28 August 2013

சொந்த செலவில் சூன்யம்....(க்ரைம் தொடர்)

IPC:Sec.300 - Example 4:- "Culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight in the heat of passion upon a sudden quarrel"
****
ராஜசேகர் தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். 

மாலை ஐந்து மணி... 

'சார் இன்னைக்கி கொஞ்சம் சீக்கிரமா போகணும்... வீட்ல ஒரு விசேஷம்' என்று அவனுடைய ஒரேயொரு குமாஸ்தாவும் பெர்மிஷனில் செல்ல அலுவலகத்தில் அவன் தனியாக அமர்ந்திருந்தான். 

அவனுடைய பார்வை மீண்டும் மேசை மீதிருந்த தொலைபேசியை நோக்கி சென்றது, தயக்கத்துடன்...

'மாதவிய கூப்ட்டு இப்பவே வரட்டுமான்னு கேட்டா என்ன?' என்று நினைத்தான்.

வாரம் ஒரு நாள், செவ்வாய்கிழமை, மாதவியை சந்திப்பதாக ஏற்பாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக... 

இந்த இரண்டு ஆண்டுகளில் அவளை சந்திக்கும் நாளுக்காகத்தான் வாரத்தில் மீதி ஆறு நாட்கள் உயிருடன் இருப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது அவளுடைய நட்பு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விஷயமாகத்தான் ராஜசேகர் அவளை சென்னை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தான். அவள் சற்று தொலைவிலிருந்து தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததுமே 'என்ன ஸ்டரக்ட்சர்றா!' என்று நினைத்தான். அவள் வேறு யாரையோ தேடிக்கொண்டுதான் வருகிறாள் என்று நினைத்தவனுக்கு  அவனை நெருங்கி 'சார்.. நீங்கதான ராஜசேகர்?' என்று கொஞ்சியதும் அந்த ஒரு நொடியில் உலகமே மறந்துபோனது. வார்த்தை வராமல் போனது. ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தான். 

அவள் தன் கையிலிருந்த ஒரு விசிட்டிங் கார்டை நீட்டி, 'இவர் ஒங்க க்ளையண்ட்டுன்னு சொன்னாங்க... அதான் ஒங்கள பாத்து பேசிட்டு போலாம்னு....' என்றதும் அவள் நீட்டிய கார்டை பார்க்காமல் செக்கச் செவேல் என்றிருந்த அவளுடைய கைகளையே பார்த்து மெய்மறந்து நின்றான்.

'சார்...' என்று அவள் மீண்டும் அழைத்ததும்தான் அவனுக்கு அவள் கைகளை நீட்டியவாறு நிற்பது புரிந்தது. 

கார்டை பார்த்தான்.  'இவனா.. இவன் சரியான விடாக்கண்டனாச்சே... நீங்க எப்படிங்க  இவன் கிட்ட மாட்டுனீங்க...?'

அவள் சோகத்துடன் அவனை பார்த்தாள். 'சோகத்துலயும் நீ சூப்பராத்தான் இருக்கே' என்று நினைத்தான் ராஜசேகர்.

'நீங்க சொல்றது சரிதான் சார்... கைமாத்தா வாங்குன பணத்த குடுக்காம டிமிக்கி குடுத்துக்கிட்டே இருக்கான். நீங்கதான் எப்படியாச்சும் வாங்கி தரணும்... வட்டி தராட்டியும் பரவால்லை... அசல் வந்தா போறும்...'

இவன் கிட்டருந்து என் ஃபீச கறக்கறதுக்கு நா படற பாடு ஒனக்கு எங்க தெரியப் போவுது? என்று நினைத்தான் ராஜசேகர்... இருந்தாலும் இவள முடியாதுன்னு சொல்லி கட் பண்ணிற கூடாது... ஆஃபீசுக்கு வரச் சொல்வோம்... 

நீதிமன்ற வளாகத்தை ஒருமுறை பார்த்தான்... எல்லோரும் இல்லாவிட்டாலும் ஒருசிலருடைய பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை கவனிக்க முடிந்தது... சிலருடைய பார்வையில் 'இவனுக்கு வந்த வாழ்வைப் பார்றா..' என்பதுபோன்ற பொறாமையும் தெரிந்தது..

