03 ஏப்ரல் 2014

அரசியல்வாதியாக என்ன தெரிந்திருக்க வேண்டும்?

அரசியலில் முட்டாள்தனம் ஒரு குறைபாடல்ல என்றார் பிரான்ஸ் தேசத்தின் முதலாம் பேரரசர் நெப்போலியன் போனபார்ட். ஏனெனில் ஒரு முட்டாளால்தான் இன்னொரு முட்டாளை இனம் கண்டுக்கொள்ள முடியுமாம்! 

ஆனால் அரசியல்வாதிகள் மட்டும்தான் அரசியல் செய்கின்றனரா?

அரசியல் எதில்தான் இல்லை? அது நாட்டிலும் உள்ளது வீட்டிலும் உள்ளது. அது இல்லாத இடமே இல்லை. இறைவனை வழிபடச் செல்லும் வழிபாட்டுத்தலங்களிலும் கூட உள்ளதே! VIP சாமி தரிசனம் என்று கேள்விப்பட்டதில்லை?

ஆகவே அங்கிங்கினாதபடி எங்கும் நீக்கமற கலந்திருப்பது அரசியல். 

'அரசியல் செய்யாம பிழைக்க முடியாதுங்க' என்பது இன்று மிகவும் சகஜமாக நாம் கேட்கும் பேச்சு. இன்று அரசியல் செய்யாத மனிதனே இல்லை எனலாம்.

ஆகவேதான் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் மனிதன் ஒரு அரசியல் மிருகம் (political animal) என்றார். ஆனால் மிருகங்கள் அரசியல் செய்வதில்லை. ஏனெனில் அவற்றிற்கு அதற்கேற்ற ஐந்தாம் அறிவு இல்லை. ஆனால் இந்த 'அறிவை' தேவைக்கு அதிகமாகவே பெற்றிருப்பதால்தான் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்று நம்மில் பலரும்  அலம்பல் செய்கிறோம்!

அரசியல் என்றால் அரசு + இயல் என்று பொருளாம்! ஆட்சி செய்யும் கலை என்றும் கூறலாம். இதுதான் இந்த வார்த்தையின் நேர்மறையான (positive) பொருள். ஆனால் நம்மில் பலரும் இதை எதிர்மறையாகத்தான் பொருள் கொள்கிறோம் அரசியல் செய்வது என்றால் ஆட்சி செலுத்துவது என்ற பொருள் மறைந்து இப்போது ஆட்டிப்படைப்பது, ஆதாயம் தேடுவது, அடுத்துக் கெடுப்பது என்றாகிவிட்டது. 

அரசியல் செய்பவரெல்லாம் ஒருவகையில் அரசியல்வாதிகள்தான். ஆட்சி செய்வதில் அரசியல் செய்பவர்களைத்தான் அரசியல்வாதிகள் என்கிறோம். ஆனால் அலுலவகங்களிலும் ஏன் குடும்பங்களிலும் சுயலாபத்திற்காக அரசியல் செய்பவர்களும் அரசியல்வாதிகள்தான். மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்ட அரசியல் செய்யும் மருமகளும் அரசியல்வாதிதான் என்றால் முதிய வயதில் தன்னை மட்டுமே நம்பியிருக்கும் பெற்றோரை மனைவியின் தூண்டுதலால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட நினைக்கும் மகனும் அரசியல்வாதிதான். 

'எனக்கு பாலிட்டிக்ஸ்னால புடிக்காதுங்க. அதுவும் அரசியல்வாதிங்கனா கேக்கவே வேணாம். அரசியல பத்தியும் அரசியல்வாதிங்கள பத்தியும் பேசறது சுத்த வேஸ்ட்.' இப்படி சலித்துக்கொள்பவர்கள்தான் தங்களுக்கு தேவை என்று வருகிறபோது வீட்டிலும் வெளியிலும் அரசியல் செய்ய தயங்கமாட்டார்கள், தங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதியின் உதவியையும் கேட்டுப் பெற தயங்கமாட்டார்கள். இதைத்தான் பத்தாம்பசலித்தனம் (hypocrisy) என்கிறார்கள். 

