05 டிசம்பர் 2019

மனம் ஒரு குதிரை

மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு 
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் 
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும் 
அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு"

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

இதே பெயரில் வந்த பழைய தமிழ்படத்தில் வந்த பாடல் வரிகள்.

ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் மனம் ஒரு குரங்கு என்பதை விட ’ஒரு குதிரை’ என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனதை  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவில்லை யென்றால் நம்மை பாதாளத்திலும் தள்ளிவிடும்!

இந்த வரிகள் நிச்சயம் குரங்குக்கு பொருந்தாது. 

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது.

எந்த குரங்க போயி அடிக்கப் போறோம், இல்ல அணைக்கப் போறோம்? அடிச்சாலும் கடிக்கும், அணைத்தாலும் பிராண்டும். 

குதிரைதான் கட்டுப்பாட்டில் வைத்திராவிட்டால் பாதாளத்தில் அதாவது பள்ளத்தில் தள்ளிவிடும்.

ஆகவே மனம் ஒரு குதிரை என்பதுதான் சரியாக இருக்கும்.

மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதில் பலனில்லை. அதை கட்டவிழ்த்து பறக்க விட வேண்டும். அப்படி பறக்கவிட்டால் அது நம்மை பாவத்திலோ அல்லது பள்ளத்திலோ  தள்ளிவிடும் என்பதில் அர்த்தமில்லை.

பள்ளத்தில் விழுந்துவிடுவோம் என்று நினைத்தால் குதிரை சவாரி செய்வதில் கிடைக்கும் இன்பம் கிடைக்காமலே போய்விடுமே. அந்த இன்பம் அதில் சவாரி செய்தவர்களுக்குத்தான் தெரியும். அது ஒரு அலாதியான இன்பம். 

முதல் முதலாக இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணிக்கும்போது அனுபவித்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது என்றால் மிகையல்ல.

சைக்கிள் ஓட்டி பழகும்போது நாலு தடவ கீழ விழுந்து எழுந்து படிச்சாத்தாண்டா அதுல ஒரு த்ரில்லே இருக்கும் என்றான் எனக்கு பயிற்றுவித்த நண்பன். 

இது குதிரை சவாரிக்கும் பொருந்தும். 

ஒரு குதிரையை கட்டுக்குள் கொண்டுவருவது எத்தனை கடினமோ அதை விட கடினம் மனதை கட்டுக்குள் கொண்டு வருவது.

அதே சமயம் அதை கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. 

அது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

நம் மனதில் உள்ளவற்றை அசைபோட்டு பார்ப்பதே ஒரு அலாதியான இன்பம்தான். 

இன்றைய தினம் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை சார்ந்தே பல கடந்த கால நினைவுகள் வந்து போவதை நான் உணர்ந்திருக்கிறேன்...

நான் குடியிருக்கும் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு ஏழு வயது சிறுவன் முதல் முறையாக தன் தந்தையின் உதவியுடன் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை கண்டபோது நான் இளம் வயதில் அதை பழகியதும் நினைவுக்கு வந்தது அதை என் இரு மகள்களுக்கும் பயிற்றுவித்ததும் நினைவுக்கு வந்தது.

மூச்சு வாங்க என் சைக்கிள் பின்னால் ஓடி வந்த என் நண்பனின் நினைவும் வந்தது... நான் அதே போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க என் மகளின் ஸ்கூட்டர் பின்னால் ஓடிய நினைவும் வந்தது...

இன்றைக்கு இணையதளத்தில் ‘தேடல்’ மென்பொருள்கள் பலவும் இந்த அடிப்படையில்தான் செயல்படுகின்றன போலும். ஒரு விஷயத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அது சார்ந்த பல விஷயங்களை பின்னோக்கி சென்று தேடுவதை பார்த்தால் நம் மனதும் இதைப் போன்றுதானே செயல்படுகிறது என்று எண்ண தோன்றும்.

யோகாசனம் பயிலும் போதும் தியானத்தில் ஈடுபடும்போதும் மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைந்துக் கொண்டிருந்தால் அதை கட்டுப்படுத்தாதீர்கள் அதை அதன் வழியிலேயே அலையவிட்டு ஒருநிலைப் படுத்த முயலுங்கள் என்று பயிற்றுவிப்பார்கள். 

