29 August 2013

சொந்த செலவில் சூன்யம் - 2

கதைச் சுருக்கம்: ராஜசேகர் ஒரு க்ரிமினல் லாயர். அவருக்கும் மாதவி என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு காலமாக தகாத தொடர்பு. சமீபகாலமாக மாதவி தன்னை தவிர்ப்பதை உணர்கிறான் ராஜசேகர். அவன் நினைத்திருந்தது சரிதான் என்பதை உறுதிப்படுத்துவதுபோல் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் செவ்வாய்கிழமையன்று வேறொருவருடன் அவளை பார்க்கிறான். அந்த நபர் வெளியேறியதும் அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். அவனை வீட்டை விட்டு வெளியேறும்படி மாதவி கூறுகிறாள். ராஜசேகர் கோபத்துடன் அவளை பிடித்து தள்ளிவிட்டு வெளியேறுகிறான்.


Lawyers as a Professional: Ethics:“The
 lawyer-client 
relationship
...
is
 morally
 objectionable
 because
 it
 is 
a
 relationship 
in 
which
 the
 lawyer 
dominates 
and 
in
 which
 the
 lawyer
 typically,
 and
 perhaps 
inevitably,
 treats 
the
 client
 in
 both 
an 
impersonal 
and
 a 
paternalistic
 fashion.”

 - 
This 
is
 a 
worry
 about 
the 
relationship 
between 
the 
lawyer
 and 
the Client.

'என்னங்க அரை மணின்னு சொல்லிட்டு...' என்றவாறு வரவேற்ற மனைவியின் கையில் பழங்கள் அடங்கிய பையை திணித்தான் ராஜசேகர். 'இரு வந்து சொல்றேன்' என்றவாறு மாடிப்படிகளில் ஓடி தன் அறைக்குள் நுழைந்தான். 

மின்விசிறியை ஓடவிட்டு படுக்கையில் சற்று நேரம் அமர்ந்தான். ச்சே... நாமளாவது கொஞ்சம் பொறுமையா கேட்டுருக்கலாம்... தேவையில்லாம ஆத்திரப்பட்டு காரியமே கெட்டுப்போச்சு.... அவ என்ன நினைப்பாளோ தெரியலையே... நம்ம மேல இருக்கற கோவத்துல வீட்டுக்கே ஃபோன் பண்ணி கோகிலாகிட்ட போட்டு குடுத்துட்டா என்னாவறது? நம்ம வீட்டு ஃபோன் நம்பர நாம குடுக்கலைன்னாலும் பப்ளிக் டைரக்டரியிலிருந்து கண்டுபிடிச்சிற முடியுமே.... அவ இங்க ஃபோன் பண்றதுக்கு முன்னால நாமளே ஃபோன் பண்ணி சாரின்னு சொல்லிறலாமா?

'என்னங்க காப்பி போடவா...?' கீழிருந்து கோகிலாவின் குரல் கேட்டது...

இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம... இருந்தாலும் அவளுடைய இடையூறை தவிர்க்க, 'சரி போடு... குளிச்சிட்டு வரேன்.' என்றான்.

என்ன செய்யலாம்... என்ன செய்யலாம்..? மனம் ஒரு நிலையில் நிற்காமல் தவித்தது. நாம தள்ளிவிட்ட வேகத்துல கீழ விழுந்து ஏதாச்சும் ஏடாகூடமா அடிபட்டுருக்குமோ...? அதான் நம்மள தொடர்ந்து அவளால வர முடியலையோ...? எழுந்து அறையின் குறுக்கே நடந்தான்...  ஃபோன் பண்ணி பாக்கலாமா? வேணாம். வீட்டுலருந்து பேச வேணாம்... இந்த இரண்டு வருடங்களில் எந்த ஒரு சூழலிலும் வீட்டிலிருந்து மாதவியை தொடர்பு கொள்ள அவன் முயன்றதில்லை என்பது நினைவுக்கு வர அந்த எண்ணத்தை கைவிட்டான்...

சரி.. நாளைக்கி ஆஃபீசுக்கு போற வழியில ஒரு பொக்கேவ வாங்கிக்கிட்டு போயி சாரி சொல்லுவோம்.... பரவாயில்லைங்கன்னு ஏத்துக்கிட்டா ஈவ்னிங் எங்கயாவது கூட்டிக்கிட்டு போயி சமாதானமாயிருவோம்... இல்ல... வெளியே போடான்னு சொன்னா சரி விட்டுது சனியன்னு தலைய முழுகிருவோம்...

உடைமாற்றிக்கொண்டு குளிர்ந்த நீரில் குளித்தான். 'டாடி... வெளியில வாங்க... காப்பி ரெடியாம்.' என்ற மகளின் குரல் கேட்டது. 'இதோ வந்துட்டேம்மா..' என்றவாறு கதவை திறந்ததும் அறைக்குள் பாய்ந்து ஓடி வந்த மகளுடன் மாடியிலிருந்து இறங்கி சோபாவில் அமர்ந்து காப்பியை உறிஞ்சியவாறே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கார்ட்டூன் சானலை மாற்றினான் 

'என்னப்பா நீ.. நா பாத்துக்கிட்டிருக்கேன்லே..' என்ற மகளைப் பார்த்து சிரித்தான். 'இருடா கண்ணா ஒரே ஒரு நிமிஷம்...' என்றவாறு தமிழ் செய்தி சானல்களை ஒருமுறை வலம் வந்தான்.

மாதவியைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை... சமாதானம் அடைந்தான்... 'இந்தா குட்டி... கார்ட்டூன பாத்துக்கோ' என்று ரிமோட்டை மகளிடம் கொடுத்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்திருந்த நாளைய கேஸ் கட்டுகளை புரட்ட ஆரம்பித்தான்..

இரவு படுக்க செல்வதற்கு முன் மீண்டும் ஒருமுறை செய்தி சானல்களைப் பார்த்தான்... மாதவியைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லாததால் நாளைக்கி ஆஃபீஸ் போற வழியில  பார்த்துட்டு போவோம்... அப்புறம் நடக்கறது நடக்கட்டும் என்ற நினைப்புடன் படுக்கையில் விழுந்தான்.

அடுத்த நாள் காலையில்  மீண்டும் ஒருமுறை அன்றைய வழக்குகளுடைய விவரங்களை ஒருமுறை பார்வையிட்டவாறே காலை உணவை முடித்துக்கொண்டு 'இன்னைக்கி லஞ்ச் வேணாம் கோகி. கண்டினியூவசா கேஸ் இருக்கறதால கோர்ட்லயே சாப்ட்டுக்கறேன்..' என்ற ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு ஒரு அரை மணி முன்னதாகவே புறப்பட்டான்.

காலை நேர வாகன நெரிசல் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் தடுத்தது. வழியில் தெரிந்த கடையருகே மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை பார்க் செய்துவிட்டு இறங்கி ஒரு மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டான். 'சும்மா சாரின்னு சொல்றத ஒரு ஃப்ளவர் பொக்கேவோட சொன்னா நல்லாருக்குமில்ல..' 

அவனுடைய வீட்டிலிருந்து பத்து நிமிட தூரத்தில்தான் இருந்தது மாதவியின் வீடு. ஆனால் அதை கடக்கவே அன்று அரை மணிக்கும் மேலானது. அன்றைய வழக்குகளில் முதலாவதில் வாய்தா வாங்குவது என ஏற்கனவே தீர்மானித்திருந்ததால் பதினோரு மணிக்குள்  நீதிமன்றத்தை அடைந்தால் போதும் என்று நினைத்தான்... மினிமம் ஒரு பத்து நிமிஷமாவது அவ வீட்ல நிக்கணும்.. முதல்ல பிகு பண்ணுவா... தப்பு நம்ம பேர்லங்கறதால நாமதான் இறங்கி போகணும்... அதுக்கும் மேல பிகு பண்ணா சரிதான் போடின்னு சொல்லிட்டு கிளம்பிறணும்... கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து.

இப்பவே பத்தாயிருச்சா... அவ வீட்ல பத்து நிமிஷம்னு வச்சாலும் கோர்ட்டுக்கு டைமுக்கு போயிர முடியுமா? அன்றைய இரண்டாவது வழக்கு முக்கியமான வழக்கு... ஏற்கனவே மூன்று முறை வாய்தா வாங்கியிருந்த வழக்கு... இனியும் வாய்தா கிடைக்காது என்பதுடன் கேஸ் விசாரனைக்கு வரும்போது டிஃபென்ஸ் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லையென்றால் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கொடுத்துவிடுவதில் அந்த நடுவர் பிரபலமானவர்..

கடந்த பத்து நிமிடங்களாகவே மாதவி குடியிருந்த சாலை முனையிலேயே நின்றுக்கொண்டிருப்பதை உணர்ந்த ராஜசேகர் கார் கண்ணாடியை இறக்கி எதிரில் வந்த வாகன ஓட்டியிடம் 'என்ன சார் எதாச்சும் ஆக்சிடெண்டா... அப்படியே நிக்குது?' என்றான்.

'ஆக்சிடெண்ட் இல்லை சார்... ஏதோ மர்டர் கேஸ் போலருக்கு.... பாடிய இப்பத்தான் வண்டியில ஏத்திக்கிட்டு இருக்காங்க... ஒரே போலீஸ் கெடுபிடி... இந்த பக்கம் கொஞ்ச நேரம், அந்த பக்கம் கொஞ்ச நேரம்னு வண்டிகள விட்டுக்கிட்டு இருக்காங்க...' 

