செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் முடிவின் பின்னணி என்ன?

சமீபத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேவங்களாக பிரிக்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலவகையான விமர்சனங்கள் எழுந்தன.

நாட்டின் பிரதான எதிர் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இதை முழுமூச்சுடன் எதிர்த்து வந்தாலும் அவை ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளும் பாஜக அல்லாது ஆட்சியாளர்களும் இதை மறைமுகமாக ஆதரித்ததால்தான் இந்த மசோதா மாநிலங்கள் அவையிலும் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது.

எதற்காக இந்த அவசர முடிவு என்கின்றனர் பலரும்.

ஆனால் உண்மையில் இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை இந்த முடிவின் பின்னணியை சற்று ஆராய்ந்தால் தெரியும் என்று நான் கருதியதன் விளைவே இந்த பதிவு.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சிற்றரசுகள் இருந்தனவாம். அவற்றை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அவருக்கு உறுதுணையாக அப்போது உள்துறையில் உயர் அதிகாரியாக இருந்த கேரளத்தைச் சார்ந்த திரு வி.பி.மேனன் ஆகியோரின் விடா முயற்சியாலும் இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. இவற்றுள் இவ்விருவரின் எவ்வித முயற்சிகளும் பிடிகொடுக்காமல் இருந்துவந்தவை ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள்.

இவ்விரண்டு அரசர்களையும் தன்னுடைய புத்திக் கூர்மையாலும் நாவண்மையாலும் வழிக்கு கொண்டு வந்தவர் திரு வி.பி. மேனன் அவர்கள்தான் என்கிறது வரலாறு. பட்டேலுக்கு நூறடியில் உருவச் சிலை வைத்து போற்றும் பாஜக  அவருக்கு வலதுகரமாக இருந்து இயங்கிய விபி மேனனை முற்றிலுமாக மறந்து போனது வியாப்பாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசின் அப்போதைய மன்னராக இருந்த ஹிரிசிங்கிற்கு இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இந்தியா சுநந்திரம் அடைந்த போது காஷ்மீரை தன் வசம் எடுத்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்தில் இருந்த பாக்கிஸ்தான் காஷ்மீரிலுள்ள பஷ்த்தூன் இனத்தவர்களை தூண்டிவிட்டு காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்ட மன்னர் இனிமேலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது என்று அஞ்சி இந்தியாவுடன் இணைவது என முடிவு செய்தார். ஆனால் இதில் பல நிபந்தனைகளை மன்னர் முன் வைத்ததால் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதிருந்த நேரு அவர்கள் இணைப்பில் தீவிரம் காட்டவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் பஷ்த்தூன் மக்களுடைய தாக்குதலில் காஷ்மீரின் வடக்கு மற்ரும் மேற்கு பகுதிகளை பாக்கிஸ்தான் கைப்பற்றியது. இவை இப்போதும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீராக கருதப்படுகிறது.

வழிக்கு வராமல் முரண்டுபிடித்த மன்னரை சமாதானப்படுத்தி இணைப்பு ஆவணத்தில் அவருடைய கையொப்பத்தை பெற இந்திய அரசு திரு வி.பி. மேனனை அனுப்பி வைத்தது. அவருடைய தொடர் முயற்சியின் பலனாக 1947 வருடம் அக்டோபர் மாதத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

ஆனால் மன்னரின் முக்கிய நிபந்தனைகளான தங்களுக்கு என்று தனி கொடி, நாடாளுமன்றம், தனி குடியுரிமை போன்ற நிபந்தனைகளை இந்திய அரசால் நிராகரிக்க முடியவில்லை. இத்துடன் வெளியுறவு, இராணுவம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தையும் முடிவு செய்துக்கொள்ளும் உரிமையும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்த சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வசதியாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370 வது பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்
படி இம்மூன்று துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளையும் பாதிக்கும் இந்திய அரசின் எந்த சட்டட்மானாலும் அவை ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே இயற்றப்பட வேண்டும். இல்லையெனில் இத்தகைய சட்டங்கள் எதுவும் காஷ்மீர் மக்களை கட்டுப்படுத்தாது/ மேலும் காஷ்மீரில் அப்போது நிரந்தரமாக வசித்து வந்த மக்களே அந்நாட்டின் நிரந்தர குடிமக்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியும் என்ற சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. காஷ்மீர் பெண்களை மணக்கும் வெளி மாநிலத்து கணவர்களுக்குக் கூட இந்த  உரிமை மறுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மன்னரின் இத்தனை நிபந்தனைகளையும் விருப்பமில்லாவிட்டாலும் அப்போதைய பிரதமாரக இருந்த நேரு ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் காஷ்மீரை பாக்கிஸ்தானிடம் இழந்துவிக் கூடாது என்பதுதான்.

