02 செப்டம்பர் 2019

சுருங்கி வரும் பதிவர் வட்டம்

சுமார் பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சு வந்த தமிழ் வலைப்பூக்களின் (Blogs) திரட்டியான ‘தமிழ்மணம்’ செயலிழந்து போனதை அடுத்து தமிழ் பதிவர் வட்டம் வெகுவாக சுருங்கி போய்விட்டது என்றால் மிகையாகாது.

தமிழ் பதிவுகளை அவை எழுதப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே திரட்டி அவற்றை அழகாக வரிசைப் படுத்தி வெளியிட்டு வந்த ‘தமிழ்மணம்’ நிதிபற்றாக் குறை காரணமாக (அப்படித்தான் தோன்றுகிறது) சடுதியாக செயலிழந்துபோனது நம் தமிழ் பதிவர் வட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது.

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பலவும் இன்று செயலிழந்து போனதும் உண்மை. அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த இண்டிப்ளாகும் (Indieblog) கூட இப்போது புதிய அங்கத்தினர்களை ஏற்பதில்லை. கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட பதிவர்களின் பதிவுகளை மட்டும் இப்போதும் திரட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் அது ஆங்கில வலைப்பூக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் திரட்டி என்பதால் அதில் இடம் பெறும் தமிழ் பதிவுகள் வெகு வெகு சொற்பம்தான். அவர்களிலும் பலர் அவ்வப்போதுதான் எழுதுகிறார்கள்.

திரட்டிகள் செயலிழந்து நிற்கும் இத்தகைய சூழலில் பதிவுர்கள் எழுதும் பதிவுகளை மற்ற சக பதிவர்களுக்கோ அல்லது பொது வாசகர்களுக்கோ எடுத்துச் செல்வது அத்தனை எளிதல்ல என்பதை இப்போதும் தொடர்ந்து எழுதி வரும் பதிவர்கள் அறிவார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய சக பதிவாள நண்பர்கள் நட்பு அடிப்படையிலேயே கூகுள் தேடுதலை பயன்படுத்தி தேடிப் பிடித்து வாசித்து வருகிறார்கள் என்பதை ப்ளாகர் வெளியிடும் தகவல்களில் (Statistics) இருந்து அறிந்துக்கொள்ள முடிகிறது.

என்னுடைய பதிவுகளை வாசிக்கும் மொத்த வாசகர்களில் சுமார் 95 விழுக்காடு வாசகர்கள் கூகுள் தேடல் வழியாகத்தான் தளத்திற்கு வருகிறார்கள் என்பது கீழ்காணும் திரையை பார்த்தாலே தெரியும்


இந்த படத்தில் மேல் பகுதியில் கூகுள் தேடலுக்கு கீழே ஃபீட்லி (feedly) என்ற தேடல் இருப்பதை காணலாம்.

அது உண்மையில் ‘தேடல்’ அல்ல ‘திரட்டி’. திரட்டி என்பதை விட ’வாசிப்பான்’(reader) என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாசிப்பானின் பெயரை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாகத்தான் என்னுடைய ப்ளாகர் ’Stat' பகுதியில் பார்த்தேன். உடனே இது என்னவாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கூகுள் தேடலில் ‘feedly' என்று தேடிப்பார்த்தபோது கிடைத்ததுதான் இந்த அற்புத கையடக்க 'app.'

இதை உடனே என்னுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து அதில் கூறியுள்ளபடி செய்து எனக்கு தெரிந்த சில பதிவர்களின் பதிவு விலாசங்களை சேர்த்தேன். அவற்றில் சமீபத்தில் எழுதப்பட்ட பதிவுகளின் விவரங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே கிடைத்தன.



ஸ்மார்ட் செல்பேசி (ஆண்டிராய்ட் அல்லது ஆப்பிள் iOS) வைத்திருப்பவர்கள் இந்த செயலியை (app) கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

ஸ்மார்ட் செல்பேசி இல்லாதவர்கள் கனிணியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் விலாசம்: www.feedly.com

இதில் நுழைந்தவுடன் நாம் காணும் login திரை இது::



இந்த தளத்திற்குள் நுழைய (login) தனியாக கணக்கு எதுவும் தேவையில்லை . நம்முடைய கூகுள் அல்லது முகநூல் கணக்கையே பயன்படுத்தலாம்.


இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும் நாம் காணும் திரை:



இதில் ’தேடல்’ பெட்டியில் நீங்கள் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்த உடனே அதனுடைய பெயர் பெட்டியின் கீழே காண்பிக்கப்படும். அதையும் க்ளிக் செய்யுங்கள்.


உடனே அந்த தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை காட்டும்.



இந்த திரையில் ‘follow' பட்டனை க்ளிக் பண்ணிட்டு அதுக்குக் கீழே ‘new feed' ஐயும் க்ளிக் செய்யுங்கள்.


