27 ஆகஸ்ட் 2013

ஊக வணிகம்தான் (Speculation) இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணமா?

கடந்த வாரம் நான் எழுதிய 'இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?' ங்கற பதிவில இந்த மாதிரியான ஏற்ற இறக்கத்துக்கு speculationனும் ஒரு முக்கிய காரணம்னு நண்பர் ஒருவர் கருத்துரையில் எழுதியிருந்தாங்க. 

அது ஓரளவுக்கு உண்மைதான். 

அதனால அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் டீப்பா பார்த்தா என்னன்னு மனசுல தோனிச்சி..

Speculationங்கற ஆங்கில வார்த்தைய அப்படியே தமிழ்ல சொல்லணும்னா ஊகம்னு சொல்லலாம். அதாவது நாளைக்கி அல்லது இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் என்ன நடக்கும்னு ஊகிக்கறது. இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லணும்னா அதாவது இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணப்போற டாப்பிக்கோட பின்னணியில சொல்லணும்னா, ஊகத்தின் அடிப்படையில் வணிகம் செய்தல் அப்படீன்னு சொல்லலாம். சுருக்கமா சொன்னா 'ஊக வணிகம்'. 

இந்த மாதிரியான வணிகம் பெரும்பாலும் பங்கு சந்தையிலதான் (share market) நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா இந்திய மற்றும் அன்னிய செலவாணி பணசந்தை (currency and forex market)கள்லயும் இது நடக்குது!

ஆனா இந்தியாவைப் பொருத்தவரையிலும் பணத்தை வைத்து வணிகம்(currency trading)  செய்வது சட்டவிரோதமாகும். அத்தகைய வணிகத்தில் ஈடுபட விரும்பறவங்க அரசாங்கத்துக்கிட்டருந்து அதுக்குன்னு லைசென்ஸ் வாங்கணும். இவங்களதான் இப்போ Authorised Money Exchangersனு சொல்றாங்க. இதுல கூட வர்த்தகம் செய்யலாம்னுதான் லைசென்ஸ் சொல்லும். அதாவது குடுத்து வாங்கலாம், அன்றைய சந்தை நிலவரப்படி. ஊக அடிப்படையில் அல்ல. இதுவும் கூட சமீப காலத்துல அறிமுகப்படுத்தப்பட்ட லைசென்ஸதான். முந்தியெல்லாம் வங்கிகள் இல்லன்னா தாமஸ் குக் மட்டுந்தான் forex trade செஞ்சிகிட்டு இருந்தாங்க. வங்கிகள தவிர இந்த exchange பிசினஸ்ல பல வருஷங்களா இருந்துவந்த கம்பெனி தாமஸ் குக். 

சரிங்க... எதுக்கு இந்த ஊக வணிகத்துல ஈடுபடறாங்க? யார், யாரெல்லாம் இதுல முக்கியமா ஈடுபடறாங்க?

முதல்ல எதுக்கு இந்த forex trade பண்றாங்கன்னு பாக்கலாம். 

இதுல ரெண்டு வகை இருக்கு.

1. பணமாற்று விகிதத்துல ஏற்பட மாற்றங்களால தங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கறதுக்கு (to protect from possible losses due to exchange fluctuations)

2.இந்த் ஏற்ற தாழ்வுகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது (to make profit out of  exchange flucations).

இத அதிகமா அன்னிய செலவாணி சந்தையிலதான் செய்யிறாங்கன்னு சொல்லலாம். 

இத இன்னும் தெளிவாக்கறதுக்கு  தினமும் சந்தையில நடக்கற சில பண வர்த்தகங்கள பாக்கலாம். இத்தகைய வணிகங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வழியாக மட்டுமெ செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வெளியூருக்கு செல்லும்போது டாலரை வாங்கும் Money exchanger இதை செய்ய முடியாது.

1அ. இந்திய இறக்குமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையிலிருந்து வாங்குபவர்கள்:

நான் வெளி நாட்டுலருந்து - அது எந்த நாடுங்கறது முக்கியமில்ல - சில மிஷின்கள இறக்குமதி பண்றேன்னு வச்சிக்குவோம். அத்தோட மொத்த மதிப்பு 1000 அமெரிக்க டாலர். நான் போட்டுருக்கற ஒப்பந்தப்படி பணத்த இன்னும் மூனு மாசத்துல குடுக்கணும். இன்னைக்கி அமெரிக்க டாலருக்கு இந்திய பணம் ரூ.65/- ரேட்ல வர்த்தகம் நடக்குது. இப்ப நாடு இருக்கற நிலமையில இந்த ரேட் இன்னும் ஏர்றதுக்கு சான்ஸ் இருக்கு.... 65/- ங்கறது மூனு மாசத்துல எழுபதோ, எழுபத்தஞ்சோ கூட ஆவலாம்னு சொல்றாங்க. இப்படியே போனா என்னோட பேமென்ட் ட்யூ ஆவறப்போ யூ எஸ் டாலர் எழுபத்தஞ்சிக்கு போனா நா 75000/- ரூபா கொடுக்க வேண்டியிருக்கும். பணமாற்று விகிதத்துல ஏற்படற மாற்றத்தால எனக்கு தேவையில்லாம பத்தாயிரம் நஷ்டம். இத தவிர்க்கறதுக்கு ஒரு வழி இருக்கு. நா என்னோட பேங்க்ல போயி எனக்கு ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது என்னோட பில் ட்யூ ஆவறப்போ நீங்க எனக்கு தேவையான ஆயிரம் டாலர இன்னைக்கி இருக்கற ரேட்டுலயே விக்கணும்னு ஒப்பந்தம்.  சாதாரணமா எக்சேஞ் ரேட் ஏறிக்கிட்டிருக்கற மார்க்கெட்ல இன்னைக்கி ரேட்டுக்கே மூனு மாசம் கழிச்சி விக்கறதுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க மாட்டாங்க. இன்னிக்கி இருக்கற ரேட்டுலருந்து ஒரு மார்ஜின் (margin) வச்சி 67-70க்குள்ள ஒரு ரேட்டுக்கு ஒப்பந்தம் போடுவாங்க. அதாவது உங்களுக்கு நஷ்டம் வேணாம் எங்களுக்கும் நஷ்டம் வேணாம்கறா மாதிரி ஒரு நடுநிலையான ரேட்டுக்கு ஒத்துக்குவாங்க. அந்த ஒப்பந்தப்படி மூனு மாசம் கழிச்சி ட்யூ டேட் வர்றப்போ எதிர்பார்த்தா மாதிரியே ரேட் எழுபத்தஞ்சிக்கு மேல போனாலும் நான் ஒப்பந்தத்துல போட்ட ரேட் படி இந்திய பணத்த குடுத்தா போறும். ஆனா நாம எதிர்பார்த்ததுக்கு எதிர்மாறா ரேட் ஏறாம அப்படியே நின்னாலும் இல்ல கொஞ்சமா ஏறியிருந்தாலும் ஒப்பந்தப்படிதான் நான் பணம் குடுத்தாவணும். இந்த ஒப்பந்தம் வழியா நா ஆயிரம் டாலர் வாங்குவேங்கறதால என்னோட பேங்குக்கு இது ஒரு sale contract. அவங்க சந்தையிலருந்து வாங்கி எனக்கு விப்பாங்க. 

1ஆ. ஏற்றுமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையில் விற்பவர்கள்.

