வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 டிசம்பர் 2019

நேரத்தை அறுவடை செய்தல்!

நேரத்தை அறுவடை செய்தல் (Harvesting time) என்ற வார்த்தை பயன்பாட்டை கேட்டிருக்கிறீர்களா?

சமீபத்தில் இணையதளம் ஒன்றில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் இந்த சொல் பயன்பாட்டை படித்தேன். 

இதற்கு நேரத்தை மிச்சப்படுத்துதல் என்று சுருக்கமாக கூறிவிடலாம்.

ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது என்பதை மும்பையில் சில ஆண்டுகள் வசித்தால் போதும், தெளிவாக தெரிந்துவிடும். 

நான் மும்பையில் இரு தவணைகளாக சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

முதல் தவணையில் நான் பணியாற்றிய செம்பூர் கிளைக்கு அருகிலேயே குடியிருந்ததால் அலுவலகத்திற்கென்று போக-வர செலவிடும் நேரம் அதிகம் போனால் அரை மணி நேரம்தான். பெரும்பாலான நாட்களில் உடன் வசித்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றுவிடுவேன். 

ஆனால் இரண்டாவது தவணையில் நான் பணியாற்றிய இடம் காலா கோடா என்ற பகுதி மும்பையின் ஒரு கோடியிலும் நான் வசித்த இடமான வாஷி மறு கோடியிலும் இருந்ததால் போக-வரவே தினமும் சுமார் மூன்று மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது வாஷியிலிருந்து மும்பை வி.டி. ரயில் நிலையத்திற்கு விரைவு மின்வண்டியும் கிடையாது. 

வாஷி ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் வெவ்வேறு மார்க்கங்களில் மின்வண்டிகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். நான் செல்லவிருந்த மார்க்கத்தில் சுமார் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வண்டிதான். அதாவது அதிகாலை 4..01 முதல் வண்டி என்று துவங்கி ஒவ்வொரு ஒன்பது மணித்துளிகளுக்கு ஒரு வண்டி என்று அடுத்த நாள் விடியற்காலை 1.00 மணி வரை தொடர்ந்து இரு மார்க்கங்களிலும் வண்டிகள் வரும், செல்லும். இடையில் சிக்னல் கோளாறு, எதிரில் வரும் வண்டிகளுக்கு இடம் விட்டு காத்திருத்தல் போன்றவைகளால் கால தாமதம் ஏற்படும் சமயங்களில் - இது பெரும்பாலும் எல்லா நாட்களிலும் நடக்கும் - அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் எதுவும் நடக்காது... ஒரு மணித் துளி காலதாமதமாக நாம் நிலையத்தினுள் நுழைந்தாலும் மின்வண்டியை தவறவிட்டுவிட்டு அடுத்த வண்டிக்காக காத்திருக்க வேண்டியதுதான்.

பெரும்பாலும் ஒரு வண்டி காலதாமதமானால் அடுத்த வண்டியில் பயணிப்பதற்கென வந்து சேரும் பயணிகளும் சேர்ந்துக்கொள்ள இரண்டு வண்டிகளுக்கான கூட்டம் நிலையத்தை அடைத்துக்கொண்டு காத்திருக்கும். நம்மால் அந்த பயணிகளுடன் போட்டி போட்டிக்கொண்டு வண்டியில் ஏற முடியவே முடியாது. அதை விட்டு விட்டு அடுத்த வண்டிக்கு காத்திருக்க வேண்டியதுதான். அப்போதுதான் ஒவ்வொரு மணித் துளியின் அருமையும் நமக்கு புரியும்.

சென்னையிலும் இதே அளவு என்றில்லாவிட்டாலும் புற நகர் வண்டிகளை பிடிப்பவர்கள் ஓடும் ஒட்டத்தை பார்த்தாலே தெரியும், நேரத்தின் அருமை!

இதைத்தான் கட்டுரையாளர் harvesting time என்று கூறியிருந்தார். நேரத்தை அறுவடை செய்தல்.

நேரத்தை மிச்சப்படுத்துதல் ஒரு கலை. அது அனைவருக்கும் கைவரும் என்று கூற முடியாது.

சிலர் எல்லாவற்றிலும் பரபரப்பாக இருப்பர். வேறு சிலர் எதிலும் நிதானமாக இருப்பர். 

ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே பரபரப்புள்ளவர்களாக இருந்தாலும் பிரச்சினைதான். அல்லது ஒருவர் பரபரப்பானவராகவும் ஒருவர் நிதானமானவராக இருந்தாலும் பிரச்சினைதான். இருவருமே நிதானமானவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

பெரும்பாலான வீடுகளில் அலுவலகம் புறப்பட்டுச் செல்லும் சமயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவதே இந்த நேரப் பிரச்சினையால்தான். 

நேரத்தை மிச்சப்படுத்த பல எளிய வழிகள் உள்ளன. 

அவற்றில் சில:

1. மென்பொருள் தயாரிப்பவர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பாக ஒரு Flow Chart தயாரித்துக்கொள்வார்கள். அதை நாமும் தினசரி அலுவல்களில் தயாரித்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததிலிருந்து எந்தெந்த அலுவல்களை அன்று செய்ய வேண்டும் என்பதை முந்தைய தின இரவே தயாரித்துக்கொள்ளலாம். 

2. எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது. நம்முடைய பெரும்பாலான நேரம் விரையமாவதே நமக்கு தேவையான பொருட்களை தேடுவதில்தான் என்றால் மிகையல்ல. 

3.வீட்டில் எந்த பொருள் அது பற்பசையானாலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களானாலும் அது இன்னும் இரண்டொரு நாட்களில் தீர்ந்துவிடப்போகிறது என்று தெரிய வரும்போதே அதை ஒரு புத்தகத்தில் (டைரி என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கடைக்குச் செல்ல வேண்டுமோ அந்த தேதியிலேயே) குறித்துக் கொள்ளலாம். 

4. மார்க்கெட்டுக்கு செல்லும்போதும் மார்க்கெட்டின் அமைப்பை மனதில் வைத்துக்கொண்டு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும். கடை வாயிலிருந்து துவங்காமல் கடைக் கோடியிலிருந்து துவங்கி வாசல் வரை பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை மனதில் வைத்துக்கொண்டு பட்டியலை தயாரித்தால் நேரமும் மிச்சம் எதுவும் மறந்தும் போகாது. இப்போது பெரு நகரங்களில் மால்கள் தான் பிரசித்தம் என்பதால் அதன் வரைப்படத்தையும் மனதில் வைத்து பட்டியலை தயாரித்துக்கொள்ளலாம்.

5. சமையலில் தினமும் என்ன குழம்பு அல்லது கறிகாய் வைப்பது என்ற குழப்பத்திலேயே இல்லத்தரசிகள் நேரத்தை வீணடிப்பார்கள். என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அதற்கும் ஒரு அட்டவணை வைத்திருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாகவே அதாவது 2010லிருந்து வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவது என் வேலைதான். ஆகவே எந்த நாள் எந்த சமையல் என்பதையும் நானே தீர்மானித்துவிடுவேன். ஏழு நாட்களுக்கு ஏழு குழம்பு அதற்கு தேவையான கறிகாய் எல்லாம் அந்த அட்டவணைப்படிதான். அதிலேயே தினமும் பல மணித்துளிகள் மிச்சமாவதை உணர முடிகிறது. 

7. வெளியில் எங்காவது புறப்பட வேண்டுமென்றால் நான் மனதில் வைத்திருக்கும் நேரத்திலிருந்து குறைந்தது அரை மணி நேரம் முன்பாகவே புறப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடுவேன். புறப்படும் நேரத்தில் ஏற்படும் டென்ஷனை இது பல மடங்கு குறைத்துவிடுவதுண்டு. 

8.எல்லாவற்றிற்கும் நேரம் என்று ஒன்று உண்டு என்பார்கள் நம் முன்னோர்கள். எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்து முடித்துவிட்டால் நேரத்திற்கு நேரமும் மிச்சம் தேவையில்லாத படபடப்பும் தேவைப் படாது என்பார்கள். அதை வேத வாக்காக எடுத்துக்கொள்வதும் நேரத்தை மிச்சப்படுத்தும். 

9. முடியாது என்ற வார்த்தையை தயங்காமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று சொல்ல ஆரம்பித்தால் எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாது.

10. நம்முடைய செல்பேசியிலுள்ள ‘நாட்க்காட்டி (Calendar) செயலி’யை பயன்படுத்தி ஒரு மாதம் முழுவதும் எந்தெந்த தேதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டு அலாரமும் வைத்துவிட்டால் நேரம் வெகுவாக மிச்சப்படும், மறந்தும் போகாது. குறிப்பாக மின்கட்டணம், கடன் அட்டை பணம் செலுத்துதல் என்பன போன்ற முக்கியமான விவரங்களை அந்தந்த நாட்களில் குறித்து வைத்துக்கொண்டாலும்  தாமதக்கட்டணம் செலுத்துவதையும் தவிர்க்க முடியும். 

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். 

ஒரு பதிவை எழுத துவங்கும்போதே இதைத்தான் எழுத வேண்டும் என்று நாம் மனதில் குறித்துக்கொள்வதில்லையா? அதே போன்று அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரம் மிச்சம்தான்.

ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போறமாட்டேங்குது என்பவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு திட்டமிடாமல் செயல்படுபவர்களே என்பது என் கருத்து. என் அனுபவமும் அதுதான். 

**********

04 ஏப்ரல் 2013

திண்ணை - விவாத மேடை



தினமலர் நாளிதழில் வெளியாகும் டீக்கடை பெஞ்சு பகுதியைப் போன்றதுதான் எனது ‘திண்ணை’யும்.

