார் 8,500லிருந்து 1.45,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றுள் சுமார் 90% கிளைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் என்றால் மிகையல்ல.



2. சுமார் 65000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி கிளை என்ற 1969ம் வருட நிலையிலிருந்து சுமார் 14,000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளை என்ற அளவுக்கு வங்கிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இவற்றுள் ஐம்பது விழுக்காடு கிளைகள் கிராம மற்றும் சிறிய நகர்ப்புறங்கிளில் செயல்படுகின்றன. 

3.1969ம் ஆண்டு வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் வங்கிக் கடன் என்ற நிலை மாறி விவசாயம், சிறு, குறு தொழில்கள், சில்லறை வணிகம் என  நாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிகளை அணுகி மிகுந்த சிரமம் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற நிலை உருவானது.

4. வங்கிகளில் கணக்கு துவங்கும் பழக்கமும் மிகப் பெரிய அளவில் பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில்  வங்கி சேமிப்பு (DEPOSIT) தொகை ரூ.1,24,000 billion (1 Billion=100 crores) என்ற எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தொகையில் நீண்ட கால வைப்புத்தொகை (fixed deposits) ஐம்பது விழுக்காட்டிலிருந்து சுமார் தொன்னூறு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள வங்கிகள் மீது குறிப்பாக பொது வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை காட்டுகிறது எனலாம். 

5. இதே போன்று வங்கிகள் கடனாக வழங்கும் தொகையும்  ரூ.1,05,000 billion அளவுக்கு  உயர்ந்துள்ளது.




சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் பெருமளவு உதவிசெய்துள்ளன என்பது உண்மைதான். 

ஆனால் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்பு சிறிய அளவில் கட்டுப்பாடுடன் இயங்கிவந்த தனியார் வங்கிகளின் கிளைகள் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியதாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய வணிக வளர்ச்சியாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன என்பதும் உண்மை. இன்று பொதுத்துறை வங்கிகளில் பல பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதற்கு இத்தகைய அபிரிதமான வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகின்.றது.

மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம்  மிகப் பெரிய அளவிலான வைப்புத் தொகைகளையும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டித் தந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகைகளுக்கு நியாயமான அளவிலான வட்டி அளிப்பதற்கு அவற்றை அதிக அளவில் கடனாக வழங்க வேண்டிய அவசியமும் வங்கிகளுக்கு உருவானது. இலட்ச கணக்கில் கடன் வழங்கி வந்த வங்கிகள் கோடிக் கணக்கில் வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இது மேலும் மேலும் பலுகிப் பெருகி இன்று ஒரே நிறுவனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என கடன் வழங்கும் நிலையை நாட்டுடமையாக்கப்பட வங்கிகள் அடைந்துள்ளன. 

கோடிகள் ஆயிரக் கணக்கில் பெருகி இன்று இலட்சம் கோடி என்ற பெரும் தொகைகயை நாட்டிலுள்ள வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களாக இந்த வங்கிகள் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்த நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களாக  (multi-national ompanies) உருமாறியுள்ளன என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் வங்கிகள் வழங்கிய கடன்களே என்றால் மிகையாகாது.

வங்கிகளிடமிருந்து எளிதாக பெற்ற கடன் தொகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், உலகளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க துவங்கின. இதன் விளைவாக வங்கிக் கடன்களை திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் விளைவாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக உருமாற வங்கிகளின் வருமானம் சரியத் துவங்கியது...

நாளையும் தொடரும்

14 ஆகஸ்ட் 2013

சேரனுக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி செய்கிறார்?

Don't wash your dirty linen in  Publicனு சொல்வாங்க. 

அதத்தான் செஞ்சிக்கிட்டிருக்கார் இயக்குனர் சேரனும் அவருடைய ஆத்மார்த்த நண்பர் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வரும் இயக்குனர் அமீரும்.

பிள்ளைப்பாசம் சிலரை பைத்தியமாக்கிவிடும் என்பார்கள். அது இவர் விஷயத்தில் உண்மைதான் என்று காட்டுகிறது.

இந்த விஷயத்தப் பத்தி எதுக்கு எழணும், இது அவரோட தனிப்பட்ட விஷயமாச்சேன்னுதான் இதுவரைக்கும் எழுதாம இருந்தேன். 

ஆனா போன ஒரு வாரமா ராஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இவரும் இவருடைய நண்பர் அமீரும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சேரனின் மகள் தாமினியின் காதலர் எனப்படும் சந்துருவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பேசுவதைக் கேட்டபோது என்ன ஆச்சி இவருக்கு என்றுதான் கேட்க தோன்றியது. அதைப் பற்றி எழுதினால்தான் என்ன என்றும் தோன்றியது.

இப்போது இளவயதில் காதல்வயப்பட்டு பெற்றோர் எத்தனை எடுத்துச் சொல்லியும் கேளாமல் தான் விரும்பியவரைத்தான் கைபிடிப்பேன் என்று அடம்பிடிக்கும் இளைஞர்கள் இல்லாத குடும்பம் இருக்கிறதா என்ன? கணக்கெடுத்துப் பார்த்தால் இன்று நாட்டிலுள்ள ஏன் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இத்தகைய பொருத்தமில்லாத காதல்கள் கோடிக்கணக்கில் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற நிலைதான்.

சேரன் நிலையில் இருக்கும் ஒரு தந்தை என்ன செய்திருக்க வேண்டும்?

இந்த விஷயத்தை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து இருவேறு கோணங்களிலிருந்து அணுகியிருக்கலாம்.

ஒன்று இதெல்லாம் இந்த வயதில் சகஜம் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். தாமினியைப் போன்ற இளைஞர்களுக்கு பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ இனக்கவர்ச்சியால் ஏற்படுகிற ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக கனியாமலேயே போய்விடக்கூடும். ஆகவே இதை தங்களுடைய அனுபவத்தால் உணரக் கூடிய பெற்றோர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அப்படியே தெரிய வந்தாலும் என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்றோ அல்லது அவர்களாக தங்களிடம் வந்து கூறட்டுமே என்று காத்திருப்பார்கள். 

இரண்டாவது வகை பெற்றோர் தன்னுடைய மகனோ மகளோ காதல் செய்கிறார் என்று தெரிய வந்ததுமே அதை ஊதி பெரிதாக்கி அடுத்து குடியிருப்போருக்கெல்லாம் கேட்கும்படி கூப்பாடுபோடுவார்கள். மகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். மானமே போய்விட்டது, வானமே தங்கள் மீது விழுந்துவிட்டது, ரோட்டில் நடக்கவே முடியாதபடி செய்துவிட்டாயே என்றெல்லாம் மகளை வசைபாடியதோடு நிற்காமல் அவளை வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது என்றும் அடைத்துவிடுவார்கள்.

சேரன் ஒரு ரெண்டும்கெட்டான் தந்தையாக இருந்திருக்கிறார்.

தன்னுடைய மகளுடைய முகநூலில் சந்துரு வந்து I love you என்று போட்டதைப் பார்த்துவிட்டு மகளை பெருந்தன்மையுடன் லைக் போட்டு அதை தொடர அனுமதித்திருக்கிறார். அப்போது தன்னுடைய மகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை என்பதோ அல்லது அவளுடைய காதலனுக்கு ஒழுங்கான வேலை ஏதும் உள்ளதா என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக படவில்லை. தன்னுடைய அந்த பெருந்தன்மையை மிகப் பெருமையாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறியதை உலகமே பார்த்தது, கேட்டது. 

பிறகு அவளுடைய காதலனுக்கு சரியான வேலையில்லை என்பதை கேள்விப்பட்டிருக்கிறார். அதை தன்னுடைய மகளிடமும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு அது ஒன்று பெரிய விஷயமாகப் படவில்லை. அந்த வயதில் காதலில் மூழ்கிப்போனவர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் பிரமைதான் அது. ஆனால் அது சேரனுக்கு பெரிய விஷயமாக படுகிறது.

சந்துருவை அழைத்துப் பேசுகிறார். தன்னுடைய மகளும் படித்து முடிக்க வேண்டும், நீங்களும் பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் ஆகவே ஒரு மூன்றாண்டு காலம் இருவரும் காத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதிலும் தவறேதும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். 

ஆனால் அதற்கும் அவருடைய மகளும் சரி சந்துருவும் சரி செவிமடுக்கவில்லை. அவர்கள் எப்போதும் போலவே மொபைலில் பேசுவதும் சேர்ந்து வெளியில் சென்று வருவதுமாக இருந்துள்ளனர். இதை அறிந்த சேரன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சந்துருவின் குடும்பத்தாரை அழைத்து பேசுகிறார். இருவரும் மூன்று வருடம் காத்திருக்க வேண்டும் என்றும் அதுவரை இருவரும் பேசவோ சந்திக்கவோ கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறார். 

பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தாமினி-சந்துருவின் தொலைபேசி பேச்சும் வெளியில் சேர்ந்து சென்று வருவதும் சேரனுக்கு தெரியாமல் தொடர்கிறது.

அப்போதும் காரியம் ஒன்றும் விபரீதமாகவில்லை. ஆனால் சுமார் மூன்று மாதங்கள் கழித்து தாமினி தன் தந்தையிடம் 'சந்துருவிடம் என்னால் பேசாமல் இருக்க முடியல, அதுக்கு பதிலா செத்துப் போவலாம் போலருக்குப்பா' என்று கூறியதாக சேரனே பத்திரிகையாளரிடம் கூறியதை கேட்டோம். அதைக் கண்டு மனமிளகிப்போன சேரன் அவரே தன்னுடைய மொபைலில் சந்துருவை அழைத்து இருவரையும் பேச வைத்ததாகவும் ஆனால் தான் பேசாமல் இருந்ததாக தன்னிடம் தாமினி கூறிய அந்த மூன்று மாதங்களும் அவர்கள் இருவரும் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்ததை தான் விசாரித்து தெரிந்துக்கொன்டதாகவும் அதே பத்திரிகையாளரிடம் கூறுகிறார்.

சந்துரு தன்னுடைய மகள் முன்பாகவே அவளைப் பற்றி அவதூறாக தன்னுடைய மற்ற பெண் சிநேகிதிகளிடம் குறை கூறினார் என்று வருத்தப்படும் சேரனும் அதையேதான் பத்திரிகையாளர் முன்னிலையில் செய்தார் என்பதை எப்படி மறந்துப் போனார்? மூன்று மாதங்களாக சந்துருவிடம் பேசவில்லை என்று தன்னிடம் உண்மைக்குப் புறம்பாக தாமினி சொன்னார் என்று பேசியது அவரை ஒரு பொய் பேசும் பெண் என்று கூறுவதுபோல் இல்லையா? 

தன் மகளின் இந்த பித்தலாட்டத்தால் கொதிப்படைந்த சேரன் அவரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்று சினிமா பாணியில் கட்டளையிடுகிறார். அதே சினிமா பாணியில் சமயம் பார்த்து வீட்டைவிட்டு வெளியேறும் தாமினி சந்துருவின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் தன்னிடமே திரும்பி வந்து சந்துரு மிக மோசமானவன், தன்னை வைத்துக்கொண்டே மற்ற பெண்களுடன் மொபைலில் பேசுகிறான், அவன் தனக்கு எந்த சந்தோஷத்தையும் அளிக்கவில்லை என்றெல்லாம் புகார் கூறியதாகவும் கூறுகிறார். 

ஆனால் சந்துருவோ தாமினி தன்னுடன் இருந்த மூன்று மாதங்களில் அவளை நல்லவிதமாகத்தான் நடத்தினேன் என்றும் அவளுடைய உடல் மீது என்னுடைய விரல் கூட பட்டதில்லை என்றும் ஆனால் சேரனோ அவளுக்கு வர்ஜின் டெஸ்ட் கூட நடத்திப் பார்த்தார் என்றும் பத்திரிகையாளர் முன்பு கூறி மானத்தை வாங்கிவிட்டார். 

சொந்த மகளுக்கே வர்ஜின் பரிசோதனையா என்று வியந்துபோனேன் நான். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு பொறுப்புள்ள தந்தை செய்யக் கூடிய காரியமா இது? தன்னுடைய மகளுடைய நடத்தை மீதே ஒரு தகப்பன் சந்தேகப்பட்டால் அந்த மகளின் மனது என்ன பாடுபடும்? தன்மானமுள்ள எந்த இளம் பெண்ணும் நிச்சயம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள்.  எப்படி அவருடைய தாயும் இந்த சோதனையை நடத்த அனுமதித்தார் என்பதும் புரியவில்லை. சரி தாமினிக்கு உடல்ரீதியாக  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை மருத்துவ பரிசோதனைகள் கூறிவிட்டிருக்கும். ஆனால் அத்தகைய சோதனைகளுக்கு அவளுடைய சம்மதம் இல்லாமல் உட்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படக்கூடிய மன ரீதியான பாதிப்பின் வீரியம் சேரனுக்கு தெரியுமா?

இதுபோதாது என்று சேரனின் நண்பர் அமீர் தன்னுடைய நண்பரின் குடும்பத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு சந்துருவின் குடும்ப பின்னணியை ஆராய்ந்து தினமும் ஒரு குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் வைப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதை எதற்கு பத்திரிகையாளர்களிடமும் அவர்கள் மூலமாக உலகிற்கும் அவர் தெரிவிக்க வேண்டும்? இதை ஆதாரபூர்வமாக சேரனின் மகள் தாமினியிடம் அளித்து அவருடைய மனதை  மாற்ற முயற்சிக்க அல்லவா செய்திருக்க வேண்டும்?

இவர்கள் மீதான வழக்கு விசாரணையை நீதிமன்ற கூடத்தில் வைத்து நடத்தினால் தாமினி போன்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை கெட்டுவிடுமே என்ற நல்லெண்ணத்தில் தங்களுடைய தனி அறையில் விசாரணையை நடத்த சம்மதித்த நீதியரசர்கள் எங்கே சொந்த மகளென்றும் பாராமல் அவரைப் பற்றி பத்திரிகையாளர்கள் முன்னால் குறை கூறி அலையும் இவர் எங்கே?

ஒருவேளை அவருடைய இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகள்தான் இன்று தாமினியை தன்னுடைய தந்தைக்கு எதிராக நிற்க வைத்துள்ளதோ என்னவோ?

இதுவெல்லாம் போதாது என்பதுபோல் சந்துரு மற்றும் குடும்பத்தாரைப் பற்றி உளவுதுறை அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் முன்வைத்து அமீர் கோரிக்கை விடுகிறார். 

இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?

வாருங்கள் பார்ப்போம்....

நேற்றும் அதற்கு முந்தைய தினமும் நான் இட்ட இரண்டு பதிவுகளில் நான் குறிப்பிட்டவற்றில் இருந்து Non-cognizable offences எனக் கருதப்படும் குற்றங்களில் மஜிஸ்டிரேட் வழங்கக்கூடிய கைது வாரண்ட் இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்ய முடியாது என்று கூறியிருந்தேன்.

சந்துரு மீது அமீர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் யாவுமே இந்த வகையைச் சார்ந்தவைதான். மேலும் சந்துருவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியுமே தவிர இந்த விஷயத்தில் எந்த பாதிப்பும் அடையாத அமீர் அல்லது சேரன் போன்றவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பது அவருக்கு தெரியாது போல் இருக்கிறது.

இந்த வழக்கின் முடிவு எதுவானாலும் சேரனுக்கும் அவருடைய மகளுக்கும் இடையிலுள்ள உறவில்  தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் அவ்வளவு எளிதில் சீராகப் போவது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

சேரனின் விஷயத்தைப் பற்றி பேசியது போதும் என்று நினைக்கிறேன். 

இனி யார் குற்றவாளி தொடரில் நான் இன்று சொல்லவிருப்பதை படியுங்கள்..

இதுவரை காவல்துறை எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் மூலமாவே குற்றவாளி யாராக இருக்கக் கூடும்னு இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியால டிசைட் பண்ணியிருக்க முடியும்கறதால அடுத்த நடவடிக்கை அவரை கைது செய்வதுதான்.

கைது நடவடிக்கை.

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யக் கூடிய குற்றங்களில் (Cognizable Offences) ஒன்று கொலைக்குற்றம். அதனால தடயங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் இவர்தான் குற்றவாளியாக இருக்க முடியும்கற சந்தேகத்துக்குள்ளானவரை காவல்துறை விசாரணை அதிகாரியே  கைது செய்ய முடியும். காவல்துறை அதிகாரிக்கு இருக்கற இந்த அதிகாரத்தைப் பற்றி கு.மு.ச.41,42 மற்றும் 43வது பிரிவுகள் விரிவாக தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லீங்க, ஒருத்தரை கைது செய்றப்பவும் அதற்கு பிறகும் என்னவெல்லாம் செய்யணும்னுகறத கூட 43 முதல் 60 பிரிவு வரை ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்காங்க.

இந்த பிரிவுகள்ல சொல்லியிருக்கறத சுருக்கமா சொல்றேன். 

1. கைது செய்யப்படவர்கிட்ட எதுக்காக அவர கைது செய்யறோம்னு கைது பண்ற அதிகாரி அவர்கிட்ட தெளிவா சொல்லணும்.

2. அவர ஸ்டேஷனுக்கு கொண்டு போனதும் உடனே ஸ்டேஷன்லருக்கற டைரியில (Station Diary) அவர ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த தேதி, நேரம் எல்லாத்தையும் பதிவு செய்யணும். 

3. இன்னார இன்ன குத்தத்துக்காக கைது செஞ்சிருக்கோம்னு அவருடைய குடும்ப உறவினர், அப்படி யாரும் இல்லைன்னா, அவருடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாவோ தந்தி மூலமாவோ உடனே தெரிவிச்சிறணும். (தபால் நிலைய தந்தி சேவை இதற்குத்தான் பெரும்பாலும் பயன்பட்டு வந்தது. ஆனால் செல்ஃபோன் வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தந்தி அனுப்பும் முறை இப்போது கைவிடப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.)

4. கைது செய்யப்பட்டவரை தேகப் பரிசோதனை செய்து (body search) அவர்கிட்டருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அல்லது ஆவணங்கள் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு அதுக்குன்னு இலாக்கா வடிவமைச்சிருக்கற படிவத்தில் ஒரு ரிப்போர்ட் தயாரிக்கணும். இதுவும் மர்டர் ஸ்பாட்லருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலைப் போன்று மிகவும் முக்கியமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த லிஸ்ட்ல இல்லாத எந்த பொருளையும் கேஸ் கோர்ட்ல விசாரயணையில இருக்கறப்போ குத்தவாளிக்கிட்டருந்து கைப்பற்றுனதா சமர்ப்பிக்க (produce) முடியாது. இந்த லிஸ்ட்ல கைது செய்யப்பட்டவரோட கையெழுத்தையும் அப்பவே வாங்கிறணும். 

5.கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள்ள அவர அருகிலுள்ள (அதிகார எல்லைக்குட்பட்ட) மஜிஸ்திரேட் முன்பு ஆஜர் பண்ணிறணும். அதுக்கப்புறம் அவர மேற்கொண்டு விசாரிக்கணும்னா நீதிபதியோட பர்மிஷனோட போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்கலாம். அதுக்கு நீதிபதி ஒத்துக்காத பட்சத்துல அவர் சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் பெண் கைதிகளுக்கு 24 மணி நேரம் வரைக்கும்லாம் காத்திருக்க தேவையில்லையாம். எவ்வளவு சீக்கிரம் அவரை மஜிஸ்திரேட் முன்னால  ஆஜர் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்கலாகாது என்ற உச்ச நீதிமன்றத்தில் ஆணையால் இந்த நியதி.

6. ஸ்டேஷன்ல வச்சிருக்கறப்போ - அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் -  அவரை அடித்து துன்புறுத்தவோ அல்லது வற்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி நிர்பந்திக்கவோ கூடாது. அப்படி பெறப்படும் எந்த வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறதும் முக்கியமான விஷயம். இது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துங்கறதால இந்த மாதிரியான அடாவடி நடவடிக்கையில் தகுந்த முகாந்தரம் இல்லாமல் இறங்கக் கூடாது என்று தமிழக காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் குற்றவாளி தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஒரு மஜிஸ்டிரேட் முன்னால ஆஜர்படுத்திறணும். மஜிஸ்திரேட் அவர் எந்த வற்புறுத்தலும் இல்லாம தானா முன்வந்து ஒப்புக்கொள்றாராங்கறத உறுதிப்படுத்திக்கிட்டு அவர் சொல்ற வாக்குமூலத்தை எழுதி எடுத்துக்குவாரு. இப்படி வாங்கற வாக்குமூலத்த மட்டுந்தான் கோர்ட் ஏத்துக்கும். 