நான் வெளிநாட்டுக்கு பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்ற வியாபாரி. சமீபத்துல அமெரிக்காவுக்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்கள ஏத்துமதி செஞ்சிருக்கேன். ஆனால் பணம் மூனு மாசம் கழிச்சித்தான் கைக்கு வரும். இப்ப இருக்கறா மாதிரி டாலரோட மதிப்பு ஏறு முகமா இல்லைன்னு வச்சிக்குவோம். 2000த்துலருந்து 2010 வரைக்கும் நிலமை அப்படித்தான் இருந்துது. அதாவது அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுல முதலீடு பண்ணா நல்லா லாபம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருந்த காலம் அது.  இந்திய ரூபாயோட மதிப்பு எங்க ஏறிடுமோன்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம். இந்திய ரூபாயோட மதிப்பு மூனு மாசத்துல ஏறிடும்கற சூழ்நிலையில எனக்கு இன்னைக்கி உடனே பணம் வந்தா ஒரு டாலருக்கு அறுபத்தஞ்சி ரூபா வீதம் ரூ.65,000/- கிடைக்கும். ஆனா டாலரோட மதிப்பு 63க்கோ இல்ல 62.5க்கோ சரிஞ்சிருச்சின்னா எனக்கு 63,000/- இல்லன்னா 62,500/- தான் கிடைக்கும். என்னோட எந்த தவறும் இல்லாம எனக்கு exchange rate மாற்றத்தால 2,500லருந்து 3000 வரைக்கும் நஷ்டம் ஏற்பட சான்ஸ் இருக்கு. அதனால நா என்னோட பேங்குக்கு  போயி ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது எனக்கு வரப்போற ஆயிரம் டாலர் பணத்த இன்னைக்கி ரேட்டுலயே மூனு மாசம் கழிச்சி வாங்கிக்கணும்னு ஒப்பந்தம். அமெரிக்க டாலரோட மதிப்பு இறங்கப் போவுதுங்கறா மாதிரி சூழ்நிலையில இந்த ரேட்டுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க வழியில்லை. ஏற்கனவே சொன்னா மாதிரி இன்னைக்கி என்ன ரேட் இருக்கோ அதுக்கும் மூனு மாசத்துக்கு அப்புறம் என்ன ரேட் இருக்கும்னு பேங்க் நினைக்கிதோ அதுக்கும் இடையில ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடுவாங்க. அது 64-62க்குள்ள இருக்கலாம். மூனு மாசம் கழிச்சி டாலரோட இந்திய மதிப்பு 61க்கு கீழ போயிருந்தாக் கூட என் கிட்ட போட்டுருக்கற ஒப்பந்தப்படி ரூ.65க்குத்தான் பேங்க் வாங்கியாகணும். நேர் மாறா டாலரோட மதிப்பு 66 ஆனாலும் எனக்கு 65,000/-தான் கிடைக்கும். பேங்க் எங்கிட்டருந்து 65000/- வாங்கற டாலருக்கு அன்னைய ரேட்டுலதான் சந்தையில வித்தாகணும். நஷ்டமோ லாபமோ பேங்குக்குத்தான், எனக்கில்ல.

இந்த ரெண்டு வர்த்தகத்துலயும் (transactions) ஒப்பந்தப்படி பண்றதால பேங்குகளுக்கு நஷ்டம் வரா மாதிரி தெரியுதேன்னு நீங்க கேக்கலாம்.

ஆனா sale ஆனாலும் purchase ஆனாலும் அதுக்கு ஈடா இன்னொரு வர்தகமும் நடக்கும். அதாவது என்னோட பேங்க் எனக்கு ஆயிரம் டாலர் விக்கணும்னா அந்த ஆயிரம் டாலர சந்தையிலருந்து வாங்கியாகணும். இந்திய பணம் மாதிரி லட்சக் கணக்குல அன்னிய செலவாணிய எந்த பேங்காலயும் கையில வச்சிக்கிட்டிருக்க முடியாது. 

இறக்குமதியாளருக்கு விக்கிறதா ஆயிரம் டாலர் ஒப்பந்தம் (forward sale contract) போடறப்போ அன்னைக்கே இன்னொரு பார்ட்டியோட (அது பேங்கா இருக்கலாம் இல்ல அவங்களோட இன்னொரு ஏற்றுமதி கஸ்டமரா இருக்கலாம். மேல சொன்ன உதாரணம் 1ஆ வில இருக்கற ஏற்றமதி கஸ்டமரோட போட்டா மாதிரி இன்னொரு பர்சேஸ் (forward purchase contract) போட்ருவாங்க. அதாவது யார்கிட்டருந்து வாங்குனாலும் அத உடனே யாருக்காவது வித்துறனும். இதுக்கு squaringனு பேங்குக்காரங்க சொல்வாங்க. purchase இல்லாத sale contractம் இருக்காது. Sale இல்லாத purchase contractம் இருக்காது. இதுக்கு squared positionனு பேரு.

ஒருநாளைக்கு பத்து பேர் கிட்ட வாங்குன டாலர அத்தனையையும் அன்னைக்கே சாயந்தரத்துக்குள்ள (close of business) யாருக்காச்சும் வித்துறணும்கறது இந்திய ரிசர்வ் வங்கியோட கன்டிஷன். ஆனா இது எல்லா சமயத்துலயும் முடியாம போயிரும். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் மாதிரி ஒரு பெரிய கம்பெனிக்கு வர்த்தகம் முடியறதுக்கு அஞ்சி நிமிஷத்துக்கு முன்னால அமெரிக்காவுலருந்து பத்து மில்லியன் டாலர் வருதுன்னு வையிங்க. அத அவங்களோட பேங்க்குக்கு வித்துடறாங்க. ஆனா வர்த்தகம் முடியற நேரத்துக்குள்ள அந்த பத்து மில்லியனையும் வாங்கறதுக்கு எந்த பேங்கும் இல்லேன்னு வையிங்க. அத அப்படியே வச்சிக்கிட்டு அடுத்த நா வர்த்தகம் துவங்குனதும் விக்கலாம். இந்த மாதிரி விக்காம வச்சிருக்கற நிலைமைக்கு open positionன்னு சொல்வாங்க. 

இந்த மாதிரியான open position ரொம்பவும் டேஞ்சரான விஷயம். உதாரணத்துக்கு நேத்து பிசினஸ் முடியற சமயத்துல வந்த பத்து மில்லியன் டாலர விக்காம வச்சிருக்கேன்னு வையிங்க. நேத்தே அத வித்திருந்தா ரூ.65க்கு வித்துருக்க்லாம். ஆனா அடுத்த நாள் காலையிலயும் விக்க முடியல. ரேட் குறைஞ்சிக்கிட்டே போயி 64 இல்லன்னா 63 ஆயிருது. ஒரு டாலருக்கு ஒரு ரூபாயிலருந்து ரெண்டு ரூபா வரைக்கும் நஷ்டம்! பத்து மில்லியனுக்கு பார்த்தா எவ்வளவு நஷ்டம்! பத்து மில்லியன் டாலர்னா  ஒரு கோடி டாலர்!!. ஒரு டாலருக்கு இரண்டு ரூபா நஷ்டம்னா ஒரே நாள்ல ஒரே வர்த்தகத்துல எனக்கு இரண்டு கோடி  நஷ்டம்! இத சின்ன பேங்குகளால தாங்க முடியாதுல்ல? அதனால ஒரு வங்கியோட net worthல இத்தன சதவிகிதத்துக்கு மேல இந்த மாதிரியான open positon வச்சிருக்கக் கூடாதுங்கற கன்டிஷன் இருக்கு. ஆனாலும் ICICI,CITI,SBI, மாதிரி பேங்குங்க இந்த லிமிட்டுக்கு மேலயும் வச்சிருப்பாங்க. அரசு வங்கிகள் இல்லாத சில பெரிய தனியார் வங்கிகள் இந்த மாதிரி open positionன வேணும்னே வச்சிருப்பாங்க. அதாவது நாளைக்கு ரேட் ஏறும்கற ஊகத்துல லாபம் பண்ற நோக்கத்தோட வச்சிக்கிட்டுருப்பாங்களாம். 

இந்த மாதிரியான open position வச்சிருக்கற பேங்குகளுக்கு மட்டுமில்லாம நாட்டோட பணத்தோட மதிப்புக்கும் பெரிய சவாலா இருக்கற விஷயம். இது எல்லை மீறி போவுதுங்கற சந்தேகம் ரிசர்வ் வங்கிக்கு வந்தா உடனே அந்தமாதிரியான பேங்குகள கூப்ட்டு எச்சரிப்பாங்க. போன ரெண்டு மாசமா அநேகமா தினமும் ஸ்டேட் பாங்க் மாதிரியான பேங்குகள அவங்க கூப்ட்டு வார்ன் பண்ணிக்கிட்டே இருக்காங்களாம்.

