29 அக்டோபர் 2019

பாஜாகவின் சரிவு....2முதல் பாகம்

சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் விநியோகம் (supply) அந்த பொருளுக்கு சந்தையில் நுகர்வோர் தரப்பிலிருந்து வரும் தேவை (Demand)என இரண்டின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இன்றல்ல சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1930ல் வாழ்ந்த இங்கிலாந்து பொருளாதார மேதை ஜே.எம்.கெய்ன்ஸ் (John Maynard Keynes) தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். 

உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலையை எடுத்துக்கொள்வோம்.

சந்தையிலுள்ள மொத்த விநியோகம் ஒரு டண் என்று வைத்துக்கொள்வோம். அதை வாங்க அதே சந்தையில் உள்ள மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். விநியோகத்தின் அளவில் மாற்றமில்லாமல் நுகர்வோரின் எண்ணிக்கை கூடும்போது.... அதாவது நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலில் வெங்காயத்தின் விலை கூடும்... ஆயிரத்துக்கும் கீழே குறையும் போது அதாவது தேவை குறையும்போது வெங்காயத்தின் விலையை குறைக்காவிட்டால் அது விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகும். ஆகவே வணிகர்கள் அதன் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதையே மாற்றி நுகர்வோரின் எண்ணிக்கை அதே ஆயிரம் என்ற நிலையில் வெங்காயத்தின் விநியோக அளவு ஒரு டண்ணுக்கும் கீழே குறையும்போது தேவை விநியோகத்தை விட அதிகம் என்பதால் வெங்காயத்தின் விலை கூடும். விநியோகத்தின் அளவு ஒரு டண்ணுக்கு மேல் அதிகரிக்கும்போது வெங்காயத்தின் விலை குறையும்...

இதுதான் ஒரு பொருளாதார சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதின் அடிப்படை தத்துவம்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றாலும் அது விநியோகம் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன்களை ஒரே மாதிரியாக பாதித்ததால் இதுவரையிலும் பொருட்களின் விலை அதிக அளவில் உயரவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்த முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுவது எதனால்?

இதை ஆராய நான்  உலக பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் பல இணையதளங்களை உலாவி (Browse)திரட்டிய தகவல்களை இங்கே சுருக்கமாக அளித்திருக்கிறேன்.

முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு அளித்திருந்த விளக்கம் என்ன?

1.இந்திய பணச்சந்தையில் கறுப்புப் பணத்தின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2.கள்ள நோட்டுகளின் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துவிட்டது. இது தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.
3.வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
4.நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதனால் விலைவாசி குறையும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

1. கறுப்பு பணம் அதிகரித்துவிட்டது/

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் கோடி கறுப்புப் பணம் இருந்ததாம்! இந்த மதிப்பீட்டை யார், எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பதே ஒரு கேள்விக் குறி. உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.30 லட்சம் கோடி அதாவது மொத்த பணத்தில் 99.3 விழுக்காடு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையான ரூ.10,720 கோடி மட்டும்தான் கறுப்புப் பணம்.. இந்த அளவு குறைந்த தொகையை மீட்டெடுக்க இத்தனை விபரீதமான முடிவு தேவைதானா என்று பொருளாதார வல்லுநர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவற்றை மீட்டெடுக்கத்தானே வருமான துறை என்ற ஒரு பெயரில் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உள்ளது.? அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மீட்டெடுக்கும் தொகைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றும் கூறுகின்றனர் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் கறுப்புப் பணம் மட்டுமே காரணமாகிவிட முடியாது. ஏனெனில் இன்று உலகளவில் மிக அதிக அளவு கறுப்புப் பணத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யாவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவை இரண்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ள நாடுகள். அதற்கு அடுத்தபடியாக மெக்சிகோ. அதன் பிறகுதான் இந்தியா வருகிறது. முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஐம்பதில் ஒரு பங்கு மட்டுமே. 

ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசு முன்வைத்த முதல் காரணமே அடிபட்டுப் போகிறது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார்களே அப்போதெல்லாம் கறுப்புப் பணம் நாட்டில் இல்லையா? 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது இதன் பின்னாலிருந்த மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது: அப்போது நடக்கவிருந்த ஐந்து வட மாநில சட்டமன்ற தேர்தல்கள்.. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை தன் வசப்படுத்த நினைத்த மோடியும் அவருடைய கட்சியும் எதிர்கட்சிகள் வசமிருந்த கணக்கில் வராத பெரும் தொகை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களாகவே இருக்கும் என்றும் அதை செல்லாக் காசாக்கிவிட்டால் அவர்களுடைய மொத்த கஜானாவும் காலியாகிவிடும் எனறு எண்ணியிருக்கலாம். 

2. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, தாள்கள்களுக்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 தாளில் பல நகலெடுக்கவியலாத அம்சங்கள் உள்ளன என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில மாதங்களிலேயே பாக்கிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகளிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000த்தின் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது நாடே அதிர்ந்து போனது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2017-2018 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் மட்டும் சுமார் 5.04 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தனவாம்! அதில் 2000 ரூபாய் தாள் மட்டும் 1.80 லட்சம்! இதில் வியப்பு என்னவென்றால் புதிய ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் தாள்களின் கள்ளப் பிரதிகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாம்! . 

இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் கள்ள பிரதிகள் நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஓராண்டில் அதை அச்சடிப்பதையே மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது!

ஆக இதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியையே சந்தித்துள்ளது 

3. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் இதில் பெரும்பாலோனோர் மாத வருமானம் பெறுவோர். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட இந்த அதிகரிப்பு ஒன்றும் அதிகம் இல்லை.. மேலும் எண்ணிக்கை அதிகரித்தாலும் வரி வசூலில் பெரிய அளவுக்கு ஏற்றம் இல்லை என்கிறது வருமான வரித்துறையின் அறிக்கை. அவ்வாறு அதிகரித்த தொகையிலும் பெருமளவு பணமதிப்பிழப்பு எடுக்கப்பட்ட துவக்க நாட்களில் மதிப்பிழந்த ரூபாய்களை அதாவது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிக்கையை தொடர்ந்து செலுத்தப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் கோடியை கழித்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முன்புள்ள ஐந்தாண்டுகளில் சராசரியாக வசூலிக்கப்பட்ட தொகையின் அளவிலேயே இருந்துள்ளது. 

எனவே இந்த காரணமும் ஏற்புடையதல்ல.

4. நாட்டில் பணப்புழக்கம் குறையும் அதனால் விலைவாசி குறையும்

நான் ஏற்கனவே விளக்கியுள்ளப்படி விலைவாசி குறைய பணப்புழக்கம் ஒரு காரணமே தவிர அதுமட்டுமே காரணமல்ல.. விநியோகம் முந்தைய அளவிலேயே இருந்து பணப்புழக்கம் மட்டும் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே விலை வாசி குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உற்பத்தியும் குறைந்து அதன் விளைவாக விநியோக குறைவும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவும் சம நிலையில் இருக்கும்போதும் விலைவாசி ஏறாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே விலைவாசி ஏறாமல் இருந்திருக்குமானால் அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே காரணமல்ல.

ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் என்னென்ன?

நாளை பார்க்கலாம்...

14 கருத்துகள்:

 1. விரிவான அலசல்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு நாகராஜ் அவர்களே.

   நீக்கு
 2. பல இணையதளங்களை வாசித்து உள்ளீர்கள்... அதை தொகுத்து அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

   நீக்கு
 3. பல தகவல்கள் பிரமிப்பாக இருக்கிறது.
  தொடர்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.

   நீக்கு
 4. அரசு என்னதான் முயன்றாலும் அதை முறியடிக்கும் கில்லாடிகளும் இருக்கிறார்கள் கோலத்தில்போவதும் தடுக்கில்போவதும் தான் விளையாட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல் ஒழுங்காக இருந்த பொருளாதாரத்தை சீரழித்தது மத்திய அரசின் தவறான முடிவுகள் தான் இனியேனும் உணர்ந்து செயல்பட்டால் தான் பொருளாதாரம் சீரடையும்.

   நீக்கு
 5. இனியாவது சரியான பாதைக்குத் திரும்பவேண்டும் ஆட்சியாளர்கள்.  நல்லதொரு அலசல்.  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. இனியாவது சரியான பாதைக்குத் திரும்பவேண்டும் ஆட்சியாளர்கள்//

  தாங்கள் செல்வது
  தவறான பாதை என்பது அவர்களுக்குத் தெரிந்தால் தானே திருந்த முடியும்?

  பதிலளிநீக்கு
 7. பணமதிப்பிதழ் நடவடிக்கை என்பது மக்களுக்கு அரசின் மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்ப எடுத்த நடவடிக்கை என்றே சொல்லவேண்டும். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பதும் மக்கள் மேலும் அல்லலுக்கு உள்ளானார்கள் என்பதும் நாடறிந்த ஒன்று.

  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என சொல்லிவிட்டு அவைகளை நிறைவேற்றமுடியாதபோது, வேறொன்றை செய்து அதிர்ச்சி வைத்தியம் செய்த இவர்களைப் பார்க்கும்போது

  “நெஞ்சில் உரமுமின்றி
  நேர்மைத் திறமுமின்றி
  வஞ்சனை சொல்வாரடி - கிளியே
  வாய்ச்சொல்லில் வீரரடி”

  என்ற தேசியக்கவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன

  பதிலளிநீக்கு
 8. நெஞ்சில் உரமுமின்றி
  நேர்மைத் திறமுமின்றி
  வஞ்சனை சொல்வாரடி - கிளியே
  வாய்ச்சொல்லில் வீரரடி”

  என்ற தேசியக்கவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன //

  உண்மையான வார்த்தைகள் சார்.

  வெறும் வாய்ச்சொல் வீரர்கள் தான்.

  உங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் சிறப்பாக உள்ளது கட்டுரை தொடருங்கள் https://ennathuli.blogspot.com/?m=1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி திரு அசோகன்.

   நீக்கு