10 டிசம்பர் 2013

PPP அடிப்படையில் இந்தியா ஜப்பானை முந்தியது!!

GDP, GNP அடிப்படையில் உலகில் ஒன்பதாவது இடத்திலுள்ள இந்தியா 'வாங்கும் திறன் ஒப்பீடு' (Purchasing Power Parity) அடிப்படையில் ஜப்பானை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறது உலக நாணய நிதியம் (IMF). 2011ம் ஆண்டு இறுதியில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GDP) இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் $ 4.46 trillion ஆகவும் ஜப்பானின் மதிப்பு $ 4.44 trillion ஆகவும் இருந்ததாம்!! 

அது என்ன வாங்கும் திறன் ஒப்பீடு?

சுருக்கமாக பார்க்கலாம்.

உலகிலுள்ள மிகப் பெரிய பொருளாதார சக்தி எனப்படும் அமெரிக்காவின்  நாணயமான டாலருடன் உலகிலுள்ள மற்ற நாடுகளின் நாணயங்களின் வாங்கும் திறனை (Purchasing Power) ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் இந்த 'வாங்கும் திறன் ஒப்பீடு.'

ஆங்கிலத்தில் இதை Purcasing Power Parity என்கிறார்கள். 

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரே நாணயம் அமெரிக்காவின் டாலர்தான் என்றால் மிகையாகாது. ஆகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் வசிப்பவர்களுடைய வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய 1986ம் வருடம், அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளின் விலையை மற்ற நாடுகளில் நிலுவையிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது  அமெரிக்காவின் பிரபல  'தி எக்கனாமிஸ்ட்'  சஞ்சிகை (Magazine).

அமெரிக்காவிலுள்ள மக்டனால்டு பர்கர் (Burger) ஒன்றின் விலையை அந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவரும் ஏனைய நாடுகளிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்ன என்பதை தோராயமாக கணக்கிட்டு Big Mac Index என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது இந்த சஞ்சிகை. அதன்படி இந்தியாவின் ரூபாய்தான் உலகிலேயே குறைத்து மதிப்பிடப்படும் நாணயம் என்று கண்டறியப்பட்டது.  

இதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மக்டனால்டு பர்கரின் சராசரி விலை $ 4.56. இந்தியாவில் அதே பர்கர் $ 1.50 கிடைக்கிறது. தற்போதைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தின் படி ஒரு டாலரின் மதிப்பு ரூ.59.98. இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த பர்கரின் விலை Rs.90/-  ($1.50x59.98).   அமெரிக்காவில் இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் Rs.273.50 ($4.56x59.98).  இதன்படி பார்த்தால் ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு Rs.19.70(90/4.56=19.70)  என்றுதான் இருக்க வேண்டும். இது அன்னிய சந்தையின் டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.40.30 குறைவு (60 - 19.70=40.30).

ஆகவேதான் இந்திய ரூபாயை the world's most underestimated currency என்கிறது இந்த கணிப்பு.  

இந்த சூத்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை (GDP)கணக்கிடும்போதுதான் அது ஜப்பானின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை மிஞ்சுகிறதாம்! 

இந்த தளத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடைய நாணயத்தின் டாலருக்கு எதிரான உண்மையான மதிப்பை உடனடியாக கணக்கிட்டும் பார்க்கும் வசதியுள்ளது. 

மக்டனால்டு பர்கர் என்பதில் மட்டுமில்லாமல்  இந்திய-அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலையிலும் இதே நிலைதான். சென்னையில் எண்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் நூற்றியெண்பது ரூபாய். இந்த அடிப்படையில் பார்த்தாலும் ஒரு டாலரின் இந்திய மதிப்பு அன்னிய செலவானி சந்தையிலுள்ள டாலரின் மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவு (80/3=26.66). எலக்ட்ரானிக் பொருட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற எல்லா பொருட்களுடைய விலையிலும் இத்தகைய கணிசமான வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

ஆனால் இது ஒரு குறியீடு மட்டுமே என்பதையும் இதை மட்டும் வைத்து ஒரு நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட்டுவிட முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இத்தகைய ஒப்பீடுகள் பை-லேட்டிரல் எனப்படும் இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பை ஒப்பிட பயன்படுவதுடன் வர்த்தக அடிப்படையில் அவ்விரு நாடுகளுக்கிடையிலும் நடைமுறையிலுள்ள நாணய மாற்று விகிதத்தில் ஒரூ நீண்டகால தாக்கத்தை (Long Term Effect) ஏற்படுத்தவும்  வாய்ப்புள்ளது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். 

இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும் (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்வி எழலாம்.

இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது இரண்டு காரணங்கள்:

1. அந்தந்த நாட்டிலுள்ள தொழிலாளர் ஊதியம் (Labour cost).

இது ஓரளவுக்குத்தான் உண்மை என்றாலும் இதுதான் மிக முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில் ஒரு தொழிலாளருக்கு வழங்கப்படுவதைப் போல மூன்று மடங்கு அதிகமான தொகை ஊதியமாக அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தொழிலாளர்  ஊதியம்(Labout Cost) பொருட்களின் இறுதி சந்தை விலையையும் ஏற்றிவிடுகிறது. 

2. இந்திய நாட்டின் கணக்கில் வராத வர்த்தகத்தின் மதிப்பு. (Hidden strength of India's parallel economy)

இந்த கறுப்புச் சந்தை இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலவீனம் எனக் கருதப்பட்டாலும் சில வேளைகளில் அதுவே நம்முடைய பலமாகவும் கருதப்படுகிறது. கணக்கில் வராத வர்த்தகர்கள் அல்லது தயாரிப்பாளர்களால்  அரசுக்கு விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி, சொத்துவரி என பலவிதங்களில் வரி செலுத்தும் நேர்மையான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் பொருட்களின் விலையை விடவும் பண்மடங்கு குறைத்து விற்க முடிகிறது. 

அத்தகைய பொருட்களுடன் போட்டிப் போடும் நிலைக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு வர்த்தகர்களும் தள்ளப்படுவதால்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சந்தையில் இந்த அளவுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்கின்றனர். மேலும் சீனாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகின் மற்றெந்த நாட்டிலும் இல்லாத உள்நாட்டு தேவைகள் (Domestic Demand) இந்தியாவில் இருப்பதும் ஒரு காரணம். இதில் இன்னொரு காரணமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில் Economies of Scale என்கிறார்கள். அதாவது இந்தியாவிலுள்ள மிக அதிக அளவிலான நுகர்வோர் தேவைகளால் (Increasing demand of the domestic consumer) பொருட்களின் தயாரிப்பும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு பொருளை அதிக தளவில் தயாரிக்கும்போது (Mass Production) அதன் தயாரிப்பு செலவையும் குறைக்க முடியும் என்கிறார்கள்.

அது எப்படி?

ஒரு பொருளை தயாரிக்க தேவைப்படும் செலவினங்களில் (Production cost) நிரந்தர செலவு (Fixed Cost) அன்றாட செலவு (Variable Cost)  என்று இரு இனங்கள் உண்டு. இதில் தொழிற்சாலையின் வாடகை, தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்காகும் பராமரிப்பு செலவுகள் மற்றும் அவற்றின் தேய்மானம் (Depreciation), உழைப்பாளரின் ஊதியம் (Labour Cost) ஆகியவை ஒரு பொருள் தயாரித்தாலும் நூறு பொருட்கள் தயாரித்தாலும் பெரிதாக மாறப்போவதில்லை. ஆகவே ஒரு பொருளை அதிக அளவில் தயாரிக்கும்போது அதன் சராசரி உற்பத்தி செலவு ( Average Production Cost) குறைகிறது. இதன் விளைவாக அவற்றின் விலையையும் கணிசமாக குறைக்க முடிகிறது. விற்பனைக்கு வரும் பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகளால் (Super Markets) ரோட்டோர சில்லறைக் கடைகளை விடவும் மலிவான விலைக்கு பொருட்களை விற்க முடிவதற்கும் இதுவே காரணம். (அதே சமயம் இத்தகைய ரோட்டோர சில்லறைக் கடைகளும் சந்தையில் இருப்பதால்தான் பல்பொருள் அங்காடிகளும் அவர்களுடன் போட்டி போடுவதற்காகவே தங்களுடைய பொருட்களின் விலையை குறைக்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மை. எதிர்வரும் காலங்களில் ரோட்டோர சில்லறைக் கடைகள் அடியோடு அழியுமானால் அப்போது பல்பொருள் அங்காடிகளின் ஆதிக்கம் பெருகி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளதுப்போல் அவர்களுடைய (Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. )