'நீங்க ஒன்னு பண்ணுங்க.. இன்னைக்கி சாயந்தரம் என் ஆஃபீசுக்கு வந்துருங்க... இவனையும் ஃபோன் பண்ணி வரச் சொல்றேன்... பேசி முடிச்சிரலாம்...' என்றான். 'எவ்வளவு தரணும்னு சொன்னீங்க?'

'அம்பதாயிரம் சார்... ஆறே மாசத்துல வட்டியோட தந்துடறேன் சிஸ்டர்னு சொல்லி கெஞ்சி வாங்கிக்கிட்டு போனான்... ஒன்பது மாசம் ஆகப்போகுது...'

'அம்பதாயிரம் குடுத்தீங்களா? இவன நம்பியா?' 

'ஆமாங்க.. நீங்கதான் எப்படியாச்சும்....'

'நா கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க... இவன் கூட ஏதாச்சும் டீலிங்ஸ் வச்சிருக்கீங்களா?'

சட்டென்று கோபத்தில் அவளுடைய முகம் சிவந்துபோனதை பார்த்த ராஜசேகர்... அடடா கோவத்துலயும் என்ன சூப்பரா இருக்கா? என்று பரவசமானான்..

'அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம்..உங்களால முடியாதுன்னா சொல்லிருங்க..'

ரிவர்ஸ் வாங்கினான் ராஜசேகர்... 'சாரிங்க.. கேட்டது தப்புத்தான்... நீங்க ஆறு மணிக்கி வந்துருங்க... நா பேசறேன்..'

'சரி... நா வர்ற விஷயத்த அவன்கிட்ட சொல்லிறாதீங்க.. வராம டிமிக்கி குடுத்துருவான்..' என்றவாறு தன்னைக் கடந்து சென்றவளுடைய நடையழகில் தன்னையே பறிகொடுத்து நின்றான் ராஜசேகர்.

அப்படி பழக்கமானவள்தான் மாதவி... 

கடனை அவன் சாதுரியமாக பேசி வசூலித்து கொடுத்துவிட 'ரொம்ப தாங்ஸ் சார்... ஒருதரம் வீடு வரைக்கும் வந்துட்டு போங்களேன்...' என்று பேச்சோடு பேச்சாக சொன்னதை மறக்காமல் அடுத்த வாரமே ஒருநாள் அவளுடைய வீட்டுக் கதவைத் தட்டினான். 

சாதாரண சந்திப்பு என துவங்கி அவ்வப்போது சந்திக்கும் நட்பாக மாறி பிறகு... அடிக்கடி சந்திக்கும் அளவுக்கு நெருக்கமானது... பிறகு வாரம் ஒருமுறையாவது அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றாகிப்போனது... முதல் வருடத்தில் அவனுடைய மாத வருமானத்தில் பத்து சின்ன வீட்டுக்கு என்று ஆரம்பித்த விழுக்காடு இரண்டு வருடங்களில் சுமார் முப்பதைக் கடந்திருந்தது. 

'கோகிலாக்கிட்ட மாட்டிக்கிடறதுக்குள்ள இதுலருந்து எப்படியாச்சும் விடுபட்டுறணும்' என்று அவ்வப்போது நினைப்பான். அது அவளுடைய முகத்தை பார்க்கும் வரைக்கும்தான்...

தொலைபேசி ஒலித்தது... திடுக்கிட்டு எடுத்தான்...

'அட்வகேட் ராஜசேகர் ஹியர்' என்றான் கெத்தாக.

'நாந்தான்' .

இவளுக்கு சாவே இல்ல போலருக்கு! இருந்தாலும் இவள இங்க கூப்ட வேணாம்னு எத்தன தரம் சொல்றது? இதுவே நம்ம குமாஸ்தா எடுத்துருந்தா என்ன ஆவறது? குரல வச்சே மோப்பம் புடிச்சிருவானே..

'ஆஃபீசுக்கு கூப்டாதேன்னு சொல்லியிருக்கேன் இல்ல? என்ன அப்படி அர்ஜண்ட்?'

'இன்னைக்கிம் வரவேணாம்னு சொல்லத்தான் கூப்ட்டேன்...'

ச்சை... ரெண்டு நாளாவே இப்பல்லாம் வீட்டு செலவுக்கு நீங்க குடுக்கற காசு பத்தவேமாட்டேங்குது என்று தகராறு செய்த அவனுடைய மனைவி கோகிலாவால் நொந்து போயிருந்தவன் இன்றைய நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தான்... அதுக்கும் வினை வந்துருச்சே என்று நொந்துப்போனான்...

'என்ன சத்தத்தையே காணோம்?'

'ஏன்.. என்ன விஷயம்...ஒடம்புக்கு ஏதாச்சுமா? ஏற்கனவே ரெண்டு வாரமாச்சி பாத்து' 

'அதெல்லாம் ஒன்னுமில்லை... என் தம்பி ஊர்லருந்து வந்துருக்கான்... இந்த வாரம் முழுசும் இருப்பான்.. அதான்...'

'ஒனக்கு தம்பியா? அது யாரு எனக்கு தெரியாம?'

'ஒங்களுக்கு எதுக்கு தெரியணும்?'

குரலில் இருந்த கோபம் அவனை தயங்க வைத்தது. 'சரி... சரி... அப்ப இந்த வாரமும் பட்டினின்னு நினைச்சிக்கிறேன்... அப்ப அடுத்த செவ்வாய்தானா?'

'ஆமா.. வச்சிடறேன்..' 

துண்டிக்கப்பட்ட தொலைபேசியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சிறிது நேரம். பிறகு கோகிலாவை அழைத்தான். 

'இந்த வாரம் மீட்டிங் கேன்சல் ஆயிருச்சி கோகி.... இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்... ஏதாச்சும் வாங்கிக்கிட்டு வரணுமா?' என்றான் நல்ல பிள்ளையைப் போல். வாரம் ஒரு நாள் லயன்ஸ் க்ளப் மீட்டிங் என்றுதான் எல்லா செவ்வாய் கிழமையும் சொல்லி வைத்திருந்தான். 

'வர்ற வழியில முடிஞ்சா கொஞ்சம் பழங்கள வாங்கிக்கிட்டு வாங்க... வேற ஒன்னும் வேணாம்.'

'சரி' 

எழுந்து அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு இறங்கினான். 

அவன் வீட்டுக்கு செல்கின்ற பாதையில்தான் மாதவியின் வீடும் இருந்தது...  

அவளுடைய வீட்டுக்கு எதிரே சற்று தள்ளி சாலைக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்த பழமுதிர்சோலையில்தான் அவ்வப்போது பழங்கள் வாங்குவது வழக்கம். அன்றும் அந்த கடை வாசலில் இருந்து சற்று தள்ளி தன்னுடைய மாருதியை பார்க் செய்துவிட்டு கடைக்குள் நுழைந்து முதலில் தெரிந்த பழங்களுள் சிலவற்றை வாங்கிக்கொண்டான். கோகிலாவுக்குத்தானே... மாதவிக்குன்னாதான் தேடிப் புடிச்சி வாங்கணும்....

கடையிலிருந்து இறங்கி தன்னுடைய வாகனத்தை நோக்கி செல்ல முயன்றவன் சாலையின் மறுபுறம் இருந்த மாதவியின்  வீட்டிலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பின்னால் வந்து வழியனுப்பிய மாதவியைப் பார்த்ததும் சட்டென்று ஒளிந்து நின்று பார்த்தான். மாதவி அந்த ஆளை நெருங்கி நின்று புன்னகையுடன் வழியனுப்பிய விதம் அவனை என்னவோ செய்தது....  தம்பி கூட இருக்கேன்னு சொன்னா? இந்த ஆள பாத்தா தம்பி மாதிரி தெரியலையே?

மாதவி வழியனுப்பிய அந்த ஆள் சாலையின் குறுக்கே நடந்து எதிரில் பார்க் செய்யப்பட்டிருந்த டயோட்டா கொரலாவில் ஏறி அமரவும் பார்க்கிங் வேலையாள் ஓடிவந்து தன்னுடைய கைக்கடிகாரத்தைக் காட்டி ஏதோ சொல்ல அவர் எரிச்சலுடன் பர்சை திறந்து பணத்தை கொடுத்துவிட்டு சென்றதை கவனித்தான். அந்த கார் சென்று மறையும் வரை முகத்தில் புன்னகையுடன் வாசலில் நின்றுவிட்டு வீட்டுக்குள் திரும்பிய மாதவியையும் பார்த்தான்.  ராஜசேகருக்கு ஆத்திரமாய் வந்தது. 'ஓ! இதான் விஷயமா? மேடம் வாரம் ஒரு நாள் நம்மள பாக்கறா மாதிரி ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு ஆளுன்னு பாக்கறா போலருக்கு... இது புது கனெக்ஷனாருக்கும்... நாம மாருதிதானே... அதான் நம்மள கேன்சல் பண்ணிட்டு ட்யூஸ்டேவ டயோட்டாவுக்கு அலாட் பண்ணிட்டா போலருக்கு… அதான் ரெண்டு மூனு வாரமாவே நம்மள அவாய்ட் பண்றாளா?

