4 ம் பாகம்
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?
நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும் ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை.
ஏன்?
ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும் ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.
ஏன் இந்த அவல நிலை?
வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?
மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?
இதுதான் இன்றைய யதார்த்த நிலை..
இந்த சூழலில் தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம்.
இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளது இதுதான்.
நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.
எப்படி... ?
நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.
அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள்.
ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?
அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?
இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.
RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....
இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.
இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம்.
துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
நிறைவு.