இதில் வாரம் ஒருமுறை அந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் உள்ளிட்ட நாட்டு நடப்புகளை பாரபட்சமில்லாமல் அலசுவேன்.
இதில் என்னுடன் இரண்டு கற்பனை பாத்திரங்களையும் இணைத்துக்கொண்டால்தான் சுவாரஸ்யம் இருக்கும் என்பதால் கணேசு, ரஹீம்பாய் என்ற இருவரும் இந்த திண்ணை விவாத மேடையில் பங்கு பெறுகிறார்கள்.  ரஹீம் பாய் சென்னையில் வியாபாரம் செய்கிறார். அவர் வீட்டுத் திண்ணைதான் எங்களது விவாத களம். கணேசு என்கிற கணேஷ்ராம் அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். மூவருமே சமவயதினர்.

இதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் என்னுடைய கருத்துக்கள் என்று எடுத்துக்கொள்ளலாகாது.

ரஹீம்: வாய்யா கணேசு. ஒரு நாளும் நேரத்துக்கு வரமாட்டீரே.

கணேசு: ஆம்ம்ம்மா… வெறும் வெட்டிப்பேச்சுதானய்யா நடக்குது? இதுல நேரத்துல வரலன்னாதான் என்ன? வீட்டம்மா இன்னைக்கி போனாத்தான் ரேஷன்ல ரெண்டு பருப்பும், பாமாயிலும் கெடைக்கும், வாங்கிக் குடுத்துட்டு எங்கயாச்சும் போங்கன்னு சொன்னா. அத தட்டிட்டு வரமுடியாமாய்யா? ஆமா எங்க ஜோசப்ப காணம்?

ரஹீம்: (உரக்க சிரிக்கிறார்)அவர் வர்றது இருக்கட்டும். உம்ம ஒன்னு கேக்கணும். ஏன்யா நீரு கவர்ன்மென்ட்ல அதிகாரியா இருந்து ரிட்டயர்ட் ஆனவரு. இப்பவே இருபதுக்கு மேல பென்ஷன் வாங்கறீரு. அப்ப சர்வீஸ்ல இருக்கறப்ப குறைஞ்சது அம்பதாவது சம்பளம் இருந்திருக்கும். அத்தோட கிம்பளம் வேற. ஒமக்கு எப்படிய்யா ரேஷன் சாமான்லாம் கிடைக்கிது?

கணேசு: யோவ் பாய், வாய கழுவுய்யா. யாருக்கு எல்லா சாமானும் கிடைக்கிது? எனக்கு அரிசி, மண்ணெண்ணை, மைதா இதெல்லாம் கிடையாது. ரெண்டு வருசத்துக்கு முன்னால வரைக்கும் வெறும் சக்கரை மட்டுந்தான். என்னமோ தெரியல இப்ப ரெண்டு வருசமா துவரை, உளுந்து, அத்தோட பாமாயிலும் குடுக்கான். அதுக்கூட அஞ்சாம் தேதிக்கு உள்ளாற போனாத்தான். இல்லன்னா வெறும் சக்கரை மட்டுந்தான்.

ரஹீம்: அட! அது ஏன்? ஒரு கடையில இருக்கற எல்லா கார்டுக்கும்தான பருப்பு அரசு சப்ளை பண்ணுவாங்க?

கணேசு: அப்படித்தான்யா நானும் நெனச்சிக்கிட்டு அவன் கிட்ட போயி சண்டை போட்டேன். அப்புறந்தான் தெரியுது கடையில ரெஜிஸ்டர் ஆயிருக்கற 1000 கார்டுல 500 கார்டுக்கு தேவையான பருப்பு சாமான் மட்டுந்தான் சப்ளையாம். ஆயிலும் அப்படித்தான். சக்கரை மட்டுந்தான் முழுசா வருதாம். அதனாலதான் மாச துவக்கத்துலயே ஆளுங்க வந்து க்யூவுல நின்னு வாங்கிக்கிட்டு போயிடறாங்க. என்னெ சொல்றீயே அங்க க்யூவுல வந்து பாரு. அவனவன் பைக்ல ஏன் கார்ல கூட வந்து சாமாங்கள வாங்கிகிட்டு போறான். இவனுங்களுக்கு மட்டும் எப்படி எல்லா சாமானும் கிடைக்கற ரேஷன் கார்ட் கிடைச்சிதோ தெரியல. இந்த மாதிரி ஆளுங்களாலதான் கிடைக்க வேண்டிய ஆளுங்களுக்கு ரேஷன் சாமான் கிடைக்க மாட்டேங்குது. சரி.. இவ்வளவு பேசறியே ஒனக்கும் ஃபுல் ரேஷன் கார்டு இருக்குல்ல? நீ என்ன கொஞ்சமாவா சம்பாதிக்கறே? ஸ்மக்ளிங் பிசினஸ்னா சும்மாவா?

ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ் ரேஷன் கடையில போயி நிக்கறதெல்லாம் வீட்டு பொம்பளைங்க செய்ய வேண்டியது. நம்ம வேலை சம்பாதிக்கறது. அவ்வளவுதான். ஒம்ம மாதிரி ஓஞ்சி போயி வூட்ல ஒக்காந்தா இப்படித்தான்.

கணேஷ் கோவத்துடன் பதில் சொல்ல வாயெடுக்க ஜோசப் வருவதை பார்த்துவிட்டு  ஒதுங்கி அவர் அமர இடம் கொடுக்கிறார்.

ஜோசப்: என்ன ரஹீம் பாய் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலருக்கு?
கணேஷ்: இந்த பாய்க்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தியாயிட்டுது ஜோசப் என்னெ போயி ஓஞ்சிப் போன கேசுங்கறார்.

ஜோசப் சிரிக்கிறார். விடுங்க கணேஷ் நம்ம ரெண்டு பேருமே ரிட்டயர்ட் கேஸ்தான? அதத்தான் அப்படி சொல்லியிருப்பார். விடுங்க. இன்னைக்கி எல்லா காலேஜும் மறுபடியும் திறந்துட்டாங்களாமே தெரியுமா?
கணேஷ்: ஆமாய்யா.. கேள்விப்பட்டேன். ஆனா செமஸ்டர் எக்ஸாம்லாம் தள்ளிப் போட முடியாது வேணும்னா சாட்டர்டே சண்டே க்ளாஸ் வச்சி போர்ஷன முடிச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்களாம் எல்லா யூனிவர்சிட்டியிலயும். பசங்கதான் பாவம்.

ரஹீம்: (கோபத்துடன்) என்னய்யா பாவம்? இவனுங்கள யாரு ஸ்டிரைக் பண்ண சொன்னது? என் பொண்ணுக்கூட காலேஜுக்கு போக முடியாம இப்ப செய்யாத தப்புக்கு தண்டனைங்கறா மாதிரி சனி, ஞாயிறுல்லாம் காலேஜுக்கு போவணும். இதுக்கெல்லாம் ஸ்ட்ராங்கான சட்டம் வரணும்யா. யார் ஸ்டிரைக் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போயிருச்சி. ஃபீஸ் கட்டறது நாம, ஸ்டிரைக், போராட்டம்னு சொல்லி கூத்தடிச்சிட்டு அலையறது இந்த பசங்க.

ஜோசப்: என்ன பாய் இப்படி சொல்லிட்டீங்க. ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான ஸ்டிரைக் செஞ்சாங்க?

ரஹீம்: எதுய்யா நல்ல விஷயம்? எங்கயோ இருக்கற ஆளுங்கள பத்தி கவலைப்படறானுங்களே இப்படி காலேஜுக்கு போகாம ரோட்ல ஒக்காந்து போலீஸ்ல அடிபட்டு மண்ட, கை காலு ஒடஞ்சு சில பேரு ஆஸ்பட்ல இருக்காங்களாமே அதுக்கு செலவு பண்றது யாரு? பேரன்ட்ஸ்தான? அட செலவ வுடுய்யா. ஒடம்பு சரியாவற வரைக்கும் காலேஜுக்கு போக முடியாது. பாடம் போயிரும். அப்புறம் அடுத்த செமஸ்டரும் போயிரும். அவனுங்கள பெத்தவங்களுக்கு எவ்வளவு டென்ஷன்? இவனுங்கள தூண்டிவிட்டுட்டு பின்னால நிக்கற அரசியல்வாதிங்களா இதுக்கு ரெமடி பண்ணப்போறாங்க?

கணேஷ்: பாய் சொல்றதும் ஒருவகையில சரிதான் ஜோசப். சரி, இந்த பசங்க ஸ்டிரைக் பண்றாங்களேன்னு சொல்லி அங்க ராஜபக்‌ஷே ஒடனே தமிழாளுங்களுக்கு ஏதாச்சும் செஞ்சிறப் போறாரா?

ஜோசப்: ஏன், நம்ம கலைஞர் மத்தியிலருந்து ரிசைன் பண்ணதுக்கு இவங்கதான காரணம்?

ரஹீம்: (எரிச்சலுடன்) அடப்போய்யா நீ ஒன்னு சுத்த வெவரம் இல்லாத ஆளாருக்கே. கலைஞர் ரிசைன் பண்ணதுக்கு காரணமே வேற.

ஜோசப்: என்ன பாய் சொல்றீங்க?

