26 மார்ச் 2014

மக்களவை தேர்தலில் மாநிலக் கட்சிகளை புறக்கணிப்போம்!

நம்முடைய நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமேயில்லை.  சமீபத்திய ஆய்வின் படி கட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் இவற்றில் நூற்றுக்கும் குறைவான கட்சிகளுக்கு மட்டுமே மாநிலங்களிலுள்ள சட்டமன்றம் மற்றும் மத்தியிலுள்ள மக்களவை/மாநிலங்களவைகளில் அங்கத்தினர்கள் உள்ளனராம். அதாவது எத்தனை முறை முயன்றாலும் இந்த மக்கள் மன்றங்களுக்கு ஒரு அங்கத்தினரைக் கூட அனுப்ப முடியாத கட்சிகள்தான் இன்று நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. 

சமீபத்தில் காலாவதியான மக்களவையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் எண்ணிக்கை முப்பதியெட்டு!

அதில் தேசீய கட்சிகள் எனப்படும் காங்கிரஸ் , பிஜேபி மற்றும் இடதுசாரி கட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மீதமுள்ள அனைத்துமே பிராந்திய கட்சிகள் (Regional Parties) எனப்படும் மாநிலக் கட்சிகள்தான். 

கட்சிகள் எவ்வாறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் என கணிக்கப்படுகின்றன?

ஒரு கட்சி தேசிய கட்சி என கருதப்படுவதற்கு அதற்கு:

1. மக்களவையிலுள்ள மொத்த அங்கத்தினர்களுள் குறைந்தது இரண்டு விழுக்காடு (2%) அங்கத்தினர்கள் இருக்க வேண்டும். அதாவது மக்களவையின் தற்போதைய 543 அங்கத்தினர்களுள் குறைந்தது பதினோரு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த அங்கத்தினர்கள் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்தாவது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது

2. மக்களவைக்கோ அல்லது ஒரு மாநில சட்டமன்றத்திற்கோ நடத்தப்படும் பொதுத் தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில்  குறைந்தது ஆறு விழுக்காடு (6%) வாக்குகள் அல்லது குறைந்த பட்சம் நான்கு இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

ஒரு கட்சி மாநிலக் கட்சி என கருதப்படுவதற்கு அது 

1. சம்மந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்த பட்சம் மூன்று விழுக்காடு (3%) வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு சட்டமன்ற இடங்களிலாவது வெற்றிபெற்றிருக்க வேண்டும். 

இந்த அடிப்படையில் நாட்டில் தற்சமயம் ஆறு (காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஐ (மா), BSP, NCP) தேசிய கட்சிகள் மற்றும் நாற்பது மாநிலக் கட்சிகள் உள்ளன! இவற்றுள் முப்பத்தியெட்டு கட்சிகளுக்கு மட்டுமே தற்போதைய மக்களவையில் அங்கத்தினர்கள் உள்ளனர்.

இவையல்லாமல் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் 1200!!

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் என பட்டியலிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. பெரும்பாலான கட்சிகளின் பெயர்களைப் பார்த்தாலே அவை ஒரு குறிப்பிட்ட சாதி, மதம், மாநிலம் அல்லது மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது அவற்றின் ஒரு பகுதியில் வசிப்பவர்களுக்காகவே துவங்கப்பட்ட கட்சி என்பது புரிகிறது.

மாநிலக் கட்சிகள் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுள் மக்களவையில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்ட (பத்து அல்லது அதற்கு அதிகமான) கட்சிகள் பத்து மட்டுமே! இந்த பட்டியலில் நம்முடைய மாநிலத்தைச் சார்ந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளுள் திமுக மட்டுமே வருகிறது. அகில இந்திய கட்சி என்று பறைசாற்றிக்கொள்ளும் அஇதிமுகவுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (வரும் தேர்தலில் இந்த நிலை மாறலாம் என்பது வேறு விஷயம். ஏனெனில் இந்த இரு கட்சிகளுமே பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஒவ்வொரு தொகுதியிலும் பல்முனைப் போட்டியை சந்திக்கவுள்ளன.) 

