சொந்த செலவில் சூன்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொந்த செலவில் சூன்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் (முடிவுரை)

கோபால் மீதான மாதவியின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் காலை எஸ்.பி. சந்தானத்தின் அறையில்  அவருடைய மேசையை சுற்றி ஆய்வாளர் பெருமாள், துணை ஆய்வாளர்கள் தன்ராஜ், ஷங்கர் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலைய துணை ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து அவருடைய வருகைக்காக காத்திருந்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி. அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் அவருடைய மேசை மீது தயாராக வைக்கப்பட்டிர்ந்த டேப் ரிக்கார்டரின் ப்ளே பொத்தானை அழுத்தினார் தன்ராஜ்.

அதிலிருந்து முருகேசனின் குரல் அறையை நிறைத்தது.

ஒலிநாடா ஓட, ஒட தன்ராஜின் அடுக்கடுக்கான கேள்விகள் முருகேசனை திணறடித்ததை அறையிலிருந்த அனைவரும் ரசித்தனர், ஆய்வாளர் பெருமாளைத் தவிர. அவரைத் தவிர அந்த அறையில் இருந்த அனைவருமே நேரடியாக அதிகார பதவிகளில் நுழைந்தவர்கள் என்பதால் தான் தனித்து விடப்படிருந்ததைப் போல் உணர்ந்தார் அவர். 

'ஓ! இதான் உங்க ஸ்டைலா..... நல்லாத்தான் இருக்கு..... நைஸ் வொர்க்' என்றார் எஸ்.பி.

அவருடைய பாராட்டு ஆய்வாளர் பெருமாளை எரிச்சலடையச் செய்தாலும் வேறு வழியின்றி மவுனமாக அமர்ந்திருந்தார். 

தன்ராஜின் கேள்விகளைத் தொடர்ந்து ஷங்கரின் விசாரணை முறையும் எஸ்.பியை கவர்ந்திருக்க வேண்டும்... 'This is your style.....தன்ராஜோட ஸ்டைல்லருந்து வித்தியாசமாருந்தாலும் you complement each other..' என்றார் எஸ்.பி. 'பேசாம ஒங்க ரெண்டு பேரையும் Crime Branchக்கு மாத்திட்டா என்னன்னு தோனுது.... என்ன சொல்றீங்க?'

தன்ராஜும் ஷங்கரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர். நா நேத்து சொன்னத சாரும் சொல்றார் பாத்தியா என்பதுபோலிருந்தது தன்ராஜின் பார்வை.

'நாங்க ரெடி சார்' என்றனர் இருவரும்.

'சரி.... கமிஷனர்கிட்ட சொல்றேன்....' என்ற எஸ்.பியின் கவனத்தை ஈர்த்தது ஒலிநாடாவில் இருந்து வந்த தன்ராஜின் அடுத்த கேள்வி. 

'நாந்தான் மர்டர் பண்ணேன்னு சொன்னா மட்டும் போறாது..... எதுக்கு பண்ணே, அதச் சொல்லு.'

'பின்னே என்ன சார்? அவளெ எவ்வளவு கஷ்டப்பட்டு சென்னைக்கி கொண்டு வந்து தொழில்ல எறக்கி விட்டேன்....? அவ பாட்டுக்கு திடீர்னு ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா அப்புறம் என் கதி? இது உனக்கு வேணான்டின்னு எத்தன தடவையோ சொல்லி பாத்தேன்.... கேக்கல..... அதான்......'

'சரி.... அப்புறம் எதுக்கு ராமாரஜன இதுல கூட்டு சேத்த?'

'அவனுக்கும் இந்த ஐடியா இருந்துது சார்.... என்னைக்கி அவனெ வெளியில போடா வேலைக்கார நாயேன்னு அவ திட்டுனாளோ அதுலருந்தே அவள போட்டுத்தள்ளிறணும்னு சொல்லிக்கிட்டுத்தான் இருந்தான்.... ஆனா நம்ம அளவுக்கு தைரியமும் இல்ல.... ஒடம்புல தெம்பும் இல்ல...... நா பாத்துக்கறன்டான்னு சொல்லியும் கேக்காம இல்ல மச்சான் நா பாத்துக்கறேன்னுட்டு போனான்..... சும்மா புடிச்சி தள்ளிட்டு வந்து போட்டு தள்ளிட்டன்டா மச்சான்னு சொன்னான். ஆனா அவனால இது முடியாதுன்னு எனக்கு தெரியும்.... அதனாலதான் எதுக்கும் செக் பண்லாம்னு ஒரு ஆஃபனவர் கழிச்சி கூப்ட்டேன்.... நா நெனச்சிருந்தா மாதிரியேதான் நடந்திருந்துது.... அதான் அவனையும் இழுத்துக்கிட்டி மறுபடியும் அங்க போனோம். ஆனா கடைசி நேரத்துல என்னால முடியாது மச்சான்.... அவ மேல உசுரையே வச்சிருந்தேன்... அவ செத்துக்கிட்டக்கறத பாக்கற தெம்பு எனக்கில்லேன்னுன்னுட்டு கழண்டுக்கிட்டான். சரின்னுட்டு அவனெ பார்க்கிங்ல வுட்டுட்டு நா மட்டும் போனேன். நா நினைச்சா மாதிரியே அங்க அரைகுறை மயக்கத்தோட கிடந்தா.... இனிமேலும் புழைச்சா நம்பள காட்டிக் குடுத்துருவான்னுதான் மறுபடியும் அவ தலைய புடிச்சி சோபா கை மேல செமத்தியா இடிச்சி கொன்னுட்டு 'பரவால்லடா நீ போட்ட போடுல ஆள் க்ளோஸ்'னு சொல்லி அவந்தான் இந்த கொலைய செஞ்சான்னு அவனெ நம்பவச்சேன். ஆனா கேஸ் கோர்ட்டுக்கு வந்தப்போ கவர்ன்மென்ட் லாயர் சொன்னது முழுசையும் தினமலர்காரன் போட்டு காரியத்த கெடுத்துட்டான். மாதவி தலையில ரெண்டு அடி இருந்துது, ரெண்டாவது அடியாலதான் அவ செத்தாங்கறா மாதிரி எழுதியிருந்தத படிச்சதுலருந்தே பய கொஞ்சம் துள்ள ஆரம்பிச்சான்.... அப்போதான் குமார் அப்ஸ்கான்டானான்... அவன் எங்க போவான்னு தெரிஞ்சிருந்ததால அவன் ஊர் போய் சேர்றதுக்குள்ளயே அமுக்குனோம்..... கொஞ்ச நாள் உன் ரூம்ல வச்சிருடா.... தோதா வேற எடம் பாத்துட்டு சொல்றேன்னேன்..... ஆனா முட்டாப்பய அவசரப்பட்டு அவனெ ரூம்லயே விட்டுப்போட்டு வந்து இனி அவன் உன்னோட பொறுப்பு நீதான் அவனெ பாத்து பயப்படணும் எனக்கு என்னன்னான்...... வந்த ஆத்திரத்துல ஓங்கி ஒன்னு விட்டேன்.. பய மயக்கமாய்ட்டான். சரி இவன அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல போய் குமார மீட்டுக்கினு வரலாம்னு மேன்ஷன் பக்கம் வரேன்.... வாசல்ல ராஜசேகர் கார் நிக்கிது.... கடுப்பாருந்துது...... குப்புற தள்னது போறாதுன்னு மண்ணையும் கொட்றயா இருடா வச்சிக்கறேன்னுட்டு திரும்பி போயி அந்த கோவத்த ராமராஜன் மேல காட்டுனேன்..... முட்டாப் பயலே இன்னும் ஒரு நாள் வெய்ட் பண்ணியிருந்தா குமார் தப்பிச்சிருக்க மாட்டானேன்னேன்.... ஆனா அவன் ஒத்துக்கல... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டிருந்தவன் என்னையே எதுக்கவும் இவன இனிமேலும் விட்டுவச்சிருந்தா நமக்குத்தான் ஆபத்துன்னுட்டு.... அவனெ கொன்னு மாதவிக்கு கொலைக்கு நாந்தான் காரணம் அதனால நா சூயிசைட் பண்ணிக்கறேன்னு அவன் எழுதறா மாதிரி ஒரு லெட்டர எழுதி கொண்டுபோய்  போட்டுட்டு வந்தேன்.'

'அதுக்கப்புறம் எதுக்கு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள போன?'

'என்னது நானா?' என்றான் முருகேசன் வியப்புடன், 'எப்போ?'

'டேய்....' என்ற ஷங்கரின் குரலில் இருந்த கோபம் எஸ்.பியை புன்னகைக்க வைத்தது. ஷங்கரைப் பார்த்தார். 'என்ன ஒங்க கைவரிசையை காட்னீங்களா?'

''ஷங்கர் I said no violence' என்று டேப்பிலிருந்து ஒலித்த தன்ராஜின் குரல் அவருக்கு பதிலாய் அமைந்தது.

'நீ தான் போலீஸ் பாடிய அங்கருந்து ரிமூவ் பண்ணதும் அந்த வீட்டுக்குள்ள போனது...... சொல்லு எதுக்கு போன?'

'அவளோட நகையையும் பணத்தையும் எடுக்கத்தான் சார்..... ஆனா எப்ப போலீஸ் மறுபடியும் வந்துருவாங்களோங்கற பயத்துல சரியா தேட முடியல..'

'டேய்... டூப்படிக்காத.... வீட்டையே தலைகீழா பொறட்டி போட்டுருக்கே.... கிடைக்கலன்னு டூப்படிக்காம அங்கருந்து எடுத்தத எங்க வச்சிருக்கே.... உண்மைய சொல்லிறு..' என்றது ஷங்கரின் குரல்.

'பிராமிஸா நாங்க எடுக்கல சார்...' என்றான் முருகேசன். 'அதுக்குள்ளவே போலீஸ் ஜீப் வர்றா மாதிரி இருக்கு மச்சான்னு வாசல்லருந்து ராமராஜன் குரல் குடுத்தான்... அப்படியே போட்டுட்டு ஒடியாந்துட்டேன்..... சார் வந்துட்டு போயிருவார்னு நானும் அவனும் எதுத்து சைட்லருந்து வாட்ச் பண்ணிக்கிட்டு நின்னோம்.... ஆனா சார் போற போக்குல எதுத்தாப்பலருக்கற ஹார்ட்வேர் கடையிலருந்து ஆள கூட்டியாந்து புதுசா ஒரு லாக்க போட்டுட்டு போய்ட்டார்.... அந்த நகையும் பணமும் இப்பவும் அங்கதான் இருக்கணும்..'

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு மீண்டும் தன்ராஜின் குரல் ஒலித்தது. 'சரி அத விடு.. ராமராஜன் பாடியிலருக்கற சூயிசைட் நோட்ட பாத்துட்டு போலீசோட கவனம் நம்ம மேல திரும்பாதுன்னு நீ நெனச்சது ஓரளவுக்கு சரி.... அதுக்கப்புறம் எதுக்கு ராகவனையும் அவர் வய்ஃபையும் கடத்துனே?'

'அதான் சார் நா பண்ண முட்டாத்தனம். பேசாம கொஞ்ச நாளைக்கி நார்த் பக்கம் போயிருந்தேன்னா கேஸ் தானாவே க்ளோசாயிருக்கும்..... என்னெ பத்தி யாருக்கும் சந்தேகம் வந்துருக்காது....'

'அப்புறம் ஏன்டா பண்ணே?' என்றார் ஷங்கர் கோபத்துடன்.

'எல்லாம் ராஜசேகர் மேலருக்கற கோவந்தான் சார்...... அந்தாள் மட்டும் கோபால் கேஸ்ல பூராம இருந்துருந்தா கோபால் தப்பிச்சிருக்கவே முடியாது.... போறாததுக்கு நாங்க கடத்தி வச்சிருந்த குமார மீட்டுக்கிட்டு போய்ட்டார்.  அதனால முதல்ல அந்தாளோட பொண்ண தூக்குலாம்னுதான் ப்ளான் பண்ணேன்.... ஆனா அங்கயும் அஞ்சி நிமிஷத்துல அவள கோட்டை விட்டேன்.... அப்புறம் கோபாலோட அப்பா சீனிவாசன கடத்தலாம்னு நினைச்சேன்.... ஆனா அங்கயும் அது நடக்கல... வாட்ச்மேன் என்னெ உள்ளவே விடமாட்டேன்னுட்டான்..... அதுவும் ராஜசேகர் வேலையாத்தான் இருக்கணும். அந்தாள நம்மளான்ட வர வைக்கலாம்னுதான்  ராகவனையும் அந்தாள் சம்சாரத்தையும் கடத்துனோம்...... ஆனா அங்கயும் ராஜசேகர் பூந்து சாமர்த்தியமா என்னெ மடக்கிட்டான்....'

தன்ராஜ் மற்றும் ஷங்கரின் சிரிப்பொலி அறையை நிறப்ப... டேப் ரிக்கார்டரை நிறுத்திவிட்டு எஸ்.பி. சந்தானம்..... 'I think we should be thankful to Rajasekar... இந்த கேஸ சால்வ் பண்றதுக்கு அவரோட ப்ரைவேட் இன்வெஸ்ட்டிகேஷனும் ஒரு முக்கிய காரணம்....' என்றார்.

பிறகு தன்ராஜையும் ஷங்கரையும் பார்த்தார்.  ' Nice work......இனிமே நீங்க ரெண்டு பேரும் டீமா ஃபீல்டுல இறங்குறதுதான் நல்லது.' என்றவாறு தன் இடப்புறத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். 'என்ன பெருமாள், நீங்க என்ன நினைக்கிறீங்க?'

அவருடைய கேள்வியை எதிர்பாராத பெருமாள் சற்று தடுமாறினார். பிறகு சமாளித்துக்கொண்டு, 'நீங்க சொல்றது சரிதான் சார்.....' என்றார் வேறுவழி தெரியாமல்.

அவருடைய பதிலில் இருந்த பொறாமையை எஸ்.பி. உணர்ந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவர்போல் எழுந்து நின்றார். 

'சரி தன்ராஜ், ஷங்கர்..... இனியும் இந்த கேஸ்ல டிலே பண்ணாம சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணிருங்க....' என்று தொடர்ந்தவரை அவருடைய செல்ஃபோன் தடுத்து நிறுத்தியது. 'ஒன் செக்கன்ட்' என்றவாறு செல்ஃபோனை காதில் வைத்தவர், 'அப்படியா?' என்றார் வியப்புடன். 'I was expecting this... but not this fast. Thanks for the info.' 