ஆனால் அரசியல் செய்யத் தெரியாத அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு மறைந்த தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான கக்கன் அவர்களைச் சொல்லலாம். ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் அரசியலிலும் ஆட்சியிலும் இருந்தும் கூட சொந்தமாக ஒரு வீடோ, வாகனமோ இல்லாமல் மறைந்தவர் அவர். இத்தகையோரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். அதாவது அரசியல் செய்யத் தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவன்!

இன்று அரசியல் செய்யாத மனிதனே இல்லை என்கிறபோது எதற்காக அரசியலையும் அரசியல்வாதிகளை மட்டும் நாம் வெறுக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது!

நம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாம் செய்யும் அதே அரசியலைத்தான் பொதுவாழ்வில் இன்று அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அரசியல் செய்யும் அளவில்தான் மாறுபடுகிறோம். நாம் சிறிய அளவில் செய்கிறோம். அவர்கள் பெரிய அளவில் செய்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இந்த குணநலனைத்தான் அரிஸ்டாட்டில் நாம் அனைவருமே அரசியல்வாதிகள்தான் என்று அன்றே சொல்லிச் சென்றுவிட்டார். 

ஆனால் ஒரு சராசரி மனிதன் வீட்டிலும் அலுவலகங்களிலும் செய்யும் அரசியல் அவனையும் அவனைச் சார்ந்தவர்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் பொதுவாழ்விலோ அல்லது அரசு பொறுப்பிலோ உள்ளவர்கள் செய்யும் அரசியல் ஒரு நாட்டையே பாதிக்கிறது. 

"Glimpses of World History" என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் மறைந்த பிரதமர் நேரு அவர்கள் இவ்வாறு கூறுவார்: "அரசியல்வாதிகள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை மறைத்துக்கொண்டு வெளியில் நீதி, நேர்மை, மதச் சார்பின்மை ஆகியவற்றைப் பற்றி பேசுவதில் சமர்த்தர்கள். அவர்களுடைய பேச்சில் மயங்கி அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்பி ஏற்றுக்கொள்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்." இதே கருத்தை வலியுறுத்தி பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் சார்லஸ் டிகால் சொன்னது: 'தன்னுடைய பேச்சை தானே நம்பாத அரசியல்வாதி தான் சொல்வதை அப்படியே நம்பும் மக்களைப் பார்த்து வியப்பதில் வியப்பென்ன?' 

அவர் இதை எழுதி சுமார் அரை நூற்றாண்டுகளாகிவிட்டன என்றாலும் அவர் அன்று கூறியது இன்றளவும் பொருந்துகிறது. நேருவின் சோசலிஸ கொள்கைகள்தான் நாடு இன்னும் வறுமை நாடாகவே இருப்பதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் கூறப்பட்டு வந்தாலும் அவர் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பதென்னவோ உண்மை. ஆனால் அவருடைய வாரிசுகள் அப்படி இருக்கவில்லை என்பது வேறு விஷயம். 

ஆகவேதான் அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மை நாளுக்குநாள் குறைந்துக்கொண்டே வருகிறது எனலாம். இது நம்முடைய நாட்டுக்கு மட்டுமே உரித்தானது என்று கூற முடியாது. இன்று உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள் ஏறத்தாழ இதே ரகம்தான். கடந்த சில ஆண்டுகளாக நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பதவியை இழக்க நேர்ந்த அதிபர்கள் எத்தனை பேர்? சொந்த நாட்டை விட்டே விரட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் எத்தனை பேர்? 

இந்திய அரசியலில் அப்பழுக்கற்ற தலைவர்களை காண்பது அரிதானதுதான் என்றாலும் ஓரிரு ஆண்டுகள் கூட ஒரே நாடாக நிலைத்திருக்க முடியாது என்ற ஆங்கிலேயர்களை மட்டுமல்லாமல் உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் இன்றளவும் ஒரே சுதந்திர நாடாக நிலைத்திருக்கிறோமே அதுவே ஒரு பெரிய சாதனையல்லவா?