மாதவி திரும்பி தன்னுடைய வீட்டுக்குள் நுழையும் வரை காத்திருந்த ராஜசேகர் தன்னுடைய காரில் ஏறி அமர்ந்து சிறிது நேரம் யோசித்தான். 

என்ன தைரியம் இருந்தா இப்படியொரு காரியத்த செஞ்சிருப்பா? இவளோட பழகுன இந்த ரெண்டு வருசத்துல இவளுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்? இவளுக்காக கட்டுன வைஃப மட்டுமா, ஒன்னேயொன்னு கண்ணே கண்ணேன்னு இருக்கற பொண்ணையும் இல்ல கண்டுக்காம இருந்தேன்? செவ்வாய் கிழமையானா என்ன வேலையிருந்தாலும் இவள பாக்க ஓடி வந்தேனே... 'அப்பா இன்னைக்கி என்னோட ஸ்கூல்ல ஆன்யுவல் கல்ச்சுரல்ஸ்ப்பா... அம்மாவோட நீங்களும் வரணும்ப்பா'ன்னு கேட்டப்பக் கூட பொய் சொலிட்டு வந்துருக்கேனே... 

இவள இப்படியே விட்டா சரிவராது....

காரிலிருந்து இறங்க முயன்றவனுக்கு தன்னுடைய மனைவியிடம் அரைமணியில் வந்துவிடுவேன் என்று கூறியது நினைவுக்கு வந்தது. பரவால்லை... ஒரு அஞ்சி நிமிசம் அவள பாத்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டுன்னு போனாத்தான் இன்னைக்கி தூக்கம் வரும்..

காரிலிருந்து இறங்கி எப்போதும்போலவே சுற்றும் முற்றும் பார்த்தான்.  சாதாரணமாக மாதவியின் வீட்டுக்குள் செல்வதை தனக்கு தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே இருப்பான். அதற்காகவே அவள் வீடு இருந்த சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் தெரு முனையிலோ அல்லது அருகில் இருந்த சந்துகளிலோ பார்க் செய்துவிட்டு கால்நடையாகத்தான் அவளுடைய வீட்டிற்கு செல்வான். ஆனால் அன்று அவளுடைய வீட்டுக்கு செல்லும் உத்தேசம் இல்லாததாலும் கோகிலா கேட்ட பழங்களை வாங்க வேண்டும் என்பதாலும் யார் பார்த்தால் என்ன என்ற நினைப்புடன் அவளுடைய வீடு இருந்த சாலையிலேயே பார்க் செய்திருந்தான். அதுவும் ஒருவகையில் நல்லதாகிப் போனது. இல்லையென்றால் அவளுடைய தில்லுமுல்லு தெரிந்திருக்காதே...

ஏற்கனவே இருட்ட துவங்கியிருந்தாலும் அவனுக்கு தெரிந்த முகம் ஏதும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு தலையைக் குனிந்தவாறே சாலையைக் கடந்து மாதவியின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான்..

கதவைத் திறந்து அகன்று விரிந்த புன்னகையுடன், 'என்னங்க எதையாச்சும் மறந்துட்டீங்களா?' என்று துவங்கிய மாதவி ராஜசேகரனைக் கண்டதும் அரண்டுபோய் 'நீங்களா? நாந்தான் சொன்னேனேங்க....?' என்றாள்.

'தம்பி கூட இருக்கறேன்னுதானே... அந்த தம்பியதான் இப்ப பாத்தேனே...?'

'யார சொல்றீங்க?'

'அதான்  டயோட்டா வண்டியில வழியனுப்பினியே...'

