16 ஜூலை 2007

வங்கி தில்லுமுல்லுகள் - 2

வங்கிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று துவங்கியது நினைவிருக்கலாம்.

ஆனால் நேரமின்மை காரணமாகவும் இத்தொடரின் முதல் பதிவை என் நெருங்கிய நண்பர்கள் சிலரைத் தவிர அவ்வளவாக சக வலைப்பதிவாளர்கள் யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்பதாலும் தொடர்ந்து எழுத மனமில்லாமல் நிறுத்தியிருந்தேன்.

ஆனால் என்னுடைய முதல் புத்தகத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவில் நண்பர் 'சாம்பார்வடை' கடந்த வெள்ளியன்று செய்தித்தாள்களில் வெளிவந்த ஒரு நூதன மோசடியைப் பற்றி குறிப்பிட்டு என்னுடைய கருத்தைக் கேட்டிருந்ததால் இத்தொடரின் அடுத்த பதிவை எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

நண்பர் குறிப்பிட்ட வங்கி மோசடியில் அத்தனை பெரிதாக நூதனம் ஏதும் இல்லை. ஆனால் இதுபோன்ற மோசடிகள் நடப்பதற்கு பெரும்பாலும் சம்பந்தப்பட்ட வங்கியில் நடைமுறையிலுள்ள விதிமுறைகளை அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரிவர கடைபிடிக்க தவறுவதுதான் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. மேலும் இத்தகைய வங்கிகளில் கணினியின் ஆதிக்கம் அதிகமாகிப் போய் மனிதர்கள் marginalise செய்யப்படுவதன் விளைவும் இதற்குக் காரணம் என்று கருதுகிறேன்.

வங்கிகள் தற்சமயம் வழங்கிவரும் தனிநபர் கடன்களில் மிக முக்கியமானது வீட்டு வசதிக் கடன். எங்களுடையதைப் போன்ற முதல் தலைமுறை தனியார் வங்கிகளில் மட்டுமல்லாமல் அரசுடமை வங்கிகளிலும் இத்தகைய கடன்களை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களை தெரிவு செய்வதிலிருந்து கடன் வழங்கி, வசூலித்து முடிக்கும் வரை வங்கிக் கிளைகளில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் வழியாகவே சகல பரிவர்த்தனைகளும் நடக்கின்றன.

ஆனால் இரண்டாம் தலைமுறை வங்கிகள் அப்படியல்ல. வாடிக்கையாளர்களை தெரிவு செய்வது வங்கியல்லாத நிறுவனங்களாக இருக்கும். இவர்களை Direct Selling Agents என அழைப்பதுண்டு. வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் வங்கிகளில் கிடைக்கும் கடன் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி மிகைப்படுத்தி சொல்வது, வேண்டாம் என்பவர்களையும் நிர்பந்தித்து வீடுவரை சென்று காண்பது, அவர்களை தங்களுடைய சாதுரியமான பேச்சால் வசியப்படுத்தி வங்கி விண்ணப்பப் படிவங்களில் கையொப்பம் பெற்று அவர்களைக் குறித்து முழுவதுமாக விசாரிக்காமல் அவர்கள் கடன் பெறுவதற்கு முழு தகுதியும் உள்ளவர்களே என்று சான்றிதழுடன் அவர்களுடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வது என கடன் பெறுவதற்காக மட்டும் வங்கிக்கு ஒருமுறை சென்றால் போதும் என்ற சூழலை உருவாக்குவது இவர்களது பணி. இவர்களுடைய பரிந்துரையை ஏற்று கடன் வழங்கப்படும் பட்சத்தில் இவர்களுக்குண்டான கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு கழன்றுக்கொள்வார்கள்.

சாதாரணமாக இத்தகைய வீட்டு வசதிக் கடன்களுக்கு ஆதாரம் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரம்தான். வங்கிகளில் அடகு வைக்கப்படும் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள் கடன் வழங்கப்பட்ட கிளையிலேயே சேஃப்ட்டி லாக்கரில் வைக்கப்படுவது வழக்கம். என்னென்ன பத்திரங்கள் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் அதற்கென வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் குறிக்கப்பட்டு கடந்தாரரும் கிளை மேலாளரும் கையொப்பமிடுவார்கள். பத்திரம் வைக்கப்பட்டுள்ள சேஃப்ட்டி லாக்கரை மேலாளரும் அவருடன் சேர்ந்து வேறொரு துணை அதிகாரியும் இல்லாமல் திறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் வரும் உள் தணிக்கையாளர்கள் (Internal Inspectors) கிளையிலிருந்து அசையா சொத்துக்களின் மீது வழங்கப்பட்டுள்ள சகல கடன்களுக்கும் (வீட்டு வசதிக் கடனும் இதில் அடங்கும்) ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்து பத்திரங்கள் லாக்கரில் உள்ளதா என்றும் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது நியதி.