அரசியல் ஒரு சாக்கடை, அதில் விழாமல் இருக்கும் வரை நல்லது என்று நம்மில் பலரும் அதிலிருந்து விலகியதால்தான் இன்று விரும்பத்தகாதவர்கள் எல்லாம் அதில் நுழைந்து நாட்டையே ஊழல் கரை படிந்த நாடாக மாற்றிவிட்டனர். இன்று இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துக்கொள்ளவே பல பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் தயங்கும் அளவுக்கு உள்ளது இந்திய அரசியல்வாதியின் நேர்மைத்தனம். எந்த நேரத்தில் எந்த விசாரணை வரும் எந்த நேரத்தில் நாம் பெற்ற வர்த்தக உரிமம் ரத்தாகும் என்ற அச்சத்துடனே எத்தனை காலத்திற்குத்தான் வர்த்தகம் செய்வது என்ற எண்ணத்துடன் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஒதுங்குகின்றனராம். குறிப்பாக 2ஜி வழக்கில் ஆ இராசா அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டதிலிருந்துதான் இத்தகைய தயக்கம் காட்டப்படுகிறது என்கிறார்கள். இந்த வகையில் இந்திய அரசியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயரைப் பெற்றவர் நம்முடைய ஆ.இராசா!!

இந்திய அரசியல்வாதிகளின் 'நேர்மை' இந்த அளவுக்கு சந்தேகத்திற்குள்ளாகியுள்ள சூழலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அத்தனை எளிதில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பது என்னவோ உண்மை. 'எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டைதானே' என்ற மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அன்று வேத வாக்காக கூறிச் சென்றது நினைவுக்கு வருகிறது. 

இன்றுள்ள கட்சிகளில் எந்த கட்சிக்கு அதற்கென்று பிரத்தியேக 'கொள்கை' (Policy), 'சித்தாந்தம்' (Ideology) உள்ளது என்று கேட்டால் 'அப்படியென்றால்?' என்ற கேள்விதான் பதிலாக வருகிறது. 

மக்களை மயக்கும் பேச்சுத்திறன், எதிரணியினரை இகழ்ந்து பேசும் திறன், அடுத்தவர்கள் அடைந்த தோல்வியையே பெரிதாக்கி காட்டும் திறன் இவை மட்டுமே போதும் என்று நினைத்து செயல்படும் கட்சிகள்தான் இன்று அதிகம்! 

நேற்றைய தினம் ராகுலின் அமேதி தொகுதியில் பல நல்ல மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது என்று பாஜகவின் வருண் காந்தி புகழ்ந்ததும் அதை எதிர்த்து பாஜகவிலிருந்து பல குரல்கள் எழுந்தன. எதிரி எத்தனை நன்மைகள் செய்திருந்தாலும் அதை நாமே வெளியில் கூறலாகாது என்கிற காழ்ப்புணர்வுதானே காரணம்? 

இதுதான் இன்றைய அரசியல்! 

சென்னையிலுள்ள பறக்கும் சாலை பலருக்கும் நன்மை பயக்கும் என்றாலும் அது 'பலான' கட்சியால் கொண்டு வரப்பட்டது ஆகவே அதை எப்படியாவது முடக்க வேண்டும். 

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவுக்கே பல நன்மைகளைக் கொண்டுவரக் கூடிய திட்டம் என்று ஒருகாலத்தில் புகழப்பட்ட சேதுசமுத்திர திட்டம் இன்று வேண்டவே வேண்டாம். ஏனெனில் இதுவும் அதே 'பலான' கட்சியால் கொண்டுவரப்பட்டது. 

இது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அலறுகிறது அந்த 'பலான' கட்சி. 

இதுதான் அரசியல்!

இது தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டிலுள்ள பல மாநிலங்களிலும் இதே நிலைதான். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஆட்சி மாற்றங்கள்தான் பல நல்ல திட்டங்களும் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம். 

இத்தகைய பல 'நல்ல' குலநலன்களுக்காகத்தான் இன்று அரசியல்வாதிகளை பலரும் கேலியாக வர்ணிக்கின்றனர். 

இணையத்திலிருந்து எடுத்த சில மேற்கோள்கள் உங்களுக்காக:

1. பிரபல அரசியல் விமர்சகர் லாரி ஹார்டிமேன்: இவர் அரசியல் என்ற ஆங்கில வார்த்தையை POLI + TICS என்று பிரித்து விளக்கம் அளிக்கிறார். அதாவது POLI என்றால் 'பல' (Many) என்று பொருள். TICS என்றால் உயிரைக் குடிக்கும் கிருமி (parasites) அல்லது ஒட்டுன்னி என்று பொருள். ஆகவே POLITICS என்றால் உயிரைக் குடிக்கும் பல கிருமிகள் என்று அர்த்தமாம்! 

