01 ஆகஸ்ட் 2013

வாலுப் பசங்க!

நான் வசிப்பது சென்னையிலிருந்து சுமார் இருபது கி.மீ. தூரத்திலுள்ள ஆவடி என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

நான் வசிக்கும் இடத்தின் பெயர் சிந்து நகர். ஆவடி சென்ட்ரல் பஸ் ஸ்டான்டுலருந்து ஒரு கி.மீ. இருக்கும். சுமார் நூறு வீடுகள் இருக்கும் இந்த நகரிலுள்ள விசேஷம் என்னவென்றால் இங்குள்ள அனைத்து தெருக்களும் இந்தியாவிலுள்ள பிரபல ஆறுகளுடைய பெயரில் அமைந்திருப்பதுதான். இப்படி தமிழகத்தில் வேறெங்காவது இருக்குமான்னு தெரியல.

சென்னை-திருத்தனி/திருப்பதி ஹைவேலருந்து வலது பக்கம் திரும்புனா முதலில் வருவது கங்கா தெரு. அதில் சுமார் இருநூறடி நடந்தால் வலப்புறம் திரும்புவது யமுனா தெரு. அதில் சுமார் நூறடி நடந்தீங்கன்னா முதல்ல இடது பக்கம் திரும்புற தெருக்கு பேரு கோதாவரி. அதுல மறுபடியும் நூறடி நடந்தா ஒரு நூறடி தள்ளி இடது பக்கம் திரும்பறது காவேரி தெரு. அந்த தெரு கடைசியில வலது பக்கம் திரும்புனீங்கன்னா என்னுடைய ஒரு வருட வயது கொண்ட வீடு அமைந்திருக்கும் பவானி தெரு. எங்களுடைய தெருவுக்கு பின்னால் ஓடும் தெரு பொன்னி!

இந்த நகர்ல இருக்கற தெரு பெயர்களால கவரப்பட்டே இந்த இடத்த வாங்கினேன்னு கூட சொல்லலாம். ஆனா இங்க குடி வந்ததுக்கப்புறந்தான் இந்த தெருக்களுக்கு நதிகளோட பெயர் வச்சதன் பின்னணி என்னன்னு தெரிஞ்சிது! ஒரு மணி நேரம் மழை பெஞ்சா போறும், எல்லா தெருக்களுமே உண்மையான நதியா மாறிரும். அப்புறம் ஒரு அஞ்சாறு நாளைக்கு நீச்சல்தான். நம்ம காரு மேனேஜ் பண்ணிக்கிட்டு போயிரும். ஆனா டூவீலர் பாடு திண்டாட்டம்தான். நடந்து போகிறவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

சர்வீஸ்ல இருக்கறப்ப விடியற்காலையில எழுந்து வாக் போயிருவேன். சென்னை சிட்டியில இருந்ததால போன டிஎம்கே ஆட்சி காலத்துல நம்ம தளபதியோட இனிஷியேட்டிவ்ல சென்னைக்குள்ள நிறைய அழகான பார்க்குங்கள அமைச்சாங்களே, அங்க நடக்க போயிருவேன். ரம்யமான அந்த சூழல்ல நடக்கறதே தெரியாது.

ரிட்டையர் ஆனதுக்கப்புறம் ஆவடியில இருந்த ப்ளாட்டுல ஒரு வீட்ட கட்டிக்கிட்டு வந்துட்டேன். இங்க காலையில நடக்கறத கற்பனை பண்ணக்கூட முடியாது. எங்க நகருக்கு பக்கத்துலயே ரெண்டு பெரிய பள்ளிக்கூடங்க இருக்கறதால காலையில ஸ்கூல் பஸ், வேனுன்னு எல்லா ரோடும் ஒரே பரபரப்பா இருக்கும். இதுங்களுக்கிடையில மேய்ச்சலுக்கு கூட்டிக்கிட்டுப் போற ஆடு, மாடுங்க அணிவகுப்பு வேற.

என்னது, சிட்டியில மேய்ச்சலுக்கு போற மாடுகளான்னு கேக்க தோணும்.