தேசீய கட்சிகள் என கருதப்படும் ஆறு கட்சிகளுள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் உள்ளனர் என்பதும் உண்மை. மற்ற நான்கு கட்சிகளுக்கும் தலா இருபத்தைந்து அங்கத்தினர்கள் கூட இல்லை!! ஆகவே இவை நான்கும் உண்மையில் தேசிய கட்சிகள் என்று அழைக்கப்பட தகுதியற்றவை என்றும் கூறலாம்.

இன்று மக்களவையில் ஐந்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மாநிலக் கட்சிகள் மட்டும் இருபது உள்ளன. அதாவது மக்களவையில் உறுப்பினர்களைக் கொண்ட மொத்த கட்சிகளுள் சரிபாதி! ஒரேயொரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் பன்னிரெண்டு! 

பலவகைப்பட்ட இனம், மதம், மொழி மற்றம் கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்களுக்காகவோ கட்சிகள் துவக்கப்படுவது சகஜம்தான். அதில் தவறேதும் இல்லை. ஆனால் ஒரே இனத்திலுள்ள வெவ்வேறு சாதியைச் சார்ந்த மக்களுக்காக என்று புதிது புதிதாக கட்சிகள் துவங்கப்படும்போதுதான் ஒரு குறிப்பிட்ட மாநில மக்களிடையேயும் கூட பிரிவினைகள் ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய கட்சிகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றன. 


இத்தகைய கட்சிகளால் சம்மந்தப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே நன்மை. நாட்டிற்கோ அல்லது மக்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. ஒட்டுமொத்த நாட்டிற்கும் சம்மந்தமில்லாத அதாவது இத்தகைய கட்சிகள் சார்ந்த மாநிலங்களில் ஏற்படும் பல சில்லறை பிரச்சினைகளுக்காகவும் மக்களவை சரிவர நடைபெற முடியாமல் போவதும் இத்தகைய கட்சிகளால்தான். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்காக மக்களவை எத்தனை நாள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டது! இந்த போராட்டத்திற்கு ஆளுங்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களே கூட காரணமாக இருந்தனர் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களுடைய நோக்கமும் தங்களுடைய தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே என்ற எண்ணம்தான். 

மக்களவையில் மாநிலக் கட்சிகள் தேவைதானா? 

ஒட்டுமொத்த நாட்டிற்கும் சேர்த்து தில்லியில் மக்களவை (Lok Sabha) மற்றும் மாநிலங்களவை (Rajya Sabha) என்று இரு மக்கள் மன்றங்கள் உள்ளன என்பதை அறிவோம். மக்களவை அங்கத்தினர்களை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் நேரடியாக பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்கின்றனர் என்பதையும் மாநிலங்களைவை உறுப்பினர்கள் நாட்டிலுள்ள மாநில சட்டமன்றங்களிலுள்ள (Legislative Assembly) உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதையும் அறிவோம். மக்களவையில் ஒரு இடம் கூட இல்லாத மாநிலக்  கட்சிகளும் கூட  நாட்டின் கொள்கை முடிவுகளில் பங்குகொள்ள வசதி  செய்கிறது மாநிலங்களவை. சமீப காலங்களில் நாட்டிலுள்ள இரு பெரும் தேசிய கட்சிகளும் கூட நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்ப முடியாமல் போவதை காண முடிகிறது. உதாரணத்திற்கு, நாட்டின் இரண்டாவது பெரிய தேசிய கட்சி எனப்படும் பாஜகவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு உறுப்பினர் கூட மக்களவையில் இல்லை. இந்த நிலை காங்கிரசுக்கு ஏற்படலாம். இடது சாரிகளுக்கும் ஏற்படலாம். ஆயினும் மாநில சட்டமன்றங்களில் அவர்களுக்கு போதிய உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மூலம் மத்தியிலுள்ள மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை அனுப்ப முடிகிறது. மேலும் மத்திய அமைச்சர்கள் குழுவிற்கு தெரிவு செய்யப்படுவதற்கு ஒருவர் மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ உறுப்பினராக இருந்தாலே போதுமானது. இன்றைய பிரதம மந்திரியே ஒருமுறை கூட மக்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே மத்தியிலுள்ள ஆட்சியில் பங்கு கொள்ள மக்களவைக்கு போட்டியிட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பது தெளிவாகிறது. அதைப் போலவே தங்களுடைய மாநில மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர தங்களுக்கு மக்களவையில் உறுப்பினர்கள் தேவை என்கிற வாதமும் அடிபட்டுப் போகிறது. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே மாநிலங்களுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற முடியும் என்ற மாநிலக் கட்சிகளின் வாதம் எத்தனை போலியானது என்பதையும் உணர முடிகிறது.

