ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.
2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகின்றனர் (calculate) என்று பார்ப்போமா?
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல. இந்தியாவின் வயது என்று சொல்ல வேண்டுமானால் அது ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த ஆண்டிலிருந்து எத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன என்பதை வைத்து சுமார் அறுபத்தியாறு வயது என்று கூறலாம் (2013-1947).
ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?
அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.
சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம். இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்.
இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.
ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.
இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.
ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.
1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),
2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),
3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.
இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன.
இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.
நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.
நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.
அது என்ன intermediary products என்று கேட்க தோன்றுகிறதல்லவா?
உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.
இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.
இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.
இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (உ.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.
உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).
ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.
ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?
அடுத்த பகுதியில்.....
அறியாதன அறிந்தோம்
பதிலளிநீக்குஎளிமையான அருமையான
விளக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குஅருமையான ஒரு விளக்கம்.
பதிலளிநீக்குGDP பற்றி பெரும்பாலோருக்கு தெரியாத தகவல்களை, எளிமையாய் எல்லோருக்கும் புரியும்படி தந்தமைக்கு நன்றி! அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல விளக்கங்கள்... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஎகனாமிக்ஸ். கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட்தான்.நன்றாக விளக்குகிறீர்கள். சுவாரசியமாகவும் உள்ளது இதுவரை தமிழில் இதுபோல் படித்ததில்லை. தொடர்கிறேன்
பதிலளிநீக்குpresent, Sir
பதிலளிநீக்குஎகனாமிக்ஸ் மாணவர்களுக்கு உதவக்கூடிய மிக பயனுள்ள பதிவு. தமிழில் எகனாமிக்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு இது போல உள்ள பதிவு மிக மிக உபயோகமாக இருக்கும். உங்கள் நேரத்தை ஒதுக்கி இது மாதிரியான பதிவுகள் இட்டதற்கு பாராட்டுக்கள்... இது போல பல பயனுள்ள பதிவுகளை எழுதுங்கள் tha.ma 3
பதிலளிநீக்குconsumer=pauneetteelar
பதிலளிநீக்குthe term 'nugarvor'has been
been used eversince the
introduction of Tamilmedium
payaneettaalar/payanaali=benificiary
ஜோசப் அவர்களே,
பதிலளிநீக்குமேற்கொண்டு போங்க ,எப்படி போகுதுதுனு பார்த்துட்டு குட்டைய கலக்குறேன் அவ்வ்!
# மற்ற நாடுகளில் எப்படியோ, ஆனால் நம்ம நாட்டில் ஜிடிபி கணக்கீடு என்பது "கப்சா" உண்மையான பொருளாதாரத்தையே காட்டாது, 90% தோராய மதிப்பீடுகளை வைத்து கணக்கிடப்படுவது, அவ்வ்.
# //2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள். //
நீங்க என்ன நினைக்கிறிங்க ,ஆம்/இல்லை என சொல்லவும் ,அதில் ஒரு சமாச்சாரம் இருக்கு.
நம்ம ஜிடிபி இறங்கவில்லை ஆனால் காகித கணக்கில் இறங்கிடுச்சு என்பது எனது அவதானிப்பு.
இன்னொரு முறை வந்து படிக்க வேண்டும் , இன்னும் புரிந்து கொள்ள. வருவேன்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அருமையான தொகுப்பு.. தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன. இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன. //
பதிலளிநீக்குதங்கள் கட்டுரையின் மூலம் ஜிடிபி (GDP) என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். நன்றி!
நண்பர்கள்
பதிலளிநீக்குதிருவாளர்கள்
எஸ். ரமணி,
வேகநரி.
வே.நடனசபாபதி,
திண்டுக்கல் தனபாலன்,
டி.என்.முரளிதரன்,
தருமி,
ரூபன் மற்றும்
தமிழ் இளங்கோ
ஆகியோருடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
தங்களுடைய மேலான மற்றும் ஆதரவான கருத்துக்கள் இத்தகைய பதிவுகளை இட மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
பதிலளிநீக்குவவ்வால் said...