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னை சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தார். 'பிபி கொஞ்ச நேரத்துக்கு முன்னால ரிசைன் பண்ணிட்டாராம்.' என்றார்.

தன்ராஜும் ஏன் பெருமாளும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. 'அப்படியா சார்?' என்றனர் இருவரும்.

'இதுவும் நல்லதுக்குத்தான். கொஞ்ச நாளாவே அவரோட நடவடிக்கை ஒன்னும் சரியில்லைன்னு கமிஷனர் வரைக்கும் கூட கம்ப்ளெய்ன்ட்ஸ் போயிருக்கு.... அடுத்து வரப்போற பிபி ஹேன்டில் பண்ணப் போற முதல் கேஸ் இதுவாத்தான் இருக்கணும்..... சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு அவர போயி பாருங்க.' என்றார் எஸ்.பி தன்ராஜை பார்த்து.

'கண்டிப்பா சார்.' என்று பதிலளித்த தன்ராஜ் பெருமாளைப் பார்த்தார். 'சார்..... போலாமா?'

பெருமாள் அவருடைய கேள்வியின் பொருள் விளங்காமல் பார்க்க எஸ்.பி இடைமறித்தார். 'அவர மறுபடியும் ஒங்க ஸ்டேஷனுக்கே ரிலீவ் பண்ணிட்டேன்..... இந்த கேஸ்ல சார்ஜஸ் ஃப்ரேம் பண்ணி முடிக்கற வரைக்கும் அங்கதான் இருப்பார்..... அதுக்கப்புறம் என்ன செய்யிறதுன்னு சொல்றேன்....' 

பிறகு ஆய்வாளர் பெருமாளை தனியே அழைத்துக்கொண்டு போய், 'இந்த கேஸ்ல மட்டுமில்லாம முருகேசன் மேல ஃபைல் பண்ற கேஸ்லயும் PW1, PW2 விட்னஸ் ரொம்ப முக்கியம்ங்க.... இந்த கேஸ்ல ஒங்களுக்கு எதிரா அவங்க ரெண்டு பேரும் சொன்னத மனசுல வச்சிக்கிட்டு அவங்கள எதுவும் செஞ்சிறாதீங்க, சொல்லிட்டேன்...' 

'இல்ல சார்....' என்று தலையை அசைத்தார் பெருமாள்.

பிறகு தனக்காக வாசலில் காத்திருந்த தன்ராஜுடன் அவர் வெளியேற பாலசுந்தரம் ஷங்கரை நெருங்கி, 'பாத்தியா ஷங்கர்.... இவ்வளவு நேரம் இதே ரூம்ல இருந்தும் எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசாம பெருமாள் சார் போறத? விட்டா இங்கயே வச்சி என்னெ என்கவுன்டர் பண்ணிருவார் போல' என்றார் புன்னகையுடன்.

ஷங்கரும் சிரித்தார். 'பின்னே.... நீதான அவர எஸ்.பிகிட்ட போட்டு குடுத்தது? நானாருந்தாலும் இந்தாள என்கவுன்டர் பண்ணா என்னான்னுதான் நினைச்சிருப்பேன்....'

பாலசுந்தரம் முறைத்தார். 

***** 

சீனிவாசனும் மகாதேவனும் புழல் சிறை வாசலில் காலையிலிருந்தே கோபாலுக்காக காத்திருந்தனர். ஆனால் நீதிமன்றத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லையென்று இழுத்தடித்து இறுதியில் கோபால் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது.

சிறைவாசலில் தன் தந்தையுடன் காத்திருந்த மகாதேவனைப் பார்த்ததும் கோபாலின் முகம் சுருங்கினாலும் சமாளித்துக்கொண்டு 'வாங்க சார்' என்றான். பிறகு தன் தந்தையை நெருங்கி, 'சாரிப்பா, என்னால ஒனக்குத்தான் ரொம்ப அலைச்சலாயிருச்சி.....' என்றான் உண்மையான வருத்தத்துடன்.

'பரவால்லைடா..... இனியாச்சும் பழசையெல்லாம் மறந்துட்டு நளினியோட குடும்பம் நடத்து.' என்றார் சீனிவாசன். 

'அவ வரலையாப்பா?' என்ற கோபாலின் குரலில் தெரிந்த ஏமாற்றம் சீனிவாசனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன் மருமகளைப் பற்றி கோபால் கேட்க மாட்டான் என்றுதான் நினைத்திருந்தார். 

'அவளுக்கு வரணும்னு ஆசைதான்..... ஆனா ரொம்ப வீக்காருக்காடா. வீட்டுல வச்சி மீட் பண்ணிக்கட்டுமேன்னு டாக்டர் சொன்னார்..... நேத்து ராத்திரிதான் நானே போய் அவள கன்வின்ஸ் பண்ணி வீட்டுக்கு கூட்டியாந்தேன்.... நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கி என் கூடவே இருக்கலாம்னு சொன்னதுக்கப்புறந்தான் வந்தா.....' என்ற சீனிவாசன் தன் மகனை பார்த்தார். 'நா சொல்றது ஒனக்கு புரியுதாடா?'

அவருடைய குரலில் இருந்த ஏக்கத்தைப் புரிந்துக்கொண்ட கோபால், 'நீ சொல்ல வர்றது புரியுதுப்பா.... இனி உங்கூடவே இருக்கேன்.... போதுமா?' என்றவாறு அவருடைய தோள் மீது கை வைத்தார். 

இருவரையும் மாறி மாறி பார்த்த மகாதேவன் இவன் இனி தப்பு பண்ண மாட்டான்..... என்று நினைத்தவாறு, 'சீனி போலாமா?' என்றவாறு காரில் ஏறி அமர்ந்தார். அவரை தொடர்ந்து கோபால் முன் இருக்கையிலும் சீனிவாசன் மகாதேவனுடன் பின் இருக்கையிலும் அமர்ந்துக்கொள்ள டிரைவர் வாகனத்தை நகர்த்தினான்.

**********


'ஏங்க, நேத்துலருந்தே ஒங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சிக்கிட்டே இருக்கேன்.' என்றார் ரேணுகா ராகவன். 

'என்ன?' என்றார் ராகவன் தினத்தாளிலிருந்து கண்ணெடுக்காமல். 

'அந்த லாயர்.... ராஜசேகர்தான அவர் பேரு?'

'ஆமா அவருக்கென்ன?'

'அவரக் கூட அந்த பொண்ணு விட்டுக்கு வந்து போனத பாத்துருக்கேங்க.....!'

ராகவன் எரிச்சலுடன் திரும்பி தன் மனைவியை பார்த்தார். 'ஒனக்கு இதே பிரமைடி.... ஏற்கனவே ஒருத்தன பாக்கக் கூடாத நேரத்துல பாத்துட்டு பட்டது போறாதா? போயி வேலைய பாரு....'

'என்னைக்கி நா சொன்னத நம்பியிருக்கீங்க?' என்றவாறு எழுந்து ரேணுகா சமையலறைக்குள் நுழைய ராகவன் தினத்தாளில் மீண்டும் மூழ்கினார். ஆனால் அவருடைய மனதிலும் நமக்கும் அவர முதல் தடவ பாத்தப்போ இவர எங்கயோ பாத்தா மாதிரி இருக்கேன்னு தோனிச்சே.... ஒருவேளை இவ சொல்றது நிஜமாருக்குமோ? சரி அதப்பத்தி நமக்கென்ன? அவர் மட்டும் அன்னைக்கி புத்திசாலித்தனமா ஆக்ட் பண்ணலன்னா நம்ம கத கந்தலாயிருக்குமே?

*********

பி.கு. இந்த தொடரை கடந்த எழுபத்தைந்து நாட்களாக தொடர்ந்து படித்து ஆதரவளித்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

என்னுடைய அடுத்த க்ரைம் நாவலை சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற துணை ஆணையர் (ACP) ஒருவர் அவருடைய படுக்கையறையில் அவருடைய  துப்பாக்கியாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை மையமாக வைத்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். அந்த தொடருக்கு தாற்காலிகமாக 'தன் வினை....' என்று பெயர் வைத்திருக்கிறேன். அதை முழுவதும் எழுதி முடித்து புத்தாண்டில் வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன்....



அன்புடன்,
டிபிஆர். 

12 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 75 (நிறைவுப் பகுதி)

IPC.Sec.191. Giving false evidence Whoever, being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence.

Sec.193. Punishment for false evidence: Whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding, or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine, and whoever intentionally gives or fabricates false evidence in any other case, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

*****

''அந்த கேஸ்லயும் நீங்க சாட்சி சொன்னதுக்கப்புறம்தான் கேஸ் கன்விக்‌ஷன்ல முடிஞ்சிது... இதுல இன்னொரு ஆச்சரியம் அதுலயும் வேணு சார்தான் கவர்மென்ட் லாயர்.....' என்ற ராஜசேகர், 'நா சொல்றது சரிதானே?' என்றான் தனபாலைப் பார்த்து.

தனபால் பதிலளிக்காமல் வேணு அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்த்தான். 

வேணு இதை ஆட்சேபிப்பார் என்று எதிர்பார்த்த ராஜசேகர் அதற்கு இடம் அளிக்காமல் மேலே தொடர்ந்தான். 'இன்னும் முடியல.... இன்னொரு கேஸ்லயும்  நீங்க இதே மாதிரி என் கூட ப்ரிசன்ல இருந்த கைதி சொன்னார்னு வந்து சாட்சி சொல்லியிருக்கீங்க...... அதாவது சரியா பதினெட்டு மாசத்துக்கு முன்னால.....ராயபுரத்துல ரவுடிகளுக்கிடையில நடந்த கேங் வார்ல..... இதே வேணு சார் ஆஜரான கேஸ்ல.... அதாவது ஞாபகம் இருக்கா?'

தனபால் பதிலளிக்காமல் நின்றிருக்க ராஜசேகர் தொடர்ந்தான்'  ஆனா ஒங்க துரதிர்ஷ்டம் அந்த கேஸ்ல ஆஜரான டிஃபன்ஸ் லாயர் அந்த கைதி ஒங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்ததா நீங்க சொன்ன டேட்டுல ட்ரீட்மென்ட்டுக்காக G.H.க்கு போயிருந்தார்ங்கற ரொம்ப க்ளியராவே ப்ரூஃப் பண்ண..... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்ல தெரியும்கறா மாதிரி மாட்டிக்கிட்டீங்க! ஞாபகத்துக்கு வருதா?'

'இந்த கேஸ் ஞாபகத்துல இருக்கு சார்... அன்னைக்கி நாந்தான் டேட்ட தப்பா சொல்லிட்டேன்..... ஆனா அந்தாள் எங்கிட்ட சொன்னது உண்மைதாங்க.'

ராஜசேகர் சிரித்தான். 'அதெப்படிங்க உங்கள தேடிப் புடிச்சி ஒவ்வொரு கைதியா வாக்குமூலம் குடுக்கறாங்க? அதுவும் வேணு சார் அப்பியராவற கேஸா பாத்து? அந்த கேஸ்ல நீதிபதி இனிமே இந்த மாதிரி வேணும்னே பொய் சாட்சி சொல்ல வந்தா அதுக்குன்னு ஒங்க மேல தனியா கேஸ் போட வேண்டி வரும்னு வார்ன் பண்ணி அனுப்புனாரா?'

'ஆமாங்க.' என்று தனபால்.

'ஆனாலும் மறுபடியும் வந்து நிக்கறீங்க! இத நீங்களா விரும்பி செய்யலேங்கறது தெரியுது.  நா சொல்றது சரிதானே?'

தனபால் பதிலளிக்காமல் நின்றிருக்க இதையாவது ஆட்சேபிக்கலாமா என்று யோசித்தார் வேணு. ராஜசேகர் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பெயரை குறிப்பிட்டபோதெல்லாம் ஆட்சேபிக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் அப்போதெல்லாம் நீதிபதியின் இறுகிய முகமும் அவர் அவ்வப்போது தன்னைப் பார்த்த பார்வையில் இருந்த தீவிரமும் அவரை தடுத்து நிறுத்தின. ராஜசேகரை கத்துக்குட்டின்னு நினைச்சது தப்பு போலருக்கே என்று நினைத்தார்.  அத்தோட நாம எந்த அட்வான்ஸ் இன்ஃபர்மேஷனும் இல்லாம ப்ரொட்யூஸ் பண்ண விட்னஸ பத்தி இவனுக்கு எப்படி இவ்வளவு விவரம் தெரிஞ்சிதுங்கறதும் மிஸ்டரியா இருக்கு. யார் வழியாவோ இந்த இன்ஃபர்மேஷன் இவனுக்கு கிடைச்சிருக்கு என்று நினைப்புடன் ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். ஊஹும்.. இவன் வழியா போறதுக்கு சான்ஸ் இல்ல. இதை அப்படியே சற்று நேரம் மனதுக்குள் அசை போட்டதும் சட்டென்று அவருக்கு பொறி தட்டியதுபோல் இருந்தது. ஆமா, அவன் வழியாத்தான் போயிருக்கணும்...... ஆனா எப்படி? அவனெ அன்னைக்கி கோர்ட்ல வச்சி இவன் அந்த மாதிரி வறுத்தெடுத்தான? பெருமாள் சொன்னப்பவே இந்த ஐடியாவ ட்ராப் பண்ணியிருக்கலாம்.... நமக்கு நாமளே சூன்யம் வச்சிக்கிட்டா மாதிரி ஆயிரும் போல..... இந்த ஜட்ஜ் நம்மள பாக்கற பார்வையிலருந்தே இந்த கேஸ் க்ளோஸ்தான் என்று தெரியுதே..... பேசாம நாமளே வித்ட்றா பண்ணிறலாமா? 

தொடர்ந்து பேசிய ராஜசேகரின் குரல் வேணுவை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்டது. கூர்ந்து கவனிக்கலானார்.