இந்த சிறப்புச் சலுகைகளை 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்க கட்சி துவக்க முதலே எதிர்த்து வந்தது. இமயம் முதல் குமரிவரை இந்தியா ஒரே நாடு என்பது அக்கட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆகவேதான் காஷ்மீர் மக்களுக்கு இதுவரை அளித்து வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டபோது ஜனசங்க கட்சியின் நிறுவனர் (founder)ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் கனவு நனவானது என்று மறைந்த தலைவர் பெயரில் இன்றும்
இயங்கிவரும் ஆய்வு மைய இயக்குன அனிர்பன் கங்குலி கூறியதாக செய்திகளில் பார்த்தோம். பாரதிய ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியாக பெயரளவில் மட்டும் மருவிய பாஜக தங்களுடைய நெடுங்கால கனவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் காலத்திற்காகவே காத்திருந்தது. தற்போது அந்த கட்சிக்கு மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாவிடினும் ஒடிசா., தில்லி ,ஆந்திரா, தெலுங்கான மற்றும் நம்முடைய தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த உதிரி கட்சிகளின் துணையுடன் அதை மிக எளிதாக நிறைவேற்றி சுமார் எழுபதாண்டுகால போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளது.

இதுதான் உண்மை.

இதற்கு இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடுதான் ஆகவே இதில் எந்த மாநில மக்களுக்கும் தனி அரசாங்கம் தனி கொடி, குடியுரிமை போன்ற
சலுகைகள் தேவையற்றவை என்பது மட்டுமே இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு பிண்ணனியாக இருக்க வாய்ப்பில்லை. காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளில் மிக முக்கியமாக கருதப்படுவது வெளிமாநிலத்தவர்கள் அங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்பதும் இந்த முடிவின் ஒரு முக்கிய காரணமாக எடுத்துரைக்கப்படுகிறது.

சமீபத்திய பண மதிப்பிழப்பு முடிவு அமலுக்கு வருவதற்கு முந்தைய ஒரு சில மாதங்களில் பாஜக வட இந்தியாவில் பல விலை மதிப்பு மிக்க அசையா
சொத்துக்களை பாஜக வாங்கி குவித்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானதை படித்திருப்பீர்கள். அது போன்றதொரு நிகழ்வுகள் அடுத்த சில
ஆண்டுகளில் காஷ்மீரில் நடக்க வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் பாஜக காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் விருப்பப்படி அசையா சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போவது நிச்சயம். நில அளவை மற்றும் நில மாற்றம் (transfer of property) மாநில ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபடியால் இவர்கள் நினைப்பதை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இங்கு அம்மையார் காலத்தில் அவரின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் தமிழக சொத்துக்களை அடுமாட்டு விலைக்கு வாங்கினார்களே அதுபோல பாஜகவின் இரட்டை தலைவர்களின் பெயரை பயன்படுத்தி தற்போது ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பல அடாவடி கார்ப்பரே நிறுவன முதலாளிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பகுதியை வாங்கி குவிக்க வாய்ப்புண்டு என்றாலும் மிகையாகாது.

அதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவிவிட்டு கொள்ளையடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கீழ் காணும் வரைபடத்தை பார்த்தாலே இதன் தீவிரம் உங்களுக்கு புரியும்.



************ 

06 ஆகஸ்ட் 2013

வறுமைக் கோடு என்னும் மாயை!

இப்பல்லாம் இதப் பத்தி பேசினாலே கம்ப எடுத்துக்கிட்டு அடிக்க வர்றவங்கதான் அதிகம்.

சமீபத்துல ஒரு மூன்றெழுத்து மூத்த பதிவர் - இவர் வயசுல இளையவர்தான்னாலும் ரொம்ப நாளாவே பதிவுலகுல இருக்கிறவர்ங்கறதால மூத்தவர்னு சொன்னேன் - இதப்பத்தி எழுதி காது குடுத்து கேக்க முடியாத வார்த்தைகள கருத்துரை மூலமா வாங்கிக் கட்டிக்கிட்டார். இத்தனைக்கிம் இவர் கவர்ன்மென்ட் சொன்னத பத்தி எதுவுமே எழுதலைங்க. தனக்கு ஒரு நாளைக்கி சாப்பாட்டுக்கு என்ன செலவாகுதுன்னுதான் சொன்னார்.

இவர நக்கல் பண்ணி இன்னொரு மூன்றெழுத்து மூத்த பதிவர் - இவரோட வயச பத்தி எனக்கு தெரியாதுங்க. ஆனா இவரோட எழுத்த படிச்சீங்கன்னா இவருக்கு ரத்தம் ரொம்ப சூடாருக்கறத புரிஞ்சிக்க முடியும். அதனால இவர் வயசுல மூத்தவரா இருக்க சான்ஸ் இல்லை - ஒரு பதிவு எழுதுனார். இதுலயும் மொதல்ல பதிவு எழுதுனவரப் பத்திய விமர்சனம்தான் ஜாஸ்தி இருந்துச்சி.