இந்த திரையில் உங்களுடைய ‘new feed' பெயரை ‘தமிழ்’ என்றே தெரிவு செய்யுங்கள். ஏனெனில் இந்த தளத்தில் உலகெங்கும் உள்ள பல ஆங்கில பதிவுகளும் படிக்க கிடைக்கின்றன. 

நாம் தெரிவு செய்யும் பதிவுகள் பெரும்பாலும் தமிழில் இருக்கும் என்பதால் அந்த தொகுப்பின் பெயர் தமிழ் என்று இருந்தால் அவை அனைத்தையும் இந்த தொகுப்பிலேயே சேமித்து வைத்தால் பிறகு படிப்பதற்கு எளிதாக இருக்கும். 

இவ்வாறு நீங்கள் படிக்க விரும்பும் அனைத்தும் தளங்களையும் அதாவது RSS FEED உள்ள் சுமார் 100 தளங்களை இந்த இலவச மென்பொருளில் (free version) சேமித்துக்கொள்ளலாம். நாம் சேமித்த தளங்களின் பட்டியல் திரையின் இடது பகுதியில் காண்பிக்கப்படும்.

இதில் சேமிக்கப்பட்டுள்ள தளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் அவை பதியப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இந்த செயலியில் தரவிறக்கம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். 

செல்பேசியில் என்றால் உடனே அழைப்பான் (notification) வரும். கனிணி என்றால் நாம் இந்த feedly.com தளத்தில் நுழைந்தவுடனேயே புதிதாக வந்துள்ள பதிவுகளின் பட்டியல் காட்டப்படும்.

நான் என்னுடைய செல்பேசியில் சேமித்து வைத்துள்ள பட்டியலிலுள்ள அனைத்து தளங்களின் நகல்களையும் என்னுடைய கனிணியிலும் காண முடிகிறது. இதற்கென்று மீண்டும் உள்நுழைய (login) தேவையில்லை. 

என்னுடைய செல்பேசியில் நான் சேமித்து வைத்துள்ள சுமார் பதினைந்து பதிவர்களின் தளங்களின் பட்டியலை மேலே வெளியிட்டுள்ளேன். இதில் இடம் பெறாத பதிவர்கள் தங்களுடைய தளத்தின் விலாசத்தையும் தாங்கள் பருந்துரைக்கும் பதிவர்களின் தளங்களுடைய விலாசங்களையும் இந்த பதிவின் கருத்துரையில் (comments) நானும் அவற்றை சேமித்துக்கொண்டு இனி வரும் காலங்களில் படிக்க உதவியாக இருக்கும். நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.

**********



23 கருத்துகள்:

  1. என்னுடைய தளத்தின் கனிணி வடிவில் ஒவ்வொரு கருத்துரைக்கும் தனித்தனியாக பதிலளிக்கும் ‘Reply' பொத்தான் தெரிவதில்லை. நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். இதுவரை பலனளிக்கவில்லை. ஆனால் என்னுடைய செல்பேசியில் இது தெரிகிறது. நான் பெரும்பாலும் கருத்துரைகளுக்கு பதிலளிக்க என்னுடைய செல்பேசியையே பயன்படுத்துகிறேன். என்னுடைய கனிணி என்னுடைய வீட்டின் மேல்மாடியில் படுக்கையறையில் இருப்பதால் அடிக்கடி மேலே சென்று கனிணியை உயிரூட்டி பதிலளிக்க முடிவதில்லை. ஆகவே தரைதளத்தில் வரவேற்பறையில் அமர்ந்தவாறே செல்பேசியிலேயே பதிலளித்துவிடுவேன். ஆகவே ஒவ்வொருவருடைய கருத்துரைக்கும் ஏற்றவாறு அவரவர்களுக்கு பதிலளிக்க முடிகிறது. ஆனால் கனிணி வடிவில் அதை காணுபோது என்னுடைய பதிலுரை எந்த கருத்துக்கு என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை என்று நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர். ஆகவே இதை எப்படி விரைவில் சரி செய்துவிட எண்ணுகிறேன். நண்பர்களுக்கு இந்த வித்தை தெரிந்தால் தயவுசெய்து எனக்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா
    முன்பு போல் பதிவர்கள் எழுதுவதும் இல்லை நாம்தான் எழுதுவதில்ஸையே பிறகு ஏன் மற்றவர்கள் பதிவுக்கு சென்று கருத்து எழுதவேண்டும் வீணாக மின்சார செலவுதானே... என்ற உயர்ந்த சிந்தனையில் பலரும் வருவதில்லை.

    புதிய பதிவர்களை ஊக்குவிப்போம் என்ற சிந்தனை யாருக்கும் வருவதில்லை.