'ஓ!' என்று அவள் சிரித்த சிரிப்பில் ஒரு கைதேர்ந்த நடிகையின் திறமை தெரிந்தது. 'அவரா... அவர்தாங்க நம்ம ஹவுஸ் ஓனர். அத்தோட ஒரு ரியல் எஸ்டேட்டும் பண்றார்.. ஏதாச்சும் நல்ல இடமா வந்தா சொல்லுங்கன்னு சொல்லியிருந்தேன்... அதான் வந்துட்டு போறார்... நீங்க உள்ள வாங்க...'

அவளைத் தொடர்ந்து ஹாலுக்குள் நுழைந்தவன் டீப்பாயில் இருந்த காப்பி கோப்பைகளைப் பார்த்தான். அருகில் கேக், பிஸ்கெட், பழங்கள் என கடை விரிக்கப்பட்டிருந்தது. சோபாவில் அவன் அவ்வப்போது அவளுக்கு பரிசளிக்கும் மலர்கொத்தும்....

'எடம்னா.... வீடு கட்டற எடமா.... இல்ல என்னெ மாதிரி பார்ட்டியா?' 

'என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல...காப்பி கொண்டு வரவா?'

ராஜசேகர் சோபாவில் அமர்ந்து டீப்பாயில் இருந்த கோப்பையில் மீதம் இருந்த காப்பியை பார்த்தான். 'இதோ இதையே சூடு பண்ணி குடு... போறும்... இத மாதிரி நானும் ஆறின சரக்குதான?'

மாதவி அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோள்மீது சாய்ந்தாள். 'என்ன, துரைக்கி சந்தேகமா?' 

அவள் மீது வீசிய நறுமணம் அவன் சென்ற வாரம் பரிசளித்த ஃபாரின் செண்ட்... அவள் அணிந்திருந்தது அவன் சென்ற மாதம் பரிசளித்த நைட்டீ என்பதை உணர்ந்தவனுக்கு அவனையுமறியாமல் ஆத்திரம் பொங்கி வந்தது..

'ஏன்டி என்ன தைரியம் இருந்தா நா வாங்கி குடுத்த நைட்டி, செண்ட் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு எனக்குன்னு ஒதுக்குன டேட்டுல இன்னொருத்தனோட கொஞ்சுவே...'

அவனிடமிருந்து சட்டென்று விலகிய மாதவி எழுந்து நின்றாள். ..

'அநாகரீகமா பேசாதீங்க. நீங்க ஒன்னும் கட்டுன புருசன் இல்ல.. நா யார பாக்கணும்... எந்த டிரஸ்ச போட்டுக்கிட்டு யார் கூட கொஞ்சணும்னு நீங்க ஒன்னும் கண்டிஷன் போட தேவையில்ல..'

கண்களை விரித்தவாறு அவள் நின்ற கோலம் அவனை வெறுப்படைய செய்தது. இவளுக்காகவா இவ்வளவும் செய்தோம் என்று கொதித்துப் போனான். அப்படியே இவளுடைய கழுத்தைப் பிடித்து நெறித்தால் என்ன என்று தோன்றியது.

'ஏய்... என்ன கொழுப்பு இருந்தா என்னையே எதிர்த்து பேசுவே' என்றவாறு எழுந்து அவளை நெருங்கினான்... 'உன்னை.... என்ன பண்றேன் பார்....'

நீட்டியவாறு தன்னை நெருங்கிய கரங்களை தட்டிவிட்ட மாதவி வாசலை நோக்கி கைநீட்டினாள். 'மரியாதையா வெளிய போயிருங்க.. இல்ல கத்தி கூச்சல் போடுவேன்.' 

தெருவை ஒட்டியிருந்த வீடு என்பதால் அவளுடைய குரல் தெருவில் கேட்க வாய்ப்பிருந்ததை உணர்ந்த ராஜசேகர் எழுந்து நின்றான். 'இப்ப போறேன்... ஆனா இப்படியே போயிருவேன்னு மட்டும் நினைக்காதே... மறுபடியும் வருவேன்.... இந்த ஏரியாவுலருந்தே உன்னெ விரட்டாம விடமாட்டேன்.... வக்கீல் கிட்டவே ஒன் வேலைய காட்டறியா?' என்றவாறு வாசலை நோக்கி நடந்தவனுடைய காலை தரையில் கிடந்த ஏதோ ஒன்று இடற, தடுமாறி தரையில் விழ இருந்தவன் சமாளித்துக்கொண்டு எழமுயன்றான்.. அதே கணம் அவனுடைய தலைக்கு மீது ஏதோ ஒன்று பறந்து சென்று எதிர் சுவரில் மோதி விழுந்தது. திடுக்கிட்டு என்னவென்று பார்த்தான்... சற்று முன் டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த காப்பி கோப்பை ஒன்று உடைந்து கிடந்தது...