'யுவர் ஆனர், ஏற்கனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டும் யாருடைய தூண்டுதலாலோ அல்லது அளித்த தைரியத்தாலோ இந்த சாட்சி மீண்டும் ஒருமுறை பொய் சாட்சியம் அளிக்க துணிந்திருக்கிறார். சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கும் என்னுடைய கட்சிக்காரர் ஏற்கனவே ஒரு கொலைக்குற்றத்தில் ஆயுள் தண்டனை அடைந்திருக்கும் இத்தகைய ஒருவரிடம் சரிசமமாக பழகியிருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் பழகிய இரு தினங்களுக்குள் செய்யாத ஒரு கொலையை செய்ததாக என் கட்சிக்காரர் இவரிடம் ஜம்பம் அடித்துக்கொண்டார் என்று இவர் கூறுவது உண்மைக்கு புறம்பானதுமட்டுமல்ல நடைமுறைக்கும் ஒவ்வாத செயல். இந்த இடத்தில் இத்தகைய extra-judicial confession அதாவது நீதிமன்றத்திற்கு வெளியில் ஒருவர் அளித்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவைதானா என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றம் சில தீர்ப்புகளில் கூறியுள்ளவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

முதலாவதாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு RAJA RAM (2003) என்பவருக்கு , எதிரான கொலை வழக்கு ஒன்றில் the Honourable Apex Court has ( reported in 8 SCC - 180 (supra))observed as under:-

"Extra Judicial confession will have to be proved like any other fact. The value of the evidence as to confession, like any other evidence, depends upon the veracity of the witness to whom it has been made. The value of the evidence as to the confession depends on the reliability of the witness who gives the evidence."

இரண்டாவது வழக்கு SK.YUSUF Vs. STATE OF WEST BENGAL (2011) & reported in 3 SCC (Cri.)
620, as regards Extra Judicial Confession, at special page 627, para 28, the Honourable Supreme Court  has observed as under:-

"The Court while dealing with a circumstance of extra-judicial confession must keep in mind that it is a very weak type of evidence and requires appreciation with great caution."

இப்போது சாட்சி கூண்டில் நிற்கும் இவர் ஏற்கனவே ஒருமுறை பொய் சாட்சியம் அளித்ததற்காக நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே இவருடைய சாட்சியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன் இவர் மீது பொய்சாட்சி சொன்ன குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 191 மற்றும் 193வது பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.' என்ற ராஜசேகர் நீதிபதியை பார்த்து பேசினான்: 'யுவர் ஆனர். நீங்கள் என்னை வழக்கின் துவக்கத்தில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது இல்லை என்று நான் கூறினேன். அதற்கு பதிலாக இப்போது ஒரு சில நிமிடங்கள் பேச அனுமதி கோருகிறேன்.'  

ராஜசேகர் அரை மணி நேரத்தில் தன்னுடைய குறுக்கு விசாரணையை முடித்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்த நீதிபதி சற்று எரிச்சலைடந்ததுபோல் தோன்றினாலும் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவாறே, 'Make it short.' என்றார். 

'அரசு தரப்பில் சாட்சியம் அளித்த PW1 மற்றும் PW2 ஆகியவர்கள் அளித்த சாட்சியத்திலிருந்தே என்னுடைய கட்சிக்காரர் இந்த குற்றத்தை செய்யவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்துவிட்டது. அவர்களை நான் குறுக்கு விசாரணை செய்யாமலே அவர்களாகவே அரசுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். ஏனெனில் அதுதான் உண்மை. அவர்களை தங்களுடைய விருப்பத்திற்கேற்ப உண்மையை மறைத்துக் கூற சிலர் அவர்களை நிர்பந்தித்ததும் அவர்களுடைய மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். அதிகாரத்திலுள்ள சிலருடைய சட்டத்திற்கு புறம்பான மிரட்டுதல்களுக்கு ஆளாவதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன்தான் சட்டத்தை அனுசரித்து செல்லும் குடிமக்கள் பலரும் எந்த குற்றவாளிக்கும் எதிராக சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வந்த முதல் இரு சாட்சிகளையும் உண்மைக்கு புறம்பாக சாட்சியம் அளிக்க நிர்பந்தித்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், கண்டிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சாட்சியம் தங்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை எவ்வாறோ உணர்ந்த அரசுதரப்பு  ஒரு அப்பாவி சிறைக்கைதியை ஆசை வார்த்தை காட்டியோ அல்லது மிரட்டியோ நடக்காத ஒன்றை நடந்ததாக பொய் சாட்சியம் அளிக்க வைத்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.  ஆனால் அவர்களுடைய நோக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் இனி வரப்போகும் அரசுதரப்பு சாட்சிகள் பிரேதப்பரிசோதனை, கைரேகை மற்றும் ஃபாரன்சிக் இலாக்காவைச் சார்ந்தவர்களே. அவர்கள் அளிக்கவிருக்கும் சாட்சியம் கொலை நடந்தது என்பதை மட்டுமே நிரூபிக்க முடியுமே தவிர அதை செய்தவர்கள் யார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் போவதில்லை. கொலை நடந்தது உண்மைதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த கொலையை செய்தவர் என் கட்சிக்காரர் அல்ல என்பதுதான் என்னுடைய வாதம். இந்த வழக்கில் அரசு இனி முன்வைக்கவிருக்கும் சாட்சிகளின் விசாரணையை அனுமதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்று தாழ்மையுடன் கோர்ட்டார் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆகவே இந்த வழக்கை இனியும் தாமதியாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.' என்று முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை அடைந்து அமர்ந்தான் ராஜசேகர். 

ராஜசேகரின் நீண்ட அதே சமயம் திறமையான வாதத்தில் மூழ்கிப் போய் பிரமிப்புடன் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் நீதிபதி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் அவரையே பார்த்தனர். ராஜசேகர் வாதத்தை முடித்துக்கொண்டு தன் இருக்கையில்  சென்று அமரும் வரை ஒன்றும் கூறாமல் தன் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி சட்டென்று எழுந்து அறையிலிருந்து வெளியேற அந்த வழக்கை தொடர்ந்து அன்று விசாரிக்கவிருந்த வழக்குகளில் ஆஜராக காத்திருந்த வழக்கறிஞர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பார்வையாளர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது. 

'இனி என்ன நடக்கும் சார்....' என்றவாறு ராஜசேகரை பார்த்தார் கோபால். 'இன்னைக்கி பெய்லாவது கிடைக்கிமா? அது கிடைச்சா கூட போதும்னு இருக்கு சார்.'

ராஜசேகருக்கும் நீதிபதியின் செயல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சேம்பருக்கு போயிருப்பாரோ என்ற நினைப்புடன் தன் அருகில் அமரிந்திருந்த வசந்தைப் பார்த்தான்.  'பாஸ் அங்க பாருங்க!' என்று அவன் கண்களால் சாடை செய்ய அவன் காட்டிய திசையில் பார்த்தான். நீதிபதியின் அந்தரக ஊழியன் வேணுவை நோக்கி சென்று ஏதோ கூறிவிட்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டான். 'சார்... ஒங்கள ஐயா சேம்பருக்கு வரச் சொல்றாங்க.'

ராஜசேகர் உடனே எழுந்து அவன் பின்னால் சென்றான்.

கோபால் மற்றும் வசந்தைப் போலவே பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்த மகாதேவனும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அமர்ந்திருந்தார். ஜட்ஜ் ரெண்டு பேரையும் சேம்பருக்கு கூப்டறார்னா இன்னைக்கே இந்த முடிஞ்சிரும்னு தோனுது.... பேசாம வாபஸ் வாங்கிருங்கன்னு பிபி கிட்ட சொல்லப் போறாரோ என்னவோ..... இந்த கேஸ இதுக்கு மேலயும் கன்டினியூ பண்றது வேஸ்ட் ஆஃப் டைம்னு நமக்கே தோன்றப்போ ஜட்ஜுக்கு தோனாதா என்ன? அவர் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும் போதே ராஜசேகர் அறைக்குள் நுழைவதை கவனித்தார். அவருக்குப் பின்னால் அறைக்குள் நுழைந்த வேணுவின் நடையிலிருந்தே தான் சற்று முன் நினைத்தது சரிதான் என்று அவருக்கு தெரிந்தது. உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறி வராந்தாவில் நின்றார். சீனிக்கி நல்ல நியூஸ் சொல்ற முதல் ஆள் நாமளா இருப்போம் என்ற எண்ணத்துடன் செல்ஃபோனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு நீதிமன்ற அறையின் வாசலில் நின்று காத்திருந்தார். 

அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து தன் முன்னால் இருந்த குறிப்புகளை ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு பிபி வேணுவைப் பார்த்தார்.

அவர் மெள்ள எழுந்து, 'The State would like to  withdraw the case  for lack of evidence.' என்று சுருக்கமாக கூறிவிட்டு அமர உடனே பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.  இதை எதிர்பார்த்திருந்த நீதிபதி அது அடங்கும் வரை ஒரு சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். 

பிறகு வழக்கு எண் மற்றும் வழக்கு விவரங்களை கூறி ஒரே வரியில் 'Dismissed as prayed.' என்று அறிவித்துவிட்டு தன் இருக்கைக்கு கீழ் அமர்ந்திருந்த அலுவலரிடம், 'அடுத்த கேஸ் கூப்டுங்க......' என்றார். 

*********

நீதிமன்ற அறையையொட்டி இருந்த வராந்தாவில் நின்றிருந்த ராஜசேகரை அன்று வரவிருந்த தங்களுடைய வழக்கில் ஆஜராக வந்து காத்திருந்த வழக்கறிஞர்கள் சிலரும் அறையிலிருந்து வெளியேறி அவனுடைய கரத்தைப் பற்றி, 'கலக்கிட்டீங்க ராஜசேகர்.' என்றனர். 

'சூப்பர் பாஸ்... நீங்க அஸ்யூம் பண்ணா மாதிரியே நடந்திரிச்சி.' என்றான் வசந்த் புன்னகையுடன்.

நீதிபதியின் அறிவிப்பு வந்ததுமே சீனிவாசனை அழைத்த மகாதேவன் விஷயத்தை தெரிவித்துவிட்டு ராஜசேகரை அணுகினார். 'கங்கிராட்ஸ் மிஸ்டர் ராஜசேகர்.....' என்றார்.

அவர் அருகில் நின்றிருந்தும் அவரை கவனியாதவன் போல் நின்றிருந்த கோபால் அவர் அங்கிருந்து அகன்றதும் ராஜசேகரை கட்டித் தழுவிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் கண்ணீரால் நிறைந்திருந்ததைக் கவனித்த ராஜசேகர், 'சார் எமோஷனல் ஆகாதீங்க. முதல்ல ஒங்க ஃபாதர கூப்ட்டு சொல்லுங்க.' என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை அவரிடம் அளித்தான். அவர் அதைப் பெற்றுக்கொண்டு சற்று தள்ளிச் சென்று தன் தந்தைக்கு டயல் செய்தார். 

கோபாலுடன் காவலுக்கு வந்திருந்த இரு காவலர்களும் அங்கேயே நின்றுக்கொண்டிருந்ததைக் கவனித்த வசந்த் அவர்களை நெருங்கினான். 

அவர்களுள் ஒருவர், 'சார்.... அவர நாங்க மறுபடியும் ப்ரிசனுக்கு கூட்டிக்கிட்டு போய் ஒப்படைக்கணும் சார்... கோர்ட்லருந்து ஆர்டர் வந்தப்புறந்தான் அவர் வெளியில.......' என்றார்.

வசந்த் இடைமறித்து, 'தெரியுங்க.... இருங்க அவர் ஃபோன் பண்ணி முடிக்கட்டும்.' என்றவாறு ராஜசேகரை நெருங்கி காவலர் தெரிவித்ததை அவனிடம் கூறினான். 

'ஆமாடா....ஆர்டர் இங்கருந்து போறதுக்கு சாயந்தரம் ஆயிரும்..... நா கோபால்கிட்ட பேசறேன்.' என்ற ராஜசேகர் கோபாலை நெருங்கி விஷயத்தை கூறினான். 

அவர் உடனே 'சரி சார்... காலையில ரிலீஸ் பண்ணாக் கூட போதும்.' என்றவாறு செல்ஃபோனை அவனிடம் நீட்டினார். 

ராஜசேகர் அதை பெற்றுக்கொள்ளாமல், 'ஒங்க வய்ஃபுக்கும் ஃபோன் பண்ணி சொல்லுங்களேன்.... அவங்களுக்கும் ஆறுதலாருக்கும்.' என்றான் 'போலீஸ் வற்புறுத்தியும் உங்களுக்கு எதிரா விட்னெஸ் குடுக்க வர மாட்டேன்னு அவங்க சொன்னது உங்களுக்கு தெரியாது....'

ராஜசேகரின் பரிந்துரைக்கு பதிலேதும் கூறாமல் நின்றிருந்த கோபால் சில விநாடிகளுக்குப் பிறகு, 'இன்னும் ஹாஸ்ப்பிடல்லதான் இருக்காளா சார்?' என்றார்.

'அப்படித்தான்னு  நினைக்கேன்....'

சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மீண்டும் சற்று தள்ளி நின்று அவர் ஃபோன் செய்ய, 'எப்படி பாஸ் கரெக்டான டைமிங்ல இப்படில்லாம் செய்யணும்னு ஒங்களுக்கு மட்டும் தோனுது.' என்றான் வசந்த் வியப்புடன்.

'டேய்... இன்டைரக்டா வாராத..... வா காருக்கு போலாம்.... அவர் பேசிட்டு வரட்டும்....' என்றவாறு அங்கிருந்து நகர்ந்து தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தான். 

வசந்த் கோபாலுக்காக காத்திருந்த காவலர்களை நெருங்கி, 'வாங்க..... ஒங்க வேனுக்கு போலாம். அவர் பேசிட்டு வரட்டும்.'என்று அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ராஜசேகரின் வாகனத்தை அடைவதற்கென்றே காத்திருந்தவன்போல், 'சேம்பர்ல என்ன பாஸ் நடந்துது?' என்றான் வசந்த்.

சற்று தொலைவில் தலைகுணிந்தவாறு நடந்துச் சென்றுக்கொண்டிருந்த பிபி வேணுவைப் பார்த்தவாறே பதிலளித்தான் ராஜசேகர், 'நீங்களா கேஸ வித்ட்றா பண்ணிறுங்க. இல்லன்னா நானெ டிஸ்மிஸ் பண்ண வேண்டி வரும். அதோட உங்களுக்கு அகெய்ன்ஸ்டா ஸ்ட்ராங்கான ஸ்ட்ரிக்சர்ஸும் (strictures) பாஸ் பண்ணுவேன்னார். வேணு பதில் பேசாம கொஞ்ச நேரம் ஒக்காந்திருந்துட்டு 'I will withdraw'னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார். அவர அப்போ பாக்க பாவமாத்தான் இருந்துது....'

'நீங்க வேற பாஸ்' என்று சிரித்தான் வசந்த், 'அவரா வச்சிக்கிட்ட சூன்யம்தான? அனுபவிக்கட்டும்.'

நிறைவு

இத்தொடரின் முடிவுரை (Epilog) நாளை...