ரஹீம்: அட ஆமாய்யா. அடுத்த எலெக்‌ஷன்ல காங்கிரசோட கூட்டு சேந்து நின்னா ஒரு சீட் கூட ஒப்பேறாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும். இப்பன்னு இல்ல, ஒரு வருசமாவே இந்த சிக்கல்லருந்து எப்படிறா தப்பிச்சிக்கறதுன்னு பார்த்துட்டே இருந்திருப்பாரு. பிரபாகரன் பையன ஈவு இரக்கமில்லாம சுட்டுதள்ளுன விவகாரம், அப்புறம் அந்த ஐநா சபையில அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம். எப்பவும் முடிவெடுக்க முடியாம சொதப்புற மன்மோகன் இதுலயும் கடைசி நேரம் வரைக்கும் டிசைட் பண்ணாம சொதப்புவாருன்னு கலைஞருக்கு தெரியும். அவர் நினைச்சா மாதிரியேதான் சிங்கும் பண்ணாரு. அது அவர் பிறவி குணம். அத சாக்கா வச்சிக்கிட்டு எப்படியும் மிஞ்சிப் போனா இன்னும் அஞ்சாறு மாசந்தான், தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் வந்துரும் இதான் சரியான நேரம்னு டிசைட் பண்ணி வெளிய வந்துட்டாரு.

கணேஷ்: இதுல இன்னொரு சூட்சுமமும் இருக்குன்னு பேசிக்கறாங்களே பாய்.

ரஹீம்: அழகிரி விஷயந்தானே. இதுல என்ன பெரிய சூட்சமம் இருக்கு? அவரோட போக்குதான் கொஞ்ச நாளாவே க்ளியரா தெரியுதே! சென்ட்ரல் மினிஸ்டர் போஸ்ட் கிடைச்சதுலருந்தே அவர் போடற ஆட்டத்த கலைஞர் பாத்துக்கிட்டுத்தான இருக்காரு? ஒரே கல்லுல ரெண்டு மாங்காங்கறா மாதிரி கால சுத்திக்கிட்டிருந்த பாம்பையும் கழட்டி விட்டுட்டாரு கழுத்த நெறிக்கற மாதிரி இருந்த துண்டையும் தூக்கிப் போட்டுட்டாரு.

ஜோசப்: சிரிக்கிறார். இதுல பாம்பு எது, துண்டு எது பாய்?

ரஹீம்: அதெல்லாம் அவங்கங்க என்ன நினைச்சிக்கிறீங்களா அது மாதிரின்னு வச்சிக்கங்களேன். நா என்ன சொல்ல வறேன்னா ஸ்டூடன்ஸ் பண்ண ஸ்டிரைக்குக்கும் கலைஞர் எடுத்த முடிவுக்கும் எந்த கனெக்‌ஷனும் இல்ல.

கணேஷ்: சரி பாய். நீங்க சொல்றது சரின்னே வச்சிக்குவம். அப்ப இப்ப தமிழ்நாட்ல கொஞ்ச நாளா நடக்கற ஆர்ப்பாட்டத்துக்கெல்லாம் எந்த யூசும் இல்லைன்னு சொல்றீங்களா?

ரஹீம்: பின்னே… சரிய்யா, நா ஒன்னு கேக்கறேன். எல்ட்டீடீய சுத்தமா அடிச்சிக்கிட்டிருந்தப்போ இந்த ஆவேசம் ஏன் வரல? அது முடிஞ்சி மூனு வருசமாயிருச்சி. இப்ப எதுக்கு இந்த ஆவேசம்?

ஜோசப்: என்ன பாய் இப்படி கேக்கறீங்க? அந்த பிஞ்சி பையன கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம சுட்டு தள்ளியிருக்காங்க. இப்ப கூட பேசாம இருந்தா எப்படி?

ரஹீம்: சும்மாருங்க ஜோசப். பிரபாகரன் மகன் மட்டுந்தான் இப்படி செத்தானா? இவனெ மாதிரி எத்தன பசங்கள சுட்டுத்தள்ளியிருக்கறதா நியூஸ் வந்துச்சி? எத்தன அப்பாவி ஜனங்கள கேடயமா யூஸ் பண்ணி அந்த கேப்டன் ஃபைட் பண்ணாரு? அப்ப யாராச்சும் அவர அப்படி செய்யாதய்யான்னு சொன்னீங்களா? இங்க அவரோட ஆத்மார்த்த சிநேகிதங்கன்னு சொல்லிக்கற வைகோ, சீமான் ஏன் நெடுமாறன், இவங்க எல்லாம் அப்பாவி தமிழாளுங்கள தப்பிச்சிப் போக விட்டுருய்யா. அவங்கள கேடயமா பயன்படுத்தாம தைரியமா நின்னு போராடுங்கன்னு சொல்ல வேண்டியதுதான? தப்பிச்சி போக பாத்தவங்களையும் ஈவு இரக்கமில்லாமல் எல்ட்டீட்டியே கொன்னாங்களாமேய்யா. இதையெல்லாம் பிபிசி சொன்னப்பா டூப் வுடறான்னு சொன்னவங்கதான இவங்க? அதான் இப்ப சானல் ஃபோர்ல காட்டறத சிங்களவன் டூப்ங்கறான்!

ஜோசப்: நீங்க என்ன சொல்ல வறீங்க பாய்? அந்த பையன சுட்டு தள்ளுனத டூப்புன்னு நீங்களும் சொல்றீங்களா?

ரஹீம்; அப்படியில்ல ஜோசப். இதுக்கு மட்டும் ஏன் இப்படி ஆவேசப்படறீங்கன்னு கேக்கறேன். விடுதலை வாங்கிறலாம், வாங்கிறலாம்னு ஆசை காட்டி ஒரு தலைமுறையையே போராளியாக்கி இப்ப அவங்கள நம்பி இருக்கற குடும்பங்களையெல்லாம் நிர்க்கதியா நிக்கறாங்களே அதுக்கு யார்யா காரணம்? சரி அதெல்லாம் போவட்டும். இப்ப எங்களுக்கு தனி நாடு வேணும் கேக்கற நிலையிலயா அங்க இருக்கறவங்க இருக்காங்க? அன்னாடம் சோத்துக்கும், தங்கறதுக்கு இடமுமில்லாம தவிச்சிக்கிட்டிருக்கறவங்கக் கிட்ட போயி இன்னும் கொஞ்ச நாளைல ஒங்களுக்கு தனிநாடு நாங்க வாங்கி குடுத்துறுவோம் அது வரைக்கும் பசிய பொறுத்துக்குங்கன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்? இதுக்கு சிங்களவனா செய்யாட்டியும் இங்கருந்து போற உதவி பணத்தையாவது அங்கருக்கற தமிழனுங்களுக்கு கிடைக்கறதுக்கு ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கணும். அதுக்கு நம்ம எதிரின்னாலும் பரவால்லைன்னு சிங்களவங்கூட சேர்ந்து இருக்கறா மாதிரி பொறுமையாத்தான் இருக்கணும். அவனுங்க தமிழனுக்கு ஏதாச்சும் செய்யணும்னா அதுக்கு அவனெ நாம தொந்தரவு குடுக்காம இருக்கணும். அத வுட்டுப்போட்டு சிங்களவன எதிரியா நினைச்சி அவன் பண்ண அக்கிரமத்துக்கெல்லாம் நாம தண்டன குடுக்கணும்னு பாத்தா அது நேர்மாறான விளைவுகளத்தான் ஏற்படுத்தும். அவனெ எதுக்கறதுக்கு ஆளுங்க இருக்கறா மாதிரியே சைனா, பாக்கிஸ்தான் மாதிரி ஆதரிக்கறதுக்கும் ஆளுங்க இருக்கத்தானய்யா செய்யிறாங்க? அதுக்கு என்ன சொல்றீங்க?

கணேஷ்: அப்ப இவ்வளவு நடந்தக்கப்புறமும் நாம இலங்கைய நட்பு நாடா நினைச்சி அவங்கூட உறவாடணும்னு சொல்றீங்களா பாய்? 

ரஹீம்: சிரிக்கிறார். நான் என்ன சொல்ல வறேன்னா அவங்கள எதிரி நாடா நெனைச்சி நம்ம கோவத்த காட்டறதால எந்த யூசும் இல்ல. அதுலயும் நம்மள சுத்தி இருக்கற மூனு நாடுமே நம்மளுக்கு நேர் எதிரா நடந்துக்கறப்ப நாம மட்டும் தனியா நிக்கறா மாதிரி இல்ல தெரியுது? இதுனால யாருக்கு என்னய்யா பிரயோஜனம்? இங்க ராஜபக்‌ஷே கொடும்பாவிய எரிச்சி கோவத்த வெளிய காமிக்கறீங்க? அங்க என்ன பண்றாங்க? அன்னைக்கே தமிழ் பகுதியில எல்லாம் செக் போஸ்ட்ட ஜாஸ்தியாக்கி வூட்ட வுட்டு போற ஓவ்வொருத்தனையும் சோதன பண்றேன்னு கொடும படுத்தறான். தமிழாளுங்களுக்குன்னு இந்தியா கட்டிக்குடுத்த வூடுங்கள்ல சிங்களவன குடி வைக்கிறான். நாம நடத்தற ஒவ்வொரு போராட்டமும் இந்த மாதிரி விளைவுங்களதான் ஏற்படுத்தும். இது இங்க இருக்கற தலைன்னு சொல்லிக்கிட்டு திரியறவங்களுக்கும் தெரியத்தான் செய்யிது. ஆனாலும் அவங்க பொழப்பே அதானேய்யா? அவங்களுக்கு வேற ஏதாச்சும் வேல வெட்டி இருக்கா என்ன?

ஜோசப்: பாய், இருந்தாலும் நீங்க ரொம்பதான் நம்ம தலைவருங்கள நக்கல் பண்றீங்க.

ரஹீம்: அடப் போங்கய்யா. தலைவருன்னு சொல்றவங்க முதல்ல பட்டினி கிடக்கட்டும், போலீஸ்ல அடிபடட்டும், ஜெயில்ல போயி ஜாமீன் கேக்காம இருக்கட்டுமே பாக்கலாம்? அடிபடறதும் ஜெயிலுக்கு போறதும் அப்பாவி தொண்டங்கதானய்யா? இது எந்த விதத்துல நியாயம்?

