பாஜக RSSன் முகமூடி என்பதையும் பிரதமர் வேட்பாளர் RSS இயக்கத்தின் பிரதிநிதி என்பதையும் இதுவரை மறுத்து வந்தவர்களை கடந்த இரண்டு தினங்களில் பாஜகவின் கிரிராஜ் சிங் மற்றும் RSSன் டொக்காடியா ஆகியோருடைய பேச்சு சிந்திக்க வைத்துள்ளது.
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் இவர்கள்?
பீஹார் மாநிலத்தில் பாஜக வேட்பாளராக களத்தில் உள்ள கிரிராஜ் சிங் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பகிரங்கமாக பேசியுள்ளார். இவருக்கு எதிராக பீஹார் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைக்கு மறுமொழியாக ' நான் இஸ்லாமியர்களை குறிப்பிடவில்லை. நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களைத்தான் குறிப்பிட்டேன்.' என்று இவர் அளித்துள்ள பதில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுமே அதை எதிர்த்த அத்வானியையும் சேர்த்துத்தான் இவர் குறிப்பிட்டிருப்பார் என்று பலரும் கிண்டலடித்துள்ளனர். இவருடைய பேச்சுக்கு ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பாஜக இவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியின் பால்ய சிநேகிதர் டொக்காடியோவோ ஒருபடி மேலே சென்று ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் சொத்து வாங்குவதை நாமே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் இவருடைய பேச்சை கிரிராஜ் சிங்கின் பேச்சைப் போல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர் ஒரு தீவிர RSS பேர்வழி. ஒரு காலத்தில் இவரும் நரேந்திர மோடியும் RSSன் அடிப்படை உறுப்பினர்களாக இருந்த காலத்தில் இணைபிரியா தோழர்களாக இருந்தவர்கள். ஆனால் சமீப காலமாக, அதாவது மோடி குஜராத் முதலமைச்சரான காலத்திலிருந்து, இவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றும் ஆகவே இவர் மோடி பிரதமராவதை விரும்பாமல்தான் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார் என்கின்றனர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
ஆனால் இவ்விருவர்களுடைய பேச்சு தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் மதக்கலவரங்களுக்கு ஒரு முன்னோடியாகவே காண்பதாக பாதிக்கப்படவுள்ள இஸ்லாமிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதை இஸ்லாமிய சமுதாயத்தினரின் panic reaction என்று கூறி ஒதுக்கிவிட முடியாது என்பதும் உண்மை.
நரேந்திர மோடிக்கு எதிராக பேசுபவர்களை, எழுதுபவர்களை நீ கிறிஸ்த்துவன் ஆகவே நீ சோனியாவின் அடியாள் அல்லது நீ இஸ்லாமியன் ஆகவே நீ பாக்கிஸ்தானுடைய கையாள் என்றெல்லாம் விமர்சித்து எழுதும் அநாமதேய ஞான சூன்யங்கள் நம்முடைய பதிவுலகிலும் உள்ளனர் என்பது என்னுடைய கடந்த சில பதிவுகளுக்கு வந்த கருத்துரைகள் உணர்த்துகின்றன.
அதாவது படித்த இளைஞர்கள் மத்தியில் கூட இத்தகைய உணர்வுகள் வேரூன்றியுள்ளபோது அரசியல்வாதிகளைக் குறை கூறுவதில் என்ன பயன்?
**********
சில தேர்தல் கேலிக் கூத்துக்கள்.
மேற் கூறிய இருவரின் பேச்சு எதிர்வரும் மதக் கலவரங்களை கோடிட்டு காட்டுகின்றன என்றால் நம்முடையவர்களின் தேர்தல் பேச்சுக்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. தமிழர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதையும் இவை மீண்டு நிரூபிக்கின்றன.
'நாட்டின் மிகச் சிறந்த முதலமைச்சர் மோடி அல்ல, இந்த லேடிதான்.' இது நம்முடைய முதலமைச்சரின் அறை கூவல். இது ஏதோ வேத மொழி என்பதுபோல் இதே வாக்கியத்தை மீண்டும், மீண்டும் ஒலிபரப்பிக் கொண்டுள்ளது ஜெயா டிவி.
இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்டதற்கு அவர் அடித்த கிண்டல். 'அவர் நிலைக்கண்ணாடியில் முன் நின்றுக்கொண்டு சொல்லியிருப்பார்.'
'இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் கூட்டம் பாசத்துக்காக வந்த கூட்டம். க்வாட்டருக்கோ இல்ல பிரியாணிக்கோ வந்த கூட்டமல்ல.' கேப்டனின் மனைவி.
'இவங்க வீட்டுக்காரரையே க்வாட்டர் குடுத்துத்தான் கூட்டிக்கிட்டு வராங்க.' நாம் தமிழர் சீமான்!!
'மத்த கட்சி தலைவர்களைப் போல் கூட்டத்திற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு பிறகு வராமல் மக்களை ஏமாற்றும் தலைவனல்ல நான். இன்று எனக்கு கடுமையான காய்ச்சல். இருந்தும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.' சென்னை அண்ணா நகர் கூட்டத்தில் ஜெயலலிதா.
'என்னுடைய நலனை விட நாட்டு மக்களின் நலனையே நான் பெரிதாக கருதுகிறேன். ஆகவேதான் உடல் நிலை குறைவிலும் மக்களைச் சந்திக்க தமிழகத்தில் பல பகுதிகளிலும் சென்று பேசி வருகிறேன்.' ஆவடி பொதுக்கூட்டத்தில்.
இவ்விருவருடைய நாட்டுப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது!
'இவங்க குடுக்கற மிக்சி, க்ரைன்டருக்கெல்லாம் கரண்டே வேணாம். தானாவே ஓடும்!' பாமக நிறுவனர் இராமதாஸ்.
'தேர்தல் நேரத்துல நடக்கற மின் தடைக்கு சிலருடையே சதியே காரணம்!' ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.
'போலீஸ் இலாக்காவை தன் கையிலேயே வைத்திருந்தும் சதியை கண்டுபிடிக்க முடியாத ஜெயலலிதா உடனே பதவி விலக வேண்டும்.' ஸ்டாலின்.
'ப. சிதம்பரம் ஒரு ரீக்கவுன்ட் (Recount) அமைச்சர்' சிவகங்கை கூட்டத்தில் நரேந்திர மோடி.
'நரேந்திர மோடி ஒரு என்கவுன்டர் (Encounter) முதலமைச்சர்' ப. சிதம்பரத்தின் பதிலடி.
'இது வெறும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல் அல்ல. எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவும் தேர்தல்.' ஜெயலலிதா. இவர் எதிரிகள் என்பது இவருடைய சொந்த எதிரிகளான ப. சிதம்பரம் போன்றவர்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு காமடி செய்துள்ளனர் நம்முடைய அரசியல்வாதிகள்.
***********
இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இதுவரை இல்லாமல் முதல் முறையாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு தேவையான சரக்கை ஏற்கனவே டோர் டெலிவரி செய்தாயிற்றாம்!!
மட்டன்/சிக்கன் பிரியாணி சமையல்காரர்களுக்கும் பயங்கர கிராக்கியாம். எட்டு கிலோ பிரியாணி செய்ய ஐநூறு ரூபாய் கேட்டு வந்த பிரியாணி சமையல்காரர்கள் இப்போது இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார்களாம்!
அதனாலென்ன? ஆளுங்கட்சி வட்டச் செயலாளர் வீட்டு முற்றத்திலேயே சுடச்சுட பிரியாணி தயாரிக்கப்பட்டு வினியோகமும் செய்தாயிற்று.
இங்கு நடப்பது தேர்தல் அல்ல. தீபாவளி தமாக்கா என்பார்களே அதுபோலத்தான். சிலருக்கு இது சீரியஸ் பிசினஸ். லட்சக் கணக்கில் முதல் போட்டு கோடிக் கணக்கில் லாபம் எடுக்கும் மொத்த வணிகம்.
***********
நீங்க என்ன சொன்னாலும் அது செவிடன் காதுல ஊதுன சங்கு போலத்தாங்க. நாங்க மோடிய தேர்ந்தெடுக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சி. எதுக்கு வீணா எழுதி உங்க டைம வேஸ்ட் பண்றீங்க என்று ஒரு சில தீவிர மோடி ஆதரவாளர்கள் கூறுவது காதில் விழுகிறது.