இப்படிப்பட்ட சூழலில் மக்களவைக்கு நடத்தப்படும் பொதுத்தேர்தலில் மாநிலக் கட்சிகள் அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

கடந்த சில ஆண்டுகளாகவே மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு இரு பெரும் தேசிய கட்சிகள் எனப்படும் காங்கிரஸ் மற்றும் பாஜகவால் மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்ப முடியாமல் போவதற்கு முக்கிய காரணம் பல மாநிலங்களில் அசுர பலத்துடன் இருக்கும் மாநிலக் கட்சிகள்தான் என்றாலும் மிகையாகாது. மத்தியில் தனித்து அமைத்து ஆட்சி அமைக்க முடியாமல் போவதால் நாட்டின் பொருளாதாரத்தை வளம்படுத்த தேவையான முடிவுகளை துணிந்து எடுக்கவும் இக்கட்சிகளால் முடிவதில்லை. 

இதற்கு என்னதான் தீர்வு?

மக்களவைக்கு நடைபெறும் பொதுத்தேர்தல்களில் தேசிய கட்சிகள் மட்டுமே பங்குகொள்ள முடியும் என்கிற நிலை வர வேண்டும். அவற்றிலும் கூட முந்தைய மக்களவையில் குறைந்த பட்சம் ஐம்பது உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறைந்த பட்சம் நான்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வேண்டும். 

இதன் அடிப்படையில் முதல் இரண்டு பெரிய தேசிய கட்சிகள் எனப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் மட்டுமே மக்களவை தேர்தலில் பங்கு பெற தகுதி பெறுகின்றன.

அந்தந்த மாநிலங்களிலுள்ள பிராந்திய கட்சிகள் இவ்விரு கட்சிகளுள் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்.  மேலும் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டுமே பொதுத்தேர்தல் தீர்மானிக்க வேண்டும். அதாவது எந்த தொகுதிக்கும் தனிப்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படக் கூடாது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கட்சிகளைச் சார்ந்தவர்களை நியமனம் செய்துக்கொள்ள வேண்டும். நியமிக்கப்பட்ட நபரின் செயல்பாடுகள் திருப்தியளிக்காத சூழலிலோ அல்லது அவர் மீது ஊழல் புகார் எழும் சூழலிலோ அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு வேறொருவரை அந்த தொகுதிக்கு நியமனம் செய்யும் அதிகாரம் கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை ஓட்டுகளைப் பெறும் கட்சி தன்னுடைய அமைச்சரவைக்கு தன்னுடைய கட்சியைச் சார்ந்தவரையோ அல்லது தங்களை ஆதரித்த மாநிலக் கட்சிகளைச் சார்ந்தவரையோ அமைச்சராக நியமிக்கலாம். அல்லது ஏற்கனவே மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள மாநிலக் கட்சியைச் சார்ந்தவரையும் அமைச்சராக நியமிக்கலாம். பிரதமர் மற்றும் துணை பிரதமர் தவிர்த்து அமைச்சரவை உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கலாகாது.  