இந்த மாதிரியா லாப நோக்கத்தோட ரிஸ்க் எடுத்து செய்யிற பிசினஸத்தான் speculative businessனு சொல்றோம். இது அளவுக்கு மீறிப் போனா அந்த பேங்குகளோட ஒட்டுமொத்த நிதிநிலைமையே மோசமாயிறக் கூட சான்ஸ் இருக்கு. இந்த மாதிரி சம்பவம் வெளிநாடுகள்ல கூட நிறைய நடந்திருக்கு. நிறைய பேங்க் இல்லன்ன நிதிநிறுவனங்கள் திவாலா ஆயிருக்கு.

சரி அடுத்து இந்த மாதிரியான speculation எப்படி ஒரு நாட்டோட பணத்தோட மதிப்பை பாதிக்குதுன்னு சுருக்கமா பாக்கலாம்.

நா மேல சொன்னா மாதிரியான forward contract போடறது ஒரு எல்லை மீறி போவுதுன்னு வையிங்க. அதாவது வெளிநாட்டுலருந்து இறக்குமதி பண்ற எல்லாருமே மூனு மாசத்துக்கப்புறம் இந்த ரேட்தான் இருக்கும்னு ஒரு ஊகத்துல ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடறாங்க. அதாவது இந்த மாதிரி ஒப்பந்தம் போடறவங்கள்ல பத்துல ஒன்பது பேர் இன்னைக்கி 65ரூபாயா இருக்கற டாலரோட மதிப்பு மூனு மாசம் கழிச்சி 68ரூபாவா ஆகப் போவுதுன்னு தீர்மானிச்சி ஒப்பந்தம் போட்டா உண்மையிலேயே அது மூனு மாசம் கழிச்சி 68லதான் போய் நிக்குமாம்! 

இத ஆங்கிலத்துல herd mentalityன்னு சொல்றாங்க. தமிழ்ல சொல்லணும்னா மந்தை செயல்பாடு... அதாவது மந்தையிலருக்கற நூறு ஆட்டுல பத்து ஆடு மேற்கு திசை பாத்து திரும்புனா அத தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கற அத்தனை ஆடுகளும் அதே திசையில திரும்புமாம்! இது நம்ம நாட்டுக்கு மட்டுமில்ல இந்த மாதிரியான வர்த்தகம் - பங்கு வர்த்தகம்னாலும் அன்னிய செலவாணி வர்த்தகம்னாலும் - பொருளாதாரத்துல மிகவும் முதிர்ந்த (matured) நாடுன்னு நாம நினைக்கற அமெரிக்கா போன்ற நாடுகளிலும் - வர்த்தகர்கள் இந்த மனநிலையிலதான் வர்த்தகம் செய்வாங்க. அதனாலதான் ஒருநாள்ல முதல் முதல் மார்கெட்ல இறங்கற ஆசிய நாடுகள்ல (இதுல ஜப்பான்லதான் stock exchange முதல்ல துவங்கும்) எப்படி வர்த்தகம் நடக்குதோ அவங்கள தொடர்ந்து ஐரோப்பா அவங்கள தொடர்ந்து கடைசியில வர்ற அமெரிக்காக்காரனும் அதே மாதிரிதான் வர்த்தகம் செய்வான். ஜப்பான்காரனும் முந்தா நாள் கடைசியில அமெரிக்காவுல எப்படி வர்த்தகம் முடிஞ்சிதுன்னு பார்த்துட்டு அதே trendலதான் பிசினஸ தொடங்குவானாம்!. உலக வர்த்தக மயமாக்கல் கொள்கையை கடைப்பிடிக்கற எல்லா நாடுகள்லயும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னைக்கி இந்த வலையில இந்தியா மாட்டுச்சோ அன்னையிலருந்து இந்தியாவுலயும் அதே நிலைலதான் பங்கு வர்த்தகமும் அன்னிய செலவாணி வர்த்தகமும் நடக்குது. 

Speculative trading (ஊக வணிகம்) ஒரு அளவுக்குள்ள இருந்துச்சின்னா அது நாட்டோட பொருளாதாரத்துக்கு உதவியா கூட இருக்கும். ஒரு வளரும் நாட்டுல இது நடக்கறது ரொம்பவும் சகஜம், தேவையும் கூட. ஆனா அளவுக்கு மீறுனா அமிர்தமும் நஞ்சுங்கறா மாதிரி இந்த speculative forex trade with profit motive எல்லைய மீறிப் போறதாலயும் கூட இந்திய ரூபாயின் மதிப்பு ஊகம் பண்ண முடியாத அளவுக்கு ஏறி இறங்கிக்கிட்டு இருக்கலாம். 

இத கட்டுப்படுத்தறதுக்கு ஒவ்வொரு வங்கியும் என்ன பொசிஷன்ல இருக்காங்கன்னு உடனுக்கு உடனே கண்டுபிடிக்கற வசதி ரிசர்வ் வங்கிக்கு இப்ப இல்லை. இதுதான் பெரிய துரதிர்ஷ்டம். பேங்குகளோட அன்னிய செலவாணி வர்த்தகத்த ஒரு வரைமுறைக்குள்ள கொண்டு வர்றதுக்குன்னே FEDAIனு (அன்னிய செலவாணியில் டீலர்கள் அசோசியேஷன்) ஒரு கூட்டமைப்பு இருக்கத்தான் செய்யிது. அவங்களாலயும் எல்லா பேங்குகளோட டீலிங்ஸையும் உருப்படியா மானிட்டர் (effective monitoring) பண்ண முடியலைங்கறதுதான் உண்மை. 

இதுக்கு ஒவ்வொரு வர்த்தகத்தையும் அது நடக்கறப்பவே மானிட்டர் பண்றா மாதிரி (online monitoring) ஒரு சரியான மென்பொருளை கண்டுபிடிக்கணும். உடனுக்குடனே இல்லாட்டியும் அன்றைய வர்த்தகத்தின் முடிஞ்சவுடனேயாவது (end of business day) தெரிஞ்சிக்கறா மாதிரி ஒரு வசதி இருந்தா இத ஓரளவுக்கு கட்டுக்குள்ள வச்சிக்க முடியும். வெறும் லாப நோக்கத்தோட speculative tradingல தொடர்ந்து ஈடுபடற வங்கிகள் இல்லன்னா நிதிநிறுவனங்களோட லைசென்ஸ உடனுக்குடனே சஸ்பென்ட் பண்ண முடியுறா மாதிரி வசதி இருந்தா யாரும் இந்த டிரேடிங்ல ஈடுபட தயங்குவாங்கன்னு நினைக்கிறேன்.

********** 





28 கருத்துகள்:

  1. இதைவிட முக்கிய காரணம் நாலேகால் லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் பட்டியலில் இருப்பதும், அதை பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுமே.

    20 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் நாணய மதிப்பு நம்ப முடியாத அளவுக்கு கீழே சென்றும் இன்று அந்த நாடு முன்னேறி உள்ளது.

    ஒரு நாட்டின் முன்னேற்றமும் அதன் பொருளாதார வளர்ச்சியில் நாணயத்தின் ஸ்திர தன்மையும் என்பது நாட்டின் அடிமட்டத்தில் இருந்தே உருவாக வேண்டும். நம் நாட்டின் ஆதாரம் விவசாயம்.

    விவசாயிகளுக்கு எந்த ஆதாரத்தையும், வாங்க விற்க சேமிக்க சந்தைப்படுத்த எந்த வசதிகளையும் இந்த நாட்டின் நிர்வாகம் உருவாக்கிக் கொடுத்ததே இல்லை.

    இது தவிர அடிப்படை கட்டுமானத் தொழிலில் உள்ளவர்களுக்கும் இங்கே அரசாங்கம் எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் தன் கையை ஊன்றியே காலம் காலமாக கரணம் போட்டுக் கொண்டு இந்த நாட்டை காப்பாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

    ஆனால் முகம் தெரியாமல் 50 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் உழைத்து சிறிது சிறிதாக நாட்டின் கஜானாவை நிரப்ப எவனோ ஒருவன் எங்கிருந்தோ வந்து அள்ளிக் கொண்டு போவதும், அடித்தட்டு, நடுத்தரவர்க்க மக்களின் சேமிப்பு வராக்கடனாக மாறி நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு போய்க் கொண்டு இருப்பதும் தான் நாம் பார்க்கும் பொருளாதார மேதைகள் கொண்டுள்ள பொருளாதார அறிவின் பலன் தான் இன்று அடைந்து கொண்டுஇருக்கும் துயரங்களுக்கெல்லாம் ஆதாரம்.