கணேஷ்: சரி பாய். நீங்க ரொம்ப டென்ஷன்ல இருக்காப்பல தெரியுது. மீதிய அடுத்த வாரம் பேசிக்கலாம். சாப்பாட்டு டைமுக்கு வீட்டுக்கு போகலன்னா அப்புறம் சாப்பாடு கிடைக்காது. நா வரேன். (கிளம்புகிறார்)

ஜோசப்: சரி பாய். நானும் வரேன். அடுத்த வாரம் கொஞ்சம் சாந்தமாவே வாங்க.

ரஹீம்: அட போங்க ஜோசப். ஒங்களுக்கு படிக்கற பசங்க இல்ல. அதான் கஷ்டம் தெரியல. நம்ம பொண்ணு இந்த செமஸ்டர் எப்படி வாப்பா பாஸ் பண்ணப் போறேன்னு அழுவுதுய்யா. அதான் எனக்கு பயங்கர ஆத்திரமா வந்துருச்சு. இதுக்கு இந்த பாழாப்போன அரசியல்வாதிங்கதானே காரணம்?

ஜோசப்: சரி, சரி வுடுங்க. வீட்டுக்குள்ள போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா கடைக்கி போங்க. வரேன். (ரஹீம் பாயின் பதிலுக்கு காத்திராமல் திண்ணையிலிருந்து இறங்கி தெருவில் நடக்க ரஹீம் அவர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறார்.

************


10 மே 2010

சமச்சீர் கல்வியும் பள்ளிக் கட்டணமும்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டண அறிவுப்பு பெற்றோர்களிடையே வரவேற்பையும் பள்ளி நிர்வாகிகளிடையே சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய அரசு அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள பள்ளிகள் கீழ்காணும் அதிகபட்ச தொகையை மட்டுமே ஆண்டுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

1. துவக்கப் பள்ளிகள் - ரூ.5,000/-
2. நடுநிலைப் பள்ளிகள் - ரூ.8,000/-
3. உயர்நிலைப் பள்ளிகள் - ரூ.9,000/-
4. மேல்நிலைப் பள்ளிகள் - ரூ.11,000/-

கிராமப்புறங்களிலுள்ள துவக்கப் பள்ளிகளுக்கு ரூ.3,500/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த அறிவிப்பு எதிர்பார்த்தபடியே பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமச்சீர் கல்வித்திட்டம்

ஒரு மாநிலத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நல்ல கொள்கைதான்.

ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டம் என்கிற பெயரில் அரசு அல்லாத பள்ளிகளின் கல்வித் தரத்தை குறைத்துவிடுவது சரியா?

இன்றைய கல்வி முறையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பாட திட்டங்களில்  ஆறாவது படிக்கும் மாணவன், அரசு பள்ளியில் 12வது படிக்கும் மாணவனின் அறிவை பெற்று விடுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால், தற்போதிருக்கும் அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளது என்பதை பாருங்கள்.

சமச்சீர்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசு பள்ளிகளின் தரத்தை மிகவும் உயர்த்துவது அவசியமாகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது இல்லையா?

அதை விடுத்து அரசு பள்ளிகள் பின்பற்றும் மிகவும் தரம் குறைந்த பாடத் திட்டத்தையே பின்பற்றி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளும் தங்களுடைய பாடத்திட்டங்களை வடிவமைத்துக்கொள்வதால் யாருக்கு லாபம்?

இத்தகைய தனியார் பள்ளிகள் நாட்டின் மற்ற மாநிலங்களிலுள்ள தனியார் பள்ளிளுக்கு ஈடான பாடத்திட்டங்களை வடிவமைத்து தங்களுடைய மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு அரசு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கேள்வி சம்பந்தப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர்களின் மனதில் எழத்தான் செய்கிறது.

குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் அலுவலக மாற்றங்கள் நிமித்தம் குடிபெயரும் மாணவர்களின் கதியை நினைத்துப் பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு என்னுடைய அனுபவத்தையே கூறுகிறேன். நான் 1984ம் வருடம் சென்னையிலிருந்து மும்பைக்கு மாற்றலாகிச் சென்றபோது என்னுடைய இளைய மகள் சென்னையிலுள்ள மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தாள். நான் செப்டம்பர் மாதத்தில் மாற்றப்பட்டிருந்ததால் என்னுடைய் மகள் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இந்த நேரத்தில் சென்றால் அங்குள்ள பள்ளிகளில் இடம் கிடைப்பது கடினமாயிருக்குமே என்றார்கள்.  மும்பையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சமயத்தில் புதிதாக மாறிவரும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவது வழக்கம் என்பதை நான் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களை வற்புறுத்தி மாற்ற சான்றிதழுடன் என் மகள் காலாண்டு தேர்வில் பெற்றிருந்த மதிப்பெண் பட்டியலையும் பெற்று அழைத்துச் சென்றேன். மும்பையில் என் நண்பர்கள் பரிந்துரைத்த பள்ளியை அணுகி என்னுடைய நிலையை விளக்கி என் மகளுடைய மதிப்பெண் பட்டியலையும் அளித்தேன். ஆனால் பள்ளி தலைமையாசிரியர் தமிழக பள்ளிகளை விட எங்களுடைய பள்ளியின் கல்வித்தரம் அதிகமாயிருக்கும் ஆகவே உங்களுடைய மகளை ஒரு வகுப்பு குறைத்து சேர்த்துக்கொள்கிறேன் என்றார். எனக்கோ பெண்பிள்ளைதானே ஒரு வருடம் போனால் என்ன என்று தோன்றியது. ஆனால் என் மகளோ தைரியத்துடன் தலைமையாசிரியரிடமே என்னை ஐந்தாம் வகுப்பு தகுதியானவள்தானா என்று பரிசோதித்துவிட்டு கூறுங்கள் என்றாள். அவளுடைய பதில் தலைமையாசிரியருக்கு நிச்சயம் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும். உடனே அவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியரை அழைத்து இந்த மாணவியை பரிசோதித்து பாருங்கள் என்றார். சுமார் ஒரு மணி நேரம் என்னை காக்க வைத்துவிட்டு அவரே மீண்டும் அழைத்து 'your daughter's standard is really good. I'll admit her in V standard'  என்று சம்மதித்தார்!

சென்னையில் மெட்ரிக் பள்ளியில் பயின்றிருந்த என்னுடைய மகளுடைய ஐந்தாவது வகுப்பு புத்தகங்களும் மும்பையில் சமச்சீர்கல்வித்திட்டத்தில் எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களும் ஏறக்குறைய ஒன்றாயிருந்ததை பார்த்தபோது எனக்கு மிகவும் வியப்பாயிருந்தது. அதாவது சென்னையில் ஐந்தாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் மகள் மீண்டும் மூன்றாவது வகுப்பிலிருந்து படிக்க வேண்டியிருந்தது! ஆகவே அந்த ஆண்டு இறுதியிலேயே என்னுடைய மகளை மீண்டும் சென்னையில் கொண்டு வந்து சென்னை சர்ச் பார்க் பள்ளியில் சேர்த்துவிட்டேன்.

தமிழகத்தில் சமச்சீர்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் இதே நிலைதான் இன்றைய மாணவர்களூக்கும்.

சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கட்டண அறிவுப்பு அரசு பள்ளிகளின் அவலநிலைக்கு தனியார் பள்ளிகளையும் இறக்கிவிடும் என்பதில் ஐயமில்லை.

அடாவடியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தெம்பில்லாத ஒரு அரசால் மட்டுமே இப்படி கண்மூடித்தனமாக across the board என்பார்களே அதுபோல் ஒரேயடியாக கட்டணத்தை குறைக்க முடியும் என்பதற்கு இந்த அறிவிப்பு ஒரு நல்ல உதாரணம்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து  நகரத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மிகவும் ஜரூராக நடைபெற்றுக்கொண்டிருந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாம் நின்றுபோயுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் புதிய சேர்ப்புகளும் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசின் எதிர்ப்பை எதிர்த்து தனியார் பள்ளிகள் அனைத்தும் இணைந்து கூட்டத்தை கூட்டி கட்டண விகிதத்தை 30லிருந்து 40 விழுக்காடு வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் நியாயமானதுதானா இல்லையா என்பதல்ல இப்போதைய பிரச்சினை. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி தங்களுடைய பள்ளிகளை காலவரையின்றி மூடவோ அல்லது நீதிமன்றங்களை நாடவோ செய்தால் மாணவர்களின் கதி என்ன?

மேலும் பல பள்ளிகள் தங்களுடைய மாணவர்களுக்கென வழங்கிவரும் பல extra curricular திட்டங்களையும் நிறுத்திவிட உத்தேசித்துள்ளன. மேலும் தங்களுடைய ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளன. இதன் விளைவாக இப்பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் கூடவும் வழியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பதுக்கும் குறைவாக மாணவர்களைக் கொண்டிருந்த பள்ளிகளில் ஐம்பதிலிருந்து அறுபதுவரை கூட வாய்ப்புள்ளது. கல்வியறை பயிற்சியுடன் நீச்சல், விளையாட்டு, பாட்டு, இசை, பேச்சு மற்றும் கவிதை போட்டிகளை நடத்துவதும் நின்றுபோகும். அரசின் சமச்சீர்கல்வித் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பாடங்களையல்லாமல் வேறெதையும் மாணவர்களுக்கு போதிக்க எந்த தனியார் பள்ளியும் முன்வரப்போவதில்லை என்பதும் உண்மை!

இதற்கு விடிவுதான் என்ன?

தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அவரவரகளுடைய தரத்தைப் பொருத்து வகைப்படுத்த வேண்டும். அதாவது மிகச் சிறந்த, சிறந்த, சுமாரான என்று வகைப்படுத்தி அவற்றிற்கேற்ற முறையில் கல்விக்கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய திட்டம் பெற்றோர் அவரவர் தகுதிக்கேற்ப பள்ளிகளை தெரிவு செய்து தங்களுடைய குழந்தைகளை சேர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.

