31 டிசம்பர் 2013

என் புத்தாண்டு உறுதிமொழிகள்!!

இதோ மீண்டும் ஒரு வருடம் என்னைக் கடந்து போகிறது. 

கடந்து சென்ற வருடம் என்னை எவ்வாறெல்லாம் பாதித்தது. என்னென்ன அனுபவங்களை தந்தது என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். 

பணியில் இருந்த காலத்தில், அதாவது கணினி என்கிற ஒரு வினோதம் வங்கியில் அடியெடுத்து வைத்திராத காலத்தில், ஆண்டு இறுதி என்பதே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்க டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவையும் கடந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததுண்டு. ஆனாலும் வருட இறுதி ஜெனரல் லெட்ஜர் பாலன்ஸ் ஆகிவிட்டது என்கிற ஒரு மனநிம்மதியுடன் புத்தாண்டின் விடியற்காலையில் சில்லென்று காற்று முகத்தில் பட ஸ்கூட்டரில் பாரிஸ் கார்னரில் இருந்து புரசைவாக்கத்திலிருந்த வீட்டிற்கு வந்த சுகமான அனுபவமும் நினைவுக்கு வருகிறது.

பிறகு புகுந்த கணினி அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையையும் கூட இயந்திரமயமாக்கிவிட்டது. இப்போதெல்லாம் நாம் எதையுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற சவுகரியம் - அது சில சமயங்களில் அசவுகரியமாகவும் ஆகிப்போகிறது. மனைவியின் செல் நம்பரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை - எத்தனை தொலைவில் உள்ளவர்களுடனும் நொடியில் தொடர்புக்கொள்ளக் கூடிய சவுகரியம் - இதிலும் அசவுகரியம் உள்ளதே! பிறந்த நாள் வாழ்த்தை சொல்ல கடைசி நிமிடம் வரையிலும் காத்திருந்து சொல்ல முயலும்போது busy tone இடையில் வந்து பிறகு இணைப்பு கிடைக்கும்போது இப்பத்தான் உங்களுக்கு சொல்ல தோனிச்சா என்கிற மகள்களின் எரிச்சலையும் சம்பாதித்து கொடுத்திருக்கிறது - இப்படி பல சவுகரியங்கள் இருந்தாலும் இவை முன்பு தனிமனித உறவுகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கத்தை, அன்னியோன்யத்தை குறைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.

இணையம் முதன் முதலில் நம் வாழ்வில் நுழைந்தபோது அது ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனால் அதுவே நாளடைவில் ஒரு அலாதி அனுபவமாக மாறி இப்போது அதுவே நம்முடைய நாட்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கிறதை காண முடிகிறது.

இந்த இணைய அடிமைத்தனம் இன்று பல தனிமனித உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. 

கடந்த பத்து நாட்களாக மலேசியாவிலிருந்து வந்திருந்த மகள் மற்றும் பேத்தியுடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே இணையத்திற்கு வருவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. எதையோ பறிகொடுத்துவிட்டதுபோன்ற எண்ணம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த அனுபவம் எனக்கே வியப்பாக இருந்தது. நான் எதற்கும் எந்த சூழலும் அடிமையாகிவிடுபவன் இல்லை என்று எண்ணியிருந்த எனக்கு என்னுடைய இந்த பலவீனம் ஒருவித அச்சத்தைக் கூட அளித்தது. 

ஆனால் முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு பேத்தியும் என்னுடன் நெருங்கி வந்துவிட நேரம் போனதே தெரியாமல் போனது. இணையத்திற்கு வெளியிலும் வாழ்க்கை இருப்பதை எனக்கு உணர்த்தியது  இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று மாலை அவர்கள் திரும்பிச் சென்றதும் மீண்டும் ஒரு வெறுமை. நானும் என்னுடைய மனைவியும் தனித்துவிடப்பட்டதுபோன்ற ஒரு உணர்வு. மனைவிக்கு சமையல், தையல், தோட்டம் என்ற பல்வேறு அலுவல்கள். ஆனால் எனக்கு? இணையத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போன்றதொரு வெறுமை. இத்தகைய எண்ணம் எனக்கு மட்டும்தானா அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அனைவருக்குமே உள்ளதா என்று தெரியவில்லை. 

இதிலிருந்து விடுபட வேண்டும். ஆகவே கடந்த வருடம் இணையத்தில் இருந்த நேரத்தில் பாதியளவு மட்டுமே இந்த வருடம் செலவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இது அத்தனை எளிதல்ல என்றாலும் இதை சாத்தியமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இது நல்ல முடிவுதானா இதை தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இணைய பிரவேசத்தால் நின்றுபோயிருந்த வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும். மறந்துபோயிருந்த நண்பர்களை  தேடிப்பிடிக்க வேண்டும், தொடர்பற்று போயிருந்த சொந்தங்களுடனான உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

இவைதான் எதிர்வரும் புத்தாண்டு உறுதிமொழிகள்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


16 டிசம்பர் 2013

அர்விந்த் கெஜ்ரிவால்தான் நாட்டிலேயே நேர்மையானவரா?

அர்விந்த் கெஜ்ரிவாலை அறியாத இந்தியர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமடைந்தவர் அவர்.

சாமான்யர்கள் கட்சி என்ற ஒரு அரசிய கட்சியை அவருடைய குரு என்று கருதப்படும் அன்னா ஹசாரேவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் துவங்கி நடந்து முடிந்த தில்லி சட்டசைபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெற முடியாவிடினும் வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றவர். 

நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முன்வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி முன்வந்தபோதும் உங்களுடைய ஆதரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதுதான் எங்கள் நிபந்தனைகள் என்று பல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைத்தவர். 

அது போதாதென்று தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக தெரிவு செய்யப்பட்ட பிஜேபியையும் கூட இந்த நிபந்தனைகளுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டு மிரட்டியவர். 

எங்களுடைய வாக்காளர்கள் எங்களை தனியாக அரசு அமைக்கும் அளவுக்கு வாக்களிக்கவில்லை, ஆகவே எதிர்கட்சியாக செயல்படவே விரும்புகிறோம். யாரிடமும் ஆதரவும் கோர மாட்டோம், யாருக்கும் ஆதரவும் அளிக்க மாட்டோம் என்ற Dog in the manger மாதிரியான முடிவை எடுத்து அதில் விடாப்பிடியாக நிற்பவர். 

எங்களைப் போன்ற சித்தாந்தம் உடைய நேர்மையான அரசியல்வாதிகள் (அதாவது தில்லி தேர்தலில் ஜெயித்தவர்கள்) வேறெந்த கட்சியிலிருந்தாலும் (காங்கிரஸ், பிஜேபி என்று கொள்க) தங்களுடைய கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுடைய கட்சிக்கு வரலாம் என்றும் அறிக்கையிட்டவர்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் சொற்பமே காலமே கடந்துள்ளது என்றாலும் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்துக் காட்டியவரும் இவரே. 

இவருடைய பின்னணியை (Background) சற்று ஆராய்ந்தால் இவருடைய இத்தகைய போக்குக்கான காரணங்கள் விளங்கும் என்பதால் இணையதளத்தை ஆய்வு செய்ததிலிருந்து கிடைத்த தகவல்கள்:

இவர் பிறந்தது ஆகஸ்ட் பதினாறாம் நாள். அதாவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள். ஆங்கில நட்சத்திர வரிசையில் பார்த்தால் சரியான சிம்ம ராசிக் காரர். பிறந்த நட்சத்திரத்தின் விவரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பலருக்கும் patriotism எனப்படும் நாட்டுப்பற்று சற்று அதிகமாக காணப்படுவதைக் காண முடிகிறது. (நம்முடைய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சுதந்திரத் தினத்தன்று பிறந்தவர். ஆகவேதான் அவருடைய பல  திரைப்படங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாகவே இருப்பதை பார்த்திருக்கிறோம். பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகர் மனோஜ்
குமாரும் இந்த மாதத்தில் (அதாவது சிம்மராசிக்காரர்கள் (Lion) பிறக்கும் மாதமான 22 ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் 21 வரையிலான நான்கு வாரங்கள்) பிறந்தவர்தான். Mr. Bharat உட்பட பல தேசபக்தி படங்களை எடுத்தவர்!  

ஆகவே கெஜ்ரிவாலும் அதிக அளவிலான தேசபக்தியும் ஒரு சிம்ம ராசிக்காரருடைய அனைத்து குணநலன்களும் கலந்து ஒரு புரியாத புதிராக (enigma) இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

அவருடைய கட்சிக்கு சாமான்யர்கள் கட்சி என்று பெயர் வைத்திருந்தாலும் அவர் BITS, Pilaniயில் படித்து பொறியாளர் பட்டம் பெற்ற, பொருளாதார ரீதியில் வசதிவாய்ந்த தந்தைக்குப் பிறந்தவர். ஒரு இந்திய சாமான்யன் படித்து ஆளாக படும் சிரமங்கள் எதையும் அனுபவிக்காத Born with a silver spoon ரகம். அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான். படித்து முடித்த கையோடு டாட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் படித்த படிப்புக்கு சிறிதும் பொருத்தமில்லாத அரசு நிர்வாக பணியில் நுழைய விரும்பி இரண்டே ஆண்டுகளில் அதை துறந்தவர் அவர். IAS அதிகாரியாக முடியாமல் IRS அதிகாரியானவர். அங்கும் நிலைக்க மனம் இடம் கொடுக்கவில்லை. பணியில் இருந்தபோதே மேல் படிப்புக்கென்று விடுப்பில் சென்றவர். ஆனால் அவரை இழக்க விரும்பாத அரசு ஊதியத்துடனான விடுப்பு வழங்குகிறோம் என்றது, ஒரேயொரு நிபந்தனையுடன். அதாவது படிப்பு முடிந்து திரும்பியதும் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் விடுப்புக் காலத்தில் அரசிடம் இருந்து பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.

