01 ஜூன் 2007

அகாலமாய் இன்னும் ஒரு மரணம்...


மரணம் ஒரு கள்வனைப் போல் வரும்...

சொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும் இன்றி....

எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை...!

ஆம்!

அப்படித்தான் வந்தது... இன்னும் ஒரு மரணம்... அகாலமாய்...

மிக இளைய வயதில்.... குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் எதிர்பார்த்திராத நேரத்தில்...

தலைவலி, காய்ச்சல் என்று ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத....

அலுவலகமே தன்னுடைய வாழ்க்கை என்றிருந்த...

ஐம்பத்து மூன்று வயது மட்டுமே நிறைந்த...

என் அருமை நண்பர்களுள் ஒருவரின் அகால மரணம்...

கடந்த வாரத்தில் ஒருநாள்....

சென்னையிலிருந்த எங்களுடைய கிளைகளில் ஒன்று பரபரப்பாக இருந்த நேரம்...

'சார் கொஞ்சம் கிட்டினஸ் மாதிரி இருக்கு... டைனிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்...'

'தாராளமா தர்மலிங்கம்... போங்க.. ஒங்க சீட்ட நா பாத்துக்கறேன்...'

சென்று படுத்தவர் அடுத்த சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில்...

இடையில் சென்று பார்த்து வருகிறார் நண்பர்... ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எப்படி எழுப்புவது என்ற தயக்கம்... திரும்பி வந்து தன்னுடைய அலுவலில் மூழ்கிப் போகிறார்...

பகல் உணவு இடைவேளை...

மீண்டும் சென்று பார்க்கிறார்...

அப்போதும் அதே நிலை....

முகம் லேசாக வெளிறிய தோற்றம்... கலக்கத்துடன் தன்னுடைய மேலாளரை துணைக்கு அழைக்கிறார்...

அவருடன் கிளையிலிருந்த பலரும் விரைகின்றனர்....

ஒருவர் தட்டியெழுப்ப முயல்கிறார்... பதிலில்லை.... பதற்றத்துடன் மேலாளர்.... 'மூச்சு விடறா மாதிரி இருக்கே... மயக்கமாருக்கும்... கொஞ்சம் தன்னி தெளிப்பமா?' என்கிறார்...

ஊஹூம்... பலனில்லை... அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்...

'சாரிங்க... சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால அவருக்கு ப்ரெய்ன் ஹெமரேஜ் ஆயிருக்கு.... ப்ர்ஷர் அளவுக்கு மீறி ஆச்சினாத்தான் இது பாசிபிள்... அவர் பி.பிய கண்ட்ரோல் பண்ணாம விட்டுருப்பார்.... Let us try... ஆனா இப்ப எதுவும் சொல்ல முடியாது...'

அவரை உறங்கச்சொல்லி அனுப்பியவர் கலங்கிப் போகிறார்... நானே இவரோட மரணத்துக்கு காரணமா போய்ட்டனோ...

சேச்சே... ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்... உடனிருந்தவர்கள் தேற்றுகின்றனர்...

மனைவி, மகன் மற்றும் மகள் என்ற சிறிய குடும்பம்.... மகன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்து சில மாதங்கள்... மகள், முதல் வருடம் எம்.பி.பி.எஸ்சில்..

ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை... இறுதி மூச்சு....

எப்போதும் புன்னகையுடன் தன்னுடைய பிரச்சினைகளை திரை போட்டு மறைக்கும் பழக்கமுள்ளவர்... அடிக்கடி தலைவலித்திருக்கிறது... 'டாக்டர போய் பாக்கலாம்...' என்று அறிவுறுத்தியிருக்கின்றனர் நண்பர்களும் குடும்பத்தினரும்....

'அதெல்லாம் ஒன்னுமில்ல.. ரெண்டு மாத்திர போட்டா சரியாயிரும்...'

'போன ஒரு வருசமா எப்படியும் ப்ரஷர் 180 வரைக்கும் போயிருக்கும்... அவர் கவனிச்சிருக்க மாட்டார்...' என்றனர் மருத்துவர்கள்...

நம்மில் பலரும் இந்த ரகம்தான்...

தலைவலி என்றால்.... மாத்திரை போட்டுக்கொள்வது... அதைத் தவிர வேறொரு நோயும் இருக்க வாய்ப்பில்லை என்கிற மெத்தனம்..

சிலருக்கு சோம்பல் என்றால் வேறு சிலருக்கு பணத்திற்கு எங்கே போவது என்கிற கவலை... சின்னதையெல்லாம் பெரிசாக்கி காச கறந்துருவாங்க என்கிற அர்த்தமில்லாத அச்சம்...