7. கைது செய்யப்படுபவரை  தேவையில்லாமல் (unless it is absolutely necessary) கையில விலங்கு மாட்டியோ இல்ல கால சங்கிலியால கட்டியோ கூட்டிக்கிட்டு போகக் கூடாது (shall not be handcuffed and paraded in the street unnecessarily without the authority of the Court).

கைதியிடம் விசாரனை

கைது செஞ்சவர 24 மணி நேரத்திற்குள்ள கோர்ட்ல ஆஜர்படுத்தணுங்கற கண்டிஷன் இருக்கறதால பல சமயங்கள்ல அவர முழுமையா விசாரணை பண்ண முடியாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. முக்கியமா, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் குற்றத்தை ஒப்புக்காம இருக்கறப்போ  அவர்கிட்டருந்து விசாரணை மூலமா வெளியக் கொண்டு வரவேண்டிய உண்மைகள் பல இருக்கலாம். அந்த மாதிரியான நேரத்துல அரெஸ்ட் பண்ணவர கோர்ட்ல ஆஜர் செஞ்சி தங்கள் பொறுப்பில் (Police custody) எடுத்து விசாரிக்க பர்மிஷன் கேக்கணும். சாதாரணமா இந்த மாதிரி ரிக்வெஸ்ட்ட கோர்ட் நிராகரிக்கறதில்லை. ஆனா போலீஸ் பத்து நாள் விசாரிக்கணும்னு கேட்டா கோர்ட் அதுல பாதிக்குத்தான் சம்மதிப்பாங்க. இத தெரிஞ்சி வச்சிருக்கற போலீஸ் அவங்களுக்கு எவ்வளவு நாள் வேணுமோ அதுல ரெண்டு மடங்கா கேப்பாங்களாம். ஆனா கைதிக்கு ஆதரவா ஆஜராகற வழக்கறிஞர் போலீசோட ரிக்வெஸ்ட்ட அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டார். ஆனால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு காவல்துறையினரின் விசாரணை இன்னும் முடிவடைஞ்சிருக்காதுன்னு நீதிபதி நினைச்சார்னா அவரை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்கறது வழக்கம். அப்படி மேற்கொண்டு போலீஸ் கஸ்டடி தேவையில்லைன்னு மஜிஸ்டிரேட் நினைச்சா அவர நேரடியா கோர்ட் கஸ்டடியில (judicial custody) வச்சாப் போறும்னு சொல்லிருவார். கோர்ட் கஸ்டடின்னா ஜெயில்வாசம்தான். ஆனா கொலைக்கான மேலும் சில ஆதாரங்கள் போலீஸ்க்கு கிடைக்கறபட்சத்துல கைதியை தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்கணும்னு மறுபடியும் காவல்துறையினர் மனுதாக்கல் செய்யலாம். 

குற்றவாளியின் வீடு/அலுவலகம் சோதனையிடுதல்

கைது செய்யப்பட்டவர கோர்ட்ல ப்ரட்யுஸ் பண்றப்பவே அவரோட ஆஃபீஸ்/வீடு எல்லாத்தையும் சோதனை போடணும்னு சொல்லி போலீஸ் பெட்டிஷன் போட்டு கோர்ட்லருந்து Search Warrant வாங்கிருவாங்க. சாதாரணமா  ஒருத்தர கைது செஞ்ச 24 மணி நேரத்திற்குள்ள இந்த சோதனையை செஞ்சாத்தான் அது effectiveஆ இருக்கும்னு போலீசுக்கு தெரியும். அத விட்டுட்டு சாவகாசமா searchக்கு போனா அதுக்குள்ள எல்லா தடயங்களையும் சம்மந்தப்பட்டவரோ இல்ல அவரோட ஆளுங்களோ மறைச்சிடறதுக்கு சான்ஸ் குடுத்தா மாதிரி ஆயிருமே. பல கேஸ்லருந்து குத்தவாளி தப்பிக்கறதுக்கு இந்த விஷயத்துல போலீசாரோட மெத்தனமும் ஒரு காரணம்னு பாதிக்கப்பட்டவங்க சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு.  குற்றம் சாட்டப்பட்டவர் தடயங்களை மறைத்துவிட வாய்ப்பிருக்குன்னு போலீஸ் நினைச்சா கோர்ட் உத்தரவு கையில இல்லாமேயே கூட search பண்றதுக்கு சட்டத்துல இடம் இருக்கு. இந்த மாதிரி சமயத்துல இன்னின்ன காரணத்தால நாங்க சோதனைய துவக்கப் போறோம்னு ஒரு பெட்டிஷன கோர்ட்ல தாக்கல் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு செய்யலாம்னு கு.மு.ச. பிரிவு 165ல சொல்லியிருக்காங்க. 

இந்த மாதிரி சோதனை நடத்தற போலீஸ் அதிகாரிங்க எப்படி செயல்படணும்னு கூட தமிழக காவல்துறை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருக்காங்க.  அதுல சில முக்கியமான உத்தரவுகளை கீழ குடுத்துருக்கேன். 

1. சோதனைக்கு தேவையான நீதிமன்ற ஆணையை (search warrant) வீட்டில குடியிருக்கறவங்களுக்கு இல்லன்னா ஹவுஸ் ஓனருக்கு காட்டி அவரோட பர்மிஷனோடத்தான் சோதனை நடத்தவேண்டிய இடத்துக்குள்ள நுழையணும். அவங்க வேணும்னே பர்மிஷன் குடுக்க மாட்றாங்கன்னு போலீசுக்கு சந்தேகம் வந்தா வீட்டின் கதவு/ஜன்னல்களை உடைத்து திறக்கும் அதிகாரம்கூட போலீசுக்கு உண்டாம். ஆனாலும் கூடிய மட்டும் போலீஸ் அத தவிர்க்கணும்.  

2.சோதனையை துவக்குறதுக்கு முன்னாலயே அக்கம்பக்கத்துலருக்கற இரண்டு பொறுப்பான ஆளுங்கள சாட்சியா அழைச்சிக்கணும். 

3.குற்றத்திற்கு சம்மந்தமில்லாத பொருட்களை/ஆவணங்களை அழிக்கவோ சேதப்படுத்தவோ கூடாது.

4.சோதனையின்போது வீட்டிலுள்ளவர்களை தனிநபர் சோதனைக்கு (தேகப் பரிசோதனை ) உட்படுத்த காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரம் உண்டுன்னாலும் அவர்கள் பெண்களாக இருக்கும்பட்சத்தில் பெண் காவலர்கள் மட்டுமே அத்தகைய சோதனையை செய்ய வேண்டும். 

5.சோதனை நடத்தறப்போ கிடைக்கற எல்லா பொருட்களையும் அங்கேயே அதற்கென காவல்துறை இதுக்காக வச்சிருக்கற படிவத்தில் பட்டியலிட்டு கூட இருந்த சாட்சியங்களோட கையெழுத்தையும் வாங்கிறணும். இது ரொம்ப முக்கியம். ஏற்கனவே சொன்னா மாதிரி இதுல இல்லாத பொருட்களை கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணவும் முடியாது. இதுல இருக்கற பொருட்களை ப்ரொட்யூஸ் பண்ணாம இருக்கவும் முடியாது. 

6.கூடிய மட்டும் பட்டியல் அடித்தல்/திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லன்னா அதுவே கைதி கேஸ்லருந்து விடுபட வாய்ப்பாயிரும்.

இன்னும் இரண்டே பதிவுகள்தான்...

01 ஆகஸ்ட் 2013

வாலுப் பசங்க!

நான் வசிப்பது சென்னையிலிருந்து சுமார் இருபது கி.மீ. தூரத்திலுள்ள ஆவடி என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

நான் வசிக்கும் இடத்தின் பெயர் சிந்து நகர். ஆவடி சென்ட்ரல் பஸ் ஸ்டான்டுலருந்து ஒரு கி.மீ. இருக்கும். சுமார் நூறு வீடுகள் இருக்கும் இந்த நகரிலுள்ள விசேஷம் என்னவென்றால் இங்குள்ள அனைத்து தெருக்களும் இந்தியாவிலுள்ள பிரபல ஆறுகளுடைய பெயரில் அமைந்திருப்பதுதான். இப்படி தமிழகத்தில் வேறெங்காவது இருக்குமான்னு தெரியல.

சென்னை-திருத்தனி/திருப்பதி ஹைவேலருந்து வலது பக்கம் திரும்புனா முதலில் வருவது கங்கா தெரு. அதில் சுமார் இருநூறடி நடந்தால் வலப்புறம் திரும்புவது யமுனா தெரு. அதில் சுமார் நூறடி நடந்தீங்கன்னா முதல்ல இடது பக்கம் திரும்புற தெருக்கு பேரு கோதாவரி. அதுல மறுபடியும் நூறடி நடந்தா ஒரு நூறடி தள்ளி இடது பக்கம் திரும்பறது காவேரி தெரு. அந்த தெரு கடைசியில வலது பக்கம் திரும்புனீங்கன்னா என்னுடைய ஒரு வருட வயது கொண்ட வீடு அமைந்திருக்கும் பவானி தெரு. எங்களுடைய தெருவுக்கு பின்னால் ஓடும் தெரு பொன்னி!

இந்த நகர்ல இருக்கற தெரு பெயர்களால கவரப்பட்டே இந்த இடத்த வாங்கினேன்னு கூட சொல்லலாம். ஆனா இங்க குடி வந்ததுக்கப்புறந்தான் இந்த தெருக்களுக்கு நதிகளோட பெயர் வச்சதன் பின்னணி என்னன்னு தெரிஞ்சிது! ஒரு மணி நேரம் மழை பெஞ்சா போறும், எல்லா தெருக்களுமே உண்மையான நதியா மாறிரும். அப்புறம் ஒரு அஞ்சாறு நாளைக்கு நீச்சல்தான். நம்ம காரு மேனேஜ் பண்ணிக்கிட்டு போயிரும். ஆனா டூவீலர் பாடு திண்டாட்டம்தான். நடந்து போகிறவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

சர்வீஸ்ல இருக்கறப்ப விடியற்காலையில எழுந்து வாக் போயிருவேன். சென்னை சிட்டியில இருந்ததால போன டிஎம்கே ஆட்சி காலத்துல நம்ம தளபதியோட இனிஷியேட்டிவ்ல சென்னைக்குள்ள நிறைய அழகான பார்க்குங்கள அமைச்சாங்களே, அங்க நடக்க போயிருவேன். ரம்யமான அந்த சூழல்ல நடக்கறதே தெரியாது.

