05 மே 2009

பொதுத் தேர்தல் – பழைய நினைவுகள்!

 

வருகிற 13ம் தேதி தமிழகத்தில் பொதுத் தேர்தலாம்!!

சொன்னால்தான் தெரிகிறது.

கலைஞர், சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் மட்டும் இல்லையென்றால் தேர்தல் நடப்பதே பலருக்கும் நினைவில்லாமல் போயிருக்கும்.

இப்படியொரு மந்தமான தேர்தலைப் பார்க்கும்போது அந்தக்கால நினைவுகள் என்னையும் மீறி எழுகின்றன.

அப்போதெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடந்து முடியும்வரை சாலையெல்லாம் கட்சி தோரணங்கள், தட்டிகள்,வளைவுகள் என சென்னையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சாலையோர சுவர்களில் ஓவியர்கள் அரசியல் தலைவர்களின் உருவங்களை வரைவதை பார்த்துக்கொண்டிருந்தாலே பொழுது போவதே தெரியாது.

பெருந்தலைவர் காமராஜ், ராஜாஜி,பக்தவத்சலம்,அண்ணா போன்ற தலைவர்களின் உருவப்படத்திற்கு பின்னால் சாயத்தைத் தடவி அதை அப்படியே சுவரில் வைத்து அவுட்லைனை முதலில் வரைந்து பிறகு சிறிது, சிறிதாக வண்ணங்களால் உயிர்க்கொடுப்பதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம். சில கைதேர்ந்த கையில் ஒரு சிறிய புகைப்படத்தை கையில் பிடித்துக்கொண்டு நேரடியாக சுவரில் வரைவதும் உண்டு.

தினமும் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இதை பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.

அதையடுத்து நள்ளிரவுவரை நடைபெறும் பிரசாரக் கூட்டங்கள்.

மணிக்கணக்கில் பேசும் கட்சித் தலைவர்கள் அப்போது சொற்பம்தான் என்றாலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பும் நடைபெற்ற வில்லுப்பாட்டும் தெருக்கூத்தும் கட்சி பேதம் இல்லாமல் அனைவரையும் கவர்ந்திழுப்பதுண்டு.

பிறகு தமிழகத்தில் பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக மற்றும் அதன் தலைவர் அண்ணா அவர்களை தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒரு மாற்றாக முன் நிறுத்தியது.

அதுவரை சுவாரஸ்யமில்லாமல் இருந்த பிரசாரக் கூட்டங்கள் அண்ணா, நாஞ்சிலார்,ஈவிகே சம்பத் போன்றவர்களின் கவிதை நடையில் சரளமான அதே சமயம் நகைச்சுவை மிகுந்த மேடைப் பேச்சு பாமர மக்களையும் கவர்ந்திழுக்க துவங்கின.

தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டங்கள் வழியாக மட்டுமில்லாமல் வீட்டு கதவுகளையும் தட்ட துவங்கியது 1980களுக்கு பிறகுதான்.

புரட்சித்தலைவர் முதல்வராக தமிழகத்தைக் கைப்பற்றிய 1980 சட்டமன்ற தேர்தல் தேர்தல்தான் வாக்காளர் என்ற முறையில் என்னுடைய முதல் தேர்தல்.

அப்போதெல்லாம் வீட்டிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தையும் வாகனம் வைத்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்வார்கள். அதாவது ஓட்டுப் போட செல்லும்போது. திரும்பி வரும்போது ஒருவரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். நடராசா சர்வீஸ்தான். . ஆனாலும் அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று கட்சியைச் சார்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை கொண்டு வந்து ஐயா வாங்க, அம்மா வாங்க என அழைக்கும்போது… ஓட்டுரிமைக்கு இருந்த மதிப்பு அப்போதுதான் தெரிந்தது!

ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த பட்ச வாக்கு விகிதம் எழுபது விழுக்காட்டைத் தாண்டிவிடும். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் அந்தந்த தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்களின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார்.

சேஷன் தேர்தல் கமிஷனராக வந்தாலும் வந்தார். ஏதோ அதுவரை நடந்த தேர்தல்கள் எல்லாமே தவறு என்பதுபோலவும் இந்திய தேர்தல் நடைமுறையை தூய்மைப்படுத்த தன்னைத்தான்  கடவுள் படைத்தார் என்பதுபோலவும் தனக்குத்தானே கற்பித்துக்கொண்டு பொதுத்தேர்தலையே ஒரு சுவாரஸ்யமில்லாமல் ஆக்கிவிட்டார். அவர் எத்தனை பெரிய ‘யோக்கியர்’ என்பது பிறகுதானே தெரிந்தது!

Model Code of Conduct என்ற பெயரில் தேவையில்லாத சட்டதிட்டங்கள் தேர்தலை ஒரு சுவாரஸ்யமில்லாததாக ஆக்கிவிட்டன என்றுதான் சொல்வேன்.

இதனால்தானோ இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல்களிலும் ஓட்டு விகிதம் ஐம்பதிலிருந்து அறுபது விழுக்காட்டுக்குள்ளாகவே உள்ளது.  ஒரு தொகுதியில் நூறு வாக்காளர்கள் என்றால் அதில் ஐம்பது வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். அதில் முப்பது வாக்குகள் பெற்றவர் வெற்றிபெறுகிறார்! அதாவது மொத்த வாக்காளர்களில் எழுபது பேர் அவரை தெரிவு செய்யவில்லை என்றுதானே பொருள்? அவரை எப்படி மக்களின் பிரதிநிதி என அழைப்பது?

எந்த தேர்தலிலும் இந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பது என்று முன்கூட்டியே முடிவு செய்துவிடும் என்னைப் போன்ற வாக்காளர்கள் யாருடைய அல்லது எவ்வித தூண்டுதலும்  இல்லாமலே வாக்களித்துவிடுவர். ஆனால் தேர்தலில் வாக்களிக்கவே வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் அல்லது விருப்பமில்லாமல் இருப்பவர்களை ஒரு முடிவெடுக்கு வர துணை செய்வது கட்சி விளம்பரங்களும், பிரசார கூட்டங்களும்தான் என்றால் தவறில்லை.

அப்போதெல்லாம் சுவர் விளம்பரங்கள், சாலை முழுவதும் அலங்கரிக்கும் கட்சி தோரணங்கள் நீங்கலாக தேர்தலுக்கு முந்தைய தினத்தன்று  வீடு, வீடாக வாக்கு சீட்டு மாதிரிகளை கட்சித் தொண்டர்கள் வினியோகம் செய்து வாக்காளர்கள் எந்த ஓட்டுச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக சொல்வதுண்டு. தொண்டர்கள் வினியோகிக்கும் ஓட்டுச் சீட்டை காட்டினாலே சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிப்பார்கள். வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ எதுவும் தேவையிருக்கவில்லை.

ஆனால் இப்போது? தேர்தல் தினத்தன்று நம்முடைய பெயர் எந்த சாவடியில் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளவே மணிக்கணக்காகிறது! யார் பொறுமையுடன் தேடிப்பிடித்து வாக்களிப்பது என்று நினைப்பவர்கள்தான் அதிகம் பேர். ஆகவே இந்த தேர்தலிலும் வாக்கு விகிதம் ஐம்பது விழுக்காட்டைத் தாண்டினால் ஆச்சரியம்தான்!

சரி. இந்த தேர்தலில் என்னுடைய ஓட்டு யாருக்கு? ஏன்?

அடுத்த பதிவில் கூறுகிறேன்.

4 கருத்துகள்:

  1. //இந்த தேர்தலில் என்னுடைய ஓட்டு யாருக்கு? ஏன்?

    அடுத்த பதிவில் கூறுகிறேன்.

    //

    :))

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜோ,

    அடுத்த பதிவில் கூறுகிறேன்.

    //

    :))//

    உங்க ஸ்மைலியின் காரணம் புரிகிறது. அடுத்த பதிவுன்னா எப்படியும் ஒரு மாசம் ஆகும்னுதானே!

    அடுத்த ரெண்டு வாரத்துக்கு கொஞ்சம் ஃப்ரீதான். அதனால நாளைக்கே அடுத்த பதிவு!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:39 AM

    So, your age is 51. Hai, old man Am I correct?

    பதிலளிநீக்கு
  4. So, your age is 51. Hai, old man Am I correct?//

    நீங்க பயங்கரமான புத்திசாலிங்க!

    அதுசரி. இதுக்கு எதுக்கு அநாமதேயமா வறீங்க?

    பதிலளிநீக்கு