15 ஆகஸ்ட் 2013

கொலையாளி யார் 4

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை கைது செஞ்சி 24 மணி நேரத்துக்குள்ள தாக்கல் செஞ்சி மறுபடியும் போலீஸ் விசாரணைக்குன்னு கஸ்டடியில எடுக்கறதுக்கு முக்கிய காரணம் அவர்கிட்டருந்து எப்படியாச்சும் நாந்தான் இந்த கொலைய செஞ்சேன்னு வாக்குமூலம் வாங்கறதுதான். ஏன்னா அது மட்டும் நடந்துருச்சின்னா கேஸ ஈசியா க்ளோஸ் பண்ணிறலாமே, அதுக்குத்தான். ஆனா அதுக்கும் சட்டம் ஒரு செக் (check) வச்சிருக்கு. அது என்னான்னு பாக்கலாம்.  

ஒப்புதல் வாக்குமூலம்

சில சமயங்கள்ல குற்றவாளி தானாவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கறதுக்கும் வாய்ப்புண்டு. அதாவது முதல் முறையா ஏதோ ஒரு ஆத்திரத்தில் கொலை செய்றவங்க அதுக்கப்புறம் மனம் வருந்தி தங்களோட தப்பை உணர்ந்து குற்றத்தை ஒப்புக்கொள்றது உண்டு.  

அப்படிப்பட்ட சமயத்துல இந்த வாக்குமூலத்த எப்படி வாங்கணும்னும் சட்டம் சொல்லுது. இந்திய குற்றவியல் முறைச்சட்டம் 164 பிரிவில சொல்லியிருக்கறா மாதிரி அவரோட வாக்குமூலத்த ஒரு மஜிஸ்டிரேட் முன்னால  எழுத்து மூலமா வாங்கணுமாம். இதுக்கு சம்மந்தப்பட்ட கேஸ விசாரிக்கற மஜிஸ்டிரேட்டாத்தான் இருக்கணும்னு கட்டாயமில்ல. அந்த மாதிரி சமயத்துல வாக்குமூலத்தை பதிவு செய்யிற மஜிஸ்டிரேட் அத வழக்கை விசாரிக்கபோற மஜிஸ்திரேட்டுக்கு நேரடியா அனுப்பி வைக்கணுமாம். இந்த மாதிரி வாக்குமூலத்த குடுக்கறவங்க பின்னால போலீசோட நிர்பந்தத்தாலதான் குடுத்தேன்னு பின்வாங்க முடியாதுங்கறதாலதான் இந்த ஏற்பாட்ட சட்டம் செஞ்சி வச்சிருக்கு. இப்படியில்லாம போலிஸ் ஸ்டேஷன்ல வாங்கற எந்த ஒப்புதல் வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறது ரொம்ப முக்கியம். 

குற்றப்பத்திரிக்கை - Charge Sheet (கு.மு.ச.173(2))

புலன் விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல்துறை கூறும் குற்றச்சாட்டுக்களை அதற்கென காவல்துறை நிர்ணயித்துள்ள படிவத்தில் பட்டியிலிட்டு அதனுடன் சம்மந்தப்பட்ட அறிக்கைகள், அரசுத்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், தடயங்களைப் பற்றிய விவங்கள் ஆகியவற்றை இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். 

இதை குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட தியதியிலிருந்து 30லிருந்து 90 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்பதும் நியதி. அதற்குள் செய்ய இயலாமல் போகும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி தகுந்த காரணங்களுடன் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு சிறையிலிருக்கும் குற்றவாளை விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாம். 

இது எதற்கு என்று கேட்க தோன்றலாம். 

இப்படியொரு விதியை சட்டம் வகுத்திருக்கவில்லையென்றால் தகுந்த காரணம் இல்லாமல் ஒருவரை கைது செய்து சிறையிலடைக்க காவல்துறைக்கு அதிகாரம் அளித்துவிடுவதற்கு ஒப்பாகும் அல்லவா? மேலும் இந்திய சிறைகளிலுள்ள தண்டிக்கப்பட்ட (convicted) குற்றவாளிகளை விட குற்றம் சாட்டப்பட்ட கைதிகளின் (accused) எண்ணிக்கை அதிகமாகிவிட வாய்ப்புள்ளது. அதுமட்டுமா? தகுந்த சான்றுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளே பல ஆண்டுகள் நிலுவையில் நிற்கையில் அடிப்படை ஆதாரமான குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வழக்குகளும் சேர்ந்துக்கொண்டால் என்னாவது? மேலும் கைது செய்து 90 நாட்களுக்குள் கிடைக்காத சான்றுகள் அதற்குப் பிறகு கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று நீதிமன்றங்கள் கருதுவதால்தான இதை தாக்கல் செய்ய அதிகபட்ச காலத்தை நிர்ணயிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 

குற்றப்பத்திரிக்கையில் குற்றம் நாட்டில் நடைமுறையிலுள்ள எந்தெந்த சட்ட விதிகளின் கீழ் வருகிறது, அது எங்கு, எப்போது, எவ்வாறு நடந்தது. அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார், யார் அதற்கு துணை போனவர்கள் யார், யார் என்ற விவரங்கள், அவர்கள் சிறையில் உள்ளனரா அல்லது பிணையில் உள்ளனரா என்பதுபோன்ற விவரங்களுடன் குற்றத்தை சந்தேகமில்லாமல் நிரூபிக்க காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரணங்கள், அதைச் சார்ந்துள்ள அறிக்கைகள், வாக்குமூலங்கள், குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆயுதங்கள், கொலைக்களத்திலிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட தடயங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் இணைத்து ஒரு முழுமையான ஆவணமாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டப் பிறகும் தேவை என்று கருதும்பட்சத்தில் விசாரணையை தொடர காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக கொலை முயற்சி என்று பதிவு செய்யப்படும் குற்றம் வழக்கு நிலுவையிலுள்ளபோது தாக்கப்பட்டவர் மரிக்கும் பட்சத்தில் கொலைக் குற்றமாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆகவே வழக்கு முடிவாகும் வரையிலும் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய காவல்துறை அனுமதிக்கப்படுவதுண்டு. ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவருடன் மேலும் குற்றவாளிகள் அல்லது கூடுதல் அரசு தரப்பு சாட்சியங்களை சேர்க்கவும் கூடுதல் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதுண்டு. ஆகவே காவல்துறை முதல் முறையாக தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிக்கையில் இது இறுதி அறிக்கை என்ற வாசகத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது காவல்துறை இலாக்கா வழங்கியுள்ள சுற்றறிக்கைகளில் ஒன்று.

குற்றப்பத்திரிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதனுடைய மாதிரி வடிவத்தை (draft copy) அரசு தரப்பில் வழக்கை நடத்த நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரிடம் (Public Prosecutor(PP)/DPP/APP) காண்பித்து அவருடைய அனுமதியை பெற வேண்டும் என்று காவல்துறை தன்னுடைய உள்சுற்றுக்கு மட்டுமான (inside circulation only) சுற்றறிக்கைகளில் கூறியிருந்தாலும் பல உயர்/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அது கட்டாயமல்ல என்றும் அரசு வழக்கறிஞர்கள் இதை காவல்துறை அதிகாரிகள் மீது நிர்பந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளதும் உண்மை. 

இதற்கு என்ன காரணம் என்று என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் கூறியதிலிருந்து நான் தெரிந்துக்கொண்டவை:

ஏன் அரசு வழக்கறிஞரிடம் காட்ட வேண்டும்?

1. விசாரணை அதிகாரிகள் குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டத்தின் சரியான பிரிவுகளை கூறாமல் விட்டுவிடுவார்கள். இதன் மூலம் தண்டனையின் வீரியம் குறைந்துவிட வாய்ப்புள்ளது.

2.நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவியலாத ஆவணங்களைத் தாக்கல் செய்வது. அல்லது குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் விட்டுவிடுவது ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

3.சாட்சியங்களின் வாக்குமூலத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் அப்படியே தாக்கல் செய்வதை தவிர்க்க முடியும். 

ஏன் காட்ட தேவையில்லை?

1. காவல்துறையினர் பரிந்துரைக்கும் இ.த.ச பிரிவுகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் பரிந்துரைக்கும் பிரிவுகளைத்தான் சேர்க்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களுள் சிலர் நிர்பந்திப்பதுண்டாம். அரசியல் மற்றும் செல்வாக்குள்ளவர்களின் தலையீடுதான் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காவல்துறையினரை அணுகுவதை விட அரசு வழக்கறிஞர்களை அணுகுவது எளிதல்லவா?

2.குற்றம் சாட்டப்பட்டவரையே மாற்ற நிர்பந்திப்பது. அல்லது குற்றத்திலிருந்து தங்களுக்கு தெரிந்தவர்களை விடுவிக்க அறிவுறுத்துவது. 

3.காவல்துறையினர் மேற்பார்வைக்காக தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சரிபார்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்துவிட்டு பிறகு காவல்துறை அதிகாரிகளை குறை சொல்வது.

ஆனாலும் பல சமயங்களில் தங்களுடைய உயர் அதிகாரிகளுடைய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து குற்றப்பத்திரிக்கையை அரசு வழக்கறிஞர்களுடைய மேற்பார்வைக்கு சமர்ப்பிப்பதை விசாரணை அதிகாரிகளால் தவிர்க்க முடியாமல் போய்விடுவதுண்டு. இதனாலேயே நீர்த்துப்போன வழக்குகளும் உண்டாம்!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளியென நிரூபிக்க காவல்துறையினரின் திறமையான புலன் விசாரணை மட்டும் போதாது. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தகுந்த ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும்  எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் (beyond resonable doubt)நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க தேவையில்லை என்கிறது சட்டம். அவர்தான் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் குற்றம் சுமத்திய வழக்கு தொடுக்கும் அரசையே சாரும். அத்தகைய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடுவது அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் என்பதால்தான் காவல்துறையினருடைய குற்றப்பத்திரிக்கையை சரிபார்க்கும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்கின்றனர் அரசு வழக்கறிஞர்கள். இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு விசாரணை அதிகாரிகளுக்கு அளித்துள்ள கையேட்டில் இதை அறிவுறுத்துகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு காவல்துறை அதுவரை நடத்திய விசாரணைக் குறிப்புகள் அனைத்தையும் - காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் பொது நாட்குறிப்பு, விசாரணை அதிகாரியால் அன்றாடம் தயாரிக்கப்பட்ட வழக்கு சம்மந்தமான தின நாட்குறிப்பு  ஆகியவை  உட்பட - அரசு வழக்கறிஞரின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

அவற்றுடன் 
1. பிரேத பரிசோதனை அறிக்கை, 
2. குற்றவாளியின் வீடு/அலுவலகம் ஆகியவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் அடங்கிய பட்டியலின் நகல் 
3. கைரேகை, பாதமுத்திரை (footprint) பற்றிய விவரங்கள், 
4. தடயவியல் இலாக்காவினரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை, 
5. குற்றவாளி மற்றும் பிற சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் 
ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். 

சாதாரணமாக, அரசு வழக்கறிஞர்கள் காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்ட விசாரணை அறிக்கையை மட்டுமே நம்பி நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவதில்லை. காவல்துறை விசாரணையில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா என்றும் ஆய்வு செய்கின்றனர்.  அத்துடன் நில்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர் ஏற்கனவே இத்தகைய வழக்கு எதிலாவது சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்புண்டா என்று பழைய அரசு கோப்புகளை முழுவதுமாக ஆய்வு செய்கின்றனர். 

குற்றம் சுமத்தப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் (defense counsels) காவல்துறை மற்றும் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை விடவும் மிக அதிகமாக தங்களை தயார் செய்கின்றனர் என்பதும் உண்மை. குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளிதானா என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர் உண்மையிலேயே குற்றவாளிதான் என்று தெரிந்தாலும் அந்த வழக்கிலிருந்து முழுவதுமாக தங்கள் கட்சிக்காரரை  தப்புவிக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில்தான் அவர்களுடைய முழுக் கவனமும் இருக்கும். 

கிரிமினல் வழக்குகளில் அதிகம் பிரபலமடைந்துள்ள பல வழக்கறிஞர்கள் அனுபவம் பெற்ற துப்பறியும் நிபுணர்களை பயன்படுத்துகின்றனர் என்பதும் உண்மை. அவர்கள் மூலமாக கட்சிக்காரருக்கே தெரியாமல் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துவிடுகின்றனர். அதற்கான தொகையையும் தங்களுடைய கட்டணத்தில் சேர்த்து கட்சிக்காரரிடமிருந்து வசூல் செய்துவிடுகின்றனர். இதன் மூலம் வழக்கு விசாரணை சமயத்தில் தங்களுடைய கட்சிக்காரரைப் பற்றி தங்களுக்கு தெரியாத தகவல்கள் ஏதும் வருவதை அவர்கள் தவிர்த்துவிட முடியும் என்பதாலேயே சிரமத்தைப் பார்க்காமல் இத்தகைய தனிப்பட்ட விசாரணையில் இறங்கிவிடுகின்றனர்.

பிணை (Bail) (குமுச 450)

சாதாரணமா கொலை குற்றங்கள்ல குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை கிடைக்கறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி. போலீஸ் விசாரணை முழுசா முடிஞ்சி குற்றப்பத்திரிகை (Charge Sheet) கோர்ட்ல ஃபைல் பண்றவரைக்கும் பெய்ல் கிடைக்க சான்ஸே இல்லைன்னுதான் சொல்லணும். 

ஆனா அதுக்குன்னு ஒருத்தர கைது பண்ணி ஜெய்ல்ல வச்சிட்டு தங்களோட சவுகரியம்போல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சாப் போறும்னு போலீஸ் நினைச்சிறமுடியாது. அதுக்கும் சட்டம் ஒரு லிமிட் வச்சிருக்கு.  குற்றத்தோட தீவிரத்தைப் பொருத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேவையான கால அவகாசத்த கோர்ட் தீர்மானிக்கும். அது கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 30 முதல் 90 நாட்கள் வரை இருக்கலாம். அதுக்கப்புறமும் போலீஸ் தேவையில்லாம குற்றப்பத்திரிக்கை தாக்கல் பண்றத தள்ளிப்போடறாங்கன்னு கைதிக்கு சார்பா ஆஜராகற வக்கீல் நினைச்சா தன் கட்சிக்காரர ஜாமீன்ல விடணும்னு பெட்டிஷன் போட வாய்ப்பிருக்கு. அதுல இருக்கற நியாயத்த பார்த்து கோர்ட் ஜாமீன் வழங்கவும் வாய்ப்பிருக்கு. அதுக்கு எதிரா போலீஸ் சொல்ற காரணங்கள் ஏத்துக்கறா மாதிரி இல்லேன்னா ஜாமீன் நிச்சயம். 

சாதாரணமா குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான சாட்சியங்களை கலைத்துவிடக் கூடும்னு போலீஸ் சொல்றதாலத்தான் விசாரணை முடிஞ்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ற வரைக்கும் அவருக்கு பிணை வழங்கமாட்டாங்க. ஆனா இன்னொன்னையும் இங்க கவனிக்கணும். குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செஞ்சதுக்கப்புறமும் சிறையிலிருந்து வெளியில் வரும் குற்றம்சாட்டப்பட்டவர்  சாட்சிகளை கலைக்க ட்ரை பண்றார்னு போலீசுக்கு தெரியவந்தா உடனே அவர மறுபடியும் அரெஸ்ட் பண்ணி ரிமான்ட் செய்யணும்னு போலீஸ் கோர்ட்டுக்கு போகலாம்னு சட்டம் சொல்லுது. ஏன்னா செல்வாக்கு படைச்ச ஆளுங்க பெய்ல இருக்கறப்பவே சாட்சிகள மிரட்டற வேலைய ஆரம்பிச்சிருவாங்க. இத தடுக்கறதுக்காகவே பெய்ல வர்றவங்கள அவங்க சாதாரணமா குடியிருக்கற இடத்துலருந்து கொஞ்சம் தள்ளி இருக்கற இடத்துலதான் தங்கணும்னும் டெய்லி பக்கத்துலருக்கற போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி அங்க இருக்கற ரிஜிஸ்டர்ல கையெழுத்து போடணும்னும் கோர்ட் கண்டிஷன் போடுறது வழக்கம். ஆனா சிங்கம் 1 படத்துல காமிச்சா மாதிரி அந்த விஷயத்துலயு ஒரு ஆள செட்டப் பண்ணி கையெழுத்து போட வைக்கிற சம்பவங்களும் நடக்கத்தான் செய்யிது. அந்த மாதிரி சமயத்துல அவரோட பிணையை ரத்து செஞ்சி மறுபடியும் அவர சிறையில் அடைக்கறதுக்கும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!




நாளைய பதிவுடன் முடியும்.....

14 கருத்துகள்:

  1. குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதனுடைய மாதிரி வடிவத்தை அரசு தரப்பில் வழக்கை நடத்த நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரிடம் காண்பிக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும் அரசு வழக்கறிஞர்கள் இதை காவல்துறை அதிகாரிகள் மீது நிர்பந்திக்கக் கூடாது என்று பல உயர்/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறியுள்ளது சரிதான் என்றே நினைக்கிறேன்.
    நீங்கள் சொன்னதுபோல அரசியல்வாதிகளின் மறைமுகத் தலையீட்டால் வழக்குகள் நீர்த்துப்போக வாய்ப்புண்டு.

    எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் யாரும் ஆர்வம் காட்டாத தகவல்களை அருமையாய் தந்தமைக்கு நன்றிகள் பல!

    விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பலருக்கு, முக்கியமாக இந்திய போலிசுக்கு இந்த Fifth Amendment to the United States Constitution--முட்டாள் தனமாக தெரியும்.
    கிழே..
    Fifth Amendment
    'Sets out rules for indictment by grand jury and eminent domain, protects the right to due process, and prohibits self-incrimination and double jeopardy'

    self-incrimination - ரொம்ப முக்கியம்...நீ உன்னையே குற்றவாளி என்று சொல்லத் தேவையில்லை. in other words, one can not accuse himself.

    Miranada rights...அடுத்தது..


    I

    பதிலளிநீக்கு
  3. Miranda Rights - இன் சாரம்

    போலீஸ் உங்களை பேச சொல்லி வற்புறுத்த முடியாது. அடிக்க முடியாது.

    இந்த Miranda Rights சொல்லணும் கைது செய்யப்பட்டபின். போலீஸ் சொல்லாமல், வாங்கினால் குற்றம். தவறு செய்தாலும் வெளியில் வந்து விடலாம்.

    DUI Attorney William C. Head describes how he helped a client receive a "not" guilty” verdict, because the arresting police officer did not read the Miranda rights to his client.

    Miranda Rights

    Anyone who has watched a television show about law enforcement has a heard a police officer read the suspect his or her Miranda Rights.

    After placing the suspect under arrest, the officer will say something similar to, “You have the right to remain silent. Anything you say can and will be used against you in a court of law. You have a right to an attorney. If you cannot afford an attorney, one will be appointed for you.”

    கைதிகளை அடிக்காமல் கைதிகள் பேசாவிட்டாலும்...நீதி இங்கு எளிதாக கிடைக்கிறது...

    இதன் அடிப்படி...தீர்ப்பு வரும் வரை எல்லோரும் நிரபராதி இங்கே!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பதிவு.தெளிவான விளக்கங்கள். தெரியாத நடைமுறைகள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டிய தகவல்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. வே.நடனசபாபதி said...

    எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் யாரும் ஆர்வம் காட்டாத தகவல்களை //

    இதைத்தான் irony என்பார்கள் போலிருக்கிறது. சேரன் விஷயத்தை தெரிந்துக்கொள்ள ஏறத்தாழ 4000 பேர் ஆர்வம் தெரிவித்து இருபது பேருக்கும் மேல் கருத்துரைகள் எழுத தெரிந்துக்கொள்வது நல்லது என்ற எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கு 200 பேருக்கும் குறைவாகவே படித்துள்ளனர என்ற விஷயம் எது எளிதில் மக்கள் மத்தியில் விலைபோகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

    பலரும் இணையத்தை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அதில் தவறேதும் இல்லைதான். ஆனாலும் கருத்துரை இடாவிட்டாலும் வாசித்துத்தான் வைப்போமே என்றாவது நினைத்திருக்கலாம்....

    பதிலளிநீக்கு
  6. நம்பள்கி said...

    Miranada rights...//

    இதைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஒரு க்ரைம் நாவல் பிரியன். அதுவும் ஆங்கில நாவல்களில் மோகம் கொண்டவன். அத்தகைய பல நாவல்களில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு உள்ள பல உரிமைகளை இந்த மிரான்டா உரிமைப் பட்டியலில் உள்ளன என்று குறிப்பிட்டிருப்பதை படித்திருக்கிறேன்.

    தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. நம்பள்கி said...
    Miranda Rights - இன் சாரம்

    கைதிகளை அடிக்காமல் கைதிகள் பேசாவிட்டாலும்...நீதி இங்கு எளிதாக கிடைக்கிறது...//

    கைதிகளை அடித்து துன்புறுத்தும் வழக்கம் அங்குள்ள போலீசாரிடமும் உள்ளது என்பதையும் பல படங்களிலும் க்ரைம் நாவல்களிலும் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். குறிப்பாக கருப்பினர்களை காவல்துறை நடத்தும் விதம்தான் மிகவும் பிரசித்தமானதாயிற்றே. இந்திய சட்டங்களின்படியும் குற்றவாளியென கருதப்படுபவரை காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது அடித்து துன்புறுத்தக் கூடாது என்ற நியதி இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அதை அனுசரிப்பதைவீட மீறுவதில்தான் காவல்துறை அடிமட்ட அதிகாரிகள் வல்லவர்கள். மக்கள் மத்தியில் தங்களுக்கு சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பற்றிய அறியாமையும் இதற்கு காரணம்.

    இதன் அடிப்படி...தீர்ப்பு வரும் வரை எல்லோரும் நிரபராதி இங்கே!//

    இங்கும் சட்டம் அதைத்தான் சொல்கிறது. அதனால்தானே தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே பிணையில் விடுகின்றனர்?

    பதிலளிநீக்கு
  8. T.N.MURALIDHARAN said...
    சிறப்பான பதிவு.தெளிவான விளக்கங்கள். தெரியாத நடைமுறைகள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டிய தகவல்கள் ../

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இதைப் போன்றே மற்ற குற்றங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். முக்கியமாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைப் பற்றி இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து எழுதுவேன்..... அதற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  9. இது பதிவல்ல;பயனுள்ள பாடம்
    த.ம.3

    பதிலளிநீக்கு

  10. ஒரு தகவலுக்காக-- குற்றம் சாட்டப்பட்டு அதிக பட்சமாக 90 நாட்கள் சிறையில் போலிஸ் காவலிலோ நீதிமன்றக் காவலிலோ அடைக்கப் பட்டு சரியான ருசு ஏதும் கிடைக்காமல் விடுவிக்கப் படும் நபர் அநியாயம் இழைக்கப் பட்டவர் அல்லவா.? சட்டத்தில் ஏதாவது இருக்கிறதா?மான உரிமை, நஷ்ட ஈடு என்று ஏதாவது.?

    பதிலளிநீக்கு
  11. முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை//அப்படியா?

    பதிலளிநீக்கு
  12. சென்னை பித்தன் said...
    இது பதிவல்ல;பயனுள்ள பாடம்//

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  13. G.M Balasubramaniam said...

    ஒரு தகவலுக்காக-- குற்றம் சாட்டப்பட்டு அதிக பட்சமாக 90 நாட்கள் சிறையில் போலிஸ் காவலிலோ நீதிமன்றக் காவலிலோ அடைக்கப் பட்டு சரியான ருசு ஏதும் கிடைக்காமல் விடுவிக்கப் படும் நபர் அநியாயம் இழைக்கப் பட்டவர் அல்லவா.? சட்டத்தில் ஏதாவது இருக்கிறதா?மான உரிமை, நஷ்ட ஈடு என்று ஏதாவது.?//

    வேறு சில காரணங்களுக்காக வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டார்கள் என்று நிரூபித்தால் நிச்சயம் நஷ்டஈடு கிடைக்கும். ஆனால் அதை நிரூபிப்பது மிகவும் கடினம்.

    பதிலளிநீக்கு
  14. கவியாழி கண்ணதாசன் said...
    முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை//அப்படியா?//

    ஆமாம். காவல்துறை தன்னுடைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள கையேட்டில் இறுதி அறிக்கை என்று குறிப்பிடலாகாது என்றே மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் உள்ளபோது கொலைமுயறசி என்றுதான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளபோது மருத்துவ மனையில் அவர் இறந்துவிட்டால் அதை கொலை என்று மாற்றுவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா? இந்திய குற்றவியல் சட்டத்தில் இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளும் உள்ளன. தண்டனையும் வெவ்வேறுதான்.

    பதிலளிநீக்கு