இந்திய சந்தையில் பணவீக்கத்தின் (inflation) தாக்கத்தால் அன்றாடம் ஏறும் விலைவாசியால் பாதிக்கப்படும் நம்முடைய நுகர்வோருக்கு PPP என்பதோ வாங்கு திறன் ஒப்பீடு என்பதோ அல்லது இந்தியாவின் நாணயம்தான் உலகிலேயே குறைத்து மதிக்கப்படும் நாணயம் என்பதோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை  என்பது உண்மை. ஆனாலும் இத்தகைய ஒப்பீடுகளின் மூலம் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. 

கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய மகள் கூறுவதை கேட்டதிலிருந்து இந்தியா இந்தியாதான் என்பதை உணர முடிகிறது. என்னுடைய மலேசிய வாசத்தின்போதும் இதை முழுவதுமாக உணர முடிந்திருக்கிறது. இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும் தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.

'நான் சென்ற நாட்டில் இந்த நாடு சிறந்தது' என்று அன்று கண்ணதாசன் எழுதிய பாட்டில் வரும் வரிகள் இன்றளவும் உண்மை. 

**********

22 கருத்துகள்:


  1. ஒரே விதமான வேலைக்கு ஒரு அமெரிக்கர் பெறும் ஊதியமும் இந்தியர் பெறும் ஊதியமும் அதிக வித்தியாசமிருப்பதால் வாங்கும் திறனும் வேறாகிறது. அமெரிக்காவில் சம்பாதித்து இந்தியாவில் சேமிப்பு செய்தால் அதன் மதிப்பு இன்னும் கூடுதலாகத் தெரியும். நுணுக்க மான ஒப்பீடுகள் என்றாலும் புரிதல் சற்றுக் கஷ்டமாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சகோவிற்கு வணக்கம்
    இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும் (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாட்டிற்கான காரணங்களை மிகச் சிறப்பாக தெளிவு படித்தியமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மேலும் நிறைய தெரிந்து கொண்டேன்.நன்றி.
    ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்களா! அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளை சுரண்டி தனது நாட்டில் பெட்ரோலை மிக மலிவான விலையில் கொடுக்கிறது என்று ஏதோ ஒரு புரச்சிகாரரின் கட்டுரைய படித்து அதையல்லவா நம்பியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பல புதிய தகவல்களை கூறுகிறீர்கள். நன்றி ,பொருளாதாரத்தின் மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:33 AM

    Mt Joseph,

    In the USA one litre of petrol is
    87 cents. i.e. R 50. Once gallon of petrol is around $3 which is 3.875 litres. In COSTCO, where I buy milk for the last 10 years , one litre is 50 cents. The PPP is mainly due to labor expenses than the commodity prices. Also you should take into account how many minutes an employee has to work to earn a macdonalds meal in the USA and India. Somehoe I find USA is a very cheap place to live except for medical expenses.
    Rajagopal

    பதிலளிநீக்கு
  6. @வேகநரி அமெரிக்காவில் எங்கள் மாநிலத்தில்தான் பெட் ரோல் விலை மிக குறைவு $ 3. 40 மற்ற மாநிலங்களில் 4 டாலருக்கும் மேல்

    பதிலளிநீக்கு
  7. அமெரிக்காவில் பர்கர் மட்டும் வாங்கினால் விலை குறைவுதான் ஆனால் அதோடு ஃப்ரை மற்றும் பெரிய சைஸ் கோக் வாங்கினால் $ 4.50 ஆகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  8. எங்கள்(நீயூஜெர்ஸியில்) பகுதியில் ஒன் பெட் ரூம் அப்பார்ட்மெண்டிற்கு வாடகை குறைந்தது 1000 லிருந்து 1500 வரை இதை இந்த மதிப்பில் மாற்றிப்பாருங்கள் (1000 = 60995.00 Indian Rupee )

    அதனால் இங்கு வாங்கும் சம்பளத்தையும் இந்தியாவில் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்

    பதிலளிநீக்கு
  9. இங்கு ஹோட்டலில் சாப்பிட்டால் டிப்ஸ் 10 லிருந்து 15 சதவிகிதம் தரவேண்டும் என்பது எழுதப்படாத விதி அதை நம்ம ஊரில் இருந்து வரும் சில இந்தியர்களைத்தவிர அநேகம் பேர் கடைபிடிக்கிறார்கள்.. 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் 10 லிருந்து 15 டாலர் டிப்ஸ் இப்ப கணக்கு பாருங்க


    அது போல மருந்து மாத்திரைகளுக்கு இங்கு மக்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்பது பற்றி உங்கள் பொண்ணு சொல்லவில்லை போலும்.

    என் மனைவிக்கு லேசிக் சர்ஜரி சென்னையில் பண்ணினோம் அங்கு அவர்களுக்கு கொடுத்த தொகை 2 கண்களுக்கும் சேர்த்து 3 வருடங்களுக்கு முன்னால் 500 டாலர்தான். அதே சர்ஜரி இங்கு ஒரு கண்ணிற்கு 1500 டாலர் ஆகும்

    பதிலளிநீக்கு

  10. ‘வாங்கும் திறன் ஒப்பீடு’ பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எல்லோரும் புரிந்துகொள்ள முடியாத/புரிந்துகொள்ள சிரமப்படுகின்ற ஒன்றை வெகு எளிதாக விளக்கியமைக்கு நன்றி.

    //இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும் தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.//

    உண்மைதான். ‘எந்த ஊரானாலும் நம்ம ஊர் போலாகுமா?’ என்பது சரியே.

    பதிலளிநீக்கு
  11. //(Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. //

    அப்படி இந்தியாவில் நடக்காது என்று நினைக்கிறேன். இங்கு அதிகமான பொருட்கள் வெளிநாட்டுப் பொருட்களே. இந்தியாவில் உள்நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் இந்த கடைகளால் விற்க முடியாது. குறிப்பிட்ட தரத்துக்கு, குறிப்பிட்ட உற்பத்தியாளர்களால் செய்யப்படும் பொருட்களே இந்த கடைகளில் இருக்கமுடியும். As long as, if consumers are benefitted, without affecting their day to day life, it will be good.

    பதிலளிநீக்கு
  12. நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. ///மகிழ்சியான செய்திதான்

    பதிலளிநீக்கு
  13. G.M Balasubramaniam said...

    ஒரே விதமான வேலைக்கு ஒரு அமெரிக்கர் பெறும் ஊதியமும் இந்தியர் பெறும் ஊதியமும் அதிக வித்தியாசமிருப்பதால்

    வாங்கும் திறனும் வேறாகிறது. அமெரிக்காவில் சம்பாதித்து இந்தியாவில் சேமிப்பு செய்தால் அதன் மதிப்பு இன்னும்

    கூடுதலாகத் தெரியும். நுணுக்க மான ஒப்பீடுகள் என்றாலும் புரிதல் சற்றுக் கஷ்டமாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

    நீங்கள் சொல்ல வருவது உண்மைதான். ஆனால் அது தனிநபர் வாங்கும் திறனைப் பற்றியது. ஆனால் நான் சொல்ல

    முயன்றது நாணயத்தின் உண்மை மதிப்பைப் பற்றி. தனிநபர் வாங்கும் திறன் என்பது அவரவர் ஊதியத்தை அல்லது

    வருமானத்தைப் பொருத்தது. ஆனால் நாணயத்தின் மதிப்பு என்பது அனைவர் கையிலும் ஒன்றுதான் அல்லவா?