ஒரு நொடி தப்பியிருந்தாலும் அது தன்னுடைய தலையை பதம் பார்த்திருக்கும் என்பதை உணர்ந்தவன் கட்டுக்கடங்கா ஆத்திரத்துடன் எழுந்து தன்னை நோக்கி வந்த மாதவியை பிடித்து கீழே தள்ளினான்... 

இதை முற்றிலும் எதிர்பார்க்காத மாதவி நிலைதடுமாறி கீழே விழ... ராஜசேகர் அதே கோபத்துடன் திரும்பி வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறி கதவை அழுத்தி மூடினான்... எங்கே அவள் மீண்டும் எதையாவது எடுத்து தன் மீது எறிவாளோ என்ற அச்சம்...

நல்ல வேளை... வாசலில் விளக்கு ஏதும் இருக்கவில்லை... அவளுடைய வீட்டிலிருந்து இறங்கிய தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு தலையைக் குனிந்துக்கொண்டு சாலையைக் கடந்தான். தன்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளம்பியவன் திரும்பி மாதவியின் வீட்டைப் பார்த்தான்... கதவு மூடியே இருந்ததைக் கண்டு சமாதானம் அடைந்தான்... கதவ திறந்துக்கிட்டு வரமாட்டா... என்று நினைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு வீட்டை அடைந்தான்.

தொடரும்...

16 comments:

ராஜி said...

ஒழுக்கம் தவறியவர்கள் கண்டிப்பாய் தண்டனை பட்டே தீர வேண்டும் அத் செய்யாத தவறுக்கு கூட இருக்கலாம். கதையின் போக்கு லேசாய் புரிபடுகிறது

G.M Balasubramaniam said...

பதிவின் நீளம் பிறகு வந்து நிதானமாய்ப் படி என்கிறது பிறகு வந்து கருத்திடுகிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...


ராஜி said...
ஒழுக்கம் தவறியவர்கள் கண்டிப்பாய் தண்டனை பட்டே தீர வேண்டும் அது செய்யாத தவறுக்கு கூட இருக்கலாம். //

இதுதான் தர்மத்தின் நியதி, ஒத்துக்கறேன். ஆனா அப்படி ஒழுக்கம் கெட்டவங்க எல்லாம் உடனுக்குடனே தண்டிக்கப்பட்டுட்டா எப்பவோ இந்த உலகம் திருந்தியிருக்குமே....
3:58 PM

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
பதிவின் நீளம் பிறகு வந்து நிதானமாய்ப் படி என்கிறது//

கொஞ்சம் நீளம்தானோ... இந்த அளவுதான் எல்லா பகுதிகளும் இருக்கும்... அப்படியும் இருபது பகுதிக்கு மேல இருக்குமே....

குறைச்சா நல்லதுன்னா சொல்லுங்க... நாளையிலருந்து செஞ்சிடறேன்:)

வே.நடனசபாபதி said...


‘கிரைம்’ தொடர் சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. வாழ்த்துக்கள்!
கடைசியில் மாதவி கொலை செய்யப்பட்டிருப்பாள். அந்த பழி வழக்கறிஞர் ராஜசேகர் மேல் விழும் என நினைக்கிறேன். பார்ப்போம் கதை எப்படி நகர்கிறதென்று.

G.M Balasubramaniam said...


என் அனுபவம் கூறுகிறேன். நெடுங்கதையை படிப்பவர்கள் குறைவு. ஒரு பதிவு கடந்து போனாலும் கதையை தொடர மறுபடியும் பழைய பதிவை படிக்க வேண்டும் அங்குமிங்கும் கொஞ்சம் படித்துப் போகிறவர்கள் எழுத்தை ரசிக்க முடியாது. இருபது பதிவுகளையும் படித்தால்தான் எழுதும் உங்களுக்கு ஜஸ்டிஸ் செய்ததாக இருக்கும். த்ரில்லர் என்று கூறினால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். கதையைப் பற்றி இப்போது ஏதும் கூரப் போவதில்லை. ஆனால் நான் நினைப்பதைக் கருத்தாக்கினால், உங்களுக்குப் பிடிக்காவிட்டால் கோபம் கொள்ளல் கூடாது. தொடர்கிறேன்.