ஆனா இந்த ரெண்டு பேர் எழுதுனதப் பத்தியோ இல்ல இதப் பத்தி அல்பத்தனமா அறிக்கைகளை விட்ட சில அரசியல்வாதிகளைப் பத்தியோ நாம பேசப் போறதில்லை.

உண்மையிலேயே வறுமைக்கோடுங்கறது என்ன, எதுக்கு, ஏன் இந்த கோட்ட போடறாங்கங்கறத ஒரு ஆக்கபூர்வமா - குத்தம் சொல்றது எப்பவுமே ரொம்பவே ஈசிங்க. அதுக்குன்னு தனியா எந்த ஆராய்ச்சியும் செய்ய வேணாம். சகட்டுமேனிக்கி எழுதிட்டு போயிறலாம். சேத்த வாறி இறைக்கிறது ஈசிதானே. அத கழுவி சுத்தம் பண்றதுதான் கஷ்டம் - பாத்தா என்னன்னு எனக்கு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. ஆனா இதப்பத்தி நாலாப்பக்கமும் இருந்து வந்த இரைச்சல் எல்லாம் அடங்கட்டும்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்.

சரி இப்ப விஷயத்துக்குள்ள போலாம் வாங்க.

வறுமைக் கோடுன்னா என்னங்க?

இது என்ன பெரிய லக்‌ஷமண் ரேகையா இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறதுக்கு? நிச்சயமா இல்லைங்க. இந்த கோடு ஒரு அடையாளம் மட்டுமே. இதுக்குக் கீழ இருக்கறவங்கள பரம ஏழைங்கன்னு சொல்லலாம், அவ்வளவுதான்.  உதாரணத்துக்கு சொல்லணும்னா இருக்க வீடு இல்லாம, மூனு வேளையும் சுமாராக் கூட சாப்பிட முடியாம, தங்களோட குழந்தைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாம அன்னாடம் பொழப்புக்கே திண்டாட்டம் போடறவங்கன்னு சொல்லலாம்.

இதுதான் வறுமைக்கோடு, இதுக்குக் மேலை இருக்கறவங்க எல்லாம் ஏழைகள் இல்லேன்னு சொல்லிற முடியாது. உதாரணத்துக்கு இருக்க வீடுன்னு ஒன்னு இருக்குது. ஆனா மழை வந்துதுன்னா வீட்டுக்குள்ள இருக்கறதுக்கு வெளியிலயே இருக்கலாம்கறா மாதிரியான ஒரு வீடு, ஒரு வேளையாச்சும் வயிறார சாப்பிட முடியற அளவுக்கு வருமானம், பசங்கள கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியும்... ஆனா ஒடம்புக்கு பெரிசா ஏதாச்சும் வந்திருச்சின்னா மருத்துவம் பாக்க வசதியிருக்காது, பசங்கள ஒரு லிமிட்டுக்கு மேல படிக்க வைக்க முடியாது... இப்படி சொல்லிக்கிட்டே போவலாம்.

இவங்களுக்கும் மேல இருக்கறவங்கள நடுத்தரவாசிகள்னு சொல்றாங்க. இப்போ இந்தியாவுல இருக்கறவங்கள்ல இந்த வகுப்ப சேர்ந்தவங்கதான் ஜாஸ்தியாம். சொந்தமா இல்லன்னாலும் வாடகைக்கு - வசதியா இல்லன்னாலும் தேவைக்கு -  ஒரு வீடு, அந்த வீட்டுல டிவி, ஃபிர்ட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வசதிகள், மூனு வேளையும் பகட்டா இல்லன்னாலும் வயிறு நிறையறா மாதிரி சாப்பாடு, ஸ்கூல், காலேஜ் வரைக்கும் பசங்கள படிக்க வைக்க முடியற வசதி, வெளிய போய், வர்றதுக்கு ரெண்டு சக்கர வாகனம் - அது சைக்கிளோ இல்ல ஸ்கூட்டரோ, மோட்டார்சைக்கிளோ எதுவானாலும் - மாசத்துல ஒருநாள் ஜாலியா சினிமா செலவுகளை செய்ய முடியற சவுகரியம், பசங்களுக்கு உடம்பு சரியில்லன்னா தனியார் மருத்துவமனைகள்ல மருத்துவம் பாத்துக்க முடியற வசதி, தீபாவளி, பொங்கல் பிரமாதமா இல்லன்னாலும் ஓரளவுக்கு சந்தோஷமா கொண்டாடக் கூடிய வசதி.... இந்த பிரிவுல வர்றவங்க மொத்த ஜனத்தொகையில சுமார் நாற்பது பர்சென்டாம்.