    அதைத்தான் Purchasing Power Parity கணிக்கிறது. ஒரு ரூபாயின் மதிப்பு குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஒன்றுதானே. பொருளாதார சித்தாந்தம் என்பதே தலைசுற்றுகிற விஷயம்தான். Principles of Economicsசில் கூறியுள்ள சிலவற்றை படித்தால் இதுவெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  14. அ. பாண்டியன் said...
    சகோவிற்கு வணக்கம்
    இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும்

    (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாட்டிற்கான காரணங்களை மிகச் சிறப்பாக தெளிவு படித்தியமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். தொடருங்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  15. வேகநரி said...
    மேலும் நிறைய தெரிந்து கொண்டேன்.நன்றி.
    ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்களா! அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளை சுரண்டி

    தனது நாட்டில் பெட்ரோலை மிக மலிவான விலையில் கொடுக்கிறது என்று ஏதோ ஒரு புரச்சிகாரரின் கட்டுரைய படித்து

    அதையல்லவா நம்பியிருந்தேன்.//

    அமெரிக்காவின் per capita income (சராசரி ஆண்டு வருமானம்) சுமார் ஐம்பதாயிரம் டாலர்கள். அதாவது

    மாதத்திற்கு நான்காயிரம் டாலர்கள். தினம் ஒன்றுக்கு சுமார் நூற்றைம்பது டாலர்கள். இந்த சூழலில் அங்கு நிலவும்

    பெட்ரோல் விலை ஒன்றும் அதிகமல்ல. மேலும் அங்கு ஒரு காலன் பெட்ரோல் விலைதான் சுமார் மூன்றிலிருந்து

    நான்கரை டாலர்கள். ஒரு காலன் என்பது சுமார் 3.85 லிட்டர்கள். ஆகவே நான் எழுதியிருந்தது தவறுதான். இருப்பினும்
    அந்த விகிதத்திலும் இந்தியாவிலுள்ளதை விட அத்தனை மலிவு அல்ல ஏனெனில் அப்போதும் ஒரு லிட்டருக்கு சுமார்
    ஒரு அமெரிக்க டாலர் ஆகிறது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  16. 7:38 PM
    டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    பல புதிய தகவல்களை கூறுகிறீர்கள். நன்றி ,பொருளாதாரத்தின் மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்கி விட்டீர்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. பொருளாதரம் மிகவும் சுவாரஸ்யமான சப்ஜெக்ட்தான். நம் வாழ்வில் நடக்கும்

    ஒவ்வொரு சாதாரண நிகழ்வுகளுக்கும் பொருளாதாரத்தில் விளக்கங்கள் உள்ளன. அதைப்பற்றியும் கூட எழுதலாம் என்று
    நினைத்திருக்கிறேன். கல்லூரியில் படித்தபோது போரடித்த பொருளாதாரம் இப்போது ருசிக்கத்தான் செய்கிறது. அன்று அதில் ஈடுபாடில்லாமல் இருந்ததால்தான் கசந்தது போலும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  17. Anonymous said...
    Mt Joseph,

    In the USA one litre of petrol is
    87 cents. i.e. R 50. Once gallon of petrol is around $3 which is 3.875 litres. In COSTCO, where I buy milk for the last 10 years , one litre is 50 cents. The PPP is mainly due to labor expenses than the commodity prices. Also you should take into
    account how many minutes an employee has to work to earn a macdonalds meal in the USA and India. Somehoe I find USA is a very cheap place to live except for medical

    expenses.
    Rajagopal//

    You may be right. I took the petrol pricing from http://www.eia.gov/petroleum/gasdiesel/. I failed to note that it is the cost of one gallon, not one litre. Even then it is not so cheap when compared to the cost in India. It should also be mentioned here that main reason for the cheap fuel in
    india is the Govt. subsidy.