இத்தகைய மாற்றத்தின் மூலம் மேலும் கிடைக்கவிருக்கும் பலன்கள்:

1. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலுள்ளதைப் போன்று எந்த கட்சியையும் சாராத நிபுணர்களையும் மத்தியில் அமைச்சராக்க முடியும். எத்தகைய நிபுணராக இருந்தாலும் அரசியலில் நுழைந்தால்தான் மத்திய அமைச்சராக முடியும் என்ற கட்டாயம் இதன் மூலம் விலகும். 

2. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் கொள்கையளவில் எவ்வித உடன்பாடும் இல்லாத துக்கடா கட்சிகளுடன் எல்லாம் கூட்டு சேர்ந்து கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் நடக்கும் அவலங்களையும் இதன் மூலம் களைய முடியும். 

3. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் தேர்தலில் நிறுத்தப்பட தேவையில்லை என்பதால் தேர்தலுக்காகும் செலவையும் கூட கணிசமாக குறைக்க முடியும். இன்று நாட்டில் தலை விரித்தாடும் ஊழலுக்கு முக்கிய காரணம் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களும் தன்னுடைய சொந்த பணத்தை செலவழிக்க வேண்டிய நிர்பந்தம். போட்ட காசை எப்படியும் அடுத்த தேர்தலுக்குள் எடுத்துவிட வேண்டும் என்ற வெறிதான் அவர்களை ஊழல் செய்ய தூண்டுகிறது என்றால் மிகையல்ல. மேலும் . கட்சிக்குத்தான் ஓட்டு வேட்பாளர் எனப்படும் தனிநபருக்கல்ல என்ற நிலையும் ஏற்படும். 

4. இதற்கெல்லாம் மேலாக கூட்டணி என்ற பெயரில் ஐந்தாறு இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தேசிய கட்சிகளை தங்களுடைய விருப்பத்திற்கேற்றாற்போல் ஆட்டுவிப்பதும் தேவைப்பட்டால் ஆட்சியையே கவிழ்க்க முயல்வதும் தடுத்து நிறுத்தப்படும். 

இது சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஆனால் இதற்கு கலைந்த குட்டையில் கிடைக்கும் வரைக்கும் ஆதாயம் தேடலாம் என்ற ஒரே குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வரும் மாநிலக் கட்சிகள் ஒத்துக்கொள்ளுமா என்பதுதான் கேள்வி.

மக்களைவையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற இரு கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும். இது நம் கையில்தான் உள்ளது. ஆகவே இந்த மாற்றத்திற்கெல்லாம் காத்திருக்காமல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எந்த மாநிலக் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை என்று உறுதிமொழி எடுப்போம். ராகுல்காந்திதான் அடுத்த பிரதமராகவேண்டும் என்று நினைப்பவர்கள் தனித்து களமிறங்கும் காங்கிரசுக்கும் நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமராக வர தகுதியுடையவர் என கருதுவோர் பாஜகவுக்கும் வாக்களிப்போம். ஆனால் பாஜகவை ஆதரிப்பதாக நினைத்துக்கொண்டு அந்த  கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மீண்டும் மத்தியில் அர்த்தமற்ற கூட்டணி ஆட்சிக்கு வழி வகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து 39 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புவதை விட பாஜக சார்பில் போட்டியிடும் எட்டு உறுப்பினர்களை மட்டுமே அனுப்புவது உத்தமம். 



********

17 கருத்துகள்:

  1. அங்கீகரிக்கப்படாதவை 1200 கட்சிகளா...? ப்ப்ப்பா...? தீர்வு நன்றாக காணப்பட்ட கனவு போல் தான் உள்ளது... ஷங்கர் படம் பிரமாண்டம் போல...!