ரிட்டையர் ஆனதுக்கப்புறம் ஆவடியில இருந்த ப்ளாட்டுல ஒரு வீட்ட கட்டிக்கிட்டு வந்துட்டேன். இங்க காலையில நடக்கறத கற்பனை பண்ணக்கூட முடியாது. எங்க நகருக்கு பக்கத்துலயே ரெண்டு பெரிய பள்ளிக்கூடங்க இருக்கறதால காலையில ஸ்கூல் பஸ், வேனுன்னு எல்லா ரோடும் ஒரே பரபரப்பா இருக்கும். இதுங்களுக்கிடையில மேய்ச்சலுக்கு கூட்டிக்கிட்டுப் போற ஆடு, மாடுங்க அணிவகுப்பு வேற.

என்னது, சிட்டியில மேய்ச்சலுக்கு போற மாடுகளான்னு கேக்க தோணும்.

ஆவடி சிட்டியுமில்ல, கிராமமுமில்லாம ஒரு ரெண்டுங் கெட்டான். ஹைவேயிலருந்து ஒரு கி.மீ வடக்க நடந்தா மறுபடியும் ஒரு காலத்துல பச்சை பசேல்னு இருந்த வயல்வெளி இப்போ வீட்டு மணைகளாயி முனிசிபாலிட்டி அப்ரூவல் கிடைக்காததால வெட்டியா ஏக்கர் கணக்குல கிடக்கறத பாக்கலாம். பராமரிப்பில்லாம கிடைக்கற இந்த நிலம்தான் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம். காலையில ஏழு மணிக்கு வந்தாங்கன்னா இருட்டனதுக்கப்புறந்தான் வீடு திரும்புவாங்க. அவங்களோட யாரும் வந்து நா பாத்ததில்லை. அவங்களா வருவாங்க, ஆசை தீர புல், செடிகள மேஞ்சிட்டு ஒழுங்கா வரிசையா வீட்டுக்கு திரும்பி போயிருவாங்க. ஒன்னு, ரெண்டு அதிகப்பிரசங்கிக இருட்டாயும் வீடு திரும்பலன்னா யாராச்சும் டார்ச்ச வச்சி தேடிக்கிட்டு வருவாங்க.

இந்த வயல்வெளிய சுத்தி மண் ரோடு இருக்கும். என் வீட்லருந்து சாயந்தரம் அஞ்சி மணிக்கி புறப்பட்டா கொஞ்ச தூரம் வேகமா கொஞ்ச தூரம் நடுத்தரமா அப்புறம் ஸ்லோவான்னு ஒரு மணி நேரம் நடந்துட்டு திரும்புவேன். போற வழியில கவரப்பாளையம்னு ஒரு பக்கா கிராமம் இன்னமும் தன்னுடைய பழைய அழகுலயே இருக்கறத பாக்கலாம். ஒரு காலத்துல ஆந்திர மாநிலத்திலருந்து விவசாய கூலிகளாக தமிழகத்திற்கு வந்து பிறகு அவர்கள் உழைத்த நிலங்களுக்கே சொந்தக்காரர்களாகி நொடித்துப் போன கவர நாயுடுகள் அதிகம் பேர் வசித்து வந்த இடம் என்பதால் அதற்கு கவரப்பாளையம்னு சொல்றாங்க. கிராமம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி இப்போ இருபது வீடுகள் மட்டுமே இருக்கும் ஒரு குட்டித் தெருவாக இருக்கு. தெருவுல ரெண்டு பக்கமும் இன்னமும் நாட்டு ஓடு வேய்ந்த வீடுகள் முகப்பில் நீண்ட திண்ணைகளோடு பார்க்க முடியும்.

சாயந்தர நேரத்துல நா வாக் போற வழியெங்கும் பெண்கள் சாவகாசமாக வீட்டு வாசலில் அமர்ந்து தெலுங்கு, தமிழ் கலந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே நடப்பேன். பல வீடுகளிலும் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும்.

அவர்களுள் இரண்டு அல்லது இரண்டரை வயது சிறுமி வீட்டு வாசலில் அமர்ந்து கற்களை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாள். நான் அவளைக் கடக்குறப்பல்லாம் என்னை தலையிலிருந்து கால் வரை பார்ப்பாள். நான் பார்ப்பதை பார்த்ததும் தலையை குனிந்துக்கொள்வாள். பல நாட்கள் இதை கவனித்தாலும் அவளுடன் எந்த மொழியில் பேசுவது என்று தெரியாமல் கடந்து போய்விடுவேன். ஆனால் நேற்று என்னையுமறியாமல் நின்று, 'என்னம்மா பாக்கறே?' என்றேன். அது நிமிர்ந்து என்னை பார்த்துவிட்டு சில நொடிகள் யோசித்தது. பிறகு, 'நீ எதுக்கு எப்ப பாத்தாலும் ஷூ போட்டுக்கிட்டு போறே?' என்றது சட்டென்று. நான் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் ஒரு நொடி பேசாமல் நின்றேன். அப்புறம் சமாளித்துக்கொண்டு 'தாத்தாவுக்கு வாக் போறப்ப கால் வலிக்கும்ல? அதனாலதான் ஷூ போடறேன்.' என்றேன். 'ஐய்யே... எங்க தாத்தாவுந்தா தெனம் நடக்குது. அது ஷூ போடாதே.. செருப்புதான் போடும்.' என்றாள் பட்டென்று. நான் எப்படி பதிலளிப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவளருகில் அமர்ந்திருந்த பாட்டி, 'நீங்க போங்க சார். அது ஒரு வாயாடி.' என்று என்னை அனுப்பி வைத்தார்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து கிளம்பி சுமார் இருநூறடி நடந்திருப்பேன். எனக்கு முன்னால் பத்தடி தூரத்தில் ஒரு ஆறு வயது சிறுவன் அவனை விடவும் பளுவான புத்தகங்களுடன் பிதுங்கிக்கொண்டிருக்கும் பையை தலையில் மாட்டிக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டு நடப்பது தெரிந்தது. அவனும் தினமும் நான் செல்லும் வழியில் செல்பவன்தான். சாதாரணமாக பள்ளி நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு செல்வதை பார்த்திருக்கிறேன். ஆனால் நேற்று அவனுடன் யாரும் இல்லை. அவனைக் கடக்கும் போது 'என்ன பால், அமலாப் பால்' என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டது. எனக்கு ஒரு க்யூரியாசிட்டி. இவன் என்ன சொல்லிக்கொண்டிருந்தான் என்று கேட்டால் என்ன என்று நினைச்சேன். 'என்னடா பையா... இப்ப என்ன சொல்லிக்கிட்டிருந்த இன்னொரு தரம் சொல்லேன்..' என்றேன். அவன் சட்டென்று நிமிர்ந்து யார்றா இந்த ஆள்ங்கறா மாதிரி ஒருமாதிரியான எரிச்சலோட பார்த்தான்.

'எதுக்கு? அதெல்லாம் ஒருதரம் சொன்னாத்தான் ஃப்ளோவா (flow) வரும்...' என்றான்.

'அதில்லடா என்னமோ அமலா பால்னு சொன்னியே?'

என்னை முறைச்சி பார்த்துட்டு வேணும்னே முன்னால் சொன்னத விட வேகமா சொல்ல ஆரம்பிச்சான். அப்பவும் என்னால அவனெ ஃபாலோ பண்ண முடியல. மறுபடியும் கடைசியில 'அது என்ன பால், அமலா பால்னு'  சொன்னது மட்டுந்தான் புரிஞ்சிது.

சரியான வாலாருப்பான் போலருக்குன்னு நினைச்சிக்கிட்டு, 'சரிடா... யார்றா அந்த அமலா பால்? அதையாச்சிம் சொல்லேன்.' என்றேன்.

'நீ சினிமா கினிமா பாக்கறதில்லையா தாத்தா...'

இல்லையே என்பதுபோல் தலையை அசைத்தேன்.

 'அப்போ, ஒங்கிட்ட சொல்றது வேஸ்ட்.' என்று அடுத்த நொடியே தூக்கமுடியாத பையின் பளுவையும் பொருட்படுத்தாமல் ஓடியே போனான்.

சில வாரங்களுக்கு முன்னால சன்டேயில சன் டிவியில வர்ற 'குட்டிச்சுட்டி' ப்ரோக்ராம்ல ஒரு குட்டிப் பையனிடம் இமான் அண்ணாச்சி அமலா பால் தெரியுமான்னு கேக்க 'அமலா பாலா? ஆவின் பால் தெரியும். இது என்ன புது பாலா? என்று பையன் திருப்பி கேட்டது நினைவுக்கு வந்தது.

சரி இன்னைக்கி டைம் சரியில்ல போலருக்கு ரெண்டு குட்டி பசங்ககிட்ட பல்ப் வாங்கியாச்சி... இனி வாய மூடிக்கிட்டு நடக்கணும்னு நினைச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன்.

கவரப்பாளையம் தெருவைக் கடந்தால் OCF க்வார்ட்டர்ஸ் வரும். பத்தடி காம்பவுன்ட் சுவருடன் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில ஒரு குட்டி ஊர் மாதிரி இருக்கும் அந்த க்வார்ட்டர்ஸ். Ordnance Clothing Factoryயத்தான் OCFனு சுருக்கி சொல்வாங்க. இந்தியாவுலருக்கற எல்லா ஆர்மி ஜவான்களுக்கும் இங்கருந்துதான் யூனிஃபார்ம் தயார் பண்ணி போவுதாம். சுமார் ஐந்நூறு மூன்றடுக்கு மாடி வீடுகள் பக்கா தார் ரோடு, ரெண்டு மூனு பெரிய பூங்கா, ரெண்டு ஆடிட்டோரியம், ஒரு வினாயகர் கோவில்னு ஒரு குட்டி நகரம் போலருக்கும். வாக் போறவங்க வாசல்லருக்கற சென்ட்ரிக்கிட்ட சொல்லிட்டு போய்ட்டு வரலாம். ஒரு சுத்து சுத்தி வர்றதுக்கு அரை மணி நேரம் ஆவும்.

