30 மார்ச் 2009

எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தியதி முதல் நாட்டிலுள்ள எந்த ஏடிஎம்மிலும் எவ்வித கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம் என கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏற்கனவே இதைக் குறித்து ஒரு பதிவும் வந்துள்ளது. என்னுடைய என்னுலகம் வலைப்பூவிலும் நண்பர் ஒருவர் இதைக் குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதுங்களேன் என கேட்டிருந்தார்.




இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஏற்பாட்டால் நாட்டிலுள்ள மிகப் பெரிய வங்கிகள் பெருத்த லாபம் அடைய வாய்ப்புள்ளது எனவும் நண்பர் ஒருவர் தன்னுடைய பதிவில் எழுதியிருந்தார்.



இது ஓரளவுக்கு உண்மைதான்.



இதை சற்று விரிவாக பார்ப்போம்.



வங்கி ஏடிஎம்களில் இருவகை Transactions (வர்த்தக பரிவர்த்தனைகள், கொடுக்கல், வாங்கல் என சொல்லலாம்) நடைபெறுகின்றன.



1. வழங்குபவர் பரிவர்த்தனை (Issuer Transaction): என்னுடைய வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்கும் ரொக்க பரிவர்த்தனை (Cash Transaction).



2. பெறுபவர் பரிவர்த்தனை (Acquirer Transaction): அதாவது மற்றொரு வங்கியின் வாடிக்கையாளர் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் வந்து பணம் எடுக்கும் ரொக்க பரிவர்த்தனை.



முதல் பரிவர்த்தனையில் என்னுடைய வங்கி ஏடிஎம் உரிமையாளர் வங்கியிடமிருந்து (The Bank which owns the ATM) கடன் பெறுவதற்கு ஒப்பாகும். It indirectly means that my bank borrows money from the Bank which owns the ATM. ஆகவே நான் அந்த வங்கிக்கு இத்தகைய பரிவர்த்தனைக்கு என குறிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.



இரண்டாவது பரிவர்த்தனையில் என்னுடைய வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கி கடன் பெறுகிறது. ஆகவே அந்த வங்கி என்னுடைய வங்கிக்கு குறிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.



இந்த கட்டணம் Inter-change fee என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டணத்தை வங்கிகள் நேரடியாக பெற்று/கொடுத்துக் கொள்வதில்லை. இந்த ஏடிஎம் அட்டைகள் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் (The Company which manages these transactions through switching system)



இப்போது நாட்டிலுள்ள ஏடிஎம் அட்டைகள் விசா, மாஸ்டர், NFS (National Financial Switch), CashTree என்ற பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.



உதாரணத்திற்கு, என்னுடைய வங்கிக்கு மேலே குறிப்பிட்டுள்ள நான்கு நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தமசெய்துள்ளது. ஆகவே நாங்கள் வழங்கும் கடன் மற்றும் ஏடிஎம் அட்டைகளை இந்த இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளின் ஏடிஎம்களிலும் பயன்படுத்த முடியும். அதுபோன்றே இந்த இரண்டு நிறுவனங்களாலும் நிர்வகிக்கப்படும் கடன் மற்றும் ஏடிஎம் அட்டைகளைக் வழங்கியுள்ள எந்த வங்கியின் வாடிக்கையாளரும் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.



நான் மேலே குறிப்பிட்ட Inter-change feeஐ ஒரு வங்கியிலிருந்து (Issuer Bank) பெற்று மற்றொரு வங்கிக்கு (Acquirer Bank) வழங்கும் பணியை இந்த இரண்டு நிறுவனங்களும் செய்யும். உதாரணத்திற்கு உங்களிடமுள்ள ஏடிஎம் அட்டை விசா முத்திரையைக் கொண்டிருக்குமானால் குறிப்பிட்ட கட்டணத்தை விசா நிறுவனம் உங்களுடைய (Issuer ) வங்கியிடமிருந்து பெற்று தங்களுடைய கமிஷனைக் கழித்துக்கொண்டு (Service Charges) மீதமுள்ள தொகையை என்னுடைய (Acquirer) வங்கிக்கு வழங்கும். அதுபோன்றே மாஸ்டர், NFS போன்ற நிறுவனங்களும் செய்கின்றன.



தற்போது ஒவ்வொரு விசா அட்டையை பயன்படுத்தி எடுக்கப்படும் தொகைக்கும் ரூ.20/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்னுடைய வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படும் பட்சத்தில் என்னுடைய வங்கிக்கு இந்த ரூ.20/-ல் சுமார் ரூ.16/- கிடைக்கும். என்னுடைய வங்கி வாடிக்கையாளர் மற்றொரு வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பட்சத்தில் ஏடிஎம் உரிமையாளர் வங்கிக்கும் இதே தொகை கிடைக்கும்.



இப்போதும் கூட சில ICICI, HDFC போன்ற பெரிய தனியார் வங்கிகள் இந்த கட்டணத்தை தங்களுடைய வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதில்லை. இதை ஒரு வாடிக்கையாளர்களை கவரும் சேவையாக செய்கின்றன. ஆனால் எதிர்வரும் ஏப்ரல் முதல் தியதியிலிருந்து எங்களைப் போன்ற வங்கிகளூம் கூட இந்த கட்டணத்தை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும்.



ஆனால் இந்த அட்டைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுமைக்கு உட்படாத நிறுவனங்கள் என்பதால் அவை இப்போது போன்றே கட்டணத்தை வசூலிக்கத்தான் செய்யும். ஆகவே இந்த ஆணை வங்கிகளை மட்டுமே பாதிக்கும்.



பெரிய வங்கிகள் அதாவது மிக அதிக அளவில் ஏடிஎம் வைத்துள்ள வங்கிகளுக்கே இந்த புது நியதி சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. அவர்களுடைய Acquirer பரிவர்த்தனைகள் Issuer பரிவர்த்தனைகளை விட பண்மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இப்போதும் கூட எங்களுடைய வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளுடைய ஏடிஎம்மில் பணம் எடுப்பதுதான் அதிகம். கட்டணம் வசூலிக்கப்படும்போதே இந்த நிலை என்றால் எந்த வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம் ஏதும் இல்லை என்கிற நிலை வரும்போது என்னுடைய வங்கி ஏடிஎம்மை தேடி அலைய வேண்டிய தேவை இல்லையே? ஆகவே என்னுடைய வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்டண இழப்பு ஒருபுறம் இருக்க இதனால் வேறு சில பிரச்சினைகள், செலவினங்கள் எங்களைப் போன்ற சிறிய வங்கிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.



உதாரணத்திற்கு சென்னையில் என்னுடைய வங்கி ஏடிஎம்களில் ஒன்று HDFC ஏடிஎம்களில் ஒன்றின் அருகாமையில் உள்ளது. எங்களைப் போன்று பண்மடங்கு வாடிக்கையாளர்களைக் கொண்ட அந்த வங்கியின் ஏடிஎம் முன்பு எப்போதும் நீண்ட வரிசை காத்திருக்கும். குறிப்பாக மாதத்தின் முதல் வாரங்களில். என்னுடைய வங்கியின் ஏடிஎம் பல சமயங்களில் காலியாக இருக்கும். அருகிலுள்ள வங்கியின் ஏடிஎம் காலியாக இருந்தும் வசூலிக்கப்படும் கட்டணத்தை மனதில்கொண்டு வாடிக்கையாளர்கள் கால் கடுக்க தங்கள் ஏடிஎம் முன்பாகவே நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.



ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆணைப்படி ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய கணக்கிலிருந்து எந்த வங்கியின் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படமட்டாது என்பது தெரிய வரும்போது எந்த வாடிக்கையாளரும் நீண்ட வரிசையில் காத்திருக்க விரும்பமாட்டார் அல்லவா?



இதனால் என்னுடைய வங்கியின் ஏடிஎம்மிலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுக்க வாய்ப்புண்டு. அதாவது என்னுடைய வங்கியின் Acquirer பரிவர்த்தனைகள் பண்மடங்காக வாய்ப்புண்டு. ஆனால் இதன் விளைவாக என்னுடைய வங்கியின் ஏடிஎம்மின் பராமரிப்பு செலவும் அதிகரிக்க வாய்ப்புண்டு. எப்படி? இப்போது என்னுடைய வங்கியின் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே என்னுடைய வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அதாவது நாளொன்றுக்கு ஐம்பது வாடிக்கையாளர்கள். அவர்கள் கூட்டாக எடுக்கும் தொகை நாளொன்றுக்கு அதிகபட்சம் சுமார் ரூ.5.00 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். என்னுடைய வங்கியின் ஏடிஎம்மில் சுமார் 15 லட்சம் ரொக்கம் (Cash) வைக்க முடியுமெனில் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொகையை Replenish (மீண்டும் நிரப்புதல்) செய்தால் போதும். ஆனால் ஏப்ரல் முதல் தியதியிலிருந்து இதே ஏடிஎம்மில் இருந்து மற்ற வங்கியின் வாடிக்கையாளரும் பணம் எடுக்க துவங்கினால் இதே எண்ணிக்கை 200ஐயும் தாண்ட வாய்ப்புண்டு. அந்த சூழலில் தினமும் அல்லாமல் ஒரே நாளில் இருமுறையும் கூட தொகையை நிரப்ப வேண்டியிருக்கும்! இந்த பணியை வேறு நிறுவனங்கள் செய்வதால் (outside agencies) அவர்கள் கூடுதல் Service Charges வசூலிப்பார்கள். இது ஒரு பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.



எப்படியோ, வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆணை ஒரு வரப்பிரசாதம்தான்.



************

5 கருத்துகள்:

  1. ஜோசப் சார்,
    அசத்தலான பதிவு!

    ஒரளவு எனக்கு தெரிந்த விடயம் தான் என்றாலும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.நன்றி!

    பதிலளிநீக்கு
  2. எனக்கு முழுமையாகப் புரியவில்லை எனினும் கூட கே.வி.பி/ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நான் எங்கள் வீட்டிற்கு அருகே உள்ள எஸ்.பி.ஐ ஏ.எஇ.எம் இல் இருந்தே பணம் எடுக்க முடியும்! எவ்வித கட்டணக் கழிப்பும் இன்றி அப்படித்தானே!

    நல்ல விஷயம்தான்!

    பதிலளிநீக்கு
  3. ஆனால் இதிலும் வங்கிகள் குறிப்பிட்ட அளவு பரிவர்த்தணைகளுக்கு மட்டுமே இவ்வித கட்டணம் இல்லை என்று உள்குத்து வைப்பார்களே!

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜோ,

    ஒரளவு எனக்கு தெரிந்த விடயம் தான் என்றாலும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க சிபி,

    எனக்கு முழுமையாகப் புரியவில்லை எனினும் கூட கே.வி.பி/ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நான் எங்கள் வீட்டிற்கு அருகே உள்ள எஸ்.பி.ஐ ஏ.எஇ.எம் இல் இருந்தே பணம் எடுக்க முடியும்! எவ்வித கட்டணக் கழிப்பும் இன்றி அப்படித்தானே//

    உண்மைதான். ICICI,HDFC போன்ற வங்கிகள் இப்போதும் கூட தன்னுடைய வாடிக்கையாளர்களிடமிருந்து இத்தகைய கட்டணத்தை வசூலிப்பதில்லை. ஆனால் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்குமா அல்லது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு (Valuable Customers) மட்டுமா என்பது தெரியவில்லை. ஆனால் 1.4.09 முதல் இந்த சலுகை அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் புது நியதி!

    பதிலளிநீக்கு