தருமி said...

தொடரட்டும்.

T.N.MURALIDHARAN said...

தலைப்பு அருமை. G.M.B அவர்கள் சொல்வது போல கொஞ்சம் நீளம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...

‘கிரைம்’ தொடர் சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. வாழ்த்துக்கள்! //மிக்க நன்றி சார். இனி வரும் பகுதிகளிலும் இது இருக்கும் என நம்புகிறேன்.


கடைசியில் மாதவி கொலை செய்யப்பட்டிருப்பாள். அந்த பழி வழக்கறிஞர் ராஜசேகர் மேல் விழும் என நினைக்கிறேன். பார்ப்போம் கதை எப்படி நகர்கிறதென்று. //

No comments:))

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

என் அனுபவம் கூறுகிறேன். நெடுங்கதையை படிப்பவர்கள் குறைவு. ஒரு பதிவு கடந்து போனாலும் கதையை தொடர மறுபடியும் பழைய பதிவை படிக்க வேண்டும் அங்குமிங்கும் கொஞ்சம் படித்துப் போகிறவர்கள் எழுத்தை ரசிக்க முடியாது. //

உங்களுடைய அனுபவம் சரியானதுதான் சார். நீளத்தை குறைக்கின்றேன்.

த்ரில்லர் என்று கூறினால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.//

இது த்ரில்லர் இல்ல சார். ஒரு குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எப்படியெல்லாம் பாடுபடுகிறான் என்றும் அவனை எவ்வித சந்தேகமும் இல்லாமல் குற்றவாளி என நிரூபிக்க காவல்துறையும் எப்படியெல்லாம் உழைக்கிறது என்பதை கூற முயற்சி செய்துள்ளேன். //

கதையைப் பற்றி இப்போது ஏதும் கூறப் போவதில்லை. ஆனால் நான் நினைப்பதைக் கருத்தாக்கினால், உங்களுக்குப் பிடிக்காவிட்டால் கோபம் கொள்ளல் கூடாது. தொடர்கிறேன்.//

நான் ஒரு அமெச்சூர் எழுத்தாளர்ங்க. குறை ஏதும் இருந்தால் தயங்காமல் கூறலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

தருமி said...
தொடரட்டும்.//

நீங்களும் தொடருங்க:))

டிபிஆர்.ஜோசப் said...

T.N.MURALIDHARAN said...
தலைப்பு அருமை.//

மிக்க நன்றிங்க. ஆக்சுவலா இது மூனாவது தலைப்பு.

G.M.B அவர்கள் சொல்வது போல கொஞ்சம் நீளம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்//

சரிங்க.. இன்னையிலருந்து கொஞ்சம் குறைச்சிடறேன்.

Sasi Kala said...

இந்த தொடரின் முடிவில் இருந்து கிரைம் ஆரம்பிக்கும் போல...

டிபிஆர்.ஜோசப் said...

asi Kala said...
இந்த தொடரின் முடிவில் இருந்து கிரைம் ஆரம்பிக்கும் போல...//

ஆமா இப்படியொரு தொடர எழுதினதுக்காக ஆசிரியரே கொல்லப்படுவார் :)

அது ஒருவேளை நீங்களாக கூட இருக்கலாம்.. அதாவது கொலையாளி!!

Sasi Kala said...

இது என்ன இன்று தான் இந்த பதிலை பார்த்தேன்... ஆத்தி கதை படித்த பாவமா எனை கொலை செய்ய போறாங்க.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
இது என்ன இன்று தான் இந்த பதிலை பார்த்தேன்... ஆத்தி கதை படித்த பாவமா எனை கொலை செய்ய போறாங்க.//

சும்மா தமாஷ் பண்ணேன்... ஆனா உங்கள கொலை செய்யப்போறாங்கன்னு சொல்லலையே? இந்த பதிவு எழுதின ஆசிரியரை (அதாவது என்னை!) கடுப்புல நீங்கக் கூட கொலை செய்ய வாய்ப்பு இருக்குன்னு சொன்னேன் :))