    ஒரு குறிப்பிட்ட பதிவர்களுக்குள் குழுமியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

    நான் இன்றைய நிலையில் தமிழ்மணத்தில் 800 வது இடத்தில் இருக்கும் பதிவுக்குகூட கருத்துரை எழுதுகிறேன்.

    அதேநேரம் அவர்கள் என் பதிவுக்கு வருவதில்லை என்பது வேறு விடயம் காரணம் அவர்களுக்கு விபரம் தெரியவில்லை "முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்" என்ற பழமொழியின் ஆழம் புரிவதில்லை (ஒரு காலத்தில் நானும்தான்) திரட்டிகளை நம்பி பயனில்லை.

    புதிய பதிவர்களை ஊக்கு விப்போம் வலையுலகை வாழ வைப்போம்.

    எனது தளம் முகநூல் வழியாகத்தான் வருகிறீர்களோ... நன்றி ஐயா.

    நண்பர் திண்டுக்கல் ஜி அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் கணினி பிரச்சனையை தீர்க்கும் வைத்தியர் அவரே.

    பதிலளிநீக்கு
  3. நான் கடந்த சில வாரங்களாக feedly app வழியாகத்தான் பலருடைய பதிவுகளை வாசிக்கிறேன். நீங்கள் பதிவிட்ட ஒரு தில நிமிடங்களில் எனக்கு அழைப்பான் வந்து விடுகிறது.

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. நானும் அதிகம் பதிவுகளை படிப்பதில்லை. தமிழ்மணம் செயலிழந்த பிறகு பதிவர்களின் தளமுகவரி தெரியாததால் கூகுள் வழி தேடி பிடிக்கவும் முடிவதில்லை. உங்களுக்கு தெரிந்த பதிவர்களின் தளமுகவரிகளை முடிந்தால் தாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ஐயா இருப்பினும் தற்போது நிறைய பதிவர்கள் எழுதுவதில்லை.

       https://engalblog.blogspot.com

       http://thanjavur14.blogspot.com

       http://venkatnagaraj.blogspot.com

       https://naachiyaar.blogspot.com

       http://deviyar-illam.blogspot.com

      நீக்கு
    2. மேலும்...
      http://drbjambulingam.blogspot.com

       http://sivamgss.blogspot.com

       http://gokisha.blogspot.com

       http://mathysblog.blogspot.com

       https://kamalathuvam.blogspot.com

       http://karanthaijayakumar.blogspot.com

       https://vayalaan.blogspot.com

      நீக்கு
    3. மேலும்...
      https://pasiparamasivam.blogspot.com

       http://www.ypvnpubs.com

       http://unmaiyanavan.blogspot.com

       http://valipokken.blogspot.com

      நீக்கு
  4. மிக்க நன்றி ஜி !

    பதிலளிநீக்கு
  5. இவ்வளவு வருடம் கழித்து...

    ஹா... ஹா...
    ஹா... ஹா...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் டிடி

      தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதை விட தாமதமாக தெரிந்துகொள்வதில் தவறில்லையே! மேலும் என்னுடைய தளத்திற்கு வருபவர்களில் பலர் இன்னும் கூகுள் தேடுதல் வழியாகத்தான் வருகிறார்கள் என்பதைக் காணும் போது நீங்கள் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு இன்னும் பலரையும் சென்று அடையவில்லை என்று தோன்றுகிறது.

      என்னுடைய கருத்துரை பெட்டியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை உங்களுடைய மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கிறேன். முடிந்தால் உதவுங்கள். நன்றி.

      நீக்கு
  6. நானும் சில வருடங்களாக ஃபீட்லி பயன்படுத்தி வருகிறேன்.

    என் தள முகவரியை இங்கே தந்தமைக்கு நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நாகராஜ்

      நான் சில வருடங்களாக பதிவுலகில் இருந்து விலகி இருந்ததால் இந்த நவீன வசதிகள் எனக்கு தெரியவில்லை.உங்களுடைய தளத்தில் நீங்கள் எழுதவிருக்கும் பதிவுகளை உடனுக்குடன் படிக்க முடியும். நன்றி.

      நீக்கு
  7. நான் தொடர விரும்பும் பதிவர்களின் வலைப்பக்கம் என் டேஷ் போர்டில் வரும் மற்றவர் பதிவுகளுக்கு அவப்போது போவேன்

    பதிலளிநீக்கு
  8. வாருங்கள் GMB சார்

    நானும் சில மாதங்கள் வரை அப்படி தான் செய்துகொண்டிருந்தேன் . ஆனால் feedlyவழியாக மிக எளிதாக பதிவுகளை பெறமுடிகிறது. ஒரேயொரு முறை சற்று மெனக்கெட்டு நாம் படிக்க விரும்பும் பதிவுகளின் முகவரியை இந்த தளத்தில் பதிந்து விட்டால் போதும்.