இதுக்கு மேலருக்கறவங்களப் பத்தி சொல்லவே வேணாம். ஏன்னா நம்ம நாட்டுல இந்த பிரிவுல வர்றவங்க 10%க்கும் கம்மியாம்!

எப்படி இந்த கோட்ட போடறாங்கன்னு பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த கோடுன்னு பாத்துரலாம்.

மத்தியில இருக்கற அரசாங்கமும் சரி, மாநிலங்கள்ல இருக்கற அரசாங்கமும் சரி - அது எந்த கட்சிங்கறது முக்கியமே இல்லைங்க. ஏன்னா இத வரையறுக்கறது அரசாங்க நியமிக்கிற அதிகாரிங்க, பொருளாதாரத்துல டாக்டர் பட்டம் வாங்கினவங்கள மெம்பர்ஸா கொண்ட ஒரு குழுதான் - தங்களோட மக்கள் நல திட்டங்கள் யாருக்கு ஜாஸ்தி போயி சேரணும்கறத தீர்மானிக்கிறதுக்குத்தான் இந்த கோட ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தையும் ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால போட்டு பாக்கறாங்க.

இப்ப இந்த கோட்ட எப்படி டிரா (Draw) பண்றாங்கன்னு பாக்கலாம்.

இந்தியாவுல என்ன செய்யிறாங்கன்னு சொல்றதுக்கு முன்னால உலகளவுல இருக்கற உலக வங்கி அவங்களோட கணிப்புல என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

உலகளவுல அமெரிக்க பணமான டாலர வச்சித்தான் இந்த கோட்ட போடறாங்க. அதாவது ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கி அமெரிக்க பணத்துல 1.25 டாலர் அளவுக்கு வாங்கும் சக்தி இல்லாதவங்கள பரம ஏழைங்க அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்கன்னு சொல்லுது. இதுல முக்கியமா பாக்க வேண்டியது Purchasing power parityங்கற (தனிநபருடைய வாங்கும் திறன் விகிதம்னு சொல்லலாம்) விஷயம். அதாவது உலக பொது அளவி நாணயம்னு சொல்லப்படற அமெரிக்க டாலர் ஒன்னுக்கு அமெரிக்காவுல என்ன வாங்க முடியும்கறத கணக்கு போட்டு அதே பணத்துக்கு ஒவ்வொரு நாட்டுலயும் என்னத்த வாங்க முடியும்னு கணக்கு போடுவாங்க. இத மாத்தி சொல்லணும்னா - உதாரணத்துக்கு நம்ம நாட்டு பணத்த எடுத்துக்குவோம் - நம்ம நாட்டு ஒரு ரூபாவுக்கு அமெரிக்காவுல என்ன கிடைக்கும்னு பாக்கறதுதான் இந்த purchasing power parity (PPP). அஞ்சி வருசதுக்கு முன்னால உள்ள விலைவாசி கணக்குல பாத்தா அமெரிக்காவுல நம்ம ஒரு ரூவாவ பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான். ஏன்னா கடைசியா எடுத்த கணக்கு பிரகாரம் நம்ம நாட்டு ஒரு ரூவா அமெரிக்க பணத்தோட வாங்கற சக்தியில மைனஸ் அறுபத்திரண்டு பர்சன்டாம்!! ஆனா இன்னைக்கி இந்த இரண்டு நாட்டுக்கும் நடுவுல நடக்கற பிசினஸ்ல மாத்திக்கிற பண மாற்று விகிதப்படி (Exchange rate) ஒரு அமெரிக்க பணத்துக்கு சுமார் அறுபது இந்திய ரூபாவ குடுக்கணும். இதுக்கும் நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னால பாத்த PPPக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஆனாலும் உலக வங்கி சொன்ன அமெரிக்க பணம் 1.25க்கு நிகரான இந்திய பணம் எவ்வளவுன்னு பாத்தா சுமார் ரு.75/- அதாவது ஒரு நபர், ஒரு நாளைக்கி ரூ.75/- கூட செலவு பண்ண முடியலன்னா அவர் பரம ஏழை - அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவர்னு அர்த்தம்!