கடனை மாதா மாதம் வாடிக்கையாளரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ ரொக்கமாகவோ காசோலையாகவோ வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும். அதை வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வசூலிக்க எந்த வங்கி ஊழியருக்கும் அதிகாரம் அளிக்கப்படுவதில்லை. இது கிளை மேலாளருக்கும் பொருந்தும். அப்படியே பெற்றுக்கொண்டாலும் வங்கியின் பெயருக்கு அளிக்கப்பட்டுள்ள காசோலையாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். காசோலையை வரவு வைத்ததும் தங்களுடைய கணக்கில் இன்ன தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என வாடிக்கையாளருக்கு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து தவணை செலுத்தாத வாடிக்கையாளருக்கு வங்கியே நேரடியாக கடிதம் எழுதவோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ முயலுமமே தவிர சில வங்கிகள் செய்வதுபோன்று அடியாட்களை ஏவிவிடுவதில்லை. மூன்று மாதங்கள் தொடர்ந்து செலுத்தப்படாத கணக்குகள் செயலிழந்த கடன்களாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க துவங்கும். சில கிளை மேலாளர்கள் அதிகப்பிரசங்கித்தனமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகையை அவர்களுடைய புகைப்படத்துடன் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிடுவதும் உண்டு.

கடன் முழுவதும் அடைத்து தீர்க்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரங்களை சேஃப்டி லாக்கரில் இருந்து எடுத்து சம்பந்தப்பட்ட கடந்தாரரிடம் முன்பு பதிந்து வைத்திருந்த புத்தகத்தில் 'பெற்றுக்கொண்டேன்' என்று கையொப்பம் பெற்றுக்கொண்டு திருப்பி வழங்கிவிடுவார்கள்.

இதுதான் எங்களைப் போன்ற முதல் தலைமுறை மற்றும் அரசு வங்கிகளில் கடைபிடித்து வரும் நடைமுறை.

ஆகவே செய்தித்தாளில் வந்துள்ளது போன்ற மோசடி இத்தகைய வங்கிகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் சமீப காலத்தில் துவங்கப்பட்ட இரண்டாம் தலைமுறை வங்கிகள் தங்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் முழுவதையும் கணினிமயமாக்கியதுடன் கடன் வழங்கும் முறைகளையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளன. அதாவது வங்கி கிளைகள் சேமிப்பு திரட்டும் மற்றும் கடன் வசூலிக்கும் இயந்திரங்களாகவே இயங்கி வருகின்றன.

கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பது, அனுமதி வழங்குவது (sanction) மட்டுமல்லாமல் கடன் தொகை பைசல் செய்வது போன்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் மத்திய அலுவலகத்திலிருந்தே மென்பொருள் வழியாக நடத்தப்படுகின்றன. வங்கி கிளை மேலாளர்களுடைய வேலை சம்பந்தப்பட்ட கடன்களூக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்து ஆவணங்களை பெற்று மத்திய அலுவலகங்களூக்கு அனுப்பி வைப்பதுடன் முடிந்துவிடுகிறது. கடனை சரிவர திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கவும் வெளியாட்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவதால் வங்கி சம்பந்தப்படாத எவர் வேண்டுமானாலும் ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கலாம் என்ற சூழல்.

கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் கூட உடனே அடகு வைக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கப்படுவதில்லை. அது மத்திய அலுவலகத்திலிருந்து வந்து சேரவே சில சமயங்களில் இரண்டு, மூன்று வாரங்கள் ஆகிவிடுவதுண்டு.

இத்தகைய ஒழுங்கற்ற அல்லது நடைமுறைக்கு ஒத்துவராத நியதிகளே நேற்றைய செய்தித்தாளில் வெளியான மோசடிகளுக்கு வித்திடுகின்றன என்றால் மிகையாகாது.

ஆனால் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதுபோன்று ஒரு ஜூனியர் அதிகாரியின் மின்னஞ்சலை நம்பி வங்கியின் மத்திய அலுவலகம் சொத்து ஆவணங்கள் அவருக்கு அனுப்பி வைத்தன என்பதை நம்புவதற்கில்லை.

மேலும் சுமார் ரூ.75 லட்சம் வரை அவர் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வசூலித்து அதை கபளீகரம் செய்தார் என்பதும் தன்னிடமிருந்த ஆவணங்களை தனியார்களிடம் அடகு வைத்து கடன் பெற்றார் என்பதும் கூட நம்ப முடியவில்லை.

ஆகவே முழுமையான போலீஸ் விசாரனைக்குப் பிறகே உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவரும்.