    நீங்கள் சொல்வது சரி தான்... (1) அனைத்து விளக்கமும் அறிந்த கொண்ட "படித்தவர்கள்" உள்ள பல இடங்களிலும் ஓட்டு சதவிகிதம்...? (2) ஒன்றும் தெரியாத "நல்லது நடக்குமா...?" என எதிர்ப்பார்க்கும் பலப்பல கிராமங்களிலும் ஓட்டு சதவிகிதம்...? ஒருவேளை இது தான் மாநிலக் கட்சிகளின் பலமோ...? (இங்கு பலம் = ஏமாற்றுவது) ம்...

    தவறாக எண்ண வேண்டாம்... இது வெறுப்பில் எழுதியது அல்ல... நொந்த நிலையில்... நீங்கள் சொன்னது போல் மாநிலங்களில் "தெனாவெட்டு" எனும் அசுர / அரக்க பலம் மாறி, நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்...!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நமது மக்கள் அவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகமே.

    //மக்களவை அங்கத்தினர்களை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் நேரடியாக பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்கின்றனர்.//

    நான்கு ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் என்றிருக்கவேண்டும்.

    //தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கட்சிகளைச் சார்ந்தவர்களை நியமனம் செய்துக்கொள்ள வேண்டும்.//

    ஜனதா அரசு இந்த முறையை பின்பற்ற முடிவு செய்து சட்டம் இயற்ற தயாராக இருந்தபோது அரசு கவிழ்ந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. விகிதாசார அடிபடையிலான பிரதி நிதித்துவம் தரப் பட்டால் பல நன்மைகள் ஏற்படும் என்பது உண்மை !
    த ம +1

    பதிலளிநீக்கு

  4. இந்த விகிதாச்சார அடிப்படை....?எந்த விகிதாச்சாரம் கல்வியா சாதியா, இனமா மொழியா மாநிலமா. ..?ஆண் பெண் இரு பாலருக்கும் வயது 18 ஆகி இருந்தால் சம ஓட்டு என்பதே சரி என்று தோன்றுகிறது மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என்பது நல்ல எண்ணம் ஆனால்...... அது சாத்தியமில்லை. நாளுக்கு நாள் இவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஏதோ காரணத்துக்காகவும் சில ஆதாயங்களுக்காகவும் மக்களும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் ஆனால் தேர்தல் ஆட்சி என்று வரும்போது புரிந்தே செயல் படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைய விஷயங்களை தந்துள்ளீர்கள் .நன்றி .நடக்க வேண்டும் .நடக்குமா ?

    பதிலளிநீக்கு
  6. என்னதான் சொன்னாலும் இவர்கள் கேட்க போவது இல்லை அண்ணே !

    பதிலளிநீக்கு
  7. படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் எத்தனைபேர் இதை யோசிப்பார்கள் என்று தெரியவில்லை. பாதிப்பேருக்குமேல் ஓட்டுப்போடுவதே இல்லை. இங்கு ஓட்டுபோடாவிட்டால் அபராதம் கட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மக்களாட்சியில் இது சாத்தியமில்லை.மேலும் தேசியக் கட்சிகள் எந்தக் குற்றம் செய்தாலும் கேட்பார் இல்லாத நிலை பெருகும். இதற்கு மாற்றாக “வாரிசு உரிமை மறுப்ப்ச் சட்டம் “ வந்தால் பலப் பிரச்சினைகள் தீரும். சொத்தை விற்று பணமாக வேண்டுமானால் கொடுக்கலாம், அதில் 20% வரி அரசுக்குக் கொடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. திண்டுக்கல் தனபாலன் said...

    தவறாக எண்ண வேண்டாம்... இது வெறுப்பில் எழுதியது அல்ல... நொந்த நிலையில்... நீங்கள் சொன்னது போல் மாநிலங்களில் "தெனாவெட்டு" எனும் அசுர / அரக்க பலம் மாறி, நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்...!//

    இதில் தவறாக நினைக்க ஏதும் இல்லை. உங்களைப் போலவேதான் பலரும் நொந்துதான் போயுள்ளனர்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வே.நடனசபாபதி said...