ஆனா சமீபத்துல செஞ்ச PPP எஸ்டிமேட் என்ன சொல்லுதுன்னு பாத்தா அமெரிக்க-இந்திய பணத்தை ஒப்பிட்டுப்பாக்கறப்போ இந்திய பணம் அமெரிக்க பணத்தை விட இரு மடங்கு குறைவானதாம்! அதாவது ஒரு அமெரிக்க பணத்துல அமெரிக்காவுல என்ன வாங்க முடியுமோ அதவிட ரெண்டு மடங்கு இங்க வாங்க முடியுமாம். இதுல இன்னொரு சூட்சுமத்தையும் உலக வங்கி சொல்லுது. ஒரு பொருளை தயாரிக்கறதுக்கு அமெரிக்காவுல ஆகற செலவுல பாதிதான் இந்தியாவுல ஆகும்கறதையும் கவனிக்கணுமாம். அதே மாதிரிதான் விவசாயத்துலயும். உதாரணத்துக்கு இங்க ஒரு கிலோ சன்ன ரக பொன்னி அரிசி சந்தையில ரூ.65/-க்கு வாங்க முடிஞ்சா அதே அரிசி அமெரிக்காவுல வாங்கணும்னா ரூ.130/- குடுக்கணுமாம். ஏன்னா அங்க அத பயிர் செஞ்சி, மில்லுல அரைச்சி, பேக் பண்ணி, மாலுங்களுக்கு (Mall) கொண்டு போயி சேக்கற செலவையெல்லாம் சேக்கறதால இந்த அடிஷனல் விலையாம்!

இந்த கணக்குப் பிறகாரம் பாத்தா உலக வங்கி சொல்ற அமெரிக்க பணம் 1.25ல பாதி அளவு அதாவது 0.65 டாலர் வாங்கும் திறன் இருந்தாலே ஒருத்தர் வறுமைக்கோட்டுக்கு மேல வந்துருவாராம்! ஓங்கி ஒரு அறை அறைஞ்சா என்னான்னு தோனுமே? நல்லவேளை, இத நா சொல்லலை. உலகவங்கி சொல்லுது. இது நமக்கு மட்டுமில்லீங்க, ஆப்பிரிக்கா, பஞ்சத்துக்கு பேர்போன சோமாலியா மாதிரியான நாட்டுல இருக்கறவங்களையும் இதே மாதிரியான வாங்கும் திறன் விகிதத்த (PPP) வச்சித்தான் கால்குலேட் பண்றாங்க.

அப்படிப்பார்த்தா அமெரிக்க பணம் 0.65 = ரூ.40/-னு வச்சிக்கலாம். அதாவது இந்தியாவுல இருக்கற ஒருத்தருக்கு தினசரி நாப்பது ரூபா செலவு பண்ண வசதி இருந்தா அவர் பரம ஏழையாக கருதப்பட மாட்டார். இது வருமானம் இல்லைங்கறத மனசுல வச்சிக்குங்க. அவருக்கு தினசரி நாற்பது ரூபா கணக்குல மாசத்துக்கு 1200 ரூபா செலவு பண்ண முடியற அளவுக்கு வருமானம் இருக்கணும். அவர் குடும்பத்துல அவரோட அஞ்சி பேர் இருந்தா 6000 ரூபா மாச செலவு செய்ய முடியணும். இப்ப சொல்லுங்க இந்த அளவுக்குள்ள செலவு செய்ய நம்ம நாட்டுல எத்தன குடும்பத்துக்கு முடியும்? அது முடியாதவங்க மட்டுந்தான் பரம ஏழைங்க, அதாவது அரசாங்கம் சொல்ற வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்களாம்.

உலகவங்கி அப்பப்போ அறிவிக்கிற இந்த விகித அடிப்படையிலதான் நம்ம நாட்டுல மட்டுமில்லாம உலகத்துலருக்கற எல்லா நாட்டுலயும் செய்யிறாங்க. ஆனா, அத அப்படியே காப்பியடிச்சி செய்யிறதில்லேங்கறதும் உண்மைதான். சாதாரணமா முன்னேறிய நாடுங்கன்னு சொல்றாங்களே அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி மாதிரி நாடுங்கள்ல உலகவங்கி சொல்றத விட கொஞ்சம் ஜாஸ்தியாவே வச்சி (higher level) வறுமைக்கோட்ட ஃபிக்ஸ் பண்ணுவாங்க. ஆனா இந்தியா மாதிரி வளர்ந்துவரும் நாடுகள்ல பல காரணங்களுக்காக (இதுல அரசியலும் ஒன்னுதான். மறுக்க முடியாது) உலகவங்கி சொல்றத விட இன்னும் கொஞ்சம் குறைச்சி (lower level) ஃபிக்ஸ் பண்றாங்கன்னும் ஒரு ஆய்வு (study) சொல்லுது. இது நிசம்தாங்கறா மாதிரிதான் இருந்துது இந்த வருசம் நம்ம திட்டக் குழு தீர்மானிச்சி அடிவாங்குன எஸ்டிமேட்டும். எல்லா பக்கத்துலருந்து கிடைச்ச அடிக்கப்புறம் மறுபடியும் ஏதாச்சும் செஞ்சி ஜனங்கள திருப்திப் படுத்தலாமான்னு பாக்கறாங்க.