    பதிலளிநீக்கு
  2. ஜோசப் ஜி...! ரெம்ப சிக்கலான விசயங்கள கூட ரெம்ப சிம்பிளான லாங்குவேஜ்ல சொல்லி வர்றீங்க . சூப்பர் ..! இத மாதிரி இன்ன்னும் நிறைய விசயங்கள எழுதுங்க ஜி ...!

    பதிலளிநீக்கு
  3. அன்னிய செலாவணி பற்றியும், ஊக வணிகம் பற்றியும் இதைவிட தெளிவாக விளக்கமுடியாது என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் திரு டிபிஆர். ஜோசப் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. தெளிவான கட்டுரை. ஜோதிஜியின் கருத்தும் அருமை
    தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  5. அப்பா.... ஸ்பெகுலேடிவ் ட்ரேடிங்கில் இவ்வளவு விஷயங்களா.?விவரங்கள் பகிர்வுக்கு நன்றி. இதில் எந்த அளவுக்குப் பொருளாதாரக் கொள்கைகள் பங்கு வகிக்கின்றன என்பதும் speculation ஆகுமோ.?

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் அவர்களே,

    முன்னாள் வங்கியாளர் என்பதால் ,பங்கு சந்தை,வணிகம்,பணப்பரிமாற்று குறித்து தெளிவான விளக்கங்கள் அளிப்பீர்கள் என நினைத்தேன்,ஆனால் நீங்களும் மத்திய நிதியமைச்சக அதிகாரி போல "நழுவலாகத்தான்" உள்ளீர்கள் :-))

    இப்பதிவாவது பரவாயில்லை முந்தையப்பதிவு நிதியமைச்சகம் சொல்லுறுகிற சப்பைக்கட்டையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல "அரசு கொள்கை விளக்கமாகவே " இருந்தது :-))

    # //. அதாவது யார்கிட்டருந்து வாங்குனாலும் அத உடனே யாருக்காவது வித்துறனும். இதுக்கு squaringனு பேங்குக்காரங்க சொல்வாங்க. purchase இல்லாத sale contractம் இருக்காது. Sale இல்லாத purchase contractம் இருக்காது. இதுக்கு squared positionனு பேரு.//

    இந்தியாவில் இது சாத்தியமா? நீங்களே ஓப்பனில் வச்சிருப்பாங்கனு சொன்னாலும்,அதுக்கு சொன்ன உதாரணம் சரியா?

    இந்தியா ஒரு "நெட் இம்போர்ட்டிங் கண்ட்ரி" எனவே இங்கே ஸ்கொயரிங் சாத்தியமேயில்லை, அதுவும் இறக்குமதியாளர் முன் ஒப்பந்தங்கள் அதிகமாகவும், ஏற்று மதியாளர்கள் முன் ஒப்பந்தம் குறைவாகவும் இருக்கும்,எனவே 10 இறக்குமதி முன் ஒப்பந்தம் போட்டால், பத்து ஏற்றுமதி முன் ஒப்பந்தம் போடவே இயலாது. இதனால் "BOP" நமக்கு எதிர்மறையாகத்தான் எப்பொழுதும் இருக்கும்,எனவே தான் டாலர் மதிப்பு எப்பொழுதும் மேலே செல்கிறது, ரூபாய் கீழே செல்கிறது.

    மேலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும்பாலும் 'முன் ஒப்பந்த வியாபாரம் "செய்யாமல் டாலார் ஏறினால் லாபம் பார்க்கலாம் என செயல்படுபவர்கள் என்பதால் , வங்கிகளுக்கு முன் ஒப்பந்த டாலர் வரத்து குறைவாகவே இருக்கும், "பின்னாலடை தொழிலதிபர் " ஜோதிஜியை கேட்டால் இந்த ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுபவர்கள் கதையை சொல்லுவாரே :-))

    வங்கிகள் போடும் "முன் ஒப்பந்த வியாபாரம்" மட்டுமே சொல்லி ஸ்பெகுலேடிவ் டிரேட் என்று சொல்லிவிட்டீர்கள், அது சரி தானா?

    அந்த முன் ஒப்பந்த வியாபார ஆவணம் (பாண்ட்) பங்கு சந்தையில் "ஃபியூச்சர் ஃபாரெக்ஸ்" ஆக விற்பனையாவதால் தான் அதற்கு ஸ்பெகுலேட்டிவ் டிரேட் எனப்படுகிறது.

    //பேங்குக்கு போயி ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது எனக்கு வரப்போற ஆயிரம் டாலர் பணத்த இன்னைக்கி ரேட்டுலயே மூனு மாசம் கழிச்சி வாங்கிக்கணும்னு ஒப்பந்தம்//

    இப்படியான ஒப்பந்தங்கள் , மூலம் மட்டுமே ஸ்கொயரிங் செய்ய முடியாது , என்பதால் , மூனு மாசம் கழிச்சு டாலர் இந்த விலையில் கிடைக்கும் என ஃபியூட்சர் ஃஃபாரெக்ஸில் விற்பார்கள், பங்கு சந்தை வாடிக்கையாளர்களும் , ஒரு வேளை மூனு மாசம் கழிச்சு இந்த மதிப்பை விட டாலர் மேல போனால் லாபம் என வாங்குவார்கள், மூனு மாச டெர்ம் குளோஸ் ஆகும் வரையில் மாறி,மாறி வித்து,வாங்கி என வியாபாரம் நடக்கும், இதனால் தான் ஸ்பெகுலேட்டிவ் ஃபாரெக்ஸ் டிரேடிங் நடக்கிறது என்கிறார்கள். பெரும்பாலும் விரைவில் குளோஸ் ஆகும் ஃபியூட்சர் ஃபாரெக்ஸ் மூலமே அன்றைய அன்னிய செலவாணியின் மதிப்பு முடிவாகிறது.

    உ.ம்: மூனு மாசம் முன்ன போட்ட ஒப்பந்தம் இன்னிக்கு மாலைக்குள் மெச்சூரிட்டி ஆகிறது எனில் அதனை எந்த விலைக்கு வாங்குகிறார்கள் என்பதே "குளோசிங் டாலர் வேல்யு" ஆக அன்று இருக்கும்.

    கச்சா எண்ணைக்கும் இதான் நடைமுறை.

    டாலர் தேவைப்படும் நாடு.நிறுவனங்கள் எல்லாம் பெரும்பாலும் இத்தகைய குளோசிங் முனொப்பந்தங்களை வாங்கி டாலராக மாற்றிக்கொள்கின்றன.

    இப்படி முன் ஒப்பந்த பத்திரங்களை பங்கு சந்தையில் வியாபாரம் செய்துவிடுவதால் வங்கிக்கு நஷ்டம் இல்லை, ஒப்பந்தம் போட்ட அன்னிக்கே காசுப்பார்த்துடும் இறுதியில் லாபமோ,நஷடமோ பங்கு சந்தையில் ஃபியூச்சர் ஃபாரெக்ஸ் வாங்கி விற்பவனுக்கு தான்

    நீங்க ஹாட் கேஷாக அன்றே டிரான்ஸ்பர் ஆகும் டாலரை(ஸ்பாட் ஃபாரெக்ஸ் டிரேட்) "ரிலையன்ஸ் உதாரணம் மூலம் காட்டி , முன் ஒப்பந்த வியாபாரத்தின் ஸ்பெகுலேட்டிவை விளக்குவது பொருத்தமானது அல்ல.

    ஹி...ஹி ...முன்னர் பொருளாதாரப்பதிவுகள் சில எழுதியப்போது படித்தது, நினைவில் இருந்தே எழுதுகிறேன் , ஏதேனும் பிழைகள் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மிகவும் சிக்கலான செய்தியை எளிமையாக்கி அனைவருக்கும் புரியும்படித் தந்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  9. மேலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும்பாலும் 'முன் ஒப்பந்த வியாபாரம் "செய்யாமல் டாலார் ஏறினால் லாபம் பார்க்கலாம் என செயல்படுபவர்கள் என்பதால் , வங்கிகளுக்கு முன் ஒப்பந்த டாலர் வரத்து குறைவாகவே இருக்கும், "பின்னாலடை தொழிலதிபர் " ஜோதிஜியை கேட்டால் இந்த ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுபவர்கள் கதையை சொல்லுவாரே :-))

    ஆமாம் கதை கதையாய் சொல்லுவாரு இந்த அதிபரூரூ.........