ஆவடி சிட்டியுமில்ல, கிராமமுமில்லாம ஒரு ரெண்டுங் கெட்டான். ஹைவேயிலருந்து ஒரு கி.மீ வடக்க நடந்தா மறுபடியும் ஒரு காலத்துல பச்சை பசேல்னு இருந்த வயல்வெளி இப்போ வீட்டு மணைகளாயி முனிசிபாலிட்டி அப்ரூவல் கிடைக்காததால வெட்டியா ஏக்கர் கணக்குல கிடக்கறத பாக்கலாம். பராமரிப்பில்லாம கிடைக்கற இந்த நிலம்தான் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம். காலையில ஏழு மணிக்கு வந்தாங்கன்னா இருட்டனதுக்கப்புறந்தான் வீடு திரும்புவாங்க. அவங்களோட யாரும் வந்து நா பாத்ததில்லை. அவங்களா வருவாங்க, ஆசை தீர புல், செடிகள மேஞ்சிட்டு ஒழுங்கா வரிசையா வீட்டுக்கு திரும்பி போயிருவாங்க. ஒன்னு, ரெண்டு அதிகப்பிரசங்கிக இருட்டாயும் வீடு திரும்பலன்னா யாராச்சும் டார்ச்ச வச்சி தேடிக்கிட்டு வருவாங்க.

இந்த வயல்வெளிய சுத்தி மண் ரோடு இருக்கும். என் வீட்லருந்து சாயந்தரம் அஞ்சி மணிக்கி புறப்பட்டா கொஞ்ச தூரம் வேகமா கொஞ்ச தூரம் நடுத்தரமா அப்புறம் ஸ்லோவான்னு ஒரு மணி நேரம் நடந்துட்டு திரும்புவேன். போற வழியில கவரப்பாளையம்னு ஒரு பக்கா கிராமம் இன்னமும் தன்னுடைய பழைய அழகுலயே இருக்கறத பாக்கலாம். ஒரு காலத்துல ஆந்திர மாநிலத்திலருந்து விவசாய கூலிகளாக தமிழகத்திற்கு வந்து பிறகு அவர்கள் உழைத்த நிலங்களுக்கே சொந்தக்காரர்களாகி நொடித்துப் போன கவர நாயுடுகள் அதிகம் பேர் வசித்து வந்த இடம் என்பதால் அதற்கு கவரப்பாளையம்னு சொல்றாங்க. கிராமம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி இப்போ இருபது வீடுகள் மட்டுமே இருக்கும் ஒரு குட்டித் தெருவாக இருக்கு. தெருவுல ரெண்டு பக்கமும் இன்னமும் நாட்டு ஓடு வேய்ந்த வீடுகள் முகப்பில் நீண்ட திண்ணைகளோடு பார்க்க முடியும்.

சாயந்தர நேரத்துல நா வாக் போற வழியெங்கும் பெண்கள் சாவகாசமாக வீட்டு வாசலில் அமர்ந்து தெலுங்கு, தமிழ் கலந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே நடப்பேன். பல வீடுகளிலும் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும்.

அவர்களுள் இரண்டு அல்லது இரண்டரை வயது சிறுமி வீட்டு வாசலில் அமர்ந்து கற்களை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாள். நான் அவளைக் கடக்குறப்பல்லாம் என்னை தலையிலிருந்து கால் வரை பார்ப்பாள். நான் பார்ப்பதை பார்த்ததும் தலையை குனிந்துக்கொள்வாள். பல நாட்கள் இதை கவனித்தாலும் அவளுடன் எந்த மொழியில் பேசுவது என்று தெரியாமல் கடந்து போய்விடுவேன். ஆனால் நேற்று என்னையுமறியாமல் நின்று, 'என்னம்மா பாக்கறே?' என்றேன். அது நிமிர்ந்து என்னை பார்த்துவிட்டு சில நொடிகள் யோசித்தது. பிறகு, 'நீ எதுக்கு எப்ப பாத்தாலும் ஷூ போட்டுக்கிட்டு போறே?' என்றது சட்டென்று. நான் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் ஒரு நொடி பேசாமல் நின்றேன். அப்புறம் சமாளித்துக்கொண்டு 'தாத்தாவுக்கு வாக் போறப்ப கால் வலிக்கும்ல? அதனாலதான் ஷூ போடறேன்.' என்றேன். 'ஐய்யே... எங்க தாத்தாவுந்தா தெனம் நடக்குது. அது ஷூ போடாதே.. செருப்புதான் போடும்.' என்றாள் பட்டென்று. நான் எப்படி பதிலளிப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவளருகில் அமர்ந்திருந்த பாட்டி, 'நீங்க போங்க சார். அது ஒரு வாயாடி.' என்று என்னை அனுப்பி வைத்தார்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து கிளம்பி சுமார் இருநூறடி நடந்திருப்பேன். எனக்கு முன்னால் பத்தடி தூரத்தில் ஒரு ஆறு வயது சிறுவன் அவனை விடவும் பளுவான புத்தகங்களுடன் பிதுங்கிக்கொண்டிருக்கும் பையை தலையில் மாட்டிக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டு நடப்பது தெரிந்தது. அவனும் தினமும் நான் செல்லும் வழியில் செல்பவன்தான். சாதாரணமாக பள்ளி நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு செல்வதை பார்த்திருக்கிறேன். ஆனால் நேற்று அவனுடன் யாரும் இல்லை. அவனைக் கடக்கும் போது 'என்ன பால், அமலாப் பால்' என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டது. எனக்கு ஒரு க்யூரியாசிட்டி. இவன் என்ன சொல்லிக்கொண்டிருந்தான் என்று கேட்டால் என்ன என்று நினைச்சேன். 'என்னடா பையா... இப்ப என்ன சொல்லிக்கிட்டிருந்த இன்னொரு தரம் சொல்லேன்..' என்றேன். அவன் சட்டென்று நிமிர்ந்து யார்றா இந்த ஆள்ங்கறா மாதிரி ஒருமாதிரியான எரிச்சலோட பார்த்தான்.

'எதுக்கு? அதெல்லாம் ஒருதரம் சொன்னாத்தான் ஃப்ளோவா (flow) வரும்...' என்றான்.

'அதில்லடா என்னமோ அமலா பால்னு சொன்னியே?'

என்னை முறைச்சி பார்த்துட்டு வேணும்னே முன்னால் சொன்னத விட வேகமா சொல்ல ஆரம்பிச்சான். அப்பவும் என்னால அவனெ ஃபாலோ பண்ண முடியல. மறுபடியும் கடைசியில 'அது என்ன பால், அமலா பால்னு'  சொன்னது மட்டுந்தான் புரிஞ்சிது.

சரியான வாலாருப்பான் போலருக்குன்னு நினைச்சிக்கிட்டு, 'சரிடா... யார்றா அந்த அமலா பால்? அதையாச்சிம் சொல்லேன்.' என்றேன்.

'நீ சினிமா கினிமா பாக்கறதில்லையா தாத்தா...'

இல்லையே என்பதுபோல் தலையை அசைத்தேன்.

 'அப்போ, ஒங்கிட்ட சொல்றது வேஸ்ட்.' என்று அடுத்த நொடியே தூக்கமுடியாத பையின் பளுவையும் பொருட்படுத்தாமல் ஓடியே போனான்.

சில வாரங்களுக்கு முன்னால சன்டேயில சன் டிவியில வர்ற 'குட்டிச்சுட்டி' ப்ரோக்ராம்ல ஒரு குட்டிப் பையனிடம் இமான் அண்ணாச்சி அமலா பால் தெரியுமான்னு கேக்க 'அமலா பாலா? ஆவின் பால் தெரியும். இது என்ன புது பாலா? என்று பையன் திருப்பி கேட்டது நினைவுக்கு வந்தது.

சரி இன்னைக்கி டைம் சரியில்ல போலருக்கு ரெண்டு குட்டி பசங்ககிட்ட பல்ப் வாங்கியாச்சி... இனி வாய மூடிக்கிட்டு நடக்கணும்னு நினைச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன்.