நேத்து, வாசல தாண்டி சென்ட்ரிய பாத்து சவுக்கியமான்னு விசாரிச்சிட்டு நடந்தேன். போற வழியிலதான் பசங்க விளையாடற கிரவுண்ட். கில்லியிலருந்து கிரிக்கெட் வரைக்கும் எல்லா விளையாட்டும் ஒரே சமயத்துல நடந்துக்கிட்டிருக்கும். அந்த பசங்கள பாத்துக்கிட்டே நடப்பேன். நா சின்ன வயசுல விளையாடாத விளையாட்டே இல்லே. அத நினைச்சிக்கிட்டே நடந்துக்கிட்டிருந்தேன். ஒரு இருபதடி தூரத்துல குட்டி பசங்களோட கிரிக்கெட் மேட்ச் ஆக்ரோஷமான சத்தத்தோட நடந்துக்கிட்டிருந்துச்சி.. எப்பவும் பாக்கறதுதான். கண்டுக்காம போய்க்கிட்டே இருப்பேன். நேத்துதான் டைம் சரியில்லேன்னு ஆயிருச்சே.... நா பசங்கள நெருங்கவும் ஒரு குட்டிப் பையன் - ஆறு வயசு இருக்கும் - பேட்ட வீச பந்து பேட்டுல படாம பின்னால நின்னுக்கிட்டிருந்த பையன் - விக்கெட் கீப்பராம்! - கைக்குள்ள போய் மாட்டிக்கவும் சரியாருந்தது. பந்து போட்டவனும் காட்ச் புடிச்சவனும் 'டேய் நீ அவுட்டுன்னு கத்த' பேட் வச்சிருந்தவன் 'டேய் டூப்படிக்காத. பந்து பேட்டுல படவே இல்ல' என்று சாதித்தான்.

பந்தை போட்டவன் சட்டென்று என்னிடம்

'தாத்தா நீ கூட பாத்தேல்ல? இவன் அவுட்டுதான?' என்றான்.

அவன் கேட்ட தொனியே அவுட் இல்லையென்று சொன்னால் அடித்து விடுவான் போலிருந்தது.

பேட்டை கையில் வைத்திருந்தவன் என்னை முறைத்தான். 'தாத்தா பொய் சொல்லாம சொல்லு. நா பந்த அடிச்சேனா?'

என்ன சொன்னாலும் அடிதான் என்று நினைத்த நான். 'நா பாக்கலையேடா பசங்களா' என்றவாறே அங்கிருந்து வேகமாக நகன்றேன். நான் அங்கிருந்து போவதற்குள் என் காதுபடவே, 'டேய் அவருக்கு கண்ணு டப்சா போல....' என்றான் பந்தை எரிந்தவன். சென்னை பாஷை புரியாதவர்களுக்கு 'டப்சா' என்றால் பொட்டை என்று அர்த்தம் அதாவது நான் பொட்டைக் கண்ணன். மறுபடியும் ஒரு 'பல்ப்' வாங்கிக்கிட்டு எல்லாம் முழிச்ச நேரம்னு நினைச்சிக்கிட்டு மேலும் நடந்தேன்.

க்வார்ட்டர்ஸ் முழுவதும் நூற்றுக் கணக்கான மரங்கள். மாலை நேரத்தில் சில்லுன்னு காத்து வீசும். நடக்கற களைப்பே தெரியாது. பெருசா ஆள் நடமாட்டமும் இருக்காது. எப்போதாவது கடந்து போகும் சைக்கிள்ங்கள தவிர ரோடு பெரும்பாலும் காலியாவே இருக்கும். ஒவ்வொரு ரோட்லயும் ரெண்டு பக்கமும் ரோட்லருந்து இருபதடி தள்ளி வரிசையா தனித்தனி வீடுங்க. எல்லாமே மூன்றடுக்கு. இடது வலதுன்னு ஒவ்வொரு தளத்துலயும் ரெண்டு குடியிருப்புங்கன்னு (flats) ஒவ்வொரு பில்டிங்லயும் ஆறு குடியிருப்பு இருக்கும். எல்லா வீட்டு வாசல்லயும் மாமரம் இருக்கும். இப்ப சீசன்கறதால மரம் முழுசும் மாங்காய் அழகழகா தொங்கிக்கிட்டிருக்கறத பாக்கலாம். அது மட்டுமில்லாம கொய்யா, சீத்தாப்பழம்னு பலாமரத்த தவிர மத்த எல்லா மரங்களும் இருக்கும்.

ஒரு சுத்து முடிஞ்சி மறுபடியும் வாசல் பக்கம் வந்தேன். கடைசி தெரு. அங்க ஒரு மூனு வயசு இருக்கும் ஒரு குட்டி பொண்ணு மாமரத்த அண்ணாந்து பாத்துக்கிட்டு ஒன்னு ரெண்டுன்னு எண்ணிக்கிட்டு நிக்கிறது தெரியுது. முந்தா நேத்தும் அதே இடத்துல அதே பொண்ணு நின்னு எண்ணிகிட்டிருந்தத பாத்த ஞாபகம். 'என்னம்மா எண்றே?' ன்னு கேட்டேன். சட்டுன்னு என்னெ திரும்பி பார்த்துவிட்டு, 'இரு. எண்ணி முடிச்சிட்டு சொல்றேன்.' என்றது. பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தது. நானும் நின்று கவனித்துக்கொண்டிருந்தேன். தட்டுதடுமாறி எண்ணி முடிச்சிட்டு என்னெ பாத்து, 'தாத்தா நேத்து சாயந்தரம் எண்ணினனா? பத்து இருந்திச்சி...இப்போ ஒம்போதுதான் இருக்குது... யாரோ ராத்திரி வந்து திருடிக்கிட்டு போய்ட்டான் போலருக்கு!' என்றாள் உண்மையான கவலையுடன்.பிறகு,  'இரு பாட்டிய கூட்டிக்கிட்டு வரேன்.' என்று என்னுடைய பதிலைப் எதிர்ப்பார்க்காமல் வீட்டுக்குள் ஓட நான் அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.

க்வார்ட்டர்ஸ் வாசலை கடக்கும் நேரத்தில் 'என்ன சார் இன்னைக்கி கா மணி நேரம் கூட ஆயிருச்சி போல?' என்றார் சென்ட்ரி.

'ஆமாப்பா.. மாங்கா எண்ணிட்டு வரேன்' என்றேன் புன்னகையுடன்.

அவர் சிரித்தார். 'நீங்கதான் திருடிட்டீங்கன்னு சொல்லியிருக்குமே?'

இது வேறையா? நல்ல வேளையாக அந்த குட்டி பாட்டியோட வர்றதுக்குள்ளே எஸ்கேப் ஆய்ட்டோம் போலருக்குன்னு நினைச்சிக்கிட்டு நடையின் வேகத்த கூட்டினேன்.

இந்த தலைமுறை குட்டிப் பசங்க வாலுங்கதான்னாலும் மகா புத்திசாலிப் பசங்கங்கறதையும் மறுக்க முடியாது. சில சமயத்துல அவங்க கேக்கற கேள்விங்களுக்கு பதில் சொல்லவே முடியறதில்ல! அவங்கக்கிட்டருந்து அப்பப்போ 'பல்ப்' வாங்கறதே பொழப்பா போச்சி!

********

22 ஜூலை 2013

என் முதல் கணினி அனுபவம் ((நிறைவுப் பகுதி)

இருந்தாலும் தனியா வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணுங்கற என்னோட ஆசை 1999லதான் நடந்துது. 

நாலஞ்சி வருசத்துக்கப்புறம் மும்பையிலருந்து டிரான்ஸ்ஃபர் ஆயி சென்னைக்கு வந்துட்டேன். 

மூத்த மகள் கல்லூரி முதலாம் ஆண்டில் நுழைந்திருந்தாள். 'என் ஃப்ரென்ட்ஸ் வீட்லல்லாம் கம்ப்யூட்டர் இருக்குப்பா' என்று நச்சரிக்க சரி வாங்கித்தான் பாப்போமேன்னு டிசைட் பண்ணி ஒவ்வொரு கம்ப்யூட்டர் கடையா ஏறி இறங்குனோம். 

அப்போ கொஞ்சம் பிரபலமா இருந்தது HCL Beanstalk. 1GB HDD. 32MB RAM. ஆச்சரியமா இருக்குல்லே? இப்ப இருக்கற கம்ப்யூட்டர் கான்ஃபிகரேஷனோட ஒப்பிட்டு பார்த்தா இது ஒன்னுமே இல்லேன்னு தோனும்.  இத வச்சிக்கிட்டு என்னத்த சார் செஞ்சீங்கன்னு கேக்க தோணும்.  அப்ப அதுவே ஜாஸ்தி. ஏன்னா அன்னைக்கி பெரும்பாலான கம்ப்யூட்டர்ல வெறும் 16mb RAMதான்! அதுக்கு இன்னொரு காரணமும் இருந்துது. அப்போல்லாம் வெறும் text based applicationsதான் யூஸ்ல இருந்ததால அதுவே போறுமா இருந்தது.    மானிட்டரோட ரெண்டு பக்கத்துலயும் அட்டாச்ட் ஸ்பீக்கர்ஸ்! தனியா வேணும்னாலும் கழட்டி வச்சிக்கலாம். ஒரு ஃப்ளாப்பி டிரைவ், ஒரு சிடி ட்ரைவ்ன்னு அன்னைக்கி அதுதான் லேட்டஸ்ட்! விலைய சொல்லணுமே.. ரூ.55,000/-! அந்த காசுல இன்னைக்கி ஒரு அட்டகாசமான லேப்டாப் வாங்கிரலாம். கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமாக அதிகமாக விலை ஏறிடும்னு நினைச்சோம். அதுக்கு நேர் மாறா விலை பயங்கராம இறங்கிறும்னு அன்னைக்கி யாரும் நினைக்கல. 

பேங்க்ல வேலைங்கறதால லோன் போடறதெல்லாம் ரொம்ப ஈசி. ப்ரோஃபார்மா இன்வாய்ஸ் கொண்டு போய் கொடுத்தா போறும். இன்வாய்ஸ் வேல்யூல 90% லோன் கிடைச்சிறும். ஸ்டாஃப்ங்கறதால வட்டியும் கம்மி. 