சரி, இந்த கோட்ட நாங்களா போடலைன்னும் இதுக்குன்னு நாங்க அமைச்ச ஒரு எக்ஸ்பேர்ட் குழுதான் இத தீர்மானிச்சி சொல்லிச்சின்னும் நாங்க சும்மா அத ரிப்போர்ட்தான் பண்ணோம்னும் சமீபத்துல ஜகா வாங்குனார் நம்ம திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் அலுவாலியா. இவரப் பத்தி நிறைய அக்கப்போர் இருக்குது. இவரோட வீட்டுலருக்கற அஞ்சாறு கக்கூஸ - நாகரீகமா சொன்னா கழிவறை - இடிச்சி மாத்தி கட்டுறதுக்கே முப்பத்தஞ்சி லட்சம் செலவு பண்ணாராம்! இப்படிப்பட்டவர் மாசம் ஆறாயிரம் ரூபாவுக்குள்ள அஞ்சி பேர் இருக்கற குடும்பம் நடத்த முடிஞ்சா அவர் பரம ஏழை இல்லேன்னு சொன்னா கோவம் வருமா வராதா? என்னதான் எக்ஸ்பர்ட் குழு சொன்னாலும் இவர் எப்படி அத ஏத்துக்கலாம்னு கேக்கறாங்க ஜனங்க. நியாயம்தானே?

இந்த எக்ஸ்பர்ட் குழு எப்படி இந்த செலவு லிமிட்ட  (expenditure limit) கண்டுபுடிச்சாங்க?

சுதந்திரத்துக்கப்புறம் இந்த வறுமைக் கோட்ட கால்குலேட் பண்றதுக்கு ரெண்டு மூனு குழு அமைச்சிருக்காங்க. அதுல ஒரு குழு ஒவ்வொருத்தருக்கும் தினசரி எத்தன கலோரி உணவு தேவைப்படும்னு கால்குலேட் பண்ணி அப்புறம் அதுக்கு எவ்வளவு செலவாவும்னு ஒர்க் அவுட் பண்ணி அத்தோட மாசா மாசம் குடுக்க வேண்டிய வாடகை, கரன்ட், மருத்துவ செலவுன்னு ரொம்பவும் தேவைப்படற செலவையும் சேர்த்து அத முப்பதால வகுத்து ஒரு ஆளுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு வருமானம் (செலவு இல்ல!) வேணும்னு தீர்மானிச்சாங்க. அது சரிவரலை.

அதுக்கப்புறம் வந்த குழு விலைவாசி பட்டியல் (price index) அடிப்படையில கிராமத்துல வசிக்கறவங்களையும் நகரத்துல வசிக்கறவங்களையும் தனித்தனியா எஸ்டிமேட் பண்ணலாம்னு ஒரு ஐடியா குடுத்தாங்க. அதுவும் சரிவரலை.

அதுக்கப்புறம் கடைசியா ஒரு குழு அமைச்சாங்க. அதான் காலம் சென்ற பேராசிரியர் சுரேஷ் டென்டுல்கர் - இவர் ஒரு பொருளாதார மேதை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் - தலைமையில ஒரு குழு அமைச்சி இந்த கோட்ட மறுபடியும் கொஞ்சம் சைன்ட்டிஃபிக்கா எல்லாருக்கும் புரியறா மாதிரி போடுங்கன்னு சொன்னாங்க.

அவங்க அதுக்கு முன்னால சொன்ன வருமானத்த பாக்காம ஒவ்வொரு குடும்பத்தையும் சில தகுதிகள் (Economic Status) வேணும்னு தீர்மானிச்சி அதன் அடிப்படையில அந்த தகுதிய maintain பண்றதுக்கு ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு அவரோட அத்தியாவசிய தேவைகளை (இத முக்கியமா புரிஞ்சிக்கணும். அத்தியாவசியம்னா அன்னாடம் உயிர்வாழ என்ன தேவையோ அத மட்டும் பாத்துக்கற அளவுக்கு) நிறைவேத்திக்கறதுக்கு எவ்வளவு செலவு செய்யணும்னு பாக்கலாம்னு டிசைட் பண்ணி அதுக்கு எந்தெந்த செலவையெல்லாம் சேத்துக்கணும்னு ஒரு லிஸ்டே போட்டாங்க.

அதுல பதிமூனு ஐட்டம் இருந்துது.