ஜோசப் அவர்களே,
மேற்கொண்டு போங்க ,எப்படி போகுதுதுனு பார்த்துட்டு குட்டைய கலக்குறேன் அவ்வ்!//
அதான உங்க வேலையே :/)
# மற்ற நாடுகளில் எப்படியோ, ஆனால் நம்ம நாட்டில் ஜிடிபி கணக்கீடு என்பது "கப்சா" உண்மையான பொருளாதாரத்தையே காட்டாது, 90% தோராய மதிப்பீடுகளை வைத்து கணக்கிடப்படுவது, அவ்வ்.//
Statistics என்றாலே தோராயம்தாங்க. இந்தியா போன்ற தொலைதொடர்பு மற்றும் கணினிமயமாக்கப்படாத சூழலில் இது சற்று தூக்கலாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் சொன்னதுபோல 90 விழுக்காடு என்பது கொஞ்சம் ஓவர். மேலும் unorganised sectorஇல் செயல்படும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பும் இதிலிருந்து விடுபட்டுவிட வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. ஆகவே மத்திய அரசின் இந்த கணக்கீடு ஐந்திலிருந்து பத்து விழுக்காடு வரையிலும் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது.
# //2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள். //
நீங்க என்ன நினைக்கிறிங்க ,ஆம்/இல்லை என சொல்லவும்//
இல்லை. உண்மையில் இந்தியா இதுவரை வளர்ச்சியடைந்ததை விடவும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்க முடியுமா என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத வேண்டுமென்றுதான் இணையத்தில் தகவல்களை சேகரித்து வந்தேன். அந்த முயற்சியில் இறங்கியபோது கிடைத்த தகவல்களில் ஒன்றுதான் GDP கணக்கிடு முறை. அதையே நம் பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்றுதான் அந்த தொடரில் முதல் பதிவாக இதை எழுதினேன். இந்தியா இதுவரை அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை இத்தொடரின் இறுதிப் பகுதியில் சொல்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் கேட்டுவிட்டபடியால் சொல்கிறேன் மத்தியில் எந்த கட்சி ஆண்டிருந்தாலும் இந்தியா போன்ற ஒரு நாடால் இதை விடவும் வேகமாக வளர்ச்சியடைந்திருக்க முடியாது.
நம்ம ஜிடிபி இறங்கவில்லை ஆனால் காகித கணக்கில் இறங்கிடுச்சு என்பது எனது அவதானிப்பு.//
உங்களுடைய அவதானிப்பு ஓரளவுக்கு உண்மைதான். அதற்கு அரசு காரணமில்லை. அதாவது இது வேண்டுமென்றே செய்யப்பட்டதில்லை. இது ஒரு குறைபாடு, அவ்வளவுதான்.
பதிலளிநீக்குG.M Balasubramaniam said...
இன்னொரு முறை வந்து படிக்க வேண்டும் , இன்னும் புரிந்து கொள்ள. வருவேன்.//
கண்டிப்பா வாங்க சார். நன்றி.
பதிலளிநீக்குsiva gnanamji(#18100882083107547329) said...
consumer=pauneetteelar
the term 'nugarvor'has been
been used eversince the
introduction of Tamilmedium
payaneettaalar/payanaali=benificiary//
Yes Sir, மாற்றிவிட்டேன் :/)
GDP பற்றிய அருமையான விளக்கம்.
பதிலளிநீக்குஜோசப் அவர்களே,
பதிலளிநீக்கு// unorganised sectorஇல் செயல்படும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பும் இதிலிருந்து விடுபட்டுவிட வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. ஆகவே மத்திய அரசின் இந்த கணக்கீடு ஐந்திலிருந்து பத்து விழுக்காடு வரையிலும் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. //
unorganised sectorஇல் மட்டுமில்ல organised sectorஇலும் அதே கதை தான், தி.நகரில் உள்ள பெரும் வணிக நிறுவனங்களில் நடக்கும் உண்மையான வர்த்தக மதிப்பை கூட அரசு அறியாது அவ்வ்.
இப்படி இந்தியா முழுக்க என்ன மதிப்பில் வர்த்தகம் நடைப்பெறுதுனு யாருக்குமே தெரியாத நிலை தான் , பல கோடி புழங்கும் சினிமாவில் படம் தயாரிக்க சோர்ஸ் ஆஃப் இன்கம் என்ன, என்ன விலைக்கு படம் வித்துச்சு ,எவ்ளோ கலெக்ஷன் ஆச்சுனு வெளிப்படையாக தெரியுமா? ஏதோ சம்பதப்பட்டவர்கள் "வருமான வரிக்கட்டும் அளவை" வச்சு இதான் சினிமா வர்த்தகத்தின் மதிப்புனு அரசு கணிச்சுக்குது.
ரியல் எஸ்டேட் & கட்டுமானத்துறையிலும் இதே கதை தான், எனவே அரசு பெரும்பாலும் தோராயமத்தான் கணக்கு போடுது.
பெரும் வணீகத்திலேயே உண்மையான கணக்கு வராதப்போ சிறு வணிகத்தில் என்னப்புள்ளி விவரம் சரியா கிடைச்சிடப்போவுது.
இப்படி ஒரு தன்னிச்சையான "திரை மறைவு" பொருளாதாரம் இந்தியாவில் வலுவாக இருப்பதால் தான் ,உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும் போது கூட நம்ம நாட்டில் பெருசா பாதிப்பில்லை, நம்ம பொருளாதாரம் அகில உலக காரணிகளுக்கு அப்பாற்பட்டது :-))
விவசாயத்திலும் அப்படித்தான் ,நிலம் தரிசா கிடக்கா, விளையுதா, வெங்காயம் போட்டிருக்கா, வெள்ளைப்பூண்டா எதுக்கும் சரியான டேட்டாவே இல்லை, சும்மா அக்குத்தா இத்தினி ஏக்கர், இத்தனை விளைஞ்சதுனு "புள்ளி விவரம் தயார் செய்வாங்க :-))
உங்களுக்கு தெரியுமோ என்னவோ, விவசாய ஜிடிபி கணக்கு செய்யனு ஒவ்வொரு மாநிலத்துக்கும் , ஒரு வட்டம் தேர்வு செய்து(பயிர் வாரியாக எல்லாவற்றுக்கும் வராப்போல) ,அங்கு நடக்கிற விவசாய நடவடிக்களை மட்டும் கணக்கு வச்சு , அதனுடன் தோராயமாக கிடைக்கும் நாட்டின் டேட்டவை ஒப்பீடு செய்து பிறகு நாடு முழுவதற்கும் ஆவரேஜ் செய்து விடுகிறார்கள் :-))
எல்லாமே பேப்பர் ஒர்க் அவ்வ்!
நம் நாட்டின் பொருளாதா செயல்பாடுகள் 50%க்கு மேல் கருப்பு பணத்தில் அல்லது அன் அக்கவுண்டன்ட் மணி இல் நடக்குது , அப்புறம் எங்கே இருந்து உண்மையான ஜிடிபிய எக்ஸ்பென்டிச்சர் அடிப்படையில் கணக்கிட!
#//அதாவது இது வேண்டுமென்றே செய்யப்பட்டதில்லை. இது ஒரு குறைபாடு, அவ்வளவுதான்.//
குறைப்பாடு தானாக உருவாச்சா? உருவாக்கி வச்சுக்கிட்டாங்க. யாருக்கும் சீரமைக்க விருப்பமில்லை என்பதே உண்மை.
சைனா போன்ற நாடுகள், சைனா மட்டுமல்ல அநேக நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப இந்த GDP விஷயத்தில் அதிகமாக பொய் சொல்லுகின்றன என்று படித்திருக்கிறேன். மக்களுக்கு இன்றியமையாத் தேவைகள் கிடைத்துவிட்டால் எப்படியிருந்தால் என்ன. இருந்தாலும் இதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொண்டால்தான் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்றுபுரியும். அருமையாக விளக்கியுள்ளீர்கள். மீண்டும் படித்தால்தான் மனதில் நிற்கும். நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசென்னை பித்தன் said...
GDP பற்றிய அருமையான விளக்கம்.//
மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்குஇந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குகள் ஒரு கருத்தை உருவாக்கவே உபயோகமாகிறது.பொருளாதார நிபுணர்களின் jargon என்றே தோன்றுகிறது. உண்மையான வளர்ச்சி நீங்கள் கூறியதுபோல் என் அப்பன் இருந்த காலத்தின் நிலையையும் என் பிள்ளைகள் இருக்கும் கால நிலையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நிச்சயம் வளர்ச்சி இருக்கிறது.அரசியல் வாதிகளும் பொருளாதார நிபுணர்களும் இதை எப்படி வேண்டுமானாலும் வெளிச்சம் போட்டோ இருட்டடிப்பு செய்தோ கூற முடியும். ஆனால் சாதாரணன் ஒரு hind sight -இல் உணர்ந்து கொள்கிறான். இவற்றில் error of estimation எத்தனை சதவீதம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா.?பதிவில் பல விஷயங்கள் விளக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.