பேசாம லோன போட்டு வாங்கியிருக்கலாம். ஆனா இடையில ஒரு சோதனை வந்துது. அப்போ க்ரெடிட் கார்டோட அறிமுக காலம். டெய்லி ஒரு பத்து ஃபோனாவது வரும். ஒரேயொரு பேங்க்லருந்து விடாம டார்ச்சர் பண்ண சரி வாங்கித்தான் பார்ப்பமேன்னு வாங்கினேன். பேங்க் மேனேஜர்ங்கறதால எடுத்த உடனே ரூ.50000/- க்ரெடிட் லிமிட்டோட வந்துது. சரி இதுல வாங்குனா முதல் நாப்பது நாள் வட்டி கிடையாதேன்னு நினைச்சி மொத்த லிமிட்டுக்கும் முதல் பர்சேஸே கம்ப்யூட்டர வாங்கிட்டேன். மீதிய கையிலருந்து குடுத்தேன். ஆனா இன்ஸ்டால்மென்ட்ல கட்டற ஐடியா ஏதும் இல்லை. கார்ட் பில் வரும்போது பேங்க்லருந்து லோன் போட்டுக்கிட்டா போறும்னு நினைச்சி வாங்கிட்டேன்.

அன்னையிலருந்து புடிச்சது தொல்லை. கார்ட வாங்கிக்குங்கன்னு டார்ச்சர் குடுத்த ஏஜன்ட் கார்ட்ல முதல் பர்ச்சேஸ்லயே மொத்த லிமிட்டையும் யூஸ் பண்ணிருவேன்னு நினைச்சிருக்க மாட்டார் போலருக்கு. இவன் ஒரு 420யாருப்பான் போலருக்கேன்னு நினைச்சிட்டார். டெய்லி ஒருதரம் ஃபோன்ல கூப்ட்டு ட்யூ டேட்ல கட்டிருவீங்களா சார், கட்டிருவீங்களா சார்னு டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சார். அவரோட நிக்காம பேங்க் கார்ட் டிவிஷன்லருந்தும் கூப்ட ஆரம்பிச்சதும் கடுப்பாய்ட்டேன். இவனுங்கக் கிட்டருந்து தப்பிச்சா போறும்னு க்ரெடிட் பீரியட் முடியறதுக்குள்ளவே பேங்க்ல லோன போட்டு ட்யூ முழுசுக்கும் செக்க எழுதி அத்தோட அந்த பேங்க் க்ரெடிக் கார்டையும் நாலு துண்டா வெட்டி நீயும் வேணாம் ஒன் கார்டும் வேணாம்னு ஒரு லெட்டரையும் எழுதி ஒரு கவர்ல வச்சி ரிஜிஸ்தர் தபால்ல அனுப்பி வச்சேன். 

ஒரு வாரம் கழிச்சி அந்த ஏஜன்ட் என் ஆஃபீசுக்கே வந்துட்டார். என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? நீங்களும் ஒரு பேங்க் மேனேஜர்தானே? குடுத்த கடன வசூல் பண்ண கஸ்டமர கேட்டதில்லையான்னு புலம்பி தள்ளிட்டார். இருக்கலாங்க. அதுக்காக இப்படியா? ராத்திரியும் பாக்காம எத்தன பேர் கூப்டுவீங்கன்னு திருப்பி திட்டி அனுப்பினேன்... அதுக்கப்புறம் கொஞ்ச நாள் க்ரெடிட் கார்ட் சமாச்சாரம் பக்கமே திரும்பலை.... அதாவது 2007 வரைக்கும். அதுக்கப்புறம் மறுபடியும் ஒரு வேவ் மாதிரி - அதாவது ICICI, UTI, IDBI மாதிரி தனியார் பேங்குங்க வந்ததுக்கப்புறம் - க்ரெடிட் கார்ட் விற்பனை வந்துதே அப்ப மறுபடியும் ICICI ஏஜன்ட் வலையில விழுந்தேன். ஆனா ஏற்கனவே ஒரு பாடம் படிச்சிருந்ததால இதுவரைக்கும் எந்த பிரச்சினையிலும் சிக்கிக்காம இருக்கேன். 

விஷயத்துக்கு வருவோம். 

கம்ப்யூட்டர் வீட்ல வேணும், வேணும்னு பிடிவாதம் புடிச்ச என்னோட டாட்டருக்கு கம்ப்யூட்டர் வந்ததும் சிடி டிரைவ்ல பாட்டு கேக்கறதுதான் முழு நேர வேலையாருந்தது. நல்லவேளையா அப்பல்லாம் இப்ப இருக்கறா மாதிரி கம்ப்யூட்டர் கேம்ஸ் எதுவும் பிரபலமாயிருக்கலை. அதனால ஆஃபீஸ்லருந்து word star காப்பி பண்ணிக்கிட்டு வந்து போட்டு டைப்ரைட்டிங் படிச்சிக்கப்பான்னு சொன்னேன்.. ஆனா கருப்பு பேக்ரவுன்டுல குச்சி, குச்சியா என்னப்பா இது நல்லாவே இல்லைன்னுட்டாங்க. அப்புறம் ஒரு ஃப்ரென்ட புடிச்சி திருட்டு MS Office போட்டேன்.  அவர் ரூ.500/- வாங்கிக்கிட்டு போட்டு குடுத்தார். MS word, Excel, Power Point மூனு மட்டுந்தான். வேர்டும், எக்சல்லும் யூஸ் ஆச்சோ இல்லையோ மூனு மாசத்துல விதம், விதமா PP slide பண்றதுக்கு படிச்சிட்டாங்க. அப்புறம் காலேஜ்லருந்து வந்ததும் அதுவேதான் வேலை. 

ரெண்டு பொம்பளை புள்ளைங்கள வச்சிக்கிட்டு அதுக்கு நகை, நட்டுன்னு வாங்காம 55000/- குடுத்து இத வாங்கினேன்னு அத பாக்கறப்பல்லாம் கேட்டாங்க எங்க அம்மா. ஆனா அந்த வயசுல என் மூத்த மகளுக்கு கிடைச்ச அந்த அனுபவம் பிற்காலத்துல ஒரு நல்ல டிசைன் ஆர்ட்டிஸ்டா வர்றதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு அப்போ நாங்க நினைச்சிக்கூட பாக்கல. 

எனக்கும் அது பிற்காலத்துல ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருந்ததுங்கறதையும் சொல்லியே ஆகணும். சென்னையிலருந்து மறுபடியும் மாற்றலாகி எங்களோட வங்கி ஊழியர்கள் பயிற்சிக்கல்லூரிக்கு பிரின்சியா போனேன். அப்போ எங்களுடைய வங்கியின் பெரும்பாலான கிளைகள்ல கம்யூட்டர் இன்ஸ்டால் செஞ்சிருந்ததால ஊழியர்களுக்கு கம்யூட்டர் ட்ரெய்னிங் குடுக்கறதுக்கு இருபத்தஞ்சி கம்ப்யூட்டர், ஒரு சர்வர்னு (server) செட்டப்ப் பண்ணி கம்ப்யூட்டர் வகுப்ப நடத்தற அளவுக்கு எனக்கு தைரியம் குடுத்தது. அதுலருந்து முன்னேறி நாலஞ்சி வருசம் கழிச்சி எங்க வங்கியோட information technology டிவிஷன்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ணப்போ என்னோட லெவல்லருந்த மத்த அதிகாரிங்களுக்கு கம்ப்யூட்டர் அனுபவம் இல்லேங்கறதால அந்த டிவிஷனுக்கே headஆ வர்ற அளவுக்கு எனக்கு அது ஹெல்ப் செஞ்சிதுன்னு சொன்னா மிகையாகாது. 

இப்போ எல்லார் வீட்லயும் கம்ப்யூட்டர்ங்கறது ரொம்பவும் சகஜமா போயிருச்சி. ஆனா இருபது வருசத்துக்கு முன்னால அத ஒரு தேவையில்லாத செலவுன்னு பாக்காம வாங்கி யூஸ் பண்ணதால என் மகள்களுக்கு மட்டுமில்லாம என்னோட careerல வேகமா முன்னேறவும் அது ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ணிச்சின்னுதான் சொல்லணும். அதுக்கப்புறம் நாலஞ்சி தரம் கம்ப்யூட்டர மாத்தியாச்சின்னாலும் முதமுதல் வாங்குன கம்ப்யூட்டர வெறும் டைப்ரைட்டரா ரொம்ப நாள் யூஸ் பண்ணோம். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு 1GB ஹார்ட் டிஸ்க்கும் 32 mb RAM எதுக்குமே யூஸ் ஆகாதுல்ல? அப்புறம் கடைசியில ஒரு நெய்பரோட பையனுக்கு சும்மாவே குடுத்துட்டேன்... அம்பாதாயிரத்தோட மதிப்பு பத்து வருசம் கழிச்சி பூஜ்யம்தான்!

என்னுடைய அனுபவத்தை தொடர்ந்து என்னுடைய நெருங்கிய பதிவர் நண்பர்களான:

தருமியையும்  துளசியையும் அழைக்கிறேன். நா எழுதனத விட அவங்களோட அனுபவம் சுவாரஸ்யமா இருக்கும்னு நினைக்கிறேன்.




*********

19 ஜூலை 2013

என் முதல் கணினி அனுபவம்!



எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்ட கலியுகத்தில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக கணினியை இயக்க கற்றதை மீண்டும் ஒருமுறை அசைபோட்டால் என்ன என்று தோன்றுகிறது. இதற்கு பதிவர் நண்பர் ராஜியும்  ஒரு காரணம்.

'இந்த மாதிரி இலக்கண சுத்தமா எழுதணுமா என்ன? சும்மா பேச்சு நடையில எழுதுங்க சார், இப்ப அதான் ஃபேஷன்!'

சரி, சரி... பழக்க தோஷம்... அவ்வளவு ஈசியா போயிருமா என்ன?

விஷயத்துக்கு வருவோம்...

இன்னைக்கி கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லேன்னாலும் இந்தியாவுல முதல் முறையா அதிக அளவுல computerisation நடந்தது வங்கிகள்லதான்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம்தான் ரயில்வே.

Banksla ஆட்டோமேட்டிக் லெட்ஜர் போஸ்ட்டிங் மெஷின்னு (ALPM) சொல்லி ஒரு பூதாகரமான மெஷின அறிமுகப்படுத்துனது எப்ப தெரியுமா? 1980! ஆச்சரியமா இருக்குல்ல? ஏறக்குறைய முப்பது வருசத்துக்கு முன்னால! அப்போ பெரும்பாலான அரசுத் துறை வங்கிகள்ல இந்த மெஷின அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களோட கணக்கு புத்தகத்த அழகா ஸ்டேட்மென்டா அடிச்சி குடுத்துருவாங்க. அதுதான் முதல் இயந்திரமயமாக்கல்.