    However, this post is not to discuss about a person's capacity to purchase. It mainly depends on the person's income. A person working and earning in US dollar may not find the cost of living too much. But for an Indian who is working in US but paid in INR, it is indeed costly.

    But PPP talks only about the value of one country's currency in comparison with the

    another country's currency. Only in that sense it is found that the India's currency is the most undervalued currency in the world.

    My observations that India's is the cheapest place in the world may not be that relevant in this context. What I meant is it is easy for anyone to survive in a country like India. It is not the same elsewhere.

    Thanks for your comments.

    பதிலளிநீக்கு

  18. Avargal Unmaigal said...
    @வேகநரி அமெரிக்காவில் எங்கள் மாநிலத்தில்தான் பெட் ரோல் விலை மிக குறைவு $ 3. 40 மற்ற மாநிலங்களில் 4 டாலருக்கும் மேல்//

    உண்மைதான்.

    5:35 AM
    Avargal Unmaigal said...
    அமெரிக்காவில் பர்கர் மட்டும் வாங்கினால் விலை குறைவுதான் ஆனால் அதோடு ஃப்ரை மற்றும் பெரிய சைஸ் கோக் வாங்கினால் $ 4.50 ஆகத்தான் இருக்கும்.//

    அதே சமயம் வால்மார்ட்டில் ஒரு பர்கர் ஒரு டாலருக்கும் கிடைக்கும் என்கிறார் என் மகள்.

    5:40 AM
    Avargal Unmaigal said...
    எங்கள்(நீயூஜெர்ஸியில்) பகுதியில் ஒன் பெட் ரூம் அப்பார்ட்மெண்டிற்கு வாடகை குறைந்தது 1000 லிருந்து 1500 வரை இதை இந்த மதிப்பில் மாற்றிப்பாருங்கள் (1000 = 60995.00 Indian Rupee )

    அதனால் இங்கு வாங்கும் சம்பளத்தையும் இந்தியாவில் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்//

    இதுதான் விஷயமே. இந்தியா ரூபாயில் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவில் ஆன்சைட்டில் வேலை
    செய்பவர்களையும் சற்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் அறுபது ரூபாய்க்கு ஒரு டாலரை ஏடிஎம் மில் எடுத்து செலவு செய்ய வேண்டிய சூழலில் ஒவ்வொரு பொருளையும் இந்திய பணத்தில்தான் பார்க்க முடியும்.

    5:44 AM
    Avargal Unmaigal said...
    இங்கு ஹோட்டலில் சாப்பிட்டால் டிப்ஸ் 10 லிருந்து 15 சதவிகிதம் தரவேண்டும் என்பது எழுதப்படாத விதி அதை நம்ம

    ஊரில் இருந்து வரும் சில இந்தியர்களைத்தவிர அநேகம் பேர் கடைபிடிக்கிறார்கள்.. 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் 10 லிருந்து 15 டாலர் டிப்ஸ் இப்ப கணக்கு பாருங்க

    அது போல மருந்து மாத்திரைகளுக்கு இங்கு மக்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்பது பற்றி உங்கள் பொண்ணு சொல்லவில்லை போலும்.

    என் மனைவிக்கு லேசிக் சர்ஜரி சென்னையில் பண்ணினோம் அங்கு அவர்களுக்கு கொடுத்த தொகை 2 கண்களுக்கும்

    சேர்த்து 3 வருடங்களுக்கு முன்னால் 500 டாலர்தான். அதே சர்ஜரி இங்கு ஒரு கண்ணிற்கு 1500 டாலர் ஆகும்//

    உங்களுக்கு தெரியாத விஷயமில்லை. அமெரிக்காவின் per capita income சுமார் ஆண்டொன்றுக்கு ஐம்பதாயிரம்
    டாலர்கள். அதுவும் கூட குறைந்தபட்ச வருமானம்தான். ஒரு மணி நேரத்திற்கு நூறிலிருந்து நூற்றைம்பது டாலர் ஊதியம் ஈட்டுபவர்களுக்கு (தினமும் எட்டு மணி நேர வேலைக்கு சுமார் ஆயிரத்து இருநூறு டாலர்கள்!!) எந்த விலைவாசியும்
    அதிகமாக தெரிவதில்லை. ஆனால் ஒரு சராசரி வேலையிலிருக்கும் அமெரிக்க வாழ் இந்தியனின் நிலை என்ன?