கவரப்பாளையம் தெருவைக் கடந்தால் OCF க்வார்ட்டர்ஸ் வரும். பத்தடி காம்பவுன்ட் சுவருடன் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில ஒரு குட்டி ஊர் மாதிரி இருக்கும் அந்த க்வார்ட்டர்ஸ். Ordnance Clothing Factoryயத்தான் OCFனு சுருக்கி சொல்வாங்க. இந்தியாவுலருக்கற எல்லா ஆர்மி ஜவான்களுக்கும் இங்கருந்துதான் யூனிஃபார்ம் தயார் பண்ணி போவுதாம். சுமார் ஐந்நூறு மூன்றடுக்கு மாடி வீடுகள் பக்கா தார் ரோடு, ரெண்டு மூனு பெரிய பூங்கா, ரெண்டு ஆடிட்டோரியம், ஒரு வினாயகர் கோவில்னு ஒரு குட்டி நகரம் போலருக்கும். வாக் போறவங்க வாசல்லருக்கற சென்ட்ரிக்கிட்ட சொல்லிட்டு போய்ட்டு வரலாம். ஒரு சுத்து சுத்தி வர்றதுக்கு அரை மணி நேரம் ஆவும்.

நேத்து, வாசல தாண்டி சென்ட்ரிய பாத்து சவுக்கியமான்னு விசாரிச்சிட்டு நடந்தேன். போற வழியிலதான் பசங்க விளையாடற கிரவுண்ட். கில்லியிலருந்து கிரிக்கெட் வரைக்கும் எல்லா விளையாட்டும் ஒரே சமயத்துல நடந்துக்கிட்டிருக்கும். அந்த பசங்கள பாத்துக்கிட்டே நடப்பேன். நா சின்ன வயசுல விளையாடாத விளையாட்டே இல்லே. அத நினைச்சிக்கிட்டே நடந்துக்கிட்டிருந்தேன். ஒரு இருபதடி தூரத்துல குட்டி பசங்களோட கிரிக்கெட் மேட்ச் ஆக்ரோஷமான சத்தத்தோட நடந்துக்கிட்டிருந்துச்சி.. எப்பவும் பாக்கறதுதான். கண்டுக்காம போய்க்கிட்டே இருப்பேன். நேத்துதான் டைம் சரியில்லேன்னு ஆயிருச்சே.... நா பசங்கள நெருங்கவும் ஒரு குட்டிப் பையன் - ஆறு வயசு இருக்கும் - பேட்ட வீச பந்து பேட்டுல படாம பின்னால நின்னுக்கிட்டிருந்த பையன் - விக்கெட் கீப்பராம்! - கைக்குள்ள போய் மாட்டிக்கவும் சரியாருந்தது. பந்து போட்டவனும் காட்ச் புடிச்சவனும் 'டேய் நீ அவுட்டுன்னு கத்த' பேட் வச்சிருந்தவன் 'டேய் டூப்படிக்காத. பந்து பேட்டுல படவே இல்ல' என்று சாதித்தான்.

பந்தை போட்டவன் சட்டென்று என்னிடம்

'தாத்தா நீ கூட பாத்தேல்ல? இவன் அவுட்டுதான?' என்றான்.

அவன் கேட்ட தொனியே அவுட் இல்லையென்று சொன்னால் அடித்து விடுவான் போலிருந்தது.

பேட்டை கையில் வைத்திருந்தவன் என்னை முறைத்தான். 'தாத்தா பொய் சொல்லாம சொல்லு. நா பந்த அடிச்சேனா?'

என்ன சொன்னாலும் அடிதான் என்று நினைத்த நான். 'நா பாக்கலையேடா பசங்களா' என்றவாறே அங்கிருந்து வேகமாக நகன்றேன். நான் அங்கிருந்து போவதற்குள் என் காதுபடவே, 'டேய் அவருக்கு கண்ணு டப்சா போல....' என்றான் பந்தை எரிந்தவன். சென்னை பாஷை புரியாதவர்களுக்கு 'டப்சா' என்றால் பொட்டை என்று அர்த்தம் அதாவது நான் பொட்டைக் கண்ணன். மறுபடியும் ஒரு 'பல்ப்' வாங்கிக்கிட்டு எல்லாம் முழிச்ச நேரம்னு நினைச்சிக்கிட்டு மேலும் நடந்தேன்.