    பதிலளிநீக்கு
  9. பழைய நண்பர் வலைப்பதிவர் பலர் முகநூலில் எழுதுவதை பார்க்கிறேன்.சல சல என ஓடும் சிற்றாறு முகநூல்.
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  10. வாருங்கள் சுப்பு சார்

    முகநூலில் சுருக்கமாகச் சொல்லவேண்டும். பதில்களில் மனதில் உள்ளதை முழுமையாக கொட்டிவிடலாம். இரண்டுமே தேவைதான். முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. திரட்டி மட்டுமல்ல கூகுல் ப்ள்ஸும் தன் சேவையை நிறுத்தி கொண்டதால் வலைத்தளத்திற்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது... இப்போது கூகுல் சர் ச்சிலும் தேடடிபட்டிப்பவர்களும் குறைவு..... தமிழ்மணம் சீக்கிரம் சரியாகும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. பல நல்ல பதிவுகள் சீந்துவாரின்றி பல வலைப்பூக்களில் யாராவது படிப்பாங்களான்னு காத்து கெடக்கு. தமிழ்மணம் சீரானால் நல்லாதான் இருக்கும். முகநூல் மோகம் வலைப்பூவின் தொய்வுக்கு காரணம்ன்னு நான் நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ராஜி

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. மேலும் பதிவுகளை எழுத யாருக்கும் நேரம் இல்லை போலிருக்கிறது. என்ன செய்வது? அவசர உலகத்தில் முகநூலில் எழுதுவது தான் fashion ஆகிவிட்டது. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சில பல வியாதிகள் நம்மிடையே. திரட்டி இல்லாமல் போனது நம்முள் இருந்த தொடர்புகளையும் இல்லாமல் ஆக்கி விட்டது. திரட்டியை மறுபடி உயிரூட்ட முடியுமா? ஐயா காசி... நீங்கள் ஆரம்பித்தது இப்படி முடிந்திருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா? (யாராவது காசியிடம் இதை முடிந்தால் தெரிவிக்கவும்.)
    இரண்டாவதாக எழுதும் பழக்கம் குறைந்ததால் பதிவுகளில் இருந்த வேகம் இல்லாதொழிந்ததா அல்லது திரட்டிகள் இல்லை... நாமும் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி போய் விட்டோம் .. அதனால் பதிவுகள் இல்லை என்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மூன்றாவதாக எழுதுவது குறைந்து விட்டது என்பதை விட அதை முன்பு “ஒரு காலத்தில்” பின்னூட்டம் மூலமாக நாம் வைத்திருந்த உறவுகள் சிதறிப் போய் விட்டன. அதனால் தட்டவும் தட்டிக் கேட்கவும் ஆளில்லை இப்போது. பின்னூட்டங்கள் தந்த உயிரூட்டம் இப்போது சுத்தமாகப் போய் விட்டது, அதனால் எழுதும் ஆர்வமும் அமுங்கிப் போனது.

    நானும் பல பழைய ப்ளாக்கர்களை மீண்டும் எழுத அழைத்தேன். முகநூல் என்னும் டீக்கடையை விட்டு விட்டு ப்ளாக் பக்கம் வாருங்கள் என்று தொடர்ந்து முகநூலில் சீரியசாக எழுதும் ஆட்களையும் கேட்டேன். செவிமடுப்போர் யாருமில்லை.

    வியாதிகளைப் பட்டியலிட்டு விட்டேன். மருந்து வைத்திருப்போர் கொஞ்சம் முயற்சியெடுங்களேன். ப்ளீஸ்.......

    பதிலளிநீக்கு
  15. வாங்க தருமி சார்

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. என்ன செய்வது? பதிவுலகம் வாரியத்துடன் இருந்த காலத்தில் விலகி திரும்பி வந்தால் அது படுத்த படுக்கையாய் கிடக்கிறது. திரட்டிகள் இல்லாத சுழலில் நாம் எழுதினாலும் அதை நண்பர்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. விளைவு? பின்னுட்டங்கள் மறைந்து போனது. யாருக்காக எழுதுவது என்ற சோர்வு ஏற்படுவது நியாயம் தானே!

    பதிலளிநீக்கு
  16. வாரியத்துடன்=வீரியத்துடன் .

    பதிலளிநீக்கு
  17. எங்கள் தள முகவரியையும் இங்கு கொடுத்திருக்கும் கில்லர்ஜிக்கு நன்றிகள்.
    நான் நிறைய பிளாக்குகளுக்கு ஈ மெயில் சப்ஸ்க்ரைப் செய்து வைத்துள்ளேன்.  அதனால்தான் உங்கள் பதிவொன்றில் ஈ மெயில் சப்ஸ்கிருப்ஷன் வைக்கலாமே என்று கேட்டேன்.

    பதிலளிநீக்கு