11 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 74

நீ மட்டும் வா என்பதுபோல் ராஜசேகர் சாடை காட்டினான். வசந்த் புரிந்துக்கொண்டு தன் பர்சில் இருந்து  பணத்தை எடுத்து காவலர் ஒருவரிடம் கொடுத்து 'நீங்க சாப்ட்டுக்கிட்டிருங்க....' என்று அனுப்பி வைத்துவிட்டு ராஜசேகரை நெருங்கினான்.

'சொல்லுங்க பாஸ்.... இப்ப என்ன பண்ணலாம்... அட்ஜேர்ன்மென்ட் கேக்கலாமா?' என்றான்.

'டேய், அதுக்கு முன்னால இன்னொரு முக்கியமான விஷயம்.' என்ற ராஜசேகர் முந்தைய தினம் இரவு தன்ராஜே அழைத்து தனபால் சாட்சியம் அளித்திருந்த முந்தைய வழக்கு விவரங்களை அளித்ததை கூறினான். அதை தொடர்ந்து அந்த வழக்குகளில் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பின் நகலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்த விவரத்தையும் தெரிவித்தான். 'அந்த மூனு கேஸ்லயுமே வேணுதான்டா அட்வகேட். இதுலருந்து என்ன தெரியுது?'

'அவன் இவரோட கையாள்னு....' என்று சிரித்தான் வசந்த். 'ஒருவேளை ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்களோ என்னவோ?'

'யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்.' என்ற ராஜசேகர் தொடர்ந்து, 'டேய், நீ டேட்டா கார்ட் கொண்டு வந்துருக்கியா?' என்று வினவினான்.

'அதான் நம்ம ஒடன்பிறப்பாச்சே பாஸ்... அது இல்லாம நா என்னைக்கி வெளிய போயிருக்கேன்? ஏன் கேக்கறீங்க?'

'எனக்கு ஒரு டீட்டெய்ல்ஸ் வேணும். வா, கார்ல போயி ஒக்காந்து பாக்கலாம்.'

இருவரும் ராஜசேகரின் வாகனத்தை அடைந்து வசந்தின் லேப்டாப்பை திறந்து இணைய தொடர்பை ஏற்படுத்தி புழல் ப்ரிசன் என்று கூகுளில் அடித்து அந்த தளத்தில் இருந்த சில விவரங்களை தன்னுடைய குறிப்பேட்டில் பதிந்துக்கொண்டான். 

'என்ன பாஸ் பாக்கறீங்க?'

'அது சஸ்பென்ஸ்.' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தின் நகல் ஒன்றை தரவிறக்கம் செய்து அவனுக்கு வேண்டிய பிரிவுகளை தேடிப்பிடித்து அவற்றையும் அவற்றிற்கென கொடுக்கப்பட வேண்டிய தண்டனை விவரங்களையும் குறித்துக்கொண்டு இணையத்திலிருந்து வெளியேறினான். 'இந்தா ஷட்டவுன் பண்ணிரு.' என்று வசந்தின் லேப்டாப்பை அவனிடமே கொடுத்துவிட்டு 'வாடா நம்ம சீட்டுக்கு போயி ஒக்காந்துக்கலாம். அஞ்சி நிமிஷம் லேட்டானாலும் ஜட்ஜ் அட்ஜேர்ன் பண்ணாலும் பண்ணிருவார்.'

'அப்ப லஞ்ச் பாஸ்?' என்றான் வசந்த் கலக்கத்துடன்.

'டேய்... ஒரு வேளை வயிறு காஞ்சா செத்துறமாட்டே.... வா.' என்று தயங்கி நின்ற வசந்தை இழுத்துக்கொண்டு நீதிமன்ற அறையை அடைந்தான். ஆனால் நீதிபதி இன்னும் வந்திருக்கவில்லை.

அதுவரை வராந்தாவில் நிற்போம் என்று நினைத்த ராஜசேகர் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு, 'டேய், இந்த செஷந்தான் க்ளைமாக்ஸ்னு என் உள்மனசு சொல்லுது.' என்றான்.

'அப்படியா. என்ன பாஸ் சொல்றீங்க? இன்னையோட இது முடிஞ்சிரும்னு சொல்றீங்களா?'

'ஆமாடா....  எதுக்கும் ப்ரிப்பேர்டாத்தான் வந்துருக்கேன்.... இது நம்ம பிபி பண்ண வேலைதான்..... தன்பால் சொல்றது முழுசும் பொய்னு நிரூபிச்சாலே போறும். கேஸ் டிஸ்மிஸ் ஆயிரும்.....' என்ற ராஜசேகர் தொடர்ந்தான். 'எனக்கென்னவோ ஜட்ஜும் ஒரு டிசிஷனுக்கு வந்துட்டார்னுதான் நினைக்கேன். இல்லன்னா லஞ்சுக்கு அப்புறமும் கன்டினியூ பண்ணாம அட்ஜேர்ன் பண்ணியிருப்பார்...... என்ன சொல்ற?'

'அப்படியா சொல்றீங்க? இருந்தாலும் இருக்கும்....' என்ற வசந்த் தொடர்ந்து, 'போலீஸ் முருகேசன இன்னும் இன்டரகேட் பண்ணி முடிக்கலையா பாஸ்? கேட்டீங்களா?'

'இல்லேன்னு நினைக்கிறேன். இல்லன்னா தன்ராஜ் கூப்டாம இருந்துருக்க மாட்டார்.  அப்படியே அவன் ஒத்துக்கிட்டாலும் இந்த சமயத்துல அந்த விஷயத்த கோர்ட்ல சொல்றதுக்கு வேணு நிச்சயம் ஒத்துக்கமாட்டார். அவருக்கு கோபால எப்படியாவது உள்ள தள்ளிறணும்.....'

நீதிபதி அறையை நோக்கி வருவதை கவனித்த ராஜசேகர் பேச்சை மாற்றினான். 'டேய்  நா சீட்டுக்கு போறேன்... நீ போயி கோபால் என்ன ஆனார்னு பார்த்து இழுத்துக்கிட்டு வா....' என்றவாறு அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு முன்பே வந்து தன் இருக்கையில் அமர்ந்திருந்த வேணு தன் உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. அதன் முடிவில் ஒரு கேலி புன்னகையுடன் தன்னை திரும்பி பார்ப்பதையும் கவனித்த ராஜசேகர் இந்தாள் சரியான மேனியாக்கா (maniac) இருப்பான் போலருக்கே..... என்று நினைத்தவாறு அவருடைய பார்வையை தவிர்த்து வாசலை பார்த்தான். கோபால் வருவது தெரிந்தது. அவர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் 'சார் என்ன நடந்தாலும் நிதானத்த இழக்காம ஒக்காந்துருங்க. நா குறுக்கு விசாரணையில இருக்கறப்போ தயவு செஞ்சி ஏதாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துறாதீங்க, ப்ளீஸ்.' என்றான். 

'இல்ல சார்....' 

நீதிபதி இருக்கையில் வந்து அமர்ந்ததும் நீதிமன்ற சிப்பந்தியை சாடை காட்ட அவன் தனபாலின் பெயரை உரக்க கூவினான். அடுத்த சில நொடிகளில் தனபால் வந்து சாட்சி கூண்டில் நின்றார். 

'You can proceed' என்றார் நீதிபதி ராஜசேகரைப் பார்த்து, 'But remember, you have only about thirty minutes.....'

'Yes your honour' என்ற ராஜசேகர் 'என்னுடைய குறுக்கு விசாரணையை துவக்குவதற்கு முன்பு இரண்டு விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.' என்றான். 

'Go ahead.'

'முதலாவது: சென்னை புழல் பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலைதான் பரப்பளவில் நாட்டிலேயே மிகப் பெரியது. அதில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளுக்கென்று தனித்தனியாக இரு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சுமார் 1200 கைதிகளை வைக்க முடியும். இணையத்திலுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள்படி புழல் சிறையில் 962 தண்டனைக் கைதிகளும் 1100 ரிமான்ட் மற்றும் விசாரணைக் கைதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 1200 தண்டனைக் கைதிகள் இருக்கக் கூடிய கட்டிடத்தில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைக்கப்பட்டிருக்கும் சூழலில் ஆயுள் கைதியான சாட்சியை எதற்காக  விசாரணைக் கைதியான என்னுடைய கட்சிக்காரருடன் ஒரே சிறை அறையில் (prison cell) தங்க வைக்க வேண்டும்?

இரண்டாவதாக, திரு தனபால் என்னுடைய கட்சிக்காரருடைய அறையில் இருந்தது இரண்டே நாட்கள்தான். அதாவது இந்த வழக்கின் கடைசி விசாரணை (last hearing)க்கு அடுத்த நாள் அங்கு கொண்டுச் செல்லப்பட்டு இன்று காலை அங்கிருந்து மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்று கருதுகிறேன்.'

உடனே எழுந்து நின்ற வேணு கோபத்துடன், 'Objection' என்றார். 

எதற்கு என்பதுபோல் அவரைப் பார்த்தார் நீதிபதி. 

'எதிர்தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே ஏதோ இதை நான்தான் திட்டமிட்டு செய்ததைப் போல் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.'

'Overruled...' என்ற நீதிபதி, ' Proceed with the cross.' என்றார் ராஜசேகரைப் பார்த்து. 

மீண்டும் எதையோ சொல்ல வாயெடுத்த வேணு அதை தவிர்த்து இருக்கையில் அமர ராஜசேகர் சாட்சி கூண்டை நெருங்கி, 'நீங்க புழல் சிறையில எவ்வளவு நாளா இருக்கீங்க?'

'எட்டு வருசம் ஆவுதுங்க.'

'மிஸ்டர் கோபால ஜெயில்ல வச்சி பாக்கறதுக்கு முன்னால ஒங்களுக்கு தெரியுமா, அதாவது பழக்கம் இருக்கா?'

'இல்லீங்க.'

'எவ்வளவு நேரம் அவர் கூட பேசியிருப்பீங்க? அதாவது அவர் நாந்தான் அந்த பொண்ணெ போட்டு தள்னேன்னு சொல்றதுக்கு முன்னாடி.....?'

'பத்து பதினைஞ்சி நிமிஷம் இருக்குங்க.'

'பத்து நிமிஷம் பேசினதுமே இந்த விஷயத்த ஒங்கக்கிட்ட சொல்லிட்டாரா....? இல்ல, அடுத்த நாள், அடுத்த வேளை.... அப்படீன்னு......'

'இல்லீங்க.... அப்பவே சொல்லிட்டார்.'

'அப்படீங்களா?' என்று வியப்புடன் சொன்ன  ராஜசேகர் தன் இருக்கைக்கு திரும்பி மேசை மீது வைக்கப்பட்டிருந்த சில காகிதங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சாட்சி கூண்டை நெருங்கினான். 

'இதுக்கு முன்னால.... அதாவது 2005ல நீங்க கன்விக்டானதுக்கப்புறம் வேற ஏதாச்சும் கேஸ்ல சாட்சி சொல்லியிருக்கீங்களா? நல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க.'

ஒரு சில விநாடிகள் யோசிப்பதுபோல் நடித்த தனபால் இறுதியில், 'இல்லேன்னுதான் நினைக்கிறேன்.'

'ஒங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மின்னு நினைக்கேன்...' என்ற ராஜசேகர் தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தான். 'மூனு வருசத்துக்கு முன்னால வியாசார்பாடியில ஏகாம்பரம்னு ஒரு வியாபாரிய  நாலஞ்சி பேர் வெட்டிக் கொன்ன கேஸ்ல..... இதே மாதிரி ஒங்க செல்லுல கூட இருந்த ஒருத்தர் நாந்தான் இத ப்ளான் பண்ணி செஞ்சேன்னு உங்கக்கிட்ட சொன்னதா சாட்சி சொல்லியிருக்கீங்க! இப்ப ஞாபகம் வருதுங்களா?'

பிடிபட்ட கள்வனைப் போல் திருதிருவென விழித்த தனபால் தன்னையுமறியாமல் பிபி அமர்ந்திருந்த திசையை நோக்கிப் பார்த்தான். ராஜசேகர் அதை கவனியாதவன் போல் நின்றிருந்தாலும் நீதிபதி அதை கவனிக்க தவறவில்லை. பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவனும் அதை கவனித்தார். ஆனால் இந்த விவரம் ராஜசேகருக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்தார். அதுவும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வேணு அழைத்து வந்த சாட்சியைப் பற்றிய தகவலை அதற்குள் எப்படி? இதுக்கு பின்னால என்னமோ நடக்குது என்று நினைத்தார். சரி என்னவாருந்தா நமக்கென்ன கோபால் செய்யாத குத்தத்துக்கு எத்தன நாள்தான் அவஸ்தைப் படறது? இன்னையோட முடிஞ்சா சரிதான்....

'இப்பவும் ஞாபகம் வரலீங்களா?' என்றான் ராஜசேகர். 'அதுவரைக்கும் கவர்ன்மென்ட் சைட்லருந்து சாட்சிங்க சொன்னது எதுவுமே செல்லுபடியாகாம இருந்த சமயத்துலதான் நீங்க வந்து சாட்சி சொல்லி அந்த கேஸ்ல அவர் கன்விக்ட் ஆனார்....'

தனபால் பதிலளிக்காமல் தலை குணிந்து நிற்க இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார் வேணு..... இடியட்.... எத்தனை தடவை இவனுக்கு சொல்லியிருப்பேன்.... தலை குணிஞ்சி நிக்காம எதையாச்சும் சொல்லி வைடான்னு..... வேணுவின் இந்த உத்திக்கு துவக்கத்திலிருந்தே சம்மதிக்காத ஆய்வாளர் பெருமாள் வேணும்யா ஒமக்கு.... நீரே வச்சிக்கிட்ட சூன்யம்தான? இத்தோட நீர் க்ளோஸானாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல என்று தனக்குள் மகிழ்வடைந்தார். 

ராஜசேகர் மீண்டும் தன் கையிலிருந்த காகிதங்களை புரட்டி அதில் ஒன்றை உருவி எடுத்து படிப்பதுபோல் நடித்துவிட்டு சட்டென்று, 'நீங்க சென்னை சென்ட்ரல் ஜெய்ல் புழலுக்கு மாத்தறதுக்கு முன்னாலருந்தே இருக்கறவர்தான?'

'ஆமாங்க.'

'புழலுக்கு வந்ததுலருந்தே கன்விக்ட் ப்ரிசனர்ஸ் ப்ளாக்லதான இருக்கீங்க?'

'ஆமாங்க.'