க்வார்ட்டர்ஸ் முழுவதும் நூற்றுக் கணக்கான மரங்கள். மாலை நேரத்தில் சில்லுன்னு காத்து வீசும். நடக்கற களைப்பே தெரியாது. பெருசா ஆள் நடமாட்டமும் இருக்காது. எப்போதாவது கடந்து போகும் சைக்கிள்ங்கள தவிர ரோடு பெரும்பாலும் காலியாவே இருக்கும். ஒவ்வொரு ரோட்லயும் ரெண்டு பக்கமும் ரோட்லருந்து இருபதடி தள்ளி வரிசையா தனித்தனி வீடுங்க. எல்லாமே மூன்றடுக்கு. இடது வலதுன்னு ஒவ்வொரு தளத்துலயும் ரெண்டு குடியிருப்புங்கன்னு (flats) ஒவ்வொரு பில்டிங்லயும் ஆறு குடியிருப்பு இருக்கும். எல்லா வீட்டு வாசல்லயும் மாமரம் இருக்கும். இப்ப சீசன்கறதால மரம் முழுசும் மாங்காய் அழகழகா தொங்கிக்கிட்டிருக்கறத பாக்கலாம். அது மட்டுமில்லாம கொய்யா, சீத்தாப்பழம்னு பலாமரத்த தவிர மத்த எல்லா மரங்களும் இருக்கும்.

ஒரு சுத்து முடிஞ்சி மறுபடியும் வாசல் பக்கம் வந்தேன். கடைசி தெரு. அங்க ஒரு மூனு வயசு இருக்கும் ஒரு குட்டி பொண்ணு மாமரத்த அண்ணாந்து பாத்துக்கிட்டு ஒன்னு ரெண்டுன்னு எண்ணிக்கிட்டு நிக்கிறது தெரியுது. முந்தா நேத்தும் அதே இடத்துல அதே பொண்ணு நின்னு எண்ணிகிட்டிருந்தத பாத்த ஞாபகம். 'என்னம்மா எண்றே?' ன்னு கேட்டேன். சட்டுன்னு என்னெ திரும்பி பார்த்துவிட்டு, 'இரு. எண்ணி முடிச்சிட்டு சொல்றேன்.' என்றது. பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தது. நானும் நின்று கவனித்துக்கொண்டிருந்தேன். தட்டுதடுமாறி எண்ணி முடிச்சிட்டு என்னெ பாத்து, 'தாத்தா நேத்து சாயந்தரம் எண்ணினனா? பத்து இருந்திச்சி...இப்போ ஒம்போதுதான் இருக்குது... யாரோ ராத்திரி வந்து திருடிக்கிட்டு போய்ட்டான் போலருக்கு!' என்றாள் உண்மையான கவலையுடன்.பிறகு,  'இரு பாட்டிய கூட்டிக்கிட்டு வரேன்.' என்று என்னுடைய பதிலைப் எதிர்ப்பார்க்காமல் வீட்டுக்குள் ஓட நான் அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.

க்வார்ட்டர்ஸ் வாசலை கடக்கும் நேரத்தில் 'என்ன சார் இன்னைக்கி கா மணி நேரம் கூட ஆயிருச்சி போல?' என்றார் சென்ட்ரி.

'ஆமாப்பா.. மாங்கா எண்ணிட்டு வரேன்' என்றேன் புன்னகையுடன்.

அவர் சிரித்தார். 'நீங்கதான் திருடிட்டீங்கன்னு சொல்லியிருக்குமே?'

இது வேறையா? நல்ல வேளையாக அந்த குட்டி பாட்டியோட வர்றதுக்குள்ளே எஸ்கேப் ஆய்ட்டோம் போலருக்குன்னு நினைச்சிக்கிட்டு நடையின் வேகத்த கூட்டினேன்.

இந்த தலைமுறை குட்டிப் பசங்க வாலுங்கதான்னாலும் மகா புத்திசாலிப் பசங்கங்கறதையும் மறுக்க முடியாது. சில சமயத்துல அவங்க கேக்கற கேள்விங்களுக்கு பதில் சொல்லவே முடியறதில்ல! அவங்கக்கிட்டருந்து அப்பப்போ 'பல்ப்' வாங்கறதே பொழப்பா போச்சி!

********

38 கருத்துகள்:

  1. ஆமா, வாலுங்க, ஆனால் புத்திசாலிகள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைகள்...

    பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3:33 PM

    ஜோசப் சார் பதிவுகளைப் படிச்சு எவ்வளவு நாளாச்சு. :)

    பால் பால் அமலாபால்னு சின்னப்பையன் பாடிட்டு போறானா.. இதெல்லாம் இப்ப சகஜம்.

