மேற்கூறிய தலைப்பில் என்வழி எழுதிய பதிவுக்கு ஒரு வங்கி அதிகாரி என்ற முறையில் சில உண்மைகளை எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.
இன்றைய சூழலில் நாட்டிலுள்ள பல வங்கிகளும், அவை அரசு வங்கிகளாயினும், தனியார் வங்கிகளாயினும் சரி, வீட்டுக்கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என்பது உண்மைதான்.
அதற்கு பல காரணங்கள் உள்ளன.
அமெரிக்காவில் லீமென் ப்ரதர்ஸ் மற்றும் பல பெரிய சர்வதேச வங்கிகள், நிதிநிறுவனங்கள் ஆகியவற்றின் சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவையும் பாதித்துள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை.
இது நாட்டிலுள்ள அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதை
நாம் கண்கூடாக காண்கிறோம். அதில் கட்டுமானத் துறையும் ஒன்று. இன்று நாட்டில் மிகப்பெரிய அளவில் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களும் நிதிபற்றாக்குறை காரணமாக முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக வீடு கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடந்த இரு வருடங்களில் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் துவங்கிய பெரும்பாலான கட்டுமானப்பணிகள் பலவும் நிறைவுபெறாமல் நின்று போயுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மெட்ரோ நகரங்கள் எனப்படும் மும்பை, கொல்கொத்தா, தில்லி, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களிலும் இதே அவல நிலைதான். இத்தகைய கட்டுமானப்பணிகளில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களைக் காட்டிலும் பலமடங்கு தொகையை முடக்கிவிட்டு திணறிக்கொண்டிருக்கின்றன வங்கிகள். இவற்றில் முடக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான கடன் தொகை வாராக் கடனாகிவிடக் கூடிய சூழல் இப்போது. வருகின்ற 31.3.09க்குள் இக்கடன்களை சீர்திருத்தி அமைக்க முடியாத சூழல் ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட வங்கிகள் பலவற்றின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் பரிதாபமாக இருக்கும்!
கடந்த இரு ஆண்டுகளாகவே தொழில்துறை எதிர்பார்த்த அளவு செயல்படாததால் அவற்றிற்கு கடன் வழங்குவதில் தயக்கம் காட்டி வந்த வங்கிகள் தங்களிடமிருந்த உபரி தொகையில் பெரும் விகிதத்தை வீட்டு கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருந்தது. ஆனால் இப்போது அந்தத் துறையும் முடங்கிப் போய் தாங்கள் இதுவரை வழங்கியுள்ள கடனையே வசூலிக்க முடியாத சூழலில் மேலும் புதிய கடன்களை வழங்குவதில் தயக்கம் காட்டுவது இயற்கைதானே.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தங்களுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நிதியமைச்சர் அரசு வங்கிகளை நிர்பந்தித்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வைத்தாலும் வங்கி அதிகாரிகள் புதிய கடன் வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கும் காரணம் உண்டு. இப்போது குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தை தொடர்ந்து அதே நிலையில் கடைபிடிப்பது என்பது சாத்தியமல்ல. பொதுத்தேர்தல் நடந்து முடியும் வரை வேண்டுமானால் அரசு வங்கிகள் இதை தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் அதன் பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வட்டி விகிதம் நிச்சயம் உயரும்.
கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மட்டுமே காரணமில்லை என்பதும் உண்மை. இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணம். இப்போதெல்லாம் பல நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமைக்கு ஏற்றாற்போல் ஓரிரு Projectஉகளுடன் திருப்தியடைவதில்லை. வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறதே என்ற நினைப்பில் ஒரே நேரத்தில் ஐந்தாறு இடங்களில் கட்டுமான வேலைகளை துவங்கிவிட்டு, பிறகு கடனும் கிடைக்காமல் குடியிருப்புகளை விற்கவும் முடியாமல் திட்டங்களை கைவிடுவது அல்லது காலந்தாழ்த்துவது. இதுதான் இன்றைய தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.
I.T. துறை கொடிகட்டிப் பறந்த காலத்தில் எத்தனை குடியிருப்புகளைக் கொண்ட திட்டமானாலும் அனைத்து குடியிருப்புகளையும் விற்று நுகர்வோருடைய முன்தொகயில் திட்டங்களை நிறைவுசெய்து வந்த பல நிறுவனங்கள் இப்போது மொத்த குடியிருப்புகளில் பத்து விழுக்காடு குடியிருப்புகளையும் விற்க முடியாமல் திண்டாடுகின்றன. ஒன்று அல்லது இரண்டும் திட்டங்கள் போதும் என்ற முடிவுடன் இயங்கும் நிறுவனங்களால் மட்டுமே இன்றைய சூழலில் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் எந்த சூழலிலும் கணிசமான தொகையை கையிருப்பாக வைத்திருக்கும் நிறுவனங்களால் மட்டுமே வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்காத சூழலிலும் தொடர்ந்து இயங்கி வர முடிகிறது.
ஆகவே சொந்த வீடு ஒன்றை வாங்குவதே தங்களுடைய நெடுநாள் கனவு என கருதுபவர்களுக்கு நான் கூற விழைவது.
1. வங்கிக் கடன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய சேமிப்பிலிருந்தோ அல்லது நகைகளை அடகு வைத்தோ அல்லது குறுகிய கால கடன்களை வங்கிகளல்லாத நிதிநிறுவங்களிலிருந்து பெற்றோ வீட்டு மனைகளை வாங்க முயலாதீர்கள். அடுத்த ஆறு மாத காலத்தில் வங்கிகள் கடன் வழங்கும் சூழலில் பெரிதாக மாற்றம் ஏதும் வரப்போவதில்லை.
2. புதிதாக துவக்கப்பட்டும் கட்டுமான திட்டங்களில் குடியிருப்புகளை முன்தொகை கொடுத்து (அது எத்தனை சிறிய தொகையாயிருந்தாலும்) முன்பதிவு செய்யாதீர்கள். அடுத்த ஓராண்டு காலத்திற்கு அந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற வாய்ப்பில்லை.
3. கடந்த ஆறு மாதகாலத்தில் துவக்கப்பட்ட கட்டுமான திட்டங்களில் முன்பதிவு செய்திருந்தால் அதில் மேலும் தொகையை முடக்காதீர்கள்.
4. வங்கிக்கடன் எளிதில் கிடைத்தாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு வீட்டுக் கடன் பெறுவது புத்திசாலித்தனமல்ல! அதுவும் Floating Rate கடன்களை கண்டிப்பாக வாங்கலாகாது!
'சந்தோஷமாக கடன் வாங்குங்க' என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய நானே இதை சொல்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.
ஆனால் இதுதான் இன்றைய நிலை.
வீடுகட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய வருமானத்தில் ஒரு பெரும் விழுக்காட்டை முடக்கிவிட்டு திகைக்கும் நண்பர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் இந்த எச்சரிக்கை!
***********
4. வங்கிக்கடன் எளிதில் கிடைத்தாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு வீட்டுக் கடன் பெறுவது புத்திசாலித்தனமல்ல! அதுவும் Floating Rate கடன்களை கண்டிப்பாக வாங்கலாகாது!
பதிலளிநீக்குநான் இப்போது அப்படி ஒரு முயற்சியில் இருப்பதால்... இது ஏன் என்று தயவுசெய்து விளக்கவும்! நன்றி
வாங்க அன்பு,
பதிலளிநீக்குநான் இப்போது அப்படி ஒரு முயற்சியில் இருப்பதால்... இது ஏன் என்று தயவுசெய்து விளக்கவும்! நன்றி//
Floating Rate of Interest என்பது வங்கி வட்டி விகிதம் மாறும்போதெல்லாம் உங்களுடைய கடனுக்குண்டான வட்டி விகிதமும் மாறிக்கொண்டேயிருக்கும். இப்போதுள்ள வட்டி விகிதம் வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் உயரும். அடுத்த ஓராண்டிற்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. அதன் பிறகும் நாட்டின் பொருளாதார மந்த நிலை நீடிக்குமானால் என்ன நடக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.
வட்டி உயர்த்தப்படும்போதெல்லாம் நீங்கள் செலுத்த வேண்டிய மாதத்தவணையும் உயரும். அத்தகையை சூழலை சந்திக்க உங்களுடைய மாத வருமானம் இடம் அளிக்குமானால் நீங்கள் கடன் வாங்குவதில் தடையில்லை.
அதன் பிறகும் நாட்டின் பொருளாதார மந்த நிலை நீடிக்குமானால்
பதிலளிநீக்குநன்றி.... இப்போது 9% என்ற நிலையில் இருப்பதால், இந்த நிலை நீடித்தால் வட்டி தொடர்ந்ந்து குறையும் என நினைத்தேன்! உடனடி விளக்கத்துக்கு மீண்டும் நன்றி.