என்னுடைய நண்பர் ஒரு வங்கி அதிகாரி... சுமாருக்கும் சற்றே அதிகமான பொருளாதார வசதியுள்ளவர்.... 'ஆனா அப்பாவோட ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்... எங்க யாருக்கும் சரியா தெரியாது...'

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மரித்த என்னுடைய மற்றொரு நண்பரின் குடும்பத்தினர் கூறிய அதே புகார்... அதே ஆதங்கம்...

இதிலும் நம்மில் பலர் இவரைப் போன்றுதான்.. என்னையும் சேர்த்து...

என்னைத் தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாது என்கிற எண்ணம்... கர்வம் என்றும் சொல்லலாம்..

'என் வய்ஃபுக்கு ஒன்னும் தெரியாது சார்... எவ்வளவு வந்தாலும் செலவழிச்சிருவா...அவளுக்கு தெரியாம சேத்தாத்தான் உண்டு...'

நண்பர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்கிற ஆண்கள் எத்தனை பேர்... அதில் நீங்களும் இருக்கலாம்... நானும் இருக்கலாம்...

திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிறது அரசு...

ஆனால் அந்த சிறிய குடும்பத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்... அவநம்பிக்கைகள்....

எத்தனை ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்துப் போகின்றன!

இது தேவையா?

நாளை நடக்கவிருப்பதை யாரறிவார்?

நிச்சயமில்லாத அந்த நாளை எதிர்கொள்ள நம்மை மட்டுமல்லாமல் நம் குடும்பத்தாரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்களை... குறிப்பாக நம்முடைய பொருளாதார ரகசியங்களை பகிர்ந்துக்கொள்வோம்...

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

இந்த வையகத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.. குறைந்த பட்சம் நம் குடும்பத்தினரிடமாவது பகிர்ந்துக்கொள்வோம்..

நண்பர் தர்மலிங்கத்தின் அகால மரணம் யாருக்கு பாடம் புகட்டியுள்ளதோ இல்லையோ என்னைப் போன்ற, என் வயதொத்த நண்பர்களுள் பலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலித்திருக்கிறது...

அன்னாரின் ஆன்மசாந்திக்காகவும்... அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகன் மற்றும் மகளுக்காகவும் பிரார்த்திக்க உங்களை அழைக்கிறேன்......


***

18 கருத்துகள்:

  1. ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இது தொடர்பான என் முந்தைய பதிவு.

    பதிலளிநீக்கு
  2. வாங்க பேட்நியூஸ்!

    உங்க பேர் எப்படியோ ஒங்க பதிவுல நல்ல பல செய்திகள் இருக்கு...

    படிச்சேன்...

    எல்லோருக்கும் நன்மை பயக்கும் விஷயங்கள் அவை..

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அன்னாரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவர்களுக்கு தரும்படி, இறைவனை இறைஞ்சுகிறேன்.

    தனஞ்செய்யுக்குப் பின்னால், தர்மலிங்கமா..பணி பாரத்தை கவனமாக கையாளுங்கள் அய்யா...

    குடும்பத்தலைவன்னா, குடும்பத்தை தான் மட்டும் பாத்துக்கிறவன் கிடையாது, தன்னையும் பாத்துக்கிறவன், தன் குடும்பத்தாரையும் பாக்கிறவன், அவங்களயும் பாக்க வைக்கிறவன்னு.. ......

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோஸப்.

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் அன்னாரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவும்.
    குடும்பத்தில் பொருளாதார விதயங்களை பகிர்ந்து கொள்ளாதது நம்பிக்கையின்மையால் இல்லை. அதற்கான பொறுமையும் நேரமும்(?) இல்லாதுதான்.சொல்லப்போனால் என் முதலீடுகலைப் பற்றி எனக்கே தெரியாது, அப்பப்போது ஒரு பரஸ்பரநிதியிலோ வங்கி/கம்பெனி வைப்புநிதியிலோ போடுகிறோம். வருடக் கடைசியில் consolidate செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டு இறுதியில் 'அந்த நாளன்று' ஏமாந்து போகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க கிருஷ்ணா,

    பணி பாரத்தை கவனமாக கையாளுங்கள் அய்யா...//

    என்னையும் விட இளையவர்களுடைய மரணம் இப்படியொருக்கு எச்சரிக்கையை அளித்துவிட்டுத்தான் செல்கிறது..

    நாம் எல்லோருமே கவனமாய்த்தான் இருப்பதாக நினைக்கிறோம்...என்ன செய்வது.. .அதுவும் போறாதென்பதை இத்தகைய மரணங்கள் நினைவுறுத்திக்கொண்டுதானே உள்ளன..

    குடும்பத்தலைவன்னா, குடும்பத்தை தான் மட்டும் பாத்துக்கிறவன் கிடையாது, தன்னையும் பாத்துக்கிறவன், தன் குடும்பத்தாரையும் பாக்கிறவன், அவங்களயும் பாக்க வைக்கிறவன்னு.. //

    உண்மைதான்...

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஜி!
    நன்றி நன்மனம்!

    பதிலளிநீக்கு
  8. வாங்க மணியன்,

    குடும்பத்தில் பொருளாதார விதயங்களை பகிர்ந்து கொள்ளாதது நம்பிக்கையின்மையால் இல்லை. //

    நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை... எங்கே நாம் சேர்த்து வைத்ததை வீண் விரயம் செய்துவிடுவார்களோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உள்ளது.

    அதற்கான பொறுமையும் நேரமும்(?) இல்லாதுதான்.வருடக் கடைசியில் consolidate செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டு இறுதியில் 'அந்த நாளன்று' ஏமாந்து போகிறோம். //

    இதுவும் உண்மைதான்... பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறோம்...

    பதிலளிநீக்கு
  9. ஆழ்ந்த அனுதாபங்கள்,

    Neenga sonnadhu 100% right, rather than keeping financial matters within oneself, it is always good to share each others in family and goahead which will realise the families to know about financial matters in family.

    Bhagawan avanga familku idhai thaangum sakthi thara prathipoam.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஆணி,

    it is always good to share each others in family and goahead which will realise the families to know about financial matters in family. //

    ஆமாம்.. பணத்த சேர்த்து வச்சா போறாது அத நமக்கப்புறம் நம்மோட குடும்பம் அனுபவிக்கவும் வேணும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  11. அன்னாரின் ஆன்மசாந்தி அடையவும்,அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்...

    சமீபத்தில் எனக்கு தெரிந்த நண்பர் ஒரு சனிக்கிழமை காலை தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தவர் திடீரென்று நெஞ்சு வலி என்று மனைவிடம் சொல்லிருக்கிறார். மனைவி கொடுத்த தண்ணீரை குடித்து வீட்டு, குளிக்க சென்றவர்..... சத்தம் கேட்டு மனைவி ஓட .... குளியல் அறையில் விழுந்து கிடந்தவரை உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் முன் .... அவரின் உயிர் பிரிந்தது.

    அவருக்கு வயது 35தான். அவர்களுக்கு 4 வயது மகனும், முதல் பிறந்த நாளை கொண்டாட இரண்டே வாரங்கள் இருக்கும் பெண் குழந்தையும் இருக்கிறார்கள்..

    அவர் வசித்தது வெளிநாடுதான்.. உடனே மருத்துவ வசதிகள் கிடைக்கும்தான்... என்ன செய்வது?!

    அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது..?

    வாழ்க்கையில் பதில்கிடைக்காத பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று போல.....

    பதிலளிநீக்கு
  12. டிபிஆர் அய்யா, தங்கள் சோகத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். அவர் இல்லத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் எச்சரிக்கை மணியோசையைச் சரியாகப் புரிந்துகொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க தென்றல்,

    வாழ்க்கையில் பதில்கிடைக்காத பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று போல..... //

    உண்மைதான்... ஆனாலும் முடிந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதல்லாவா?

    பதிலளிநீக்கு
  14. வாங்க பாலா,

    உங்கள் எச்சரிக்கை மணியோசையைச் சரியாகப் புரிந்துகொள்கிறோம். //

    நல்லது.. நம்முடைய சடுதி பிரிவு குடும்பத்தினரை சங்கடத்தில் ஆழ்த்திவிடக்கூடாதே என்ற ஆதங்கம்தான்.

    பதிலளிநீக்கு
  15. முருகா! தர்மலிங்கத்தின் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

    நண்பர்களே...ஒரு வேண்டுகோள். உடல்நலனை மிக எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அடிக்கடி வருகின்ற பிரச்சனையென்றால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை மருத்துப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  16. Welcome Delphine!

    very difficult to understand why such things happen in Life!!//

    Yes... I can understand the pain when you, a Doctor by profession, make this statement.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ராகவன்,

    உடல்நலனை மிக எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அடிக்கடி வருகின்ற பிரச்சனையென்றால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை மருத்துப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள். //

    என்னுடையதும்... மேலும் உங்களுடைய வியாதியை உங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து மறைக்காதீர்கள்...

    பதிலளிநீக்கு