    ஆவடிக்கு மாறிட்டிங்களா. ஒருவகையில் நல்லதுதான். சிட்டிக்குள்ள இருக்கும் நெரிசல் அங்க இருக்காது.

    பதிலளிநீக்கு
  4. எல்லா பல்பையும் கொண்டு போய் வீட்டுல மாட்டுங்க. வீடே பிரகாசமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html இங்க வந்து சிறப்பிக்குமாறு வெற்றிலை, பாக்கு, பூ, பழம். இனிப்போடு ஒண்ணே முக்கா ரூபா பணமும் வச்சு கூப்பிடுறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. உங்களது நடைப்பயிற்சி அனுபவத்தை இரசித்துப் படித்தேன். நானும்தான் தினம் நடைப்பயிற்சி செய்கிறேன். நான் காலை 5-15 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்று 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுவதால் உங்களுக்கு கிடைத்த அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை.இக்கால பிள்ளைகளின் IQ பற்றி சொல்லத்தேவையில்லை

    பதிலளிநீக்கு
  7. பதிவு எழுதுவது எப்படி என்று புதியவர்களுக்குப் பாடம் எடுக்கலாம் நீங்கள்.அன்றாட வாழ்க்கையில் கிடைக்காத செய்திகளா?!நகரத்தில் கிராம வாழக்கை!அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  8. தொடர் பதிவு :

    http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. சின்ன வயசுல அப்படித்தான் நாமளும் இருந்திருப்போம்

    பதிலளிநீக்கு
  10. வெகு நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல இடுகையைப் படித்த நிறைவு. அந்த OCF - குடியிருப்பை கட்டாயம் சென்று பார்ப்பேன் அடுத்த முறை இந்தியா வரும் போது! ஒரு இடுகை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்...அந்த இடத்திற்கு போக வைக்கும் அளவிற்கு எழுதுவது தான் ஒரு எழுத்தின் வலிமை. அடிக்கடி எழுதுங்கள்...

    சரி! எதுக்கும் உங்க காலனி மெயின் ரோடுகளுக்கு கடல்கள் பேரை வைக்கமா பாத்துக்கங்க..!!

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகளிடம் இப்படி பல்பு வாங்குவதிலும் ஒரு ஆனந்தம் கிடைக்கத்தான் செய்கிறது....

    சுவையான அனுபவங்கள். ரசித்துப் படித்தேன்.....

    பதிலளிநீக்கு
  12. சிட்டியிலும் இல்லாமல், கிராமத்திலும் இல்லாமல் ரெண்டுங் கெட்டானாக இருக்கும் ஆவடி. இதுமாதிரி இடங்களில் ரிடையர்மெண்ட் வாழ்க்கை கொடுத்து வைத்து இருக்க வேண்டும். எனது பள்ளி நாட்களில் விடுமுறையில், சுமார் 45 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்தில் (வில்லிவாக்கம்) எனது உறவினர் வீட்டில் இருந்தபோது இதேபோல ரசித்து இருக்கிறேன். வாக்கிங் சென்றதை இயலபாக ஒரு குறும்படம் போல சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஆமா, வாலுங்க, ஆனால் புத்திசாலிகள்.//

    அதனாலதான நாம பல்ப் வாங்க வேண்டியிருக்கு?

    பதிலளிநீக்கு
  14. பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்...//

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  15. பால் பால் அமலாபால்னு சின்னப்பையன் பாடிட்டு போறானா..//

    அது பாட்டு இல்ல ஜிரா. கேள்வி பதில் மாதிரி. நேத்து அந்த பையனே எங்கிட்ட வந்து என்ன தாத்தா நா நேத்து சொன்னத மறுபடியும் சொல்லவா என்று கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமலே சொல்லிக்காட்டினான்.

    வாய்ல என்னா
    பாக்கு
    என்னா பாக்கு
    கொட்டை பாக்கு
    என்னா கொட்டை
    பருத்திக் கொட்டை
    என்னா பருத்தி
    செம்பருத்தி
    என்னா செம்
    ஒயிட் செம்
    என்னா ஒயிட்
    பால் ஒயிட்
    என்னா பால்
    அமலா பால்!

    இந்த மாதிரி கேள்வி-பதில் செய்யுள் மாதிரி நாங்களும் நீங்களும் அந்த வயசுல ஃப்ரென்ட்ஸுங்களோட பாடித்தான் இருப்போம், இல்லையா?