குப்பனும் சுப்பனும் ஒன்று என்று வாதத்திற்கு வேண்டுமானால் சுவையாயிருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது.

இன்றைய கல்விக்கட்டண குறைப்பை வரவேற்கும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வித்தரம் குறைவதை அறிந்து இதையே குறை கூற துவங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது என் கருத்து.

ஏழை மற்றும் நடுத்தரத்திற்கும் சற்று குறைந்த மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உதவ எண்ணும் அரசு அதிகபட்ச கட்டணத்தை ஒரே சீராக அனைத்து பள்ளிகளுக்கும் நிர்ணயித்து இப்போதுள்ள கட்டணத்தை செலுத்த முடிந்த நடுத்தர மற்றும் அதற்கு மேலேயுள்ளவர்களை தண்டனைக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

31 மார்ச் 2010

திருமணமாகாமல் இணைந்து வாழ்வது....

இதைப்பற்றி திரைப்பட நடிகை குஷ்பு கடந்த வருடம் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக அவர் மீது தொடரப்பட்ட பல வழக்குகள் நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அடைய அவருடைய முறையீட்டின் (petition) மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நடுவர்களுள் ஒருவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்ததைக் காண நேர்ந்த எனக்கும் இதைப்பற்றி எழுதினால் என்ன தோன்றியது.

திருமணமாகாமலே இணைந்து வாழும் பெரும்பாலான ஜோடிகள் மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற பெரும் நகரப்பகுதிகளில்தான் வசிக்கின்றனர் என்றாலும் சமீப காலங்களில் conservative cities என்று கருதப்படும் சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் பரவி வருகிறது என்கிறது வட இந்திய தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பு. உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் அத்தொலைக்காட்சி இத்தகைய உறவுகளில் பல ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இணைந்து வாழும் சில ஜோடிகளையும் பேட்டி கண்டு ஒளிபரப்பியது.

Live in relationship எனப்படும் திருமணமாகாமலே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது சரியா தவறா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை. அது சம்பந்தப்பட்ட இருவரின் தனிப் பிரச்சினை. ஆகவே அதில் தலையிட்டு கருத்து கூறுவது எனக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

இத்தகைய உறவுகள் நாட்டின் எந்த சட்டத்திற்கும் முரணானதல்ல என்பது உச்ச நீதிமன்றத்தின் பார்வை. குஷ்புவின் முறையீட்டின் மீதான வழக்கின் தீர்ப்பு இனியும் வெளிவரவில்லையென்றாலும் நடுவர் ஒருவரின் 'இதில் என்ன தவறு' என்பது போன்ற வெளிப்படையான வினாக்கள் அதன் எண்ண ஓட்டத்தை மிகத் தெளிவாக பிரதிபலித்து காட்டிவிட்டன என்றுதான் கருதுகிறேன்.

ஆனால் அது ஏன் தேவைப்படுகிறது அல்லது அத்தகைய உறவை ஏன் இன்றைய இளைய தலைமுறை தேவை என கருதுகிறது என்பதை நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதுவும், இத்தகைய உறவை சந்தேகக் கண் கொண்டு நோக்கும் போலித்தனமான இந்திய சூழலில் இந்த உறவு தேவைதானா!

உலகின் எந்த நாட்டில் இது தேவையோ இல்லையோ என்னைக் கேட்டால் நம் நாட்டில்தான் இது மிக, மிக தேவையாகிறது என்பேன்.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைய விடாமல் தடுக்கும், வரதட்சணை என்ற பெயரால் ஏழை பெண்களின் வாழ்க்கையை சூரையாட நினைக்கும் கொடூர மாமியார்கள், மாமனார்கள் நிறைந்த இந்திய சமுதாயத்தில் இத்தகைய உறவுகள் நிச்சயம் தேவை. முன்பின் தெரியாத ஒருவனை ஒருத்தியுடன் அல்லது ஒருத்தியை ஒருவனுடன் திருமணம் என்கிற பந்தத்தில் அன்பை தவிர்த்து மற்ற பல்வேறு காரணங்களை முன்நிறுத்தி இணைத்து வைக்கும் போலித்தனமான இந்திய சூழலில் இத்தகைய உறவுகள் நிச்சயம் தேவை.

இருவர் - அவர்கள் ஆணோ, பெண்ணோ, அதுவல்ல முக்கியம் - இணைவதற்கும், நீண்ட காலம் இணைந்து வாழ்வதற்கும் அவர்களுக்கிடையில் எல்லாவற்றிலும் ஒருமித்த கருத்து அவசியம். படிப்பால், சிந்தனைகளால், பழக்க வழக்கங்களால் எல்லாவற்றிற்கும் மேல் சிநேகத்தால், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான, நெஞ்சார்ந்த அன்பால் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது.


திருமணமானவர்களும் பல்லாண்டுகள் இணைந்து வாழ்வதில்லையா என கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் எத்தனை தம்பதியர் இணைந்து வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் அந்த பந்தத்தில் தொடர்ந்து வாழ்கின்றனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது? 'வேற வழியில்லாமத்தான் உங்களோட குப்பைய கொட்டிக்கிட்டிருக்கேன்', 'எல்லாத்தையும் விட்டெறிஞ்சிட்டு ஒரேயடியா போயிரணும்னுதான் தோனறது... ஆனா போக்கிடம் இல்லையே?' 'பிள்ளைங்களுக்காகத்தான் பாக்கேன்.. இல்லன்னா மனுசன் இருப்பானா உங்கூட?' இதெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் புலம்பல்கள், ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிலும்.

இதுதான் இன்றைய பெரும்பாலான திருமண உறவுகளின் அவலநிலை. அப்படியில்லை, என்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பவர் பொய்யர்கள். எல்லாரும் இல்லையென்றாலும் பெரும்பாலானவர்கள் திருமண உறவை அறுத்தெறிந்துவிட்டு செல்ல முடியாமல் கடமை என்கிற சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஆயுள் கைதிகளாகிப் போனவர்களே.

இத்தகைய அவல நிலைக்குள்ளாகிப் போன கணவன் - மனைவி என்கிற போலி உறவுகளின் வாரிசுகளான இன்றைய தலைமுறை ஏன் இந்த அவலநிலை என மாற்றி சிந்தித்தன் விளைவே Live-in relationship. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத, ஒத்துப்போகவில்லையா பிரிந்து போய்விடுவோம் என்கிற சுதந்திரமான உறவு! இத்தகைய உறவு தோன்றவே மூல காரணமாயிருந்த நம் நாட்டின் முந்தைய தலைமுறைக்கு இந்த உறவை பழித்துக் கூற எவ்வித உரிமையுமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஒரு ஆணும் பெண்ணும் இணைவதே பிள்ளைக் குட்டிகளை பெறத்தான் என்கிற முந்தைய தலைமுறையின் சிந்தனையிலிருந்து மாறுபடுவதும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். மனித இணத்தை பெருக்க மட்டுமே ஆண் பெண் உடல் பூர்வமான உறவு என நம்முடைய வேதங்கள் கூறுகின்றன என்று ஆண்-பெண் உறவுக்கு வேதங்களை காரணம் காட்டும் முந்தைய தலைமுறைக்கு இன்றைய தலைமுறையினரின் வாதம் இதுதான்: ஆண்-பெண் இருவரின் பசி, தாகம் போன்ற உடல் பூர்வமான தேவைகளுள் ஒன்றுதான் உடலுறவும். இதற்கு மட்டும் எப்படி மதம் தடையாக இருக்க முடியும்? This is nothing but a simple biological need of two people? What has religion got to do with this? என்பது இவர்களுடைய வாதம். நியாயம்தானே!

ஆனால் இத்தகைய உறவுகளுக்கு நாட்டின் சட்டம் அங்கீகாரம் அளிக்கவில்லையென்பதையும் எத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தாலும் சட்டம் இருவரையும் தனித்தனி நபர்களாக மட்டுமே காண்கிறது என்பதையும் இணைந்து வாழும் பெரும்பாலான ஜோடிகள் உணர்ந்துதான் இருக்கின்றனர் என்பது அவர்களுடைய பேட்டியிலிருந்தே தெரிகிறது. இத்தகைய உறவுகளின் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு சட்டம் எத்தகைய உரிமையும் வழங்கவில்லையென்பதும் அவர்களுக்கு தெரிந்துதானிருக்கிறது. இருந்தும் இத்தகைய உறவுகளை தொடர்வதிலிருந்தே இதை ஒரு பெரிய பிரச்சினையாகவே அவர்கள் கருதவில்லை என்றுதான் தெரிகிறது. சட்டத்தின் உதவியை நான் நாடாத வரையிலும் அதன் அங்கீகாரம் தேவையில்லையே. இருபது ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துவிட்டு பிரிகின்ற நிலையிலும் கணவனின் ஊதியத்திலிருந்து ஜீவனாம்சம் கேட்க சட்டத்தின் உதவியை நாடும் உங்களுடைய திருமணம் எங்களுக்கு தேவையில்லை என்கிறது இன்றைய தலைமுறை!

தேவையில்லையென்றால் எளிதாக பிரிந்துவிட முடிகிறது என பல ஜோடிகள் தெரிவித்தாலும் அத்தகைய பிரிவுகள் சுமுகமான சூழலில் நடைபெறுவதில்லை என்பதையும் மறுக்கவில்லை இவர்கள். பெரும்பாலான பிரிவுகள் ஒரு நிரந்தர விரிசலையே ஏற்படுத்திவிடுகிறது என்பதும் தெரிகிறது. 'It is mainly due to people coming together in haste based on so many things but love.' என்கிறது ஒரு ஜோடி.