'அப்புறம் திடீர்னு எதுக்கு ஒங்கள ட்ரையல் ப்ரிசனர்ஸ் ப்ளாக்குக்கு மாத்தினாங்க?'

'தெரியலீங்க.... போன வாரம் ஒரு நாள் அசிஸ்டென்ட் ஜெயிலர் ஐயா வந்து எங்கூட வாய்யான்னு சொல்லி அந்த ப்ளாக்குல கொண்டு விட்டார்.... இங்க ஒரு வாரம் இரு.... அப்புறம் சொல்றேன்னார்.... அதான் தெரியும்.'

'ஆனா ரெண்டு மூனு நாள்தான் இங்க இருந்தீங்க, அப்படீத்தான?'

'விசாரணை கைதிங்க இருக்கற பில்டிங்லதான் சார் இப்பவும் இருக்கேன்.... ஆனா இன்னொருத்தரோட?'

'அதாவது அவர் கிட்டருந்தும் உண்மைய வரவைக்கறதுக்குன்னு சொல்லுங்க!' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். 

'Objection' என்றார் வேணு உரக்க, 'இது சாட்சியை அவமதிப்பதுபோல் உள்ளது.'

'Sustained..' என்றார் நீதிபதி சற்று எரிச்சலுடன். 'Is it going to take long?' என்றார் ராஜசேகரிடம். 

'No your honour... just few more questions.'

சரி என்பதுபோல் தலையை அசைத்த நீதிபதி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். 

'ரெண்டு வருசத்துக்கு முன்னால பனகல்பார்க்ல ஒரு சீட்டுக் கடைக்காரர் மர்டர் ஆன கேஸ்லயும் நீங்க விட்ன்ஸ் குடுத்துருக்கீங்க? அவர் பேர் ஞாபகம் இருக்கா?'

தன்பால் திருதிருவென முழித்தவாறு, 'இல்லீங்களே?'

'அதான! என்ன கேஸ், யார கொலை பண்ணாங்கன்னு தெரியாமயே சாட்சி சொல்றவர்தான நீங்க?' என்ற ராஜசேகர் வேணு இதை ஆட்சேபிப்பார் என்று எதிர்பார்த்து அதற்கு அவருக்கு வாய்ப்பளிக்காமல், 'சரி அத விடுங்க.' என்று அடுத்த கேள்விக்கு தாவினான். 

'அந்த கைதி பேராவது ஞாபகம் இருக்கா?'

சிறிது நேரம் யோசிப்பதுபோல் நடித்த தனபால், 'இல்ல சார்.' என்றான். 

இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்த வேணு சற்று தள்ளி அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளை பார்த்தார். அவருக்கும் இது வியப்பை அளித்திருந்தது என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. 

'அந்த கேஸ்லயும் நீங்க சாட்சி சொன்னதுக்கப்புறம்தான் கேஸ் கன்விக்‌ஷன்ல முடிஞ்சிது... இதுல இன்னொரு ஆச்சரியம் அதுலயும் வேணு சார்தான் கவர்மென்ட் லாயர்.....' என்ற ராஜசேகர், 'நா சொல்றது சரிதானே?' என்றான் தனபாலைப் பார்த்து.

தனபால் பதிலளிக்காமல் வேணு அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்த்தான். 


நாளையுடன் நிறைவுபெறும்.....


  


10 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 73

அவருடைய குரலில் இருந்த கோபத்தைக் கண்டு சற்றும் மிரளாத குமார் மீண்டும் நீதிபதியைப் பார்த்தான். 'ஐயா என்னெ உண்மையிலயே இங்க வந்து என்ன சொல்லணும்னு மிரட்டுனது இதோ நிக்கிறாரே இந்த வக்கீல் ஐயாவும் அதோ ஒக்காந்துருக்காரே அந்த இன்ஸ்பெக்டர் ஐயாவும் தாங்க..... என்னெ சொல்லவிட்டா நடந்தது எல்லாத்தையும் சொல்லிடறேனுங்க.'

நீதிமன்றம் மீண்டும் சலசலக்க நிலைமை கட்டுக்கு மீறி செல்வதை உணர்ந்த நீதிபதி கோபத்துடன் 'சைலன்ஸ்.... otherwise I will be forced to clear the room of all the visitors.' என்றார். உடனே பார்வையாளர்கள் அனைவரும் அமைதியாக நீதிபதி நின்றுக்கொண்டிருந்த வேணுவைப் பார்த்தார். 

அவர் உடனே, 'Your honour I would like to request you to declare this witness also as a hostile witness and ignore whatever he is going to say from now on.' என்றார் உரக்க.

அவர் கூறியதை குறித்துக்கொண்ட நீதிபதி, 'Your observation is noted... but I am going to allow him to continue...' என்றவாறு குமாரை பார்த்தார். 'சொல்லு என்ன நடந்தது அன்னைக்கி?'

'கோபால் சார் அங்கருந்து போய் அரை மணி நேரம் கழிச்சி ராமராஜன் - அவரும் கோபால் சார் கம்பெனியிலதான் வேல பாக்கறாருங்கறது மட்டும்தான் ஐயா எனக்கு தெரியும் - ஒரு மாருதி வேன்ல வந்தார்யா. வந்து வேன நிறுத்திட்டு அந்த அக்கா வீட்டுக்குள்ள போனாருங்க.... ஆனா உடனே வந்து ஒன்னும் சொல்லாம கார எடுத்துக்கிட்டு போய்ட்டாருங்க.'

ராமராஜனும் இதுல கூட்டா என்று நினைத்தார் கோபால். ஆனால் ராமராஜனைப் பற்றி மாதவி ஏற்கனவே தன்னிடம் புகார் கூறியிருந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தது. கூடவே ரெண்டு கொலைகாரப் பசங்கள வச்சிக்கிட்டிருந்தேன் போலருக்கு....

நீதிபதி குறுக்கிட்டு, 'அவர் ரெகுலரா அங்க வருவாரா? என்றார்.

'ஆமாங்கய்யா.... இன்னொன்னும் சொல்லிக்கறேன்யா.... அந்த அக்கா வீட்டுக்கு கோபால் சார மாதிரி பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வருவாங்க.... அவங்க வரும்போதெல்லாம் பார்க் பண்ண வசதியா ரெண்டு கார் நிக்கிறா மாதிரி இடத்த கயிறு கட்டி வச்சிருப்பேனுங்க..... இதுக்கு அக்காவும் மாசா மாசம் தனியா தந்துருவாங்க. வர்றவங்களும் கார எடுத்துக்கிட்டு போறப்போ குடுப்பாங்க. அதனால சாயந்தரம் நாலு மணியானா அந்த இடத்துல வேற யாரையும் நிறுத்த விட மாட்டேங்க....'

குமாரின் வாக்குமூலம் கோபாலிடம் எத்தகைய ரியாக்‌ஷனை ஏற்படுத்துகிறது என்பதை அறிய அவருடைய முகத்தைப் பார்த்தான் ராஜசேகர். அவருடைய முகம் இறுகிப் போயிருந்ததைக் கவனித்தான். தன்னைத் தவிர வேறு பலரிடமும் மாதவிக்கு தொடர்பு இருந்தது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவளை இவர் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்பதை அவளிடம் தெரிவித்தப் பின்பு அவர்களுடைய தொடர்பை அவள் விட்டுவிட்டிருப்பாள் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தான். 

'சரி மேல சொல்லு.' என்ற நீதிபதியின் குரல் கேட்டு மீண்டும் குமாரை பார்த்தான் ராஜசேகர்.

'ராமராஜன் போயி அரை மணி நேரத்துக்கெல்லாம் முருகேசன்னு ஒருத்தரோட...'

'ஒரு நிமிஷம். முருகேசன் யார்னு ஒனக்கு தெரியுமா?'

'தெரியும்யா.... அவர்.... அவர்.....' என்று தயங்கிய குமார் ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான். 'ஒரு புரோக்கர்ங்கய்யா.... அந்த அக்கா வீட்டுக்கு ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு கமிஷன் வாங்கிக்குவார்... அவர் டெய்லி சாயந்தரத்துல வந்து எங்க பார்க்கிங் ஏரியாவுலதான் ஒக்காந்துருப்பார்....'

நீதிபதி அவன் கூறியதை குறித்துக்கொண்டு அவனை பார்த்தார். 'சரி, மேல சொல்லு.'

'முருகேசன் மட்டும் அந்தக்கா வீட்டுக்குள்ள போயி ஒரு இருபது இருபத்தஞ்சி நிமிஷம் இருக்கும். ராமராஜன் சாருக்கு ஒரு ஃபோன் வந்துது. அவர் உடனே வண்டிய எடுத்துக்கிட்டு போயி அந்தக்கா வீட்டு வாசல்ல நிறுத்துனத பாத்தேனுங்க... அவ்வளவுதான்...... அன்னைக்கி ராத்திரி நா வேலையிலருந்து கிளம்பறப்போ மறுபடியும் ரெண்டு பேரும் என்னான்ட வந்து இன்னைக்கி சாயந்தரம் எங்கள இங்க பாத்தேன்னு சொன்னே ஒன்னெ தொலைச்சிருவேன்னு மிரட்டுனாங்க.. அதான் அடுத்த நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா கோபால் சார் இங்க வந்து பார்க் பண்ணாரான்னு கேட்டப்போ ஆமாங்கய்யான்னு சொல்லிட்டேன்.'

'சரி' என்று குறித்துக்கொண்ட நீதிபதி, 'கொஞ்ச நாள் நீ தலைமறைவாய்ட்டேன்னு போலீஸ் சொன்னாங்களே எதுக்கு?' என்று வினவினார்.

அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதுபோல் ஒரு சில நொடிகள் தயங்க, 'எதுக்கும் பயப்படாம உண்மைய சொல்லு.' என்றார் நீதிபதி சற்று கண்டிப்புடன். 

'அதான் சொன்னேனேய்யா...... வக்கீல் சாரும் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஐயாவும் அன்னைக்கி சாயந்தரம் ஏழு மணிக்கும் கோபால் சார் எங்க ஏரியாவுல வந்து கார பார்க் பண்ணிட்டு அந்த அக்கா வீட்டுக்கு போய் வந்தத பாத்தேன்னு சொல்லச் சொன்னாங்க......அதே மாதிரிதான்டா நீ சொல்லணும் இல்லன்னா ஒன்னே தீர்த்துக் கட்டிருவேன்னு முருகேசனும் ராமராஜனும் மிரட்டினதால நா பயந்துபோயி ஊர் பக்கம் போய்ட்டேங்க.' 

உன்னை ராமராஜன் கடத்தி வைத்திருந்ததை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே ராஜசேகர் அவனை எச்சரித்திருந்தான். அப்படியானால் உன்னை அங்கிருந்து மீட்டது யார் என்று நீதிபதி கேட்க வாய்ப்புண்டு. அவனை மீட்டது எதிர்தரப்பு வழக்கறிஞர் என்பது கோர்ட்டுக்கு தெரிய வந்தால் அதன் பிறகு குமார் சொல்லும் எந்த சாட்சியத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்பதை அவன் அறிந்திருந்தான். 

குமாரின் இந்த வாக்குமூலத்தைக் கேட்டதும் கோபால், 'என்ன சார் இது அக்கிரமமா இருக்கு..... இப்படியெல்லாமா நடக்கும்?' என்று கிசுகிசுக்க, 'சரி சார்.... நீங்க அமைதியா இருங்க.' என்றான் ராஜசேகர். 'ஜட்ஜ் கோச்சிக்கப்போறார்.'

குமார் பேசி முடிப்பதற்கு முன்பே தன் இருக்கையில் இருந்து எழுந்த பிபி, 'இது எதிரியை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க அவர் போடும் சதி யுவர் ஆனர். ஆகவே நான் காலையில் விண்ணப்பித்தபடி எதிரியுடன் சிறையிலிருந்த கைதியை விசாரிக்க அனுமதிக்க வேண்டுகிறேன்.' என்றவாறு அதற்கென தன் உதவியாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்டிருந்த மனுவை சமர்ப்பித்தார். 

நீதிபதி அதை வாசித்துவிட்டு ராஜசேகரைப் பார்த்தார்.  அவருடைய பார்வையின் பொருளை உணர்ந்துக்கொண்ட ராஜசேகர் தன் அருகில் இருந்த வசந்தைப் பார்த்தான். 'பண்ணட்டும் பாஸ்.... என்னதான் சொல்றான்னு பாத்துட்டு தேவைப்பட்டா அட்ஜெர்ன்மென்ட் கேக்கலாம்.' என்றான் வசந்த். 

ராஜசேகர் எழுந்து, 'I have no objection your honour' என்றான்.

'OK.' என்ற நீதிபதி, 'Before that, you want to cross examine this witness?' என்றவாறு ராஜசேகரைப் பார்த்தார். 

அவன் ஒரு சில விநாடிகள் யோசித்தான். அவன் எதிர்பார்த்திருந்ததைவிடவும் தெளிவாகவும் கோர்வையாகவும் குமார் சாட்சியம் அளித்திருந்தததால் அதற்கு மேலும் அவனிடம் கேள்விகள் கேட்டு அவனை குழப்ப வேண்டாம் என்று தீர்மானித்தான். 'No, your honour' 

நீதிபதி வேணுவைப் பார்த்து 'In that case, you can call the witness.' என்று கூறிவிட்டு சாட்சி கூண்டில் நின்றிருந்த குமாரை, 'நீங்க போகலாம்... என்றார், அவன் இறங்கி தலையைக் குணிந்தவாறு நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறினான். 

'தாங்ஸ் யுவர் ஆனர்.' என்று பதிலளித்த பிபி தன் உதவியாளரிடம் கிசுகிசுக்க அவர் உடனே எழுந்து வெளியில் சென்றார். 

அடுத்த சில நிமிடங்களில் இரு காவலர்கள் சாட்சியை அழைத்து வந்து சாட்சி கூண்டில் ஏற்றிவிட்டு அருகிலேயே நின்றனர். 

நீதிபதி சாட்சி கூண்டில் நின்றவரை பார்த்தார். பிறகு வேணுவை பார்த்து, 'You can begin... but make it short and to the point.... we have only about half an hour for lunch break.' என்றார் கண்டிப்புடன். 

'நன்றி யுவர் ஆனர்.....' என்று ஒரு நாடகத்தனமான புன்னகையுடன் சாட்சி கூண்டில் நின்றுக்கொண்டிருந்தவரை நெருங்கி, 'உங்க பேர்?'