இந்த யுக்தியை நானும் பல சமயங்களில் கையாண்டிருக்கிறேன்.

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பதினைந்து நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்வதுண்டு. ஆனால் அந்த பதினைந்து நிமிடமும் மனம் ஒரு நிலையில் நிற்காது அலைந்துக்கொண்டே இருக்கும். உதடுகள் பிரார்த்திக்கொண்டு இருந்தாலும் மனம் ஒரு தறிகெட்ட குதிரையைப் போல அலைந்துக்கொண்டிருக்கும். அதை நம் வயப்படுத்த முயன்றால் பிரார்த்தனை தடைப்பட்டு போகும்......

இதற்கு சாத்தான் காரணம் என்பார்கள் நம் முன்னோர்கள். நீ கடவுளை நினைச்சி பிரார்த்தனை செய்வது சாத்தானுக்கு பிடிக்காதாம். அதனாலதான் அது தன் சீடர்களை அனுப்பி உன் மனதை அலையவிடுகிறது என்பார் என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்). எனக்கும் அது பல சமயங்களில் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுவதுண்டு. 

மனம் அப்படிப்பட்டதுதான். சமயத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். 

திருடுவது, கையூட்டு பெறுவது, கற்பழிப்பது எல்லாமே தவறு என்று நம்மில் பலருக்கு தெரிகிறது. ஆனால் அதில் தினம் தினம் ஈடுபடுபவர்களுக்கு அது தெரிவதில்லையே ஏன்? 

அதற்கு அவர்களுடைய கெட்டுப் போன மனதுதான் காரணம். மனம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் அதை நாம் எவ்வாறு பழக்கிவிடுகிறோமோ அதைத்தான் அது மீண்டும் மீண்டும் செய்யும்.  

அதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் போலும். 

************




8 கருத்துகள்:

  1. மனம் ஒரு குரங்கு என்பதை விட குதிரை என்பதே சரியானது என்ற தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். ஆனால் மனதை குரங்கு என்று சொன்னதற்கு காரணம் உண்டு. குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதுபோல் மனமும் ஒரு இடத்தில் நில்லாமல் தாவிக் கொண்டிருப்பதால் அப்படி சொல்லியிருகிறார்கள் என எண்ணுகிறேன்.

    எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்று சொல்வதுண்டு, நகரத்தார் பகுதிகளில் ‘எண்ணம்போல் வாழ்’ என்ற சொலவடையும் உண்டு.

    எனவே மனதை எவ்வாறு பழக்குகிறோமோ அதுவே பின்னர் வழக்கமாகிவிடுகிறது. எனவே ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்; என்ற பழமொழி சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சார்,

      நீங்கள் கூறுவது மிகவும் சரி. எதுவாக நினைகுகிறோமோ அதுவாகத் தான் ஆகிவிடுகிறோம்.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  2. குதிரையோ,குரங்கோ, மனதை அலையவிடாமல் நிறுத்துவது கடினம் என்பது மட்டும் உண்மை!   அதற்கு ரொம்பப் பயிற்சி வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஸ்ரீராம்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நான் நினைத்ததை VNS ஐயா சொல்லி விட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர் சொல்வது முற்றிலும் சரியே.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

      நீக்கு
  4. மனம் இதை இறைவன் நமக்கு கொடுப்பதும் தனிப்பேறு.

    எல்லோருக்கும் நல்ல மனது இருப்பதில்லையே... இப்படி இருந்து விட்டால் உலகில் பிரச்சனையே இல்லை.

    காவல் நிலையம், நீதி மன்றம் இவைகள் எல்லாம் எதற்கு ? காரணின்றி காரியமில்லை என்பர். இது நிதர்சனமான உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறுவதும் சரிதான். சிலர் மனதில் இறைவனும் சிலர் மனதில் சாத்தானும் இருப்பது எதனால்? அதுதான் இறைவனின் திருவிளையாடலோ?

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி !

      நீக்கு