    இந்த சமயத்தில் படித்த நடந்த இரண்டுவிசயங்கள்.

    சில மாதங்களுக்கு முன் அலுவலகத்திற்கு ஆர்பிஐ ல் இருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. சாரம்சம் என்னவென்றால் உங்களுக்கு எத்தனை மில்லியன் அமெரிக்கன் டாலர் வேண்டுமோ அதை உங்கள் சார்பாக ஆர்பிஐ வாங்கி உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்கும். வாங்கி வைத்துக் கொள்ளுங்க. தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று.

    நான் அப்பவே நினைச்சேன். நம்ம நிதி மகான்கள் வீழ்ந்து போய்க் கொண்டிருக்கும் அமெரிக்க டாலருக்கும் முட்டுக் கொடுக்க முண்டாசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று. ஆனா இங்கே ஒரு பயலும் சீண்டல. தனிப்பட்ட முறையில் வங்கி அதிகாரிகள் கூட கெஞ்சிக்கூட பார்த்தாங்க. அவங்களுக்கு அழுத்தம் எங்கிருந்து வந்ததோ?

    படித்த தகவல் இது.

    இந்தியாவின் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜுன் 30 வரை மட்டும் முன்பேர ஊக வணிகம் 11,15,326.99 கோடி அளவிற்கு நடைபெற்றது.

    2009ம் ஆண்டு இதே காலத்தில் 15 64 114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது.

    சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4 48 787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர்.

    பதிலளிநீக்கு
  10. பின்னலாடை அதிபர் அவர்களே,


    //. நம்ம நிதி மகான்கள் வீழ்ந்து போய்க் கொண்டிருக்கும் அமெரிக்க டாலருக்கும் முட்டுக் கொடுக்க முண்டாசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று//

    அப்பவும் முட்டுக்கொடுத்தாங்க, இப்பவும் கொடுக்கிறாங்க என்பதால் தான் ருபாய் சரியுது.

    அப்போ அதிகமா வந்த டாலரை வாங்கி வச்சுக்கிட்டு நாங்க அன்னிய செலவாணி கையிருப்பை அதிகரித்தோம்னு சொன்னாங்க, இப்போ கொஞ்சநாள் அன்னிய செல்வாணியை வெளியிட மாட்டோம், வெளிச்சந்தையில் வாங்குங்கன்னு கையக்கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தாங்க.

    எல்லாம் அமெரிக்க விசுவாசத்தின் வெளிப்பாடே, குவாண்டிடேடிவ் ஈசிங் போது அமெரிக்க டாலர் கொள்முதல் செய்து சரியாமல் உதவினார்கள், இப்போ க்குவாண்டிடேடிவ் ஈசிங் முடியும் போது அதுக்கு துணையாக கொஞ்ச நாள் டாலர்ர மார்க்கெட்டில் வெளியிடாமல் வைத்து தட்டுப்பாடு உருவாக்கி டாலர் மதிப்பை உயர்த்தி விடுறாங்க.

    இப்போ கொஞ்சம் நிலவரம் சூடுப்பிடித்தவுடன் ரிசர்வ் வங்கி , ஸ்டேட் பாங் மூலமாக கையிருப்பு அன்னிய செலவாணீய இறக்குது, மிக அதிகமாக டாலர் வாங்கும் எண்ணை நிறுவனங்களுக்கு தேவையான டாலரை ஸ்டேட் பாங்கில் வாங்கிக்கோங்கனு சொல்லிடுச்சு, இப்போ மட்டும் ஸ்டேட் பாங்க் எப்படி டாலர் கொடுக்கும்? எல்லாம் முன்னர் வாங்கி வச்சது தான், அதை எல்லாம் "கையிருப்பு" என பூட்டி வச்சதால,அன்னிய நிறுவன வெளியேற்றம் மற்றும் எண்னை நிறுவனங்கள் டாலர் டிரேடிங்கில் டாலர் வாங்குதல் என ருபாய் சரிந்தது.

    நல்லா சரிய விட்டு வேடிக்கைப்பார்த்த நிதியமைச்சகம் இப்போ நல்ல புள்ளையாட்டம் டாலர் மூட்டையை அவுக்குது :-))

    # //2009ம் ஆண்டு இதே காலத்தில் 15 64 114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது.

    சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4 48 787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர்.//

    நீங்க சொல்வது கம்மோடிடி , இப்போ ரூபாய் சரிய காரணமாக இருப்பது டெரிவேடிவ் யூக வணிகம் சார்ந்தது.

    உணவுப்பொருள் மற்றும் இதரப்பொருள்களின் யூக வணிகம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் பெரும்பாலும் ரூபாய் மதிப்பை சாய்க்காது, காரணம் பெரும்பாலான லிஸ்டட் கம்மோடிடி இந்தியாவுக்குள் மட்டுமே வணிகமாகும் வகை சார்ந்தவை, விலையுர் உலோகம், கச்சா எண்ணை, மினரல்ஸ், போன்ற இன்டெர்நேஷனல் ஆக டிரேட் ஆகும் கம்மோடிட்டி மட்டுமே ரூபாய் மதிப்பை பாதிக்கும்.

    பதிலளிநீக்கு
  11. பின்னலாடை அதிபர் அவர்களே,


    //. நம்ம நிதி மகான்கள் வீழ்ந்து போய்க் கொண்டிருக்கும் அமெரிக்க டாலருக்கும் முட்டுக் கொடுக்க முண்டாசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று//

    அப்பவும் முட்டுக்கொடுத்தாங்க, இப்பவும் கொடுக்கிறாங்க என்பதால் தான் ருபாய் சரியுது.

    அப்போ அதிகமா வந்த டாலரை வாங்கி வச்சுக்கிட்டு நாங்க அன்னிய செலவாணி கையிருப்பை அதிகரித்தோம்னு சொன்னாங்க, இப்போ கொஞ்சநாள் அன்னிய செல்வாணியை வெளியிட மாட்டோம், வெளிச்சந்தையில் வாங்குங்கன்னு கையக்கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தாங்க.

    எல்லாம் அமெரிக்க விசுவாசத்தின் வெளிப்பாடே, குவாண்டிடேடிவ் ஈசிங் போது அமெரிக்க டாலர் கொள்முதல் செய்து சரியாமல் உதவினார்கள், இப்போ க்குவாண்டிடேடிவ் ஈசிங் முடியும் போது அதுக்கு துணையாக கொஞ்ச நாள் டாலர்ர மார்க்கெட்டில் வெளியிடாமல் வைத்து தட்டுப்பாடு உருவாக்கி டாலர் மதிப்பை உயர்த்தி விடுறாங்க.

    இப்போ கொஞ்சம் நிலவரம் சூடுப்பிடித்தவுடன் ரிசர்வ் வங்கி , ஸ்டேட் பாங் மூலமாக கையிருப்பு அன்னிய செலவாணீய இறக்குது, மிக அதிகமாக டாலர் வாங்கும் எண்ணை நிறுவனங்களுக்கு தேவையான டாலரை ஸ்டேட் பாங்கில் வாங்கிக்கோங்கனு சொல்லிடுச்சு, இப்போ மட்டும் ஸ்டேட் பாங்க் எப்படி டாலர் கொடுக்கும்? எல்லாம் முன்னர் வாங்கி வச்சது தான், அதை எல்லாம் "கையிருப்பு" என பூட்டி வச்சதால,அன்னிய நிறுவன வெளியேற்றம் மற்றும் எண்னை நிறுவனங்கள் டாலர் டிரேடிங்கில் டாலர் வாங்குதல் என ருபாய் சரிந்தது.