'தனபால் ஐயா.... ஒரு மர்டர் கேஸ்ல ஆயுள் கைதியா இருக்கேன்..... எட்டு வருசம் ஆவுதுங்க.' என்றவரை எரிச்சலுடன் பார்த்தார் கோபால்.  அவருடைய பார்வையின் பொருளை உணர்ந்த ராஜசேகர் அவரை நெருங்கி 'அவர நீங்க பாக்காம இருக்கறது நல்லது.... ஜட்ஜ் உங்களையும் நோட் பண்ணுவார்.' என்று கிசுகிசுத்தான் ராஜசேகர். கோபால் தலையை குணிந்துக்கொண்டார்.

'கோர்ட்ல இருக்கற மிஸ்டர் கோபால இதுக்கு முன்னால பாத்திருக்கீங்களா?'

'ஆமாங்கய்யா....அவர் கூட கொஞ்ச நாள் ஒரே செல்லுல (cell) தங்கியிருந்தேன்.'

கோபால் அவன் சொன்ன பொய்யை தாங்க முடியாதவர் போல் ராஜசேகரை பார்த்து, 'ரெண்டு நாள் கூட முழுசா இருக்கல சார்.... கொஞ்ச நாள்னு டூப்படிக்கிறான்!' என்றார். நீதிபதி அவரை எரிச்சலுடன் பார்ப்பதை கவனித்த  ராஜசேகர், 'சார் ப்ளீஸ்.... அவன் சொல்றத கேக்காத மாதிரி இருங்க.....' என்றான் மீண்டும். 

'இவர் கூட பேசியிருக்கீங்களா?' என்று தொடர்ந்தார் பிபி.

'ஆமா சார்.'

'என்ன பேசினீங்க?'

'சாதாரணமான விஷயமாத்தாங்க..... எல்லா கைதிங்கக் கிட்டயும் கேக்கறா மாதிரிதான்... எந்த செக்‌ஷன்னு கேட்டேன்.'

'சரி.'

'மர்டர்னு சொன்னார்.'

'மேல சொல்லுங்க.'

'பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க.... யார சார் மர்டர் பண்ணீங்கன்னு கேட்டேன்..'

'அவர் சிரிச்சிக்கிட்டே ஒரு கெட்ட வார்த்தை சொல்லி... என்னெ ஏமாத்திறலாம்னு பாத்தா, போட்டு தள்ளிட்டேன்னு ரொம்ப சாதாரணமா சொன்னார் சார்.....'

கோபால் அடக்க முடியாத கோபத்துடன் 'இவன் சொல்றது அத்தனையும் பொய்...' என்றார் உரக்க. 

நீதிபதி ஆர்டர், ஆர்டர் என்று கூறிவிட்டு ராஜசேகரை கோபத்துடன் பார்த்தார். 'If you don't control your client I will be forced to evict him from the Court.' 

ராஜசேகர் உடனே எழுந்து பணிவுடன், 'இனிமே இந்த மாதிரி நடக்காது யுவர் ஆனர். I guarantee that.' என்று கூறிவிட்டு கோபாலைப் பார்த்து, 'ஏங்க, நீங்களே உங்க கேஸ ஸ்பாய்ல் பண்ணிருவீங்க போலருக்கே?' என்று கிசுகிசுத்தான். 'சாரி சார்.' என்றவாறு கோபால் தலைகுணிந்துக்கொள்ள பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவன் இவன் கோபத்த இங்கயும் காமிச்சிட்டான் போலருக்கே...... இனியாவது சைலன்ட்டா இருந்தா தப்பிச்சான்... என்றார் தனக்குள். நல்லவேளை சீனிய வரவேண்டாம்னு தடுத்துட்டோம். 

'That's all your honour' என்றவாறு வேணு ராஜசேகரை ஆணவத்துடன் பார்த்தார். எங்கிட்டயேவா? இப்ப என்ன பண்றேன்னு பாக்கறேன்.

நீதிபதி தன் முன்னால் இருந்த அன்றைய வழக்கு பட்டியல்களைப் பார்த்தார். அதிசயமாக அன்று இந்த வழக்குடன் சேர்த்து ஐந்து வழக்குகளே இருந்தன. அதில் மீதமிருந்த அனைத்துமே விசாரணை நிலையை அடையாத வழக்குகள். 

ஆகவே அதிகம் போனால் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடலாம் என்று நினைத்து, The court is adjourned for lunch.' என்றவாறு ராஜசேகரைப் பார்த்தார். 'You can cross examine the witness after the break.' 

நீதிபதி தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும் சாட்சி கூண்டில் நின்றிருந்த தனபாலை அவருடன் வந்திருந்த இரு காவலர்களும் அழைத்துச் சென்று வளாகத்தில் நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். 

ராஜசேகரும் வசந்தும் எழுந்து கோபாலை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்து வராந்தாவில் நின்றனர். கோபாலை அழைத்து வந்த காவலர்கள் தன் அருகில் வருவதைக் கவனித்த ராஜசேகர் வசந்தைப் பார்த்தான். 

அவன் உடனே அவர்களை நெருங்கி, 'வாங்க கேன்டீனுக்கு போலாம்..... அவர் எங்கயும் போயிர மாட்டார்.' என்றான்.

'சார்..... அவர விட்டுப்போட்டு வர முடியாதுங்களே.' என்றார் காவலர் ஒருவர். 

'கரெக்ட்.... அவரும் நம்ம கூடத்தான் வருவார்.... நாம முன்னால போவோம்... வாங்க.... அவருக்கு நானும் நம்ம பாஸும் காரன்டி என்றவாறு அவர்களை அழைத்துச் சென்றான்.

அவர்கள் செல்வதை பார்த்தவாறு நின்றிருந்த ராஜசேகர், 'என்ன சார் நீங்க கடைசி நேரத்துல காரியத்த கெடுத்துற பாத்திங்களே? ஜட்ஜ் கடுப்பாய்ட்டா நம்ம பெய்ல் பெட்டிஷன கூட கன்சிடர் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா?' என்றான்.

'பின்ன என்ன சார்? என்னமா டூப் விடறான்? நா அவன் கூட பேசவே இல்லீங்க..... அவனும் அவன் மூஞ்சியும்..... என் கூட சரிசமமா பேசற தகுதியிருக்கா சார் அவனுக்கு?' என்றார் கோபால் கோபத்துடன். 'சார் இன்னொரு விஷயம்.  லைஃப் சென்டன்ஸ்லருக்கறவங்களுக்குன்னு புழல்ல தனியா ஒரு பெரிய காம்ப்ளக்ஸே இருக்கு சார்... எங்கள மாதிரி விசாரணைக் கைதிங்களுக்குன்னும் ஒரு தனி பில்டிங் இருக்கு... அப்படி இருக்கறப்போ திடீர்னு ரெண்டு நாளைக்கி முன்னாடி இவனெ கொண்டு வந்து என்னோட ஸ்டே பண்ண வச்சிருக்காங்கன்னா இத யாரோ ப்ளான் பண்ணி செஞ்சிருக்காங்க சார்....'

ராஜசேகர் பதிலளிக்காமல் ஒரு சில நிமிடங்கள் மவுனமாக அவரை நீதிமன்ற வளாகத்திலிருந்த கேன்டீனை நோக்கி நடத்திச் சென்றான். 'நீங்க சொல்றது கரெக்ட்தான் சார்.... எல்லாத்துக்கும் யார் காரணம்னு தெரியும்..... நீங்க டென்ஷனாகாம இருங்க.... நா பாத்துக்கறேன். நீங்க அந்த கான்ஸ்டபிள்ஸ் கூட போயி சாப்டுங்க. நானும் வசந்தும் இந்த தனபால பத்தி கொஞ்சம் இன்வெஸ்ட்டிகேட் பண்றோம்.' 

'சரி சார்.' என்றவாறு கோபால் தங்கள் முன்னால் நடந்துக்கொண்டிருந்த காவலர்களை நெருங்கி வசந்தின் தோள் மீது கைவைத்தார். 'சார், ஒங்கள ஒங்க பாஸ் கூப்டறார்....'  

வசந்த் உடனே திரும்பி ராஜசேகரைப் பார்த்தான். 'என்ன பாஸ்?'

தொடரும்


09 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 72

பிபி வேணுவின் முகம் கோபத்தால் சிவக்க எழுந்து நின்றார். 'I submit that this witness be declared as hostile witness and to disregard all her statements.' என்றார் ஆவேசத்துடன். 

'Objection' என்றான் ராஜசேகர் எழுந்து.

எதற்கு என்பதுபோல் ராஜசேகரைப் பார்த்தார் நீதிபதி. 

'அரசு தரப்பு வழக்கறிஞர் இவரை தொடர்ந்து விசாரிக்க மறுக்குப் பட்சத்தில் என்னை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.'

அவன் கூறியதை ஒரு சில விநாடிகள் சிந்தித்த நீதிபதி 'permission granted.' என்றார். 

இதை எதிர்பாராத பிபி வேணு. 'I can't permit this your honour.' என்றார் கோபத்துடன். 

'You can only  object... I will decide whether or not to permit.' என்று அவரைப் பார்த்து பதிலளித்த நீதிபதி ராஜசேகரைப் பார்த்தார், நீங்கள் விசாரிக்கலாம் என்பதுபோல்.

நீதிபதியிடமிருந்து குட்டுப்பட்ட பிபி தன் இருக்கையில் அமர்ந்து தலை குணிந்து அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளை தன் பார்வையால் துளைத்தார். 

இதை கவனித்தும் கவனியாதவன்போல் சாட்சிக் கூண்டில் அமர்ந்திருந்த ரேணுகாவை அணுகிய ராஜசேகர். 'நீங்க அன்னைக்கி அந்த இடத்துல ஏழு மணிக்கி என் கட்சிக்காரர் கோபால பாக்கலைங்கறது நிஜமா?' என்றான்.

'ஆமா சார்.'

'அப்படியிருக்கறப்போ மிஸ்டர் கோபால் ஃபோன்ல கூப்ட்டு மிரட்டுனார்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் குடுத்தீங்களே, அது எதுக்கு?'

அவனுடைய கேள்வியை எதிர்பாராத ரேணுகா எப்படி பதிலளிப்பது என தெரியாமல் அமர்ந்திருக்க, 'சொல்லுங்க..... எதுக்கு அப்படி செஞ்சி அவரோட ஜாமீன கேன்சல் பண்ண வச்சீங்க?' என்றான் சற்று உரக்க.

' அன்னைக்கி கோபால் ஃபோன் பண்ணி நா ஏழு மணிக்கி அங்க வரவேயில்லையேம்மா என் மேல இருக்கற விரோதத்த மனசுல வச்சிக்கிட்டு எதுக்கும்மா இப்படி ஒரு பொய்ய சொன்னீங்கன்னு சாதாரணமாத்தான் கேட்டார். நா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு நின்னேன். அந்த சமயத்துல எங்க வீட்டுல இருந்த முருகேசந்தான் ரிசீவர புடுங்கி கால டிஸ்கனெக்ட் பண்ணிட்டு உடனே போலீஸுக்கு ஃபோன போட்டு கோபால் என்னெ கூப்ட்டு மிரட்டுனார்னு சொல்லுங்கன்னு த்ரெட்டன் பண்ணான். அதான் வேற வழியில்லாம.........'

மீண்டும் நீதிமன்ற அறையில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அட! இவ்வளவு நடந்துருக்கா என்று மலைத்துப் போய் அமர்ந்திருந்தார் மகாதேவன். தேவையில்லாம நாம கூட அவன் மேல சந்தேகப்பட்டோமே.

அதுவரை தலை குணிந்தவாறு அமர்ந்திருந்த கோபால் நிமிர்ந்து கூண்டில் நின்றிருந்த ரேணுகாவைப் பார்த்தார். அவரையுமறியாமல் ரேணுகாவிற்காக பரிதாபப்பட்டார்..... இந்த பொம்பள மேல கோவப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை.... கொலை செஞ்சிருவேன்னு மிரட்டறப்போ நாமளா இருந்தாலும் இப்படித்தான் செஞசிருப்போமோ என்னவோ!

ராஜசேகர் நீதிபதியைப் பார்த்தான். 'In that case I would like to request that  my client be released on bail your honour.' 

'You may file a fresh bail petition for consideration.' என்றார் நீதிபதி.

ராஜசேகர் வசந்தை பார்க்க அவன் உடனே தயாராக வைத்திருந்த ஜாமீன் மனுவை அவனிடம் நீட்டினான். ராஜசேகர் அதை நீதிபதியின் இருக்கைக்கு கீழ் அமர்ந்திருந்த நீதிமன்ற அலுவலரிடம் சமர்ப்பித்தான். அவர் அதில் நீதிமன்ற ரப்பர் ஸ்டாம்பை அழுத்தி எழுந்து நீதிபதியிடம் நீட்டினார். 

அதை மேலோட்டமாக வாசித்துப் பார்த்த நீதிபதி அதை தன் முன்னால் வைத்துவிட்டு, 'You have any more questions to the witness?' என்றார்.

'நோ யுவர் ஆனர்.' என்ற ராஜசேகர் தன் இருக்கைக்கு திரும்பினான். 

அறையின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவன் இந்தாள் பயங்கரமான ஆளாருப்பார் போலருக்கு என்று தனக்குள் வியந்தார். இப்படியொரு சிச்சுவேஷன் இன்னைக்கி வரும்னு இவருக்கு எப்படி தெரிஞ்சிது? பெய்ல் பெட்டிஷன உடனே எடுத்து நீட்றார்? கோபால் வெளியில வந்துட்டா சீனி உண்மையிலேயே சந்தோஷப்படுவான். 

நீதிபதி பிபி வேணுவை பார்த்தார். 'We have time upto lunch. You want to re-examine this witness?'

'இல்லை யுவர் ஆனர்.' என்று பதிலளித்துவிட்டு நீதிபதியின் உத்தரவை அடுத்து சாட்சிக் கூண்டிலிருந்து இறங்கிச் செல்லும் ரேணுகாவை முறைத்தவாறு 'என்னுடைய அடுத்த சாட்சியாக PW2 குமார் என்பவரை அழைக்கிறேன்.' என்றார் விறைப்புடன்.

நீதிமன்ற சிப்பந்தி குமாரின் பெயரை உரக்க அழைக்க அதுவரை அடுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த குமார் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தலை குணிந்தவாறே சாட்சிக் கூண்டில் ஏறி நின்று நீதிபதியைப் பார்த்து கும்பிட்டான். 