சரிங்க. போடறதுன்னு தீர்மானிச்சாச்சி. மக்களவையில சிம்பிள் மெஜார்ட்டிக்கு தேவையான 272 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கறா மாதிரி செஞ்சிருங்க. இல்லன்னா மறுபடியும் கூட்டணி ஆட்சின்னு பழைய குருடி கதவ திறடிங்கறா மாதிரி ஆயிரும்.
கடைசியா ஒரு விஷயம்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பல மாநில ச்ஆட்சியாளர்கள் கூறிவருவதைக் கேட்டிருக்கிறோம். அப்படியானால் மொத்தமுள்ள 29 மாநிலம் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்யும் பாஜக எவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்தப் போகிறது? நரேந்திர மோடி கொண்டு வர நினைக்கும் மாற்றம் மத்திய அரசோடு நின்றுவிடுமோ?
மத்தியில் அமையவுள்ள ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக நம்முடைய கட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையானவற்றை நம்மால் கேட்டுப் பெற முடியும் என்று ஜெயலலிதா கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை? அப்படியொரு சூழல் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் கதி அதோகதிதானா?
***************
நிலையான ஆட்சி வந்து என்ன சாதிக்கப் போகிறது ?பார்க்கத்தானே போகிறோம் !
பதிலளிநீக்குத ம +1
செவிடன் காது சங்கு என்று சரியாகச் சொன்னீர். சில நாட்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில் YOU GET WHAT YOU DESERVE என்று எழுதி இருந்தேன் , இருந்தாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே.....!
பதிலளிநீக்கு//'என்னுடைய நலனை விட நாட்டு மக்களின் நலனையே நான் பெரிதாக கருதுகிறேன். ஆகவேதான் உடல் நிலை குறைவிலும் மக்களைச் சந்திக்க தமிழகத்தில் பல பகுதிகளிலும் சென்று பேசி வருகிறேன்.' ஆவடி பொதுக்கூட்டத்தில்.//
பதிலளிநீக்குசொன்னது கலைஞர் என எண்ணுகிறேன்.
//சிலருக்கு இது சீரியஸ் பிசினஸ். லட்சக் கணக்கில் முதல் போட்டு கோடிக் கணக்கில் லாபம் எடுக்கும் மொத்த வணிகம்.//
நூற்றுக்கு நூறு உண்மை.
//அப்படியொரு சூழல் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் கதி அதோகதிதானா?
எப்போதும் அதேகதிதான்!
தேர்தல் திருவிழா பற்றி சுடச்சுட தகவல் தந்தமைக்கு நன்றி. தேர்தல் முடிவு வந்தவுடன் தங்களின் பகுப்பாய்வு கருத்தை அறிய ஆவல்.
மொத்த வணிகம்... அதே அதே...
பதிலளிநீக்கு//இன்று எனக்கு கடுமையான காய்ச்சல். இருந்தும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.//
பதிலளிநீக்குஅம்மாவின் உடல் நிலைபற்றி ரொம்பவும் கவலையாயிட்டேன் :)
//மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பல மாநில ச்ஆட்சியாளர்கள் கூறிவருவதைக் கேட்டிருக்கிறோம்//
பதிலளிநீக்குஇது உண்மை என்றால் எதற்கு மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு அரசு?
பாஜகவின் விளையாட்டு ஆரம்பமானதற்கு காங்கிரசும் ஒரு காரணம்தான்.இந்த 5 வருடங்களில் அது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என்பதற்கு தங்களின் சமீபத்திய எழுத்துகளே சாட்சி.இந் நிலையில் மக்கள் ஒரு மாற்றுக் கட்சியை நாடுகிறார்கள்.இது இயல்பானதேயாகும்.பாஜக நம்பிக்கையை பெறப் போகிறதா,அதை தக்க வைத்துக் கொள்ளப் போகிறதா என்பதையெல்லாம் எதிர்காலம்தான் கூற வேண்டும்.நமது இப்போதைய விருப்பு வெறுப்புகளிடம் இதற்கான விடை இல்லை.
பதிலளிநீக்குஎந்தக் கட்சியும், எந்தத் திட்டத்தையும் கூறி தேர்தலில் நிற்பதாகத் தெரியவில்லை. அடுத்தவனிடம் குறை காண்பதிலேயே இருக்கிறார்கள். Like Mr.GMB said we only get, what we deserve!
பதிலளிநீக்குPackirisamy N said...
பதிலளிநீக்குLike Mr.GMB said we only get, what we deserve!//
அப்படி சொல்லி நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Vetrivendan said...
பதிலளிநீக்குபாஜகவின் விளையாட்டு ஆரம்பமானதற்கு காங்கிரசும் ஒரு காரணம்தான்.இந்த 5 வருடங்களில் அது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என்பதற்கு தங்களின் சமீபத்திய எழுத்துகளே சாட்சி.இந் நிலையில் மக்கள் ஒரு மாற்றுக் கட்சியை நாடுகிறார்கள்.இது இயல்பானதேயாகும்.பாஜக நம்பிக்கையை பெறப் போகிறதா,அதை தக்க வைத்துக் கொள்ளப் போகிறதா என்பதையெல்லாம் எதிர்காலம்தான் கூற வேண்டும்.நமது இப்போதைய விருப்பு வெறுப்புகளிடம் இதற்கான விடை இல்லை.//
உங்களுடைய கருத்தில் தவறேதும் இல்லை. கிடைத்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொண்டிருந்தால் இப்படியொரு சூழலை சந்திக்க வேண்டியிருந்திருக்காதுதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
bandhu said...
பதிலளிநீக்கு//மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பல மாநில ச்ஆட்சியாளர்கள் கூறிவருவதைக் கேட்டிருக்கிறோம்//
இது உண்மை என்றால் எதற்கு மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு அரசு?//
நல்ல கேள்வி. ஆனால் மத்தியிலுள்ள ஆட்சியாளர்களின் தயவில்லாமல் (நிதியுதவி) மாநிலத்தில் எந்த நலதிட்டங்களையும் செயல்படுத்த முடியாதே. ஆகவேதான் இரு இடங்களிலும் ஒரே கட்சி இருந்தால் நல்லது என்று நினைக்கின்றனர். அது ஓரளவுக்கு உண்மைதான்.
வேகநரி said...
பதிலளிநீக்கு//இன்று எனக்கு கடுமையான காய்ச்சல். இருந்தும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.//
அம்மாவின் உடல் நிலைபற்றி ரொம்பவும் கவலையாயிட்டேன் :)//
இதை விட காமடி மோடி-லேடி சிலேடை! தன்னைத்தானே மெச்சிக்கொள்வதில் கலைஞருக்கு சரியான ஈடு ஜெயலலிதா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குமொத்த வணிகம்... அதே அதே...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்கு//'என்னுடைய நலனை விட நாட்டு மக்களின் நலனையே நான் பெரிதாக கருதுகிறேன். ஆகவேதான் உடல் நிலை குறைவிலும் மக்களைச் சந்திக்க தமிழகத்தில் பல பகுதிகளிலும் சென்று பேசி வருகிறேன்.' ஆவடி பொதுக்கூட்டத்தில்.//
சொன்னது கலைஞர் என எண்ணுகிறேன். //
உண்மைதான். விட்டுப்போய்விட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குசெவிடன் காது சங்கு என்று சரியாகச் சொன்னீர். சில நாட்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில் YOU GET WHAT YOU DESERVE என்று எழுதி இருந்தேன் , இருந்தாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே.....!//
உங்களுடைய ஆதங்கம்தான் என்னுடையதும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குBagawanjee KA said...
நிலையான ஆட்சி வந்து என்ன சாதிக்கப் போகிறது ?பார்க்கத்தானே போகிறோம் !//
நாட்டிலுள்ள மாநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு கூட கைவசம் இல்லாத ஒரு கட்சி பெரிதாக எதை சாதித்துவிட முடியும்? இத்துடன் RSS மற்றும் பஜ்ரங்தல் ஆகிய இயக்கங்களின் ஆதிக்கமும் சேர்ந்துக்கொண்டால் கேட்கவே வேண்டாம். சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்கிறார் மோடி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.