**********

12 கருத்துகள்:

  1. அணைவருக்கும் பயனலிக்கும் சிறப்பான தொடர், தொடர்ந்து எழுதுங்கள்.

    http://vaazkaipayanam.wordpress.com/

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிபிஆர் அவர்களே. இந்தத் தொடரும் விரும்பி (பலராலும்) படிக்கப்படும் என நினைக்கிறேன்.

    மேலும் - இன்னும் ஓய்வு பெறாத நிலையில் - உங்கள் வங்கி வேலை அனுபவங்களை இப்படி பப்ளிக்காக டைரியாக எழுதுவதில் சங்கடங்கள் உண்டா? பல நிறுவனங்கள் (மென்பொருள் துறை) - தற்போது ப்ளாக் பாலிசி என்றே வைத்து, அலுவலகம் சம்பந்தப்பட்ட செய்திகளையோ, வாடிக்கையாளர் விஷயங்களையோ வெளியிட தடை ஏற்படுத்தியுள்ளனர்.

    பெரும்பாலான எழுத்தாளர்கள் முன்பு வங்கியிலோ, அரசு அலுவலகத்திலோ வேலை செய்து வந்தனர். எழுத்து மூலம் வரும் வருமானத்தை ஏற்க வங்கியோ, அரசு அலுவலகமோ அனுமதிப்பதுண்டா ? தனியார் துறையில் இதற்கு தடைகள் உண்டு.

    நேரம் கிடைக்கும்போது எழுதவும். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. Saarval,

    வங்கி தில்லுமுல்லுகள் oru thodar aarambichinga, thought you will write when you get time, ippadi vitutaenu sollaringaleh, niyayama!.
    Unga blog-ku vara vangalukaavadhu koncham manasu vechu time kidaikumbodhu ezhudhunga pls. Banking backoffice work nature unga blog padichu niraiyah terindhukondaen, melum terinjhuka virupam. Saarval manasu vecha sari

    பதிலளிநீக்கு
  4. நன்றி விக்னேஷ்.

    முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க சாம்பார் வடை,

    உங்களுடைய முதல் கேள்வி:

    சங்கடம் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் நான் எழுதும் சம்பவங்கள் எல்லாம் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. மேலும் நான் விமர்சிப்பது என்னுடைய வங்கியை அல்ல. சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை மட்டுமே. சில என்னுடைய அனுபவமின்மையாலும், அணுகுமுறையிலிருந்த குறைபாடுகளாலும் நேர்ந்த அனுபவங்கள். ஆகவே இதுவரை பெரிதாக தொல்லை ஏதும் ஏற்படவில்லை. மேலும் என்னைப் பற்றி என்னுடைய வங்கியில் உள்ள பல அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

    இரண்டாவது கேள்வி. இத்தகைய புத்தகங்களை அதாவது வங்கி அலுவல் பற்றிய புத்தகங்கள் எழுதுவதில் தடை ஏதும் இல்லை. கதைகள், நாவல்கள் எழுதி வெளியிட பிரத்தியேக அனுமதி பெறவேண்டும்.

    நேரம் கிடக்கும்போதெல்லாம் நிச்சயம் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஆணி,

    Banking backoffice work nature unga blog padichu niraiyah terindhukondaen, melum terinjhuka virupam. //

    நன்றிங்க.

    Saarval manasu vecha sari //

    கண்டிப்பாக. உங்களைப் போன்றவர்களுக்காகவாவது நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  7. //சங்கடம் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் நான் எழுதும் சம்பவங்கள் எல்லாம் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. மேலும் நான் விமர்சிப்பது என்னுடைய வங்கியை அல்ல. சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை மட்டுமே. சில என்னுடைய அனுபவமின்மையாலும், அணுகுமுறையிலிருந்த குறைபாடுகளாலும் நேர்ந்த அனுபவங்கள். ஆகவே இதுவரை பெரிதாக தொல்லை ஏதும் ஏற்படவில்லை. மேலும் என்னைப் பற்றி என்னுடைய வங்கியில் உள்ள பல அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.//
    தமிழில் எழுதுவதும் பெரிய தொல்லை ஏதும் வராமலிருப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ. ஏனெனினில் ஆங்கிலப் பதிவில் உங்கள் பம்பாய் நினைவுகள் பாதியில் நின்று விட்டனவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  8. வாங்க ராகவன் சார்,

    தமிழில் எழுதுவதும் பெரிய தொல்லை ஏதும் வராமலிருப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ. //

    இருக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை.

    ஆனால் ஆங்கில பதிவுகளை நிறுத்த அதுமட்டுமே காரணமல்ல. சரியான வரவேற்பு கிடைக்காமல் போனதும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்சி ஜோசப் சார்.

    தொடருங்கள் பலரும் பலன் பெற

    பதிலளிநீக்கு
  10. நன்றி வெங்கட்ராமன்.

    பதிலளிநீக்கு