    நல்லா சரிய விட்டு வேடிக்கைப்பார்த்த நிதியமைச்சகம் இப்போ நல்ல புள்ளையாட்டம் டாலர் மூட்டையை அவுக்குது :-))

    # //2009ம் ஆண்டு இதே காலத்தில் 15 64 114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது.

    சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4 48 787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர்.//

    நீங்க சொல்வது கம்மோடிடி , இப்போ ரூபாய் சரிய காரணமாக இருப்பது டெரிவேடிவ் யூக வணிகம் சார்ந்தது.

    உணவுப்பொருள் மற்றும் இதரப்பொருள்களின் யூக வணிகம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் பெரும்பாலும் ரூபாய் மதிப்பை சாய்க்காது, காரணம் பெரும்பாலான லிஸ்டட் கம்மோடிடி இந்தியாவுக்குள் மட்டுமே வணிகமாகும் வகை சார்ந்தவை, விலையுர் உலோகம், கச்சா எண்ணை, மினரல்ஸ், போன்ற இன்டெர்நேஷனல் ஆக டிரேட் ஆகும் கம்மோடிட்டி மட்டுமே ரூபாய் மதிப்பை பாதிக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ஜோதிஜி திருப்பூர் said..

    இதைவிட முக்கிய காரணம் நாலேகால் லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் பட்டியலில் இருப்பதும், அதை பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுமே.//

    வாராக்கடன் நம் பொருளாதாரத்தை வேண்டுமானால் பாதிக்கும். ஆனால் நம்முடைய ரூபாயின் மதிப்பை குறைக்கும் ஒரு நேரடி காரணியாக இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இதையும் ஆராய வேண்டிய கட்டத்தில் நம் நாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதைப்பற்றியும் சமயம் கிடைக்கும்போது ஒரு தனிப்பதிவாக எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  13. ஜீவன்சுப்பு said...
    ஜோசப் ஜி...! ரெம்ப சிக்கலான விசயங்கள கூட ரெம்ப சிம்பிளான லாங்குவேஜ்ல சொல்லி வர்றீங்க . சூப்பர் ..! இத மாதிரி இன்ன்னும் நிறைய விசயங்கள எழுதுங்க ஜி ...!//

    மிக்க நன்றிங்க. இத்தகைய கட்டுரைகளுக்கு உள்ள வரவேற்பைப் பார்க்கும்போது நாமும் ஆங்கில ப்ளாகர்களைப் போல ஏன் எழுதக்கூடாது என்று தோன்றுகிறது. நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  14. வே.நடனசபாபதி,
    ஜீவன்சிவம்,//

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  15. G.M Balasubramaniam said...

    இதில் எந்த அளவுக்குப் பொருளாதாரக் கொள்கைகள் பங்கு வகிக்கின்றன என்பதும் speculation ஆகுமோ.?//

    நாட்டின் பொருளாதார கொள்கைகளில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களும் ரூபாயின் மதிப்பை நிச்சயம் பாதிக்கத்தான் செய்யும். இதனால்தான் உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுமே அதனால் ஏற்படும் மான்யத்தால் மீண்டும் இந்திய நிதிநிலமை சீர்கெடுமோ என்ற அச்சத்தில் இன்று ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  16. நிறைய அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வவ்வால் said...

    முன்னாள் வங்கியாளர் என்பதால் ,பங்கு சந்தை,வணிகம்,பணப்பரிமாற்று குறித்து தெளிவான விளக்கங்கள் அளிப்பீர்கள் என நினைத்தேன்,ஆனால் நீங்களும் மத்திய நிதியமைச்சக அதிகாரி போல "நழுவலாகத்தான்" உள்ளீர்கள் :-))//

    இத்தகைய கட்டுரைகளை என்னுடைய வங்கி அனுபவத்தால் மட்டுமே எழுதுவது சாத்தியமில்லை. ஏனெனில் நான் என்னுடைய வங்கியின் forex deptல் பணியாற்றியதில்லை. ஆனால் அதில் சில ஆண்டுகளாக டீலராக பணியாற்றியவர் நான் எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியிலும் அதன் பிறகு கணினி இலாக்காவிலும் பணியாற்றியபோது அவர் என்னுடைய துணை அதிகாரியாக பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரிடமிருந்து forex இலாக்காவின் செயல்பாடுகளைப் பற்றி கற்றறிந்தேன்.

    அதுவும் கூட ஐந்தாண்டுகளுக்கு முன்பு. ஆகவே அந்த அனுபவமும் போறாது. ஆகவே இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் கடந்த ஓராண்டுகாலமாக இதைப் பற்றி வெளியாகியுள்ள சுற்றறிக்கைகள், செய்தி குறிப்புகளை தரவிறக்கம் செய்து படித்து, பிறகு என்னுடைய வங்கியில் சமீபத்தில் இந்த இலாக்காவுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் ஆகியவற்றையெல்லாம் படித்து அதன் பிறகுதான் நம்மைப் போன்ற பிளாகர்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லியிருக்கிறேன்.

    இந்தியா ஒரு "நெட் இம்போர்ட்டிங் கண்ட்ரி" எனவே இங்கே ஸ்கொயரிங் சாத்தியமேயில்லை,//

    வங்கிகள் போடும் "முன் ஒப்பந்த வியாபாரம்" மட்டுமே சொல்லி ஸ்பெகுலேடிவ் டிரேட் என்று சொல்லிவிட்டீர்கள்//

    அப்படி சொல்லவில்லை என்று நினைக்கிறேன். என்னுடை கட்டுரையில் இரண்டு அம்சங்களை குறிப்பிட்டுள்ளேன்.

    1. நஷ்டத்தை குறைப்பது
    2. லாபம் பார்ப்பது

    நஷ்டத்தை குறைக்கத்தான் விற்பவர்களும் வாங்குபவர்களும் forward contract போடுகிறார்கள் என்று எழுதியுள்ளேன். இதற்கு hedging என்றும் பெயர் உண்டு. தமிழில் இதை தற்காத்துக்கொள்தல் என கூறலாம்.

    நீங்கள் கூறிய derivatives, futures ஆகியவை இரண்டாவது பிரிவில் அதாவது லாபம் பார்க்கும் நோக்கில் பயன்படுத்தப்படுபவை (instruments). இத்துடன் non-deliverable forward (NDF) என்ற ஒரு instrumentம் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. இது சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற சந்தைகளில் non-convertible currencies எனப்படும் currencyகளில் ஒன்றான இந்தியா ரூபாயை மையமாக வைத்து விளையாடப்படுகிறதாம். கடந்த ஆறு மாத காலமாக இந்த வர்த்தகம்தான் நாட்டின் ரூபாய் மதிப்பை பெருமளவுக்கு சரித்துள்ளதாக கூறுகிறது Business India நாளிதழ். ஆனால் நாட்டின் அன்னிய செலவாணி மொத்த வர்த்தகத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவுதான் என்றும் கூறுகிறது அந்த கட்டுரை. அப்படியிருக்க அது எப்படி நாட்டின் ரூபாய் மதிப்பை இந்த அளவுக்கு சரிக்க முடியும் என்பது புரியவில்லை.

    ஆனாலும் இவற்றைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுத உத்தேசம். அப்போது விரிவாக பேசலாம்.

    பெரும்பாலும் விரைவில் குளோஸ் ஆகும் ஃபியூட்சர் ஃபாரெக்ஸ் மூலமே அன்றைய அன்னிய செலவாணியின் மதிப்பு முடிவாகிறது.//

    ஹி...ஹி ...முன்னர் பொருளாதாரப்பதிவுகள் சில எழுதியப்போது படித்தது, நினைவில் இருந்தே எழுதுகிறேன் , ஏதேனும் பிழைகள் இருக்கலாம்.//

    எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில் இதில் பிழைகள் இருக்கலாம் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

    ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்கள் valid pointsதான். மேலே சொன்னதுபோல இவற்றைப் பற்றியு விரைவாக சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    உங்கள் வருகைக்கும் சத்தான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    சதுக்கபூதம் மற்றும் குட்டன் அவர்களே

    பதிலளிநீக்கு
  19. ஜோதிஜி மற்றும் வவ்வால் இவர்களுக்கிடையில் நடந்த வாதப் பிரதிவாதங்களும் மிகவும் சுவையாக இருந்தன.