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  19. வே.நடனசபாபதி said...

    ‘வாங்கும் திறன் ஒப்பீடு’ பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எல்லோரும் புரிந்துகொள்ள

    முடியாத/புரிந்துகொள்ள சிரமப்படுகின்ற ஒன்றை வெகு எளிதாக விளக்கியமைக்கு நன்றி.

    //இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும்

    தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.//

    உண்மைதான். ‘எந்த ஊரானாலும் நம்ம ஊர் போலாகுமா?’ என்பது சரியே. //

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  20. 7:27 AM
    Packirisamy N said...
    //(Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. //

    அப்படி இந்தியாவில் நடக்காது என்று நினைக்கிறேன். இங்கு அதிகமான பொருட்கள் வெளிநாட்டுப் பொருட்களே.

    இந்தியாவில் உள்நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் இந்த கடைகளால் விற்க முடியாது. குறிப்பிட்ட தரத்துக்கு,

    குறிப்பிட்ட உற்பத்தியாளர்களால் செய்யப்படும் பொருட்களே இந்த கடைகளில் இருக்கமுடியும். As long as, if

    consumers are benefitted, without affecting their day to day life, it will be

    good.//

    நீங்கள் கூறுவதும் உண்மைதான். இந்தியாவில் எந்த வெளிநாட்டவர் வந்தாலும் நம்முடைய சில்லறை வணிகர்களை முழுவதுமாக வீழ்த்திவிட முடியாது. இங்கு மட்டுமே ஒவ்வொருவருக்கும் அவரவர் ஊதியத்திற்கேற்றபடி வாழ
    வழியுள்ளது. அதைத்தான் சொல்ல வந்தேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  21. கவியாழி கண்ணதாசன் said...
    நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. ///மகிழ்சியான

    செய்திதான்//

    விலைவாசி அதிகம் இல்லை என்பதும் ஒரு relative termதான். வங்கிகளில் உயர் பதவியிலிருந்து ஓய்வு
    பெற்றவர்களுக்கு கிடைக்கும் மாத ஓய்வூதியம் இப்போதும் சர்வீசில் இருக்கும் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் ஊதியத்தைவிடவும் இரு மடங்கு இருப்பதுண்டு! அத்தகையவர்களுடைய கண்ணோட்டத்தில் இந்த விலைவாசி
    அதிகமில்லைதான். ஆனால் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரும் நம்முடைய நாட்டில் உள்ளனரே! ஆனால் இத்தகையோராலும் இந்தியாவில் சமாளிக்க முடிகிறது. பல மேலை நாடுகளில் இது சாத்தியமாகாது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //ஒரு லிட்டருக்கு சுமார் ஒரு அமெரிக்க டாலர் ஆகிறது.//
    இப்போது விளக்கமாயிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ஒரு டாலர் என்றால் அது மிகவும் மலிவு தான்.எனக்கு தெரிந்த துருக்கிகாரர் சொன்னார் துருக்கியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இரண்டரை டாலர் வரும் என்று. புரச்சிகாரர் அமெரிக்காவை பற்றி சரியாக தான் சொல்லியுள்ளார்.

    //Avargal Unmaigal said...இங்கு ஹோட்டலில் சாப்பிட்டால் டிப்ஸ் 10 லிருந்து 15 சதவிகிதம் தரவேண்டும் என்பது எழுதப்படாத விதி அதை நம்ம ஊரில் இருந்து வரும் சில இந்தியர்களைத்தவிர அநேகம் பேர் கடைபிடிக்கிறார்கள்//
    ரயிலில் டிக்கட் கண்டிப்பா எடுக்க வேண்டும் அரசுக்கு வரி கட்டவேண்டும் அது என்ன ஹோட்டலில் எழுதப்படாத விதி? அமெரிக்க ஹோட்டலில் சாப்பிடுவதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு