13 July 2007

புத்தக மதிப்புரைக்கு விளக்கங்கள்

முதலில் என்னுடைய 'சந்தோஷமா கடன் வாங்குங்க' புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய நண்பர் ராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இனி அவர் தன்னுடைய மதிப்புரையில் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு என்னாலான விளக்கங்கள்:

'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்....' இதை கம்பர் எழுதியதாகத்தான் பலரும் கருதுகிறார்கள் என்பது உங்களுடைய பதிவில் வந்த பின்னூட்டங்களில் ஒருவரைத் தவிர யாரும் மறுக்காமல் விட்டதிலிருந்தே தெரிகிறது. இருப்பினும் தவற்றை அடுத்த பதிவில் திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

இத்தகைய புத்தகங்களில் காணப்படும் பலவீனங்கள் என்று நீங்கள் கூறியிருப்பது சரிதான். ஆனால் அடுத்துவரும் பதிப்புகளில் (editions) அன்றைய வழக்கத்திலிருப்பவற்றை அளிப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும் என்று கருதுகிறேன்.

அதேபோன்று அவற்றில் அளிக்கப்படும் புள்ளி விவரங்களும், மாதிரிகளும் கூட சம்பந்தப்பட்ட வாசகர்களை மட்டுமே ஈர்க்கும். கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்புத்தகத்தை அணுகுபவர்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும் என்பது என் கருத்து. மற்றபடி பொழுதுபோக்குக்காக படிப்பவர்களை இது அவ்வளவாக ஈர்க்காது.

என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் இத்தகைய வழிமுறைகளை விரிவாக பாடமாக எடுத்த பயிற்சி இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆனால் அப்போதும், 'போரடிக்குது சார்.' என்று முணுமுணுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும் இப்புத்தகத்தை படிக்கும் சில வாசகர்களுக்கு இப்படி தோன்றலாம்.

ஆனால் கடன் வாங்குபவர்கள் flat rate மற்றும் Interest on reducing balances என்ற இருவகை வட்டி வசூலிக்கும் முறைகளில் உள்ள வேறுபாடுகளை தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்ட மாதிரிகள் அவை. ஆனால் புதிய தலைமுறை வங்கிகள் சிலவற்றில் பணியாற்றும் சில நண்பர்கள் இப்படி generalise செய்தது சரியா என்று கேட்டதென்னவோ உண்மை. என்னுடைய மாதிரிகள் அவர்கள் கடைபிடிக்கும் முறையை குறைகூறும் முயற்சியல்ல என்று பதிலளித்தேன். கடன் வாங்கும் சாதாரணியர்கள் (laymen) இந்த பாகுபாட்டை நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்ததால் அவற்றை அளிப்பது என முடிவெடுத்தேன்.

குறைபாடுகள்:

Index: புத்தகத்தின் இறுதியில் அளித்திருக்கலாம். இதற்கு தேவையான மென்பொருள் என்னிடம் இல்லை. பதிப்பகத்தாரின் உதவியுடன் அடுத்த பதிவில் தர முயல்கிறேன்.

Telemarketing: இதற்கென தனி அத்தியாயம் வேண்டும் என்பது உண்மைதான். அடுத்த பதிவில் தருவதற்கு முயல்கிறேன்.

Preclosure: இதையும் விரிவாக கூறுவதற்கு ஒரு தனி அத்தியாயம் தேவை. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இது வங்கிகள் கடைபிடிக்கும் Asset- Liability Management (ALM) Policyஐ பொறுத்து அமைந்திருக்கும் எனலாம். வங்கிகள் தங்களுடைய சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் அதனதன் காலத்தைப் பொறுத்தும் வங்கியின் ALM கொள்கைக்கு ஏற்றவாறும் அமைந்திருக்கும். நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்.

Interest on deposits: இதுவும் ஒரு ALM exerciseதான். வங்கிகள் எப்போதுமே நீண்ட கால சேமிப்பை விரும்புவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அன்றாடம் மாறி வரும் நாட்டின் பொருளாதார கொள்கைதான். நம்முடைய நாட்டின் பொருளாதரம் உலக சந்தையுடன் இணைக்கப்பட்டதிலிருந்து (இது ஒரு தாராள பொருளாதார கொள்கையின் விளைவு என்றும் கூறலாம்) உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதும் ஒரு காரணம். இன்றிலிருந்து மூன்று வருடங்களில் பணச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று முன்கூட்டியே கணிக்கவியலாத அளவிற்கு பொருளாதாரம் ஒரு நிச்சயமற்றதன்மையைக் கொண்டுள்ளது. ஆகவேதான் குறுகியக் கால சேமிப்புகளுக்கு அதிக வட்டியும் நீண்டகால சேமிப்புகளுக்கு குறைந்த வட்டியும் அளிக்கப்படுகின்றது. நீண்டகால கடன் திட்டங்களுக்கு குறைந்த வட்டி விகிதம் விதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

கடன் பெற்றவர்களின் புகைப்படங்கள் வெளியிடுவது: இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. எங்களுடைய வங்கி ஒருபோதும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதை சற்று கூர்ந்து கவனியுங்கள். நடுத்தர மக்களுடைய அதுவும் பெரும்பாலும் சிறு வணிகம் செய்வோர், குடியிருக்க வீடு வாங்க கடன் பெற்றவர்களுடைய புகைப்படங்களே வெளியிடப்படுகின்றன. நடுத்தர மற்றும் பெரு வணிகர்கள், தொழிலதிபர்களுடைய புகைப்படங்களை வெளியிடட்டும் பார்க்கலாம்.