    ஆவடிக்கு மாறிட்டிங்களா. ஒருவகையில் நல்லதுதான். சிட்டிக்குள்ள இருக்கும் நெரிசல் அங்க இருக்காது.//

    ஆமாம். அதுவும் ஒரு காரணம்தான். இன்னொரு காரணம், நம்மள போல மிடில் கிளாஸ் ஆளுங்களால சிட்டிக்குள்ள எல்லாம் வீடோ flatடோ வாங்க முடியாது. எனக்கு ப்ளாட் கட்டட செலவு எல்லாம் சேர்த்து ரூ.3000/- ஆச்சி. சிட்டிக்குள்ள வாங்கணும்னா குறைஞ்சது ரூ.7500-9000/- ஆவும்.

    பதிலளிநீக்கு
  16. சின்ன வயசுல அப்படித்தான் நாமளும் இருந்திருப்போம்//

    நீங்க இருந்தீங்களோ இல்லையோ நான் அப்படித்தான் இருந்தேன். அதனால என்னெ பதிமூனு வயசுலயே கொண்டு போயி போர்டிங்ல சேத்துட்டாங்க. ஸ்கூல் முடிச்சித்தான் வீட்டுக்கே போனேன். அதனாலதானோ என்னவோ இந்த மாதிரி வாலுப் பசங்கன்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  17. வாலு ரசித்தேன் ஐயா//

    நன்றி பிரகாஷ். அடிக்கடி வாங்க.

    பதிலளிநீக்கு
  18. எதுக்கும் உங்க காலனி மெயின் ரோடுகளுக்கு கடல்கள் பேரை வைக்கமா பாத்துக்கங்க..!!//

    நிச்சயமா! ஒரு ரோடு ரோக்கோவே பண்ணிறமாட்டோம்:)

    உங்க விமர்சனத்துக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  19. எல்லா பல்பையும் கொண்டு போய் வீட்டுல மாட்டுங்க. வீடே பிரகாசமா இருக்கும்.//

    அதையேத்தான் வீட்டம்மாவும் சொன்னாங்க. கரண்ட் செலவு மிச்சமாகுமாமே... அத்தோட நிறுத்திக்காம ஒங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு வேற சொன்னாங்க... வீட்ல நா குடுக்கற பல்புக்கு பழிவாங்கலாம்!

    பதிலளிநீக்கு
  20. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html இங்க வந்து சிறப்பிக்குமாறு வெற்றிலை, பாக்கு, பூ, பழம். இனிப்போடு ஒண்ணே முக்கா ரூபா பணமும் வச்சு கூப்பிடுறேன் ஐயா!//

    ஒண்ணே முக்கா ரூவா பணம் கொஞ்சம் கம்மிதான். ஆனாலும் கூப்டது நீங்களாச்சே... கண்டிப்பா வந்துருவேன். கூப்டதுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  21. nice experiance

    Yes G!

    wishing you many more"bulbs"//

    ஏன் சொல்ல மாட்டீங்க? அந்த கிரிக்கெட் பசங்கக் கிட்ட அடி வாங்காம வந்ததே அதிர்ஷ்டம்.

    பதிலளிநீக்கு
  22. குழந்தைகளிடம் இப்படி பல்பு வாங்குவதிலும் ஒரு ஆனந்தம் கிடைக்கத்தான் செய்கிறது.... //

    ஆமாங்க. சர்வீஸ்ல இருக்கறப்ப இந்த மாதிரி குழந்தைங்களோட நின்னு பேசிட்டு போறதுக்கு நேரம் கிடைச்சதில்லை. எந்திர மயமா இருந்த வாழ்க்கையில போன மூனு வருசமாத்தான் ஒரு வசந்தம் வந்துருக்குன்னு கூட சொல்லலாம். அதனாலதானோ என்னவோ life begins at 60!னு சொல்றாங்க.

    பதிலளிநீக்கு
  23. நகரத்தில் கிராம வாழக்கை!//

    சொன்னா நம்ப மாட்டீங்க. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகை இந்த மாதிரி இடங்களில்தான் முழுமையாக பார்த்து ரசிக்க முடிகிறது. தூசி இல்லாத காற்றை சுவாசிப்பதும் ஏகாந்தமாக தெரியும் இடங்களில் தனியாக நடப்பதும்.... அனுபவிச்சி உணர வேண்டிய அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
  24. நான் காலை 5-15 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்று 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுவதால் //

    நானும் சர்வீஸ்ல இருக்கறப்ப காலையிலதாங்க போவேன். அதுவும் பார்க்ல. ஒரே கூட்டமா இருக்கும். சூழல் நல்லா இருந்தாலும் கூட்டத்தோட கூட்டமா எந்திரமா நடந்துட்டு வந்துறணும். தினம் தினம் பாக்கறவங்கக் கூட ஒரு காலை வணக்கம் கூட சொல்ல மாட்டாங்க. எல்லாருமே ஏதோ ரோபோ மாதிரி நடந்துட்டு போயிருவாங்க. இங்க எதிர்ல வர்றதுக்கு ஆள் இல்ல, வாகனம் இல்ல, ஸ்கூல் விட்டு போற பசங்க, மைதானத்துல விளையாடற பசங்க இவங்களை மட்டுந்தான் பாக்க முடியும். அந்த நேரத்துல நம்ம மனசும் வயசும் கொஞ்சம் இறங்கிட்டா மாதிரி ஒரு ஃபீலிங்... அது ஒரு மாதிரி அனுபவங்க...

    பதிலளிநீக்கு
  25. தொடர் பதிவு :

    http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html

    தொடர வாழ்த்துக்கள்...//

    நன்றிங்க... இன்னும் பாக்கலை. நிச்சயம் தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  26. You are lucky, you have escaped from the kids. Watch the video, how the kids answer in the stage to Bill Cosby.

    http://www.youtube.com/watch?v=1Ip-tMe278E

    பதிலளிநீக்கு
  27. அருமையான பகிர்வு அய்யா.. மிகவும் ரசித்தேன். நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  28. ரொம்ப நல்லா இருந்தது பதிவு. ஒழுங்கா நடக்குறீங்களா ..?

    பதிலளிநீக்கு
  29. You are lucky, you have escaped from the kids. Watch the video, how the kids answer in the stage to Bill Cosby. //

    Yes but it is difficult to escape from their intelligent questions.

    I've watched the video in the link suggested by you. Please watch குட்டிச்சுட்டீஸ் on Youtube. You should enjoy that!

    பதிலளிநீக்கு
  30. அருமையான பகிர்வு அய்யா.. மிகவும் ரசித்தேன். //

    நன்றிங்க. உங்க பதிவுக்கு இதுவரைக்கும் வந்ததில்லை. முதல் வேலையா அங்கதான் வரேன்.

    பதிலளிநீக்கு
  31. ஒழுங்கா நடக்குறீங்களா ..?//

    அதான் அந்த கிரிக்கெட் பசங்க பேட்டால போடறதுக்குள்ள தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்துட்டேனே:))

    பதிலளிநீக்கு
  32. இளங்கோ சொன்னது போல குறும்படக்காட்சியாகத்தான் என் கண்ணில் தெரிகின்றது.

    பதிலளிநீக்கு
  33. குறும்படக்காட்சியாகத்தான் என் கண்ணில் தெரிகின்றது.//

    இதை அப்படியே ஒரு குறும்படமாக எடுத்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த விஷயத்தில ஏபிசிடியே தெரியாதே?

    பதிலளிநீக்கு
  34. உங்கள் இருப்பிட அறிமுகம் அசத்தல்! அதுவும் நகைச்சுவையோட கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  35. ஆவடி டாங்க் ஃபாக்டரி குடியிருப்புக்கு பல முறை போயிருக்கிறேன். DRDO-ல் பணிபுரியும் என் நண்பன் மகன் ஆவடியில் வீடு கட்டியபோது கிருகப்பிரவேசத்துக்குப் போயிருக்கிறேன். அந்த இடம் ஏதோ பூவின் பெயரில் இருந்ததாக நினைவு. . நினைவுகள் சுகம் தருபவை.

    பதிலளிநீக்கு
  36. நினைவுகள் சுகம் தருபவை.//

    ஆமாம் சார்.... அதுவும் சின்னபசங்க சம்மந்தப்பட்ட விஷயம்னா இன்னும் சுவை அதிகம் இல்லையா?

    பதிலளிநீக்கு