2.ஈசோப்: நாம் பெட்டித் திருடர்களை சிறையில் தள்ளுகிறோம் ஆனால் அவர்களுள் மிகப் பெரிய திருடர்களை அரசாள தெரிவு செய்கிறோம்.

3. முன்னாள் ரஷ்ய அதிபர் குருஷேவ்: அரசியல்வாதிகள் எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் ஒரே ரகம்தான். ஆறே இல்லாத இடத்திலும் பாலம் கட்டுவேன் என்பார்கள்.

4. ஐரோப்பிய அரசியல் விமர்சகர்: நீங்கள் மருத்துவராக வேண்டுமென்றால் மருத்துவம் படிக்க வேண்டும். பொறியாளர் ஆக பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்குரைஞர் ஆக வேண்டுமென்றால் சட்டம் படித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதியாக வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதும். 'எனக்கு என்ன வேண்டும்?' 
இறுதியாக சார்லஸ் டிகால்: அரசியல் என்பது அரசியல்வாதிகள் வசம் ஒப்படைக்கப்படும் அளவுக்கு  அத்தனை எளிதான விஷயமல்ல.

உண்மைதான். அரசியல் அதாவது ஆட்சி செய்வது என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள்தான் இன்று அரசியலில் உள்ளனர்! அவர்களுக்கு தெரிவதெல்லாம் குட்டையை குழப்புவது பிறகு அதே குட்டையில் மீன் பிடிப்பது.

இந்த இரண்டு விஷயத்தை மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதும். தவறு. அத்துடன் நன்றாக பேசவும் தெரிந்திருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாகிவிட முடியும்!

வாழ்க அரசியல்! வாழ்க ஜனநாயகம்!

******

13 கருத்துகள்:

  1. //அரசியல் ஒரு சாக்கடை, அதில் விழாமல் இருக்கும் வரை நல்லது என்று நம்மில் பலரும் அதிலிருந்து விலகியதால்தான்//

    இது நாம் செய்யும் பெரிய தவறு. இதனால் ஜனநாயக நாடுகளில், அநேக நாடுகளில் சாதாரண மக்களைவிட அரசியல்வாதிகள் குற்றவாளிகளாகவும், முட்டாள்களாகவும் இருந்தாலும் ஆட்சியில் நிலைக்க முடிகிறது. அரசியலில் வருவதற்கு குறிப்பிடத்தக்க படிப்புத் தகுதிகளும், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையுள்ள நோட்டரி பப்ளிக்களின் சப்போர்ட்டும் தேவை என்பதை சட்டமாக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு

  2. Hypocrisy என்பதை பாசாங்கு என சொல்லலாம். படிற்றொழுக்கம் என்றும் சொல்லலாம். பத்தாம்பசலி (Fogy) என்பதற்கு பொருள் வேறு.அதை பழங்கால நடைமுறையை மேற்கொள்ளுவோர் என்று சொல்வார்கள்

    // அரசியல் செய்யத் தெரியாத அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு மறைந்த தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான கக்கன் அவர்களைச் சொல்லலாம்.//

    இந்த லிஸ்டில் திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களையும் திரு EMS நம்பூதிரிபாட் அவர்களையும் திரு ப.ஜீவானந்தம் அவர்களையும், திரு மணலி கந்தசாமி அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    //நன்றாக பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.//
    பேசவும் என்பதற்கு முன்னால் பேரம் என போட்டிருக்கலாம்.

    அரசியலின் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு

  3. என்னதான் எழுதிப் புரியவைக்க முயன்றாலும் அரசாட்சி பற்றிய அறிவு நம்மிடையே மிகக் குறைவு.சிந்தித்து ஓட்டுப் போடுபவரைக் காட்டிலும் எதையும் சிந்திக்காமல் அந்நேரம் தோன்றுகிற பெயருக்கே ஓட்டைப் பதிவு செய்பவர் அதிகம் ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிற்பவருக்கு அந்தத் தொகுதி பற்றி தெரிவது அவசியம் ஆனால் எத்தனை பேருக்கு தேர்தலில் நிற்பவர் பற்றிய ஞானம் இருக்கிறது. எங்கள் கட்சியின் குறிக்கோள் இது , இடை இன்னமாதிரி செயல் படுத்த உத்தேசம் என்று யார் கூறுகிறார்கள். ஏறத்தாழ அனைவருமே சுயநலம் கருதும் பச்சோந்திகள். தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்வார்கள். என்னவெல்லாமோ எழுதத் தோன்றுகிறது முத்தாய்ப்பாக ஒன்று கூறுகிறேன் YOU GET WHAT YOU DESERVE...!

    பதிலளிநீக்கு
  4. மன்னராட்சி காலத்தில் 'மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி'.இப்போது மக்களாட்சி காலத்தில் 'மக்கள் எவ்வழி மந்திரி அவ்வழி '.

    பதிலளிநீக்கு
  5. தமிழில் poli என்றால் வேறு அர்த்தம் வருகிறது .அரசியல்வாதிகள் போலிகள் அல்ல ,உண்மையான ஒட்டுண்ணிகள்தான்!
    த ம +1

    பதிலளிநீக்கு
  6. Packirisamy N said...
    அரசியலில் வருவதற்கு குறிப்பிடத்தக்க படிப்புத் தகுதிகளும், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையுள்ள நோட்டரி பப்ளிக்களின் சப்போர்ட்டும் தேவை என்பதை சட்டமாக்கவேண்டும்.//

    திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் பலரும் சட்டம் படித்தவர்கள்தானே. ஏன் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய ஊழலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஆ.இராசா கூட சட்டம் படித்தவர்தான். மாப்பிள்ளை பார்க்கும்போது படித்த நல்ல வேலையுள்ளவரைத்தான் பார்க்கிறார்கள். நல்ல உள்ளம் கொண்டவர்தானா என்று நம்மில் யாராவது தெரிந்துக்கொள்ள முயல்கிறோமா? அல்லது அது அத்தனை எளிதான காரியம்தானா? அதுபோலத்தான் இதுவும். படித்தவரும் கூட நல்லவராக இருக்க வேண்டுமே.

    பதிலளிநீக்கு
  7. வே.நடனசபாபதி said...

    இந்த லிஸ்டில் திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களையும் திரு EMS நம்பூதிரிபாட் அவர்களையும் திரு ப.ஜீவானந்தம் அவர்களையும், திரு மணலி கந்தசாமி அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். //

    உண்மைதான். இப்படி பல பேரைச் சொல்லலாம். நான் ஒரு உதாரணத்திற்காக மட்டுமே கக்கன் அவர்களுடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

    /உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. G.M Balasubramaniam said...

    YOU GET WHAT YOU DESERVE...!//

    அதாவது முட்டாள்களுக்கு முட்டாள்கள்தான் கிடைப்பார்கள் என்கிறீர்கள்! சரியான வார்த்தை!!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  9. Vetrivendan said...
    மன்னராட்சி காலத்தில் 'மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி'.இப்போது மக்களாட்சி காலத்தில் 'மக்கள் எவ்வழி மந்திரி அவ்வழி '.

    சரியாக சொன்னீர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  10. Bagawanjee KA said...
    தமிழில் poli என்றால் வேறு அர்த்தம் வருகிறது .அரசியல்வாதிகள் போலிகள் அல்ல ,உண்மையான ஒட்டுண்ணிகள்தான்!//

    Poly என்றால் 'பல' என்று அர்த்தம் உள்ளது. நீங்கள் சொல்லும் அர்த்தமும் சரியானதுதான் :) சிலேடையில் காமடி செய்பவராயிற்றே நீங்கள், உங்களுக்கு தெரியாததா :))

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  11. திண்டுக்கல் தனபாலன் said...
    நல்லதொரு வியாபாரம்...!//

    லாபகரமான வியாபாரமாயிற்றே! ஐந்தே வருடங்களில் பல கோடிகளை அள்ளித்தரும் வியாபாரம் வேறெங்கே உள்ளது!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நாம் பெட்டித் திருடர்களை சிறையில் தள்ளுகிறோம் ஆனால் அவர்களுள் மிகப் பெரிய திருடர்களை அரசாள தெரிவு செய்கிறோம்.//

    இது நம்ம நாட்டுக்கு கிடைத்த சாபம்ன்னு கூட சொல்லலாம், உலகத்துக்கேன்னும் சொல்லலாம் !

    பதிலளிநீக்கு