1.நிலம்,
2.வீடு,
3.உடை,
4.உணவு,
5.சுகாதாரம்,
6.வீட்டு உபயோகத்திற்கு தேவையான சாமான்கள் (இதுல டிவி, ஃபிரிட்ஜ் மாதிரியான ஆடம்பர சாமான்கள் சேத்துறக்கூடாதுங்க!)
7.கல்வி
8.வேலை
9.வருமானம்
10.குழந்தைகள்,
11.கடன் சுமை
12.குடிபெயர்ந்ததற்கான காரணம் (கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்திருந்தால் அதற்கு என்ன அடிப்படைக் காரணம்?)

இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் 0லருந்து 4க்குள்ள மார்க் (Mark- மதிப்பெண்கள்) குடுக்கணும்னு டிசைட் பண்ணி சர்வே நடத்தச் சொல்லி ரெக்கமென்ட் பண்ணாங்க.

இதுல ஒரு cut-off mark நிர்ணயம் செஞ்சி இதுக்கு  கீழ மார்க் வாங்குனவங்கள வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ளவங்கன்னு தீர்மானிக்கலாம்னு ஐடியா!

உதாரணத்துக்கு சொந்த நிலமே இல்லன்னா முதல் பிரிவுல அவருக்கு பூஜ்யம் மதிப்பு கிடைக்கும். நிலம் சொந்தம் ஆனா அது பூர்வீகமா வந்துதுன்னா அதுக்கு 1, தானா சம்பாசிதிச்சதுதான் ஆனா அதுல கொஞ்சம் கடன் இருக்குன்னு சொன்னா அதுக்கு 2 அல்லது 3 கிடைக்கு சுயசம்பாத்தியத்திலிருந்து வாங்கிய வில்லங்கம் ஏதும் இல்லாத நிலம்னா அவருக்கு முழுசா 4 மார்க் கிடைக்கும்.

ரெண்டாவது ஐட்டத்துலருக்கற வீடு: சுய சம்பாத்தியத்துல வாங்குன சொந்த வீடுன்னா அதுக்கு 4 மார்க். சொந்த வீடு ஆனா கடன் நிறைய இருக்குன்னா அதுக்கு 3, பூர்வீக வீடுன்னா அதுக்கு 2. சொந்த வீடுதான் ஆனா அது குடிசைன்னா அதுக்கு 1 சொந்த வீடே இல்லைன்னா அதுக்கு 0.

இப்படி ஒவ்வொரு பிரிவுலயும் மார்க் போட்டு எல்லாத்தையும் சேர்த்து பாக்கறப்போ திட்டக்குழு ஏற்கனவே டிசைட் பண்ணி வச்சிருக்கற cut-offக்குள்ள இருக்கறவங்கள வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்கன்னு ஃபிக்ஸ் பண்ணாங்க.

இத ரெக்கமென்ட் பண்ண டென்டுல்கர் கமிட்டியே இதுல இருக்கற லிமிட்டேஷன்ஸ (limitations) சொல்லாம இல்ல. இது ஒரு முழுமையான அளவுகோல்னுல்லாம் சொல்லிக்கல. இதுக்கு முன்னால இருந்த குழுக்கள் சொன்னதையும் நாங்க சொன்னதையும் சேத்து ஒருத்தருக்கு எவ்வளவு தேவைங்கறத அரசு தீர்மானிச்சிக்கலாம்னும் சொன்னாங்க. ஏன்னா ஒரு மனுஷனோட அடிப்படை தேவை இதுதான்னு சொல்ல முடியாது. அத்தோட இதுல திடீர்னு ஏற்படற மருத்துவ செலவு, வீட்டுல ஏற்படக் கூடிய சுப மற்றும் துர்பாக்கிய நிகழ்வுகளால ஏற்படக் கூடிய செலவுகள், சமுதாய, சாதி அடிப்படையில் தேவைப்படுகிற செலவுகள்னு நிறைய விட்டுப்போயிருக்குன்னு சொல்லிட்டு நாங்க சொன்னத அடிப்படையா வச்சிக்கிட்டு அரசு எந்த தொகையையும் தீர்மானிச்சிக்கலாம்னுதான் சொல்லியிருக்காங்க.

ஆனா சமீபத்துல நடந்தது என்னன்னா கமிட்டி என்ன சொல்லிச்சோ அதை வச்சே ஒரு தொகைய கால்குலேட் பண்ணி அதுல எந்த மாத்ததையும் அரசு செய்யாம வெளியில விட்டுட்டு ஜனங்கக்கிட்டருந்து அடி கிடைச்சதும் இப்போ இத நாங்க சொல்லல எக்ஸ்பேர்ட் குழுதான் சொல்லிச்சின்னு சமாளிக்கப் பாக்கறாங்க. ஆனா இந்த முட்டாத்தனம் இப்ப மட்டுமில்லீங்க ஏறக்குறைய சுதந்திரம் வாங்குனதுலருந்தே செஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. இப்பருக்கற ஆட்சிக்கு முன்னால பிஜேபி, என்டிஏ வும் கூட பிளானிங் கமிட்டி சொன்னதையே வேதவாக்கா எடுத்துக்கிட்டுத்தான் தங்களோட நல திட்டங்கள்லாம் யாருக்கு போய் சேரணும்னு டிசைட் பண்ணாங்க.

