12 ஆகஸ்ட் 2013

யார் கொலையாளி?

கொஞ்ச நாளாவே தமிழ்நாட்டுல மட்டுமில்லாம நாடெங்கும் கொலை, குறிப்பா அரசியல் கொலைகள், பெருகி வர்றதா எதிர்கட்சிங்க குத்தம் சொல்றத நாம பாத்துக்கிட்டு வரோம்.

போன மாசம்  சேலத்தில நடந்த ஒரு அரசியல் கொலை ரொம்ப பரபரப்பா பேசப்பட்டது. அதை எதிர்த்து, குறிப்பா இந்த விஷயத்தில காவல்துறை ரொம்பவும் கேர்லஸ்ஸா நடந்துக்கிட்டத ஜனங்கக்கிட்ட எடுத்து சொல்றதுக்கு பிஜேபி ஒரு கடையடைப்பே நடத்துனாங்க.

இதே மாதிரி மேற்கு வங்கம், கொல்கொத்தா சிட்டியில கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்து முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல்ல ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆளுங்களுக்கு இடையில நடந்த சண்டையில பல எதிர்கட்சி ஆளுங்கள திட்டம்போட்டு கொலை செஞ்சதாகவும்  படிச்சிருப்பீங்க. அங்கயும் ஆளுங்கட்சி ஆளுங்களோட வெறியாட்டத்த போலீஸ் கண்டும் காணாததுபோல்  இருந்தாங்கன்னு எதிர்கட்சி ஆளுங்க சொன்னாங்க.

அதே மாதிரிதான் உத்தரபிரதேசத்திலயும்.  சமீபத்தில ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அப்புறம் பல பழிவாங்கும் கொலைகள் நடந்ததையும் கேள்விப்பட்டோம். அங்கயும் எதிர்க்கட்சிகளோட  கோபத்திற்கு உள்ளானது காவல்துறைதான்.

உயிர்க்கொலைங்கறது மற்றெந்த குற்றங்களையும் விட கொடுமையானதுங்கறதுல மாற்று கருத்து இருக்க முடியாது இல்லையா? அதை விட கொடுமை கொலை பண்ணிட்டு எந்த தண்டனையுமில்லாம தப்பிச்சிக்கிறது.

குற்றம் செஞ்சவர், அவர் யாராயிருந்தாலும், அவர் எவ்வளவு செல்வாக்கு படைச்சவரானாலும் அவரைக் கண்டுபிடிச்சி சட்டத்தின் முன்னால நிறுத்த வேண்டிய முதல் பொறுப்பு போலீசுக்குத்தான் இல்லையா?

ஏன்னா சட்டத்தை அமல்படுத்தற கடமையும் பொறுப்பும் அவங்களுக்குத்தான் இருக்கு. அதுக்குத்தான் அவங்கள அரசாங்கம் வேலை குடுத்து அதுக்கு சம்பளமும் குடுக்கறாங்க, சரிதானே?

ஒரு கொலைக் குற்றம் நடந்து முடிஞ்சதும் அதுக்கு காரணமாயிருந்த கொலைகாரன கண்டுபிடிச்சி சரியான  தண்டனையை வாங்கிக் குடுக்கறதுல எதுக்கு இவ்வளவு டிலே ஆகுது?

போலீசோட அஜாக்கிரதையும் அசிரத்தையுமே இதுக்கு முக்கிய காரணம்னு எல்லாரும் சொல்றாங்களே அது உண்மையா?

அதே சமயம் அவங்க தங்களோட அதிகாரத்த முழுசா, பயன்படுத்தறதுக்கு அனுமதிக்கப்படுறதில்லேன்னும் சொல்றாங்களே, அது உண்மையா?

இந்த விஷயத்துல, போலீஸ் இலாக்கா தங்களோட அதிகாரிகளுக்கு குடுத்துருக்கற அட்வைஸ் அல்லது guidelines என்னென்னன்னு  கொஞ்சம் டீப்பா போயி பாக்கலாமா?

ஆனா அதுக்கு முன்னால குற்றம்னா என்னன்னு சட்டம் சொல்லுதுன்னு  சுருக்கமாக பாக்கலாம்.

இந்திய தண்டனைச் சட்டத்துல (IPC: Indian Penal Code 1860) இந்தியாவுல  நடக்கற எல்லா குத்தத்தையும் அவைகளுக்குண்டான தண்டனைகளையும் விளக்கி சொல்லியிருக்காங்க.

அதுல எல்லா மாதிரியா குத்தங்களையும் சொல்லியிருந்தாலும் நாம இந்த பதிவுல பாக்கப்போறது கொலைக்குத்தம் மட்டுந்தான். ஏன்னா அதுதான நாட்டுல நடக்கற எல்லா குத்தத்துலயும் ரொம்பவும் பரபரப்பா பேசப்படுது?

கொலைக் குத்தத்தப்பத்தி பாக்கறதுக்கு முன்னால பொதுவா குத்தம்னா என்னன்னு இந்த சட்டம் சொல்லுதுன்னு பாப்போம்.

CRPC 1973 (இந்திய குற்றவியல் முறைச்சட்டம் - இ.மு.ச.1973)

"offence" means any act or omission made punishable by any law for the time being in force..."

குத்தம்னா என்ன, ஒரு குத்தவாளிய புடிக்கறதுலருந்து அவர கோர்ட்டுக்கு போயி தண்டனை வாங்கிக்குடுக்கற வரைக்கும் என்னென்ன செய்யணும் இந்திய குற்றவியல் முறைச்சட்டத்துல (இ.மு.ச) சொல்லியிருக்காங்க.

அந்த சட்டத்துல சொல்லியிருக்கறபடி இந்தியாவுல நடைமுறையில இருக்கற எல்லா சட்டமும் இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சீங்கன்னா (Acts) உங்களுக்கு தண்டனை நிச்சயம்னு சொல்லுதோ அதெல்லாமே குத்தம்தானாம். அது மட்டுமில்லீங்க, சட்டம் செய்யின்னு சொல்லியிருக்கற எதையாச்சும் நாம செய்யாம இருந்தாலும் (omissions) குத்தம்தானாம்!

தலை சுத்துது இல்ல?

இந்தியாவுல மட்டுமில்லீங்க, உலகத்துல இருக்கற எல்லா சட்டத்தையும் இப்படி தலைய சுத்தி மூக்க தொடறா மாதிரிதான் சொல்லி வச்சிருக்காங்க. நம்ம சட்டத்த எழுதி வச்சவங்கள்லயும் பெரும்பாலானவங்க இங்கிலாந்து, அமெரிக்கா மாதிரி நாட்டு சட்டங்கள படிச்சிட்டு வந்தவங்கதானே? அதான் அதே ஸ்டைல்ல நம்மள மாதிரியான பாமர ஆளுங்களுக்கு புரியாத ஸ்டைல்ல எழுதி வச்சிருக்காங்க.

இங்லீஷ்ல எழுதி வச்சிருக்கறத படிச்சாலே புரியமாடேங்குது இந்த லட்சணத்துல தமிழாக்கம் பண்றேன் பேர்வழின்னு நம்ம ஆளுங்க (படிப்பு என்னமோ எம்.ஏ., பி.எல்னுதான் போட்டுக்கிட்டிருக்காங்க) தமிழாக்கம் பண்ணி வச்சிருக்காங்க பாருங்க, அதுக்கு இங்லீஷ்ல எழுதியிருக்கறதே மேல்னு சொல்லலாம்.

இந்த பதிவ எழுதறதுக்கு முன்னால சென்னையிலருக்கற ஹிக்கின்ஸ்பாதம்ஸ் கடைக்கி போயி சட்டத்த பத்தி  தமிழ்ல புக்ஸ் ஏதாச்சும் இருக்கான்னு பாத்தேன். நிறைய இருக்கு. அதுல சிலத மேலோட்டமா படிச்சிட்டு வாங்கிக்கிட்டும் வந்தேன். இங்லீஷ்ல எழுதியிருக்கறத ஏற்கனவே நெட்லருந்து டவுண்லோட் பண்ணி வச்சிருக்கேன். அதுல எழுதியிருக்கறத அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கொஞ்சம் கூட தமிழுக்கு ஏத்தா மாதிரி மாற்றி அமைக்காம (rearrange) பண்ணாம மொழி மாத்தம் மட்டும் செஞ்சி வச்சிருக்கறத பாத்தப்போ போட்ட காசு தெண்டம்டான்னு பட்டுது. அதனால நா படிச்சி புரிஞ்சிக்கிட்டத சிம்பிளா சொல்றேன்.

சிம்பிளா சொல்லணும்னா க்ரிமினல் சட்டத்துல கொலை செஞ்சா, பிக்பாக்கெட் அடிச்சா குத்தம்னு சொல்லியிருக்காங்கன்னு வையிங்க. அவங்க சொன்னா எனக்கு என்ன நா செய்யத்தான் செய்வேன்னு செஞ்சா அது குத்தம். இத சட்டத்துல actsனு சொல்லியிருக்காங்க.

அதே மாதிரி சட்டத்துல இதெல்லாம் நீங்க செய்யணும்னு சொல்லி வச்சிருக்காங்க. அதாவது உங்க ஃப்ரெண்ட் ஒரு கொலைய பண்ணிட்டு உங்கக்கிட்ட வந்து அடைக்கலம் கேக்கறாரு. ஆனா அவரு கொலை செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சா உடனே போலீசுக்கு சொல்லணும்னு சட்டம் சொல்லுது. ஆனா அவரு நம்ம ஃப்ரென்டாச்சே இல்லன்னா நம்ம மகனாச்சேன்னு வீட்ல பூட்டி வச்சிட்டு பேசாம இருந்தீங்கன்னா அது omissionகற குத்தம். அதேமாதிரி  வருமான வரிச் சட்டம் ஒவ்வொரு வருசமும் மார்ச் 31ம் தேதிக்குள்ள வருமான வரிய கட்டிறணும்னு சொல்லுது. ஆனா அடப் போய்யா ஒனக்கு வேலையில்லேன்னு கட்டாம இருந்தீங்கன்னா அதுவும் omissionங்கற குத்தமாம்!

ஆக, சிலத செஞ்சாலும் குத்தம் வேற சிலத செய்யாம இருந்தாலும் குத்தம். சுத்தமா இல்லன்னாலும் சுமாராவாது புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். இல்லன்னாலும் பரவால்லை. இனிமே சொல்றத வச்சி ஒரளவுக்கு புரிஞ்சிக்கலாம். தொடர்ந்து படிங்க.

1.சூதாடறது சட்டப்படி குத்தம். நீங்க காசு வச்சி சூதாடி போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டா நீங்க குற்றவாளி.

2.பதினெட்டு வயசு முடியாத பொண்ண கல்யாணம் பண்றது குத்தம். நா அப்படித்தான் செய்வேன்னு சொல்லி செஞ்சீங்கன்னா நீங்க குத்தவாளி.

அதே மாதிரி சட்டம் ரோட்டுல போறப்போ சில ரூல்ஸ போட்டு இப்படித்தான் போவணும், ரெட் சிக்னல்ல நிக்கணும், லைன் மாதிரி போவக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. எனக்கு அதப்பத்தியெல்லாம் கவலையில்லேன்னு அதன்படி நடக்காம இருந்தீங்கன்னா அதுவும் omissionங்கற விதிப்படி குத்தம்தான்.

வருமான வரி கட்டுனா போறாது ஜூலை 31ம் தேதிக்குள்ள வருமான வரி ரிட்டர்ன் (Return) ஃபைல் பண்ணிறம்னுன்னும் சொல்லியிருக்காங்க. ஆனா நா பண்ண மாட்டேன்னு சும்மா இருந்தீங்கன்னா அதுவும் omissionதான்.

சரி, குத்தம்னா என்னன்னு பாத்தாச்சி. இனி இதுல எத்தனை வகைன்னு பாப்போம்.

குத்தத்துல சிவில் (civil) க்ரிமினல் (criminal)னு ரெண்டு வகையா பிரிச்சிருக்காங்க.

நாம இந்த பதிவுல பாக்கப் போறது க்ரிமினல் குத்தங்களபத்தித்தான். அதுலயும் கொலைக் குத்தத்த பத்தி மட்டுந்தான் பாக்கப்போறோம்.

க்ரிமினல் குத்தத இன்னும் ரெண்டு வகையா பிரிச்சிச் சொல்லியிருக்காங்க.

1. வாரண்ட் குற்றங்கள்.
2. மற்ற குற்றங்கள்/

1. பிடி வாரன்ட் (arrest waarant) இல்லாமல் குற்றம் செஞ்சவரைக் கைது பண்ணக் கூடிய குற்றங்கள். இத ஆங்கிலத்தில் Cognizable offencesனு சொல்றாங்க. அதாவது, குத்தம் நடந்துருக்குன்னு தெரிய வந்தவுடனே  காவல்துறை ஆய்வாளரோ அல்லது துணை ஆய்வாளரோ (இவங்களுக்கு கீழ இருக்கற ஹெட் கான்ஸ்டபிளோ இல்ல கான்ஸ்டபிளோ கைது பண்ண முடியாதுங்க) சந்தேகத்துக்குள்ளானவரை கைது செய்யலாம். உதாரணத்துக்கு கொலைக் குற்றம் செஞ்சவர். இவர கைது பண்றதுக்கு பிடி வாரண்ட் எதுவும் தேவையில்லையாம்!.

2. நீதிமன்றத்துலருந்து பிடிவாரண்ட் வாங்குனதுக்கப்புறம் கைது பண்ணக்கூடிய குத்தம். அதாவது இந்த குற்றத்த செஞ்சதா சந்தேகத்தின் பேர்ல காவல்துறை அவங்க நினைச்சபடி கைது பண்ண முடியாது. இத ஆங்கிலத்துல Non-Cognizable offencesனு சொல்றாங்க. உதாரணம்:  பண மோசடி, ஏமாத்து வேலை செஞ்சவங்க அப்புறம்  பொது இடத்துல தகராறு பண்றவங்க. இவங்களை விசாரனைக்கு கூட்டிக்கிட்டு போலாமே தவிர கோர்ட் உத்தரவு இல்லாம கைது செய்ய முடியாது.  அப்படி விசாரணக்கப்புறம் இவர்தான் குத்தவாளின்னு போலீசுக்கு தெரியவந்தா சம்பவம் நடந்த இடம் எந்த கோர்ட்டுக்கு கீழ வருதோ அங்கருந்து பிடி வாரண்ட் வாங்கி கைது பண்ணிக்கலாம்.

இந்த குற்றங்கள இன்னும் ரெண்டு விதமா சட்டம் பிரிக்கிது:

1. நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ பிணை வழங்கக் கூடிய குற்றங்கள்
2. பிணை பெற முடியாத குற்றங்கள்.

ஆனா பிணை பெற முடியாத குற்றங்கள்ல கூட நீதிமன்றம் நினைச்சா பிணை வழங்க முடியுமாம்! அது அந்த குத்தத்தோட தீவிரத்த பொருத்தது.

இதுல  பிடி ஆணை எதுவும் இல்லாம கைது பண்ணக்கூடிய குத்தங்கள்ல முக்கியமான குத்தம் கொலைக் குத்தம்.

கொலைக் குத்தம்னா என்னன்னு இந்திய தண்டனைச் சட்டத்துல (இதச 1860) சொல்லியிருக்காங்க.

இந்த பிரிவுல சொல்லியிருக்கறத அப்படியே ஆங்கிலத்துல கீழ குடுத்துருக்கேன் பாருங்க:

299. Culpable homicide: Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.

இத அப்படியே மொழி மாற்றம் செஞ்சா ஒன்னும் புரியாது. அதனால இதுல சொல்லியிருக்கற சாராம்சத்த மட்டும் பாக்கலாம்.

இதுல மூனு விஷயங்கள சொல்லியிருக்காங்க:

1. ஒருத்தர கொலை செய்யிறது,
அல்லது
2. ஒருத்தர கொலை செய்யணும்கற எண்ணத்தோட பயங்கரமா தாக்குறது,
அல்லது
3. நாம அடிச்சா அவரு செத்துருவாருன்னு தெரிஞ்சும் அடிக்கறது.

இந்த மூனுமே கொலைக்குத்தம்தான். இத culpable homicideனு ஆங்கிலத்துல சொல்றாங்க.

இது ஒரு பொதுவான விளக்கம்னு சொல்லலாம்.

இதே சட்டத்துல அடுத்தடுத்து வர்ற பிரிவுகள்ல கொலைன்னா என்னன்னு இன்னும் தெளிவா சொல்லியிருக்காங்க. அதையும் பாக்கலாம்.


300. Murder Except in the cases hereinafter excepted, culpable homicide is murder, if the act by which the death is caused is done with the intention of causing death, or-

Secondly- If it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person to whom the harm is caused, or-

Thirdly- If it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death, or-

Fourthly,- If the person committing the act knows that it is so imminently dangerous that it must, in all probability, cause death or such bodily injury as is likely to cause death, and commits such act without any excuse for incurring the risk of causing death or such injury as aforesaid.

இந்த பிரிவுல கீழ சொல்லியிருக்கற அஞ்சி செயல்கள லிஸ்ட் (List) பண்ணிட்டு அதத் தவிர மேலே சொன்ன பிரிவு 299ல சொல்லியிருக்கற செயல்கள் எல்லாமே கொலைக்குத்தமா கருதப்படுமாம். அது என்ன செயல்கள்?

Exception 1- When culpable homicide is not murder- Culpable homicide is not murder if the offender, whilst deprived of the power of self-control by grave and sudden provocation, causes the death of the person who gave the provocation or causes the death of any other person by mistake or accident.

இப்ப ஒருத்தர் உங்கள கோவப்படுத்தறா மாதிரி பேசறாருன்னு வச்சிக்குவம். உங்களுக்கு திடீர்னு பயங்கரமா கோவம் வந்து கன்ட்ரோல் போயிறுது. அதாவது உங்கள கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவம். கோவத்துல என்ன செய்யிறதுன்னு தெரியல. அதனால என்ன செய்யறோம்னே தெரியாம அவர கொலை பண்றீங்க. ஆனா அவர கொலை பண்ணணும்கறது உங்க எண்ணம் இல்ல. உங்களையும் அறியாம நீங்க செஞ்சிடறீங்க. சட்டம் அது கொலை இல்லேன்னு சொல்லுது.


Exception 2- Culpable homicide is not murder if the offender, in the exercise in good faith of the right of private defence of person or property, exceeds the power given to him by law and causes the death of the person against whom he is exercising such right of defence without premeditation, and without any intention of doing more harm than is necessary for the purpose of such defence.

உங்கள ஒருத்தர் தாக்குறாரு. அதுலருந்து நீங்க தப்பிக்கலன்னா ஒருவேளை உங்களுக்கு பயங்கர காயம், ஏன், மரணமே ஏற்படப்போவுதுன்னு நீங்க நினைக்கறீங்க. உங்கள காப்பாத்திக்கறதுக்கு நீங்க ஏதாச்சும் செஞ்சே ஆவணும். அந்த மாதிரி நீங்க நெனச்சி ஏதாச்சும் செய்யப் போக அதனால உங்கள தாக்க வந்த ஆளு செத்துடறாரு. உங்களுக்கு அந்த ஆள கொலை செய்யணும்கற எந்த எண்ணமும் இல்லை. நீங்க செஞ்சது உங்கள காப்பத்திக்கறது செஞ்ச காரியம். அதனால தாக்கப்பட்ட ஆள் செத்துப் போனாலும் சட்டத்தோட பார்வையில அது ஒரு கொலை இல்லை.

Exception 3- Culpable homicide is not murder if the offender, being a public servant or aiding. a public servant acting for the advancement of public justice, exceeds the powers given to him by law, and causes death by doing an act which he, in good faith, believes to be lawful and necessary for the due discharge of his duty as such public servant and without ill-will towards the person whose death is caused.

ஒரு பப்ளிக் செர்வன்ட் (அரசு ஊழியர்னு சொல்லலாம். இதுல காவல்துறை அதிகாரிகளும் வருவாங்க) பொது இடத்துல சட்டத்த நிலைநாட்டறதுக்கு சட்டத்துக்குட்பட்டு தங்களோட ட்யூட்டிய செய்யறப்போ அதனால யாருக்காச்சும் மரணம் சம்பவிச்சா அது கொலை இல்லை. அந்த அரசு ஊழியரும் கொலையாளின்னு கருதப்படமாட்டார். மரக்காணம் கலவரத்துல நடந்த துப்பாக்கி சூட்டுல நிறைய பேர் இறந்தாங்களே அதுக்கு சம்மந்தப்பட்ட போலீசார் மேல கொலைக் குத்தம் சுமத்தணும்னு எதிர்க்கட்சிகள் சொல்லியும் அரசு கண்டுக்காம இருந்தாங்களே அது இதனால்தான் போலருக்கு.

Exception 4. -Culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight in the heat of passion upon a sudden quarrel and without the offender having taken undue advantage or acted in a cruel or unusual manner.

ஒருத்தர கொல்லணும்கற எந்த திட்டமும் இல்லாம திடீர்னு அவர்கூட ஏற்பட்ட வாக்குவாதம் முத்திப்போயி அதனால அவர நீங்க அடிக்கப் போயி அவர் இறந்துட்டார்னா அதுவும் கொலை இல்லையாம். ஆனா நீங்க குரூரமா எதையும் செஞ்சிருக்கக் கூடாது. குரூரம்னா என்னன்னு இந்த செக்‌ஷன்ல சொல்லல. அத கோர்ட் தீர்மானிக்கும். இதுல யார் முதல் அடிச்சாங்கறது முக்கியமில்லேன்னும் சட்டம் சொல்லுது.

Exception 5- Culpable homicide is not murder when the person whose death is caused, being above the age of eighteen years, suffers death or takes the risk of death with his own consent.

நாம ஒருத்தருக்கு விஷத்த குடுத்து குடிறான்னு சொல்றோம். அவருக்கும் அத குடிச்சா நாம செத்துருவோம்னு நல்லா தெரியும். ஆனாலும் குடிச்சிட்டு செத்துபோயிட்டாரு. அதுவும் கொலை இல்லையாம். ஆனா செத்துபோனவர் பதினெட்டு வயசுக்குள் இருந்தவர்னு தெரிய வந்தா அப்போ நீங்க செஞ்சது கொலைக்குத்தம்.

முதல் தடவையா படிக்கறப்போ கொஞ்சம் குழப்பமாத்தான் (confusion) இருக்கும். ஆனா ஒன்னுக்கு ரெண்டு தரம் படிச்சா புரிஞ்சிரும்..

அதனால இன்னைக்கி இத்தோட நிறுத்திக்கறேன்..

மீதி நாளைக்கி பாக்கலாம்.



தொடரும்...

12 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்னது சரிதான். படிக்கும்போது சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது. அடுத்த பதிவையும் படித்துவிட்டு திரும்பவும் இரண்டாம் தடவை படிக்கிறேன்.

    சட்ட விதிமுறைகளை தமிழில் மொழி பெயர்க்கலாம். ஆனால் அதற்கு தமிழ் புலமையும் சட்ட அறிவும் இருக்கவேண்டும். அப்படி இரண்டும் இருந்தாலும் சிலவற்றை மொழி பெயர்த்தல் கடினம் தான். தாங்கள் இப்படி மணிப்பிரவாள நடையில் எழுதியிருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

  2. உண்மை நிலை தெரிய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது பதிவுக்காக மெனக்கெடலில் தெரிகிறது. சிலருக்காகவாவது விஷயம்புரிந்தால் அதை அவர்கள் பிறருக்கு சமயம் வரும்போது தெரியப் படுத்தலாம். உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள், ஜோசப் சார்.

    பதிலளிநீக்கு
  3. நானும் குழம்பித்தான் போயிருக்கிறேன்.ஐ.பி.சி யை மக்காலே ஓட்டைகள் இன்றித் தயாரித்தார் என்று சொல்வார்கள்.தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. என் சின்ன மூளைக்கு புரியாத விசயம்லாம் சொல்றீங்கப்பா ;-(

    பதிலளிநீக்கு
  5. சட்ட விதிமுறைகளை தமிழில் மொழி பெயர்க்கலாம். ஆனால் அதற்கு தமிழ் புலமையும் சட்ட அறிவும் இருக்கவேண்டும். அப்படி இரண்டும் இருந்தாலும் சிலவற்றை மொழி பெயர்த்தல் கடினம் தான்.//

    நீங்கள் சொல்வதும் உண்மைதான் சார். அதனால்தானோ என்னவோ தமிழில் மட்டுமலல்ல வேறெந்த பிராந்திய மொழிகளிலும் கூட சட்ட புத்தகங்கள் கிடைப்பதில்லை. இதற்கு பெரும்பாலான நீதிமன்றங்களில் இன்னும் ஆங்கிலமெ வழக்கத்தில் இருப்பதுதான் இதறகுக் காரணம். நான் சந்தித்த பல வழக்கறிஞர்களுக்கு தமிழில் எழுதவே வருவதில்லை.


    தாங்கள் இப்படி மணிப்பிரவாள நடையில் எழுதியிருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.//

    முதலில் எழுத்து நடையில் எழுதி எனக்கு தெரிந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு (பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் படித்துப்பார்க்கிறேன் என்று ஒத்துக்கொண்டார். சர்வீசிலுள்ள சிலர் வேணாம் சார் எதுக்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்டனர்.) படிக்கக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு படிப்பதற்கே கடினமாக இருக்கிறது, பேச்சு நடையில் எழுதுங்கள் சார். மற்றபடி சட்ட பிரிவுகளை சரியாகத்தான் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் என்றார்.

    நாளை இந்திய தண்டனை சட்டத்தில் எழுதியுள்ள சில எடுத்துக்காட்டுகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் தருகிறேன். அதைப் படித்தால் புரியும் என்று நினைக்கிறேன். இதில் சட்டத்தைப் பற்றி மட்டுமல்லாமல் காவல்துறையினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சிலருக்காகவாவது விஷயம்புரிந்தால் அதை அவர்கள் பிறருக்கு சமயம் வரும்போது தெரியப் படுத்தலாம். //

    எல்லா பாகங்களையும் (ஐந்து பகுதிகள்) எழுதி முடித்துவிட்டு மொத்த பதிவுகளையும் PDF கோப்பாக தருகிறேன். ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பார்த்தால் புரியும். உங்களுடைய கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. நானும் குழம்பித்தான் போயிருக்கிறேன்.//

    ஐந்து பகுதிகளையும் படித்துவிட்டு சொல்லுங்கள்.

    ஐ.பி.சி யை மக்காலே ஓட்டைகள் இன்றித் தயாரித்தார் என்று சொல்வார்கள்.தொடர்கிறேன்!//

    சட்டத்தில் ஓட்டைகள் என்று கூறமுடியாது. ஆனால் அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் (interpret)). அதனால்தானே கீழ் கோர்ட்டில் சரியென்று சொன்னதை மேல்கோர்ட்டில் தவறு என்கிறார்கள்? அதனால்தானோ என்னவோ தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறுகிறார் 'நான் எப்போதும் இந்திய குடியுரிமைச் சட்ட கைவடிவ புத்தகத்தை கையிலேயே வைத்திருப்பேன். ஏனெனில் அதை கரைத்துக்குடித்துவிட்டேன் என்று யாராலும் கூறமுடியாது.' என்று.

    பதிலளிநீக்கு
  8. என் சின்ன மூளைக்கு புரியாத விசயம்லாம் சொல்றீங்கப்பா..//

    நமக்கு எல்லாருக்குமே ஒரே சைஸ்லதான் மூளை குடுத்துருக்காரு கடவுள்னு நினைக்கறேன்.

    இந்த தொடர படிச்சி முடிச்சதும் நம்மள்ல ஒன்னு ரெண்டு பேராவது சட்ட வல்லுனர் ஆய்ட்டேன்னு சொல்லிக்க முடியாட்டாலும் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சா அதுவே போறும். இதுல நா சொல்லப் போற சில விஷயங்கள படிச்சா இந்த போலீஸ் எப்படியெல்லாம் சட்டத்த அவங்க இஷ்டத்துக்கு வளைச்சிக்கிறாங்கன்னு தெரிய வரும்.இத தெரிஞ்சிக்கிட்டு நம்மளால பெருசா ஒன்னும் செஞ்சிர முடியாதுதான். இருந்தாலும் சட்டம் சொல்றதையும் நாம தெரிஞ்சி வச்சிக்கறது நல்லதுதானே. தொடர்ந்து படிங்க.

    பதிலளிநீக்கு
  9. சார்,
    நான் உங்களிடம் இருந்து ஒரு தொடர் பதிவை எதிர்பார்கிறேன் உங்கள் பணி அனுபவத்திலிருந்து, நீங்கள் எப்படி உங்கள் சக ஊழியர்கள் மற்றும் வாடிகையாளர்களை சில இக்கட்டான சந்தர்பங்களில் கையண்டிர்கள் என்பதைபற்றி. கண்டிப்பாக உங்களுக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைத்திருக்கும் அவை என்னை போன்ற இளம் தலைமுறை நிர்வாகிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் உங்கள் திரும்பி பார்கிறேன் தொடரின் தீவிர ரசிகன்.

    அன்புடன்,
    இளம்பரிதி

    பதிலளிநீக்கு
  10. நிச்சயம் பயனுள்ள தொடர் தான்.... பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அப்படியே சட்டத் தேர்வுகளுக்கு உக்காந்திரலாம் போல தெரியுதே...

    என் வயது பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றதும் வக்கீலாய்ட்டார்.

    பதிலளிநீக்கு
  12. ஏராளமான விஷயங்கள் விளக்கமா சொல்லி இருக்கீங்க. ரெண்டு மூணு தடவை படிக்கணும்.
    இந்த மாதிரி பதிவுகள் அவசியம்

    பதிலளிநீக்கு