'நீங்கதான் மெட்ரொப்போலீட்டன் மஜிஸ்டிரேட் முன்னால வாக்குமூலம் குடுத்த விட்னஸா?' என்று நீதிபதி கேட்க இதை எதிர்பாராத வேணு அதிர்ச்சியுடன் குமாரையும் நீதிபதியையும் மாறி மாறி பார்த்தார். 'I am unable to understand your query your honour!' என்றார்.

ராஜசேகர் வசந்தை திரும்பி பார்க்க அவன் 'சொந்த செலவுல சூன்யம் வச்சா மாதிரி முழிக்கறத பாருங்க.....' என்று கிசுகிசுத்தான். 'டேய் சும்மா இரு... ஜோக்கடிக்க இதுவா நேரம்.' என்று பதிலுக்கு கிசுகிசுத்தான் ராஜசேகர். 

'என்ன சார் ஸ்டேட்மென்ட் குடுத்தான்?' என்றார் கோபால். ராஜசேகர் பதிலளிக்காமல் கைகளை பற்றி அழுத்திவிட்டு அவரைப் பார்த்து பேசாம கவனிங்க என்று சாடை காட்டினான். 

'This witness had a few days back, surrendered to the 12th Metropolitan Judicial Magistrate and made a sworn statement..... It was received by me only yesterday....'

'Can I peruse it your honour?' என்றார் வேணு.

'NO...' என்றார் நீதிபதி. 'You can proceed with your examination.. I will decide whether or not to give credence to his sworn statement after that.'

நீதிபதி இப்படித்தான் முடிவெடுப்பார் என்று ராஜசேகர் எதிர்பார்த்திருந்ததால் சலனமில்லாமல் அமர்ந்திருந்தான். நடுவர் முன்பு அளித்திருந்த வாக்குமூலத்தை மீண்டும் அப்படியே சாட்சிக் கூண்டிலிருந்து குமார் சொன்னால் மட்டுமே அவனுடைய முந்தைய வாக்குமூலம் எவருடைய தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்ளப்படும் என்பது அவனுடைய அனுபவத்தில் தெரிந்திருந்தது.

நீதிபதியின் கையிலுள்ள வாக்குமூலத்தில் என்ன இருக்கக் கூடும் என்று எண்ணியவாறே சாட்சிக் கூண்டில் நின்றிருந்த குமாரை அணுகி, 'உங்க பேர், விலாசம் எல்லாத்தையும் சொல்லுங்க.' என்று தன் விசாரணையை ஆரம்பித்தார் பிபி.

குமார் குரல் நடுங்க வேணுவின் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அவருடைய அடுத்த கேள்விக்கு காத்திருந்தான். போலீசாரின் பாதுகாப்பில் இருந்தபோது குளித்து, சவரம் செய்து உடை மாற்றியிருந்ததால் சற்று தெம்புடன் காணப்பட்டதை வசந்தும் ராஜசேகரும் கவனித்தனர்.

'என்ன வேல பாக்கறீங்க?'

'கார்ப்பரேஷன் பார்க்கிங்லய்யா.'

'எங்க?'

குமார் அவன் வேலை பார்த்த விலாசத்தை தெரிவித்தான்.

'அந்த எடத்துல எவ்வளவு நாளா வேல பாக்கறீங்க?'

'ரெண்டு வருசமா.'

வேணு வியப்புடன் அவனைப் பார்த்தார். 'அதே எடத்துலயா?'

'ஆமாய்யா.... அந்த எடத்த கான்ட்ராக்ட் எடுத்தவர் எங்க மாமாதான்யா..... அதனாலதான்.....'

'சரி.... அதோ ஒக்காந்துருக்கறாரே....... அவர ஒங்களுக்கு தெரியுமா?' என்றவாறு வேணு கோபாலை சுட்டிக்காட்டினார். இதை அப்ஜெக்ட் செய்தால் என்ன என்று நினைத்த ராஜசேகர் பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தான். 

'நல்லா தெரியுங்க.'

'எப்படின்னு சொல்றீங்களா?'

'சொல்றேங்க.... இவர் அந்த பார்க்கிங்லதான் கார பார்க் பண்ணுவாரு.... சுமாரா போன ரெண்டு வருசம் .'

'டெய்லி வருவாரா?'

'இல்லைங்கய்யா..... அப்பப்போ வருவாரு...'

'எவ்வளவு நாளைக்கு ஒருதரம்... சுமாரா சொல்லுங்க போதும்.'

'வாரத்துக்கு ஒருதரம் இல்லன்னா ரெண்டு தரம் வருவாருங்க.'

'கடைசியா என்னைக்கி அவர அங்க பாத்தீங்க.....?'

குமார் சொன்னான். 

'அதாவது போலீஸ் உங்கக்கிட்ட விசாரணை பண்ணதுக்கு முந்தின நாள். அப்படித்தான?'

He is leading the witness என்று அப்ஜெக்ட் செய்யலாமா என்று நினைத்துவிட்டு பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தான் ராஜசேகர். வேணு தன்னை உசுப்பேத்தவே கேள்விகளை இப்படி தொடுக்கிறார் என்பது அவனுக்கு தெரிந்தது. நாம் அந்த வலையில் விழுந்து அதனால் ஏற்கனவே அச்சத்துடன் சாட்சி கூண்டில் நிற்கும் குமாரை கலங்கட்டிக்க வேண்டாம் என்று நினைத்தான். 

'ஆமாங்கய்யா.'

'போலீஸ் உங்கக்கிட்ட வந்து என்ன கேட்டாங்க?'

'கோபால்ங்கறவரு நேத்து சாயந்தரம் இங்க வந்து வண்டிய பார்க்க பண்ணாரான்னு கேட்டாங்க..... நா ஆமான்னு சொன்னேன். அப்புறம் எத்தன மணிக்கி வந்தார் எத்தன மணிக்கி போனார்னு கேட்டாங்க. சொன்னேன். அப்புறம் இதே மாதிரி கோர்ட்ல வந்து சொல்வியான்னு கேட்டாங்க. சொல்வேன் சார்னு சொன்னேன்.. சரின்னுட்டு போய்ட்டாங்க.'

அவனுடைய விளக்கமான பதிலில் திருப்தியடைந்தவர்போல் தோன்றிய வேணு, 'அவர் அன்னைக்கி வண்டிய பார்க் பண்ணிட்டு எங்க போனார்னு பாத்தீங்களா?'

'எங்க பார்க்கிங் இடத்துலருந்து நேர் எதுத்தாப்பல இருந்த அக்கா வீட்டுக்குத்தான்யா போவார். நிறையே நேரம் பாத்துருக்கேன்... அன்னைக்கிம் அங்கதான் போயிருக்கணும்... ஆனா அன்னைக்கி நா அத பாக்கல.'

'அக்காவா? உங்க கூட பொறந்தவங்களா?'

'இல்லீங்க. ஆனா அது மாதிரிதான். அவங்க பேர் மாதவிங்க... ரொம்ப நல்ல மாதிரி.... நா அந்த ஏரியாவுல வேலைக்கி வந்த அதே டைம்லதான் அவங்களும் அங்க குடிவந்தாங்க. அதுலருந்தே அவங்கள எனக்கு தெரியும்.'

'சரி.. அவங்கள பத்தி சொன்னது போதும். மிஸ்டர் கோபால் திரும்பி வந்து கார எடுத்தப்போ என்ன நடந்துது?'

'அவர் திரும்பி வந்தப்போ சாயந்தரம் ஆறு மணி இருக்கும்யா..... நாலே முக்கால் மணி போல வந்தவர்ங்கறதால ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிரிச்சி.... எக்ஸ்ட்ரா அஞ்சி ரூபா தாங்கன்னேன்.... எதுக்குய்யான்னு எரிஞ்சி விழுந்தார்.....'

'சரி அப்புறம் என்ன நடந்துச்சி.....?'

'அவர் எப்பவுமே அப்படித்தான்.... காசு குடுக்கறதுன்னால புடிக்காது..'

அவனுடைய பதிலில் திருப்தியடையாத வேணு, 'நா அத கேக்கலை.... அவர் நீங்க சொன்ன அந்த வீட்லருந்து வந்தத பாத்திங்களான்னு கேட்டேன்.'

'இல்லீங்க. ஆனா இவர் காசு குடுக்க தகராறு பண்ணதும் நா திரும்பி அந்தக்கா வீட்ட பாத்தேன். அந்த அக்கா வாசல்ல நின்னுக்கிட்டிருந்தாங்க.....அவங்க சிரிச்சிக்கிட்டே அவர் போவட்டும் நா அந்த காச தரேன்னுட்டு சைகை காட்னாங்க.... அதுக்கப்புறம் சாரே பர்ஸ தொறந்து காச எடுத்துக் குடுத்துட்டு போய்ட்டாருங்க.........'

'அப்புறம்?'

'சார் போனதும் நா என் வேலைய பாக்க போய்ட்டேங்க.'

'அன்னைக்கி மிஸ்டர் கோபால் மறுபடியும் அங்க வந்தாரா?'

சிறிது நேரம் யோசித்த குமார் நீதிபதியை பார்த்து, ''இல்லீங்க. அவர அதுக்கப்புறம் இன்னைக்கித்தான் பாக்கறேன் எஜமான்.' என்றான்.

வேணு அதிர்ச்சியுடன் திரும்பி ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். இருய்யா ஒன்னெ வச்சிக்கறேன் என்பதுபோல் இருந்தது அந்த பார்வை. அவருடைய பார்வையின் தீவிரத்தை உணர்ந்த பெருமாள் தலையை குணிந்துக்கொள்ள வேணு திரும்பி தன் இருக்கையை அடைந்து முன்பு போலவே குமார் போலீசுக்கு அளித்த வாக்குமூலத்தின் நகலை தயாராக எடுத்து வைத்திருந்த உதவியாளரின் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு குமாரை நெருங்கி அவன் ஆய்வாளர் பெருமாள் முன்பு ஸ்டேஷனில் வைத்து கூறியதை வாசித்தார். 

'இத நீங்க சொன்னதுதான?' என்றார் கோபத்துடன். 

'அது இன்ஸ்பெக்டர் மிரட்டி எழுதி வாங்கினதுய்யா.' என்று நடுங்கும் குரலில் பதிலளித்த குமார் நீதிபதியை பார்த்தான். 'ஐயா அன்னைக்கி நடந்தது முழுசையும் சொல்லட்டுங்களாய்யா?'

ஒரு சில விநாடிகள் பதிலளிக்காமல் சாட்சி கூண்டில் நின்ற குமாரையே பார்த்தவாறு அமர்ந்திருந்த நீதிபதி, 'சரி சொல்லு.' என்றார். 'ஆனா உண்மையத்தான் சொல்லணும்.....'

'சரிங்கைய்யா' என்று பதிலளித்த குமார் தொடர்ந்தான். 'அன்னைக்கி சாயந்தரம் கோபால் சார் அங்கருந்து போனதும் ஒரு அரை மணி நேரம் போல இருக்கும் ராமராஜன் சார்.......'

'யார்யா அந்த ராமராஜன்?' என்று எரிந்து விழுந்தார் வேணு. 'எதுக்கு இந்த கேஸுக்கு சம்மந்தமில்லாத பேரையெல்லாம் இங்க வந்து சொல்ற? இப்படி சொல்லணும்னு யாராச்சும் ஒன்னெ மிரட்டுனாங்களா?'

தொடரும்..





08 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 71

அவனுடைய கேள்வியின் நோக்கம் புரியாமல் விழித்தார் கோபால், 'ஆமா சார்..... ரெண்டு நாளைக்கு முன்னாலதான் கூட்டிக்கிட்டு வந்து விட்டாங்க..... இன்னைக்கி காலையிலயே வந்து கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க.... எதுக்கு கேக்கறீங்க?'

'சொல்றேன்...' என்றான் ராஜசேகர். 'அவன் உங்கக்கிட்ட வந்து ஏதாச்சும் பேச்சு குடுத்தானா?'

'ஆமா சார்.. ஆனா நா பேசல..  பாத்தாலே ரவுடி மாதிரி இருந்தான்.... அவன் கூட நமக்கென்ன பேச்சுன்னு ஒதுங்கியே இருந்தேன்..... எப்படா போவான்னு இருந்துது..... எப்பப் பாத்தாலும் பீடிய புடிச்சி.... செல் முழுசும் ஒரே நாத்தம் சார்.. தாங்க முடியல....'

'அவன் இன்னைக்கி உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வரானாம் சார்.... அதனாலதான் கேட்டேன். நீங்க இந்த கேஸ பத்தி அவன் கிட்ட ஒன்னும் சொல்லலையே?'

கோபால் அதிர்ச்சியுடன் பார்த்தார். 'என்ன சார் சொல்றீங்க? அவன் விட்னஸ் குடுக்க வரானா? எதுக்கு?'

'அவன் சாட்சி கூண்டுல ஏறுனாத்தான் தெரியும்..... என்ன சொல்ல போறான்னு......' என்றான் ராஜசேகர். 'அவன் என்ன சொன்னாலும் அத நா பாத்துக்கறேன்... நீங்க மட்டும் டென்ஷனாக இருந்தா சரி..... அவன் என்ன சொன்னாலும் நீங்க எமோஷனல் ஆகக் கூடாது... சரீங்களா?'

பதிலளிக்காமல் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்த கோபால் நீதிமன்ற அறை வாசலில் ராகவனும் அவருடைய மனைவியும் வந்து காத்திருந்ததை கவனித்தான். அவனுடைய பார்வையை தொடர்ந்து வாசல் பக்கம் திரும்பிய ராஜசேகரும் அவர்களை பார்த்தான். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பிபி வேணு அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்ததையும் அவர்களுக்கு பின்னால் நீதிமன்ற வளாகத்தில் வந்து நின்ற காவல்துறை வாகனம் ஒன்றிலிருந்து இறங்கிய இரு காவலர்கள் குமாரை அழைத்துவருவதையும் கவனித்தான். அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத நிம்மதி பிறந்தது. இவங்க ரெண்டு பேரையும விசாரிச்சி முடியறதுக்குள்ள அட்ஜேர்ன் பண்ணாம இருந்தா சரி...... இந்த ரெண்டு பேரையும் விசாரிச்சி முடிக்கறதுக்கு முன்னால அந்த தனபால விசாரிக்க நாம அலவ் பண்ணக் கூடாது.....

கோபாலுடைய இடது பக்கத்தில் அமர்ந்திருந்த வசந்த் எழுந்து ராஜசேகர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தான். 'PW1ம் 2ம் வந்தாச்சி பாஸ்.... இன்னைக்கி தீபாவளிதான்.' என்று கிசுகிசுத்தான். 

'சரிடா... ஆனா அந்த தனபால் எங்க காணம்?'

'அவனெ இப்பவே காமிச்சிட்டா நம்மள ஷாக்காக்க முடியாத பாஸ்? அத தன்னோட ஸ்டைல்ல பிபி பண்ணுவார் பாருங்க.'

ராஜசேகர் பதிலளிக்காமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தான். முந்தைய தினம் இரவு தன்ராஜ் தனக்கு அனுப்பி வைத்திருந்த வழக்கு விவரங்களைப் பற்றி வசந்திடம் கூறலாமா என்று யோசித்தான்... பிறகு தன்ராஜ் 'இது நமக்குள்ளவே இருக்கட்டும்' என்று கூறியது நினைவுக்கு வர பிறகு கூறிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். 

அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி அறைக்குள் நுழைய அனைவரும் எழுந்து அவர் அமர்ந்ததும் மீண்டும் அமர்ந்தனர். அதுவரை வாசலில் நின்றிருந்த பிபி வேண்டுமென்றே நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் அறையிலுள்ள அனைவரும் தன்னை காணவேண்டுமென்ற எண்ணத்துடன் அறைக்குள் நுழைந்து நிதானமாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து இடமும் வலமும் அமர்ந்திருந்த தன் உதவியாளர்களுடன் ஏதோ கிசுகிசுத்துவிட்டு எழுந்து நின்று நீதிபதியைப் பார்த்தார். 

அவருடைய பார்வையின் நோக்கத்தை உணர்ந்த நீதிபதி, 'You may present your next witness.'என்றார்.

'என்னுடைய அடுத்த சாட்சியாக........' என்று நிறுத்திய பிபி வேணு திரும்பி நீதிமன்ற அறையின் வாயிலை பார்த்தார். அதற்கென்றே காத்திருந்ததுபோல் அவருடைய உதவியாளர்களுள் ஒருவர் வராந்தாவில் நின்றிருந்த ஒருவரை அழைத்துவந்தார். அவருக்கு பின்னால் இரு சிறைக் காவலர்களும் அறைக்குள் நுழைந்து அருகில் நின்றனர். 'மிஸ்டர் தனபாலை விசாரிக்க விரும்புகிறேன்.' என்று பிபி அறிவிக்கவும் நீதிபதி குழப்பத்துடன் தன் முன்னால் இருந்த அரசுதரப்பு சாட்சிகளின் பட்டியலைப் பார்ப்பதை கவனித்த ராஜசேகர் உடனே எழுந்து 'அப்ஜெக்‌ஷன்' என்றான் உரத்த குரலில்.

அவனுடைய குரலைக் கேட்டு நிமிர்ந்த நீதிபதி இருவரையும் தன் இருக்கைக்கு அருகில் வருமாறு சைகை செய்தார். 

இருவரும் அருகில் வந்ததும் நீதிபதி எரிச்சலுடன், 'What is this?' என்றார் பிபி வேணுவைப் பார்த்து, 'Who is this person? His name is not included in your witnesses list!' என்றார்.

''மன்னிக்கவும் யுவர் ஆனர்.' என்றார் வேணு. ஆனால் அவருடைய குரலில் எவ்வித மன்னிப்பும் தொனிக்காததை நீதிபதி கவனித்தாரோ இல்லையோ ராஜசேகர் கவனித்தான். 'இவர் அக்யூஸ்டோட செல்மேட். இவர்கிட்ட அக்யூஸ்ட் குற்றத்தை ஒப்புக்கொண்ட விஷயம் நேற்று இரவுதான் எனக்கு தெரிந்தது. ஆகவே இவரை முதலில் விசாரிக்க அனுமதி கோருகிறேன்.'

'I object your honour' என்றான் ராஜசேகர் சிறிதும் தாமதியாமல். 'முதலில் அரசு பட்டியலிட்ட சாட்சிகளை விசாரித்துவிட்டு பிறகு யாரை வேண்டுமானாலும் விசாரித்துக்கொள்ளட்டும்... எனக்கு ஆட்சேபனை இல்லை.'

நீதிபதி இருவரையும் பார்த்து 'நீங்கள் உங்கள் இருக்கைக்கு செல்லலாம்' என்றார்.

பிபியும் ராஜசேகரும் தங்கள் இருக்கைக்கு திரும்பியதும், 'permission denied' என்றார். 'You can proceed with the examination of the witnesses already listed in the charge sheet. Your request for examination of any additional witnessess will be considered on submission of a separate petition.' 

சுருதியிறங்கிப் போன பிபி வேணு திரும்பி ராஜசேகரை முறைத்துவிட்டு 'In that case I would like to call PW1' என்றார் கோபத்துடன். 

'Proceed' என்றார் நீதிபதி சுருக்கமாக.

அரசு தரப்பு சாட்சிகள் பட்டியலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்த ராகவனின் மனைவி தயக்கத்துடன் சாட்சி கூண்டில் ஏறி நின்றார். பயத்தில் அவருடைய கால்கள் நடுங்குவதை கண்ட நீதிபதி, 'உங்களுக்கு நிக்கறதுக்கு கஷ்டமாருக்காம்மா?' என்றார் மிருதுவாக. நீதிமன்ற அறையிலிருந்து வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அனைவருமே தன்னை நோக்கி பார்ப்பதை கவனித்த ராகவனின் மனைவிக்கு வெட்கம் மேலிட குனிந்தவாறே அவர் 'ஒக்காந்தா சவுகரியமாருக்கும்.' என்றார் மெல்லிய குரலில்.

நீதிபதி அருகில் நின்றிருந்த சிப்பந்தியைப் பார்த்து சைகை செய்ய உடனே கூண்டில் நின்றவருக்கு ஒரு இருக்கை அளிக்கப்பட்டது.

அவர் இருக்கையில் அமரும் வரையிலும் கூட காத்திருக்க விரும்பாத பிபி வேணு கூண்டை நெருங்கி, 'முதல்ல உங்க பேர சொல்லுங்க.' என்றார் சற்று விரைப்புடன். தான் விரும்பிய சாட்சியை விசாரிக்க நீதிபதியின் அனுமதி கிடைக்காததால் ஏற்பட்ட வெறுப்பு அவருடைய குரலில் தெரிந்ததை ராஜசேகர் கவனித்தான். இன்றைய விசாரணையில் தீப்பொறி பறக்கப் போவது நிச்சயம் என்று நினைத்தான்.

'ரேணுகா ராகவன்.' அவருடைய குரல் மிகவும் மெலிந்திருந்ததால் 'கொஞ்சம் சத்தமா பேசுங்க' என்றார் நீதிபதி. 'நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் நா கேட்டு ரெக்கார்ட் பண்ணணும்மா.....அதனால இன்னும் கொஞ்சம் உரக்க பேசுங்க.'

'சரிங்க சார்.' என்றார் ரேணுகா.

'எங்க குடியிருக்கீங்க?' என்றார் வேணு.

ரேணுகா தன்னுடைய வீட்டு விலாசத்தை கூறினார்.

அதை தொடர்ந்து மாதவியைப் பற்றியும் அவர் எப்போது அங்கு குடி வந்தார் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்து முடிக்க ரேணுகாவின் குரல் மெள்ள மெள்ள உயர்ந்து தெளிவாக கேட்டது. 

'மாதவி மர்டர் ஆன அன்னைக்கி சாயந்தரம் சுமார் ஏழு மணிக்கி நீங்க எங்க இருந்தீங்க?'

'நானும் என் கணவரும் பக்கத்துல இருக்கற கடைக்கி போய்ட்டு வந்துக்கிட்டிருந்தோம்....'

'அப்ப என்ன நடந்துது?'

'வாசல் கேட்ட தொறக்கறப்போ பக்கத்து வீட்டுல.....'

'பக்கத்து வீட்டுலன்னா கொலையுண்ட மாதவி வீடா?'

இதை 'He is leading the witness' என்று அப்ஜெக்ட் செய்யலாமா என்று யோசித்த ராஜசேகர் மறு நொடியே வேண்டாம் என்று தீர்மானித்தான்.

'ஆமா...'

'சரி, மேல சொல்லுங்க.'

'யாரோ நின்னுக்கிட்டிருந்தா மாதிரி தெரிஞ்சிது....'

அவருடைய பதிலில் திருப்தியடையாத வேணு சற்று எரிச்சலுடன் கேட்டார். 'நின்னுக்கிட்டிருந்தாரா இல்ல வீட்டுக்குள்ளருந்து வெளியில வந்தாரா, தெளிவா சொல்லுங்க.'

இம்முறை ராஜசேகர் சட்டென்று எழுந்து, 'அப்ஜெக்‌ஷன்' என்றான். 'He is leading the witness.'

'Sustained' என்றார் நீதிபதி.

வேணு திரும்பி ராஜசேகரை முறைத்துவிட்டு மீண்டும் சாட்சியின் பக்கம் திரும்பினார். இந்த கேள்விய எப்படி வேறு விதமாய் கேட்பது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ரேணுகா 'அவர் வீட்டுக்குள்ளருந்து வந்தா மாதிரித்தான் தெரிஞ்சது.....' என்றார் தயக்கத்துடன். 

பாத்தியா உன் அப்ஜெக்‌ஷன் ஒன்னும் பலிக்கல என்பதுபோல் ராஜசேகரை பார்த்த வேணு, 'அங்க நீங்க பாத்த ஆள் இந்த கோர்ட்ல இருக்காரா?'

ரேணுகா திரும்பி கோபாலையும் அவருக்கருகில் அமர்ந்திருந்த ராஜசேகரையும் பார்த்துவிட்டு, 'இல்லைங்க' என்றார் சற்று உரக்க. 

இதை சற்றும் எதிர்பாராத வேணு உடனே திரும்பி அறையின் நடுவில் இருந்த மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். அவர் தலையை குனிந்து தன் முன் இருந்த கோப்பை பார்வையிடுவதுபோல் நடித்தார். 

ராஜசேகர் தன் அருகில் அமர்ந்திருந்த கோபாலை பார்த்தான்.  அவருடைய முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா அல்லது மகிழ்ச்சியா என்பது தெரியாமால்.......'முகத்துல எந்த ரியாக்‌ஷனையும் காட்டாம இருங்க..' என்று கிசுகிசுத்தான். 'இல்லன்னா ஜட்ஜுக்கு சந்தேகம் வந்துரும்.'

'சரி சார்.' என்று பதிலளித்த கோபால் தலையை குணிந்துக்கொண்டார். 

வேணு உடனே அங்கிருந்து நகர்ந்து தன் இருக்கைக்கு சென்று உதவியாளர் ஒருவர் தயாராக எடுத்து வைத்திருந்த காகிதம் ஒன்றை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு சாட்சி கூண்டை நெருங்கினார். 'இது நீங்க போலீசுக்கு குடுத்த ஸ்டேட்மென்ட். வாசிக்கவா?' என்றார் பொறுமையுடன்.

'அது ஒருத்தரோட நிர்பந்தத்தால சொன்னதுங்க.' என்றார் ரேணுகா தெளிவாக. 'அது உண்மை இல்லை.'

கோர்ட்டில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த சலசலப்பு அடங்க சிறிது நேரம் எடுத்தது. அது அடங்கும் வரையிலும் காத்திருந்த நீதிபதி சாட்சி கூண்டில் நின்ற ரேணுகாவை பார்த்தார். 'என்னம்மா சொல்றீங்க?'

'சார்..... அவர் பேர் முருகேசன்..... அவரத்தான் நானும் என் ஹஸ்பென்டும் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ளருந்து வர்றத பாத்தோம்..... அவர் கோபாலத்தான் அங்க பாத்தோம்னு சொல்லச் சொல்லி இத்தனை நாளும் மிரட்டிக்கிட்டிருந்தார்.'

முருகேசனா இப்படி பண்ணான் என்று நினைத்தார் கோபால். அவனுக்கு மாதவி தன்னை திருமணம் செய்துக்கொள்வதில் துளியும் விருப்பமில்லை என்பது அவருக்கு தெரியும். அவரிடம் இதைப்பற்றி பல முறை பேசியதுடன் வேண்டாம் என்று எச்சரித்தும் இருந்தான். ஆனால் அதற்காக அவளை கொலை செய்யும் அளவுக்கு அவன் துணிவான் என்று நினைக்கவில்லை. 

மீண்டும் பார்வையாளர்களிடமிருந்து சலசலப்பு எழவே நீதிபதி எரிச்சலுடன் தன் சுத்தியலை தட்டினார்.

உடனே வேணு கோபத்துடன் இரைந்தார். 'நீங்க இப்ப சொல்றதுதான் சுத்தப் பொய்..... ஒன்னு நீங்க மிஸ்டர் கோபாலுக்கு பயந்துக்கிட்டு இத சொல்லணும். இல்லன்னா அவர்கிட்ட பணத்த வாங்கிக்கிட்டு இப்படி சொல்றீங்கன்னு நா சொல்றேன்... சரிதானே?'

அவருடைய குற்றச்சாட்டை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்கள் கலங்க நீதிபதியை நிமிர்ந்து பார்த்தார் ரேணுகா: 'சார் நா சொல்றது நிஜம். ஒரு பொய்ய சொல்லிட்டு இத்தன நாளும் நானும் என் வீட்டுக்காரரும் அந்த முருகேசன்கிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுட்டோம்.'

'இத முன்னாலயே போலீஸ்கிட்ட சொல்லிற வேண்டியதுதான? ஏன் சொல்லல?' என்றார் வேணு மீண்டும் கோபத்துடன்.

ரேணுகா வேணுவின் பார்வையை தவிர்த்து நீதிபதியைப் பார்த்தார். 'சார்.... போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் எங்க வீட்டுக்கு வந்துருந்தப்போ கூட நானும் என் வீட்டுக்காரரும் இந்த விஷயத்த சொன்னோம். ஆனா இந்த மாதிரி பொய்யெல்லாம் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க, நாங்க சொல்லிக் குடுத்தா மாதிரி சொல்லலன்னா உங்களுக்குத்தான் டேஞ்சர்னு சொல்லி மிரட்டிட்டு போனாருங்க.'

நீதிபதி உடனே திரும்பி அறையில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். ரேணுகாவின் பகிரங்க குற்றச்சாட்டை எதிர்பாராத பெருமாள் சங்கடத்துடன் தலையை குணிந்து கொண்டார். பிபி வேணுவின் முகம் கோபத்தால் சிவக்க 'I submit that this witness be declared hostile and request that all her statements disregarded.' என்றார் ஆவேசத்துடன். 

'Objection' என்றான் ராஜசேகர் எழுந்து.

தொடரும்...