ஆனா எந்த தடவையும் இல்லாம இந்த அளவுக்கு இது கிண்டலுக்கு ஆளானதுக்கு மெயின் காரணம் ஆளுங்கட்சி ஆளுங்க சில பேர் அடிச்ச முட்டாத்தனமான ஜோக்ஸ்தான். அப்புறம் இருக்கவே இருக்கு எத வேணும்னாலும் பரபரப்பாக்கி (sensationalise) காசு பண்லாம்னு பாக்கற மீடியா. நாம ஆட்சியிலருக்கறப்போ என்ன பண்ணோம்கறதையே மறந்துபோன எதிர்க்கட்சிகள்....இவங்கல்லாம் சேர்ந்து செஞ்ச ஒரே நல்ல காரியம் இந்த கோமாளித்தனமான கோட்ட நாட்டு ஜனங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுனதுதான்.

இதுலருந்து உருப்படியா ஏதாச்சும் நடந்தா சரி. ஆனா ஒன்னு... இப்ப சொன்ன லிமிட்டுலருந்து ஒரு அஞ்சோ பத்தோதான் கூட்டி சொல்வாங்களே தவிர நாம நினைக்கறாமாதிரி ரூ.40ங்கறத ரூ.100ன்னு மாத்திரமாட்டாங்க. அந்த கணக்குல அஞ்சி பேர் இருக்கற குடும்பத்துக்கு மாச செலவுக்கு ரூ.15,000/- வேணுமே? அப்படிப் பாத்தா நாட்டுலருக்கற மொத்த ஜனங்கள்ல பாதிக்கும் மேல பரம ஏழையாயிருவாங்களே?

இந்த சூட்சுமத்த புரிஞ்சிக்காம இதப்பத்தி கமென்ட் அடிச்ச நிறைய பேர் அவங்களோட பொருளாதார நிலையில வச்சி இந்த தொகை ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு போறுமான்னு கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அது சரியில்லை. தங்கறதுக்கு வீடு வாசல் இல்லாதவங்க, முழுசா மூனு வேளை சாப்பிட வசதியில்லாதவங்க, எங்க போனாலும் கால்நடையாவே போய்ட்டு வர்றவங்க, பசங்கள கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குக் கூட அனுப்ப வசதியில்லாதவங்க.... இவங்களுக்கு ஒரு நாளை ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவைன்னு அவங்க லெவல்லருந்து பாக்கணும். அதுக்கு அவங்கள கேட்டாத்தான் தெரியும். உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும்?

*********

06 ஆகஸ்ட் 2010

நாமம் போட்டு பேயை விரட்டும் கிராமம்!

என்று அகலும் இந்த மூட நம்பிக்கை!!

சமீப காலமாக நாட்டுப்புறங்களில் இத்தகைய மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருவதற்கு  தொலைக்காட்சிகள் பூதக்கண்ணாடி, நிஜம் போன்ற பிரத்தியேக நிகழ்ச்சிகள் மூலம் இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புவதும் ஒரு காரணம்.

இத்தகைய நிகழ்ச்சிகளில் தொலைகாட்சி நிரூபர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கிராமவாசிகளை பேட்டிக் கண்டு அவர்கள் கூறுவதை அப்படியே அதாவது எவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தாமல் ஒளிபரப்புவதன் மூலம் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு பதில் அதை வளர்க்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

கடவுளும் பேயும் மனித மனங்களில்தான் என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
***

02 ஆகஸ்ட் 2010

மின் கட்டண உயர்வு!


உண்மைதான்.

என்னிடம் ஏ.சி மட்டும்தான் இல்லை. மற்ற அனைத்து வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷின் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹாட் ப்ளேட், ஹாட் ஜக், ஓவன், என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பகலில் இரண்டு மின் விசிறிகளும் இரவில் நான்கு மின்விசிறிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும் கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய மாத மின் பயன்பாடு 300 யூனிட்டுகளை கடந்ததே இல்லை.

மின் கட்டண உயர்வு நிச்சயமாக என்னைப்போன்ற நடுத்தர மக்களை பாதிக்கவில்லை. இரவெல்லாம் குளுகுளு இன்பத்தை அனுபவிக்க நினைப்பவர்கள் சற்று கூடுதல் சிலவு செய்வதில் தவறேதும் இல்லை.

இந்த வகுப்பில் வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்! நிச்சயம் அவர்களுக்கு இது பாதிப்புதான். அதனால்தான்  அலறுகிறார்கள்!!