கடன் விழாக்கள்: எனக்கு இன்னும் முப்பது மாத காலம் பணிக்காலம் உள்ளதே:-)

மேலும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை புத்தகமாக வெளியிடுவதற்கு எந்த பதிப்பகத்தாரும் முன்வர தயங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை எழுத்தாளரே அவருடைய சொந்த செலவில் புத்தகத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சந்திக்க தயார் என்றால், இது சாத்தியமாகலாம். அந்த அளவுக்கு நெஞ்சுறுதி எனக்கு இல்லை.. பணவசதியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அறியாதவர்களா நம் தலைவர்கள்? அதுதான் இன்றைய நிர்பந்தம். ஆகவேதான் இதை அரசியல் என்று கூறி தள்ளிவிடுகிறோம்.

இந்த நீண்ட விளக்கத்தை பின்னூட்டமாக இடுவது சிரமம் என்பதால்தான் தனிப்பதிவாக வெளியிட முன்வந்தேன் டூண்டுக்கு பயந்து அல்ல:-)

மீண்டும் மதிப்புரை எழுதிய சீனியர் ராகவன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

9 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நடைமுறை வங்கியியல் விபரங்களை
அறியக் கொடுத்தமைக்க் நன்றி!

கோடி கோடியாய்க் கடன் பெற்று திருப்பாதிருப்போரின் பெயரைக்கூட வெளியிட மறுக்கும் வங்கியாளர்கள்,
குப்பன் சுப்பனின் போட்டோ போட்டு விளம்பரப்படுத்துவது நியாயமா?

tbr.joseph said...

வாங்க ஜி!

கோடி கோடியாய்க் கடன் பெற்று திருப்பாதிருப்போரின் பெயரைக்கூட வெளியிட மறுக்கும் வங்கியாளர்கள்,
குப்பன் சுப்பனின் போட்டோ போட்டு விளம்பரப்படுத்துவது நியாயமா? //

நியாயமேயில்லை:-))

krishjapan said...

முதல் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள். தமிழில் இப்படிப்பட்ட புத்தகங்கள் வர வேண்டியது மிக அவசியம். திரும்பிப் பார்க்கிறேன், புத்தகமாக வருவது சங்கடத்தைத் தரும் என்பது புரிகிறது. ஆனால், சூரியன், சற்றே சிறிய வடிவில் புத்தகமாக வந்தால், அதுவும் தி.பா. புத்தகமாக வந்தால் தரும் அதே பயனைத் தரும் என நம்புகிறேன். பார்க்கலாம், ஏதாவது மேற்கு பதிப்பகமோ, கலைஞர், மக்கள் டி.விக்களோ முன் வருகிறதா என....

மதிப்புரைக்கு டோண்டு சாருக்கு நன்றி.

மதிப்புரைக்கு பதில்....வலைப்பூவின் கரம் எவ்வளவு நீள்கிறது பார்த்தீர்களா...

துளசி கோபால் said...

ஆளுக்கொரு நியாயம்தான் நம்ம அரசாங்கத்துலேயும், அரசியலிலும்.

அதான் இப்படி எல்லா இடத்திலும் பரவி இருக்கு.

பாவம் குப்பன் & சுப்பன்(-:

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ஏதாவது மேற்கு பதிப்பகமோ, கலைஞர், மக்கள் டி.விக்களோ முன் வருகிறதா என....//

சீரியலாகவா? நீங்க வேற.. அதுக்கெல்லாம் ஒரு 'இது' வேணும். நமக்கு அது இல்லை:-))


மதிப்புரைக்கு பதில்....வலைப்பூவின் கரம் எவ்வளவு நீள்கிறது பார்த்தீர்களா... //

உண்மைதான்... வலைப்பூ வழியாக இன்று எழுத்துலகில் பிரவேசித்தவர்கள் பலர்...

tbr.joseph said...

வாங்க துளசி,

ஆளுக்கொரு நியாயம்தான் நம்ம அரசாங்கத்துலேயும், அரசியலிலும்.

அதான் இப்படி எல்லா இடத்திலும் பரவி இருக்கு.

பாவம் குப்பன் & சுப்பன்(-: //

இன்னைக்குன்னு இல்லை. என்னைக்குமே சாமான்யன் பாவம்தான்.
பத்தாயிரம் வாங்கிட்டு குடுக்கலன்னா அது கடன் வாங்கினவரோட ப்ராப்ளம். அதுவே பத்து கோடி வாங்கிட்டு திருப்பி குடுக்கலன்னா அது கடன் குடுத்த வங்கியோட ப்ராப்ளம். இதுதான் இன்றைய யதார்த்தம்.

tbr.joseph said...

ராகவன் சார்,

ஒங்க முல்லா கதைய படிச்சேன்.

ஆனால் நான் சொல்ல வந்தது அத்தனை எளிதான விஷயமல்ல. வங்கிகளின் தரப்பில் இருந்து பார்த்தால்தான் அதன் வீரியம் புரியும்.

உங்க பதிவுல நீங்க கேட்ட கேள்விகளுக்கு என்னுடைய பதிவில் பதில்!

வலைப்பூ உலகம் உண்மையிலேயே நீளமாத்தான் இருக்கு:-))

ravikumar.l said...

I Saw your book. Will be buying soon , When i went to Kilakku padippagam, i also met with the author of Rajini Oru Sagaptham,Mu.Ka., you guys doing great job like putting your thought as a book and give to people like us. Its a great service.

tbr.joseph said...

Thanks Ravikumar.