09 ஜூலை 2010

வீடும் அலுவலகமும் 2

இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?

தொடரும்..

1. அலுவலகம் - வீடு எல்லைகளை வரையறுத்துக்கொள்தல்

சமீப காலங்களில் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியின் காரணமாக வீடு, அலுவலகம் என்கிற பாகுபாடில்லாமல் போய்விட்டது என்றால் மிகையல்ல. முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுவிட்டால் அடுத்த வேலை நாள் அன்று அலுவலகம் திரும்பும்வரை அலுவலக விஷயங்களுக்காக நம்மை தொடர்புகொள்ள வழியில்லாமல் இருந்தது. இது ஒரு வகையில் சிலருக்கு, குறிப்பாக அதிகாரிகளுக்கு, குறையாக இருந்தாலும் அதிகாரத்திற்குட்பட்ட பலருக்கும் இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

ஆனால் கைத்தொலைபேசி புழக்கத்திற்கு வந்த நாளிலிருந்து அலுவலக நேரம் என்பதே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. ஏன் அலுவலக நாட்கள், விடுமுறை நாட்கள் என்ற பாகுபாடுகூட இல்லாமல் போய்விட்டது என்றாலும் மிகையல்ல.

இந்த சூழலில் அலுவலகம், வீடு என்று தீர்க்கமான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள் என்பது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக தோன்றலாம். நாம் வாசிக்கின்ற பல மேலாண்மை தத்துவங்கள் தொலைதொடர்பு தொழில்நுட்பம் இன்றைய அளவுக்கு வளர்ச்சிபெறாத சூழல்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஆகவே அத்தகைய தத்துவங்கள் காலாவதியாகிப்போன வெற்று போதனைகளே!

கைத்தொலைபேசியை அணைத்து செயலிழக்க செய்துவிட்டால் போதாதா என்றால் அழைத்தவர் ஒருவேளை நம்முடைய உயர் அதிகாரியாய் இருந்து அவர் அழைத்த நோக்கம் தலைபோகிற அவசரமாக இருந்துவிட்டால் என்னாவது என்கிற அச்சத்தாலேயே ஏற்படுகிற மன அழுத்தம் முந்தைய மன அழுத்தத்தை விட அபாயகரமானது. இதற்கு மாற்றாக கைத்தொலைபேசியை நிசப்தநிலையில் (Silent Mode) வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை என்று எண்ணுபவர்களும் உண்டு. அழைத்தவர் யார் என்பதை அறிந்துக்கொண்டு தேவைப்பட்டால் எடுத்து பதிலளிப்பது, இல்லையென்றால் தவிர்த்துவிடலாமே. இதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நம்மை அழைத்தவர் நமக்கு அறிமுகமான அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே! அது மட்டும் போதாதே, அவருடைய தொலைபேசி எண்ணும் நம்முடைய கைத்தொலைபேசி எண் பட்டியலில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டுமே!

ஆக எல்லைகளை வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.

எனக்கு மிகவும் நெருக்கமான அலுவலக நண்பர் வீட்டிலேயே அலுவலக கோப்புகளை மனைவி மற்றும் குழந்தைகளுடைய இடையூறு இல்லாமல் பார்வையிட அதற்கென ஒரு அறையையே ஒதுக்கியிருப்பார். அலுவலகத்திலிருந்து சரியாக ஏழு மணிக்கு கைப்பெட்டியுடன் கிளம்பும் அவரை அவருடைய சக அதிகாரிகள் பொறாமையுடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் அவருடைய கைப்பெட்டியில் அன்றைய கோப்புகள் இருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

இன்னொரு நண்பர் காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இரவு பத்து மணிக்கு மேல்தான் புறப்படுவார். காலை பத்து மணிக்குக் கூட வரமுடியாமல் ஆனால் மாலை ஏழு மணிக்குள்ளாக புறப்பட எண்ணும் என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இலாக்கா அதிகாரியின் மண்டையிடியை பெற்றுத் தருவதில் அவருக்கு அப்படியொரு ஆனந்தம். பிறகுதான் தெரிந்தது அவருடைய குடும்பப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் அலுவலகத்தை தஞ்சம் அடைகிறார் என்கிற விஷயம். Escapism எனப்படும் இத்தகைய அணுகுமுறையும் எல்லைகளை வரையறுத்துக்கொள்ள இயலாமையின் வெளிப்பாடுதான்.

வேறு சிலர் வீட்டுப் பிரச்சினைகளை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நண்பர்கள் அனைவரிடமும் அதையே நாள் முழுவதும் கூறி சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் இத்தகைய புலம்பல்களால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதிகபட்சம் அலுவலக நண்பர்களின் அன்றைய அலுவல்கள் பாதிக்கப்படலாம். ஆனால் அவருடைய பிரச்சினைகளுக்காக யாரும் பெரிதாக கவலைப்பட்டு தங்களுடைய மனநிம்மதியை கெடுத்துக்கொள்ள போவதில்லை.

இன்னும் சிலர் அலுவலக தோல்விகளை வீட்டுக்குள் கொண்டு சென்று குடும்பத்திலுள்ள அனைவரையும் குறை கூறுவார்கள். இத்தகையோருடைய மனப்பாங்கு அவர்களை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை இவர்கள் உணர்வதில்லை.

இத்தகையவர்களுக்குத்தான் இந்த 'எல்லைகள் வரையறுத்துக்கொள்க' என்கிற அறிவுரை பொருந்தும்!

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது.

அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?

சாத்தியம்.

ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.

தொடரும்..

1 கருத்து: