28 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு துவங்கிவிட்டது.....

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு வாக்களித்ததற்கு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் பட்ட அவதியும் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இரு மாநிலங்களிலும் பிரச்சாரத்தின்போது மோடியும் அமித்ஷாவும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதைப் பற்றியே பேசியது நினைவிருக்கலாம். ஆனால்  காஷ்மீரில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இன்னும் சிறிது ஒருங்கிணைப்பு சரியாக இருந்திருந்தால் ஹரியானாவில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். 

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. 

எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் நிதியமைச்சர், இன்னாள் நிதியமைச்சரின் கணவர்.... இவ்வளவு ஏன், நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர் வரையிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சிறிது சிறிதாக நலிவடைந்து வந்துள்ளது என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம்தான் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை.

இதில் தான் சிக்கலே....

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விஷயத்தில் நடந்துக்கொள்வதுபோன்றுதான் மத்திய அரசும் பொருளாதார விஷயத்தில் self denial modeல் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதும் அது வேகமாக பரவி வருவதும் உண்மைதான் என்பதை தமிழக அரசும் பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை அடைந்திருப்பது உண்மைதான் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டாலே போதும், பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். 

இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதை அதன் பிறகுதான் எடுக்க முடியும். நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை... அமேஜான் ஆன்லைன் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சுமார் இருநூறு கோடிக்கு செல்பேசிகள் விற்பனை ஆகியுள்ளன... கடந்த ஒரே மாதத்தில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் முன்னூறு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன என்பன போன்றவற்றையெல்லாம் பாமரத்தனமாக சுட்டிக்காட்டி  இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தேக்கமும் ஏற்படவில்லை என்றெல்லாம் கூறிவருவதைப் பார்க்கும்போது இதே அமேஜானின் கடந்த வருட நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த லாபத்தை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பொருளாதரம் நலிவடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்ற அதிபர் டிரம்ப்புக்கும் நம்முடைய பிரதமர் மோடிக்கும் இடையில் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பது தெரிகிறது. 

இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது என்றால் உலகமெங்குமே இதே நிலைதான் என்று உலக வங்கியே கூறுகிறது என்கிறார் நிதியமைச்சர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிக, மிக குறைவு என்று நம்முடைய சுகாதார அமைச்சர் கூறுவது போல்தான் உள்ளது இது. நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!

சில தினங்களுக்கு முன் பொருளாதாரத்தில் 2019ம் ஆண்டுக்கான  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சரியான பாதையில் பயணிக்கவில்லை என கூறியிருந்ததை பத்திரிகைகளில் வாசிக்க முடிந்தது. அதாவது மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்துதான் இந்த நிலை என்பதை சூசகமாக கூறியிருந்தார் அவர்.

இதையேத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய மத்திய நிதியமைச்சரின் கணவரும் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் முந்தைய ஆட்சி காலங்களில் அதாவது நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் ஆகியோர ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் வழிநடத்திய முறையை பின்பற்றியிருந்தாலே இந்த சரிவை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ராஜன் அவர்கள் கூறும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் இந்திய பொருளாதாரம் முடங்கிப்போனதற்கு முக்கிய காரணம் என்றார். 

அதென்ன முக்கிய சீர்திருத்தங்கள்?

முதலாவது 2016ஆம் ஆண்டு அவசர, அவசரமாக மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

அதன் பாதிப்பில் இருந்து நுகர்வோரும், சிறு, குறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் மீள்வதற்கு முன்பே கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட .ஜி.எஸ்.டி வரி திட்டம்.

முதலாவது முடிவால் நுகர்வோர் கைகளில் இருந்த ரொக்கப்பணம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அப்படி சேர்ந்த தொகையையும் முழுவதுமாக மக்களை எடுக்க விடாமல் ரேஷன் முறையில் அலைக்கழித்தது. இது மட்டுமா? வங்கிகளும் கூட இந்த பணத்தை முழுமையாக பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்காமல் அதில் பெரும் விழுக்காட்டை முடக்கிப் போட்டது. ஆக நுகர்வோர் பணம் சந்தையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொருளாதார வல்லுநர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சந்தையின் தேவைகளை (Market Demand) பெருமளவு குறைத்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்தாலே அவர்களின் தேவையும் குறைந்துவிடும் அல்லவா? இதுதான் பொருளாதார வீழ்ச்சியின் துவக்கம்..

இரண்டாவது முடிவு தொழில், வணிகம் செய்வோரை முடக்கிப்போட்டுவிட்டது. வல்லுநர்கள் பாஷையில் வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை இந்த புது வரி உயர்த்தியதால் ஏற்கனவே வாங்கும் திறனை இழந்திருந்த நுகர்வோரிடமிருந்து வரக்கூடிய மீதமிருந்த தேவையையும் குறைத்துவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து (Supply) குறைந்துபோனது. 

பொருளாதார வீழ்ச்சியிலும் விலைவாசி அதிக அளவில் உயராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எப்படி?

நாளை பார்க்கலாம்....

12 கருத்துகள்:

 1. எதற்கும் முட்டு தரும் பக்தால்ஸ் இருக்கும் வரை கவலையேது...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க டிடி,

   மிகச் சரியாக சொன்னீர்கள்.

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அருமையாக அலசி இருக்கின்றீர்கள் ஐயா

  இவர்கள் மட்டுமல்ல எல்லா கட்சி தலைவர்களின் தலைக்கனத்தை கூட்டுவது தொண்டர்கள் என்ற தெண்டங்கள்தான்.

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்கள் மட்டுமல்ல எல்லா கட்சி தலைவர்களின் தலைக்கனத்தை கூட்டுவது தொண்டர்கள் என்ற தெண்டங்கள்தான்.//

   வாங்க ஜி!

   இதுதான் இந்த நாட்டின் தலையெழுத்தே!

   நீக்கு
 3. நல்லதொரு அலசல்...

  இங்கே எல்லாமே அரசியல். என்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நாகராஜ் அவர்களே

   இங்கே எல்லாமே அரசியல். என்ன சொல்ல...//

   அரசியல் செய்யாமல் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கே புரிந்துவிடும். ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.

   நீக்கு
 4. தவறு என்று தெரியும்போது திருத்திக் கொள்ளும் மனம், குணம் வேண்டும்.  எந்த ஆட்சியாளர்களும் வெளிப்படையாய் பிரச்னைகளை பேசுவதில்லை.

  பதிலளிநீக்கு
 5. வாங்க ஸ்ரீராம்

  அனைத்து ஆட்சியாளர்களும் அப்படித்தான் எதிர்க்கட்சியில் இருக்கும் போது வாய் கிழிய பேசுவார்கள் ஆட்சியில் அமர்ந்து விட்டால் வாயை மூடிக் கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு

 6. // நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!//
  இரண்டும் வெவ்வேறாக இருந்தால்தானே இந்த ஐயம் எழவேண்டும்!

  பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி‌எஸ்‌டி வரி விதிப்பும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்து போக வழி வகுத்ததும், அதனால் சந்தையில் பொருட்களுக்கான தேவைகள் குறைந்ததால் அவைகளின் உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து குறைந்துபோனது என்பதும் பாமரனுக்கே தெரிந்திருக்கும்போது அரசுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே!

  இதை எடுத்த சொல்லும் பொருளாதார நிபுணர்களை ‘நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள்’ என அதிகார போதையில் முத்திரை குத்தும் போக்கு இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.

  தொடரின் துவக்கமே அருமையாக உள்ளது. யதார்த்த நிலையை சொல்கிறது இந்த பதிவின் தலைப்பு! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சார்!

   உங்களுடைய விரிவான கருத்துரையை தான் நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே அருமையான விரிவான கருத்துரையை இட்டு உள்ளீர்கள். மிகவும் நன்றி.

   தொடரின் துவக்கமே அருமையாக உள்ளது. யதார்த்த நிலையை சொல்கிறது இந்த பதிவின் தலைப்பு!//

   உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு