நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் தியதிகள் அறிவிக்கப்பட்டு இரு வாரங்கள் ஆகியும் எந்த அரசியல் கட்சியாலும் தங்களுடைய முழு வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிட முடியவில்லை.
எந்த கட்சியாலும் - தேசிய அளவிலும் சரி மாநிலங்கள் அளவிலும் சரி - தனித்து முடிவெடுக்க முடியாத சூழல் நிலுவுவதே இதற்கு முக்கிய காரணம்..
தேசிய கட்சிகளுள் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் இன்று பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் தயவை நாடி நிற்க வேண்டுய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவும் இதே நிலையில்தான்.
கூட்டணி அரசியல்.
கூட்டணி யுக்தி முதன் முதலாக 1977ல் அதாவது இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை 2 (Emergency) முடிவுக்கு வந்தவுடன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்குடன் எதிர்க்கடசிகள் ஜனதா கட்சியை தோற்றுவித்து மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து தோன்றியது எனலாம். ஆனால் உட்கட்சி பூசலால் துவக்க முதலே அதாவது பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதிலிருந்து ஏற்பட்ட குழப்பம் இரண்டே ஆண்டுகளில் சரண்சிங் அவர்களின் கைங்கரியத்தால் கவிழ்ந்தது.
அதன்பிறகு 1991ல் நரசிம்மராவ் தலைமையில் அமைக்கப்பட்ட சிறுபான்மை காங்கிரஸ் கூட்டணி அரசு 1998ல் பிஜேபி தலைமையில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் அல்லாத அரசுகள் மட்டுமே தொடர்ந்து ஐந்தாண்டு காலம் ஆட்சி அமைக்க முடிந்தன.
கடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தாலும் அது பல மாநில கட்சிகளின் தயவால் மட்டுமே சாத்தியமானது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 145 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த லல்லுவிலிருந்து (24 இடங்கள்), கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஷிபு சோரன் (5 இடங்கள்) வரை அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டியிருந்த பரிதாப சூழலில் இருந்ததை மறக்கமுடியாது, போறாததற்கு குறை சொல்லியே அரசியல் நடத்தும் இடது சாரி கட்சிகள் வேறு. நம்முடைய திமுக,பாமக கட்சிகள் குறிப்பாக ஐயாவின் புதல்வர் பிரதமருக்கு அவ்வப்போது கொடுத்து வந்த குடைச்சலை மறக்க முடியுமா?
ஐந்தாண்டு காலம் இவர்களை கட்டி மேய்த்ததே காங்கிரசுக்கு கிடைத்த குறிப்பாக சொந்த கட்சியிலும் செல்வாக்கில்லாத பிரதமருக்கு பெரிய வெற்றி என்றால் மிகையாகாது. ஆனால் இப்போது அதே காங்கிரஸ் பீஹாரிலும் உ.பியிலும் ஜார்கண்ட்டிலும் படும் அவமானத்தைப் பார்த்தால் இனியும் இந்த கேடுகெட்ட கூட்டணி முறைக்கு காங்கிரஸ் இறங்கி வர வேண்டுமா என்றே கேட்க தோன்றுகிறது.
தமிழகத்துக்கு வருவோம்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியிலும் சிக்கல்கள். கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த இடது சாரிகள் மற்றும் மதிமுக இப்போது எதிர் அணியில். பாமக எங்கு சேர்ந்தால் வெற்றி என்பதைக் கணிக்க முடியாமல் திண்டாடுகிறது. சில மாதங்கள் முன்புவரை தனித்தே நிற்பேன் என மார்தட்டி வந்த கேப்டனுக்கு திடீர் என ஒரு தடுமாற்றம். விடுதலை சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து வெளியேற்ற கலைஞர் தயாராயில்லை. இதில் காங்கிரசுக்கு வருத்தம். காங்கிரசுக்கு கேப்டன் வேண்டும் ஆனால் ஐயா வேண்டாம். அம்மாவுக்கு ஐயா வேண்டும். ஆனால் அவராக அழைக்க மாட்டார். கலைஞருக்கு கேப்டனும் வேண்டும், ஐயாவும் வேண்டும். ஆனால் பகிரங்கமாக அழைப்பு விடுக்க மாட்டார்.
இப்படி ஈகோவில் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.
இதற்கு என்னதான் முடிவு? எப்போதுதான் இவர்கள் முடிவுக்கு வருவார்கள்?
சரி. இவர்கள் எத்தகைய முடிவுக்கு வரவேண்டும்?
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எதிர்வரும் தேர்தலை கணிப்பது மிகவும் கடினம். கடந்த தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 இடங்கள் மற்றும் புதுவையிலுள்ள ஒரு இடம் ஆக 40 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அது மேடத்திற்கு எதிராக ஏற்பட்ட அலைதான் முக்கிய காரணம். ஆனால் இந்த தேர்தலில் அப்படியேதும் அலையடிப்பதாக தெரியவில்லை.
கலைஞரின் ஆட்சியில் ஏற்பட்ட சில தவறுகளாலும் அவருடைய குடும்ப அரசியல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெறுப்பாலும் அவருடைய கட்சியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் தொகுதி பங்கீட்டிலும் வேட்பாளரை தெரிவு செய்வதிலுமே தெளிவு இல்லாத சூழலில் போட்டியிடும் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவது என்பது நடவாத விஷயம். மேலும் கேப்டனும் தனித்து நின்று பாமகவும் மேடத்துடன் இணைந்துவிட்டால் திமுக கூட்டணிக்கு 50 விழுக்காடு இடங்களில் வெற்றிகிடைத்தாலே அதிகபட்சம்தான்.
ஆகவே கலைஞர் சுயகவுரவத்தை விட்டுவிட்டு கேப்டனுக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டணிக்கு அழைக்க வேண்டும். இரண்டாவது, காங்கிரசுடன் சுமுகமான முறையில் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் மதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு அளித்த எட்டு தொகுதிகளையும் கேப்டனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். பாமக அவர்களாக வந்தால் தயங்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் வராத பட்சத்தில் திமுகவும் காங்கிரசும் அவர்களுடைய தொகுதிகளை சமமாக பகிர்ந்துக்கொள்ளலாம்.
கேப்டனும் தன்னால் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு திமுகவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நோக்கம் அடுத்த சட்டமன்ற தேர்தல்தான் என்றால் வெற்றிவாய்ப்புள்ள திமுக கூட்டணியில் இப்போது இணைவதில் தவறில்லை. இல்லையெனில் வாக்குகளை பிரித்து 'அம்மா'வை வெற்றிபெற செய்துவிட்ட பழிக்கு அவர் ஆளாக வேண்டிவரும். 'அம்மா' இம்முறை வெற்றிபெற்றுவிட்டால் கேப்டன் அடுத்த சட்டமன்ற தேர்தலை மறந்துவிடவேண்டியதுதான்.
**********
பரவால்லையே!
பதிலளிநீக்குகேபர டான்செருக்கும்,கதை வி(சன)கர்த்தவுக்கும்,தொப்புலீல் பம்பரம் விட்டவருக்கும் யோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டீர்கள்
வாங்க ட்டிபியன்!!
பதிலளிநீக்குகதை வசனகர்த்தா, பம்பரம் விட்டவர் யார்னு தெரியுது. அது யாரு கேபர டான்சர்?