அரவிந்த் படிப்பு முடிந்து திரும்பி வந்தார். ஆனால் அவரால் பணியில் நிலைத்து நிற்க முடியவில்லை. இதுவும் சிம்ம ராசிக் காரர் குணம்தான். எதிலும் திருப்தியடையாத மனநிலை. யாருக்கும் பணிந்து செல்ல முடியாத குணநலன். பல்லைக் கடித்துக்கொண்டு பதினெட்டு மாதங்கள் பணியாற்றிவிட்டு மீதமிருந்த பதினெட்டு மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பில் (Loss of Pay leave of absence) சென்றார். அவர் கணக்குப்படி முப்பத்தியாறு மாதங்கள் அதாவது அரசு விதித்த மூன்றாண்டு பணிக்காலக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் அரசு உத்தியோகம் ஆனாலும் தனியார் உத்தியோகம் ஆனாலும் ஊதியமில்லா விடுப்பு சர்வீஸாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதை வேண்டுமென்றே மறந்துப்போனார். இதிலும் தான் ஒரு சிம்மராசிக் காரர் என்பதை காட்டினார். என்னை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற மனப்பாங்கு. விதியை மீறிவிட்டீர்கள் ஆகவே பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்துங்கள் என்றது அரசு. 

ஆனால் கெஜ்ரி ஒத்துக்கொள்ளவில்லை. ஊழலுக்கு எதிராக புதியதொரு அணியைத் துவக்கியிருந்த அவருடைய குரு அன்னா ஹசாரேயுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படத் துவங்கியதால் தன்னை அரசு பழிவாங்குகிறது என்று சொந்தப் பிரச்சினையை அரசியலாக்கினார். இதுவும் ஒருவகையில் ஊழல்தான், கையாடல்தான் என்பதை சவுகரியமாக மறந்தார். ஆனாலும் அரசு விடவில்லை. பிறகு நண்பர்கள், தெரிந்தவர்களிடத்திலிருந்தெல்லாம் கடன் வாங்கி அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினார். 

படித்த படிப்புக்கு பொருத்தமான வேலை டாடா நிறுவனத்தில் கிடைத்தும் அதை உதறிவிட்டு அரசு பணியில் நுழைந்து பிறகு அதுவும் சலித்துப்போய் பொதுஜன சேவையில் இறங்கி பிறகு ஊழலை ஒழிக்க போராட்டங்கள் நடத்தி, அன்னா ஹசாரேவின் ஆத்மார்த்த சீடராக சிறிது காலம் அவருடைய போராட்டங்களில் கலந்துக்கொண்டு பிறகு அந்த கூட்டத்திலிருந்த ஒரு சிலருடன் ஒத்துப் போக முடியாமல் அதிலிருந்து விலகி தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு மீண்டும் பொதுஜன சேவையில் இறங்கி பிறகு அதையே ஒரு அரசியல் கட்சியாக உருவாக்கி பல நல்ல, சில சில்லறைத்தனமான போராட்டங்களையெல்லாம் நடத்தி இப்போது தில்லி சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவரை அவருடைய சொந்த தொகுதியிலேயே துணிச்சலுடன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கெஜ்ரிவால்.

இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை முறை தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டாலும், இத்தனை சாதனைகளைப் படைத்திருந்தாலும் அவருடைய பிறப்பு குணம் அவரை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை என்பது உறுதி. அவர் எத்தனை நேர்மையான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் தன்னை விட்டால் இந்த உலகில் குறைந்தபட்சம் இந்திய அரசியலில், நேர்மையாளன் இல்லை என்பதுபோல் உள்ள அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் அவரை ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்துக்கொண்டே இருக்கும். அதற்கு அவருடைய அளவிட முடியாத ஈகோவும் ஒரு முக்கிய காரணம். 

காங்கிரஸ் ஒரு ஊழல்வாதிகளின் கட்சி ஆகவே அதனுடைய ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதில் எவ்வித பொருளும் இல்லை என்ற அவருடைய நிலைப்பாட்டில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதை எடுத்துச் சொன்ன விதம்தான் அவரை ஒரு நடைமுறைக்கு சாத்தியமில்லாத மனிதர் (Impractical) என்று காட்டுகிறது.  

மேலும் நேர்மை (Honesty) என்பது ஒன்றும் புனிதமல்ல (Virtue). நாம் எல்லோருமே ஒருவகையில் நேர்மையாளர்கள்தான். ஆனால் எந்த அளவுக்கு என்பதில்தான் வேறுபாடே. நான்  அப்பழுக்கில்லாதவன் என்று யாராலும் கூறிக்கொள்ள முடியாது. பைபிளிலும் கூட ஏசுபிரானை ஒருவர் நல்லவரே என்று அழைத்தபோது இறைவன் மட்டுமே நல்லவர் என அழைக்கப்படத் தகுதியுள்ளவர் என்று பதிலளித்தார். இறைவனை விட்டால் தன்னையறியா பாலகனை கூறலாம். நிச்சயம் கெஜ்ரிவால் தன்னை இவ்விருவருடனும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது என்று கருதுகிறேன். 

ஆகவே அவர் தன்னைத்தானே ஏற்றிவைத்துக்கொண்டுள்ள உயர்ந்த பீடத்திலிருந்து (High pedestal) சற்று இறங்கி வந்து தன்னையும் தன்னுடைய கட்சியையும் நம்பி வாக்களித்த தில்லி மக்களுக்கு உருப்படியாக எதையாவது செய்ய நினைத்தால் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறும் காங்கிரசின் ஆதரவைப் பெற்று அரசு அமைக்க முன்வர வேண்டும். 

காங்கிரசின் ஆதரவை அவராக கேட்டு பெறவில்லை. ஆகவே அவர்களுடைய ராகத்திற்கு ஆடவேண்டிய தேவையும் இல்லை. தன்னுடைய கட்சி தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் செய்வதாக வாக்களித்தாரோ அதையெல்லாம் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து தாராளமாக செய்யலாம். நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்லிக்கொண்டு ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஏதேனும் நிபந்தனைகளை முன்வைத்தால் அப்போது கெஜ்ரிவால் எவ்வித தயக்கமும் இல்லாமல் முதலமைச்சர் பதவியை தூக்கியெறிந்துவிட்டு சட்டசபையைக் கலைத்துவிடச் சொல்லி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாமே. அல்லது எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டாலும் அது மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை அதிகமாக்குமேயல்லாமல் நிச்சயம் குறைத்துவிட முடியாது. 

ஆனால் திருவிளையாடல் நாகேஷைப் போல எனக்கு கேள்விகளைக் கேட்கத்தான் தெரியும் என்கிற பாணியில் தொடர்ந்தால் இவருக்கு போராட்டங்கள் நடத்தத்தான் தெரியும் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யத் தெரியாது போலிருக்கிறது என்று மக்கள் நினைத்துவிட வாய்ப்புள்ளது.  

***********

12 டிசம்பர் 2013

மன்மோகன் சிங்கின் பதவி பறிக்கப்படுமா?

திரு. மன்மோகன் சிங் பல ஆண்டுகளாக பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றி அவருடைய பொருளாதார அறிவுக்கும் திறனுக்கும் பாராட்டப்பட்டவர்தான் என்றாலும் கடந்த பத்தாண்டுகளாக தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களையும் - அமைச்சரவை சகாக்கள், தன்னுடைய இலாக்கா அதிகாரிகள் - தேசத்தையும் சரிவர வழிநடத்த தவறியதன் காரணமாக செயலற்ற பிரதமர் என்ற முத்திரையுடன் தன்னுடைய சுமார் இருபதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளார்.



கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்று உலகளவில் பொருளாதார மேதை, சிறந்த நிர்வாகி என்று ஏற்றுக்கொள்ளப் பட்ட மன்மோகன் சிங் முதன் முதலாக நாட்டின் நிதியமைச்சராக தேசிய அரசியலில் நுழைந்ததே யாரும் எதிர்பாராமல் நடந்ததுதான்.