அதுக்கப்புறம் படிப்படியா ஏறக்குறைய எல்லா வங்கி அலுவல்கள்லயும் கம்ப்யூட்டர் நுழைஞ்சி புது ரெக்ரூட்மென்டே இல்லாம செஞ்சிருச்சி. அப்போ இத எதிர்த்து எல்லா வங்கி ஊழியர்களும் சேர்ந்து போராட்டமெல்லாம் செஞ்சோம். ஒன்னும் நடக்கல. யூனியன் ஆளுங்கள சமாளிக்கறதுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அலவன்ஸ்னு கொண்டு வந்தாங்க... மாசம் ரூ.100/-நமக்கு அலவன்ஸ் கிடைச்சா போறும் புதுசா ஆள் எடுத்தா என்ன, எடுக்காட்டி என்னன்னு யூனியன் ஆளுங்களும் வாய மூடிக்கிட்டாங்க. ஆனா அதுக்கப்புறம் இருக்கற ஆளுங்களும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் பிராஞ்சில இருக்கற கிளார்க் ஒவ்வொருத்தரும் இத்தன வவுச்சர் போஸ்ட் பண்ணித்தான் ஆவணும்னு ரூல் வந்தப்போ அடிச்சி, அடிச்சி கை சுளுக்குற அளவுக்கு வேலை. கணினிமயமாக்கல் வேலை பளுவை குறைக்கும்கறதெல்லாம் சும்மா. ஆரம்பத்துல வேலைப்பளு பல மடங்கு ஜாஸ்தியாருக்கும்கறத அனுபவிச்சி உணர்ந்தவங்க நாங்க.

எங்க வங்கியில முதல் முறையா கம்ப்யூட்டர் நுழைஞ்சது 1994-95ன்னு நினைக்கறேன். நான் அப்போ மும்பையில இருந்தேன். டெய்லி ஆப்பரேஷன computerise பண்ண முயற்சிகள் துவக்கப்பட்ட காலம். In-house டெவலப்மென்ட்டுன்னு சொல்லி நாலஞ்சி கத்துக்குட்டி பசங்க க்ளிப்பர்னு (clipper) ஒரு பழங்கால மென்பொருள்ல Integrated Banking software (IBS) ஒன்னெ செஞ்சி எடுத்துக்கிட்டு வந்து போட்டாங்க. அப்பல்லாம் விண்டோஸ் வரலை. எல்லாமே DOS commandலதான். மொத்த சாஃப்ட்வேரும் ஒரேயொரு ஃப்ளாப்பில (floppy) அடங்கிரும். A ட்ரைவ்ல போட்டு insன்னு சொன்னா போறும் இன்ஸ்டாலாயிரும்.

எங்க ஐடி டிவிஷன்லருந்து வந்த ஒருத்தர் - இவர் டெவலப்மென்ட் டீம சேர்ந்த ஆள் இல்ல. வெறும் இன்ஸ்டல்லேஷந்தான் - படு பயங்கர ஸ்பீட்ல இத இத இப்படி செய்யணும்... இத செய்யக் கூடாதுன்னு ஒரு ரெண்டு அவர்ல காமிச்சிட்டு போய்ட்டார். அப்போ என் கீழ இருந்த பத்து குமாஸ்தாங்கள்ல ரெண்டு பேர் மட்டும் தமிழ்காரங்க. மத்தவங்க எல்லாம் கேரளம். ஒரேயொரு ஆள் மும்பை. தமிழ் பசங்க ரெண்டு பேரும் பயங்கர சூட்டிகையான பசங்க. ஒடனே கப்புன்னு புடிச்சிக்கிட்டாங்க. அதுவரைக்கும் அவங்கள அவ்வளவா மதிக்காத கேரளமும் மும்பையும் அன்னையிலருந்து இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்டூடன்ஸாய்ட்டாங்க.

நானும்தான்.

ஆனாலும் பிராஞ்ச் மேனேஜர் ஆச்சே... கிளார்க்குங்களோட சேர்ந்து ஒக்காந்து படிக்கறதுக்கு கொஞ்சம் கூச்சம். அதனால அந்த ரெண்டு பேரையும் தாஜா பண்ணி (சாயந்தரம் ஆனா ரெண்டு பீர் பாட்டில் வாங்கி தந்துருவேன். அதான் கூலி!) மத்த கிளார்க்குங்க எல்லாம் வேலைய முடிச்சிட்டு போனதுக்கப்புறம் இது என்ன, அது என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குவேன். நான் ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரிந்து வைத்திருந்ததால, கீபோர்ட் எல்லாம் அத்துப்படி. மத்தவங்கள மாதிரி esc பட்டன் எங்கருக்கும் ctrl பட்டன் எங்கிருக்குன்னுல்லாம் கேனத்தனமா கேக்க வேணாம். ஆனாலும் dos கமான்ட் எதுவும் தெரியாது. அந்த பசங்க பொறுமையாத்தான் சொல்லி தருவாங்க. ஆனாலும் மண்டையில ஏறாது. என்னடா இவன் ஒரு ரோதனைங்கறா மாதிரி பாப்பாங்க. இருந்தாலும் மேனேஜர என்னத்த சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டு (சாயந்தரம் கிடைக்கப்பொற பீர் வேற ஒரு இன்சன்ட்டிவாச்சே) ரொம்பவுமே பொறுமையா சொல்லித் தந்தத மறக்க முடியாது. ஆனாலும் சாஃப்ட்வேற முழுசா ஆப்பரேட் பண்றது மட்டும் வரவே இல்ல. கீபோர்டே தெரியாத கிளார்க்குங்க எல்லாம் ரெண்டு மூனு மாசத்துல படிச்சிக்க முடியறப்போ நமக்கு ஏன் இது வரவேயில்லன்னு மாஞ்சி போயிருக்கேன். அப்புறம் ப்ளேன் (plane) ஓட்ட வேண்டியவன் சைக்கிள் ஓட்ட முடியலையேன்னு கவலைப்படக் கூடாதுன்னு (சும்மா ஒரு கெத்துதான்) நெனைச்சிக்கிட்டு நம்ம மேனேஜர் வேலைய மட்டும் பார்ப்போம்னு அத்தோட விட்டுட்டேன்.

அப்போ dosல வேர்ட் ஸ்டார்னு ஒரு ப்ராசர் இருந்துது. ஆஃபீஸ் லெட்டர்லாம் கம்ப்யூட்டர்லதான் எழுதணும்னு எங்க HO ஆர்டர் போட்டதும் இது என்னடா புது தலைவலின்னு இருந்துது. நல்லவேளையா நம்ம தமிழ்பசங்க மும்பை முழுசும் சுத்தி ஒரு கைட (guide) வாங்கிக்கிட்டு வந்து குடுத்தாங்க. சின்ன குழந்தைக்கு புரியறா மாதிரி சிம்பிளா ஒவ்வொரு கமான்டும் இருந்ததாலயும் எப்படியும் இத தெரிஞ்சிக்கிட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சதாலயும் நாலஞ்சி வாரத்துல அதையும் படிச்சி நம்ம பசங்களே மெச்சற அளவுக்கு தேறிட்டேன்.

அப்புறம் 1995ல windows 3.1.வந்து dos உலகத்தையே அசைச்சி போட்டுது. அடுத்த நாலஞ்சி வருசத்துல கணினி இல்லாத வங்கி கிளையே இல்லேங்கறா மாதிரி விரிவடைஞ்சது.

இருந்தாலும் தனியா வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணுங்கற என்னோட ஆசை 1999லதான் நடந்துது. அது ஒரு பெரிய கதை...

அத நாளைக்குச் சொல்றேன். 

18 ஜூலை 2013

இளவரசனின் மரணம் தற்கொலைதானாம்!

 "எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பரத்வாஜ், மில்லோடாமின், சுதீர்குமார் குப்தா உள்ளிட்டோர் கடந்த சனிக்கிழமை தருமபுரியில் மறு பிரேத பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில், இளவரசன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் என்றும், அவரை யாரும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன."

இது இன்றைய தினசரிகளில் வெளியாகியுள்ள செய்தி.

அப்படியானால் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அதன் பிறகு பிரேதத்தை மீண்டும் ஆய்வு செய்த இரு மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளிலும் இதைத்தான் தெரிவித்திருந்தனரா?

அந்த இரு மருத்துவர்களும் வெவ்வேறு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததால்தானே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை மீண்டும் ஆய்வு செய்ய அழைத்தனர்? அப்படியானால் அந்த இரு மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கைககளில் காணப்பட்ட முரண்பாடுகள் என்னென்ன? ஒருவர் தற்கொலை என்றும் மற்றொருவர் ரயில் விபத்து என்றும் அறிவித்திருந்தனரா?

அதுதான் உண்மை என்றால் தற்கொலை என்று ஏன் ஒருவர் மட்டும் அறிவித்திருக்க வேண்டும்?

சரி, ரயில் விபத்துதான் காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியிருந்தால் அந்த அறிக்கையின் முழுவிவரத்தையும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிட வேண்டாமா?. அப்போதுதானே இந்த விவகாரத்தில் உள்ள சர்ச்சை தீரும்?

இல்லையென்றால் திருமா முன்பே கூறியுள்ளதுபோன்று இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்யப்பட்ட நாடகம் என்பது உண்மை என்றாகிவிடக் கூடும்.

:இப்போது, இளவரசனின் இறப்பிலும் பா.ம.க.விற்கு எதிராக சிலர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இளவரசனின் இறப்பால் வேதனையடைந்தோம். தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று அவர் எழுதி வைத்த பின்னரும் நீதிவிசாரணை கோரி வருகின்றனர்."

இது அன்புமணியின் அறிக்கை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இருக்கிறது!

எது எப்படியோ, மூன்று மாத காலத்திற்கும் மேலாக தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்லது.

*********



11 ஜூலை 2013

சாதிகள் உள்ளதடி பாப்பா!



பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதை வைத்து ஆண் ஜாதி, பெண் ஜாதி என்ற இரு சாதிகளைத் தவிர வேறு சாதிகள் இருக்கலாகாது என்று பொருள்கொள்ளலாகாது.