ராஜசேகருக்கு 'பக்' என்றிருந்தது. மர்டரா? வாகனத்திலிருந்து இறங்கி முடிந்த மட்டும் எட்டி பார்த்தான்... சற்று தொலைவில் ஏறக்குறைய மாதவியின் வீட்டின் முன்புறம் காவல்துறையினரின் வாகனமும், ஒரு ஆம்புலன்சும் சாலையை அடைத்துக்கொண்டு நிற்பதும்.. சாலையின் இருபுறமும் குழுமியிருந்த மக்கள் கூட்டமும் தெரிந்தது. அது மாதவியின் வீடுதான்... அவளுக்குத்தான் ஏதோ நடந்துருக்கணும்... 

படபடவென அடித்த நெஞ்சை பிடித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து ஸ்டீரிங் மீது சாய்ந்தான்... மார்பை அடைத்துக்கொண்டு வந்தது. வாயை திறந்து இரண்டு மூன்று முறை மூச்சை இழுத்து வெளியில் விட்டான்... ஏசியின் அளவை சற்று கூட்டி அதன் முன் முகத்தை காட்டினான். சில்லென்று வந்த காற்று இதமாயிருந்தது...

முன் சீட்டிலிருந்த மலர்க் கொத்தை சீட்டுக்கடியில் தள்ளிவிட்டான்... போற வழியில எங்கயாவது கடாசிறணும்... இல்லன்னா யாருக்கு சார் இது என்ற குமாஸ்தாவின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்... கைக்கடிகாரத்தைப் பார்த்தான்... பத்து நிமிடங்கள் கழிந்திருந்தன... இனியும் இங்க நிக்கறதுல பிரயோசனம் இல்ல.... திரும்பி போயி வேற வழியா சைதப்பேட்டை போயிருவோம்... 

காரிலிருந்து இறங்கி பின்னால் பார்த்தான். ஊஹும்... சான்சே இல்லை.. முன்னாலயும் போக முடியாது... பின்னாலயும் போக முடியாது போலருக்கே என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கையிலேயே அவனுக்கு முன்னாலிருந்த வாகனம் நகரத் துவங்கியது... உடனே அவனுடைய காருக்கு பின்னாலிருந்த வாகன டிரைவர் 'சார் வண்டிய எடுங்க...' என்று எரிச்சலுடன் இறைய காருக்குள் அமர்ந்து முன்னேறினான். எதிர்திசையில் வரும் வாகனங்கள் சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்ததால் ஒருவழிப் பாதை இருவழிப் பாதையாக அதுவரை காத்திருந்த வாகனங்கள் எல்லாம் முழுவேகத்துடன் முன்னேறின. 

ராஜசேகரும் அதே வேகத்தில் செல்லவேண்டியிருந்தாலும் மாதவியின் வீட்டைக் கடந்தபோது அங்கு குழுமியிருந்த காவல்துறையினரை பார்க்க முடிந்தது. 'காரை எங்கயாச்சும் பார்க் பண்ண முடிஞ்சா என்னன்னு விசாரிச்சிட்டு போயிரலாமே' என்று நினைத்தவாறு சாலையின் இருபுறமும் பார்த்தான்... அவனுடைய வாகனத்தை நிறுத்த இடம் இருந்தாலும் அதை நெருங்க முடியாத அளவுக்கு வாகனங்கள் மறித்துக்கொண்டு காத்திருக்கவே வேறு வழியின்றி வாகனங்களோடு சேர்ந்து செல்ல வேண்டியிருந்தது...

மணி ஏற்கனவே பத்தரையை கடந்திருந்ததை உணர்ந்த ராஜசேகர் அந்த பகுதியைக் கடந்ததும் முழுவேகத்துடன் செலுத்தி நீதிமன்றத்தை அடைந்தான். அவனுடைய வாகனம் வளாகத்தில் நுழைந்ததைப் பார்த்ததுமே அதை நோக்கி ஓடிவந்தான் அவனுடைய குமாஸ்தா நாகவேலு. 'என்ன சார்... இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க? அந்த பார்ட்டி புலம்பி தள்ளிட்டான் சார்... ஏற்கனவே மூனுதரம் வாய்தா வாங்கியாச்சுங்களே... எங்க ஒங்க வக்கீல காணம்னு..' என்றவன் ராஜசேகரின் முகத்தை பார்த்துவிட்டு, 'என்ன சார் ஏதாச்சும் பிரச்சினையா முகத்துல சவக்களை அடிக்குதே..'  என்றான் நக்கலாக...

ராஜசேகர் முறைத்தான். 'யோவ் அதிகப்பிரசங்கித்தனமா பேசாம போ... அந்த பார்ட்டிய போயி பெஞ்சுல ஒக்காரச் சொல்லு... நீ இந்த கேஸ் கட்ட புடி... நான் பாத்ரூம்வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்...'

அன்று விசாரனைக்கு வந்த அவனுடைய இரண்டு வழக்குகளிலும் ராஜசேகர் செய்த குளறுபடியால் தலைமை வகித்த இரு மஜிஸ்திரேட்டுகளிடத்திலும் திட்டு வாங்கினான். 

'என்னாச்சி சார்.. வீட்ல ஏதாச்சும் பிரச்சினையா? என்று காதைக் கடித்த குமாஸ்தாவை முறைத்தான்.

'இல்லைய்யா... ஒடம்புக்குத்தான் சரியில்ல...நா கெளம்பி ஆஃபீசுக்கு போறன்... நீ நம்ம க்ளையண்டுகள சமாதானப்படுத்திட்டு வா... அப்பீல்ல பாத்துக்கலாம்னு சொல்லு....' 

அலுவலகத்திற்கு வரும் வழியில் அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக வாங்கினான்.

நல்ல வேளையாக அவன் அலுவலகத்தை சென்றடைந்தபோது வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. குளிர்சாதன பெட்டியை ஆன் செய்துவிட்டு முதலில் தமிழ் பத்திரிகையை விரித்தான். இத்தகைய செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி இட்டிருந்ததைப் பார்த்தான்.

'தனியே இருந்த மாஜி சினிமா நடிகை அடித்துக் கொலை'

சென்னை மைலாப்பூரில் தனியாக வசித்து வந்த மாதவி என்கிற முன்னாள் சினிமா துணை நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின் மண்டையில் பலத்த காயம் இருந்ததாகவும் அதனால் நிறைய இரத்தப் போக்கு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஹாலில் இருந்த சோபா கைப்பிடியின் ஓரத்திலும் இரத்தக் கறை இருந்ததால் அவர் அதன் மீது விழுந்து அடிபட்டிருக்கலாம் அல்லது யாரேனும் அவரை பலவந்தமாக பிடித்து தள்ளியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

கொலையாளி.

நேற்று இரவு சுமார் ஏழு மணியளவில் மாதவியின் வீட்டிலிருந்து  சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியேறியதை நேரில் கண்டதாக ஒரு பெண் போலீசாரிடம் கூறியதாகவும் தெரிகிறது. போலீசார் கொலையுண்ட நடிகையின் வேலைக்காரியிடமும் விசாரணை.

...

ராத்திரி ஏழு மணிக்கா? நாம அங்க போயி வந்ததுக்கப்புறம் வேற எவனாச்சும் போயிருப்பானோ? இது என்ன புது குழப்பம் என்று நினைத்தான் ராஜசேகர்.

தொடரும்...

7 comments:

வே.நடனசபாபதி said...

நான் எதிர்பார்த்தது போலவே மாதவி கொலையுண்டிருக்கிறாள். அந்த பழி வழக்கறிஞர் மேல் விழுமா? காத்திருக்கிறேன் ஆவலுடன்.

ராஜி said...

எதிர்பாராத முடிச்சு அந்த 50 வயதான ஆள். யாரா இருக்கும்?! ஒரு வேளை அந்த பொண்ணோட அப்பாவா?! மகளின் நடத்தை சரியில்லைன்னு அடிக்கும்போது கீழ விழுந்து மரணமா?!

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
நான் எதிர்பார்த்தது போலவே மாதவி கொலையுண்டிருக்கிறாள். அந்த பழி வழக்கறிஞர் மேல் விழுமா? காத்திருக்கிறேன் ஆவலுடன்.//

உங்களுடைய ஆர்வம் நீங்கள் எனக்கு அளிக்கும் உற்சாக டானிக். மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

ராஜி said...
எதிர்பாராத முடிச்சு அந்த 50 வயதான ஆள். யாரா இருக்கும்?! ஒரு வேளை அந்த பொண்ணோட அப்பாவா?! மகளின் நடத்தை சரியில்லைன்னு அடிக்கும்போது கீழ விழுந்து மரணமா?!//

ஆஹா... அப்படியும் ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கலாம் போலருக்கே....

G.M Balasubramaniam said...


தவறு செய்துவிட்ட மனிதனின் எண்ண ஓட்டங்களை அழகாக வெளிக்கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

Sasi Kala said...

அப்ப இந்த மனிதர் தள்ளியதால் இறக்கவில்லை போல...

டிபிஆர்.ஜோசப் said...

si Kala said...
அப்ப இந்த மனிதர் தள்ளியதால் இறக்கவில்லை போல...//

அப்படீன்னு அவர் நினைச்சிக்கறார்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... தொடர்ந்து படிங்க...