1991ம் வருடம் ஜூன் மாதம் முதன் முதலாக நாட்டின் நிதியமைச்சராக அமர்த்தப்பட்டதை பிறகு பிபிசி நிரூபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார் சிங். 'நரசிம்ம ராவ் அவர்களின் முதன்மை காரியதரிசி என்னை நாட்டின் அடுத்த நிதியமைச்சராக தெரிவு செய்திருக்கிறார் என்று என்னிடம் தொலைபேசியில் கூறியபோது நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாளே ராவ் அவர்கள் என்னை அழைத்து சற்று கோபத்துடன் உடனே ஜனாதிபதி இல்லத்திற்கு வந்து பதவியேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியபோது என்னால் மறுக்க முடியவில்லை.'

ஆக, அவராக விரும்பி அரசியலுக்குள் நுழையவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

நாட்டின் நிதியமைச்சராக அவர் பதவியேற்றபோது நாட்டின் நிதிநிலமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலக நாணய நிதியத்தை (IMF) அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தனர் பிரதமர் ராவும் மன்மோகன் சிங்கும். நிதியம் தங்களுடைய கடனுதவி தேவையென்றால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்கும் அனைத்து பொருளாதார சீர்திருத்த முயற்சிகளையும் அமுல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அன்று வரை இந்தியாவில் நடைமுறையில் இருந்த உரிம கட்டுப்பாடுகள் (Licence Raj), அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு தடையாயிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்றது நிதியம். 

பிரதமர் ராவ் அளித்த ஆதரவில் இந்த கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாக தளர்த்திய சிங் நாட்டின் வர்த்தகத்தை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அரசின் கட்டுப்பாடில் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடு என்ற கொள்கையை அமுல்படுத்தினார். இவ்விரண்டு கொள்கைகளையும் இன்றளவும் எதிர்த்து வரும் கம்யூனிச கட்சிகள் நாட்டின் இன்றைய பொருளாதார தேக்க நிலைக்கு மன்மோகன் சிங்கின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று கூறிவருகின்றன.  

அவர்கள் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ இல்லையோ இத்தகைய முயற்சிகள் நாட்டின் நிதி நிலைமையை சீரமைத்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் நிதியமைச்சராக பதவியேற்றபோது USD 1 billionனாக இருந்த அன்னிய செலவாணி கையிருப்பு இன்று USD 280 billionனுக்கும் மேல்!

ஆனால் 1991ம் வருடம் பதவியேற்றதிலிருந்து அவர் எடுத்த முயற்சிகள் அரசை காப்பாற்ற முடியவில்லை. 1996ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. 

2004ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அவர் சிங்கை பரிந்துரைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த முடிவின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் சிங் பிரதமராவது காலத்தின் கட்டாயம் போலும். 

அவர் பிரதமராக பதவியேற்றபோது அவரை ஒரு இடைக்கால பிரதமராகவே காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பார்த்தன. ராகுல் காந்தி அந்த பதவியில் அமர்த்தப்படும் வரை இவர் ஒரு காபந்து பிரதமராகவே இருப்பார் என்று அனைவரும் கருதியிருந்த சூழலில் சுமார் பத்தாண்டு காலம் அந்த பதவியில் அவரால் இருக்க முடிந்ததே பெரிய சாதனை என்பதை மறுப்பதற்கில்லை. 

அதே சமயம் இந்த பத்தாண்டு காலத்தில் அவர் அதுவரை ஈட்டியிருந்த பெயரையும் புகழையும் இழந்து இப்போது தன்னை பிரதமராக்கியவராலேயே ஒதுக்கப்பட்டு நிற்பதுதான் வேதனை.

அவர் ஈட்டியிருந்த பொருளாதார பட்டத்துடன் 'செயலற்ற பிரதமர்', 'முடிவெடுக்க முடியாதவர்', 'துணிச்சலில்லாதவர்' என பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அவற்றுடன் 'ஊழல் பேர்வழி' என்ற பட்டமும் இணைந்துக்கொள்ளுமா என்பது அவர் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் விசாரிக்கப்படும்போதுதான் தெரியவரும். 

அவர் ஊழல்வாதியா இல்லையா என்பது ஒருபுறமிருக்க அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகித்த பல அமைச்சர்களும் ஊழலில் ஈடுபட்டபோது அவர் பாராமுகமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ஊழல் செய்வது தவறு என்றால் ஊழலுக்கு துணை போவதும் அதைக் கண்டும் காணாததுபோல் இருப்பதும் தவறுதான். இந்த தவறை சிங் செய்திருப்பது பல விதங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை. 

அவருடைய இந்த பாராமுகம்தான் இன்று காங்கிரஸ் கட்சியை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். அவருடைய இந்த செயலற்றத் தன்மைக்கு அவரை பின்னாலிருந்து ஆட்டிப்படைத்து வந்த சோனியா அம்மையாரும் அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அவர்களுடைய குறுக்கீட்டை சகித்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் சிங்கிற்கு இருக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் எந்த நேரமும் பதவியை தூக்கியெறிந்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆகவே கடந்த சில தினங்களாக இத்தனைக்கும் காரணம் மன்மோகன்தான் என்று சோனியாவும் ராகுலும் மறைமுகமாக கூறிவருவதை இனியும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஏ.கே.ஏவை இடைக்கால பிரதமராக்கலாமா என்று சோனியா ஆலோசித்துவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதும் அவர் பதவியை துறந்திருக்கலாம்.  இன்னமும் எதற்காக காத்திருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.

உலகத் தலைவர்களுள் முக்கியமானவர், நேர்மையானவர், பொருளாதார மேதை என்றெல்லாம் பல உலக தலைவர்களாலும் போற்றப்பட்டு வந்தவர் இப்போது தன்னுடைய சொந்த கட்சியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு நிற்பதைக் காணும்போது ஒரு புறம் வேதனையாக இருந்தாலும் அவருடைய இந்த பரிதாப நிலைக்கு அவர் மட்டுமே காரணம் என்பதும் நினைவில் வருகிறது.

இதுவரை ஒருமுறை கூட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாதவர் மன்மோகன் சிங். சமீபத்தில் மீண்டும் மாநிலங்கள் அவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு சில மாதங்களில்  அவருடைய அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

வெளியேற்றப்படுவதை விட வெளியேறுவது மேல் என்பதை அவர் உணர வேண்டும். ஆனால் அவருக்குத்தான் சட்டென்று முடிவெடுக்கவே தெரியாதே!!

**********

10 டிசம்பர் 2013

PPP அடிப்படையில் இந்தியா ஜப்பானை முந்தியது!!

GDP, GNP அடிப்படையில் உலகில் ஒன்பதாவது இடத்திலுள்ள இந்தியா 'வாங்கும் திறன் ஒப்பீடு' (Purchasing Power Parity) அடிப்படையில் ஜப்பானை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறது உலக நாணய நிதியம் (IMF). 2011ம் ஆண்டு இறுதியில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GDP) இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் $ 4.46 trillion ஆகவும் ஜப்பானின் மதிப்பு $ 4.44 trillion ஆகவும் இருந்ததாம்!! 

அது என்ன வாங்கும் திறன் ஒப்பீடு?

சுருக்கமாக பார்க்கலாம்.

உலகிலுள்ள மிகப் பெரிய பொருளாதார சக்தி எனப்படும் அமெரிக்காவின்  நாணயமான டாலருடன் உலகிலுள்ள மற்ற நாடுகளின் நாணயங்களின் வாங்கும் திறனை (Purchasing Power) ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் இந்த 'வாங்கும் திறன் ஒப்பீடு.'

ஆங்கிலத்தில் இதை Purcasing Power Parity என்கிறார்கள். 

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரே நாணயம் அமெரிக்காவின் டாலர்தான் என்றால் மிகையாகாது. ஆகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் வசிப்பவர்களுடைய வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய 1986ம் வருடம், அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளின் விலையை மற்ற நாடுகளில் நிலுவையிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது  அமெரிக்காவின் பிரபல  'தி எக்கனாமிஸ்ட்'  சஞ்சிகை (Magazine).

அமெரிக்காவிலுள்ள மக்டனால்டு பர்கர் (Burger) ஒன்றின் விலையை அந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவரும் ஏனைய நாடுகளிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்ன என்பதை தோராயமாக கணக்கிட்டு Big Mac Index என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது இந்த சஞ்சிகை. அதன்படி இந்தியாவின் ரூபாய்தான் உலகிலேயே குறைத்து மதிப்பிடப்படும் நாணயம் என்று கண்டறியப்பட்டது.  

இதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மக்டனால்டு பர்கரின் சராசரி விலை $ 4.56. இந்தியாவில் அதே பர்கர் $ 1.50 கிடைக்கிறது. தற்போதைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தின் படி ஒரு டாலரின் மதிப்பு ரூ.59.98. இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த பர்கரின் விலை Rs.90/-  ($1.50x59.98).   அமெரிக்காவில் இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் Rs.273.50 ($4.56x59.98).  இதன்படி பார்த்தால் ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு Rs.19.70(90/4.56=19.70)  என்றுதான் இருக்க வேண்டும். இது அன்னிய சந்தையின் டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.40.30 குறைவு (60 - 19.70=40.30).

ஆகவேதான் இந்திய ரூபாயை the world's most underestimated currency என்கிறது இந்த கணிப்பு.  

இந்த சூத்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை (GDP)கணக்கிடும்போதுதான் அது ஜப்பானின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை மிஞ்சுகிறதாம்! 