இந்த உலகம் உள்ளவரையில் இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் சாதி இருக்கத்தான் செய்யும். சாதிகளுக்கிடையில் மோதல்களும் இருக்கத்தான் செய்யும்.

இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஆண், பெண் ஜாதிகள் மட்டுமல்லாமல் பகுத்துணரும் அடிப்படையில் படித்தவன்-படிக்காதவன் என்ற பாகுபாடும் பொருளாதார அடிப்படையில் பணக்காரன் - ஏழை என்கிற பாகுபாடும் இருக்கத்தான் செய்கிறது.

சாதி அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்துவதைத்தான் அன்றைய பாரதியாரும் அவருக்கு பின்னால் வந்த பல பகுத்தறிவுவாதிகளும் தவறு என்று உரைத்தார்கள்.

சாதி அடிப்படையில் மனிதர்களை பிரித்துப்பார்ப்பதும் இழிவான செயல் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இருவேறு சாதிகளைச் சார்ந்த இருவர் இணைந்து வாழ்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம்தானா என்பதில்தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. இதைத்தான் என் கணவர் இளவரசனுடன் எனக்கு compatibility இல்லை ஆகவே அவருடன் இணியும் இணைந்து வாழ்வது சாத்தியாமாகாது என்றார் வித்யா. அவர் உணர்ந்துதான் இதை கூறினாரா அல்லது சாதீய வெறி பிடித்த சிலர் இதை ஒரு சாக்காக கூறுமாறு அவரை வற்புறுத்தினார்களா என்பது தர்க்கத்துக்குரிய விஷயம். அதைப்பற்றி தர்க்கிப்பதல்ல என்னுடைய நோக்கம்.

Compatibility என்ற ஆங்கில வார்த்தையை கருத்தொருமித்தல் என்று மட்டும் பொருள்கொள்வதில் அர்த்தமில்லை. அது இன்னும் பல உள்ளர்த்தங்களைக் கொண்ட வார்த்தை என்றும் கூறலாம். கருத்தில் ஒற்றுமை, அவற்றை செயல்படுத்தும் விதங்களில் ஒற்றுமை, பழக்க வழக்கங்களில் ஒற்றுமை,பேசும் விதங்களில் உள்ள ஒற்றுமை, அணுகுமுறையில் உள்ள ஒற்றுமை, பிறரை அனுசரித்துப் போவதில் உள்ள ஒற்றுமை என பல்வேறு விஷயங்களைக் கூறலாம்.

நட்பு அடிப்பைடையில் இரு வேறு சாதியினர் பழகுவது என்பது எளிதுநட்பிலும் கூட சாதீயத்தை புகுத்த எந்த சாதி கட்சிகளோ அல்லது சாதீய சமூக அமைப்புகளோ முயல்வதில்லை என்பதும் உண்மை.

ஒருவனை அல்லது ஒருத்தியை அவர்களிடமுள்ள நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்வது என்பது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டும் என்கிற சூழலில் உடலளவில் மட்டுமல்லாமல் உள்ளத்தளவிலும் என்னுடன் ஒத்துப்போகவேண்டும் என்று நினைக்க எனக்கு எல்லாவித உரிமையும் உண்டு.

அப்படியானால் காதலிக்கும்போது இது தெரியவில்லையா என்று கேட்டால் நிச்சயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை என்றுதான் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பலரிடம் இருந்தும் பதில் வரும். காதல் என்பது யார், எவர் என்று புரிந்துக்கொள்ளும் முன்பே வருவது. இவன் இன்னான், இன்னாருடைய மகன் என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டு வருவதல்ல காதல்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம், பலருடன் பழகுகிறோம் ஆனால் ஒருவனை, ஒருத்தியைத்தான் திருமணம் செய்துக்கொள்கிறோம். பலருடன் பழகினாலும் ஒருசிலருடன்தான் நட்பு வைத்துக்கொள்கிறோம். அவர்களுள் ஒருசிலருடன்தான் நெருங்கிப் பழகி நம்முடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்கிறோம். நட்பிலேயே இவ்வளவு பகுத்துப் பார்த்தல் தேவை என்கிறபோது என்னுடன் இணைந்து வாழ்கிறவன்/ள் என் கருத்துடன் மட்டுமல்லாமல், நடை, உடை, பாவனை, என அனைத்திலுமே ஒத்துப்போக வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லையே.

இதற்கும் சாதிக்கும் என்ன உறவு என்கிறீர்களா?

நிச்சயம் உண்டு.

நான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வங்கி மேலாளராக பணியாற்றி பலதரப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். பல சாதிகளைச் சார்ந்த வாடிக்கையாளர்களின் வீடுவரை சென்று பழகியிருக்கிறேன். உண்டு உறவாடியிருக்கிறேன். அவர்களுடைய திருமணங்களில், புகுமுனை விழாக்களில், ஈமச்சடங்குகளில் கலந்துக்கொண்டிருக்கிறேன்.

அந்த அடிப்படையில் சொல்கிறேன். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு பிரத்தியேக குணம், பேச்சு, நடை, உடை, பாவனை என இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் பேசும் பாணியிலிருந்து, உண்பது, உறங்குவது, சிந்திப்பது ஆகியவற்றை  மட்டும் வைத்து இவர்கள் இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை கூற முடியாவிட்டாலும் இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை கணிப்பது சாத்தியம்.

1. சில சாதிகளைச் சார்ந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். கோபம் என்பது அறவே வராது. தானுண்டு தன் வேலயுண்டு என்று இருப்பார்கள். தன் வீடு, தன் குடும்பம் என்பதில்தான் அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் எல்லாமே.

2. சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். பேசிக்கொண்டிருக்கும்போதே கையை நீட்டுவார்கள். பேசி தீர்க்கும் பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவற்றிற்கும் வெட்டும் குத்தும் தான் தீர்வு.

3. இன்னும் சிலர் ஒழுங்கீனத்திற்கு பெயர்போனவர்கள். சொல்லிலும் ஒழுக்கம் இருக்காது செயலிலும் ஒழுக்கம் இருக்காது. வீடு, வாசலிலும் சுத்தம் இருக்காது. அவர்களுடைய வீட்டிற்குள் சென்றுவிட்டால் எது எங்கும் இருக்கவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் எங்கும் எதுவும் இறைந்து கிடக்கும்.

4. வேறு சிலர் சுத்தத்திற்கு பெயர்போனவர்கள். உள்ளத்தில் சுத்தம் உள்ளதோ இல்லையோ, இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். அவர்களை பிற சாதியினர் தொட்டாலும் தீட்டு, அவர்களை இவர்கள் தொட்டாலும் தீட்டு என்பார்கள். பார்ப்பதற்கும் பாங்காக, சுத்தமாக இருப்பார்கள்.

இப்படி பலதரப்பட்ட குணாதிசயங்கள் அடைப்படையிலேயே இவர்கள் இன்ன சாதியைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்ப்ள்ளது என கணித்துவிட அனுபவம் உதவுகின்றது.

இதில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ அல்லது மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ  எந்தவிதத்திலும் compatibility (கருத்தொற்றுமை) இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

காதலிக்கிற ஒருசில மாதங்களிலோ அல்லது ஒருசில வருடங்களிலோ தெரிந்துக்கொள்ள முடியாத இத்தகைய வேற்றுமைகளை திருமணம் முடிந்து இணைந்து வாழ்கிறபோதுதான் பலராலும் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. முந்தைய தலைமுறைகளில் இதைத்தான் 'வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்' என்றார்கள் போலிருக்கிறது. எள்ளளவும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் குடும்பம் பிளவுபடலாகாது என்பதை உணர்த்தத்தான் 'கண்ணாலானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' அல்லது 'அடிக்கிற கைதான் அணைக்கும்' அல்லது 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற பழமொழிகளையும் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது. இந்த பழமொழிகள் எல்லாமே ஆடவன் எத்தனை குணக்கேடுள்ளவன் என்றாலும் பெண் அதை பொருட்படுத்தலாகாது என்பதைத்தான் உணர்த்துகின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இந்த வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் அனுசரித்துச் செல்வதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணுபவர்களும் நமக்காக இல்லாவிட்டாலும் நம் குழந்தைகளுக்காகவது இணைந்து வாழத்தான் வேண்டும் என கருதுபவர்களும் இந்த வேற்றுமைகளை பெரிதாக எண்ணாமல் தாம்பத்திய சிறையிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அதெல்லாம் எங்களால் முடியாது என்று எண்ணுகிறவர்கள் compatibility இல்லை என்று எளிதாக கூறிவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.


அப்படித்தான் வித்யாவும் கூறினார் என்று நினைக்கிறேன். கணவன்-மனைவி இருவருக்கிடையில் திருமணத்திற்குப் பிறகு சாதி பேதத்தை விட தங்களுக்கிடையில் அன்றாடம் ஏற்படும் கருத்து பேதங்கள்தான் பெரிதாக தெரியும். இதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

ஆகவேதான் சொல்கிறேன். திருமணங்களைப் பொருத்தவரை 'சாதிகள் உள்ளதடி...' என்று. ஒரே சாதிக்குள் திருமணம் செய்துக்கொள்வதற்கே நாள்,நட்சத்திரம், பொருத்தம் என்றெல்லாம் பார்க்கிற இந்த சமுதாயத்தில் இருவேறு சாதியினர் திருமணம் செய்துக் கொண்டு அனுசரித்துச் செல்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதும் என்னுடைய கருத்து.

இன்று சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரிக்கின்றவர்களும் தங்களுடைய சொந்த வாழ்க்கையை சிறிது நேரம் திரும்பிப் பார்த்தாலே போதும், இதை உணர்ந்துக்கொள்வார்கள். அன்றைய மேடைப் பேச்சாளர்கள் பேச்சில் ஒன்று செயலில் ஒன்று என்று வாழ்ந்ததைப் போன்றுதான் இன்றைய சமூகவலைத்தளங்களில் சாதீயம் இல்லை என்று கூப்பாடு போடுபவர்களும்
என்றாலும் மிகையாகாது. ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லையடி கண்ணே என்பதுபோல்தான் இந்த அறைகூவல்களும்.

இதனால் மட்டுமே இன்றைய சாதீய கட்சிகளையும் அவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் சரி என்று ஏற்றுக்கொள்கிறவன் என்று முத்திரை குத்திவிடாதீர்கள்! கலப்பு திருமணத்தை குடும்பத்திற்குள்ளேயே நடைமுறைப்படுத்தியவன் நான் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.


*****