    இருவர் கூறியுள்ள கருத்துக்களும் மிகவும் பொருளுள்ளவைகளே.

    இதில் நான் கூற விரும்புவது என்னவென்றால்...

    நாட்டில் நடைபெறும் அன்னிய செலவாணி வர்த்தகத்தில் 98% வங்கிகளுக்கிடையில் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் சார்பில் நடைபெறும் வணிகங்கள்தான். மீதமுள்ளவை வங்கிகளுக்கிடையில் நடைபெறும் பண வர்த்தகம் (currency trading), வங்கிகள் வெளிநாட்டு பண சந்தையில் செய்யும் வணிகம் (currency trading in overseas markets), derivatives, futures, NDF conracts ஆகியவை. மத்திய அரசின் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், உலக பொருளாதார மற்றும் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பாக அமெரிக்கா எடுக்கும் முடிவுகளும் கூட உலக பண சந்தையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதும் உண்மை. நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவு பாதுகாப்பு கொள்கையால் மத்திய அரசின் மான்ய சுமை மேலும் கூடக்கூடும் என்பதும் அதனால நாட்டின் fiscal deficit மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்ற செய்தியாலும் அமெரிக்கா சிரியாவை தாக்க வாய்ப்புண்டு என்ற செய்தியாலும் இந்திய பணத்தின் மதிப்பு இன்று மேலும் சரிந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றன பிரபல வணிக செய்திகள். இதற்கு மேலும் காத்திருந்தால் ஆபத்து என்ற மனநிலையோடு இன்று காலையிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் தன்னுடைய கையிருப்பிலிருந்து அமெரிக்க டாலரை விற்க துவங்கியுள்ளது. இதை இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடர்ந்து செய்தால் இந்திய ரூபாய் மீண்டெழ வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  20. ஜோசப் அவர்களே,

    எனது கருத்தினை சரியான வகையில் எடுத்துக்கொண்ட புரிதலுக்கு நன்றி!

    //நம்மைப் போன்ற பிளாகர்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லியிருக்கிறேன். //

    முன்னாள் வங்கியாளர் என்பதால் உங்களுக்கு மேற்படி விடயங்கள் நன்கு தெரியும், தெரியாமல் இல்லை ,ஆனால் கொஞ்சம் நழுவலாக சொல்லப்போய் சிலவற்றை விட்டுவிட்டீர்கள் என நினைத்தே நான் சொன்னேன்,

    முன் ஒப்பந்த வியாபாரத்துடன் முடித்துவிட்டீர்கள், அவை எல்லாம் பங்கு சந்தையில் ஆன் லைனிலில் வர்த்தகம் ஆவதால் தான் ஸ்பெகுலேடிவ் டிரேட் நடக்கிறதென்பதை பதிவில் சொல்லவில்லை என்பதாலேயே குறிப்பிட்டேன்.

    // அதாவது லாபம் பார்க்கும் நோக்கில் பயன்படுத்தப்படுபவை (instruments). //

    இது தான் அன்னிய செலவாணி எக்ஸ்சேஞ் ரேட்டை தீர்மானிக்கிறது என்பதே கவனிக்க தக்க விடயம்.

    பங்கு சந்தையில் ஃபாரெக்ஸ் ஃபியூச்சர் பத்திரங்களின் விலையை வைத்து, ஸ்பாட் கரன்சி மார்க்கெட்டில் விலை ராலி ஆகிறது. என்ன சில பைசா விலை கம்மியா போகும். தங்கத்தின் கம்மோட்டி மார்க்கெட் மற்றும் சந்தை விலை போல ரிலேட்டட் ஆனது.

    இதனால் தான் யூக வணிகத்தால் தான் பாதிப்பு என அனைவரும் சொல்கிறார்கள்.

    தொடரும்...

    பதிலளிநீக்கு
  21. தொடர்ச்சி...

    # // நாட்டின் அன்னிய செலவாணி மொத்த வர்த்தகத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவுதான் என்றும் கூறுகிறது அந்த கட்டுரை. அப்படியிருக்க அது எப்படி நாட்டின் ரூபாய் மதிப்பை இந்த அளவுக்கு சரிக்க முடியும் என்பது புரியவில்லை. //

    இது ஒரு நல்லக்கேள்வி, ஆனால் நீங்கள் இப்படி புரியவில்லை என சொல்வது தான் ஆச்சர்யமாக இருக்கு, 5% என்றாலும் அது தான் கரன்சி வேல்யூ நிர்ணய இன்டெக்ஸாக இருக்கிறது.

    ஒரு நாட்டின் கரன்சியின் எக்ஸேஞ் ரேட் மதிப்புக்கும், அதன் உண்மை மதிப்புக்கும் நேரடியாக தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் கூட இல்லை, ஆனால் "currency monitizing" என உலக அளவில் எல்லா நாணயத்தினையும் வாங்கு திறன் மதிப்பு அடிப்படையில் ஸ்டேண்டர்டைஸ் செய்ய பொதுவான ஒரு காரணி தேவைப்படுவதால் சர்வதேச செலவாணி (டாலர்) ஒன்றின் அடிப்படையில் "இண்டர்நேஷனல் மானிட்டரி ஃபன்ட்" வகுத்துள்ள கொள்கையின் படி ,அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விலை முக்கியத்துவம் பெற்று ,ஒரு நாட்டின் நாணய மதிப்பை தீர்மானிக்கும் சக்தியாகிவிடுகிறது.

    இந்திய ரூபாய் டாலரை விட பலவீனமாக "எக்ஸ்சேஞ்ச் ரேட்" அடிப்படையில் இருந்தாலும், பர்சேசிங் பவர் பாரிட்டி" அடிப்படையில் டாலரை விட 3 மடங்கு வலிமையானது, காரணம் " domestically tradable goods and services" வாங்கி நுகர இந்தியப்பணமே போதும், நம் நாட்டில் உள்நாட்டு பொருள் மற்றும் சேவைகள் மலிவானவை, அதே நிலையை அமெரிக்காவில் அமெரிக்க டாலரின் பர்சேசிங்க் பவருடன் ஒப்பிட்டால் ,டாலர் பலவீனமாது, ஆனால் இதனை எல்லாம் சமன் படுத்த "globally tradable goods and services" மட்டும் கணக்கில் வைத்து ,அதனை வாங்க எந்த நாட்டு கரன்சிக்கு சக்தி இருக்கு என கணக்கிடும் போது இந்திய ரூபாய் செல்லாக்காசு ஆகிடுது,எனவே அதனை ஒப்பிட ஒரே வழி "அன்னிய செலவாணி மதிப்பே" எனவே தான் உலக அளவில் எக்ஸ்சேஞ் ரேட் அடிப்படையில் நாணயமதிப்பினை பொதுமை படுத்தி விடுகிறார்கள், எனவே 5% தான் நம்ம நாட்டு ஜிடிபியில் என்றாலும் பெரிய பாதிப்பை கொடுக்கும்.

    பொதுவாக உள்நாட்டு உற்பத்தி கூடிக்கொண்டு போனாலும் நம்ம ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு குறைவதாக காட்டப்படுவது இப்படி ,டாலர் மற்றும் பர்ச்சேசிங்க் பவர் பாரிட்டிக்கு அட்ஜஸ்ட் செய்யப்படுவதால் தான்.

    மேலும் நம்ம நாட்டு ஜிடிபி அளவெல்லாம் ஒரு தோராயக்கணக்கீடே :-))

    இதை விட பெரிய பெரிய உள்குத்து என்னவெனில் இந்த 5% அன்னிய செலவாணி மதிப்பை வைத்து கணக்கிட்டு நம்ம நாட்டு ,பணத்தினை டிவேல்யு செய்வதால் , பர்சேசிங் பவர் பாரிட்டியும் குறைக்கப்பட்டு, இன்ஃப்ளேஷன் அதிகம் ஆக்குறாங்க, அதாவது பொருட்களுக்கு தட்டுபாடே இல்லை என்றாலும் விலை உயரும், இதல்லாம் செய்ய சொல்லி "IMF" ஓலை அனுப்பிக்கிட்டே இருக்கும்,மற்ற நாடுகள் எல்லாம் இப்படி டிவேல்யு செய்ய, கொஞ்சம் முரண்டுப்பிடிக்கும்,ஆனால் தலையாட்டி மன்னு சிங் ,ஓலை வருதோ இல்லையோ உடனே டிவேல்யு செய்துவிடுவதால் தான் உடனுக்கு உடன் ரூபாய் சரிகிறது.