இந்த தளத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடைய நாணயத்தின் டாலருக்கு எதிரான உண்மையான மதிப்பை உடனடியாக கணக்கிட்டும் பார்க்கும் வசதியுள்ளது. 

மக்டனால்டு பர்கர் என்பதில் மட்டுமில்லாமல்  இந்திய-அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலையிலும் இதே நிலைதான். சென்னையில் எண்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் நூற்றியெண்பது ரூபாய். இந்த அடிப்படையில் பார்த்தாலும் ஒரு டாலரின் இந்திய மதிப்பு அன்னிய செலவானி சந்தையிலுள்ள டாலரின் மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவு (80/3=26.66). எலக்ட்ரானிக் பொருட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற எல்லா பொருட்களுடைய விலையிலும் இத்தகைய கணிசமான வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

ஆனால் இது ஒரு குறியீடு மட்டுமே என்பதையும் இதை மட்டும் வைத்து ஒரு நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட்டுவிட முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இத்தகைய ஒப்பீடுகள் பை-லேட்டிரல் எனப்படும் இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பை ஒப்பிட பயன்படுவதுடன் வர்த்தக அடிப்படையில் அவ்விரு நாடுகளுக்கிடையிலும் நடைமுறையிலுள்ள நாணய மாற்று விகிதத்தில் ஒரூ நீண்டகால தாக்கத்தை (Long Term Effect) ஏற்படுத்தவும்  வாய்ப்புள்ளது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். 

இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும் (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்வி எழலாம்.

இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது இரண்டு காரணங்கள்:

1. அந்தந்த நாட்டிலுள்ள தொழிலாளர் ஊதியம் (Labour cost).

இது ஓரளவுக்குத்தான் உண்மை என்றாலும் இதுதான் மிக முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில் ஒரு தொழிலாளருக்கு வழங்கப்படுவதைப் போல மூன்று மடங்கு அதிகமான தொகை ஊதியமாக அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தொழிலாளர்  ஊதியம்(Labout Cost) பொருட்களின் இறுதி சந்தை விலையையும் ஏற்றிவிடுகிறது. 

2. இந்திய நாட்டின் கணக்கில் வராத வர்த்தகத்தின் மதிப்பு. (Hidden strength of India's parallel economy)

இந்த கறுப்புச் சந்தை இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலவீனம் எனக் கருதப்பட்டாலும் சில வேளைகளில் அதுவே நம்முடைய பலமாகவும் கருதப்படுகிறது. கணக்கில் வராத வர்த்தகர்கள் அல்லது தயாரிப்பாளர்களால்  அரசுக்கு விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி, சொத்துவரி என பலவிதங்களில் வரி செலுத்தும் நேர்மையான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் பொருட்களின் விலையை விடவும் பண்மடங்கு குறைத்து விற்க முடிகிறது. 

அத்தகைய பொருட்களுடன் போட்டிப் போடும் நிலைக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு வர்த்தகர்களும் தள்ளப்படுவதால்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சந்தையில் இந்த அளவுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்கின்றனர். மேலும் சீனாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகின் மற்றெந்த நாட்டிலும் இல்லாத உள்நாட்டு தேவைகள் (Domestic Demand) இந்தியாவில் இருப்பதும் ஒரு காரணம். இதில் இன்னொரு காரணமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில் Economies of Scale என்கிறார்கள். அதாவது இந்தியாவிலுள்ள மிக அதிக அளவிலான நுகர்வோர் தேவைகளால் (Increasing demand of the domestic consumer) பொருட்களின் தயாரிப்பும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு பொருளை அதிக தளவில் தயாரிக்கும்போது (Mass Production) அதன் தயாரிப்பு செலவையும் குறைக்க முடியும் என்கிறார்கள்.

அது எப்படி?

ஒரு பொருளை தயாரிக்க தேவைப்படும் செலவினங்களில் (Production cost) நிரந்தர செலவு (Fixed Cost) அன்றாட செலவு (Variable Cost)  என்று இரு இனங்கள் உண்டு. இதில் தொழிற்சாலையின் வாடகை, தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்காகும் பராமரிப்பு செலவுகள் மற்றும் அவற்றின் தேய்மானம் (Depreciation), உழைப்பாளரின் ஊதியம் (Labour Cost) ஆகியவை ஒரு பொருள் தயாரித்தாலும் நூறு பொருட்கள் தயாரித்தாலும் பெரிதாக மாறப்போவதில்லை. ஆகவே ஒரு பொருளை அதிக அளவில் தயாரிக்கும்போது அதன் சராசரி உற்பத்தி செலவு ( Average Production Cost) குறைகிறது. இதன் விளைவாக அவற்றின் விலையையும் கணிசமாக குறைக்க முடிகிறது. விற்பனைக்கு வரும் பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகளால் (Super Markets) ரோட்டோர சில்லறைக் கடைகளை விடவும் மலிவான விலைக்கு பொருட்களை விற்க முடிவதற்கும் இதுவே காரணம். (அதே சமயம் இத்தகைய ரோட்டோர சில்லறைக் கடைகளும் சந்தையில் இருப்பதால்தான் பல்பொருள் அங்காடிகளும் அவர்களுடன் போட்டி போடுவதற்காகவே தங்களுடைய பொருட்களின் விலையை குறைக்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மை. எதிர்வரும் காலங்களில் ரோட்டோர சில்லறைக் கடைகள் அடியோடு அழியுமானால் அப்போது பல்பொருள் அங்காடிகளின் ஆதிக்கம் பெருகி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளதுப்போல் அவர்களுடைய (Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. )

இந்திய சந்தையில் பணவீக்கத்தின் (inflation) தாக்கத்தால் அன்றாடம் ஏறும் விலைவாசியால் பாதிக்கப்படும் நம்முடைய நுகர்வோருக்கு PPP என்பதோ வாங்கு திறன் ஒப்பீடு என்பதோ அல்லது இந்தியாவின் நாணயம்தான் உலகிலேயே குறைத்து மதிக்கப்படும் நாணயம் என்பதோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை  என்பது உண்மை. ஆனாலும் இத்தகைய ஒப்பீடுகளின் மூலம் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. 

கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய மகள் கூறுவதை கேட்டதிலிருந்து இந்தியா இந்தியாதான் என்பதை உணர முடிகிறது. என்னுடைய மலேசிய வாசத்தின்போதும் இதை முழுவதுமாக உணர முடிந்திருக்கிறது. இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும் தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.

'நான் சென்ற நாட்டில் இந்த நாடு சிறந்தது' என்று அன்று கண்ணதாசன் எழுதிய பாட்டில் வரும் வரிகள் இன்றளவும் உண்மை. 

**********

03 டிசம்பர் 2013

GNP என்றால் என்ன - GDP க்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?

கடந்த வாரம் GDP என்றால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு என்று பார்த்தோம். உண்மையில் அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்று கூற வேண்டும். அதாவது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு முழுவதுமாக இதில் சேர்க்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் சூழலில் மட்டுமே அதிகமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்ற உள்நாட்டு தயாரிப்புகளின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. 

ஆனால்  GNP என்பது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அவை நம்முடைய நாட்டை சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின்  மதிப்பையும் (Income) உள்ளடக்கியதாகும். 

இன்னும் எளிமையாக கூறவேண்டுமானால் நம்முடைய நாட்டின் GDP நம்முடைய நாட்டில் வாழும்/இயங்கும் அயல் நாட்டைச் சார்ந்த தனிநபர்  அல்லது நிறுவனங்கள் இங்கு தயாரிக்கும் அல்லது அளிக்கும் சேவைகளின் மதிப்பை உள்ளடக்கியது என்றாலும் அவற்றால் அவர்களுக்கு (அயல் நாட்டினருக்கு) கிடைக்கும் வருமானம் அதாவது, முதலீடு மற்றும் பங்குகளிலிருந்து கிடைக்கும் டிவிடன்ட், கடன் பத்திர முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி, அயல் நாட்டினருக்கு சொந்தமான நிறுவனங்கள் ஈட்டும் லாபம் ஆகியவற்றின் மதிப்பு ஒட்டுமொத்த GDP யிலிருந்து குறைக்கப்படுகிறது. 

ஆகவே நம்முடைய GDP வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வருமானம் அதே அளவு வளரும் என்று சொல்ல முடியாது. 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இங்கு  செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்  ஒவ்வொரு வருடமும் ஈட்டும் லாபம் மற்றும் FIIs எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நம்முடைய பங்கு சந்தைகளில் செய்யும் முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபம் ஆகியவை நம்முடைய GDP அதாவது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சேவைகளின் மதிப்பிலிருந்து குறைக்கப்படும். அதே சமயம் நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளில் ஈட்டும் வருமானம், லாபம், வட்டித் தொகை ஆகியவை நம்முடைய GDPயுடன் சேர்க்கப்பட்டும். இந்த கூட்டுத்தொகைதான் GNP எனப்படுகிறது.

தலை சுற்றுகிறதா?

இதை ஒரு சூத்திரத்தின் மூலம் விளக்குகிறேன்.