உண்மைதான், இத்தகைய உறவுகளுக்கு அடிப்படை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பாக இருந்தால் மட்டுமே இது நிலைத்து நிற்க முடியும். அந்த அன்பு இல்லாமல்தானே பல திருமணங்கள் இன்று ஒரு போலியான, வெளியுலகுக்கு மட்டுமே உள்ள உறவுகளாய் முடிந்து நிற்கின்றன?

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட திருமணம் என்கிற பந்தமே இன்னும் ஸ்திரப்படவில்லை என்பதை எண்ணிப்பார்க்கும்போது நேற்று தோன்றிய இத்தகைய உறவுகளில் அத்தகைய உறுதியான நிலையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
......

இதற்கு ஆதரவாக, எதிராக கருத்துக்கள் இங்கே

வட இந்திய தொலைக்காட்சி பேட்டி கண்ட ஜோடியின் கருத்துக்கள் இங்கே

26 ஜூலை 2007

வாழ்க்கை 3

உறங்கச் செல்வது எத்தனை முக்கியமோ அதுபோலவேதான் காலையில் எழுவதும்.

'நாம எந்த மூடுல எழுந்திருக்கறமோ அந்த மூடோடவேதான் நாள் முழுக்க இருக்கப் போறோம்கறத ஞாபகத்துல வச்சிக்கறது நல்லது.' என்பார் ராகவேந்தர் தன்னுடைய எச்.ஆர் பயிற்சி வகுப்புகளில்.

'அதெப்படி சார் நம்ம மூடு எப்பவுமே ஒரே போலயா இருக்கு?' இந்த கேள்வி ஏறக்குறைய அவருடைய எல்லா வகுப்புகளிலும் எழக்கூடியதுதான்.

'முடியும். சொல்றேன்.' என்று துவங்கி பொறுமையுடன் விளக்குவார் ராகவேந்தர்.

'நாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி படுக்கையிலருந்து எழுந்திருப்போம். சிலர் அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்து அலாரத்தை அணைச்சிட்டு மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் போடுவாங்க. சிலர் அலாரம் அடிக்காமயே சட்டுன்னு சொல்லி வச்சா மாதிரி எழுந்திரிப்பாங்க.'

'அலாரம் வைக்காமயா?'

'ஆமாம். நம்ம பாடிக்குள்ளவே ஒரு பயலாஜிக்கல் க்ளாக் இருக்கு. அத நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டா இந்த அலாரம் எல்லாம் தேவையே இருக்காது.'

'பயலாஜிக்கல் க்ளாக்கா? அப்படீன்னா?'

'உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்... நம்மள்ல நிறைய பேர் ராத்திரியில பாத்ரூம் போறதுக்கு ஒரு தடவையாவது எழுந்திரிப்போம்... கரெக்ட்.'

'ஆமா சார். ஆனா தூக்கம் கலைஞ்சிருமேன்னு கண்ணெ மூடிக்கிட்டே போய்ட்டு வந்து படுத்துக்குவேன்.'

'நீங்க மட்டுமில்ல நம்மள்ல நிறைய பேர் இப்படித்தான். ஆனா இன்னைக்கி ராத்திரி அப்படி எழுந்திருக்கறப்போ ஒங்க ரிஸ்ட் வாட்ச பாத்துட்டு பாத்ரூம் போங்க. நீங்க பாக்கற டைம் ஒங்க பயலாஜிக் க்ளாக்ல பதிவாயிரும். நாளைலருந்து அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்கு கரெக்டா அதே டைம்ல முழிப்பு வந்துரும்...'

'அட! அப்படியா?'

'இன்னைக்கி ராத்திரி டெஸ்ட் பண்ணி பாருங்க... நாளைக்கு வந்து சொல்லுங்க..'

உண்மைதான்... நாம் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த காரியத்தை இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று மீண்டும் நமக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சொல்லிப் பார்த்துக்கொண்டால் போதும், நமக்குள் இருக்கும் பயலாஜிக்கல் கடிகாரம் அதை பதிவு செய்துக்கொள்ளும். நான் சொல்ல வருவது நம்முடைய பயலாஜிக்கல் தேவைகள் சம்பந்தப்பட்ட தண்ணீர் குடிப்பது, உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பதுபோன்ற உடல் ரீதியான செய்கைகள்... சிலருக்கு பகல் ஒரு மணியடித்தால் போதும் அவர்களையும் அறியாமல் பசிக்க ஆரம்பித்துவிடும்... அதே போல் இரவு மணி பத்தடித்தால் போதும் உறங்கியே ஆகவேண்டும்.

இதை பரீட்சித்து பார்க்க விரும்பும் முதல் நாள் அல்லது அடுத்த சில நாட்களுக்கு அலாரம் வைத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் எழுந்ததும் உங்களுடைய கைக்கடிகாரத்தையோ அல்லது சுவர் கடிகாரத்தையோ ஒரு நிமிடம் பார்த்து மனதில் பதிய வையுங்கள். அதன் பிறகு சில நாட்கள் அலாரம் வைக்காமல் எழ முடிகிறதா என்று பரீட்சித்து பாருங்கள்... அதன் பிறகு அலாரம் வைக்காமலேயே எழ முடியும். உங்களுக்கே அதிசயமாக இருக்கும்.

சரி... காலையில் படுக்கையில் இருந்து எழும்போது என்ன செய்ய வேண்டும்.

அலாரம் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நம்முடைய முறையிலிருந்து ஒருபோதும் மாறலாகாது.

கண் விழித்ததும் உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையில் படுத்தவாறே இரவில் உறக்கம் வருவதற்கு நீங்கள் கிடந்த அதே போசில்... அதாவது கால்களை நீட்டி ஒன்று சேர வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றின் மீது ஒன்றை வைத்தல் ஆகாது.

கைகள் இரண்டையும் தலைக்கு மீது நீட்டுங்கள். அதாவது படுத்தவாறே தலைக்கு மேலே அதே பாதையில் நீட்ட வேண்டும். கூரையை (ceiling) நோக்கி அல்ல.

ஒரு கையால் அடுத்த கையை பிடித்துக்கொள்ளூங்கள். Clasp செய்துக்கொண்டாலும் சரி. பிறகு உடம்பு முழுவதையும் சோம்பல் முறிப்பதுபோல முறுக்குங்கள். கூடுதல் டென்ஷன் கொடுக்க வேண்டாம். நேச்சுரலாக செய்ய வேண்டும். கைகளை மேலே உயர்த்தும் அதே நேரத்தில் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும், முடிந்தவரை..

பிறகு உயர்த்திப் பிடித்துள்ள கைகள் இரண்டையும் சட்டென்று தளர்த்தியவாறு 'ஹா' என்ற ஒசையுடன் வாய் வழியாக மூச்சை விடவேண்டும். அதாவது ஒரு நொடிப் பொழுது நேரத்தில் சடக்கென்று கைகள் இரண்டையும் தலைக்கு மேலிருந்து இறக்கி உடம்புக்கு இருபக்கங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். இதுபோல் குறைந்த பட்சம் மூன்று முறை...

இதன் மூலம் நம் உடலிலும் உள்ளத்திலும் உள்ள அசதி, டென்ஷன் போய்விடும் என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள்.

பிறகு இடதுபுறம் ஒருக்கழித்து படுத்து வலது கையை ஊன்றி மெதுவாக எழுந்திருக்க வேண்டும். பிறகு கைகள் இரண்டையும் மூடிய கண்களின் மீது வைத்து சுழற்றி தேய்க்க வேண்டும்.

பிறகு யார் முகத்தில் இன்று விழித்தேனோ தெரியலையே என்று புலம்ப வாய்ப்பளிக்காமல் உங்களுடைய உள்ளங்கைகளையே பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்வது ராகவேந்தரின் பழக்கம்...

இன்று முதல் அது நம்முடைய பழக்கமாகவும் இருக்கட்டுமே...

தொடரும்...

24 ஜூலை 2007

வாழ்க்கை - 2

நேற்றைய பதிவின் துவக்கத்தில் ராகவேந்தரின் தூக்கமின்மையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அது கற்பகத்தின் புகாரில் துவங்கி திசைமாறி சென்றுவிட்டது.

இந்த தூக்கமின்மை (insomnia) சாதாரணமாக நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே வந்து தொற்றிக்கொள்ளக் கூடிய - இதை நோய் என்று சொல்ல முடியாவிட்டாலும் பல நோய்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய வழி என்று நிச்சயம் கூறலாம்.

இது ராகவேந்தரைப் போன்றவர்களுக்கு அதாவது உடல் உழைப்பு பெரிதாக ஏதும் இல்லாதவர்களுக்கு, சர்வசாதாரணமாக வருவதுண்டு.

ராகவேந்தர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பல பெரிய நிறுவனங்களுக்கு எச்.ஆர். கன்சல்டண்டாக இருந்து வருகிறார் - கடந்த ஐந்து வருடங்களாக. அவருக்கு வயது 56. பெரும் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை - உயர் அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை - எப்படி தெரிவு செய்வது, அவர்களுடைய உற்பத்தித் திறனை பெருக்குவது, அவர்களை கையாளும் விதம் என்பது போன்ற உத்திகளை அளிப்பது, தேவைப்பட்டால் அவர்களுக்கென்று பயிற்சி அளிப்பது... இத்யாதி, இத்யாதிகள்.

அவ்வப்போது - அதாவது மாதம் ஐந்தாறு முறை - பயணம் செய்வது என்பதை தவிர அவருடைய அலுவலில் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லை. அத்துடன் பெரும்பாலும் மூளையை அதாவது தங்களுடைய அறிவுத் திறனை பயன்படுத்தி உழைக்கும் பலராலும் (whitel collar job) அலுவலக நேரம் முடிந்தபிறகும் தங்களுடைய சிந்தனைகளை முடித்துக்கொள்ள முடிவதில்லை.