    நான்கு ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் என்றிருக்கவேண்டும். //

    கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. திருத்திவிட்டேன்.

    //தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கட்சிகளைச் சார்ந்தவர்களை நியமனம் செய்துக்கொள்ள வேண்டும்.//

    ஜனதா அரசு இந்த முறையை பின்பற்ற முடிவு செய்து சட்டம் இயற்ற தயாராக இருந்தபோது அரசு கவிழ்ந்துவிட்டது.//

    என்னதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மக்களும் தங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமே.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. Bagawanjee KA said...
    விகிதாசார அடிபடையிலான பிரதி நிதித்துவம் தரப் பட்டால் பல நன்மைகள் ஏற்படும் என்பது உண்மை !//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  12. G.M Balasubramaniam said...

    இந்த விகிதாச்சார அடிப்படை....?எந்த விகிதாச்சாரம் கல்வியா சாதியா, இனமா மொழியா மாநிலமா. ..?//

    இதில் எதுவும் அல்ல நான் குறிப்பிட்டது. ஒரு தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில்தான் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி அதிக வாக்குகள் பெறுகின்றனவோ அந்த கட்சி அந்த தொகுதியைச் சார்ந்த எவரையேனும் தன் கட்சி சார்பாக மக்களவையில் உறுப்பினராக தெரிவு செய்துக்கொள்ளலாம். இப்போதுள்ளதைப் போல் அவர் அந்த கட்சியைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

    ஆண் பெண் இரு பாலருக்கும் வயது 18 ஆகி இருந்தால் சம ஓட்டு என்பதே சரி என்று தோன்றுகிறது//

    இதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே.

    மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என்பது நல்ல எண்ணம் ஆனால்...... அது சாத்தியமில்லை.//

    கட்சிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களவை தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன். மாநில சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்கலாம். தவறேதும் இல்லை.

    நாளுக்கு நாள் இவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஏதோ காரணத்துக்காகவும் சில ஆதாயங்களுக்காகவும் மக்களும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்//

    இதுதான் நடக்கிறது. சாதியின் அடிப்படையில் தனக்கு தன்னுடைய சாதிக்கார கட்சிதான் சலுகைகளை அளிக்கும் என்ற நினைப்புத்தான் இத்தகைய கட்சிகள் வளர்வதற்கு காரணம். ஆனால் பா.ம.க தன்னுடைய சாதியினருக்கு இதுவரை எதை பெரிதாக சாதித்தது? இருந்தும் ஏன் அந்த கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இன்னும் கிடைக்கின்றன?

    ஆனால் தேர்தல் ஆட்சி என்று வரும்போது புரிந்தே செயல் படுகிறார்கள் என்றே தோன்றுகிறது./

    என்ன புரிந்து செயல்படுகிறார்களோ எனக்கு விளங்கவில்லை. இல்லையென்றால் கடந்த இருபதாண்டு காலமாக மத்தியில் எந்த தேசிய கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற முடியவில்லையே? புரிந்து வாக்களித்திருந்தால் மக்களவையில் முப்பத்தியெட்டு கட்சிகள் இருக்க முடியுமா?

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  13. Vetrivendan said...
    மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைய விஷயங்களை தந்துள்ளீர்கள் .நன்றி .நடக்க வேண்டும் .நடக்குமா ?//

    மக்கள் நினைத்தால் இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் நிச்சயம் நடக்கும். முதலில் நம்மைப் போன்றவர்கள் மக்களவை தேர்தல்களில் மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பதை உடனே நிறுத்த வேண்டும். செய்யலாமா?

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  14. MANO நாஞ்சில் மனோ said...
    என்னதான் சொன்னாலும் இவர்கள் கேட்க போவது இல்லை அண்ணே !//

    ஊதுவதை ஊதி வைப்போம். கேட்க செவியுள்ளவர்கள் கேட்கட்டும் என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம். இன்றில்லாவிட்டாலும் மீண்டும் ஒரு கூட்டணி என்ற பெயரில் ஒரு அரசு அமைந்து எதையும் சாதிக்க முடியாமல் தோல்வியுறுமானால் மக்களுக்கு விழிப்புணர்வு வரும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  15. Packirisamy N said...
    படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் எத்தனைபேர் இதை யோசிப்பார்கள் என்று தெரியவில்லை.//

    படித்தவர்கள் இன்றைய இளைஞர்கள் பலரும் இவ்வாறு யோசித்திருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பது பெண்களும் அடிப்படை கல்வித் தகுதியில்லாதவர்களும்தானே. பெண்களில் பலருக்கும் அரசியலைப் பற்றி பேசவோ எழுதவோ பிடிப்பதில்லையே. கணவர்கள் காட்டிய கட்சிக்கோ அல்லது நபருக்கோ ஓட்டளிப்பது என்ற எண்ணத்துடந்தானே இன்றும் செயல்படுகின்றனர். கல்வியில்லாதவர்களுக்கு யார் இலவசங்களைத் தருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தால் போதும்.

    பாதிப்பேருக்குமேல் ஓட்டுப்போடுவதே இல்லை. //

    படித்தவர்கள்தான் ஓட்டு போடுவதில் விருப்பமில்லாதவர்கள். அதாவது யாருக்கு வாக்களித்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்று சலித்துப்போனவர்கள் இவர்கள்.

    இங்கு ஓட்டுபோடாவிட்டால் அபராதம் கட்டவேண்டும்.//

    இங்கும் அந்த நிலை வரவேண்டும். ஆனால் இந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா முடியாதா என்ற நிச்சயமற்ற சூழலில் அபராதம் யாருக்கு விதிப்பது? ஒரே வீட்டில் கணவருக்கு ஓட்டர் லிஸ்டில் பெயர் இருக்காது. ஆனால் மனைவிக்கு இருக்கும். ஓட்டர் ஐடி கார்ட் உள்ளவர்களுக்கும் கூட ஓட்டர் லிஸ்டில் பெயர் இருக்குமா என்பதே கடைசி நேரத்தில்தான் தெரியும். இந்த தவறுகள் தற்செயலாக நடைபெறுகின்றனவா அல்லது திட்டமிட்டே செய்யப்படுகின்றனவா என்பதே புரியாத புதிராக உள்ளது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. 18 AM Delete
    Blogger இறைகற்பனைஇலான் said...
    மக்களாட்சியில் இது சாத்தியமில்லை.//

    ஏன் அப்படி சொல்கிறீர்கள். USAல் சாத்தியமென்றால் இங்கும் சாத்தியம்தான். மத்தியில் (மக்களவையில்) இரண்டு தேசிய கட்சிகள் மட்டும் இருந்தால் போதும்.

    மேலும் தேசியக் கட்சிகள் எந்தக் குற்றம் செய்தாலும் கேட்பார் இல்லாத நிலை பெருகும்.//

    ஒரு கட்சி குற்றம் செய்தால் அதை தட்டிக் கேட்கத்தான் இன்னொரு கட்சி. ஒன்று ஆளுங்கட்சியாக இருக்கும்போது இன்னொன்று எதிர்க்கட்சியாக செயல்படும். தமிழகத்தில் அதிமுக, திமுக என்றில்லையா, அதுபோல.

    பதிலளிநீக்கு
  17. நாட்டிற்கு தேவையான சிறந்த கருத்து.

    கம்யூனிஸ்களையும் (த.பா அல்ல) ஒரு முன்றாவது கட்சியாக எதிர்கட்சியாக அனுமதிக்கலாம் என்பது எனது கருத்து அவ்வப்போது சில நல்லவற்றை தெரிவிப்பாங்க.

    பதிலளிநீக்கு