கடந்தவாரம் GDPஐ கணக்கிட நாம் பார்த்த சூத்திரம் இது: 

GDP=C+I+G+(X-M) 

இதில் 

C= Consumption அதாவது தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் 

I= Investments அதாவது இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் 

G= Government Expenditure & Investments அதாவது அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் 

X= Exports அதாவது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும்

M= Imports அதாவது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது என்று பார்த்தோம்

இந்த முறையில் கணக்கிடப்படும் GDPயிலிருந்து 

1. வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புகிற வருமானத்தை குறைக்க வேண்டும்

2. நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய நாட்டுக்கு அனுப்பியுள்ள வருமானத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதன் கூட்டுத் தொகைதான் GNP (Gross National Product).

இன்னும் தெளிவாக்க வேண்டுமானால் GDPயை கணக்கிட நம்முடைய நாட்டின் பூளோக எல்லைக்குள் (Geopgraphic Area) தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பையும் பார்க்கிறார்கள். அது எந்த நாட்டினரால் தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவற்றால் கிடைக்கும் வருமானம் நமக்கு கிடைப்பதில்லை. 

ஆகவேதான் நம்முடைய GDPயின் தொடர் வளர்ச்சி மட்டுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாட்டின் GNP வளர்ச்சியடையும் போது அது அந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் அந்த நாட்டினரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. 

இதை சூத்திரத்தில் கூற வேண்டுமென்றால் GNP = GDP + Net Income Earned from Abroad என்று கூறலாம்.

இதில் NET என்ற வார்த்தை நம்முடைய நாட்டினர் அயல் நாட்டில் ஈட்டும் வருமானம் மற்றும் நம்முடைய நாட்டில் அயல்நாட்டினர் ஈட்டும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை (Difference between Income earned by our citizens abroad AND Income earned by foreign nationals in our Country) குறிக்கிறது. 

சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு நாட்டின் GNP என்பது அந்த நாட்டினர் ஈட்டும் மொத்த வருமானத்தின் மதிப்பு என்றும் கூறலாம். 

ஆயினும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை GDP அடிப்படையிலேயே கணக்கிடுகின்றனர் என்பதும் உண்மை. ஆகவே 1991 வரை தங்களுடைய நாட்டுப் பொருளாதார நிலையை GNP மூலம் மட்டுமே கணக்கிட்டு வந்த அமெரிக்கா அதன் பிறகு பிற உலக நாடுகள் பின்பற்றும் முறையான GDP முறையை பின்பற்ற துவங்கியது.

(United States used GNP as its primary measure of total economic activity before 1991, when it began to use GDP. In making the switch, the Bureau of Economic Analysis (BEA) noted that GDP provided an easier comparison of other measures of economic activity in the United States and that "virtually all other countries have already adopted GDP as their primary measure of production.") 

Source:http://en.wikipedia.org/wiki/Gross_national_product

GDP முறையை அடிப்படையாக வைத்தே உலகிலுள்ள நாடுகளை உலக வங்கி தரவரிசைப் படுத்துகிறது என்றாலும் GNP அடிப்படையிலும் நாடுகளின் தரவரிசை பட்டியலும் விக்கிப்பீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 2010 மற்றும் 2011 வருடங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. (GDP அடிப்படையிலும் இந்தியா இதே இடத்தில்தான் உள்ளது). இதிலிருந்து என்ன புரிகிறது? நம்முடைய நாட்டைப் பொருத்தவரை GDP மற்றும் GNP ஆகிய எந்த முறையில் கணக்கிட்டாலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

ஆனால் உலகின் மற்ற வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு பிரத்தியேகம் நம்முடைய நாட்டில் உள்ளது. அதுதான் parallel economy எனப்படும் கறுப்புச் சந்தை. நம்முடைய நாட்டின் உற்பத்தியாகட்டும் அல்லது வருமானமாகட்டும் அவற்றில் சரிபாதி, - சிலர் சம அளவு என்றும் கூட கூறுகின்றனர் - கணக்கில் வரவு வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. ஆகவே நம்முடைய நாட்டில் வெளியிடப்படும் GDPயின் மதிப்பு உண்மையில் வெளியிடப்படும் மதிப்பை போல் ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் என்றாலும் மறுப்பதற்கில்லை. இதை நம்முடைய நாட்டின் சாபக்கேடு என்றும் சொல்லலாம் அல்லது மறைந்துக்கிடக்கும் வலிமை என்றும் (Intrinsic Value)கூறலாம். அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.  

ஒரு நாட்டின் GNPயும் GDPஐ போலவே நடப்பு விலைவாசியிலும் (current market prices) அடிப்படை ஆண்டிலிருந்த (Base Year) விலைவாசியிலும் கணக்கிடுகிறார்கள். இதன் மூலம் கணக்கிடப்படும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு நாடு எந்த அளவுக்கு உற்பத்தியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கணக்கிட முடிகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த GNPஐ அந்த நாட்டிலுள்ள மக்கள்தொகையால் வகுத்து (Divide) கிடைக்கும் தொகையை Per Capita GNP என்கின்றனர். 

ஒரு நாட்டின் Per Capita GNP மதிப்பை அமெரிக்க டாலருக்கு மாற்றுவதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தை ஒரே நாணய மதிப்பில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்கிறது உலக வங்கி. ஆனால் இந்த தொகை நாட்டிலுள்ள அனைத்த நபர்களுக்கும் ஒரே அளவில் கிடைக்கிறது (equal distribution) என்பதை காட்டுவதில்லை என்பதும் உண்மை. 

ஒரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்தை இன்னொரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்துடன் Per Capita GDP மற்றும் Per Capita GNP அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட அவ்விரு நாட்டினரின் வாங்கும் திறன் அடிப்படையில் (Purchasing Power) ஒப்பிட்டு பார்க்கும் முறையை Purasing Power Parity Method என்கின்றனர். 

அது என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம். 







26 நவம்பர் 2013

ஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி  அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே! 

இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். 

மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது. 

நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற  தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம். 

இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது. 

எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன். 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?

இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?

இவை சரிதானா?

என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன். 

எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான்  உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. 

நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான். 

ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம். 

இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். 

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம். 

அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?

இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.

சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி  (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.

இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?

நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.  

உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....

இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...

*********

25 நவம்பர் 2013

ஜிடிபி (GDP) அப்படீன்னா என்னாங்க?


ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.

2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக,  கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகின்றனர் (calculate) என்று பார்ப்போமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல. இந்தியாவின் வயது என்று சொல்ல வேண்டுமானால் அது ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த ஆண்டிலிருந்து எத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன என்பதை வைத்து சுமார் அறுபத்தியாறு வயது என்று கூறலாம் (2013-1947).

ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?

அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம்.  இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்.

இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.

ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.

இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.

ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.

1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),

2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),

3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன.

இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.

நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.

அது என்ன intermediary products என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.

இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.

இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக  பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (உ.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.

உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).

ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

அடுத்த பகுதியில்.....




20 நவம்பர் 2013

அரசியல்வாதிகள் அனைவருமே முட்டாள்கள்தானா?

அடக்கமுடைமை

குறள் எண்: 127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் எண்: 129.   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்  ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறளில் அடக்கமுடமை என்ற அதிகாரத்தில் தரப்பட்டுள்ள பத்து குறட்பாக்களில் மேலே குறிப்பிட்ட இரு குறள்கள் நாவடக்கத்தைப் பற்றி பேசுகின்றன. இவ்விரு குறட்களின் பொருள் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம் என்பார்கள். 

என்னைக் கேட்டால் அதிலுள்ள நாக்கு அதை விட பிரதானம் என்பேன்.

முன்பெல்லாம், ஏன், இப்போதும்தான், அரசியல் பிரமுகர்கள்தான் இந்த அடக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு சகட்டுமேனிக்கு பேசிவிட்டு செல்வார்கள். அதிலும் தேர்தல் நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். சொல்ல தகாததையெல்லாம் சொல்லிவிட்டு ஊடகங்கள் திரித்துவிட்டன என்று கூசாமல் பொய் சொல்வார்கள். 

இப்போது மெத்த படித்தவர்களும் இந்த பட்டியலில் இணைவதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானியும் பாரத ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான திரு. CNR RAOவைப் பற்றித்தான் கூறுகிறேன்.



இவரை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுக்கு தெரிவு செய்த அரசியல்வாதிகளையே 'முட்டாள்கள்' என்று வாய் தவறி - உண்மையில் நாக்குதான் தவறு செய்தது. ஆனால் சொல்வது வாய் தவறி விட்டது என்று!! - கூறிவிட்டு நான் சொல்ல வந்தது அது இல்லை என்கிறார். 'முட்டாள்தனம்' என்பதற்கும் 'முட்டாள்' என்பதற்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம் என்று விளங்கவில்லை. முட்டாள்தான் முட்டாள்தனத்தை செய்ய முடியும்! அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு போதிய அளவு பண உதவி வழங்காதது முட்டாள்தனம் என்ற பொருள்பட நான் சொன்னதை ஊடகங்கள் திரித்து அரசியல்வாதிகள் அனைவரையும் நான் முட்டாள்கள் என்று கூறியதுபோல் வெளியிட்டுவிட்டன என்கிறார். 

அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். 

இவர் யார் சீனரா? அல்லது இவர்களுடன் பணியாற்றும் அத்தனை விஞ்ஞானிகளும் சீனாவில் இருந்து வந்தவர்களா? 

இருமுறை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள்தானே சீனர்கள்? நம் இந்தியர்கள் அதில் வெற்றியடையும் நாள் வெகு தொலைவில் இல்லையே?

சீனர்கள் இந்தியர்களைக் காட்டிலும் தேசப் பற்று உள்ளவர்களாம்! இவர் எதை தேசப் பற்று என்கிறார் என்று விளங்கவில்லை. எந்த இந்திய பிரஜை தேசப்பற்று இல்லாமல் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்? அன்னிய நாட்டுக்கு சென்று பணியாற்றுபவர்களையா? சீனாவில் வாழும் சீனர்கள் இந்தியர்களைப் போல வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பாததற்கு மூல காரணம் இந்தியர்களைப் போன்று ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். உழைப்பு என்று எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக இன்றும் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் இருப்பதால்தான் ஐ.டி துறையில் இவர்களால் உலகெங்கும் சென்று பிரகாசிக்க முடிகிறது. இதற்கு முந்தைய தலைமுறை இந்தியர்களை வேண்டுமானால் இந்த அளவுக்கு உழைக்காதவர்கள் சொல்லலாம். ஆனால் அதையும் பொதுவாக சொல்லிவிட முடியாது. அன்று தன்னலம் பாராமல், நேரம் பாராமல் உழைத்து தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்ததால்தான் இன்றைய தலைமுறை இந்தியர்கள் படிப்பிலும், விஷய ஞானத்திலும் சிறந்து விளங்க முடிகிறது. ஆனாலும் இப்படி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. பாமரன் பேசினால் பொறுத்துக்கொள்ளலாம். இந்தியாவின் இரத்தினம் என்று கருதப்படுபவர் இப்படி பேசலாமா?

நாட்டின் மிக உயர்ந்த விருதுக்கு தகுதி பெற வெறும் படிப்பும், அறிவும் மட்டுமே போதாது. தன்னடக்கமும் மிகவும் அவசியம். தன்னடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாவடக்கமும் இருக்கும். இது இரண்டும் இல்லாதவர்கள் வாழ்வில் எத்தகைய உயர்வை அடைந்தாலும் பிறருடைய பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்: திரு CNR ராவைப் போல.

இந்த விஷயத்தில் இதே விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் பரவாயில்லை. கடந்த இருபத்தி நான்கு ஆண்டு கால பொது வாழ்வில் (No one can dispute that he is one of the most popular public figures in India) ஒரு முறை கூட தகாத பேச்சுக்காக பழித்துரைக்கப்பட்டதில்லை. வெறும் பள்ளி படிப்பை மட்டுமே கொண்டிருக்கும் ஒருவர், புகழின் உச்சிக்கே சென்ற ஒருவர், இந்த அளவுக்கு தன்னடக்கத்துடன் இருப்பது அபூர்வம்தான். அந்த வரிசையில் வரும் இன்னொரு விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். 

இவ்விருவருடன் ஒப்பிடுகையில் மெத்த படித்த CNR சற்று தரம் இறங்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 

கடந்த திங்கள் கிழமை அன்று இரவு CNN-IBN தொலைக்காட்சியில் இதைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாவடக்கமின்மை அவரை எந்த அளவுக்கு இறக்கிவிட்டது! 

சந்தனத்தைப் பூச வந்தவர்கள் முகத்தில் கரியை பூசி அனுப்பியதுபோல் இருந்தது!

***********



18 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது ஏன்?

தமிழக சட்டமன்றத்தை அவசர, அவசரமாக கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாக கலந்துக்கொள்வது என்று எடுத்த முடிவை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு அது மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு முன்னரே தஞ்சையில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றச் சுற்றுச் சுவரையும் அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும் ப்ரொக்ளைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அதிர்ச்சியை அளித்தது. 

இதை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகள் அனைத்தும் - காங்கிரசைத் தவிர - இது தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்றன. பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. 

இதற்கு அரசு சொல்லும் காரணம்: இடிக்கப்பட்ட பகுதிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இவற்றை அகற்ற வேண்டுமென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு பலமுறை அறிவிக்கைகள் அனுப்பியும் அவர்கள் கண்டுக்கொள்ளாததால்தான் இதை இடிக்க வேண்டியதாயிற்று.

ஆனால் உண்மை காரணம் அதுவல்லவாம். இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியவர்களுக்குப் பின்னால் இருந்த ஒருவர் முதலமைச்சரின் பரம வைரி என்பதுதானாம்! 

ஒரு நாளைக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு அடுத்த நாளே இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யபட்ட இலங்கை தமிழர்கள் நினைவாக தஞ்சையில் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தின்  சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய தமிழக அரசின் இந்த செய்கையால் ஆட்சியாளரிளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது என்றும் இதற்கு காரணமாக இருந்த ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவோம் என்ற மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் வாதம் தமிழக மக்கள் முன் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச் சின்னம்




ஆனால் இப்படியொரு சின்னம் தமிழ்நாட்டில் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் எங்களுடைய கட்சியின் முடிவு என்றார் காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன்.

இப்படியொரு நினைவுச் சின்னம் தேவைதானா? முள்ளிவாய்க்காலில் அப்படியென்ன நடந்துவிட்டது?

சுருக்கமாக பார்க்கலாம். 

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ போராளிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரம். தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை இழந்துவிட்டு பின்னோக்கி ஓடத்துவங்கியிருந்தனர் போராளிகள். இந்த சூழலில் வன்னி மாவட்டத்தை முற்றுகையிட்டு எப்போது தாக்குதலை துவங்கலாம் என்று காத்திருந்தது இலங்கை ராணுவம். 

ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இராணுவம். இவர்களுக்கு இடையில் சுமார் மூன்று இலட்சம் அப்பாவி மக்கள். போராளிகளிடமிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்கள். 


முள்ளிவாய்க்கால் வன்னி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். மலை, மகுடு என எவ்வித முரண்பாடுகளும் இல்லாத சமவெளிப் பிரதேசம். போர்க்காலங்களில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து பதுங்கி தப்பிக்க முடியாதபடி நிலம் வெட்டவெளியாக இருந்தது. தங்கள் உயிருக்கு பயந்து மக்கள் தஞ்சமடைந்திருந்த இந்த இடத்தை No Fire Zone ஆக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியது அகில உலக செஞ்சிலுவை சங்கம். 

அதுவரை நடந்த போரில் காயமுற்றிருந்த போராளிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மருத்துவமனையும் அங்குதான் இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரில் காயமுற்ற பல அப்பாவி மக்களும் இந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகவேதான் செஞ்சிலுவை சங்கம் மட்டுமல்லாமல் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவரும் இந்த பகுதியை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்தினர். 

ஆனால் இலங்கை அரசு செவிமடுக்கவில்லை. அவர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்தி கூட்டத்தோடு கூட்டமாக போராளிகள் அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தப்பித்துக்கொள்வார்கள் என்ற அச்சம் இருந்தது. போராளிகளுக்கோ இந்த மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினரிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். 

இருப்பினும் ஐநாவின் தொடர் வற்புறுத்தலுக்கு பணிந்து முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை அமைந்திருந்த பகுதியை No Fire Zoneஆக அறிவித்தது இலங்கை அரசு. இதற்கு தங்களுடைய தொடர் வற்புறுத்தலும் ஒரு காரணம் என்று மார்தட்டிக்கொண்டது இந்திய அரசு.

ஆனால் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்பதுபோல் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த அதே இடத்தை கண்மூடித்தனமாக ஆகாயம், தரை, கடல் என அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கியது இலங்கை இராணுவம். எவ்வித பாதுகாப்பும் இன்றி நிர்க்கதியாய் நின்ற அப்பாவி மக்களில் சுமார் எண்பதாயிரம் பலியாயினர். எண்ணற்றோர் இருந்த இடம் தெரியவில்லை....

இதற்கு தங்களுடைய உத்தரவை இராணுவம் மதிக்காததுதான் முக்கிய காரணம் என்று கூறி அப்போதைய இராணுவ தலைவர் பொன்சேகாவை போர்க்குற்றத்திற்கு ஆளாக்கி தப்பித்தது இலங்கை அரசு.

ஆனால் அதிக அளவிலான சிவிலியன் சாவுக்கு  அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்திய போராளிகள்தான் காரணம் என்றது இலங்கை இராணுவம். 

முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த கடற்பகுதியில் இவ்விருதரப்பினரிடமிருந்து தப்பி வரும் மக்களை  காப்பாற்றி அழைத்துச் செல்ல செஞ்சிலுவை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க கப்பல் ஒன்று காத்திருந்தது எனவும் ஆனால் அதை நோக்கி சென்ற மக்களை ஒரு புறம் போராளிகளும் மறுபுறம் இராணுவமும் சுட்டதால்தான் இந்த அளவுக்கு மனித உயிர்கள் பலியாயின என்றன ஊடகங்கள்.

எது உண்மையோ, பொறியில் சிக்கிய எலிகளாய் அப்பாவி மக்கள் இவர்களுடைய ஈவு இருக்கமற்ற தாக்குதல்களுக்கு பலியானதென்னவோ உண்மை.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் நாலாபுறம் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொலை, ஜாலியன்வாலபாத்தில் குழுமியிருந்த கூட்டத்தை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி கொன்று குவிப்பு என்று இதுபோன்ற பல படுகொலைகளுக்கு காரணமாயிருந்த இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர்தான் இன்று முள்ளிவாய்க்கால் கொலைக்கு பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதை சுட்டிக்காட்டித்தானோ என்னவோ கண்ணாடி வீட்டிலிருந்துக்கொண்டு கல்லெறிகிறார் என்கிறார் ராஜபக்‌ஷே.

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் இது அனைத்து உலக மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அத்தகைய தாக்குதலுக்குள்ளாகி பலியான அப்பாவி மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இதை எழுப்பியவர்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட்டிருந்தால் இன்று அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்.  

**********





15 நவம்பர் 2013

காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்குபெறுவது சரிதானா?

இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர்  கலந்துக்கொள்ளாவிடினும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் பங்குகொள்வதென என்ற முடிவு தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாநாட்டை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தமிழகமெங்கும் நடைபெற்று வந்த போராட்டங்களும் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன்  தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி இந்திய அரசின் முடிவை எதிர்த்து சிறப்பு தீர்மானமும் விழலுக்கு இரைத்த நீராகிப் போயின. 

இந்த சூழலில் இந்தியா எடுத்த முடிவு சரியானதுதானா என்ற விவாதத்தில் இறங்கவே பலரும் தயங்குகின்றனர். எல்லா விஷயத்திலும் தயங்காமல் தங்களுடைய கருத்துக்களை எழுதிவந்த பல மூத்த பதிவர்களும் கூட பெரும்பாலோனோருடைய கருத்துக்களைச் சான்றே எழுதி தப்பித்துக்கொள்வதைக் காண முடிகிறது. 

ஆகவே இந்திய அரசின் இந்த முடிவு சரியானதுதானா என்பதை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகினால் என்ன என்று பல நாட்களாகவே எண்ணியிருந்தேன். 

முதலில் காமன்வெல்த் அமைப்பு என்றால் என்ன, அதன் உறுப்பு நாடுகள் யார், யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம். 

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த 53 நாடுகள் தாமாக முன்வந்து அமைத்துக்கொண்டதே காமன்வெல்த் என்ற அமைப்பு. இதை வேடிக்கையாகவும் சிலர் வர்ணிப்பதுண்டு. 

அதாவது இந்த 53 நாடுகளின் ஒட்டுமொத்த சொத்தையும் (common-wealth) ஆங்கிலேயர்கள் சுருட்டிச் சென்று தங்களுடைய நாட்டை வளம்கொழித்த நாடாக்கியதை அவ்வப்போது - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை - நினைவுப்படுத்திக்கொள்ளத்தான் இந்த நாட்டின் தலைவர்கள் இந்த 53 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் தலைநகரில் கூடுகின்றனராம்! இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிக முக்கியமான நாடாக இந்தியா கருதப்பட்டுவருகிறது. 

ஆனால் துவக்கத்திலிருந்தே இந்த நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுகூடி தங்களுடைய பழைய அடிமை வாழ்வை நினைவுபடுத்திக்கொள்வதைத் தவிர பெரிதாக எதையும் சாதித்துள்ளதாக பெருமையடித்துக்கொள்ள முடியாது.

அதுபோலவே இந்த அமைப்பிலுள்ள நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் கனடாவைத் தவிர, பொருளாதாரத்திலோ அல்லது தொழில்துறையிலோ வளர்ந்த நாடுகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளவும் முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும் கூட உலகிலுள்ள மற்ற வல்லரசுகள் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்துதான் தங்களுடைய முடிவுகளையும் அமைத்துக்கொள்கின்றனவே தவிர இதுவரை உலகில் நடந்த எந்தவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விலும்  தனித்து முடிவெடுத்ததில்லை. 

ஆகவே இந்த அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் சம்பிரதாய மாநாட்டில் - உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு கூட்டம் (Meeting of Heads of Governments) மட்டுமே. மாநாடு என்று கூட அவர்களே கூறுவதில்லை -  கூட்டத்தின் முடிவில் உப்புசப்பில்லாத சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து செல்லும் கூட்டம் என்று கூட கூறலாம். 

இந்த அமைப்பின் கடைசி கூட்டம் 2011ல் ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரத்தில் (Perth) நடந்தது.  ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க மறுத்துவிட்டதை கண்டித்து அந்த கூட்டத்தில் நம்முடைய பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை. அப்போது (இப்போதும்தான்) குடியரசு துணைத்தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் தலைமையில் ஒரு அணி சென்றது. ஆனால் எதற்கு பிரதமர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக கூறாமல் அவருக்கு உள்நாட்டில் நிறைய அலுவல்கள் இருந்தன என்று பூசி மெழுகினார்கள். கூட்டத்தின் இறுதியில் இந்திய பிரதமர் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கும் ஆஸ்திரேலியா யுரேனியன் வழங்க மறுத்ததற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது ஆஸ்திரேலியா!!

அந்த கூட்டத்தில் என்ன அப்படி பெரிதாக சாதித்தார்கள் என்றால் ஒன்றும் இல்லையென்றுதான் பதில் வரும். அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் அங்கத்தினர்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை. அப்போதும் ஒருசில நாடுகளால் (கனடா என்று அர்த்தம் கொள்க) கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. அந்த கூட்டத்திலேயே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் 'இந்த அமைப்பு நாளுக்கு நாள் எதற்கும் பலனற்ற அமைப்பாக மாறி வருகிறது. இதற்கு அங்கத்தினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்றாலும் பல அங்கத்தினர்கள் எவ்வித ஈடுபாடும் காட்டாததும் ஒரு காரணம்.' என்று எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மலேசியாவும் உறுப்பு நாடுகளின் அக்கறையின்மையை (indifference) எடுத்துக்காட்டி இந்த கூட்டத்தில் முன்மொழியப்படும்  தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படாதது இந்த அமைப்பின் செயலற்றத்தன்மையையே இது காட்டுகிறது.' என்று குறைகூறியது. 

அந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது கனடா பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். மேலும் காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் (அதாவது 2013ல்) இலங்கை தலைநகரில் நடத்தப்படுவதாக முடிவானால் அதை கனடா புறக்கணிக்கும் என்று அப்போதே அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய முடிவை கூட்டத்தில் பங்குகொண்ட எந்த உறுப்பு நாடும் கண்டுக்கொள்ளவில்லை, இந்தியாவையும் சேர்த்து.

இந்த அமைப்பின் முக்கியத்துவம் இவ்வளவுதான். 

இலங்கையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா கலந்துக்கொள்வதால் அந்த நாட்டின் அதிபருடைய செயல்களுக்கு அங்கீகாரம் அளித்துவிடுவதுபோலாகிவிடும் என்கிற வாதத்தில் எல்லாம் எவ்வித பொருளும் இல்லை. அதுபோலவே அந்த கூட்டத்தில் பங்குபெறும் நாடுகள் எல்லாம் இலங்கையில் மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கின்றன என்பதும் பொருள் இல்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சம்பிரதாய கூட்டம் அவ்வளவுதான். எப்போதும்போலவே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சில நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா - தீர்மானங்களை முன்மொழியும். அதை பல நாடுகள் கண்டுக்கொள்ளவும் போவதில்லை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கும், இலங்கையை ஜால்ரா அடிக்கும் நாடுகள் - பாக்கிஸ்தான், பங்களாதேஷ் - அதை எதிர்க்கும்.... இந்த அமைப்பில் மிக அதிக அளவிலான அங்கத்தினர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்துதான் வருகின்றனர். அவர்களுக்கு மனித உரிமை மீறல் என்பதன் அர்த்தமே புரிய வாய்ப்பில்லை. ஆகவேதான் அவர்கள் கண்டத்தைச் சார்ந்த, நோபல் பரிசு பெற்ற, பாதிரியார் டெஸ்மன்ட் டூட்டு இந்த கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கூறியதை அவர்களில் எவரும் பொருட்படுத்தவே இல்லை.

இந்த வருடமும் இந்த கூட்டத்தின் இறுதியில் எந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தமுடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவு பெறும். இதுதான் உண்மையில் நடக்கப் போகிறது. இந்த மனித உரிமை மீறல் தீர்மானம் கடந்த மூன்று கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாமலே போனது என்பதும்  இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த அமைப்பு நடத்திய முந்தைய சில கூட்டங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பதால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளப் போவதில்லை என்பது அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இல்லை என்பதும் உண்மை. 