ராகவேந்தர் தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது 'you should know when to switch on and switch off your thoughts' என்பார் சர்வசாதாரணமாக. ஆனால் அவராலேயே அப்படி செய்ய முடிவதில்லை.

இத்தகைய active mind உள்ளவர்களால் இரவிலும் தங்களுடைய சிந்தனைகளை நிலைப்படுத்த முடிவதில்லை. இரவு படுக்கச் செல்லும்போது அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த விஷயங்களிலோ அல்லது நாளை நடக்கவிருக்கும் விஷயங்களையோ நினைத்து மனம் உழன்றுக்கொண்டே இருக்கும். இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்திருக்கலாமோ என்ற தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைக் குறித்த ஆற்றாமையிலும் அல்லது இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்ற நாளைய தினத்துக்கான திட்டங்களிலும் இரவு நெடுநேரம் வரையிலும் விழித்திருப்பார்கள். அதே சிந்தனையுடன் உறங்கச் செல்லும் இவர்களுக்கு எளிதில் உறக்கம் வருவதில்லை.

ஐந்து வருடங்களாக பலமுறை முயன்றும் ராகவேந்தரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

இந்த தொல்லையிலிருந்து விடுபட ராகவேந்தர் காணாத மருத்துவர்கள் இல்லை. ஒவ்வொருத்தரும் அளித்த ஓவ்வொரு விதமான யோசனைகளில் அவரும் மேலும் குழம்பிப்போனதுதான் விளைவு.

அவருக்கு அளிக்கப்பட்ட அறிவுரைகளை பட்டியலிடுகிறார்.

1. வடக்கு பக்கம் தலைய வச்சி படுத்துப் பாக்கலாம் - ஆனா பெரிசா ஏதும் பலன் தெரியவில்லை.
2. தலையணை இல்லாமல் படுக்கணும். - கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்
3. படுக்க செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் மிதமான சுடுநீரில் குளிக்கணும் - ஆரம்பத்தில் சில நாட்கள் பலனளித்தது. அதற்குப் பிறகு? ஊஹும்.
4. படுக்க போறதுக்கு முன்னால சூடா ஒரு கப் பால் குடிக்கலாம் - பலனில்லை.
5. நல்ல ஸ்திரமான கட்டிலில் படுக்க வேண்டும், அதாவது மெத்தை இல்லாமல் - முதுகு வலி வந்ததுதான் மிச்சம்.
6. படுக்க போறதுக்கு முன்னால ஏதாச்சும் புத்தகம் வாசிக்கலாம் - படித்ததையே நினைத்துக்கொண்டு தூக்கத்தை களைந்ததுதான் மிச்சம்.
7. மிதமான சுடுநீரில் பாதங்களை வைத்து மசாஜ் செய்யலாம் - ஆரம்பத்தில் பலன் இருந்தது... ஆனால் இது முழுமையான தீர்வாக இல்லை.

இதையெல்லாவற்றிற்குப் பிறகும் படுத்ததும் உறங்கிப் போவது பிரச்சினையாகத்தான் இருந்தது.

யோகா முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றவே நண்பர்களிடம் விசாரித்து ஒரு யோகா பயிற்சியாளரை சென்று சந்தித்தார்:

அவரோ சார் நீங்க யோகா செஞ்சி பழகிட்டீங்கன்னா தூங்கறதையே குறைச்சிக்க முடியும் என்றார்!

அதாவது நாம் ஒரு நிமிடம் யோகா செய்தால் ஒரு நிமிடம் குறைவாக உறங்கினால் போதுமாம். மேலும் யோகா படுத்தவுடனே உறங்கிப்போவதற்கும் துணை செய்யுமாம்! அத்துடன் மன அழுத்தம், களைப்பு இவை எல்லாவற்றையுமே குறைத்து நாளடைவில் இல்லாமலும் செய்துவிடும் என்றபோது அதை முயற்சித்து பார்த்தால் என்ன என்று நினைத்தார்.

பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்த ஒரு சில எளிய யோகாசன முறைகளை செய்து பார்த்தார். நல்ல பலனை அளிக்கவே அதை தொடர்ந்து செய்வதென முடிவெடுத்தார்.

அதில் சில:

1. படுக்கையில் நேராக நீட்டி, இரண்டு கால்களையும் அருகருகில் ஒன்று சேர்த்து (ஒருகால் மீது ஒரு கால் அல்ல) மல்லாக்க, கூரையைப் பார்த்து படுக்க வேண்டும். தலையணை வேண்டாம் என்று இல்லை. ஆனால் மெலிதானதாக இருக்க வேண்டும்.
2. கைகள் இரண்டையும் உடலை ஒட்டி (இருப்பக்கமும்) வைத்துக்கொள்ள வேண்டும் (உள்ளங்கை (palm) மேலே பார்த்தபடி).
3. அவசரப்படாமல் மூச்சை உள்ளே இழுத்து (அதாவது கைக்குழந்தைகளைப் போன்று மூச்சு உள்வாங்கும்போது வயிற்றுப்பகுதி உப்பவேண்டும். வெளிவிடும்போது வயிற்றுப்பகுதி உள்வாங்க வேண்டும்) விடவேண்டும். இத்தனை முறை என்ற கணக்கு ஏதும் இல்லை. துவக்கத்தில் ஐந்து முறை உள்ளே-வெளியே என்று ஆரம்பிக்கலாம். இதன் முடிவிலும் உறக்கம் வரவில்லையென்றால் நீங்கள் சற்று முற்றிய கேஸ்தான் என்றார் யோகா பயிற்சியாளர்.

ஏற்கனவே யோகாவில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேறு சில வழிகளும் உண்டு.

அவற்றில் ஒன்று படுத்ததும் உள்ளங்காலில் இருந்து உச்சி வரை ஒவ்வொரு அங்கத்தையும் உணர்வது (feel). பிறகு அந்த அங்கத்தை ரிலாக்ஸ் செய்வது. இதற்கு மிகவும் பொறுமை தேவை. பயிற்சியும் தேவை. அது நம்மில் எத்தனை பேருக்கு வரும் என்பது தெரியவில்லை.

மனதை ஒருநிலைப் படுத்தும் தியானத்தில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இது எளிதில் முடியும். ஏனெனில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலும் மனம் அலைபாய்ந்துக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும். வேண்டுமென்றால் நமக்குப் பிடித்த இசையை மெலிதாக வைத்துக் கேட்பதும் பலன் தரும்.

ஆரம்பத்தில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடும்போது அலைபாயும் மனதை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். இழுத்து பிடித்து நிறுத்துவதில் பயனில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. நாளடைவில் பலனளிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அலுவலகத்திற்கு உள் அலுவலகத்திற்கு வெளியில் என்ற இருவகை வாழ்க்கைகளை வாழ பழகிக்கொள்ள வேண்டும். முக்கியமாக உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்.

தொடரும்..

23 ஜூலை 2007

வாழ்க்கை - 1

இது ஒரு partly-nonfiction தொடர் என்றாலும் இதில் நடக்கும் சம்பவங்களும், சம்பாஷனைகளும் கற்பனையே. அப்படியே ஏதாவது வகையில்
ஒற்றுமை தோன்றினாலும் அது தற்செயலே என்பதை கூறிக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாக இல்லை.

என்னுடைய அனுபவங்களை, அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்களை, ஒரு கற்பனை குடும்பத் தலைவர் மூலம் கூறலாம் என்று நினைத்தேன். அந்த நபர் வலைப்பதிவர்கள் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கும் ஒருவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் ராகவன் என்ற பெயரைத் தெரிந்தெடுத்தேன். இதில் அந்த பெயருக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் ஆட்சேபம் ஏதும் இல்லையெனினும் நண்பர் சிவஞானம்ஜி இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய யோசனையை மறுதலிக்க நான் அவருடைய மாணவர் இல்லையே! ஆகவே அவருடைய விருப்பத்திற்கேற்ப குடும்பத்தலைவரின் பெயரை ராகவன் என்பதிலிருந்து ராகவேந்தர் என மாற்றியுள்ளேன்.

ராகவேந்திரனுக்கு அதிகாலையில் (அதாவது ஆறு மணி!) எழுந்துவிடும் பழக்கம் உண்டு.

Restless sleeper என்பார்களே அந்த ரகம். இரவு முழுவதும் தூக்கம் வராமல் உருண்டு, புரண்டுக்கொண்டிருப்பார்.

'என்னங்க நீங்க.. ஒங்கக் கூட பெரிய ரோதனையாப் போச்சி... ஒங்களால என் தூக்கமும் போவுது.' இது அவருடைய அருமை(!) மனைவி கற்பகத்தின் தினசரி புலம்பல். 'பேசாம நீங்க ஒரு ரூம்ல நான் ஒரு ரூம்ல படுத்துக்கணும்னு நினைக்கறேன்... இப்படியே போனா நான் ஆவி மாதிரி நடுராத்திரியில எழுந்து அலைய வேண்டியதுதான்.' என்றார் ஒருநாள் பொறுக்கமாட்டாமல் .

ஏற்கனவே மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஒரு அறையில் அவரும் கற்பகமும், இன்னொரு அறையில் அவர்களுடைய வாரிசுகளான கமலனும், கமலியும் (கமலனோட படுக்கை வடப்புற சுவருக்கருகிலும் கமலியின் படுக்கை தென்புற சுவருக்கருகிலும் சுமார் பத்தடி இடைவெளியில்..) மூன்றாவது படுக்கையறையில் ராகவனின் தந்தையும் தாயும்...

ராகவேந்தர்: 'இதுக்கு மேல நாலாவது படுக்கையறையா? என் தலைமேலதான் கட்டணும்.'