    எளிமையாக சொல்லவேண்டும் என்றால் , வெளிநாட்டு பொருளை வாங்க இந்திய ரூபாய்க்கு சக்தியில்லை, ஆனால் உள்நாட்டுப்பொருளை வாங்க சக்தி இருக்கு, ஆனால் இதனை "IMF" போன்றவை பொறுத்துக்கொள்ளாமல், வெளிநாட்டில் செல்லாதக்காசுக்கு உள்நாட்டில் என்ன மரியாதை வேண்டி இருக்கு, டீவேல்யு செய்யுடானு மிரட்டுது :-))

    //எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில் இதில் பிழைகள் இருக்கலாம் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.//

    ஹி...ஹி எல்லாம் ஒரு முன் எச்சறிக்கை தான் :-))

    #//இன்று காலையிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் தன்னுடைய கையிருப்பிலிருந்து அமெரிக்க டாலரை விற்க துவங்கியுள்ளது. இதை இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடர்ந்து செய்தால் இந்திய ரூபாய் மீண்டெழ வாய்ப்புண்டு.//

    இந்த மாத ஆரம்பத்தில் இருந்தே செய்து வருகிறது, ஆனால் இப்பொழுது தான் சரிவை தடுக்க தேவையான அளவுக்கு செய்ய ஆரம்பித்துள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் 14.5 பில்லியன் டாலர் இறக்கியுள்ளது ரிசர்வ் வங்கி, இன்னும் கொஞ்சம் கூட இறக்கி இருந்தால் ,சரியாமலே வச்சிருந்திருக்கலாம், ஆனால் அமெரிக்கா இப்போ தான் செய்தி அனுப்பி இருக்கும் போல :-))

    ப.சி இன்னிக்கு கொடுத்த விளக்கமே அரசு வேண்டும்னே தான் சரிய விட்டுள்ளது என்பதற்கு சான்று.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா1:12 AM

    ஜோசப் ஐயா, வவ்வாலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஏதோ கொஞ்சம் புரியுது. இன்னும்பல விஷயங்களை படிச்சி பாத்து தெரிஞ்சிக்க முயற்சி பண்ணறோம்.
    வவ்வால் சார், உங்களுக்கு தெரியாத துறை ஏதாவது இருக்கா?

    பதிலளிநீக்கு
  24. பங்கு சந்தையில் ஃபாரெக்ஸ் ஃபியூச்சர் பத்திரங்களின் விலையை வைத்து, ஸ்பாட் கரன்சி மார்க்கெட்டில் விலை ராலி ஆகிறது. என்ன சில பைசா விலை கம்மியா போகும். தங்கத்தின் கம்மோட்டி மார்க்கெட் மற்றும் சந்தை விலை போல ரிலேட்டட் ஆனது.//

    உண்மைதான். ஆனால் இந்த forex futures market இன்று நேற்று வந்ததல்லவே ஏறக்குறை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வந்ததுதானே. அப்போதெல்லாம் ஏற்படாத வீழ்ச்சி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏன் என்றால் என்ன சொல்வது?

    இதனால் தான் யூக வணிகத்தால் தான் பாதிப்பு என அனைவரும் சொல்கிறார்கள்.//

    இதுவும் ஒரு காரணி அவ்வளவுதான். ஆகவேதான் என்னுடைய பதிவின் தலைப்பையே ஒரு கேள்வுக் குறியுடன் அமைத்தேன்.

    நிச்சயம் இது மட்டுமே காரணி அல்ல. இந்தியாவில் இது தேர்தல் வருடம். ஆகவே மத்தியில் எவ்வளவு திறமை வாய்ந்த பிரதமரும் நிதியமைச்சரும் இருந்தாலும் இதற்கு முடிவுகட்டும் வகையில் முடிவெடுத்துவிட முடியாது. இது சந்தையில் ஆக்டிவாக உள்ளவர்களுக்கு, குறிப்பாக அன்னிய முதலீட்டாளர்களுக்கு நன்றாக தெரியும். இதுதான் தருணம் என்று நாட்டைவிட்டு வெளியேறிவிட நினைக்கின்றனர். அனைவருமே ஒரே நேரத்தில் வெளியேற நினைப்பதால்தான் இந்த சிக்கல். நம் நாட்டைப் போன்றே தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. அந்த நாட்டின் பணம் நம் ரூபாயை விடவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றன உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை. ஆக, இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல உலக பிரச்சினை. உலக மயமாக்கலின் விளைவுகளில் இதுவும் ஒன்று என்று வேண்டுமானால் கூறலாம்.

    பதிலளிநீக்கு
  25. தான் சரிவை தடுக்க தேவையான அளவுக்கு செய்ய ஆரம்பித்துள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் 14.5 பில்லியன் டாலர் இறக்கியுள்ளது ரிசர்வ் வங்கி, இன்னும் கொஞ்சம் கூட இறக்கி இருந்தால் ,சரியாமலே வச்சிருந்திருக்கலாம், //

    ரிசர்வ் வங்கியால் ரூபாயின் சரிவை இத்தகைய நடவடிக்கைகளால் தாற்காலிகமாக வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால் மத்தியில் உள்ள அரசு அதிரடியாக எதையாவது செய்ய வேண்டும். அன்னிய முதலீட்டாளர்களுடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் மீண்டும் திருப்பும் வகையில் அது இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காது என்று ஐரோப்பிய யூனியன் வங்கிகள் கூட்டமைப்பின் தலைவரே கூறிவிட்டார். ஏனாம்? இது தேர்தல் வருடமாம்! அவருக்கே தெரிகிறது இந்தியாவால் இந்த சரிவிலிருந்து அத்தனை எளிதாக மீள முடியாது என்பது. ஆனால் அதை ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இங்குள்ளவர்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  26. .N.MURALIDHARAN said...
    ஏதோ கொஞ்சம் புரியுது. இன்னும்பல விஷயங்களை படிச்சி பாத்து தெரிஞ்சிக்க முயற்சி பண்ணறோம்.//

    பார்வையற்றவர்கள் ஐந்து பேர் யானையை தடவிய கதைதான்:)) நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் என்று பெயர் எடுத்தவர்களாலேயே ஏனிந்த திடீர் சரிவு என்று அவதானிக்க முடியாமல் தடுமாறும்போது நாம் எம்மாத்திரம்?

    வவ்வால் சார், உங்களுக்கு தெரியாத துறை ஏதாவது இருக்கா?//

    அவர் ஒரு சகலகலாவில்லன் சாரி வல்லன்:))
    9:31 AM

    பதிலளிநீக்கு
  27. Very informative post. Learnt how the systems works. I remember one of my colleague’s husband resigned his job and took forex trading as his full time job. He lost about 60,000$ in three months. Now a days it is more like gambling to some than speculation. Thanks.

    பதிலளிநீக்கு
  28. //பார்வையற்றவர்கள் ஐந்து பேர் யானையை தடவிய கதைதான்:)) நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் என்று பெயர் எடுத்தவர்களாலேயே ஏனிந்த திடீர் சரிவு என்று அவதானிக்க முடியாமல் தடுமாறும்போது நாம் எம்மாத்திரம்?//

    :)
    தொலைகாட்சியிலே ஒரு பொருளாதார நிபுணர் வந்து விளக்குவார் ஐரோப்பிய நாணயத்திலே நாணய கூட்டிலே சேர்வதால் எவ்வளவு பாதிப்பு என்று ஆகவே கூடாது என்று.
    அடுத்த மாதம் இன்னொரு பொருளாதார நிபுணர் ஒருவர் வந்து ஐரோப்பிய நாணயத்திலே சேர்வதால் எவ்வளுவு நன்மைகள் கிடைக்கும் பொருளாதார முன்னேற்றம் என்று என்று விளக்கம் தருவார். தலை சுற்றும்.

    பதிலளிநீக்கு