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கு உண்மையான காரணத்தையும் பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை போலிருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதபோது என்ன காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எழுதினாரோ அந்த கடிதத்தை நகல் எடுத்து அனுப்பப்பட்டதுபோல்தான் உள்ளது ராஜபக்‌ஷேவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதமும்!   

இந்த கூட்டத்தில் உள்நாட்டில் உள்ள இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா எதற்காக கலந்துகொள்வது என்று முடிவெடுத்தது என்ற கேள்வி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலின் சாராம்சம் இதுதான்.

1. இலங்கை நம்முடைய அண்டை நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு. நம்முடைய மற்ற அண்டை நாடுகளுடன் நாம் எவ்வாறு சுமுக உறவு வைத்துக்கொள்ள முயல்கிறோமோ அதே போன்ற உறைவை இலங்கையுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

2.சமீபத்தில் நடந்து முடிந்த போரில் வீடுகளையும் உரிமைகளையும் இழந்து தவிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க இதுவரை இந்தியா எடுத்துள்ள முயற்சிகள் உண்மையில் பலனளிக்க வேண்டுமென்றால் அந்த முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு இலங்கையுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.

3.நம்முடைய தொடர் முயற்சியால் மட்டுமே இலங்கை வட மாகாண தேர்தலை நடத்த சம்மதித்தது. இத்தகைய முயற்சிகளை இனியும் தொடரவும் இலங்கையுடன் சுமூக உறவு வைத்திருப்பது அவசியமாகிறது.   

4. இலங்கை மீதான போர்க்குற்றங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் சூழலில் அதில் பங்குகொண்டு நம்முடைய கருத்துக்க்ளையும் எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கக் கூடும்.

5.இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதுபோன்ற இரு நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும் இலங்கையுடனான சுமூக உறவு தொடர வேண்டும்.

வெளியுறவு அமைச்சரின் விளக்கங்கள் எந்த வகையில் நியாயமாக தென்படுகிறது என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. 

இந்த விஷயத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் கூறியதிலுள்ள நியாயங்களை கண்டுக்கொள்ள முடியும். 

ராஜபக்‌ஷே அரசு இலங்கையில் நடத்தியது அட்டூழியம்தான், போர்க்குற்றங்கள்தான். இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே தடுத்து நிறுத்த முடியாமல்போனது. ராஜபக்‌ஷே அரசை எதிர்த்து ஐநா சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காமன்வெல்த் அமைப்பில் இல்லாத நாடுகள் பலவும் இணைந்து தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நீர்த்துப் போக செய்துவிட்டன. 

இத்தகைய நாடுகள் பெரும்பாலானவைகளில் இத்தகைய படுகொலைகள், போர்க்குற்றங்கள் நடந்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆகவே இது முழுக்க, முழுக்க இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று பூசிமெழுகிவிட்டனர். 

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலுள்ள காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபரின் தலையீட்டை இந்தியா எப்படி விரும்பவில்லையோ அதுபோலவே எங்களுடைய நாட்டில் நடைபெறும் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று இலங்கை அரசு பலமுறை பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியோ போன்ற நாடுகள் ஓரளவுக்குத்தான் தலையிட்டு சுமூக தீர்வு காண முடியுமே தவிர காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது ஐநா சபையிலிருந்தோ தள்ளிவைத்து இலங்கையை அடிபணிய வைத்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வது நல்லது.

இலங்கையை எதிரி நாடாக பாவித்து சாதிப்பதை விட ஒரு நட்பு நாடாக விருப்பம் இல்லாவிட்டாலும் அங்கு இன்றும் வாழும் தமிழர்களுடைய நலனுக்காக சகித்துக்கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். 

ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை.  இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம். 

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.


*************  




19 அக்டோபர் 2013

ராகுல் காந்தியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா?

நேற்றைய பதிவில் நமோ எனப்படும் நரேந்திர மோதியை அடுத்த பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை வெளியிட்டிருந்தேன். 

அவர் அதற்கு தயாராக இல்லையென்றால் அவருக்கு மாற்றாக காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும் ராகுலுக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்வி எழலாம் அல்லவா?

அவருக்கும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறேன்.

அவர் நேரு குடும்பத்து  வாரிசு என்றே ஒரே காரணத்திற்காக அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் கண்மூடித்தனமான காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. பல தலைமுறைகளாக காங்கிரசை ஆதரித்து வரும் குடும்பத்தை சார்ந்தவன்தான் என்றாலும் இந்திராகாந்தியின் அடாவடி ஆட்சிக்குப் பிறகு அதிலிருந்து சற்று மாறி நிற்பவன். 

ராகுலை நான் அடுத்த பிரதமராக தெரிவு செய்ய வேண்டுமென்றால் அவர் என்னென்ன செய்ய வேண்டும்? 

1. இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு தில்லியில் சீக்கியர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதற்கு சீக்கியர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 

2.முதலில் ஒரு மிகச் சிறிய அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இணைந்து தனக்கும் நிர்வாக மற்றும் மேலான்மை திறன் (Management and Administrative capacity) உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். 

3.மக்களிடம் இருந்தும் பொது வாழ்க்கையிலிருந்தும் அவ்வப்போது காணாமல் போகும் (sudden disappearance) பழக்கத்தை விட்டுவிட வேண்டும். 

4. பேச்சில் சுயகட்டுப்பாடு வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கை விடுவது பிறகு அது தவறு என்று மன்னிப்பு கோருவது... என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது மனமுதிர்வற்ற (childish or immatured) போக்கை உடனே கைவிட வேண்டும்.

5. பொருளாதார விஷயங்களில் (Economic affairs) தன்னுடைய ஞானத்தை அல்லது விவரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

6. ஒரு கட்சியின் தலைவர் பதவி - அதையும் கூட வாரிசு அரசியல்தான் பெற்றுத் தந்தது என்பதை அவராலும் மறுக்க முடியாது - என்பது வேறு, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த தலைவர் என்பது வேறு. நாட்டிலுள்ள அனைவரையும் தலைமையேற்று நடத்த தேவையான leadership quality (ஒரு தலைவருக்கு தேவையான தகுதிகள்) தனக்கு உண்டு என்பதை அவர் நிரூபித்து காட்ட வேண்டும். 

7. ஊழலுக்கு நான் எதிரி என்று கூறினால் மட்டும் போதாது. அதிலேயே ஊன்றி திளைப்பவர்களுடன் - அதாவது கட்சிக்கு உள்ளும் புறமும் - எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அது மாயாவதியாக இருந்தாலும், முலாயம் சிங்காக இருந்தாலும் ஏன் நமது கலைஞரானாலும் அல்லது அம்மாவானாலும்.... அரசியல் கூட்டணி என்ற பெயரில் ஊழல் விஷயத்தில் எவ்வித compromiseம் செய்துக்கொள்ளக் கூடாது. Charity begins at home என்பார்கள்.... ஆகவே முதலில் தன்னுடைய சகோதரியின் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்களுக்கு பதில் சொல்லிவிட்டு நாட்டை சீர்படுத்த புறப்படட்டும்.

சரிங்க..... நமோவும் வேண்டாம் ராகுலும் வேண்டாம் என்றால் யாருக்குத்தான் உங்கள் ஓட்டு? சவசவன்னு ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் சிங்குக்கா என்கிறீர்களா?

இவர்கள் மூவருக்குமே அடுத்த பிரதமராகும் தகுதியில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மேலும் நம் நாட்டிலுள்ள தேர்தல் விதிகளின்படி இவர்தான் பிரதமர் என்று யாரையும் நேரடியாக தெரிவு செய்ய முடியாது. 

மேலும் இன்றுள்ள அரசியல் சூழலில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசும் பிஜேபியும் கூட தனித்து தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. ஆகவே யாருடனாவது கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று தேசீய அளவில் இவ்விரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக இருப்பது கம்யூனிஸ்டுகள். இவர்கள் இவ்விரு கட்சியினருடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அவர்களுக்குப் பிறகு வட இந்தியாவில் எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம். கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஊழலுக்கு பேர்பெற்றவைகள். 

ஆகவே என்னுடைய முடிவு இதுதான்.

எந்த கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு.

நான் சாதாரணமாக lesser evil என்ற அடிப்படையில் காங்கிரசுக்குத்தான் வாக்களிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் செய்த அலங்கோல ஆட்சி, எதிலும் ஊழல் எப்போதும் ஊழல் என்கிற போக்கு EVIL என்ற தராசில் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில்தான் என்பதை காட்டிவிட்டது.

வாக்களிக்க விரும்பவில்லை என்று 49 (ஒ) வை தெரிவு செய்வதை விட இவர்கள் எவரையுமே எனக்கு பிடிக்கவில்லை என்று வாக்களிக்கும் ஆப்ஷனை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதே, இம்முறை அதை பயன்படுத்துவதுதன் சரி என்று கருதுகிறேன். 

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்த்து யார் அதிகம் தருகிறார்களோ அல்லது தருவதாக சொல்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு என்று கருதும் பாமரன் யாருக்கு வாக்களிக்கிறானோ அவர்களே ஆண்டு விட்டு போகட்டும். 

********