கற்பகம்: 'ஏன் கட்டுங்களேன்... மாடியில ஒரு ரூம் எடுங்க... அங்க படுக்கறதுக்கு மட்டுமில்லாம நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததுமே போய் ஒக்காந்துக்குங்க... நாங்களாவது கொஞ்சம் நிம்மதியா இருப்போம்.'

அட ராமா என்று நினைத்தார் ராகவேந்தர்.

'எப்படி இருக்கு பாருங்கப்பா. நா வீட்டுக்கு வர்றதே பிரச்சினைங்கறா மாதிரி சொல்றா பாருங்க.' என்றார் தந்தையிடம்.

'கற்பகம் சொல்றதுலயும் நியாயம் இருக்கு போலருக்கேடா.... நீ வீட்ல இருந்தாலே பிரச்சினையாத்தான வருது... நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம்கற.. பிள்ளைங்கள நிம்மதியா ரேடியோ கேக்க விடறயா? இல்ல ஒங்கம்மாவத்தான் டிவி சீரியல் பாக்க விடறயா? சரி, பகல் பொழுதுலதான் இந்த பிரச்சினைன்னா ராத்திரிலயும் அவள தூங்கவிடாம... அவள கட்டில்லருந்தே உருட்டி விட்டுடறியாம? பகலெல்லாம் வீட்டு வேலை செய்யற
பொம்பளைய நிம்மதியா தூங்கவிடாம இருந்தா அவ பின்னெ என்னடா சொல்வா?'

தேவையா இது என்று நொந்துப்போனார். 'ஒங்கக்கிட்ட வந்து சொல்ல வந்தேன் பாருங்க.. எனக்கு வேணும்..' என்று முனுமுனுத்தவாறு அந்த மாதமே ஒரு எஞ்சினியரைப் பிடித்து அவர் மூலமாக ஒரு மேஸ்திரியை பிடித்து மேல்தளத்தில் ஒரு விசாலமான - சுமார் ஐந்நூறு அடியில் - ஒரு அறையை அமைத்தார். அதில் குளியலறையுடனான படுக்கையறை, ஒரு சிறிய ஹால் (ஏன் கிச்சனையும் போட்டுருங்களேன் என்று கற்பகம் நக்கலாக சொல்ல.. அட! இதுவும் நல்ல ஐடியாவருக்கே என்ற நினைப்பில்) ஒரு குட்டி சமையலறை என போட்ட பட்ஜெட் எகிறியது.

'இது தேவையா?' என்று மீண்டும் முறையிட்ட தந்தையை முறைத்துப்பார்த்தார். ஆனால் எதிர்த்து பேச துணிவில்லை.

இது எங்க தலைமுறையோட தலைவிதி .. இந்த வயசுலயும் அப்பா, அம்மாவை எதிர்த்து பேச முடிய மாட்டேங்குது. ஆனா இந்ததலைமுறைய பாருங்க. கமலனையும் கமலியையும் ஏதாச்சும் சொல்ல முடியுதா... உடனே 'எங்களுக்கு தெரியும் டாட்' னு பதில் வந்துருது...

சில சமயங்களில் ராகவேந்தர் நினைத்துக்கொள்வார்...

ஏன் நம்ம ஜெனரேஷனுக்கு மட்டும் இந்த நிலை... சின்ன வயசுல அப்பா, அம்மாவுக்கு மட்டுமா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா ஏன் அவங்க ஃப்ரெண்ட்சுக்கும் பயந்து செத்தோம்.. ஒக்காருன்னா ஒக்காரணும், நில்லுன்னா நிக்கணும், ஓடுன்னா ஓடணும்... வீட்டுக்கு வர்றவங்கள புடிக்குதோ இல்லையோ பல்லெல்லாம் தெரியறாப்பல வாங்கன்னு சொல்லணும், தாத்தா, பாட்டி கால அமுக்கி விடணும், தாத்தாவுக்கு
பொடி, பாட்டிக்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்து குடுக்கணும். இதல்லாம் போறாதுன்னு ஸ்கூலுக்கு வேற போய் வரணும்...

அன்னைக்கும் நாங்கதான் பெரியவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனோம்... இன்னைக்கும் நாங்கதான் எங்க பிள்ளைங்களுக்கு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கிட்டு போறோம்... எங்க ஜெனரேஷன் மட்டும் என்ன பாவம் பண்ண ஜென்மங்களா.. சொல்லுங்க..?

'ஏங்க வர்றவங்கக்கிட்டல்லாம் இதையே புலம்பணுமா?' இது கற்பகம்..

இதான் எங்க ஜெனரேஷனோட பொம்பளைங்களோட ஸ்பெஷாலிட்டி. பலவீனம்னு கூட சொல்லலாம். குடும்பத்துக்குள்ள என்னதான் பிரச்சினை என்றாலும் யாரிடமும் சிலவேளைகளில் தங்களுடைய கணவர்களிடம் கூட பகிர்ந்துக்கொள்ளாமல் ஆற்றாமைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து...

சரி திருமணத்தில்தான் சுதந்திரம் இருந்ததா என்றால் இல்லை.... பெண் பார்க்கவே மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு போக தேவையில்லை என்று நினைத்தார்கள் அன்றைய பெரியவர்கள்... 'நீ என்னடா தனியா வந்து பாக்கறது? எல்லாம் நாங்க பாத்துட்டு வந்து ஃபோட்டோவ காமிக்கோம்.. அது போறும்...'

அதுவும் குடும்பத்தில் கடைகுட்டியான ராகவேந்தர் விஷயத்தில் அந்த புகைப்பட சான்சும் கிடைக்கவில்லை. தாலிகட்டி முடித்த பிறகுதான் கற்பகத்தை முதன்முறையாக (அதாவது முழுமையாக, அதாவது முகத்தை!!) பார்க்க முடிந்தது!

ஆண்களுக்கே இந்த கதி என்றால் பெண்களூக்கு?

வயசுக்கு வந்துட்டா போறும்.. கல்யாணம், கல்யாணம்னு பொண்ணுக்கு சமைக்க தெரியுமா, துணி துவைக்க தெரியுமா, ஏன் ஒரு குடும்பத்த நடத்தவோ சுயமா சிந்திச்சி ஒரு முடிவெடுக்கவோ தெரியுமான்னுல்லாம் கவலைப்படாம சாதி சனம் சொல்லுதேன்னு கல்யாணத்த செஞ்சி வச்சிருவாங்க...

கற்பகம் திருமணமாகி வந்தபோதும் இதே நிலைதான்.

முதல் முதலாக ராகவேந்தர் தன் மனைவியுடன் ஜாலியாக(!) வெளியில் சென்றுவரலாம் என்று நினைத்து கற்பகத்தை ரகசியமாக சிக்னல் செய்து அழைத்தார். 'ஐயே ஒங்களோடவா, தனியாவா? பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க? இங்கனல்லாம் ரோட்டுலயே ஆம்பளைங்க ஒரு சைடு பொம்பளைங்க ஒரு சைடுன்னுதான் போவோம்...' என்று தயங்க நொந்துப்போனார்.

இந்த லட்சணத்துல முதல் இரவு என்பதே பத்து, பதினைந்து இரவுகள் கழித்துத்தான்....

காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ராகவேந்தருக்கு....

ஆனால் அந்த நிலையிலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளே, 'டேய் ராகு, என்ன அவ பாட்டுக்கு உள்ளாற போய் ஒக்காந்துட்டா... வீட்டு வேலையெல்லாம் யார் பாக்கறது... இங்க வந்து இத அம்மியில அறைச்சி குடுக்கச் சொல்லு... ஊர் போய் வந்ததுல எல்லா
துணியையும் நனைச்சி வச்சிருக்கேன்.. யார் துவைக்கறது?' என்ற தாயையும் 'என்னங்க வந்து ஒரு நா கூட முழுசா ஆகல, இப்படி சொல்றாங்க?' என்றவாறு பரிதாபமாக தன்னைப் பார்த்த மனைவியையும் வெறித்துப் பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

தினமும் கற்பகம் வேலையையெல்லாம் முடித்துவிட்டு கைகளை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டு படுக்கையறையை அடையும்போதே நள்ளிரவை நெருங்கியதுண்டு. கணவனை மட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தாரையும் அனுசரித்து போகவேண்டிய சூழலில் கர்பகத்தைப் போலவே கூலியில்லாத வேலைக்காரியாய் உழன்ற பெண்களின் கதைகள் எத்தனை, எத்தனை?

அதற்கும் 'நாங்கல்லாம் இப்படியாடா? வீட்லருக்கற பெரியவங்கள்லாம் படுத்துட்டாங்களான்னு பாத்து பட்டும் படாம இருந்தோம்.. இலை மறைவு காய் மறைவா குடும்பம் நடத்துனோம்.. புள்ளைகள பெத்துக்கிட்டோம்... இப்ப என்னடான்னா...' என்ற தன் தாயின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டார்.

ஆமாம், அதான் டஜன் கணக்குல பெத்தீங்களோன்னு கேக்கத்தான் தோன்றும். முடியாது.

ராகவேந்திரனுக்கு ஐந்து சகோதரர்கள் ஐந்து சகோதரிகள். இவர்தான் கடைக்குட்டி!!

அதுலயும் எங்க ஜெனரேஷந்தான் பாதிக்கப்பட்டோம்... கூட்டுக்குடும்ப தொல்லைகள் போறாதென்று ஒவ்வொரு குடும்பத்திலும் பத்துக்கும் மேல் குழந்தைகள்...

இந்த தொல்லைகளை நம்முடைய பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தே அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று என்று நிறுத்திக்கிட்டோம்...

ஆனால் அதுலயும் சந்தோஷம் கிடைச்சிதான்னு பார்த்தா....

தொடரும்...